Friday, January 27, 2017

பல்சந்த மாலை ....!!! ( சிற்றிலக்கியப் படையல் )



#சிற்றிலக்கியப்_படையல் 
 `````````````````````````````````````````
                                       பல்சந்த மாலை 
                                       **********************
                                        கடவுள் வாழ்த்து !
                                        ``````````````````````````````
தேனைவிடத் தித்திக்கும் தீந்தமிழில் நான்பாட 
ஆனைமுக! தந்திடுவாய் ஆசிகளைப் ! - பானை 
வயிற்றனே! பல்சந்த மாலை யியற்ற 
உயிரொடுநீ மெய்யாய் உலவு .

                                          நூல் !   (இயற்கை)
                                          ********
1. அறுசீர் விருத்தம் ( மா மா காய் மா மா காய் )

உலவும் மேகம் வான்வெளியில் 
***உள்ள மள்ளும் வனப்பினிலே !
மலரும் விண்மீன் கணக்கின்றி 
***மாலைப் பொழுது சாய்ந்துவிட்டால் !
நிலவும் மெல்ல முகங்காட்டி
***நிகழ்த்திக் காட்டும் விந்தைகளை !
புலரும் காலைப் பொழுதினிலே 
***புதிதாய் உதிப்பான் கதிரவனே !

2. அறுசீர் விருத்தம்  ( விளம் மா தேமா விளம் மா தேமா )

கதிரவன் கிழக்கில் தோன்றக் 
***காரிருள் மறைந்து போகும் !
புதியதாய்ப் பிறந்த நாளும் 
***பொலிவுடன் கடந்து செல்லும் !
உதித்ததைக் கமலம் கண்டே 
***உவப்புடன் சிரித்துப் பூக்கும் !
நதியலை ஒளிர்ந்து மின்ன
***நளினமாய் நீந்தும் மீனே !

3.எழுசீர் விருத்தம் ( விளம் மா விளம் மா விளம் விளம் மா )

மீன்களுந் துள்ளி யாடிடு மாற்றில் 
***வெள்ளலை  தவழ்ந்திடு மழகாய் !
மான்களும்  நீரைப் பருகிட அங்கு 
***வந்திடும் பிணையுட னிணைந்தே!
தேன்மது வுண்ண வண்டினம் சுற்றித் 
***தேடிடும் செடியினில் பூவை !
கான்வளர் மரத்தின் கருங்குயி லோசை 
***காதினில் ஒலித்திடும் இனிதே !

4. எண்சீர் விருத்தம்  ( காய் காய் காய் மா - அரையடிக்கு )

இனிதான மணங்கமழும் சோலையிலே பூக்கள் 
***இளங்காற்றின் தாலாட்டில் தலையசைத்தே ஆடும் !
கனிசுமந்த மரக்கிளையில் கிளியமர்ந்து கொய்ய
***கடித்திட்ட சிவப்பலகு நெஞ்சத்தை யள்ளும் !
பனித்துளியும் மலரிதழில் அசையாமல் நின்றே 
***பருவமங்கை முகப்பருபோல் முத்தாக மின்னும் !
தனிமையிலே  யிருந்தாலும் தவித்திடுமோ உள்ளம் 
***தாமரையாய்ப் பூத்திருக்கும் பேரெழிலைக் கண்டே !

5. எண்சீர் விருத்தம்  ( காய் காய் மா தேமா - ( அரையடிக்கு )

கண்டதுமே கடலலைகள் கவரு முள்ளம்
***காற்றுவந்து வருடிவிட்டுக் காதல் சொல்லும் !
மண்குவித்து வீடுகட்டும் மழலைச் செல்வம் 
***மழைவந்து கலைத்துவிட்டால் வருமோ தூக்கம் ?
வெண்ணிலவு வரும்நேரம் வெள்ளி பூக்கும் 
***வெள்ளளையும் துள்ளிவந்தே  எட்டிப் பார்க்கும் !
வெண்முகிலும் வானத்தில் விரைந்தே ஓடும் 
***விளையாடத் துணைதேடும் விரட்டிச் சென்றே !

6. அறுசீர் விருத்தம்  ( விளம் மா விளம் மா விளம் காய் )

சென்றதை யெண்ணிச் சிலிர்த்திடும் நெஞ்சம் 
***தேன்மழைச் சாரலிலே !
தென்றலும் தழுவ தேகமும் குளிர்ந்து 
***செவ்விதழ் துடித்திடுதே !
முன்பனிக் காலம் முகிலினம் கூட 
***முகத்திரை போட்டிடுதே !
பொன்னிற வானம் புதுவடி வோடு 
***பூத்திடும் பொலிவுடனே !

7. அறுசீர் விருத்தம்  ( காய் காய் காய் காய் மா தேமா )

பொலிவுடனே மலைமுகட்டில் பொங்கிவிழும் வெள்ளருவி 
***போதை யூட்டும் !
ஒலியெழுப்பிக் குதிபோட்டே ஓடிவந்து தலைநனைத்தே  
***உள்ளம் கிள்ளும் !
மெலிதாகச் சிந்திடினும் மேனியெங்கும் தாளமிட்டு
***மீட்டும் கானம் ! 
வலிநீங்கிப் புத்துணர்வில் மனம்களித்துக் கூத்தாடும் 
***மாயம் என்னே ?

8. வெண்டளையான் இயன்ற 
    எண்சீர் ஆசிரிய விருத்தம் 

என்னே அழகிது என்றெண்ணி நெஞ்சம் 
***இறைவன் படைப்பாம் இயற்கையினைப் போற்றும் !
நன்றி யுரைத்திட நல்லிதயத் தோடு 
***நலமே விளைந்திட ஞாயிற்றை வேண்டும் !
மின்னும் ஒளியுடை வெண்ணிலவைக் கண்டு 
***வியந்திட விண்மீன் விழிசிமிட்டிக் காட்டும் !
இன்பம் கொடுக்கும் இயற்கைவர மென்றே 
***எண்ணி மகிழ்வதற்(கு) ஈடுண்டோ இங்கே ! 

9. எழுசீர்ச் சந்த விருத்தம் 

இங்கி ருந்த யின்ப முந்த என்றன் கண்கள் பொங்குதே 
தங்கு முள்ளம் சிந்து மன்பில் சந்த  தம்ம கிழ்ந்ததே 
பங்க மின்றி வண்ண மெட்டில் பட்டு நெஞ்சம் கொஞ்சுதே 
திங்க ளென்னை வட்ட மிட்டு சிந்தை யுள்நி றைந்ததே !

10. பதின்சீர் விருத்தம்  (காய் காய் காய் மா தேமா - அரையடிக்கு )

நிறைந்தமனத் தால்வாழ்த்தி நிறைவுசெய்வேன் சந்த மாலை 
***நினைக்கும்நல் லனயாவும் நிறைவேற அருள்வாய் தேவே !
இறையருளால் யாம்பெற்ற இன்பத்திற் கீடே இல்லை 
***இயற்கையினை விரும்பாதோர் இவ்வுலகில் யாரு மில்லை !
பிறையழகும் கவின்கடலும் பிறவனைத்தும் பேறாய்ப் பெற்றோம் 
***பிரியமுடன் போற்றிவந்தால் பெரிதாகக் கவலை யில்லை !
குறைவின்றி வளமோடு குவலயத்தில் நாமும் வாழக் 
***கொடுப்பினையாம் இயற்கையைப்போல் குளிர்விக்கும் சக்தி யுண்டோ  ??

சியாமளா ராஜசேகர்

Monday, January 16, 2017

தைமகளே வருக !

நிலா முற்றம் குழுமம் நடத்திய பொங்கல் திருநாள் சிறப்புக் கவிதைப் போட்டியில் பரிசு வென்ற என் கவிதை !
தைமகளே வருக .....!!!
```````````````````````````````````
பிறந்திடுவாள் தைமகளும் மார்கழிக்குப் பின்னே 
>>>பிரியமுடன் பொங்கலெனப் பூப்பாளே நன்றே !
சிறப்பான திருநாளில் தமிழர்தம் வீட்டில்
>>>சீர்மிகவே கொண்டாட வளமாகும் வாழ்வே !
உறவோடு சேர்ந்திருந்து கதிரவனைப் போற்றி
>>>உளமார உழவர்க்கு நன்றியினைச் சொல்லி
மறத்தமிழன் வீரமுடன் காளையினை வீழ்த்தி
 >>>மனம்மகிழும் திருநாளே தைப்பொங்கல் நன்னாள் !!

செங்கதிரோன் கீழ்வானில் தலைதூக்கிப் பார்க்க
>>>செங்கரும்பின் தோகையொடு தோரணமும் ஆட
மங்களமாய்க் கோலமிட்ட முற்றத்தின் மீது
>>>மஞ்சள்,தாம் பூலமுடன் பூக்களையு மிட்டுச்
செங்கல்லில் அடுப்பமைத்து மண்பானை வைத்துத்
>>>திருவிளக்கை ஏற்றிவைத்தே ஆதவனை நோக்கிப்
பொங்குமுளத் தோடுதொழ புத்துணர்வும் கூடும்
>>>பொலிவான பண்டிகைநாள் பேரின்ப மீயும் !
புத்தரிசி பானையிலே பொங்குகின்ற நேரம்
>>>போடுகின்ற குலவையொலி காதோரம் கொஞ்சும் 

தித்திக்கும் பொங்கலிலே நெய்மணமும் வீசும்
>>>திகட்டாமல் நெஞ்சள்ளும் அச்சுவெல்ல வாசம் 
முத்தமிழும் கூடிவந்து நல்வாழ்த்து சொல்லும் 
>>>முப்போதும் தமிழ்மரபே பண்பாட்டில் வெல்லும் 
எத்திக்கில் இருந்தாலும் இதயமது பூக்கும்
>>>ஏற்றமுடன் கொண்டாட தைமகளே வாராய் !
( எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
சியாமளா ராஜசேகர்

கவியரங்கக் கவிதை ...!!!

சோலைகவியரங்கம் - 4
```````````````````````````````````
8.கவிஞர் அழைப்பு சியாமளா ராஜசேகர்
`````````````````````````````````````````````````````````````
பண்படுத்தும் பாஅவும் பாசமது கால்பிணைக்கும்
நன்முற்றித் தாள்பணியும் நாஅணும் - பெண்ணணங்கே.!
தூற்றும் பதர்நீக்கித் தூய்மைகொள்ளும் ஆமாம்நெல்
நாற்றும் சியாமளாதான் நாட்டு
ஓயாத கடலலையாய் ஓங்குகவி எழுக
ஒப்பற்ற தமிழ்ப்பாட்டில் உம்குரலைத் தொழுக
தாயாகத் தமிழ்பரப்பும் தருநிழலே வருக
தயங்காத தீங்கவியைத் தமிழோடு தருக.!
பாயாத நதிபோலக் கலங்கிருக்கும் எமக்குப்
பனிமழையாய்ப் பூத்தூவும் கவிதாரும் எமக்கு
சேயாகக் காத்திருக்கும் சோலைகுழாம் விழிக்க
சியாமளாவே நீர்தாரும் செங்கவியில் களிக்க.!
-------/-------/--------/
சோலைக் கவியரங்கம் 4
******************
தலைப்பு : புதுமைப் பொங்கல் பொங்குக
*******************************************************
வாழ்த்து !
*************
தேனை விடவும் தித்திக்கும்
>>>>தெள்ளு தமிழில் துதிபாட
ஆனை முகனும் துணையிருப்பான்
>>>>அழகாய்க் கவிதை வரமளிப்பான் !
பானை வயிற்றோன் பதமலரைப்
>>>>பற்றி வணங்கப் பரிவுடனே
மோனை எதுகை தப்பாமல்
>>>>முதல்வன் காப்பான் முன்நின்றே !
பொங்கல் திருநாள் கவியரங்கைப்
>>>>பூத்துக் குலுங்கச் செய்திடவே
தங்கத் தமிழன் வள்ளிமுத்து
>>>>தலைமைப் பொறுப்பைத் தானேற்க
மங்காப் புகழைக் கொண்டிருக்கும்
>>>>வரத ராசன் சோலையிலே
 சங்கத் தமிழே மணந்திடுவாய்
>>>>தரணி போற்ற வானுயர்ந்தே !
அறுசீர் விருத்தம் !
*************************
(மா மா காய் )
தமிழர் போற்றும் திருநாளாம்
****தையின் முதல்நாள் தரணியெங்கும்
அமிழ்தாம் தமிழின் இனிமையைப்போல்
 ****அகமும் முகமும் மலரட்டும் !
உமிக்குள் சிரிக்கும் நெல்மணிகள்
****உலகோர் வீட்டில் நிரம்பட்டும் !
இமியும் பேத மில்லாமல்
 ****இனிதே மனிதம் தழைக்கட்டும் !
கவலை தீயில் பொசுங்கிவிடக்
****களிப்பால் இதயம் ஒளிரட்டும் !
சுவடாய்ப் பதிந்த துயர்யாவும்
****தொலைந்து தோற்றே ஓடட்டும் !
துவண்ட மனமும் அமைதியுற்றுத்
****துரிய நிலையை அடையட்டும் !
சிவத்தை வெளியில் தேடாமல்
****தெளிந்து தனக்குள் காணட்டும் !
உழவர் வாழ்வின் தரமுயர்ந்தே
****உவகை பெருகி மேன்மையுறக்
கழனி யெங்கும் பயிர்செழித்துக்
****கவினாய்ப் பசுமைப் பூக்கட்டும் !
இழந்த மகிழ்ச்சி மீண்டுவர
****இறைவன் அருளும் கிட்டட்டும் !
சுழலும் வாழ்க்கைப் பாதையிலே
****சுகமாய்ப் பயணம் தொடரட்டும் !
பதுக்கி வைத்த பணமெல்லாம்
****பைய வெளியில் வந்திடட்டும் !
மதுவை விலக்கி மனைவியுடன்
****மனிதன் பொழுதைக் கழிக்கட்டும் !
வதுவைக் கூடிக் கன்னியரின்
****வாழ்வும் வரமாய் விளங்கட்டும் !
புதுமைப் பொங்கல் பொங்கட்டும்
****புவனம் பொலிவாய் மலரட்டும் !
கவிஞர் சியாமளா ராஜசேகர்

Friday, January 13, 2017

பூந்தமிழ்ப் பொங்கலைப் போற்று ...!!!


கடவுள் வாழ்த்து ...!!! 
````````````````````````````````` 
கற்பகவி நாயகனே! கந்தனுக்கு மூத்தோனே! 
பொற்பதம் பற்றியுனைப் போற்றிடுவேன் !- நற்றமிழில் 
வெண்பாக்கள் யான்புனைய வேண்டித் துதித்திடுவேன் 
வண்ணமுற ஆசி வழங்கு . 
அவையடக்கம் ...!!! 
``````````````````````````````` 
வெண்பா வெழுதிட மேடைதந்த மேன்மைமிகு 
வண்டமிழ்ப் பேரவை வாழியே ! - செண்டுமலர்த் 
தந்துன்னைப் பாராட்டித் தாய்த்தமிழா லன்புடன் 
வந்தனம் செய்வேன் மகிழ்ந்து . 

பூந்தமிழ்ப் பொங்கலைப் போற்று ...!!! 
************************************************** 
மார்கழிக்(கு) ஓய்வளித்து மங்கலமாய்த் தைப்பிறந்தாள் 
சீர்மிகவே பொங்கல் திருநாளில் ! - ஏர்பிடிக்கும் 
நல்லுழவர் வாழ்வும் நலம்பெற வந்தனள் 
எல்லையிலா ஆனந்தம் ஏற்று . 1. 

தீயன யாவையும் தீயில் பொசுக்கிவிட்டுத் 
தூய மனத்துடன் சூரியனை - நேயமுடன் 
போற்றித் துதிக்க புகழோடு பொன்பொருளும் 
ஊற்றாய்ப் பெருகும் உவந்து . 2. 

முற்றத்தில் கோலமிட்டு முப்பக்கம் கல்லடுக்கிச் 
சுற்றமுடன் கூடிச் சுவையாகப் - பொற்புடன் 
புத்தரிசி பானையிலே பொங்கிவர, பூரிப்பில் 
சித்தங் குளிருஞ் சிலிர்த்து . 3. 

பொங்கிவரும் நேரத்தில் பொங்கலோ பொங்கலெனக் 
கொங்குமொழிப் பெண்டிர் குலவையிட - அங்கே 
மகிழ்ச்சிப் பெருக்கால் மனமதும் துள்ளிப் 
பகிர்ந்திடு மன்பினைப் பார் . 4 . 

மஞ்சள் குலையுடனே மாவிலைத் தோரணமும் 
கஞ்சமல ரோடு கரும்புவைத்துப் - பஞ்சுத் 
திரிபோட்டு நல்லெண்ணெய் தீபத்தை யேற்றிப் 
பரிதிக்குப் பொங்கல் படை .. 5. 

கூடிப் பகிர்ந்துண்டு கொண்டாடிக் கும்மிகொட்டிப் 
பாடிப் பரவசப் பட்டிடுவார் - தேடிவந்தே 
ஆசிபெற்றுச் சென்றிடுவார் ஆனந்த மாய்க்கழிப்பார் 
நேசிப்பார் அன்பில் நெகிழ்ந்து . 6. 

உழவினைப் போற்றிடும் உன்னத நாளில் 
பழந்தமிழர் வீரத்தின் பற்றும் - அழகாய் 
வெளிப்படும் மஞ்சு விரட்டாக, பாரோர் 
களிப்பினில் பூத்திடுவர் கண்டு . 7. 

மாட்டைக் குளிப்பாட்டி மஞ்சளுடன் பொட்டிட்டு 
தீட்டியகொம் பில்வர்ணம் தீட்டியதும் - சூட்டிய 
மாலையுடன் கம்பீர மாய்க்கால் சலங்கையுடன் 
வாலையு மாட்டும் மகிழ்ந்து . 8. 

வண்டிகளில் பூட்டிய மாடுகளின் வீதியுலா 
கண்கொள்ளா அற்புதக் காட்சியே !- பண்டைத் 
தமிழரின்பண் பாட்டைத் தரணியில் காத்தே 
இமிழ்தாய்த் தொடர்வோம் இனிது .9. 

பேரின்ப மீந்திடும் பேறென எண்ணவைக்கும் 
பாரினிலே மேன்மைமிகு பண்டிகையாம்!- பேரியலாய்ச் 
சாந்தமுடன் நற்றமிழர் சங்கமித்துக் கொண்டாடும் 
பூந்தமிழ்ப் பொங்கலைப் போற்று . 10. 

தைமகளே வாராய் ....!!!


மார்கழிக்கு விடைகொடுத்து மகிழ்வுடனே பூத்து 
>>>மங்களங்கள் அருளிடவே தைமகளே வாராய் !
நேர்வழியைக் காட்டிடவே நிமிர்ந்தபடி நீயும் 
>>>நீதியினை நிலைநாட்ட நித்திலமாய் வாராய் !
சீர்மல்கும் சிங்காரத் தமிழ்மரபைக் காக்கச்
>>>சித்திரமாய் நடைபோட்டுச்  சிறப்பிக்க வாராய் !
ஏர்பிடிக்கும் நல்லுழவர் வறுமைநிலை தீர்த்தே 
>>>ஏற்றமிகு வாழ்வளிக்க ஏந்திழையே வாராய் !

விவசாயி  துயர்துடைத்து வேளாண்மை ஒங்க 
>>>விடியலினை வழங்கிடவே விரைந்தேநீ வாராய் !
கவலையெல்லாம் கழித்துவிட்டுக் களிப்புதனைக் கூட்டக் 
>>>கற்பகமாய்க் கண்மலர்ந்து கனிவோடு வாராய் !
புவனமெங்கும் இன்பநிலை பொங்கிடவே நீயும் 
>>>புதுயுகத்தைக் காட்டிடவே பொற்புடனே வாராய் !
தவறான எண்ணங்கள் தலைதூக்கக் கண்டால் 
>>>தவிடுபொடி யாக்கிடவே தைமகளே வாராய் !

வன்முறைகள் தோற்றோடி வருநாட்க ளெல்லாம் 
>>>வண்ணமுற கவிபாடி வடிவுடனே வாராய் !
கன்னியரின் இதயத்தில்  சுபராகம் மீட்டிக் 
>>>கனவெல்லாம் ஈடேற்ற திருமகளே வாராய் !
புன்முறுவல் பூத்தபடி புதுமைகளைச் செய்ய 
>>>பொன்மகளே புனிதமுடன் பொலிவோடு வாராய் !
தன்மையுடன் தமிழரின பண்பாட்டின் மேன்மை 
>>>தரணியிலே தழைத்தோங்கத் தைமகளே வாராய் ....!!!

Tuesday, January 3, 2017

எப்படிச் சொல்வேனடி ....???



நெஞ்சள்ளிச் சென்றவனை நினைக்கையிலே மனத்திரையில்  
>>>>நிழலாடும் அவனுருவே !
கஞ்சமலர்க் கன்னமென்றான் கருவண்டு விழிகளென்றான் 
>>>>கள்வனவன் அழகனடி !
செஞ்சாந்து  பொட்டிட்டுச் செல்லமாய்க் கிள்ளினனே
>>>>சிலிர்த்துவிட்டேன் என்தோழி !
வஞ்சியெனைச் சிலையென்றான் வளைக்கரமும் வனப்பென்றான் 
>>>>வளைத்துவிட்டான் அன்பாலே !

கள்ளூறும் இதழென்றான் கற்கண்டு மொழியென்றான் 
>>>>கவின்மலரே நீயென்றான் !
துள்ளிவரும் மானென்றான் தும்பைப்பூ சிரிப்பென்றான் 
>>>>துடியிடையோ கொடியென்றான் !
உள்ளத்தால் மழலையென்றான் உயிர்வளியும் நீயென்றான் 
>>>>உணர்வினிலே கலந்துவிட்டான் !
வெள்ளிவரும் வேளைக்குள் விரைந்திடுவேன் என்றுசென்றான் 
>>>>வெட்கமென்னைத் தின்றதடி !

சுந்தரனின் பேச்சினிலே சுகராக மீட்டலிலே 
>>>>சொக்கிவிட்டேன் தன்னாலே !
மந்திரமென் செய்தானோ மன்மதனோ மாயவனோ 
>>>>மயங்கிவிட்டேன் காதலிலே !
விந்தையென்ன நானறியேன் விழிமூடித் தவிக்கின்றேன் 
>>>>விரைந்துவர ஏங்குகின்றேன் !
எங்கிருந்த போதினிலும் என்னிதயம் அவன்வசமே 
>>>>எப்படிநான் சொல்வேனடி ....???