Wednesday, October 10, 2018

பேத்திக்குப் பிறந்தநாள் வாழ்த்து ....!!!


எங்கள் வீட்டுத் தேவதை
***எழிலாய்ப் பூத்த தாரகை!
தங்க முகத்தில் புன்னகை
***ததும்ப விரியும் நறுமுகை!
செங்க ரும்பின் சுவையெனச்
***சிந்தும் மொழியின் இன்சுவை!
பொங்கும் இன்பத் தேன்நிலா
***பொம்மி இவள்தான் வினுஷரா!
கன்னல் பேச்சில் மயக்குவாள்
***கண்ணால் கதைகள் சொல்லுவாள்!
அன்பால் மனத்தை உருக்குவாள்
***அக்கா வென்றால் உருகுவாள்!
அன்னை தந்தைச் செல்லமாய்
***அமுதத் தமிழின் இனிமையாய்
என்றும் வாழ்வில் சிறந்திட
***இதயங் கனிந்து வாழ்த்துவேன்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வினுஷரா செல்லம்💐💐💐🎈🎈🎈🎉🎉🎉🎁🎁🎁🎂🎂🎂🍫🍫🍫🌹🌹🌹

Monday, October 8, 2018

தமிழா உடனே விழி ...!!!

தமிழா உடனே விழி ...!!!
********************************

தமிழ னென்று சொல்லடா
தலைநி மிர்ந்து நில்லடா!
அமுத மொழியைக் கேட்டதும்
அகம் சிலிர்க்கு தல்லவா ?
கமழு மலரி ருக்கையில்
காகி தப்பூ தேவையோ ?
நமது தமிழி னிக்கையில்
நஞ்சைக் கலத்தல் நியாயமோ ?
படிக்க எளிய செம்மொழி
பாரிற் சிறந்த இன்மொழி
தடைகள் தாண்டி வந்துநீ
தமிழைத் தாயாய் மதித்திடு !
அடச்சீ நம்மை ஆங்கிலம்
அடிமை யாக்கி யாள்வதா ?
உடன் விழித்துக் கொள்ளடா
உலகைத் தமிழால் வெல்லடா !
கொடுமை கண்டு பொங்கிநீ
கொள்கைக் காகப் போரிடு !
மடமை தன்னை மாற்றிட
மரபின் பெருமை காத்திடு !
திட மனத்தில் துணிவெனும்
திறன் வளர்த்துக் கொள்ளடா !
கடமை யாற்றி உயர்ந்திடு
கர்ம வீரன் வழியிலே !
உழைக்கும் வருக்கம் மேம்பட
உரிமைக் குரலெ ழுப்படா !
அழிவி லிருந்து காத்திடா
அரசால் என்ன பயனடா ?
உழவர் நிலைமைத் தாழ்ந்திடில்
உணவுக் கென்ன செய்குவோம் !
விழிப்பு டன்நீ செயல்பட
வீறு கொண்டெ ழுந்திடு !
மதுவுக் கடிமை யாகிடில்
வாழ்வு நரக மாகிடும் !
மதங்க ளென்ற போர்வையில்
மதம் பிடித்துத் திரிவதா ?
வதைத்த தெல்லாம் போதுமே
மனித நேயம் காத்திடு !
புதிய பாதை வகுத்துநீ
புனித னாக வாழ்ந்திடு !
இயற்கை நமக்கு வரமடா
இதனை நினைவில் வையடா
இயைந்து வாழப் பழகடா
இலையேல் நாசம் நமக்கடா
முயன்றால் வானும் வசப்படும்
முன்னோர் வார்த்தை பலமடா !
தயக்க மென்ன சொல்லடா
தமிழா! விழித்துக் கொள்ளடா !!!

சியாமளா ராஜசேகர்

வெண்பாக்கள்

ஈற்றடிக்கு வெண்பா!
**********************
#நெஞ்சத்தில்_நிற்கும்_நிறைந்து!
கண்ணால் கதைபேசிக் காத லுறவாடி
வண்ணமலர்ச் சோலையில் வந்தணைத்(து) - அன்புடன்
பஞ்சனைய செவ்விதழால் பாவையவள் தந்தமுத்தம்
நெஞ்சத்தில் நிற்கும் நிறைந்து.
சற்றும் விழிகள் சலிக்காமல் பார்க்க,வான்
முற்றத்தில் கோலம் முளைத்திருக்கும் - பற்பல
வண்ணத்தில் பூத்து வளைந்தழகாய்த் தோன்றுமே
விண்ணில் விழுந்த விதை.

முருகன் தோடகம் ...!!


அடியார் மனமே கதியா யுறையும்
அழகா! அலைவாய்க் கரையின் அரசே !
முடியா முதலா மரனின் மகனே!
முருகா குமரா சரணம் சரணம் !! ..1.
உமையாள் தனயா! உயிரே ! உறவே!
உளறி யழுதேன்! உருகித் தொழுதேன்!
தமிழா மமுதைத் தயவா யருளே
தணிகா சலனே சரணம்! சரணம் !! 2.
தொடரும் வினையால் துவளும் பொழுதில்
துணையா யுனையே உளமும் கருதும்
இடமும் வலமும் எளியே னருகில்
எழுவாய் முருகா சரணம்! சரணம் !! 3.
திருமால் மருகா! திருவே! சுடரே!
தெளிவை யருளத் தருண மிதுவே !
குருகுக் கொடியோய்! குறைகள் களையக்
குருவாய் வருவாய் சரணம் சரணம் !! 4.
பிறவிப் பிணிதீர்த் திடவே மயிலில்
பிரிய முடனே இனிதே வருவாய் !
மறவே னுனைநான் வடிவே லவனே
வயலூர் முருகா சரணம் சரணம் !! 5.
துணைவி யருடன் குலவி எழிலாய்
சுகம தருள இனிதே வருவாய் !
பணியு மடியார் பரிவில் மகிழும்
பழனி முருகா சரணம் சரணம் !! 6.
பகலு மிரவும் நொடியும் மறவா
படரும் நினைவைத் தருவாய் பரிசாய்
முகமா றுடையோய்! இளமை யுடையோய் !
முருகா! இறைவா ! சரணம் சரணம் !! 7.
மலருள் மணமாய்க் கனியுட் சுவையாய்
வளியாய் வெளியாய்ப் புனலா யனலாய்
நிலமாய் மலையாய் முகிலுள் துளியாய்
நிறையும் முருகா சரணம் சரணம் !! 8.
சியாமளா ராஜசேகர்
( கவிவேழம் இலந்தை இராமசாமி ஐயா அவர்களின் வழிகாட்டலில் எழுதியது )

ராகத்தில் வந்த ரசம் ...!!!

ஈற்றடிக்கு வெண்பா....!!!
*************************
மங்கள மார்கழியில் மாலைப் பொழுதினில்
சங்கீத முள்ளத்தைத் தாலாட்டும்! - பொங்கிடும்
சோகத்தி லும்சுவைக்கும் தூய பிலஹரி
ராகத்தில் வந்த ரசம்.
காற்றில் தவழ்ந்துவந்து காதோரம் தேன்பாய்ச்சும்
ஊற்றாய்ப் பெருகி உளமுருக்கும்! - வீற்றபடி
பாகவதர் மெய்யுருகிப் பாடிய பைரவி
ராகத்தில் வந்த ரசம்.
அள்ளிப் பருகிட ஆவலுடன் காத்திருந்து
தெள்ளுதமிழ்ப் பாட்டைச் செவிகேட்க - உள்ளத்தின்
தாகந் தணிக்குமோ சாயா தரங்கிணி
ராகத்தில் வந்த ரசம்.
சாயாதரங்கிணி - இராகத்தின் பெயர்

சந்த வேற்றொலி வெண்டுறை



நதியோடும் வழியெங்கும் நாணல்புல் அசைந்தாட
நளினம் கொஞ்சும் !
கதிராடும் கழனியிலே காற்றுடனே கதைபேசிக் 
கண்கள் துஞ்சும் !
மதியின் வரவில் மனமுந் துள்ளக் 
கொதித்த நினைவும் குளிர்ந்தி டாதோ ?
சியாமளா ராஜசேகர்

அதியழகு கோலம் ...!!!




கதிர்மெல்லக் கரம்நீட்டி இருள்துடைத்து விரியும்
***கவினழகாய்ப் மலர்ந்தவல்லி மதிமறைய மயங்கும் !
முதிராத பூங்காற்று சுகமாகத் தழுவும்
***முகிலினங்கள் அலையலையாய்ப் புலர்பொழுதில் உலவும் !
அதியழகாய்க் கீழ்வானம் சிவந்திருக்கும் கோலம் 
***அதுகண்டு துயில்கலைந்து விழித்திடுமே ஞாலம் !
உதிக்கின்ற காட்சிதனை அனுதினமும் கண்டும் 
***ஒருநாளும் சலித்ததில்லை இருவிழிகள் என்றும் !!
சியாமளா ராஜசேகர்

ஈரோடு தமிழன்பன் ஐயா அவர்களுக்கு 95 -ம் பிறந்தநாள் வாழ்த்து ...!!

அற்புதமாய் நின்படைப்பில் மயங்கி நித்தம்
***அகங்நிறைந்து தமிழன்னை குளிர்வாள் சித்தம்!
நற்றமிழில் பன்வகைமைப் பாக்கள் நெய்தாய்
***நயமிக்க நகையுணர்வால் உள்ளம் கொய்தாய்!
சொற்பொழிவு கேட்டசெவி சொக்கி நிற்கும்
***சுவையறிந்து தேடலிலே பலவும் கற்கும்!
வற்றாத தமிழூற்றே! வணங்கு கின்றேன்
***வளமோடும் நலமோடும் வாழி! வாழி!!💐💐💐💐💐

சந்தக் குறட்டாழிசை...!!!

வஞ்சி யுன்னழகை யெண்ணி நெஞ்சுருகி
***மன்ன வன்கனவு காணலாம் !
விஞ்சு மன்பிலுனை யென்று மின்பமொடு
***வென்று செம்மையுட னாளலாம் !!
கெஞ்சி யஞ்சுவிழி வண்ண மின்னொளியில்
***கெண்டை யின்நிழலு மாடலாம் !
கொஞ்சி யின்பமுற வுன்னு ளம்நினைவில்
***கொண்ட வன்வரவை நாடலாம் !
மஞ்சு விண்ணுலவ மங்கை யுன்வடிவு
***வந்து முன்னுலவ வாடலாம் !
மஞ்ச ளின்மணமு மொன்றி ணைந்துவர
***மங்க ளம்குடிலை யாளலாம் !
சஞ்ச லம்விலக மன்ம தன்பரிவில்
***சம்ம தம்விழிகள் கூறலாம் !
அஞ்சு கம்குரலி லன்பு டன்குழைய
***அன்ன முன்மனமு(ம்) ஊடலாம் !!
சியாமளா ராஜசேகர்

முத்தே மணியே ...!!

முத்தே மணியே கண்ணே ஒளியே
முல்லைப் பூவே கண்ணுறங்கு !
அத்தை மடியே மெத்தை யாக
அழகு மயிலே நீயுறங்கு !
நித்தம் நடக்கும் அவலம் கண்டால் 
நெஞ்சம் கொதிக்கும் பாராதே !
சத்த மின்றித் தோளில் சாய்த்துத்
தட்டிக் கொடுப்பேன் பொன்னுறங்கு !!
சியாமளா ராஜசேகர்

வண்ணப் பாடல் ( கந்தன் திருப்புகழ் )

தந்த தந்த தந்த தந்த
தந்த தந்த தந்த தந்த
தந்த தந்த தந்த தந்த.... தனதானா
நெஞ்சி லன்பு கொண்டு ழன்று
சந்த முந்த வந்து கொஞ்ச
நின்ப தம்ப ணிந்து நின்று மகிழ்வேனோ
நிந்தி தம்பு ரிந்து வெம்பு
மன்ப னின்கு ணந்தெ ரிந்து
நிந்தை என்று நொந்தொ துங்கி விடலாமோ
வஞ்ச மின்றி யுன்ப தங்க
ளொன்றி யன்பு விஞ்சி யுந்த
வன்சி னம்த ணிந்த கந்த வடிவேலா
மஞ்சு ளம்பொ ருந்தி நின்று
குன்ற மெங்கி லுந்தி கழ்ந்து
மங்க ளங்க ளின்று பொங்க வருள்வாயே
தஞ்ச மென்று நம்பி வந்த
அண்டர் துன்ப மன்று வென்று
தங்கி யங்கெ ழுந்த செந்தி லழகேசா
தண்டை யுங்கு லுங்க வந்து
சிந்தை யுங்க னிந்து சம்பு
தந்த னந்த னந்த னந்த வெனவாட
நஞ்சை யுண்ட வன்சி வந்த
கண்தி றந்து சொந்த மென்று
நண்பு டன்ப யின்று வந்த புதல்வோனே
நன்று ளம்ப டிந்து வந்து
பங்க மின்றி யின்பு தந்து
ஞஞ்சை யும்க டந்து பண்பி லொளிர்வேனோ
சியாமளா ராஜசேகர்

கலகலவென அவள் சிரிக்கையில் ....!!!


துளித்துளியென விழுந்திடும்மழை நனைத்திடும் இன்பம்
***சுகம்பெருகிடும் மகள்வரவினில் விலகிடும் துன்பம் !
குளிர்தருவென தருநிழலென நிறைந்திடும் நெஞ்சம்
***குழலிசையொடு குயில்மொழியவள் குரலினில் தஞ்சம் !
வளிவருடிடும் இதமவளிரு விழிகளில் மின்னும் 
***வனப்பினில்முகம் மதியொளியென மலர்ந்திடும் இன்னும் !
களித்திடும்மனம் கனித்தமிழென கவிதையில் பூக்கும்
***கலகலவென அவள்சிரிக்கையில் கமலமும் தோற்கும் !!
சியாமளா ராஜசேகர்

சில ஈற்றடிகளுக்கு வெண்பா ...!!!

சில ஈற்றடிகளுக்கு வெண்பாக்கள்...!!!!
உள்ளத்தி லன்பிருந்தும் ஊமையாய் நாட்கடத்தித்
தள்ளியிருந் தோம்யாம் தனிமையில் - மெள்ளப்
புரிந்துணர்ந்த பின்னே புயலடித்த வாழ்வில்
விரிசலுக்குத் தந்தோம் விடை.
பிஞ்சென்றும் பாராமல் பித்தம் தலைக்கேற
அஞ்சாமல் கொல்லும் அரக்கமனம் - நெஞ்சமே
வஞ்சகத்தை வேரோடு மாய்க்கவல்ல அன்பென்ற
செஞ்சொல்லுக் கீடுண்டோ செப்பு.
தஞ்சமென வந்தோரைத் தாய்போல் பரிவுடன்
அஞ்சலென அன்பாய் அரவணைக்கும் - நெஞ்சினனை
வஞ்சமின்றி வாயார வாழ்த்திடவே வாழ்கவென்ற
செஞ்சொல்லுக் கீடொன்று தேடு.
வண்ண நிலவை வளைந்திருக்கும் வானவில்லை
மண்ணில் பொழிந்திடும் மாமழையை - விண்ணில்
கொடியாய் மலர்ந்தொளிரும் கோலமின்னல் கீற்றை
வடிவாய்க் கவிசெய்வோம் வா.
ஏழைக் குடிசையில் ஈசான மூலையில்
வாழைக் குலைதள்ளி வாழ்த்திட - தாழைமணம்
வீடெங்கும் உன்னதமாய் வீச அவன்மனக்
காடெல்லாம் பூத்த கனா.
ஆடென்றால் ஆடி அழகுக் அழகூட்டும்
பாடென்றால் பாடும் பரவசமாய் - வீடெங்கும்
ஓடும் மழலைக்காய் ஓரிரவில் என்னகக்
காடெங்கும் பூத்த கனா.
குற்றங் களையாமல் கொட்டினாய் வார்த்தைகளைச்
சுற்றமும் கூடியுனைத் தூற்றிட - நற்றோழி!
வேதனை யோடு வெடித்தழுது விம்மினாய்
பேதமைப் பட்டுணர்ந்த பின்.
சியாமளா ராஜசேகர்

முத்தமிழே ....!!

எத்திக்கும் புகழ்மணக்க விளங்குவது முத்தமிழே
முத்தமிழாம் இயலிசையும் நாடகமும் தித்திக்கும்
தித்திக்கும் இலக்கியமும் இலக்கணமும் முத்தாகும்
முத்தாகக் கவர்ந்திழுக்கும் தமிழிசைநம் சொத்தாகும்
சொத்தாகித் தமிழர்தம் வாழ்வினுக்கே வித்தாகும் 
வித்தாகி விருட்சமென வளர்த்துவிடும் உத்தமமாய்
உத்தமமாய் வழிகாட்டிச் சிறப்பிக்கும் மித்திரமாய்
மித்திரமாய் உடனிருந்தே மணம்பரப்பும் எத்திக்கும் !!
சியாமளா ராஜசேகர்

கண்ணன் வந்தான் ....!!!

கனிவாய் அழைக்க கண்ணன் வந்தான்
இனிதாய்க் குழலை இசைத்து வந்தான்
தனிமை தவிப்பைத் தணிக்க வந்தான்
புனித னாகப் பொலிவாய் வந்தான் !
இனிதாய்க் குழலை இசைத்து வந்தான்
மனத்தில் நிறைந்து மகிழச் செய்தான்
புனித னாகப் பொலிவாய் வந்தான்
வனையும் கவியில் வடிவாய் வந்தான் !
மனத்தில் நிறைந்து மகிழச் செய்தான்
நினைத்த போது நிழலாய் வந்தான்
வனையும் கவியில் வடிவாய் வந்தான்
பனித்த விழியில் பரிவைக் கண்டான் !
நினைத்த போது நிழலாய் வந்தான்
நனைக்கும் மழைபோல் நயந்து வந்தான்
பனித்த விழியில் பரிவைக் கண்டான்
வனிதை என்னை மயக்கி விட்டான் !

திருமண வாழ்த்து !!

இருமனங்கள் ஒன்றாகி இணைகின்ற இந்நாள்
***இதயத்தில் இன்பவெள்ளம் ஊற்றெடுக்கும் பொன்னாள் !
உருவத்தில் சுந்தரனாம் அர்ஜுனுடன் அன்பாய்
***ஒண்டொடியாள் கிருத்திகாவும் கரம்பற்றும் நன்னாள் !!
பெருமகிழ்வாய்த் தண்டபாணி ஜெயந்தியுடன் வாழ்த்திப்
***பெற்றெடுத்தச் செல்வனுக்கு மணமுடிக்கும் திருநாள்
அருந்தவத்தோர் முன்னின்று வேதங்கள் முழங்க
****சீரோடும் சிறப்போடும் நடக்கின்ற மணநாள் !
குருவருளும் திருவருளும் குடிகொண்டு வாழ்த்தக்
***கூடிவரும் உறவுகளும் கொண்டாடி மகிழத்
திருப்பூட்டு நிகழ்கின்ற திருக்கோலம் காணத்
***திருவீதி வழிதேடித் தேவர்களும் கூட
அருவியென வாழ்த்தொலிகள் ஆர்ப்பரித்தே ஒலிக்க
***அணங்குகளின் குலவையொலி அரங்கெங்கும் நிறைய
திருமணமும் இனிதாகச் சீர்மிகவே நடக்கத்
***தேன்தமிழ்போல் எந்நாளும் நிறைவோடு வாழி !
வருகின்ற நாளெல்லாம் வளமாக வேண்டும்
***வசந்தங்கள் முப்போதும் வரமருள வேண்டும்
அருங்கொடையாய் எழில்மழலை மடிதவழ வேண்டும்
***ஆனந்த யாழ்மீட்டி அகங்குளிர வேண்டும் !
விருப்பமொடு தமிழன்னை அரவணைக்க வேண்டும்
***வேண்டியன யாவும்நும் கைசேர வேண்டும் !
பெருக்கட்டும் இன்பங்கள் இல்வாழ்வில் என்றும்
***பிரியமுடன் வாழ்த்துகிறேன் பல்லாண்டு வாழி !
அன்புடன் 
சியாமளா ராஜசேகர் 

இலக்கியங்களில் இளங்கோவின் கருப்பொருள்கள் ...!!

ஆழ்கடல் முத்தாய் நீதிகள் மூன்றை
***அடக்கிய திலக்கியச் சிலம்பு !
ஊழ்வினை உருத்து வந்தூட்டு மென்ற
***உண்மையை யுணர்த்திடும் குறிப்பாய் !
ஊழ்வினை யாலே மாதவி பாட்டில்
***ஊடிய கோவலன் பிரிந்தான் !
வீழ்ந்தனன் ஊழால் பழிதனைச் சுமந்து
***விடுத்தனன் இன்னுயிர் வீணே !!
உரியவள் வந்து தவற்றினைச் சுட்ட
***உயிரினைப் பாண்டியன் விடுத்தான் !
அரைசியல் பிழைத்தோர்க் கறம்கூற்றா மென்ற
***அரசியல் மாண்பைமெய்ப் பித்தான் !!
புரிந்ததும் பசுவின் துயரினைத் துடைக்கப்
***புதல்வனைத் தேர்க்காலி லிட்டு
மரித்திடச் செய்து மனுநீதிச் சோழன் 

***வழங்கினன் பசுவுக்கும் நீதி !
கற்பினில் சிறந்து விளங்கிடும் பெண்ணை
***கடவுளாய்ப் போற்றுதல் மரபே !
பொற்றொடி நங்கை கண்ணகி யாளை
***பொற்புடைத் தெய்வமாய்க் கருதி
சிற்பநூல் வல்லார் துணையுடன் எழிலாய்ச்
***சிலைவடித் தேவழி பட்டார் !
எற்றைக்கும் உரைசால் பத்தினி தம்மை
***ஏத்துவர் உயர்ந்தவ ரன்றோ ??
திருக்குறள் காட்டும் அறநெறி பலவும்
***சிலம்பிலும் இருந்திடக் கண்டோம் !
அருந்தமிழ்ப் பாக்கள் அணிசெயும் வண்ணம்
***அழகுடன் மிளிர்ந்திடக் கண்டோம் !
கருப்பொருள் ஒன்றாய்க் கதையுடன் இணைந்து
***காப்பியம் பேசிடக் கண்டோம் !
விருப்புடன் படிப்போர் உளம்நிறை வோடு
***மேன்மையாய்ச் சிறப்புறு வாரே !!
சியாமளா ராஜசேகர்

வினை தீர்க்க விரைந்தோடிவா ( வளையற் சிந்து )


ஆறுமுகத் தமிழ்க்கடவுள்
***அழகிற்கீடு இல்லை - சிவன் 
***அம்பிகையின் பிள்ளை - நல்
***அருளுக்கேது எல்லை - அவன்
***ஔவைக் குபதேசித்தவன்
***அகற்றிடுவான் தொல்லை !

ஏறுமயில் வாகனனின்
***எழிலுருவைக் கண்டு ! - என்
***இருவிழியால் உண்டு - மன
***ஏக்கத்துடன் நின்று - வரும்
***இன்னல்களைத் தீர்த்திடவே
***இறைஞ்சிடுவேன் இன்று !!
வட்டமிட்டுச் சுற்றிவந்து
***வாட்டுந்துயர் போக்கு - மன
***வருத்தங்களை நீக்கு - இரு
***வாள்விழியால் நோக்கு - புவி
***வாழ்வினிலே மகிழ்ச்சியுற
***வழங்கிடுநல் வாக்கு !!
பட்டதுயர் போதுமப்பா
***பயமகற்ற வாவா - தென்
***பழனிமலை பாலா - அறு
***படைவீடுடை சீலா - உனை
***பக்தியோடு வணங்கிடுவேன்
***பரிவளிப்பாய் வேலா !!
குற்றமில்லா நெஞ்சுடனே
***குன்றுதோறும் தேடி - சிவ
***குமரன்புகழ் பாடி - தினம்
***கும்மிகொட்டி ஆடி - தொழ
***குளிர்ந்துநீயும் வந்திடாயோ
***குறிஞ்சிமலர் சூடி !!
வெற்றிவேலை ஏந்திக்கொண்டு
***விரைந்தோடிநீ வாராய் - எனை
***விழிதிறந்து பாராய் - பவ
***வினையாவையும் தீராய் - மிக
***வெந்தமனம் ஆறிடவே
***விடையெனக்குக் கூறாய் !!
சிந்துகவிப் பாட்டெழுதிச்
***சேயோனுனைப் போற்றி - பண்
***சிங்காரமாய்ப் பூட்டி - இரு
***செவியினிக்க மீட்டிப் - பாடச்
***சிரித்தபடி முன்னேநிற்பாய்
***திருமுகத்தைக் காட்டி !!
கந்தனருள் கிட்டிவிட்டால்
***காலநேரம் மாறும் - என்
***கவலையாவும் தீரும் - மனக்
***காயங்களும் ஆறும் - குகன்
***கனிவுடனே கண்திறந்தால்
***களிப்புவந்து சேரும் !!

மங்கல மடந்தை மாதவி ....!!


சிலையென எழிலாள் சிலப்பதி காரம்
***செதுக்கிய மாதவி என்பாள்!
அலைதவழ் நகராம் பூம்புகார் தன்னில் 
***அருங்கலை நாட்டியம் கற்றாள் !
பொலிவுடன் அமைந்த அரங்கினி லேறி
***பொன்னியல் பூங்கொடி தோன்றி
விலைமதிப் பில்லா வித்தையைக் காண்போர்
***விழிகளுக் களித்தனள் விருந்தாய் !
பரிசொடு பட்டம் பெற்றவ ளிவளின்
***பார்வையில் கோவலன் பட்டான் !
புரிந்திட வியலா உணர்வுக ளாலே
***புதுசுகம் கூடிடக் கண்டாள் !
உரியவ ளாக்க மாலையை வாங்கி
***உரிமையாய்க் கோவலன் இணைந்தான் !
வரித்தனன் அவளை பத்தினி யாக்கி
***மங்கல மடந்தை என்றே !
கூடலில் மகிழ்ந்து இல்லற வாழ்வில்
***குழவியும் பெற்றனள் எழிலாய் !
ஆடலில் வல்லாள் இந்திர விழாவில்
***ஆடினள் கோவலன் இசைக்க !
ஊடலில் மாயப் பொய்பல பாட
***ஊழ்வினை காரணந் தானோ ?
வாடவிட் டவளை மன்னனும் நீங்க
***மாதவி துடித்தனள் தனியே !
மணியணி துறந்து துறவறம் பூண்டாள்
***மன்னவன் மாண்டது கேட்டு !
குணவதி யான மகளையும் துறவில்
***குழல்களைந் தேபுகுத் திட்டாள் !
வணங்கிடத் தக்க பத்தினி யிவளின்
***மாண்பினை வையகம் பேசும் !
கணிகையர் குலத்தில் பிறந்திருந் தாலும்
***கற்பினிற் சிறந்தவள் இவளே !
சியாமளா ராஜசேகர்

பதினைந்து மண்டில வெண்பா ....!!!

வருவாய் முருகா சிரித்து ! வரம்நீ
தருவாய் பரிந்து ! வரவை - அருள்வாய்
விரிந்து ! புரிவாய்! பரந்து சொரிந்து!
விருந்தாய் நெருங்கு விரைந்து ! 1.
முருகா சிரித்து வரம்நீ தருவாய்
பரிந்து ! வரவை அருள்வாய் - விரிந்து !
புரிவாய்! பரந்து சொரிந்து விருந்தாய்
நெருங்கு! விரைந்துவரு வாய்!. 2.
சிரித்து ! வரம்நீ தருவாய் பரிந்து !
வரவை அருள்வாய் விரிந்து ! - புரிவாய்!
பரந்து சொரிந்து விருந்தாய் நெருங்கு
விரைந்துவரு வாய்முரு கா ! 3.
வரம்நீ தருவாய் பரிந்து ! வரவை
அருள்வாய் விரிந்து ! புரிவாய்! - பரந்து
சொரிந்து விருந்தாய் நெருங்கு விரைந்து !
வருவாய் முருகா சிரித்து ! 4.
தருவாய் பரிந்து ! வரவை அருள்வாய்
விரிந்து ! புரிவாய்! பரந்து ! - சொரிந்து
விருந்தாய் நெருங்கு! விரைந்து வருவாய்
முருகா சிரித்துவரம் நீ ! 5.
பரிந்து வரவை அருள்வாய் விரிந்து !
புரிவாய்! பரந்து சொரிந்து - விருந்தாய்
நெருங்கு! விரைந்து வருவாய்! முருகா !
சிரித்துவரம் நீதரு வாய் ! 6.
வரவை அருள்வாய் விரிந்து ! புரிவாய்!
பரந்து சொரிந்து விருந்தாய் - நெருங்கு
விரைந்து வருவாய் முருகா ! சிரித்து !
வரம்நீ தருவாய் பரிந்து ! 7.
அருள்வாய் விரிந்து ! புரிவாய்! பரந்து
சொரிந்து விருந்தாய் நெருங்கு! - விரைந்து
வருவாய்! முருகா ! சிரித்து வரம்நீ
தருவாய் பரிந்துவர வை ! 8.
விரிந்து புரிவாய்! பரந்து சொரிந்து
விருந்தாய் நெருங்கு விரைந்து - வருவாய் !
முருகா ! சிரித்து ! வரம்நீ தருவாய்
பரிந்து வரவையருள் வாய் ! 9.
புரிவாய்! பரந்து சொரிந்து விருந்தாய்
நெருங்கு! விரைந்து வருவாய் ! - முருகா !
சிரித்து ! வரம்நீ தருவாய் பரிந்து
வரவை அருள்வாய் விரிந்து ! 10.
பரந்து சொரிந்து விருந்தாய் நெருங்கு!
விரைந்து வருவாய் முருகா ! - சிரித்து
வரம்நீ தருவாய்! பரிந்து வரவை
அருள்வாய் விரிந்துபுரி வாய் ! 11.
சொரிந்து விருந்தாய் நெருங்கு விரைந்து
வருவாய் முருகா ! சிரித்து - வரம்நீ
தருவாய் பரிந்து வரவை அருள்வாய்
விரிந்து புரிவாய் ! பரந்து ! - 12.
விருந்தாய் நெருங்கு விரைந்து வருவாய்
முருகா ! சிரித்து வரம்நீ - தருவாய்
பரிந்து வரவை அருள்வாய் விரிந்து
புரிவாய் ! பரந்து சொரிந்து. 13..
நெருங்கு விரைந்து வருவாய் முருகா !
சிரித்து வரம்நீ தருவாய் - பரிந்து
வரவை அருள்வாய் விரிந்து புரிவாய்
பரந்து சொரிந்துவிருந் தாய் ! 14.
விரைந்து வருவாய் முருகா ! சிரித்து
வரம்நீ தருவாய் பரிந்து - வரவை
அருள்வாய் விரிந்து புரிவாய் ! பரந்து
சொரிந்து விருந்தாய் நெருங்கு. 15.
சியாமளா ராஜசேகர்

தமிழா உடனே விழி .....!!!

தமிழா உடனே விழி ...!!!
********************************
தமிழனென்று  சொல்லடா 
     தலைநி மிர்ந்து நில்லடா!
அமுத மொழியைக் கேட்டதும் 
    அகமும் சிலிர்க்கு தல்லவா ?
கமழு மலரி ருக்கையில் 
     காகி தப்பூ தேவையோ ?
நமது தமிழி னிக்கையில் 
     நஞ்சைக் கலத்தல் நியாயமோ ?

படிக்க எளிய செம்மொழி 
     பாரிற் சிறந்த இன்மொழி 
தடைகள் தாண்டி வந்திடு
     தமிழைத் தாயாய் மதித்திடு !
அடச்சீ நம்மை ஆங்கிலம் 
     அடிமை யாக்கி யாள்வதா ?
உடனே விழித்துக் கொள்ளடா
     உலகைத் தமிழால் வெல்லடா !

கொடுமை கண்டு பொங்கிடு 
     கொள்கை யோடு வாழ்ந்திடு !
மடமை தன்னை மாற்றிட 
     மரபின் பெருமை காத்திடு !
திடமும் துணிவும் கொண்டுநீ 
      திறத்தை வளர்த்துக் கொள்ளடா !
கடமை யாற்றி உயர்ந்திடு 
     கர்ம வீரன் வழியிலே !

உழைக்கும் வருக்கம் மேம்பட 
     உரிமைக் குரலை எழுப்படா !
அழிவி லிருந்து காத்திடா 
     அரசால் என்ன பயனடா ?
உழவர் நிலையும்  தாழ்ந்திடில் 
     உணவுக் கென்ன செய்குவோம் !
விழிப்பு டன்நீ செயல்பட 
      வீறு கொண்டு எழுந்திடு !

மதுவில் மயங்கிக் கிடந்திடில் 
     வாழ்வு நரக மாகிடும் !
மதங்கள் என்ற போர்வையில் 
     மதம் பிடித்துத்  திரிவதா ?
வதைக்கும் வெறியை உதறிடு 
      மனித நேயம் காத்திடு !
புதிய பாதை வகுத்திடு 
      புனித னாக வாழ்ந்திடு !

இயற்கை நமக்கு வரமடா 
     இதனை நினைவில் வையடா 
இயைந்து வாழப் பழகடா 
     இலையேல் நாசம் நமக்கடா 
முயன்றால் வானும் வசப்படும் 
     முன்னோர் வார்த்தை பலமடா !
தயக்க மென்ன சொல்லடா 
      தமிழா விழித்துக் கொள்ளடா !!

சியாமளா ராஜசேகர் 

Tuesday, October 2, 2018

வங்கக் கரையினிலே வாழ்...!!!

அஞ்சுகத்தா யீன்ற அறிவார்ந்த சூரியனே! 
விஞ்சுதமிழ்க் காவலனே! வித்தகனே! - நெஞ்சுறைந்த 
தங்கத் தலைவனே! தன்மானச் சிம்மமே! 
வங்கக் கரையினிலே வாழ்.

'முள்'ளில் தொடங்கி 'மலர்' என்று முடியும் வெண்பாக்கள் ...!!!





முள்ளாய் உறவினர் முன்னென் மனம்கிழித்தாய் 
கள்ளமிலாக் காதலைக் கண்டிலனே! - உள்ளளவும் 
ஓடாகத் தேய்ந்தே உருக்குலைந் தாலும்நான் 
வாடா நெகிழி மலர். 

முள்ளிருந்து குத்திடினும் மொட்டவிழ்ந்த பூநாடித் 
துள்ளலுடன் பொன்வண்டு சுற்றிவரும்! - கள்ளுண்ணும் 
ஆசையுடன் ஆர்ப்பரித்(து) ஆடிவரும் அவ்வண்டை 
வாசத்தா லீர்க்கும் மலர்.

பஞ்சு எனத் தொடங்கி நெஞ்சு என முடியும் வெண்பாக்கள்....!!!!



பஞ்சனைய மேகங்கள் பாங்குடன் நீந்திவந்து 
வஞ்சமின்றித் தொட்டுரசும் வானவில்லை! - மஞ்சுளமாய்க் 
கார்முகில் கூடிவர கானமயி லாடிடும் 
நேர்த்தியில் பூத்திடும் நெஞ்சு. 

பஞ்சுமெத்த காத்திருக்கு! பக்கம்வா பொன்மயிலே! 
பிஞ்சுவிரல் பட்டதிலே பித்தானே(ன்) - அஞ்சுகமே 
சொக்கவச்ச சுந்தரியே! தூங்காம வொன்நெனப்பில் 
நிக்காம துள்ளுதடி நெஞ்சு. 

பஞ்சுமிட்டாய் வண்ணத்தில் பக்கத்தில் நானிருக்க 
அஞ்சாம லுன்கண் அலைவதேன்? - வஞ்சகனே! 
குத்திக் கிழித்துக் குடலை உறுவிடுவேன் 
நித்தம் கொதிக்குதடா நெஞ்சு. 

பஞ்சணை யும்வேண்டேன் பால்பழமும் யான்வேண்டேன் 
தஞ்சமடைந் தேனுன்னைத் தண்டமிழே! - கொஞ்சியுனை 
அன்போடு போற்றிடுவேன் அன்றாடம் வாழ்த்திடுவேன் 
நின்னால் நிறைந்ததென் நெஞ்சு. 

சியாமளா ராஜசேகர்

குறுந்தொகை காட்டும் காதல் வாழ்வு ....!!!



மட்டிலாக் களிப்பில் திருமணம் முடிந்து 
***மணமகள் இல்லறம் புகுந்தாள் ! 
கட்டிய காதல் கணவனுக் காக 
***கருத்துடன் சமைத்திட லானாள் ! 
கட்டித்த யிரினை விரல்களால் பிசைந்து 
***கைகளைச் சேலையில் துடைத்தாள் ! 
ஒட்டிய கரியைப் பொருட்படுத் தாமல் 
***உணவினைத் தலைவனுக் களித்தாள் !! 

முதல்முத லாக அடுக்களை சென்று 
***முயன்றிட ஆவலில் துடித்தாள் ! 
விதவித மாகச் செய்திட நினைத்தும் 
***விறகடுப் பெரித்திட அறியாள் ! 
புதியவள் தம்மின் குவளை விழிகளும் 
***புகையினால் எரிந்திடக் கசிந்தாள் ! 
பதியுடைப் பாசம் பெரிதெனக் கருதிப் 
***பக்குவப் பட்டிட லானாள் ! 

அன்புடை நெஞ்சம் கலந்தத னாலே 
***அகமகிழ்ந் தவள்பரி மாற 
இன்முகத் தோடே உண்டவன் சுவையோ 
***இனிதெனச் சொல்லிட மலர்ந்தாள் ! 
நன்றெனச் சொன்ன மன்னவன் மொழியில் 
***நங்கைதன் இதயமும் நெகிழ்ந்தாள் ! 
குன்றென வுயர்ந்த காதலைச் சிறப்பாய்க் 
***குறுந்தொகை காட்டிய தழகே !! 

சியாமளா ராஜசேகர்

நாராயணனே ....!!!

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி யாளாண்டாள் 
பாடிப் பரவசப் பட்ட திருப்பாவை 
நாடி நிதம்படித்தால் நாரா யணன்நமைத் 
தேடி யணைத்தே திருவருள் தந்திடுவான் ! 
கூடி அனைவரும் கோவிந்தன் நாமத்தை 
ஆடிமுன் நின்றே அழகுபார்த்த கோதையாய் 
ஈடில்லா அன்புடன் இன்குரலில் பாடிட 
ஓடிவந் தாட்கொள்வான் ஓர்நொடியில் மாலவனே !! 

கண்ணின் மணியைக் கருநீல வண்ணனைக் 
கண்ணனை முப்போதும் காதலால் உள்ளத்தே 
எண்ணிப் பசிமறந்(து) ஏங்கித் தவிப்பினும் 
தண்ணிலவாய்த் தான்குளிர்ந்து தண்டமிழ்ப் பாக்களால் 
தெண்டனிட்டு வாழ்த்தித் தெவிட்டாப்பா மாலையொடு 
கொண்டையிற்தான் பூச்சூடிக் கோபால னுக்களித்த 
பெண்ணவளின் ஒப்பிலாப் பேரன்பு நீங்காமல் 
வண்ணமுடன் என்றென்றும் வாழுமிவ் வையகத்தே !! 

பக்தியால் மெய்சிலிர்க்கப் பாற்கடல் வாசனைத் 
திக்கெட்டும் போற்றும் திருவரங்க நாதனைச் 
சிக்கெனப் பற்றித் திருத்தாள் வணங்கிடச் 
சொக்கிடும் நல்லழகு சுந்தரன் நெஞ்சிளகித் 
தக்கத் தருணத்தில் தாயினும்சா லப்பரிந்து 
நெக்குருகி வேண்டி நினைப்போர்தம் வாழ்விலே 
மிக்குயர்ந்த ஞானமும் வீடுபே றும்கொடுக்க 
அக்கணமே ஓடிவந்(து) ஆட்கொள்வான் நாரணனே !! 

(இயல்தரவிணைக் கொச்சகக் கலிப்பா ) 

நடையோசை வெண்பா ...!!!



நடையோசை வெண்பா ...!! 
************************************* 
பார்த்தேன் சிலிர்த்தேன் பனித்தேன் உளங்கனிந்தேன் 
ஓர்ந்தேன் மகிழ்ந்தேன் உயிர்நனைந்தேன் - சேர்த்தணைத்தேன் 
விண்மிதந்தேன் பாலீந்தேன் மெய்மறந்தேன் பண்ணிசைத்தேன் 
கண்குளிர்ந்தேன் செய்தேன் கவி
.

அந்திவானும் ஆட்டிடையனும் ....!!!



மேகமெலாம் தெரபோட 
***மேற்கால கதிரவனும் 
வேகவச்சி வறுத்தெடுத்து 
***வெயில்கொறச்ச கையோடு 
போகத்தான் பொறப்பட்டான் 
***பொன்மஞ்சள் நிறத்தோடு 
சோகமாகப் போனானோ 
***சோர்வுலத்தான் போனானோ ?? 

சீனிபோல வெள்ளையாக 
***சிரசுமேலக் காஞ்சவனும் 
வானிலொளி வட்டமாக 
***வாசலுக்கு வருபவனும் 
ஆனமட்டும் அடிச்சிவிட்டு 
***அந்தியில குளுந்தவனும் 
மேனியெல்லாம் செவந்திருக்க 
***மெல்லமெல்ல மறஞ்சுபுட்டான் !! 

தெருமுக்குக் கடையினிலே 
***தேநீரக் குடிச்சுபுட்டுக் 
கருக்கலிலே ஆடுகளக் 
***கணக்காகப் பத்திவந்த 
வருத்தமிலா இடையன்தான் 
***வாத்தியாரு பாட்டுபாடி 
நெருக்கமாகப் புல்லிருக்கும் 
***நெலத்துனிலே மேயவிட்டான் !! 

ஆடுகள மேய்க்குறேன்னு 
***ஆலமர நெழலுலிலே 
பாடுபட்டக் களப்புனிலே 
***படுத்தொறங்கிப் போய்விட்டான் ! 
வீடுபோகும் நேரத்துல 
***மேமேன்னு ஆடுகத்தக் 
கோடுபோட்ட சட்டமாட்டி 
***கொம்போடு கெளம்பிட்டான் !! 

சியாமளா ராஜசேகர்

கலை எனத் தொடங்கித் தலை என முடியும் பாக்கள் !!!



சகோதரி ஜெயம் ராமச்சந்திரன் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க.... 
கலை எனத் தொடங்கித் தலை என முடியும் பாக்கள் !!! 

கலைஞரை வாழ்த்திக் கனிவுடன் வேண்ட 
கலைமகள் நெஞ்சம் கனிவாள் ! - வலையில் 
உமிழாதே வார்த்தைகளை உள்ளன் புடனே 
தமிழனாய்த் தாழ்த்து தலை. 

கலைந்துசெலும் மேகமாய்க் காணாமற் போகும் 
தொலைவில் படுத்தும் துயர்கள் ! - நிலையாய் 
அமிழ்தி னினிய வழகு மொழியாம் 
தமிழ்தருமே ஆறு தலை. 

கலைமான் இணையொடு காதலில் கூடும் 
அலைகளில் மீன்துள்ளி யாடும் - மலையினின்றும் 
பாய்ந்துவிழும் சிற்றருவி பார்த்துமகிழ் வோடியற்கைத் 
தாய்க்குப் பணிவேன் தலை. 

சியாமளா ராஜசேகர்

அணிகள் ...!!!

சொற்பின்வரு நிலையணி வெண்பா !! 
**************************************************** 
களைகள் பிடுங்கிக் களைத்திருந் தாலும் 
களையாய் முகம்விளங்கக் கண்டு - களிப்புடனக் 
கன்னியிடம் தன்னுள்ளக் காதலைச் சொல்லிட 
கன்னஞ் சிவந்தாள் கனிந்து. 

பொருள் பின்வரும்நிலை யணி வெண்பா !! 
************************************************** 
தண்டை யொலித்திடும் தாள்களில்; காற்சிலம்பும் 
தண்கழலில் கொஞ்சிடும்; சந்தமுடன் - தண்டமிழ்ப் 
பாக்களைப் பாடிப் பதமலர் பற்றிடக் 
காக்கும் குகனடியைக் காண். 


சொற்பொருள் பின்வரு நிலையணி வெண்பா

விண்ணழகு மின்னொளிரும் வெண்ணிலவோ பேரழகு 
கண்சிமிட்டும் மீனழகு காரழகு ! - மண்செழிக்கக் 
கொட்டும் மழையழகு கோல மயிலழகு 
வட்டக் கதிரழகை வாழ்த்து . 

மலரின் மணமினிது; வைய மொளிரப் 
புலரும் பொழுதினிது; பொன்போல் - நிலவினிது; 
கொஞ்சும் குரலில் குழவி மொழியினிது; 
அஞ்சுகம் பேச்சினி தாம்.