Wednesday, October 30, 2019

வண்ணப் பாடல் ...!!!

வண்ணப் பாடல்
* * * * * * * * * ** * * *
சந்தக்குழிப்பு
* ** * *** *** * *
தந்ததன தானனன தந்ததன தானனன
தந்ததன தானனன தனனானா
மஞ்சுதவழ் வானமதி லம்புலியும் பேரழகு
வண்டலுட னாறுகளு மழகேதான் !
வண்டமரும் பூவிதழில் வெண்பனியி னீரமதில்
வந்தொளிரு மேகதிரு மெழிலோடே !
செஞ்சிறிய கால்களொடு தண்டலையில் நீலமயில்
திந்திமிதி தீதியென வடிவோடே !
தென்றலுட னாடிவர மங்கையுளம் போலவது
சிந்தைமகிழ் வோடுநட மிடுதேகாண் !
கொஞ்சிவரு பூமணமும் வஞ்சிமகள் மேனியொடு
கொஞ்சமுற வாடவென வரலாமோ ?
கொண்டலொடு தேவதையின் நெஞ்சுதவழ் சேலையொடு
குந்தளமு மாடுகையில் மனமாடும் !
விஞ்சுமெழி லோடுநதி நங்கையென வோடுமுனை
விண்பறவை யேறிவர விடுவேனே ?
விந்தைதனை யேபுரியு மன்புமிக வேபெருக
மென்சிதர மாயெனையு மணைவாயே !!
சியாமளா ராஜசேகர்

Tuesday, October 22, 2019

அரவணைக்கத் தயங்காதீர் ....!!!

பத்துத் திங்கள் கருவறையில்
பாசத் தோடு சுமந்திருந்தாள்!
தத்தித் தவழ்ந்து நடைபழகத்
தன்னை மறந்து மகிழ்ந்திருந்தாள்!
முத்த மழையால் குளிர்வித்தாள்
மூச்சாய்க் கருதி அரவணைத்தாள்!
பொத்திப் பொத்தித் தான்வளர்த்தாள்
புதிராய் ஒன்றும் தோன்றவில்லை!!

நாளும் பொழுதும் பறந்தோட
நானும் வளர்ந்தேன் பொலிவோடு!
ஆளைப் பார்த்தால் ஆணுருவம்
ஆனால் பெண்மை உள்சுரக்கும்!
நீளும் இரவு கண்ணீரில்
நெஞ்சங் கசியும் செந்நீரில்!
மீள வழியே தெரியாமல்
மிரண்டேன் துவண்டேன் பெண்ணுளத்தில் !
புரிந்து கொள்ள யாருமில்லை
பொய்யாய் வேடம் பிடிக்கவில்லை!
திரித்துக் கதைகள் வெளிக்கிளம்பத்
திகைத்த தாயும் வெறுப்புமிழ்ந்தாள்!
விரிந்த உலகில் ஆறுதலாய்
விழிநீர் துடைக்க விரலின்றிப்
பிரியத் துணிந்தேன் உறவுகளைப்
பிரியா விடையும் பெற்றுவிட்டேன்!!
பட்ட துன்பம் கொஞ்சமில்லை
பரிக சிப்பும் நிற்கவில்லை!
தொட்டுப் பின்னால் தொடர்ந்துவந்து
தொல்லை கொடுத்த பாதகரை
வெட்டிச் சாய்க்க மனந்துடித்தும்
வெறுப்பை வெளியில் காட்டவில்லை!
சுட்ட கல்லே உறுதிபெறும்
சுயத்தை யுணர்ந்தே அமைதிகொண்டேன்!
சொல்லில் வடிக்க வியலாத
சோகத் தில்நான் கரைந்துவிட்டேன்!
கல்லுக் குள்ளுந் தேரைக்குக்
கருணை யோடு வழிவைத்த
நல்ல வன்தான் இறைவனவன்
நைந்த வுள்ளம் தேற்றிவிட்டான்!
இல்லை யென்றால் மண்ணுலகில்
இல்லா மல்தான் போயிருப்பேன்!!
பழித்துப் பேசும் உலகோர்முன்
படித்துப் பணியில் அமர்ந்தபடி
உழைத்தேன் கவனம் சிதறாமல்
உயர்வை எட்டிப் பிடித்துவிட்டேன்!
பிழையாய்க் கருதிப் புறக்கணித்தோர்
பெருமை யுடனே அண்டிவர
மழைபோல் ஈர மனத்துடனே
மகிழ்வாய் உதவி செய்கின்றேன்!!
தானே விரும்பி ஏற்றதுவா
தலைவன் படைத்த படைப்பன்றோ?
ஊனோ டெலும்பி னாலான
உடலைத் தானே கொண்டுள்ளோம்?
ஏனோ இழிவாய் எண்ணுகிறார்
எள்ளி மகிழ்வு கொள்கின்றார்!
ஆனால் இனியும் வதைக்காதீர்
அரவ ணைக்கத் தயங்காதீர்!
சியாமளா ராஜசேகர்

அப்பாவென நீயழைக்கையில்....!!!

அப்பாவென நீயழைக்கையில் அகமுழுவதும் சிலிர்க்கும்
எப்போதுமுன் எழிற்பூமுகம் இதயந்தனி லினிக்கும்
முப்போதிலு மென்நெஞ்சமுன் முத்தங்களை நினைக்கும்
ஒப்பாருனக் கிலையெனும்படி உயர்வெய்திட மலைக்கும் !!

துவளுங்கண முன்பார்வையில் துடித்தெழுந்திட வேண்டும்
உவகையில்மனம் துளிர்த்தாடிட உயிர்பூத்திட வேண்டும்
தவப்பயனென ஊர்மெச்சிடும் தகைமையைப்பெற வேண்டும்
அவையத்துனை முன்நிறுத்தியென் அகங்குளிர்ந்திட வேண்டும் !!
அறிவைத்தரும் சிறப்பைத்தரும் அமுதத்தமிழ் பயில்வாய்
அறப்பணிகளில் மனம்லயித்திடில் அன்பேசிவம் உணர்வாய்
சிறகுகள்விரி! தடைகளைமுறி! சிகரத்தினைத் தொடுவாய்
திறன்வளர்த்திடு கடுமுழைப்பொடு செயல்முடிவுற மகிழ்வாய் !!!
சியாமளா ராஜசேகர்

Thursday, October 17, 2019

வருவாயா ...??

அள்ளவள்ளக் குறையாத அமுதமென நகையுணர்வால்
உள்ளவரை மகிழ்வித்தாய் ! உள்ளத்தில் நிறைந்துவிட்டாய் !
கள்ளமிலா வுனைநினைத்தால் கண்ணீரும் பெருகுதய்யா !
பிள்ளைமொழி போலும்யாம் பிதற்றலன்றி என்செய்வோம் !!

கண்ணைவிட்டுப் போனாலும் கருத்தைவிட்டுப் போகவில்லை 
வெண்பாட்டு நிற்கவில்லை வெற்றிடமாய் விடவில்லை !
நண்பன்தான் தொடர்கின்றான் நாள்தோறும் உன்நினைவில் 
வண்ணத்தில் பாட்டெழுத வருவாயா கிரேசியண்ணா...!!!

சியாமளா ராஜசேகர் 

கண்ணதாசா ...!!!

கற்றோரும் மற்றோரும் எளிதாக விளங்குவண்ணம்
கவியரசா நீவடித்தாய் பாட்டு !
காற்றோடு கலந்தினிக்கும் காலமெல்லாம் புகழ்கூட்டும்
கண்ணதாசா உனக்கில்லை மாற்று !!
சொற்சுவையும் பொருட்சுவையும் நயங்கொஞ்சும் எழில்நடையும்
துள்ளிவரு மின்சந்தத் தோடு
சுகமாக நெஞ்சள்ள சோகத்தை யும்மறந்து
சொக்கித்தான் போகிறோமே கேட்டு !!
வற்றாத ஊற்றாக வளமான தத்துவங்கள்
வாழ்விற்கு நல்லவழி காட்டும் !
மனநோய்க்கு மருந்தாக உறவாட விருந்தாக
மயிலிறகாய் வருடித்தா லாட்டும் !!
முற்றாத இளமையொடு குன்றாத பொலிவோடு
முத்தாக ஒளிவீசி மின்னும் !
முப்போதும் தப்பாமல் திக்கெட்டும் ஒலித்திருக்கும்
முத்தையா நின்பாக்கள் என்றும் !!
தெவிட்டாத பாசமைத்தாய் தினந்தோறும் பருகுகிறோம்
தீரவில்லை இன்னுமெங்கள் தாகம் !
தேமதுர மொழியினிலே தேவசுக மீட்டலிலே
தென்றலுக்கும் பிறவாதோ மோகம் ??
கவிமகனே! உன்படைப்பை மிஞ்சுதற்கு நீயிந்தக்
காசினியில் பிறப்பெடுப்பாய் மீண்டும் !
கவல்போக்கும் களிம்பாகிக் காயத்தை ஆற்றிவிட
கடவுளுனை இங்கனுப்ப வேண்டும் !!
செவிகுளிர இனுஞ்சொல்லி நம்பிக்கை ஒளியூட்டச்
சித்தனுன்றன் தத்துவமும் வேண்டும் !
திருநீற்றுக் கீற்றோடு நெற்றியிலே பொட்டிட்டுச்
சிறுகூடற் பட்டியானே வாராய் !!
புவியினிலே உன்புகழைப் பாடுவதே தன்பணியாய்ப்
போற்றிவாழும் அன்பருளர் பாராய் !
பொலிவான சிலைவைத்துப் பெரும்பேறாய் அதைநினைத்துப்
பூசிப்போர் பூரிக்க வாராய் !!!

சியாமளா ராஜசேகர்
பாரதி தேவி 
****************
பொறுப்புடன் கடமை தவறாமல் 
****புகழுக்கு மயக்கம் கொள்ளாமல் 
திறமையும் துடிப்பும் மிகக்கொண்டு 
****செம்மையாய்ச் சேவை உளத்தோடு 
சிறப்புடன் மக்கள் பணியாற்றும் 
****திருமதி பாரத தேவியுனை 
இருகரம் கூப்பி வரவேற்பேன் 
****இக்கணம் வருக வருகவென்றே...!!!

பட்டாசு பஜாருக்கு பாரத தேவியே வருக !!!

அமுதவல்லி 
******************
குழந்தை பெண்கள் முதியோரின்
****குறைகள்  தீர்க்கும் நன்மணியே! 
தழைக்கச் செய்தாய் நலத்திட்டம் 
****சமூக நலத்துறை ஆணையராய் 
பழகிட இனிய பெண்மணியே 
****பட்டாசு பஜாரைத் திறந்துவைக்க 
அழைத்தோம் உனையே விருந்தினராய் 
****அமுத வல்லி வாருங்கள் !

சுற்றுலாத்துறை இயக்குனரே வருக வருக 

வெள்ளையன் 
***************

வெள்ளை மீசை முறுக்கோடு
***வெற்றிப் புன்னகை எழிலோடு 
கள்ள மில்லா  உளத்தோடு
***கருணை பொங்கும் விழியோடு 
துள்ளல் நடையில் மிடுக்கோடு 
***துடிப்பாய்ப் பேசும் சிறப்போடு
வள்ளல் உன்னை அழைக்கின்றேன் 
***வணிகர் சங்கத் தலைமையே .....

வருக வருக 


Friday, October 11, 2019

முறையோ சொல்வாய்

கதியென்று கட்டத்தை முழுதாய் நம்பிக்
காலத்தைக் கடத்துவது முறையோ சொல்வாய் !
விதியென்று மனம்நொந்து முடங்க லாமோ
வீறுகொண்டு செயலாற்றப் பழகிக் கொள்வாய் !
எதிர்நீச்சல் போட்டால்தான் வெற்றி கிட்டும்
எதற்குமச்சங் கொள்ளாமற் துணிந்து நிற்பாய் !
மதிசொல்லும் வழியினிலே நடை பயின்றால்
மதிப்போடு வாழ்ந்திடலாம் புவியில் நன்றே !!!
சியாமளா ராஜசேகர்

பாரதி ...!!!

முகத்தில் ஞான வெளிச்ச மேவு
முறுக்கு மீசை பாரதி !
மொழிக்குள் நாத மொலிக்கு மாறு
முழக்கி வீசும் பாநதி !
அகத்து ளாயு மழுக்கை வேரொ(டு)
அகற்று மாவ லோடவன்
அழித்த வாசை அடக்கி யாள
அதிர்த்த லோடு பாடினன் !
சுகத்தை நாடி அவத்தை யோடு
சுறட்டு வோரை ஏசினன் !
சுவைக்கு மாறு கவிக்கு ளோடு
சுழற்றி வாளை வீசினன் !
நெகிழ்ச்சி யாக வடித்த பாவின்
நிறத்தில் வேறு பாடிலை !
நிலத்தில் நேய மிகுத்த மேதை
நினைப்பில் நாளும் வாழியே !!
சியாமளா ராஜசேகர்

முடியரசர் புகழ் வாழி ...!!!

கொள்கைநெறி பிறழாத தன்மானத் தங்கம்
கொடுமைகளைக் கொதித்தெதிர்க்கும் பகுத்தறிவுச் சிங்கம் !
எள்ளளவும் புகழுக்கு மயங்காத கோமான்
ஏழ்மைநிலை யுற்றபோதும் மண்டியிடாச் சீமான் !
வெள்ளமெனப் பெருக்கெடுக்கும் பைந்தமிழின் சுவைஞன்
வீறுகவி யரசரென்ற பெரும்புரட்சிக் கவிஞன் !
கள்ளனைய சுவைகூட்டும் மரபுகவிச் சுரங்கம்
கற்கண்டு கவிக்கேட்டால் மயங்கிநிற்கும் அரங்கம் !!
சொல்லொன்று செயல்வேறாய் மாற்றமேது மின்றிச்
சொன்னவண்ணம் இறுதிவரைச் செயல்பட்ட தீரன் !
பொல்லாங்கு கண்டுவிட்டால் எரிமலையாய் வெடித்துப்
பொசுக்கிவிடத் தான்துணிந்த பெரியாரின் நேயன் !
பல்கலையின் வித்தகனாய் இனமானம் காத்த
பாவேந்தர் பரம்பரையின் பாசமிகு சீடன் !
வில்லாகப் புறப்பட்டுக் கனல்கவிகள் பாய்ச்சி
வீரமுழக் கஞ்செய்த காரைநகர் வாசன் !!
கத்தியின்றிப் போராடக் கையிற்கோ லேந்திக்
கவிதைகளால் சமத்துவத்தைப் போதித்த ஞானி !
எத்திக்கும் தமிழ்முழங்கப் பெரும்பாடு பட்ட
ஈடிலாப் பாக்கடலின் ஒப்பற்ற தோணி !
தத்தளித்த குமுகாய அவலத்தைத் திருத்திச்
சாதிமத வேறுபாட்டை நிமிர்த்திவிட்ட ஏணி !
முத்தமிழே மூச்சாகப் பேச்சாக வாழ்ந்த
முடியரசன் புகழென்றும் செந்தமிழ்போல் வாழி !!
சியாமளா ராஜசேகர்

நாடிவந்தளிப்பான் நலம் ...!!!

வெண்சங்கு மேனியனை வெற்றிதரும் நாயகனைக்
கண்ணாரக் கண்டு களித்தேன்யான்! - தண்டமிழில்
பாடி யுருகிப் பதம்பணிந்தேன் வேழமுகன்
நாடிவந்த ளிப்பான் நலம்.

சியாமளா ராஜசேகர்

கருணை காட்டு ...!!!



அணைத்துவிட் டாயோ அமேசான் வனத்தீ
சுணங்காம லோடியிசைத் தூறி ! - இணையில்லா
மாதவனே ! மெய்சிலிர்க்க வைக்கும் சிவந்தவுன்
பாதத்தை நக்கும் பசு.
குழலூதி யெம்முள்ளம் கொள்ளைகொண்டு விட்டாய்
மழைபோலன் பைப்பொழிய வாராய் - அழகாய்
இடைவளைத் தாடும் இடையர் குலத்தோய் !
கடைக்கண்ணா லுன்கருணை காட்டு.
ஓவியம் - கேசவ்ஜி

ஆசானுக்கு வாழ்த்து ...!!!

நெஞ்சினிக்கும் செம்மொழியாம் பைந்தமிழோ டுறவாடும்
நேயக் காரன் !
கொஞ்சுதமிழ்ப் பாக்களினால் கோடியின்பச் சுவைதன்னைக்
கூட்டும் மாயன் !
அஞ்சாமல் அடங்காமல் ஆர்ப்பரிக்கும் அலைகளைப்போல்
ஆற்றல் மிக்கோன் !
நஞ்சென்று பிறவொதுக்கித் தனித்தமிழைச் சீராட்ட
நாட்டம் கொண்டோன் !!
கொண்டலெனப் பொழிந்தாலும் தணியாத தமிழ்ப்பற்று
கொண்ட கோமான் !
கண்ணிமையாய்ச் செந்தமிழின் சீரான மரபுகாக்கும்
காவல் காரன் !
வண்டமிழாள் மலரடியை இதயத்தில் தான்பதித்த
வரத ராசன் !
எண்ணற்ற பாவலரைச் சோலையிலே வளர்த்துவிடும்
எங்கள் ஆசான் !!
ஆசானென் றாலிவர்போல் மிகவாழ்ந்த தெளிவான
அறிவு வேண்டும் !
காசாக்க முயலாமல் கற்றவற்றைப் பிறர்க்களிக்கும்
கருணை வேண்டும் !
கூசாமல் விருதுக்கு விலைபோவோர் மத்தியிலே
குன்றாய் நின்று
பேசாமல் அமைதியாகப் பலபுதுமை செய்துயரப்
பெருமை பெற்றோன் !!
பெற்றமக வைப்போல்தான் நிறுவியபாச் சோலையினைப்
பேணிக் காக்கும்
நற்றமிழ்த்தாய் தவப்புதல்வ னாம்வரத ராசனையிந்
நாடே போற்றும் !
கற்பித்த லைவிரும்பிக் கைம்மாறு கருதாமல்
கடமை யாற்றும்
வற்றாத தமிழ்நதியை மனதார வாழ்த்துமிந்த
வையம் என்றும் !!
என்றுமுள தென்றமிழின் தேமதுர மரபுதனை
எல்லோ ருக்கும்
கன்னலெனச் சாறெடுத்தே எளிதாகப் புகட்டிவிடும்
கனிந்த உள்ளம்
குன்றனைய உயர்வான புகழீட்டி எந்நாளும்
குறையில் லாத
நன்மணியாய் ஒளிவீசும் பாவலரை வணங்கியன்பாய்
நன்றி சொல்வோம் !!
சொல்வோம்பைந் தமிழ்ச்சோலைக் குயில்களெல்லாம் வாழ்த்துகளைத்
தூய அன்பால்
கல்லையும்பொற் சிலையாகச் செதுக்கியநம் சிற்பிக்குக்
கவிதை யாலே !
நெல்லுக்குள் மணியாக மறைந்திருக்கு மிவர்பெருமை
நீடு வாழ
வல்லவளாம் தமிழன்னைப் பொற்பாதம் வணங்கியொன்றாய்
மகிழ்வோம் யாமே !!
( எங்கள் ஆசான், பைந்தமிழ்ப்பேராசான், மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் அவர்களுக்கு சோலையின் நான்காம் ஆண்டு நிறைவுவிழாவில் , 20 கவிஞர்கள் யாத்த 'பைந்தமிழ்ச் சோலை பன்மணிமாலை என்ற ' நூலைக் காணிக்கையாக்கினோம்.. அதில் நான் எழுதிய பாக்கள் )
சியாமளா ராஜசேகர்

பைந்தமிழ்ச் சோலை ...!!!

பைந்தமிழ்ச் சோலை ....!!!
***********************************
பாமலரும் சோலையிது பைந்தமிழின் சோலை
பாவலர்மா வரதராசன் தோற்றுவித்த சோலை !
தேமதுர மரபிலவர் பயிற்றுவிக்கும் சோலை
தீந்தமிழை முகநூலில் அலங்கரிக்கும் சோலை !
நாமகளும் நனியழகாய் நடமாடும் சோலை
நற்றமிழாள் மகிழ்ச்சியுடன் உறவாடும் சோலை !
பூமணத்தை விஞ்சிநிற்கும் பாமணத்தை நுகர்ந்தோர்
பூரிப்பில் மனமுவந்து வாழ்த்துகின்ற சோலை !!
விருத்தங்கள் விளையாடத் திளைத்திருக்கும் நெஞ்சம்
வியக்கவைக்கும் சந்தத்தில் வண்ணங்கள் கொஞ்சும் !
அருவியென வெண்பாக்கள் அமுதாகப் பொழியும்
அதில்நனைந்த உள்ளத்தில் கவிபொங்கி வழியும் !
இருள்விலக்கும் தமிழ்க்கூடல் நினைத்தாலே இனிக்கும்
இணையில்லாச் சேவைகண்டு விழியிரண்டும் பனிக்கும் !
பெரும்பேறு பெற்றதனால் இணைந்தோமிச் சோலை !
பேரழகாய்ச் சூட்டிடுவோம் யாப்பினிலே மாலை !!
பெருங்கவியாம் பாவலரின் வழிகாட்ட லோடு
பீடுநடை போடும்பைந் தமிழ்ச்சோலை பாரில் !
திருவண்ணா மலையினிலும் தன்கிளையை விரித்துச்
சிறப்பாக ஓராண்டை நிறைவுசெய்த சோலை !
அருந்தமிழின் எழில்மரபைக் காப்பதேதன் பணியாய்
அரவிவேகா னந்தனிங்கே செயலாற்றும் சோலை !
விருந்தாக மாதமொரு கவியரங்கம் நடத்தி
வெற்றிக்கு வித்திட்ட திருவருணைச் சோலை !!
பொறுப்போடு கற்பிக்கும் பயிலரங்கம் உண்டு
போட்டிகளு முண்டிங்கே விருதுகளும் உண்டு!
சிறப்பான ஏடுகளின் அறிமுகமு முண்டு
சிந்தைக்கு விருந்தாகச் சிறப்புரையு முண்டு !
முறையோடு நெறிப்படுத்தும் முனைவரிவர் தொண்டால்
முத்தமிழும் மனங்குளிரும் பேரவையைக் கண்டு !
குறைவின்றி இச்சோலை பணிசிறக்க வேண்டும்
குவலயமே வியக்குவண்ணம் உயர்வடைய வேண்டும் !!
தேவைகளைக் கண்டுணர்ந்து புகட்டும்நற் றாயாய்
செந்தமிழைத் தெவிட்டாமல் ஊட்டிவிடும் சோலை !
பாவகைகள் பலவற்றை ஆவலுடன் இங்கே
பாட்டறிந்த புலவோரும் கேட்டறிந்து செல்வார் !
காவியமும் படைத்திடுவார் மரபறிந்த பின்னால்
கணினிவழிக் கனித்தமிழைக் கற்பிப்பார் பின்னாள் !
பாவலரால் உருவான பைந்தமிழின் சோலை
பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழி !!
சியாமளா ராஜசேகர் !
( பைந்தமிழ்ச் சோலை திருவண்ணாமலைக் கிளையின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் நடந்த கவிப்பொழிவில் வாசித்த கவிதை )

பாடு பாடு பாடு பாடு

பாடு பாடு பாடு பாடு
பணிவுடன் பாடு !
பாவம் தீரக் கண்ணீர் மல்கப்
பரமனைப் பாடு !
தேடு தேடு தேடு தேடு
சித்தனைத் தேடு !
சிந்தை குளிரச் செய்யு மினிய
தேவாரம் பாடு !
நாடு நாடு நாடு நாடு
நம்பிக்கை யோடு !
நல்ல வண்ணம் வாழ வைப்பான்
நற்றுணை யோடு !
கூடு கூடு கூடு கூடு
கோயிலில் கூடு !
கொஞ்சு மொழியில் நெஞ்ச முருகிக்
கூத்தனைப் பாடு !
ஆடு ஆடு ஆடு ஆடு
அன்புட னாடு !
ஆடல் வல்லான் ஆடி வருவான்
அம்பிகை யோடு !
காடு போகு முன்னர் ஈசன்
கழலடி பற்று !
காம குரோத லோப மென்ற
கயமைகள் விட்டு !!
வீடு பேற்றை யளிக்க வல்ல
வேதங்கள் ஓது !
வெண்ணீ றணிந்த இறைவன் பார்க்க
விலகிடும் தீது !!
சியாமளா ராஜசேகர்

பன்னிரண்டுசீர் விருத்தம் ...!!!

கருணைக் கடலென்று கருதி உனைநம்பிக்
கந்தா ஓடிவந்தேன் !
கவலை வறுத்தெடுக்கக் கண்ணீர் ஊற்றெடுக்கக்
கதறி அழுதுநின்றேன் !
இருளில் ஒளிதேடி ஏழை படும்பாட்டை
இறைவா அறியாயோ ?
இதயம் குளிர்விக்க அன்போ(டு) அரவணைக்க
இனியும் தயக்கமென்ன ?
மருதா சலனுன்னை மனத்தில் நினைத்தபடி
மலையி லேறிவந்தேன் !
வழியில் மயிலாட அதுதான் நீயென்று
மௌன மாய்ச்சிலிர்த்தேன் !
அருளைப் பொழிவதற்குச் சற்றும் மனமிலையா
அழகா இதுமுறையா ?
அடிமேல் அடிவிழுந்து துடிக்கு மிதயத்தை
அன்பால் வருடாயோ ?? 1.
வெள்ளைப் பட்டுடுத்தி நீல மயிலேறி
வீடு பேறருள
வெற்றி வேலேந்தி சேவற் கொடியோடு
விரைந்து வரவேண்டும் !
அள்ளும் அழகிலிரு வல்லி மாரோடும்
அன்னை தந்தையோடும்
அண்ணன் கணபதியும் துணையாய் உன்னுடனே
ஆடி வரவேண்டும் !
துள்ளி வருங்கோலம் விழிகள் கண்டவுடன்
துன்பம் விலகியோடத்
தொடரும் இன்பத்தில் உள்ளம் நெகிழ்ந்தபடிச்
சுகமாய் நனையவேண்டும் !
வள்ளல் உன்புகழைத் தெள்ளு தமிழில்நான்
வடித்து மகிழவேண்டும் !
வற்றாக் கவிமழையில் உன்னைக் குளிர்வித்து
வாழ்த்து பெறவேண்டும் !! 2.
கல்லாய் இருந்தாலும் கண்ட கண்களிலுன்
காட்சி கிடைத்துவிட்டால்
கள்ளம் அழிந்துவிடும் உள்ளம் தெளிந்துவிடும்
கவலை தோற்றோடும் !
சொல்லே எழும்பாமல் சும்மா இருப்பதுதான்
சுகமென் றுணருமுள்ளம் !
சுற்றி நடப்பதெல்லாம் அழுத்தம் தந்தாலும்
சுமையாய்த் தோன்றாது !
முல்லை மலர்போலும் முத்து நகைசிந்தி
முருகா வந்திடுவாய் !
மூல மந்திரத்தை ஓதும் அடியவரின்
மூளும் வினைதீர்ப்பாய் !
புல்லில் பனித்துளிபோல் நிலையில் லாவாழ்வைப்
புரிய வைத்திடுவாய் !
பொன்னை நிகர்த்தவுனைப் பொலிவில் சுந்தரனைப்
போற்றி வணங்குவனே !! 3.
கொஞ்சு தமிழ்பேசும் அடியார் மனங்களிலே
குமரா களித்திருப்பாய் !
கோல விழியாளின் பாகு கனிமொழியில்
குளிர்ந்து மகிழ்ந்திருப்பாய் !
கஞ்ச மலர்ப்பாதம் பற்றிப் பணிவோரைக்
கனிவாய்க் காத்திடுவாய் !
கழலில் சிலம்பொலிக்க ஆறு தலையளிக்கக்
கடம்பா ஓடிவாராய் !
தஞ்ச மடைந்தோரைத் தணிகை வேல்முருகா
தயவாய்த் தாங்கிடுவாய் !
தங்கத் தேரேறிப் பவனி வரும்போது
தமிழால் வாழ்த்திடுவாய் !
பஞ்சா மிர்தமென வாழ்வின் சுவைகூட்டிப்
பத்தர் உளங்கவர்வாய் !
பழனி மலைமீதில் தண்டா யுதபாணி
பாலா அருள்புரிவாய் !! 4.
அலைகள் முத்தமிடும் செந்தூர்க் கடலோரம்
அழகாய் வீற்றிருப்பாய் !
அசுர வதஞ்செய்து தேவர் குலங்காத்தே
அமைதி யாகநிற்பாய் !
தலைகள் ஓராறு கொண்ட அறுமுகவா
தகப்பன் சாமிநீயே !
தரும மிகுசென்னை கந்த கோட்டமெனும்
தலத்தில் உறைபவனே !
மலையில் முகிலிறங்கி மாயோன் மருகனுன்னை
வணங்கும் எழில்கண்டேன் !
மயில்கள் நடனமிடும் விராலி மலையிலுன்றன்
மயக்கும் காட்சிகண்டேன் !
நிலைத்த பத்தியினால் கன்னல் திருப்புகழை
நித்தம் பாடிடுவேன் !
நெஞ்சம் கசிந்துருகிப் பாட நீகேட்டு
நிறைவாய் ஆட்கொளவா !!! 5.
சியாமளா ராஜசேகர்

என்ன தவம் செய்தோம் ...!!!


என்னதவம் செய்தோம்நாம் என்னதவம் செய்தோம்
எழில்கொஞ்சும் திருநாட்டில் இப்பிறப்(பு) எடுத்தோம் !
பொன்னான பல்வளங்கள் நிறைந்தெங்கும் மிளிரப்
பூமித்தா யின்கொடையாய் இயற்கைவரம் பெற்றோம் !
அன்பொன்றே சிவமென்ற சித்தர்வாக்(கு) உணர்ந்தோம்
அன்னைதந்தை முதற்கடவுள் என்றுபணியக் கற்றோம் !
பன்மொழிகள் இப்புவியில் பவனிவந்த போதும்
பைந்தமிழே முதன்மையென்று மார்தட்டி நின்றோம் !!
பழங்காலக் கோயில்கள் கலைநயத்தைக் காட்டப்
பண்பாட்டில் சிறந்திருந்த பெருமையைமதித்தோம் !
அழிவில்லா இலக்கியங்கள் தமிழ்மொழியில் தோன்றி
அறநெறியை எடுத்தியம்ப நல்வழியறிந்தோம் !
வழுவில்லா இறையுணர்வால் பக்திநெறி யோங்க
வளமையான பனுவல்கள் வரமாகப் பெற்றோம் !
எழுச்சியுறச் செய்தபல கவிகளின் படைப்பை
எல்லையில்லா மகிழ்வுடனே இதயத்தில் பதித்தோம் !!
எத்தனையோ இருந்தாலும் நிறைவென்னுள் இல்லை
இன்றமிழில் எழுதுவதே இன்பமென்று ணர்ந்தேன்!
தித்திக்கச் சொல்லடுக்கிக் கவிவனைந்த போதும்
சிறிதேனும் அதிலுள்ளம் அமைதிகொள்ள வில்லை !
சத்தான மரபினிலே நாட்டமிகக் கொண்டு
தணியாத தாகத்தில் முதலடியெடுத்தேன் !
முத்தாக மணியாகச் சுடர்விட்ட குழுவை
முகநூலில் இனங்கண்டு மகிழ்விலுளம் பூத்தேன் !
மரபுகற்றுக் கொடுக்கும்பைந் தமிழ்ச்சோலை வாசம்
மனத்தையள்ள பாவலரின் சோலையிலி ணைந்தேன் !
வரமென்றே தான்கருதிப் பயிற்சியில்பங் கேற்று
மாவரத ராசனிடம் பாட்டியற்றக் கற்றேன் !
அரும்பாக்கள் சோலையிலே பூத்துமணம் வீச
அழகழகாய்ப் பலவகையில் மரபில்சமைத்தேன் !
தருவாகப் பயன்கருதாத் தமிழ்த்தொண்டு செய்யும்
தமிழ்மகனைக் கண்டதுமென் தவப்பயனால் தானோ ??
என்போன்றே பலருக்கும் தன்னார்வத் தோடே
எளிமையாகக் கற்பிக்கும் பாவலரின் சேவை
முன்பைப்போல் எஞ்ஞான்றும் அன்புள்ளத் தோடு
முழுவதுமாய் வற்றாமல் முகநூலில் தேவை !
கன்றுகளின் பசியறிந்து பால்புகட்டும் தாயாய்க்
கனித்தமிழை நமக்கூட்டும் நல்லாசான் கிட்ட
என்னதவம் செய்தோம்நாம் என்னதவம் செய்தோம்
இத்தருணம் நன்றிசொல்வோம் கையிரண்டைக் குவித்தே !!
சியாமளா ராஜசேகர்

சோலை விழாவுக்கு வரவேற்பு ...!!!

சுற்றத்து டன்நட்பும் சூழ்ந்திட வாருங்கள்
சோலை விழாவினைக் காண்பதற்கு !
நற்றமிழ் அன்னையும் வந்திடு வாளங்கு
நல்ல தமிழ்ப்பாக்கள் கேட்பதற்கு !!
நான்காவ தாண்டு விழாவினில் சென்னையில்
நாமொன்று கூடி மகிழ்ந்திடலாம் !
வான்மழை யும்பன்னீர்த் தூவிட இன்புற்று
வாழ்த்தாய் நினைத்துச் சிலிர்த்திடலாம் !!
பாவலர் காட்டிய பாதையி லேநாமும்
பைந்தமிழ்ச் சோலையில் கற்றறிந்தோம் !
ஆவலுடன் பட்டம் பெற்ற பூரிப்பினில்
ஆனந்த யாழினை மீட்டிடுவோம் !!
விருதுகள் பெற்றிடும் ஆன்றோரு ரைகேட்க
விருப்பத்து டன்நாமும் காத்திருப்போம் !
விருந்தாய வர்மொழி கேட்டதிலே உள்ளம்
மிக்க நிறைந்திடப் பூத்திருப்போம் !!
ஆண்டுதோ றும்பல புதுமைக ளைச்செய்யும்
ஆசானை யும்வாழ்த்திப் பாடிடுவோம் !
மூண்டெழும் அன்பினில் மூப்பில்லா அன்னையாம்
முத்தமி ழாளை வணங்கிடுவோம் !!!
மலராக வாருங்கள் ....... மணத்தோடு வாழ்த்துங்கள் !!!

தமிழ்த்தாய் சூடிய அணிகலன்கள் ...!!!

எழிலார்ந்த கன்னியவள் இளமையுடன் மிளிர்பவளாம்
மொழிகளுக்கே தாயவளாம் மூன்றாகத் திகழ்பவளாம்
அழகான இலக்கணத்தை அரணாக உடையவளாம்
அழிவில்லா இலக்கியங்கள் அணியாகக் கொண்டவளாம் !!
பொன்னொளிரும் மேனியிலே பொலிவான அணிகலன்கள்
அன்னையவள் தான்சூடி அகம்சிலிர்க்க வைத்திடுவாள்
இன்னமுதை யும்மிஞ்சும் ஈடில்லாச் சுவையுடையாள்
தொன்மைமிக்க அவள்மரபைத் தொல்காப்பி யம்பேசும் !!
அருந்தமிழாள் சூடியுள்ள அணிமணிக்கு நிகரேது
கருணையுள மார்மீது கவின்மிகுசிந் தாமணியும்
மருதாணி யிட்டகையில் மயக்குவளை யாபதியும்
திருவடியில் சிலம்பொலிக்கத் தேன்பாயும் செவியோரம் !!
ஒள்ளொலியாய்ச் சிற்றிடையில் ஒப்பில்லா மேகலையும்
உள்ளமள்ளும் பேரெழிலாய் உச்சியில்சூ ளாமணியும்
கொள்ளையழ காய்க்காதில் குண்டலகே சியுமாட
வள்ளுவனார் திருக்குறளும் மணிமகுட மாய்ச்சிறக்கும் !!
இரட்டைமணி மாலைசூடி இளமையாகச் சிரித்திடுவாள்
திருப்புகழும் வாசகமும் திருப்பாவை தேவாரம்
புருவங்கட் கிடையினிலே பொட்டாக அலங்கரிக்க
வரமருளும் தமிழ்த்தாயின் மலரடியைப் பணிவோமே ...!!!
சியாமளா ராஜசேகர்

சரண்புகுவாய் ....!!!

ஆயிரம் காக்கைக் கொருகல்லே போதும்
அடர்மரக் கிளைவிடுத் தோடும் !
தூயவன் கடைக்கண் பார்வையும் பட்டால்
தொடர்ந்திடும் துயர்பறந் தோடும் !
நோயினில் வீழ்ந்து பாயினிற் கிடந்து
நொந்துளம் நைந்தது போதும் !
தாயினும் சாலப் பரிந்தவன் காப்பான்
தாள்களில் சரண்புகு வாயே !!
சியாமளா ராஜசேகர்

உளம்‌ நனைக்கும்....!!!

சாரல் மழையும் குளிர்ந்த காற்றும் உடல்தழுவும்!
சறுக்கி மலையில் வழியு மருவி உளம்நனைக்கும்!
ஆர வாரத் தோடு கொட்டிச் சிலிர்க்கவைக்கும்!
அடங்காத் தாகங் கொண்டு குளித்த அகமலரும்!
ஈர மேகம் கீழி றங்கி வருடிவிடும்!
இயற்கை வனப்பில் தோய்ந்த இதயம் மயங்கிவிடும்!
வாரி யணைத்து முத்தங் கொஞ்ச மனந்துடிக்கும்!
வரமாய்க் கிடைத்த வாய்ப்புக் கென்றும் நன்றிசொலும்!!!


சியாமளா ராஜசேகர் 

வானவில்லைத் தூளியாக்கி ....!!!

எண்சீர் விருத்தம் ...!!!
*******************************
வானவில்லைத் தூளியாக்கி உன்னைத்தா லாட்டவா
வளையவரும் முகில்மடித்து விசிறியாக்கி வீசவா ?
தேனருவிச் சாரலிலே நனைந்தபடி யாடவா
தேவதையுன் கவின்சிரிப்பில் மனம்மயங்கிப் பாடவா ?
சீனியெனத் தித்திக்கும் கவிதைகளைச் சொல்லவா
சீராட்டி அன்பினாலே உன்றனுள்ளம் வெல்லவா ?
ஆனந்தம் பூத்துவரக் காதலோடு கிள்ளவா
ஆசையாலே என்னிரண்டு கைகளினால் அள்ளவா ??
சியாமளா ராஜசேகர்

Thursday, September 5, 2019

கவியரங்கம்


தமிழ் வாழ்த்து !!
**********************
முன்னவள் சுவையில் இனியவள் கன்னல் 
***
மொழியவள் இளமை யானவள் ! 
தன்னிக ரின்றித் தனித்துவ மாகத் 
***
தரணியை ஆளும் தன்மையள் ! 
நன்னய மிக்க இலக்கண வளமும் 
***
நல்லிலக் கியங்கள் கொண்டவள் ! 
தென்னவன் மன்றில் வளர்ந்தவள் புவியில் 
***
செம்மொழி யாகச் சிறந்தவள் !! 

இயலுடன் இசையும் நாடக மென்றே 
***
இயல்பினில் மூன்றா யானவள் ! 
உயிரொடு மெய்யும் உயிர்மெயு மாகி 
***
ஓரெழுத் தாய்த மானவள் ! 
துயருறும் போது சுகம்பெற தமிழே 
***
துடைத்திடும் கையாய் நீள்பவள் ! 
தயவுடன் விரும்பும் அன்னியர் தமக்கும் 
***
தமிழமிழ் தம்போல் சுவைப்பவள் !! 

கல்லையும் கனியச் செய்பவள் தம்மைக் 
***
கற்பவ ருள்ளம் நிறைபவள் ! 
வெல்லமாய் நாவில் இனிப்பவள் என்றும் 
***
வெற்றிகள் ஈட்டித் தருபவள் ! 
நல்லறம் காட்டி மிளிர்பவள் வாழ்வில் 
***
நைந்திடா வண்ணம் காப்பவள் ! 
வல்லவள் ழகரச் சிறப்பவள் எங்கும் 
***
மணப்பவள் வாழி வாழியே !! 

அவை வாழ்த்து ...!!
*************************
கட்செவிக் குழுக்கள் பற்பல வற்றுள் 
***கலைகளை மதித்திடும் குழுமம் !
நட்புக ளுடனே நகமொடு சதையாய் 
***நனியழ காய்நடை போடும் !
எட்டிடும் உச்சம்  படைப்புக ளாலே 
***ஈட்டிடும் நற்பெயர் எங்கும் !
மட்டிலா மகிழ்வில் வாழ்த்துகள் கூறி 
***மாண்பினைப் போற்றிடு வோமே !

தலைவனாய் சு.ரவி .குழுதனை நடத்தும் 
***தகைமையை மெச்சிடும் வையம் !
கலைமகள் வடிவைக் கருணையின் உருவைக்
***கலங்கரை விளக்கெனப் போற்றும் !
கலைநயம் கொஞ்சும் சிலையெழில் கண்டால் 
***கைவிரல் தூரிகை யாகும் !
புலமையை மதித்துப் புகழ்பெற வாழ்த்திப் 
***போற்றிவ ணங்கிடு வோமே !!

இனியது கேட்கின் ...!!!
*******************************
இணையவழிக் கவியரங்கில் கலந்து கொண்டே 
     இனியவற்றை எடுத்தியம்ப பலரும் ஒன்றாய் 
இணைந்திருக்கும் எழிற்கோலம் இங்கே கண்டால் 
      இதயத்தில் பூஞ்சாரல் இனிதாய்த் தூவும் !
தணியாத கவியார்வத் தோடே இன்று 
       தண்டமிழில் கவிபொழிய வந்தோர்க் கெல்லாம் 
வணக்கத்தைப் பணிவாக அவைமுன் வைத்து 
     வாழ்த்திவர வேற்பதிலே உவகை கொள்வேன் !

மனத்திற்குள் நிறைந்திருக்கும் இனிய ஒன்றை 
     மகிழ்வுடனே அதுஎதுவென எடுத்துச் சொல்வீர் !
தனக்குநிக ரில்லாத இறையோ இன்றோ 
      தயையினிதோ இசையினிதோ தர்மந் தானோ 
வனப்பான இயற்கையோஏ காந்தம் தானோ ?
     வாசிக்கும் நூலினிதோ ஞானம் தானோ 
அனைத்திற்கும் மேலான வீடு பேறோ
      அன்பில்பெண் மையினிதோ பாட வாரீர் !!

முதலாவதாக .....கவிபாட வருகிறார் 

1. கவிஞர் சுந்தர ராஜன் ( இறை இனிது )
********************************
மந்திரச் சொற்கள் மனந்தனை யீர்க்க 
    வரிசையில் அழகுடன் நிற்கும் !
சந்தமும் துள்ளி நாட்டிய மாடும் 
    சரவெடி முழக்கமும் நடத்தும் !
சுந்தர ராச! நின்கவிப் பொழிவில் 
    சுகம்சுகம் என்றுளம் திளைக்கும் !
அந்தமிழ் அவையில் இறையினி தென்றே
     அனுபவித் தேகவி தொடுப்பாய் !!

நன்றி !
*********
உருவாக அருவாக உளனாக இலனாக
      உள்ளத்தி லேவாழ்பவன்!
உயிராக மெய்யாக உறவாக நட்பாக 
     உணர்வினி(ல்) உறைகின்றவன் !

கருணையே வடிவாக வளமையாய் எழுதிடும் 
      கவிதையில் கருவானவன் !
கடலிலே அலைகளாய்க் காற்றிலே ஆடிடும்
      கதிரிலே மணியானவன் !

மரமாக வளியாக மலரோடு மணமாக 
      மழையாக நிறைவானவன் !
மனதார வேண்டுவோர் வேண்டுதல் நிறைவேற்ற 
     வரமருட் புரிவானவன் !

இரவோடு பகலாக இருளிலே ஒளியான
     இறைபுகழ் பறைசாற்றினாய் !
இறையவன் பெருமையே இனியதென்(று)  உரைத்தனை 
     இனியனே சுந்தர்வாழி !!


2. கவிஞர் ரவி கல்யாணராமன்  ( இசை இனிது )
******************************************
நற்கவி கண்டால் நயஞ்சுட்டிப் பாராட்டும் 
அற்புதப் பாவலர் ! அன்னைத் தமிழினில் 
கற்பனைக் கெட்டாக் கவின்கவி நெய்பவர் !
பற்பல வண்ணத்தில் பாட்டிசைக்கும் வித்தகர் !
வெற்றிக ளீட்டிடும் மேன்மைமிகு நாவலர் !
பொற்புடன் பாரதியைப் போற்றிப் பணிபவர் !
வற்றா நதியாய் வளங்கூட்டும் வள்ளலே !
இற்றைக்குப் பாட இனிதே வருகவே !!
     
      ( இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா )

நன்றி !
*********
வாணியிடம் விண்ணப்பம் செய்கின்ற பக்தன் 
      வார்த்தைகளால் மாயவித்தை புரிகின்ற சித்தன் !
காணிநிலம் வேண்டுமென்ற பாரதியின் பித்தன் 
     கார்முகிலாய் இதமான கவிப்பொழிவில் சுத்தன் ! - உன்
தேனினிய அந்தாதி உருக்கியதே நெஞ்சம் - அந்த 
     தேவசுக மீட்டலிலே கலைமகளும் தஞ்சம் ! - நம்
மேனியெல்லாம் சிலிர்க்கவைக்கும் இனியஇசை தானே - அதை 
     வேண்டிநின்ற பிள்ளையுன்னை அரவணைப்பாள் தாயே !!

தென்றலாய்  இதயம் தொட்ட தேனிசைப் பாவலருக்கு
அன்பான நன்றி !


3. கவிஞர் விவேக் பாரதி ( இயற்கை இனிது )
**********************************
சந்தமுளச் செந்தமிழைச் சந்ததமும் ஆள்பவன்
     சங்கதிகள் கொஞ்சிவரும் இன்னிசையில் பூப்பவன் !
சிந்துமுதல் வண்ண(ம்)வரை செம்மையுற யாப்பவன் 
    சிம்மமென நன்னடையில் தன்னிறைவு கொள்பவன் !
இந்தநொடி சிந்தைதனில் விந்தைகளில் தோய்பவன் 
    இங்கியற்கை இன்பமென இன்சுவையைச் சேர்ப்பவன் !
வந்தினிய கொண்டலென மஞ்சுகவி பெய்பவன் 
     மன்றமிதில் பொங்கிவரு கங்கையெனப் பாய்கவே !! 

நன்றி !!
**********
இயற்கை கூட்டும் இனிமைகளை 
     இங்கே நயமாய் எடுத்துரைத்தாய் !
வியப்பின் உச்ச மாய்விளங்கும் 
      மேலாம் இயற்கை இனிதென்றாய் !
பெயலாய் உன்றன் கவிப்பொழிவால்
      பெருமை சேர்த்தாய் இவ்வரங்கில்!
மயங்க வைத்தாய் உன்பாட்டில் 
      மகனே! வாழ்த்தி மகிழ்வேனே !!

4. கவிஞர் நீரஜா  ( ஏகாந்தம் இனிது )
**********************
திருமாலின் மலர்ப்பதமே துணையென்று நம்பித்
     தேனமுதாய்த் தித்திக்கும் தமிழ்ப்பாக்கள் நெய்வார் !
குருவருளும் வழிகாட்டச் செய்தொழிலில் சிறந்து 
     குவலயத்தில் பொதுநலத்தை யும்பேண முனைவார் !
பெருமகிழ்வாய் நதிநீரை இணைக்கப்போ ராடும்  
     பெண்ணிவளின் உழைப்புக்கு வாழ்த்துகளைச் சொல்லி 
அருங்கவிதை ஏகாந்த மினிதென்று பாட 
     அன்போடு நீரஜாவை விரும்பியழைப் போமே !!

நன்றி !
*********
தனிமைமற்றும் ஏகாந்தத் தின்வேறு பாட்டைத் 
      தனித்தனியே எடுத்தழகாய்க் கவிதையிலே காட்டி 
இனியதென்றும் ஏகாந்தம் என்றிங்கு ணர்த்தி
      இறையவனின் வரமென்று தெளிவோடு ரைத்தாய் !
கனிந்துவிட்டால் ஏகாந்தம் மிகவினிய தென்று 
       கருத்துகளைப் பிறரறிய இம்மன்றில் வைத்தாய் !
மனம்நிறைந்து வாழ்த்துரைக்க முன்வந்தேன் இங்கே 
      மகிழ்வோடு நன்றிகளை ஏற்றுக்கொள் வாயே !!


5. சாந்தி மீனாட்சி ( மழலை இனிது )
************************
புன்னகை ததும்பும் பெண்ணிவள்  உள்ளம் 
     பொதுநலம் ஒன்றையே விழையும் !
துன்புகண் டுருகும் மென்மனம் கொண்டாள்
     தொண்டினில் தாய்மையே தெரியும் !
அன்புடன் வனையும் பாக்களில் இவள்தம்
     அந்தமிழ்ப் புலமையும் விளங்கும் !
இன்றினி தென்று மழலையைப் பாட 
     என்னருந் தங்கையே வருக !!


 நன்றி!
*********
வளர் பிறையை
வளர் விதையை
வசந்தத்தின் சிறுதேரை  
வரமான கவிதையை 
வடித்தாய் புதுக் கவிதையில் 

" உமிழ்கையில் அமிழ்தம் 
உதைக்கையில் மோக்ஷம் 
கையுள் வரும் சுவர்க்கம் 
கண்காணும் தெய்வதம் "

ஆஹா..! இதைவிட வேறு 
எப்படிச் சொல்ல?
மழலை இனிதே !!!
அழகிய கவிதை !

6. சீனி சுந்தர்ராஜன் ( புத்தகம் இனிது )
*****************************
சிந்தனைக் கோட்டத்தின் செம்மாந்த பாவலர் 
     சீர்மிகு வெண்பாவில் வித்தகராம் !
அந்தமிழ் ஆங்கிலம் யாவற்றி லும்பாடும்
      அற்புத ஆற்றல் படைத்தவராம் !!

கல்விக்கூ டங்களைக் கோயிலெ னப்போற்றிக்
     காணிக்கை யாய்ப்பொருள் ஈந்தவராம் !
வல்லமை மிக்கம ருத்துவ ராம்பாரில் 
     மாட்சிமை  மிக்கஆ லோசகராம் !!

வண்ணங்கள் கொஞ்சிடத் தீட்டிடும் சித்திரம் 
     மௌனமாய் உள்ளத்தை அள்ளிடுமே !
பண்பிற்சி றந்துவி ளங்கும ருத்துவர் 
      பாட்டினில் புத்தகம் பூரிக்குமே !!

நன்றி !
*********
முத்துமுத்தாய் இன்கருத்தை முன்னெடுத்து  வெண்பாட்டில் 
தித்திக்கத் தான்தந்த சீனியய்யா ! - புத்தகத்தின் 
நற்பயனை யிங்கு நயம்படத் தீட்டியநின் 
பொற்கைக்குச் சேரும் புகழ். 

7. கவிஞர் நதிநேசன் கணேஷ் நாராயணன் ( இன்று இனிது )
**********************************************************
சிங்கையில் வாழ்ந்திடினும் செந்தமிழைச் சீராட்டிக்
தெங்கிள நீராய்த் தெவிட்டாக் கவிதைகளை 
நன்றே வழங்கும் நதிநேச ! இன்றினி(து) 
என்றியம்ப வாராய் எழுந்து. 

நன்றி !
*********
அவ்வையன்று வேலனிடம் இனிய வற்றை 
     அழகான சொற்களினால் அடுக்கி னாற்போல் 
எவ்வெவற்றால் இன்றுஇனிய தென்று சொன்ன 
     இன்கவிதை இதயத்தை அள்ளிக் கொள்ள 
வெவ்வேறு காரணங்கள் இருந்தால் கூட 
     விளையுமின்பம் தான்பெற்ற அன்பால் என்றாய் !
எவ்வண்ணம் பாராட்டி சொல்வேன் நன்றி 
     இத்தருணம் இன்றினிதே உணர்ந்தேன் நன்றே !!


8. கவிஞர் சாய்ரேணு ( தர்மம் இனிது )
******************************
பாவையிவள் சொற்பொழிவில் பக்திமணம் மிகுந்திருக்கும் 
ஆவலுடன் கேட்கையிலே ஐம்புலனும் அடங்கிவிடும் 
பூவனத்துத் தென்றலென புதுசுகத்தைத் தவழவிடும் 
நாவிலுறைக் கலைமகளும் நல்லதமிழ்ச் சொற்கொடுக்கும் !!

பாவடித்துச் சோதரியைப் பாடவைத்தே உருகிநிற்கும்
தேவசுக மீட்டலிலே தெய்வீகம் நிறைந்திருக்கும் !
வாவென்று நானழைக்க வந்தினிதாய்ப் பொழிந்திடம்மா 
தாவென்று கேட்குமுன்னே சாய்ரேணு தாருமம்மா !!

நன்றி !
*********
இனியன யாவையும் பட்டிய லிட்டாய்
இனியது தர்மமே எனமுழங் கிட்டாய் 
இனிதினும் இனியதாம் அறவழி நின்றால் 
இனிவரும் நாள்களில் நலமிகும் என்றாய் !

அப்பப்பா என்றெனை வியந்திட வைத்தாய் 
செப்பிய நின்கவி நனிசிறப் பம்மா !
ஒப்பிலாத் திறமைகள் பெற்றவ ளுன்னை
எப்படி வாழ்த்துவேன் இக்கணம் நானே !


9. கவிஞர் சுதர்சனா ( தயை இனிது )
****************************
அரங்கன்மேல் அன்புவைத்த ஆண்டாளைப் போல 
     அருந்தமிழில் சொற்பொழிவு நிகழ்த்திடுவாள் அழகாய் !
வரம்பெற்று வந்தாற்போல் குழந்தைமுதல் இன்றும் 
     வைணவத்தில் இசையுரையை நடத்திடுவாள் இனிதாய் !
பெருமைமிக்க கோயில்நகர் கும்பகோணம் தந்த 
     பேறுபெற்ற பெண்ணிவளை மனதார வாழ்த்தி 
ஒருகவிதை தயையொன்றே இனிதென்று பாட 
     உள்ளன்போ டழைக்கின்றேன் பொன்மகளே வருக !!

சுதர்சனா வருக ! சுகமாய்க் கவிபொழிக !!

நன்றி !
*********
கருத்துகளை மணிமணியாய்க் கோத்துச் சேர்த்து 
     கவினழகுச் சரமாக்கிச் சூட்டி விட்டாய் !
விருத்தத்தில் அடுக்கடுக்காய் உன்றன் கூற்றை 
     விரிவாக இவ்வரங்கில் பதிய வைத்தாய் !
பொருத்தமான தலைப்பேற்றுச் சிறக்கச் செய்தாய்
     பொலிவாக தயையினிதே என்று பெய்தாய் !
சுருக்கமாகச் சொல்வதென்றால் அருமை தானே !
      சுதர்சனாவுன் கவிமழையில் நனைந்தேன் நானே !!

10. கவிஞர் ஷோபனா ரவி ( பெண்மை இனிது )
************************************
வண்ணங்கள் பலவுண்டு வடிவங்கள் பலகொண்டு
மணக்கின்ற வாழ்வின் வரமே !
ஒண்டமிழோ டுறவாடி ஒப்பற்ற பணிசெய்தே 
ஓங்குபுகழ் பெற்ற அணங்கே !
கண்ணனவன் மீதுகொண்ட தீராத காதலினால் 
கவியியற்றிப் பாடுங் குயிலே !
பெண்மையொன்றே இனியதென்று கவியரங்கை ஆளவந்து
பெருமையுடன் கவிதருகவே !!

நன்றி !!
*********
ஆணுள் இருக்கும் பெண்மை யுணர்ந்தே 
அவளாய்க் கவிசமைத்தாய் !
பேணி வளர்த்த அன்னை வைத்த 
பெயரில் பொருந்திநின்றாய் !
காணும் தோற்றம் ஆணா யிருந்தும் 
களித்தாய் பெண்ணாக !
ஆணுள் முகிழ்த்த பெண்மை இனிதே 
அழகாய்க் காட்டிவிட்டாய் !!

11. கவிஞர் சங்கர நாராயணன் ( ஞானம் இனிது )
*****************************************
சங்கீதத் தில்முறையாய்ப் பயிற்சி பெற்று 
     தானெழுதி இசைக்கூட்டி இனிதாய்ப் பாடி 
பொங்கிவரும் ஆனந்தப் பெருக்கால் செய்யும் 
     பூசைகளில் பக்திமணம் கமழ்ந்திருக்கும் !
செங்கரும்பின் இன்சுவையை மிஞ்சும் வண்ணம் 
     செந்தமிழில் ஞானமினி தென்று பாட 
சங்கரநா ராயணரே அழைத்தேன் உம்மை  
     தந்திடுக நற்கவிதை அவையின் முன்னே !!

தென்காசி சாரலே வருக ! ஐந்தருவியாய்ப் பொழிக !!

நன்றி !
*********
ஞான மென்றால் எதுவென் றுரைத்து
     ஞான மடையும் வழியைச் சொல்லி 
தேனாய்க் கருத்தைக் கவியில் கலந்து 
      தெவிட்டா வண்ணம் சுவைக்கக் கொடுத்து 
ஞான மினிதே என்ற தலைப்பில் 
     ஞயமாய்த் தெளிவாய் மழையாய்ப் பொழிந்த 
கானம் பாடி உம்மை வாழ்த்தி 
     கைகள் குவித்து நன்றி சொல்வேன் !!

12. கவிஞர் சுரேஷ் குமார் ( வீடு இனிது )
***********************************
மயிலையிலே பிறந்தவராம் மாலவனைத் துதிப்பவராம் 
உயர்வான நட்புகளை உயிராக மதிப்பவராம் !
வியக்குவண்ணம் இவ்வரங்கில் வீடொன்றே இனிதென்று 
தயக்கமின்றிப் பாடுதற்குத் தலைவணங்கி அழைக்கின்றேன் !!

ஐயா வருக ! அமுதைப் பொழிக !!


நன்றி !
*********
இறையுறைத் தலமா ? இல்லற நிலமா ?
குறைவற இன்பம் கொடுப்பவை யிரண்டும் 
என்றே சிறப்பாய் இனிதாம் வீட்டை 
நன்றாய் அலசி நயம்பட உரைத்தீர் !
அறத்துடன் ஈட்டிய பொருளே இன்பம் 
அறிந்திடில் வீடுபே(று) அதனினும் இனிதெனச் 
செம்மை யாகச் செப்பினீர் இங்கே 
உம்மை வணங்கி உள்ளம் மகிழ்ந்து 
நன்றி அன்புடன் நவில்வேன்
கன்னல் கவியே கைகள் குவித்தே !!



என் கவிதை !
******************
கொஞ்சுதமிழ்ச் சொல்லெடுத்துக் கோடியின்ப சுவைகூட்டி
நெஞ்சத்தைக் கொள்ளைகொண்ட நிறைவான கவியரங்கம் !

துள்ளிவந்த கவிதைகளால் சுகமான இனிமைகளை 
உள்ளமெனும் உயர்வனத்தில் உலவவிட்ட  எழிலரங்கம் !

பன்னிருவர் ஒன்றாகப் பைந்தமிழில் உறவாடி 
இன்பத்தைக் கொட்டிவிட்ட இணையவழிக் கவினரங்கம் !

தித்திக்கும் இனியவற்றைத் தெவிட்டாமல் அடுக்கடுக்காய் 
முத்தான கருத்துகளை முன்வைத்த சுவையரங்கம் !

இத்தருண மிதுகேட்டே எழிலார்ந்த தமிழன்னை 
புத்துணர்ச்சி யோடிங்கே புன்னகைத்து வந்திடுவாள் !!

தேனருவிக் கவிதைகளில் திளைத்திருந்த காரணத்தால் 
வானமகள் பூச்சொரிந்து வாழ்த்துரைக்கக் காத்திருப்பாள் !

இமயங்கள் சூழ்ந்திருக்க இக்குன்றை முன்னிறுத்தி 
இமைபனிக்கச் செய்திட்ட ஈடில்லா இவ்வரங்கில் 

என்கருத்தை முன்வைக்க இப்போது வருகின்றேன் 
அன்புடனே செவிமடுப்பீர்  அவையோரே ! சான்றோரே !!

இதயத்தை வசப்படுத்தும் ஆற்றல் கொண்ட 
      இன்னிசைக்கு மயங்காதார் எவரு முண்டோ ?
வதங்காமல் குளிர்விக்கும் தென்ற லாக 
     வருடிவிட்டே உயிர்நனைக்கும் இசைக்கீ டில்லை !
அதிகாலைச் சூரியனும் அந்தி வானும் 
     அலைகடலும் முழுமதியும் மலையும் ஆறும் 
இதமான இளங்காற்றும் பசுமைபூத்த 
     இயற்கையினை விரும்பாதோர் யாரு மில்லை !!

மழலையரின் குறும்புகளோ இனிக்கும் கண்டாய் 
     வந்துவிழும் வார்த்தைகளும் மணக்கும் செண்டாய்!
குழலோசை போலினிக்கும் மழலை கீதம்
     குழந்தைகளே என்றென்றும் வாழ்வின் வேதம் !
சுழலுகின்ற உலகத்தில் சுமைகள் வாட்டும் 
     சோர்வகற்ற தனிமையொன்றே இனிமை  கூட்டும் !
பழகிவிட்டால் ஏகாந்தம் பிடித்துப் போகும்!
     பக்குவத்தைப் பெற்றுவிட்டால் சொர்க்கம் அஃதே !

வாசிக்கும் பழக்கத்தை மேற்கொண் டாலே 
     மனமாசு தானகன்று வாழ்வி னிக்கும் !
நேசிக்கும் புத்தகங்கள் உடனி ருந்தால் 
     நிறைகுடமாய் விளங்கிடலாம் வையந் தன்னில் !
வாசமலர் ஆயுளெல்லாம்  ஒற்றை நாளே 
      வாழுமட்டும் மகிழ்வோடு மணம்பரப்பும்  !
ஆசையுடன் வாழ்கின்ற இற்றை நாளே 
     அகத்தினிலே இன்பத்தை நிறைத்துச் செல்லும் !!

இல்லாருக் கில்லையென்று சொல்லா வண்ணம் 
     ஈவதுவும் இனியதென்று நன்கு ணர்வோம் !
நல்லமனத் துடன்தர்மம் செய்யும் போது
     நமக்குள்ளே இன்பவெள்ளம் ஊற்றெ டுக்கும் !
சொல்லுகின்ற வார்த்தைகளில் தயையி ருந்தால் 
     சுகமான இனிமையினை எங்கும் மீட்டும் !
பல்லுயிர்கள் மீதுகொண்ட கருணை யாலே 
      பன்மடங்காய் இன்பமழை நம்மில் பெய்யும் !!

பெண்மைதரும் இன்பத்தைப் போல விங்கு
     பிறவெதுவுந் தந்திடுமோ சந்தே கந்தான் !
மண்ணுலகில் இனிதான தாய்மைப் பேற்றை
     வரமாகப் பெற்றதுவும் பெண்மை யன்றோ ?
நுண்ணறிவால் பெருமின்பம் இனிக்கும் தேனாய் 
     நுகர்கின்ற ஞானந்தான் விரியும் வானாய் !
கண்ணுக்குப் புலப்படாத ஒன்றைக் கூடக்
     கடைந்துணரும் தெள்ளறிவும் இனிமை தானே !!

குவலயத்தில் தாய்மடியில் பிறப்பெ டுத்துக் 
      குடும்பத்தில் நல்லுறவாய்க் கழித்த லின்பம் !
உவகையுடன் புவிவாழ்வை நிறைவு செய்தே 
     உயர்ஞான வீடுபேற்றை அடைத லின்பம் !
இவையெல்லாம் உருவாக மூல மான 
     இறையொன்றே மிகவினிதென்(று)  உணர்வாய் நெஞ்சே !!

இறையினிதே இறையினிதே என்று பாடி 
      இனிதாக கவியரங்கை நிறைவு செய்வோம் !
மறைபோற்றும் இறையவனைத் தூய அன்பால்
      மனமுருகி வணங்கிநிதம் நன்றி சொல்வோம் !
குறையேது மில்லாமல் இறையே காக்கும் 
     குன்றாத இன்பத்தை வழங்கும் நாளும் !
உறைந்திருக்கும் உள்ளமெனும் கோயில் தன்னில் 
     உணர்ந்திடிலோ பேரின்பம் பெற்றிட  லாமே !!