Thursday, April 9, 2015

பொங்கியெழு ....போராடு ....!!


மங்கையராய் பிறந்தோம் செய்த மாதவத்தாலே 
கங்கையாய் வடித்தோம் கொடும் பாதகத்தாலே 
சக்தியென்று சொல்லியே சகதிவாரி தூற்றிடுவார் 
யுக்திகண்டு கொதிக்குதே நெஞ்சம் காணீர் ...!! 

பெண்ணைப் பார்க்கும் பார்வையில் கோளாறு 
பொறுப்பு சுமந்தாலும் விழிகளில் நீராறு 
பொறுமை காப்பதே பெண்ணின் பெரும்பேறு 
பெற்றவளும் சுமையாகிப் போவது சாபக்கேடு ...!! 

ஆணுக்கு நிகராய் பெண்ணிங்கே இருந்தாலும் 
ஆளாகும் கொடுமைக்கு அளவேதும் இல்லை 
அடிமையாய்ப் பார்ப்பதில் ஆனந்தம் கொள்ளுவார் 
அனுசரிக்க மறுத்திடில் பணியில் பந்தாடுவார் ...!! 

ஏமாற்று வித்தையால் உள்ளம் களவாடுவார் 
ஏளனம் பேசியே வார்த்தையால் கொல்லுவார் 
ஏங்கிடும் அன்புக்கு விலைபேசிச் செல்லுவார் 
ஏய்த்துப் பிழைப்பதே பொழுதாய் கொள்ளுவார்...! 

சாதிக்கத் துடிப்போரை கூட்டுக்குள் முடக்குவார் 
ஆதிக்கம் செலுத்தியே திறமைகள் ஒடுக்குவார் 
பாதிக்கப் பட்டாலும் பாவையரும் அடங்குவார் 
வீதிக்கு வந்துவிட்டால் பாவமவர் என்செய்வார் ! 

போகப் பொருளாய் பெண்ணைப் பார்ப்பதாலே 
பாலியல் பலாத்காரம் பயமின்றி அரங்கேறுது 
உடலையும் துச்சமாய்க் குத்திக் கொல்லுது 
உள்ளமோ கொடுமையால் கொதித்து துடிக்குது ! 

பன்னீரா என்ன தெளித்துவிட திராவகமும் 
பெண்களின் கண்ணீரில் எரிந்தே போவாய் ! 
நல்லதோர் வீணையே.!விறகாயெரிந்தது போதும் 
நல்லநாளும் பிறந்ததென பொங்கியெழு!போராடு !

No comments:

Post a Comment