Saturday, January 30, 2016

வழுக்கை - குறள்



கவிதை புனைய கருவும் கிடைத்தால் 
குவிப்போ மெழுதிக் குறள் . 1

அடர்ந்த முடியும் அடிக்கடிக் கொட்ட
தொடரும் வழுக்கைத் துயர் . 2

கருத்த சிகையில் கலக்கம் வருமேல் 
வருத்தி யெடுக்கும் வலி . 3

வழுக்கை விழுந்திட வாட்ட மெதற்கு
அழுக்கே யிராதே அழகு . 4

வெளுக்குமோ வென்ற விசனமே யில்லை 
பளுவின்றிக் காத்திடும் பார் . 5

முடியிலா மண்டையில் மூளை யதிகம் 
இடிந்து விடாதே இனி . 6

இரவியும் சுட்டால் எரியும் தலையும் 
சிரசினில் தொப்பி சிறப்பு . 7

சீவி விடுதற்கு சீப்புகள் தேவையோ 
கோவித் திடாமலே கூறு .   8

வழுவழு வென்றே வடிவா யிருக்கும் 
வழுக்கைத் தலையும் வனப்பு . 9

ஆலயம் சென்றால் அடித்திடும் மொட்டையின் 
கோலமே யீதன்றோ கூறு ? . 10

Friday, January 29, 2016

கன்னலை மிஞ்சும் கனிமொழியோ ....???



கன்னக் குழியால் கவர்ந்த வளிவளோ 
கன்னலை மிஞ்சும் கனிமொழியோ? - புன்னகை 
சிந்தும் புதுமலரோ செவ்விய மான்விழியோ 
சுந்தரியோ தாரகையோ சொல் ..

லிமரைக்கூ ....!!!


நித்தமும் அதிகாலை எழுவாய் 
அன்றைய நாள் சுகமாய்த் தொடர 
கைகூப்பி இறைவனைத் தொழுவாய் ! 
********************** 
கடிக்க இனித்திடும் கரும்பு 
மென்று தின்று கீழே போட்டால் 
ருசிக்க வந்திடும் எறும்பு ! 
************************* 
தலைவனின்றித் தகித்தது மஞ்சம் 
வருகைக்காய் காத்தவிழி பூத்துப் போக 
தவியாய்த் தவித்தது நெஞ்சம் ! 
************************* 
குடித்துவிட்டுப் போடுவான் ஆட்டம் 
சீர்கெட்டுக் குடல்வெந்து துடியாய்த் துடித்து 
அடங்கிடுமே மூச்சின் ஓட்டம் ! 
************************** 
வானில் தவழும் மேகம் 
கண்டதும் தானாய்க் கவிதை பிறக்க 
இதயம் மறக்கும் சோகம் !

என்னே வெட்கம் ....??


நாதனைக் கண்டதால் நாணமுங் கொண்டாயோ 
காதலில் பூத்தாயோ கண்மணியே !- கீதமும் 
உன்குரலில் கேட்டிட ஓடோடி வந்தானே 
என்னேவெட் கம்,கை யெடு .

முற்றுமுடுகு வெண்பா ....!!!

இந்தநா ளன்றுபோ லின்பமே தந்ததோ 
பந்தபா சங்களே பஞ்சமோ? - சொந்தமே 
வெண்ணிலா முந்தியே விண்ணிலே கொஞ்சுதே 
வண்ணமா யங்களோ மஞ்சு . 

இந்தநா ளன்றுபோ லின்பமே தந்ததோ 
பந்தபா சங்களே பஞ்சமோ? - சொந்தமோ 
நஞ்சுபோ லெண்ணுதே நன்றியே யின்றியே 
வஞ்சமோ நெஞ்சிலே வம்பு. 

அஞ்சனை மைந்தா .....!!!


அஞ்சனை மைந்தா ஆஞ்ச நேயா
சஞ்சலம் தீர்ப்பாய் வாயு குமாரா 
தஞ்சம டைந்தேன் ராம தூதா 
நெஞ்சினி லுன்னை நினைத்தேன் வாராய் 
பஞ்சமு கத்தோய் பாதம் பணிந்தேன் 
வஞ்சமும் நீங்க வரமும் அருள்வாய்...!!