Friday, July 26, 2019

வரதரைக் கண்டேன் ...!!!


வரதரைக் காண மகிழ்வுடன் நின்றேன் வரிசையிலே
திருவடி கண்டதும் சிந்தை குளிர்ந்தேன் சிலிர்ப்பினிலே
அருளினைத் தந்திடும் அத்தி வரதரின் அழகினிலே
வருத்திய துன்பம் மறைந்திட வுள்ளம் மலர்ந்ததுவே!
சியாமளா ராஜசேகர்

ஆடி வெள்ளிக் கிழமையில் ....!!!


ஆடி வெள்ளிக் கிழமையில்
அம்ம னருளை நாடியே
கூடி யொன்றாய் மங்கையர்
குலவை யிட்டுப் பாடிடத்
தேடி வந்தே அன்புடன்
தேவி வரங்கள் நல்குவாள்!
ஈடில் லாத எழிலுடன்
ஈச னோடு தோன்றுவாள்!!

மஞ்சள் முகத்தில் குங்குமம்
வட்ட மாகத் துலங்கிடும் !
கஞ்ச மலராய்ச் சிவந்திடும்
கனிவில் தாய்மை விளங்கிடும்!
நெஞ்ச முருகி வேண்டிட
நினைத்த தெல்லா மருளுவாள்!
தஞ்ச மென்று சரண்புக
தயவாய் மடியில் தாங்குவாள்!!

கோல விழியாள் கண்படில்
கோணல் முற்றும் விலகிடும் !
நீல கண்ட னிடப்புறம்
நேய மாக உறைபவள்
வேல னுக்குச் சிக்கலில்
வேல்கொ டுத்த தாயவள்
சூல மேந்தி வந்துநம்
துன்பச் சுமைய கற்றுவாள்!!

கும்பம் வைத்து வழிபடக்
குறைகள் நிவர்த்திச் செய்குவாள்!
மும்ம லங்க ளகற்றியே
முந்தை வினைகள் போக்குவாள்!
சிம்ம வாக னத்திலே
சிரித்த வண்ணம் வந்திடும்
அம்ம னருளை நாடுவோம்
அவனி போற்ற வாழுவோம் !!!

சியாமளா ராஜசேகர்

Wednesday, July 24, 2019

வெல்வோமே ...!!!

ஈன்ற தாயின் கருணையினால் 
      இந்த மண்ணில் பிறப்பெடுத்தோம் !
நான்தான் என்ற ஆணவத்தில் 
       நாளு முழன்று திரிகின்றோம் !
ஆன்றோர் வகுத்த வழியினிலே 
       அகந்தை யின்றி நடைபோட்டு 
வான்போல் பரந்த உளத்தோடு
      வாழ்ந்தால் வாழ்வு வரமாகும் !!

செருக்கை விரட்டி அன்பாலே 
       தெளிந்த அறிவைப் பெறவேண்டும் ! 
பெருமை மிக்க பண்பாட்டைப்
       பேறென் றெண்ணிக் காக்கவேண்டும் !
வருத்தம் நீக்கும் வகையுணர்ந்து 
       வாட்டம் தணிவித் திடவேண்டும் !
இருக்கும் வரையில் இல்லாருக்(கு)
       இயன்ற உதவி செயவேண்டும் !

கூட்டிக் கழித்துக் கணக்கிட்டால் 
       கூற்றன் வந்து நமையழைக்கப்
பூட்டி வைத்த பொன்பொருளும் 
       புரிதல் மிக்க உறவுகளும் 
கூட்டை விடுத்துப் போகையிலே 
       கூடத் துணையாய் வருவதில்லை !
ஆட்டம் அடங்கி விடுமுன்னே 
       ஐந்த டக்கி  வெல்வோமே !!

சியாமளா ராஜசேகர் 
       

Tuesday, July 16, 2019

புங்கைமரக் கிளிகள் ...!!!

புங்கைமரக் கிளிகள் ...!!!
*********************************
சிற்றூரில் நான்வசிக்க 
     சீமையிலே நீயிருக்கச் 
சற்றும்நான் நினைக்கவில்லை 
     சந்திப்போம் இன்றென்றே!
உற்றதோழி உன்னுடனே 
     ஊருக்குள் திரிந்ததெல்லாம் 
சுற்றிவரும் நினைவுகளில் 
     சுகமாக இனிக்குதடி !!

அலையில்லாக் குளத்தினிலே 
     அயிரைமீன்கள் குவிந்திருக்க 
வலைபோலும் கைத்துண்டை 
     மறைத்துவைத்துப் பிடித்ததெல்லாம் 
சிலநேரம் மின்னல்போல் 
     சிந்தையிலே வந்துபோகும் 
தொலைதூரம் போனாலும் 
     சுத்தமாக மறந்திடுமோ ??

புங்கைமரத் தடியினிலே 
     பொரிவிளங்காய் கடித்தபடித் 
தங்கையரை அனுப்பிவிட்டுத் 
     தனிமையிலே கதைபேசிச் 
செங்காற்றின் தாலாட்டில் 
     சேர்ந்தயர்ந்து தூங்கிவிட 
அங்குவந்த தமிழய்யா 
     அடித்தவடி  மறக்கலையே !!

பொழுதெல்லாம் மகிழ்வோடு 
     புங்கைமரக் கிளிகளைப்போல் 
செழுமையான வயல்வெளியில் 
     சிட்டுகளாய் வளையவந்து 
மழையினிலே நனைந்தவண்ணம் 
     மனந்துள்ள நடனமாடி 
வழுக்கியங்கே விழுந்தபோதும் 
     வாய்வலிக்கச் சிரித்தோமே !!

இருட்டோடு கண்விழித்தே 
     இழைக்கோலம் போட்டுவிட்டு
திருப்பாவை மார்கழியில் 
     தினம்பாடிப் பொங்கலுண்டோம்!
கருப்பசாமி கோயிலுக்கும் 
     கால்கடுக்க நடந்துசென்றோம் 
சுருட்டுவாசம் அங்குவரச் 
     சுருண்டோடி வந்தோமே !!

பிடித்துவைத்த வெள்ளாட்டைப் 
     பின்பக்கக் கொல்லையிலே
மடிதடவிப் பால்கறக்க 
    மடியங்கே காணாமல் 
படிக்கணக்கில் வழிந்தசுகம் 
     பட்டணத்தில் கிடைத்திடுமா ?
அடைந்தவின்பம் அடுக்கடுக்காய் 
     அகத்துள்ளே மலருதடி...!!!

சியாமளா ராஜசேகர் 











பன்னிருசீர்ச் சந்த விருத்தம் ....!!!

பன்னிருசீர்ச் சந்த விருத்தம் ...!!!
********************************************
ஆலால கண்டனே நாதவடி வானவா
ஆதிமுத லானகுருவே !
அலையாடு நதியோடு பாதிமதி யுஞ்சூடி
அம்பலத் தாடுமழகே !
சூலாயு தத்தோடு மான்மழுவை யுங்கொண்டு
துன்பந்து டைக்குமிறையே !
சூழ்ந்திடும் வினைகளைத் தோற்றோட வைத்திடும்
தூயனே கருணைவடிவே !
மூலாதி மூலமாய்ச் சோதியுரு வானவா
முன்னின்று வழிநடத்திடு !
முப்புரமெ ரித்தவா என்பாட்டு நீகேட்டு
மும்மலம கற்றியருளே !
சேலாடு விழியாளை இடமாயி ணைத்தவா
சேயெனைக் காத்தாலென்ன ?
சீர்மிக்க வடியாரை யன்பினா லாண்டிடும்
தில்லையின் நடராசனே !!!
நானென்ற ஆணவம் சிந்தைதனி லேறாது
நாதனே எனைமாற்றுவாய் !
நம்பினே னுன்னையே வாழ்விலொளி ஏற்றவே
நல்லதோர் வழிகாட்டுவாய் !
வானவர் போற்றிடும் தேவாதி தேவனே
வடிவேல னின்தந்தையே!
வளமாக நலமாக குவலயந் தன்னிலே
வாழவைப் பாயீசனே !
ஏனினுந் தாமதம் கேட்கவே விழைகிறேன்
இனியனே விடைவாகனா !
எளியேனை யாட்கொள்ள அட்டியெது முள்ளதோ
இன்றதனை யுஞ்சொல்லுவாய் !
தேனினிய வாசகம் நித்தமும் பாடியுன்
திருவருளை நாடிநின்றேன் !
தில்லையுட் கூத்தனே பார்போற்று மீசனே
செவிகேட்டு விரைவாகவா !!!
சியாமளா ராஜசேகர்

மழை .... மழை .... மழை ...!!!

வெட்டியது மின்னல்! வெடிமுழக்க மிட்டதிடி!
கொட்டியது வானம்! குளிர்ந்தது - சட்டெனப்
பூமி! உயிர்நனைந்த பூரிப்பி லாடுமுளம்
சாமி விழிதிறந்த தால்.

மேக மிருண்டது மின்ன லொளிர்ந்தது
தோகை விரித்தது தோரணமாய்! - வேகமாய்
மண்ணில் பொழிந்த மழையால் அகங்குளிர்ந்து
கண்கள் பனித்தன காண்.


சியாமளா ராஜசேகர்

வெண்பாத்துணர் ...!!!




வெண்பாத்துணர்...!!!
******************************
( கண்....என்று தொடங்கி.....பார் .....என்று முடியும் பாக்கள் )
குறள் வெண்பா ...!!!
**************************
கண்ணன் மலரடி கண்டு நிதம்போற்றிப் 
பண்பாடப் பொங்குமின்பம் பார் .
நேரிசை சிந்தியல் வெண்பா ...!!!
*******************************************
கண்ணின் மணியாய்க் கருதி யன்புடன் 
வண்ண மலர்த்தூவி வாழ்த்திட - மண்ணுண்டோன்
பண்படச் செய்திடுவான் பார்.
நேரிசை வெண்பா ...!!!
*******************************
கண்ணன் குறும்புகள் கண்டால் உளமகிழும்
எண்ணத்தில் நிற்கு மினிமையாய் - வண்டாடுஞ்
சோலையில் கோபியரைச் சுண்டி யிழுத்திடும் 
பாலகன் பேரெழிலைப் பார்.
இன்னிசை வெண்பா ...!!!
*********************************
கண்ணுக்குக் கண்ணாகக் காத்திருந் தாலுமவன் 
வெண்ணெய் திருடும் விளையாட்டில் - விண்ணகமும் 
ஆங்கே களித்திருக்க ஆயன் அயர்வின்றிப்
பாங்குடன் ஆடுவான் பார்.
நேரிசை பஃறொடை வெண்பா ...!!!
*************************************************
கண்மணியே என்று கனிவொடு கொஞ்சிடினும் 
உண்ண அழைத்ததும் ஓடிவிடும் - விண்ணனைய 
நீலவண்ணன் சேட்டைகளால் நெஞ்சில் நிறைந்திருப்பான் 
ஆலிலையில் துயில்வான் அச்சமின்றிச் - சோலையில் 
ஆசையுடன் சுற்றிவரும் அன்பான கன்னியர்தம்
பாசத்தில் பூத்தணைப்பான் பார்.
சியாமளா ராஜசேகர்

Saturday, July 13, 2019

சிந்திப்பாய் மானிடா ...!!!

கானழித்து வானளாவக் கட்டடங்கள் கட்டினாய் 
    கழிவுகளால் நதிநீரை மிகவசுத்த மாக்கினாய்!
ஆனமட்டும் நெகிழியினால் மண்ணைமல டாக்கினாய் 
     ஆறுகளில் மணல்திருடி அதன்தடத்தை மாற்றினாய் !
வான்பொய்த்தால் குடிப்பதற்கும் நீரின்றிப் போகுமே 
     வளங்குன்றி வறட்சியினால் பல்லுயிர்கள் சாகுமே !
ஏனென்ற காரணத்தைச் சிந்திப்பாய் மானிடா 
     இயற்கையினைச் சிதைத்துவிட்டால் இந்நிலைமை தானடா ...!!!

சியாமளா ராஜசேகர் 

இடையிசை வண்ண அறுசீர்விருத்தம் ...!!!

இடையிசை வண்ண அறுசீர்விருத்தம்
***************************************************************
மெய்யா யில்லாள் மெல்லினமே
***வெல்வா ளெல்லாம் வல்லினமாய்
அய்யோ நெய்வாள் வல்லமையால்
***அவ்வா றுய்வாள் நல்லவளாய்
பொய்யே யில்லா வுள்ளமிலை
***பொய்யா ருள்ளே கள்ளமிலை
பெய்யா மல்வான் ஒள்ளிடுமோ
***பிள்ளாய்! நில்லே! சொல்லிடுவாய் !!

எழுசீர்ச் சந்த விருத்தம் ...!!!


 எழுசீர்ச் சந்தவிருத்தம்
******************************************
தான தான தான தான தான தான தானனா

எங்கி ருந்த போது முன்னை
இங்கி ருந்து பாடுவேன் !
செங்க ரும்பு வார்த்தை யோடு
சிந்து மன்பி லாடுவேன் !
கங்கை வெள்ள மாய்ப்பு ரண்டு
காத லோடு தேடுவேன் !
திங்க ளோடு வான்ம லர்ந்து
தென்ற லேறி யோடுவேன் !!









































Friday, July 12, 2019

வெண்பாக்கள் ...!!!

இன்னிசை மென்சந்த வெண்பா ...!!!
**************************************
சின்னவிடை யின்வளைவு தென்றலொடு நன்கசைய
மின்னலவள் புன்னகையில் மின்னதிரு  மென்னிதய(ம்)
அந்தநொடி முந்திவிழும் அந்தமிழில் விந்தையொடு
சிந்தையினில் வந்ததொரு சிந்து. 

இன்னிசை வன்சந்த வெண்பா ...!!!
**************************************
முட்டிவளி நெட்டிவிட மொட்டவிழும் பட்டுமலர் 
விட்டுமண(ம்) எட்டிடவும் மெட்டியிசை அட்டிவரும்
முத்துமழை முத்தமிட முத்தொளிரு மத்தருணம் 
உத்தமியொ(டு) அத்தைமகன் ஒத்து. 


இன்னிசை இடைச்சந்த வெண்பா ...!!
***************************************
வெள்ளைமன வள்ளலென மெள்ளவரு கிள்ளையென
உள்ளமதை யள்ளிவிடும் ஒள்ளியெழில் வள்ளியென  
மல்லியொடு முல்லைமணம் வல்லிவரு(ம்) அல்லிருளில்
நல்லழகு நல்லவனை வெல்லு. 

சியாமளா ராஜசேகர் 





சந்தக் கலிவிருத்தம் ...!!!



தனதானன தனதானன தனதானன தனனா .... என்ற சந்தக்குழிப்பில் அமைந்த சந்தக்கலி விருத்தம் ...!!! .
அழகாயொரு கவிபாடிட அலைபாயுது நெஞ்சம்
எழிலோவிய மவளூடிடு மிடமானது மஞ்சம்
இழையோடிடு நனிகாதலி லினிமேலிலை துன்பம்
மழையாயவ ளெனுளேவிழ வரமாகிடு மின்பம் !!
சியாமளா ராஜசேகர்

Thursday, July 11, 2019

வண்ணப் பாடல் ...!!!

வண்ணப் பாடல் ...!!!
******************************
தந்தன தானா தந்தன தானா
தந்தன தானா தனதானா
பந்தள நாதா சுந்தர ரூபா
பம்பையின் வாசா அழகேசா !
பங்கய பாதா சம்புகு மாரா
பைங்கனி வாயால் மொழிபேசு !
மந்திர மோகா மங்கள வீரா
வன்புலி மேலே வருவோனே !
மஞ்சுள தேகா மன்றினில் நீயே
வந்தருள் வாயே குருநாதா !
தந்தன தானா தந்தன தானா
தந்தன தானா எனவாடும் !
சங்கரன் பாலா சந்தன மார்பா
சந்ததம் பூவாய் மலர்வோனே !
அந்தமி ழாலே இன்றுனை நானே
அன்புட னேபா டிடுவேனே !
அண்டிடும் பாரோர் வெந்துயர் தீரா
யந்தமி லானே சபரீசா !!

அறுசீர் வண்ண விருத்தம் ...!!!


தனத்தத் தத்த தனதனா ( அரையடிக்கு )
படித்துப் பெற்ற அறிவிலே 
படைப்பைப் பற்றி யுணரலாம் !
இடித்துச் சுட்ட முழுமையாய்
எழுத்திற் செப்ப மடையலாம் !
வடித்துக் கொட்டி விடுவதால்
மனத்தைச் சுற்று மிடரெலாம்
வெடித்துப் பற்றி எரியுமே
வெளிச்சக் கற்றை யொளிருமே !!

கலித்தாழிசை ...!!!


வான்மழை பொய்க்க விளைநிலங் காய்ந்து,குடி
தண்ணீரு மின்றித் தவிக்கின்றார் அன்பர்காள் !
தண்ணீரு மின்றித் தவித்திருப்ப ராமாகில் 
கண்ணீர் துடைக்கவழி கண்டிங்கு சொல்வீரே !
கண்ணாய்க் கருதியே காடுகளைக் காப்பீரே !!
சியாமளா ராஜசேகர்

கண்ணீரில் ஒரு கவிதை ...!!! ( மூன்றாம் ஆண்டு நினைவு நாளில் ..( 07:07:2019 )




என்றுனைக் காணும் நாள்வரு மென்றே
எண்ணியென் காலமும் கழியும்!
பொன்மக னுன்றன் பூமுகம் காணாப்
பொழுதுகள் மனத்தினை யழுத்தும்!
தன்னல மின்றி வாழ்ந்தவ னுன்னைத்
தாயுளம் நித்தமும் நினைக்கும்!
புன்னகை முகத்தைப் படத்தினிற் பார்க்கப்
பொங்கியே அழுகையும் வெடிக்கும்!!
ஆழ்மனக் கிடங்கி லாயிர முண்டே
ஆறுத லிங்கெனக் கில்லை!
சூழ்ந்திடுந் துயரை விரட்டிடும் வழியைச்
சொலித்தர நீயரு கில்லை!
பாழ்விதி யுன்னை யெம்மிட மிருந்து
பாதியில் பிரித்ததி லதிர்ந்தேன்!
வாழ்வினி லெனக்குப் பற்றெது மில்லை
வருத்தத்தி லுள்ளமு டைந்தேன்!
கலங்கரை விளக்கா யிருந்தவ னென்னைக்
கலங்கிட வைத்துவிட் டாயே!
தலைமக னேயுன் நினைவுக ளாலே
தனிமையி லிதயமொ டிந்தேன்!
பொலபொல வென்றே விழிகளில் வடியப்
புயலது வீசிடத் துடித்தேன்!
நலந்தர வுனையே நம்பினேன் முழுதாய்

நல்வழி காட்டிடு வாயே!!!

வண்ணப் பாடல் ...!!!



சந்தக்குழிப்பு
*********************

தனத்த தந்தன தானன தானன
தனத்த தந்தன தானன தானன
தனத்த தந்தன தானன தானன ..... தனதானா
விரித்த செஞ்சடை யோசிவ னாரது
சிரத்தி லம்புலி யோநதி யோவென
வியப்பி லன்பொடு தாளினை யேநிதம் பணிவேனே !
மிடுக்கு டன்புலி யாடையொ டாடிடு
நிருத்த னின்புகழ் பாடிட வேமிக
விருப்பு டன்பனி நாதனை நாடிட மனமோடும் !
நெருப்பு டன்கனி வாய்நில மானவன்
துடிப்பு டன்தினம் நீர்வளி வானென
நிலைத்து நின்றிடு மீசனின் பேரரு ளினைநாடி !
நிழற்கொ துங்கிய வாறடி நீழலி
லணைத்து நெஞ்சொடு சேயெனை யாதரி
நினைத்த தும்பரி வாய்வர வேயுன தருளாலே !
சிரித்த செங்கனி மாதுளம் பூவென
இனித்த பைங்கிளி யாள்மொழி யாழது
செழித்த மங்கள மேனிய ளோடிணை நடராசா !
சிறப்பொ டைந்தொழி லாலுல காளுவ
குணித்த நந்தியின் மேலழ காய்வரு
திருப்பு றம்பிய நாதரு ரைசெயு பெரும்பேறே !
வருத்த மென்றுனை நாடிடு வோரது
பனித்த கண்களு மேகுள மாகிட
வழக்கை வென்றுயர் ஞானமும் வீடளி இறையோனே !
மருட்டி டுந்திரு மேனியில் நாகமும்
பொடித்த வெண்டிரு நீறது பூசியும்
மனத்தி லம்பல வாணனை யேதொழ வருவோனே !!
சியாமளா ராஜசேகர்

ஒற்றிலா அறுசீர் வண்ண விருத்தம் ...!!!



ஒற்றிலா அறுசீர் வண்ணவிருத்தம்
*************************************************************
தனன தான தனன தான
தனன தனதனா
அலைக ளோடு கமல மாட
அழகு மிளிருதே!
நிலவு வானி லுலவு வேளை
நினைவு குளிருதே !
மலையை மோதி முகிலு மோட
மனமு மகிழுதே !
தலைவ னோடு தலைவி யோடு
தனிமை விலகுதே !!
சியாமளா ராஜசேகர்

அறுசீர் வண்ண விருத்தம் ....!!!

அறுசீர் வண்ண விருத்தம்
*********************************************
தந்தன தந்தத் தனதானா ( அரையடிக்கு )
புந்திம யங்கித் திரியாதே
பொன்பொரு ளென்றைக் குடன்வாரா
அந்தக னும்பற் றிடுவானே
அஞ்சிடு னுங்கட் டவிழானே
சிந்தைந டுங்கித் தவியாதே
சென்றுக லங்கிப் பிழியாதே
கந்தனை நெஞ்சிற் பதிவாயே
கண்களி லன்பைப் பொழிவாயே !!

சியாமளா ராஜசேகர்

சந்தக் கலிவிருத்தம்

சந்தக்கலி விருத்தம்
******************************
தானதன தானதன தானதன தானா
ஏரிகுள மாறுகளி லீரமிலை யிங்கே
காருமிலை கானமயி லாடவிலை யிங்கே
பாரிலுயி(ர்) வாழவொரு பாதையிலை யிங்கே
மாரிமன மாறிவள மாகவரு வாயே !!

இடையிசை வண்ண எழுசீர் விருத்தம் ...!!!

இடையிசை வண்ண எழுசீர் விருத்தம்
****************************************************
தய்ய தான தய்ய தான தய்ய தான தானனா
முல்லை போலு(ம்) வெள்ளை வானில்
முள்ளு மேது மில்லையே !
அல்லி லாடு மல்லி யாக
அள்ளி யோடு முள்ளமே !
புல்லின் மீது செவ்வி யாடும்
புள்ளி போலும் பிள்ளையே !
வெல்லு மாறு கல்வி நாட
மெய்யி லில்லை கள்ளமே !!
சியாமளா ராஜசேகர்

வண்ணப் பாடல் .... !!!

வண்ணப் பாடல் !
*************************************
தனதன தானா தனதன தானா
தனதன தானா .... தனதானா
அலைகளும் வாடா மலர்களு மோயா
தறுபடை யானோ டுறவாட !
அறுமுக வேலா உமைசிவ பாலா
அணிதிகழ் மார்பா குமரேசா !
வலவிட மாய்நீ துணைவிய ரோடே
மயிலினி லேவா தணிகேசா !
வடிவுடை வேலா கொடியுடை வீரா
மலைமிசை வாழ்வே யெனையாள்வாய் !
சிலையழ கேசா தமிழமு தாலே
தினமுனை யோதா விடுவேனோ ?
திருவடி காணா விழிகளும் வீணே
சிறுநகை யோடே வருவாயே !
குலபதி நீயே குணமணி நீயே
குருபர னேசீ ரலைவாயா !
கொடுமுடி யானே திருமுரு கேசா
குறமகள் நாதா பெருமாளே .
சியாமளா ராஜசேகர்

செந்தூரின் கடலலைகள் ...!!!


எண்சீர்ச் சந்தவிருத்தம் ...!!!

செந்தூரின் கடலலைகள் கவினழகாய்ப் பாடும் 
     தென்றலுடன் விளையாடிக் கரைமுட்டிப் போகும் !
மந்திரத்தை ஓயாமல் ஒலித்தபடி ஆடும் 
     வண்ணமயில் தானாடக் கண்டவுடன் பூக்கும் !
கந்தனவன் எழிலுருவைக் காணவரம் கேட்கும் 
     கரையோரம் அன்புடனே நுரைமலரைத் தூவும் !
வந்தோரை வரவேற்கப் பொங்கியெழும் நித்தம் 
     மகிழ்ச்சியொடு கால்வருடித் தணிவிக்கும் பித்தம் !!

சியாமளா ராஜசேகர் 

Thursday, July 4, 2019

பேசலாம் ....!!!


நீயும் நானும் பேசலாம் 
   நீண்ட நேரம் பேசலாம் !
காயுங் கனியப் பேசலாம் 
   காத லோடு பேசலாம் !
சாயுங் கால வேளையில் 
   தனித்துச் சிரித்துப் பேசலாம் !
பாயும் வெள்ள நீரெனப் 
   பாடிக் கொண்டே பேசலாம் !!

அன்னைத் தமிழில் இனிமையாய் 
   அடுக்கு மொழியில் பேசலாம் !
தென்னந் தோப்பி லுலவிடும் 
   தென்ற லோடு பேசலாம் !
சென்ற வற்றை எண்ணியே 
   சிந்தை குளிர்ந்து பேசலாம் !
அன்றில் பறவை போலவே 
   அன்பி லிணைந்து பேசலாம் !!

காப்பி யங்கள் பேசலாம் 
   கவிதை சொல்லிக் கலக்கலாம் !
மூப்பில் லாத குமரனை 
   முதலில் வணங்கிப் பேசலாம் !
வேப்ப மரத்து நீழலில் 
   விரும்பிக் கதைகள் பேசலாம் !
பூப்ப றிக்கும் போதிலும் 
   பொதுந லத்தைப் பேசலாம் !!

நாட்டு நடப்பைப் பேசலாம் 
   நடுவில் கொஞ்சம் கொரிக்கலாம் !
பாட்டி லுருகி மௌனமாய்ப்
   பார்வை யாலே பேசலாம் !
மீட்டு கின்ற வீணையாய் 
   விரல்க ளாலே பேசலாம் !
வாட்டுங் கவலை நீங்கிட 
   மனந்தி றந்து பேசலாம் !!

கொட்டும் மழையில் நனைந்துநாம் 
    கொஞ்சிக் கொஞ்சிப் பேசலாம் !
எட்டிப் பிடித்து நிலவினில் 
   இளமை துள்ளப் பேசலாம் !
சிட்டாய்ச் சிறகு விரிந்திடத் 
   திரிந்து பறந்து   பேசலாம் !
வெட்டிக் கதையாய் யிருப்பினும் 
    விடிய விடியப் பேசலாம் !!

உள்ளத் தேரி லேறியே
   உலகஞ் சுற்றிப் பேசலாம் !
கள்ள மில்லாக் கருத்தினைக் 
   கலந்து பேசிப் பகிரலாம் !
முள்ளாய்த் தைக்கும் சொற்களை
   முடிந்த வரைத்த விர்க்கலாம் !
அள்ளிப் பருகி இயற்கையின் 
   அழகில் மயங்கிப் பேசலாம் !!

அஞ்சி டாமல்   உண்மையை 
   அமைதி யாகப் பேசலாம் !
சஞ்ச லங்க ளின்றியே 
   சாந்த மாகப் பேசலாம் !
நெஞ்சம் மலர்ந்த அன்புடன்
   நேர்மை யாகப்  பேசலாம் !
பிஞ்சு மழலை போலவே 
   பேசா திருந்தும் பழகலாம் !!

சியாமளா  ராஜசேகர் 


( தலைப்புக்கு எழுதியது )










தாய்மனம்...!!!


தாய்மனம் ...!!!
*********************
கண்ணேநீ மண்ணில் வந்த நேரம் ! - என்றன்//
நெஞ்சில் இல்லை பாரம் ! //
கண்ணேநீ மண்ணில் வந்த நேரம் ! - என்றன்//
நெஞ்சில் இல்லை பாரம் ! // -நான்
விண்ணில் மிதந்தேன் வண்ணம் கொண்டேன் -வான- வில்லாய் //- நான்
விண்ணில் மிதந்தேன் வண்ணம் கொண்டேன் -வான
வில்லாய்ப் பூத்தேன் பூத்தேன் //- என்றன்
கண்ணேநீ மண்ணில் வந்த நேரம் ! - என்றன்//
நெஞ்சில் இல்லை பாரம் ! //
பின்னாலே பழித்தவர் எல்லாம் //
பெண்ணுன்னை வாழ்த்திட வந்தார் //
பின்னாலே பழித்தவர் எல்லாம் //
பெண்ணுன்னை வாழ்த்திட வந்தார் // - அன்று
சொன்னதெல்லாம் இதயத்தில் மோதிடுதே -என் //
மண்டைக்குள் ஆயிரம் ஓடிடுதே // - நான்
விண்ணில் மிதந்தேன் வண்ணம் கொண்டேன் -வான- வில்லாய் //- நான்
விண்ணில் மிதந்தேன் வண்ணம் கொண்டேன் -வான
வில்லாய்ப் பூத்தேன் பூத்தேன் //- என்றன்
கண்ணேநீ மண்ணில் வந்த நேரம் ! - என்றன்//
நெஞ்சில் இல்லை பாரம் ! //
வான்மழையாய் வளம்தர வந்தாய் //
வாழ்வினிலே புதுசுகம் தந்தாய் //
வான்மழையாய் வளம்தர வந்தாய் //
வாழ்வினிலே புதுசுகம் தந்தாய் //- என்றும்
தேன்தமிழை அன்புடன் ஊட்டிடுவேன் // - என்
தேவதையை ஆளாக்கிக் காட்டிடுவேன் // - நான்
விண்ணில் மிதந்தேன் வண்ணம் கொண்டேன் -வான- வில்லாய் //- நான்
விண்ணில் மிதந்தேன் வண்ணம் கொண்டேன் -வான
வில்லாய்ப் பூத்தேன் பூத்தேன் //- என்றன்
கண்ணேநீ மண்ணில் வந்த நேரம் ! - என்றன்//
நெஞ்சில் இல்லை பாரம் ! //
( நிலாமுற்றத்தின் ஆண்டுவிழா பாடல் போட்டி - 2019-ல் தேர்வு பெற்ற பாடல் )
சியாமளா ராஜசேகர்