Thursday, May 28, 2015

குலை நடுங்க வைக்குமோ ???



வெயிலும் வருத்த விருட்சத்தி லேறி
ஒயிலாய் எடுத்திடும் ஓய்வோ?- துயிலும் 
நிலையோ? அரிமாக்கள் நேர்த்திக் கடனோ ?
குலைநடுங்க வைக்குமோக் கூறு .

வளைக்கை வரையும் வரம் ....!!!



ரதியோ? அதிரூப ராணியோ? விண்ணின் 
மதியோ? மருண்டிடும் மானோ?- பதித்த
சிலையோ? அழகின் சிலிர்ப்பிவளோ? கோலக் 
கலையோ? மயங்கினேன் கண்டு .

இதழின் சிரிப்போ இதயம் உருக்கும் 
அதரச் சிவப்போ இழுக்கும் -வதனம் 
களையாய் ஒளிரும், கவினுறக் கோலம்  
வளைக்கை வரையும்  வரம் 

Monday, May 25, 2015

வான் மழையே ....வா மழையே ....!!!



சொட்டிச் சொட்டி நனைத்த வான்மழையே -உன்னை 
எட்டி எட்டிப் பிடிப்பேன் வாமழையே !
கட்டிக் கட்டிப் பனியாய் நீவிழுந்தால் -நானும் 
தட்டித் தட்டி மகிழ்வேன் தேன்மழையே !

வெட்டி வந்த மின்னல் இடியுடனே - நீயும் 
கொட்டி யுள்ளம் கொள்ளை கொண்டாயே !
குட்டிப் பெண்ணென் நெஞ்சம் நிறைந்தாயே - நானும் 
சுட்டித் தனம்செய் வேன்நீ வந்தாலே !

விட்டில் வந்தால் பொழிவாய் என்றறிந்தேன் -நானும் 
கட்டில் மேலே அமர்ந்து காத்திருந்தேன் 
கொட்டில் நின்ற பசுவும் பார்க்கிறதே - என்றன் 
தட்டில் சோறும் ஆறிப் போகிறதே ! 

விட்டி டாமல் பெய்வாய் நிலத்தினிலே -அசல் 
வட்டி யோடு சேர்த்தே வழங்கிடுவாய் 
திட்டி னாலும் பயந்து நிற்காதே - நீயும் 
பெட்டிப் பாம்பாய்ச் சுருண்டு அடங்காதே !

பட்டுப் புற்கள் மேலே முட்டாதே -இளம் 
மொட்டு பூக்கும் போதில் குட்டாதே
சிட்டுப் போலச் சிரித்துச் சிந்திவிடு- நல்ல
மெட்டுப் போட்டுப்  பாடி வந்துவிடு ....!!!

மாலை மனைவி மழலை ....!!

மலர்மாலை மாற்றி மனைவியாய் ஆனாள் 
மலர்மஞ்சம் தன்னில் மணந்தாள் ! - மலர்போல்
அழகின் அசைவால் அகமும் மலர்ந்தாள்
மழலை வரவால் மகிழ்ந்து .

Sunday, May 24, 2015

புத்தக மூட்டையின் புலம்பல் ....!!!

ஏற்றிவிட்ட ஏடென்னை ஏறெடுத்தும் பாராமல் 
சீற்றமுடன் சீண்டாமல் செல்கின்றீர்- தேற்றிட 
யாருமின்றி மூட்டைக்குள் ஏங்கிக் கிடக்கின்றேன் 
கோருகிறேன் என்துயர் கொல் . 

உண்ணும்போ தும்நீர் உறங்கிடும் போதிலும் 
நண்பன்போல் என்னை நடத்தினீர் - கண்ணிமைப்போல் 
காத்திட்டீர், இப்போதென் கைங்கர்யம் வேண்டாமோ 
ஆத்தாடி! என்னே,நும் அன்பு . 

கணினிமய மானப்பின் கட்டிவிட்டீர் மூட்டை 
திணித்ததுடன் விற்றிடவும் திட்டம் - மணியாய் 
இணையமுடன் கைகுலுக்கி இன்பமுடன் சென்றீர் 
துணைவருவேன் என்றும் தொடர்ந்து .

புத்தக மூட்டையென்ன  பூமிக்குப் பாரமோ 
சத்தமின் றிச்சொல்வீர் சான்றோரே - உத்தமராய் 
ஆக்கிய தற்கிதுவே அன்பளிப்போ? துக்கமும்   
ஏக்கமும் வாட்டுதே இன்று ! 

Saturday, May 23, 2015

எந்தையே ....!!!


உதிரத்தால் தந்தாய் உயிரெனக்கு !வாழ்த்தி 
எதிலும் முதன்மையுறச் செய்தாய் -சதியோ 
விதிமுடிய கூற்றழைக்க விண்ணகம் போனாய் 
கதிகலங்கி நிற்கின்றேன் காண். 

உச்சியிலே முத்தமிட்டு உள்ளமதி லன்பொழுக 
கச்சிதமாய் வாழ்வில் கரைசேர்த்தாய் -நிச்சயமாய் 
என்வயிற்றில் தாயாய், பிறவியொன்று வாய்க்குமெனில் 
உன்னைச் சுமப்பேன் உயிர்த்து !

பூக்களோடு ஒரு கைகுலுக்கல் ....!!



ஆகாயப்பூக்களே தரையிறங்கி வாருங்கள் 
வானத்து வீதியிலே உம்மை 
வாங்குவார் இல்லையோ ....?? 

மேகப்பஞ்சை நூலாய் திரித்து 
நட்சத்திரங்களை சரமாய்த் தொடுத்து 
நிறைமதிப் பெண்ணும் 
சூடலையா ?? 

வைகறைவேளையில் செங்கதிரோனும் 
கரங்கள்நீட்டி சரமதைவாங்கி 
முழுமதி கழுத்தில் மாலை போடலையா ?? 

வாசமில்லா பூக்களே நீவிர் 
யாரையும் வசியம் செய்யலையா ?? 

மண்ணிற்கு வந்தால் 
மங்கையர் கொய்து 
பின்னல்சடையில் 
சூடிக்கொள்வார் ! 

வெள்ளிப் பூக்களை 
மாலையாக்கி 
கோயில்சிலைக்கும் 
போட்டிடுவார் ...! 

ஒளிரும் மாலையில் 
கடவுளும் கண்ணுக்கு 
ஜெகஜோதியாய் தரிசனம் 
தந்திடுவார் ...!! 

தரைக்கு வந்தால் 
தங்கக் குழந்தைகள் 
கைகளில் குலுக்கி 
ஆடிடுவார் ....!! 

சிறுவர்கள் பார்த்தால் 
ஸ்டிக்கர் போலுனை 
வேண்டிய இடத்தில் 
ஒட்டிக்கொள்வார் !! 

கவிஞர் பாக்களில் 
மின்னிடும் பூக்களே 
புவிக்கு வரவழி 
தெரியலையா ?? 

அவசரப்பட்டு குதித்துவிடாதீர் ! 
ஆசையிருந்தால் மழைத்துளிகளிலே 
ஆளுக்கொருவராய் தொற்றிக்கொள்வீர் ! 
துளிகளும்மை பத்திரமாக 
தரையினில் இறக்கிவிட்டிடுமே ....! 

விண்ணின்பூக்களே !! 
மண்ணிற்கு வந்ததும் 
சந்தோஷமாக கைக்குலுக்கலாம் ....!! 

யாருமில்லாத் தீவில் நான் .....!!!



தரங்கம் சூழ் தீவினிலே 
தனியாக நான் மட்டும் ...... 
தனிமை இனிமை சேர்க்குமா 
தவிப் பெனக்குள் பிறக்குமா ...?? 

நீலவான்மேற் பார்வையிலே 
நீலக்கடலில் அலையாடும் 
மேலெழும்பிக் கீழிறங்கி 
மேனிநனைத்து விளையாடும் ...!! 

ஆர்ப்பரித்து வந்தாலும் 
அருகில்வர அடங்கிவிடும் 
கரையோரம் பாதம்நனைத்து 
நுரைமுத்தம் தந்துசெல்லும் ....!! 

சுழன்றடிக்கும் கடற்காற்றும் 
சுகமாக வருடிவிடும் 
சொக்கிவிட்ட என்மனமும் 
சொர்க்கமாய் அதைநினைக்கும் .....!! 

மணற்திட்டின் மேலேறி 
நாற்புரம்விழி சுழற்றினேன் 
அற்புதத்தீவின் அழகினிலே 
என்னைநான் மறந்திட்டேன் ...!! 

முகந்துடைக்க வானத்து 
முகிற்துண்டை எடுத்திடவே 
முயற்சித்து கையுயர்த்தி 
முடியாது விட்டுவிட்டேன் ....!! 

தொடுவானம் தொலைவில்கண்டேன் 
தொட்டுவிட ஆர்வங்கொண்டேன் 
நெய்தல்நிலத் தெய்வத்தை 
நெடுவழிக்குத் துணைக்கழைத்தேன் ....!! 

பகலவனும் மேல்திசையில் 
பையபைய கடலுள்சென்றான் 
மெல்லமெல்ல வெளிச்சம்மங்கி 
இருள்சூழத் தொடங்கியதே ....!! 

அலைகடலின் பேரிரைச்சல் 
அடர்வனத்தின் அமானுஷ்யம் 
அடிவயிற்றைப் பிரட்டியதே 
அச்சம் என்னுள் உறைந்ததே ....!! 

இயற்கைரசித்த விழியிரண்டும் 
இருள்கண்டு மருண்டதுவே 
இதயத்துடிப்பு படபடவென 
இருமடங்காய் எகிறியதே ...!! 

யாருமில்லா தீவில்நான் 
யாசித்தேன் கடவுளிடம் 
கனவில்கூட தனிமையிலே 
கணநேரம் இருக்கவிடாதே ....!!!

பாலகனே உயர்வாயடா ....!!!



ஆறிரண்டு மாதங்களில் 
அழகாக வளர்ந்திட்டாய் 
அன்னைமுகம் கண்டதுமே 
அன்பாய்நீ புன்னகைப்பாய் ,,,,!! 

தாமரைத்தண்டு காலெடுத்து 
தத்தித்தத்தி நடைபயில்வாய் 
தடுமாறி விழும்போது 
தாய்பிடிக்கச் சிரித்திடுவாய் ....!! 

ஆராரோ நான்பாட 
அதைக்கேட்டு ரசித்திருப்பாய் 
அன்னைமடி சொர்க்கமென 
அமைதியாய்க் கண்துயில்வாய் ....!! 

விழிகளிலே பட்டதெல்லாம் 
விரல்சுட்டிக் கேட்டிடுவாய் 
வாங்கியுனக்குத் தந்தவுடன் 
வேண்டாமென மறுத்திடுவாய் ....!! 

கையில்கிடைத்த பொருளெல்லாம் 
வீசிவெளியே எறிந்திடுவாய் 
வேகமாகப் பிடிக்கவந்தால் 
விழுந்தடித்து ஓடிடுவாய் ....!! 

அச்சுவெல்லக் கட்டிபோல் 
அம்மாவென அழைக்கையிலே 
அண்டமே சுற்றுதடா 
அன்னையுள்ளம் சிலிர்க்குதடா ...!! 

எச்சில்முத்தம் நீதரவே 
என்மனமும் இனிக்குதடா 
எட்டிநெஞ்சில் உதைத்தாலும் 
எனக்கதுவும் இன்பமடா ....!! 

முத்துப்பல் எட்டிப்பார்த்து 
முல்லைப்பூவாய் சிரிக்குதடா 
முலைகடிக்க வலித்தாலும் 
முழுமனதாய் பொறுத்தேனடா ....!! 

பாலைபோல் வறண்டநெஞ்சில் 
பாலூறி வழியுதடா 
பிள்ளையுந்தன் வரவாலே 
பிறவிப்பயன் பெற்றேனடா ....!! 

கன்னக்குழி நகையழகில் 
கரைந்தமனம் தொலைந்ததடா 
கனவில்நீ இதழ்விரிக்க 
கமலமுகம் மலர்ந்ததடா .....!! 

பாதம்பட்ட இடமெல்லாம் 
பாரிசாதம் பூத்ததடா 
பாலகனேநற் பேறுபெற்று 
பாரினில்நீ உயர்வாயடா ....!!

வண்ணச் சிட்டு



வானவில்லாய்ப் பூத்தாளோ வண்ணத்தால் ஈர்த்தாளோ
கானமழைச் சிந்திடும் கற்பகமோ - மேனகையாய் 
மோகனப் புன்னகையில் மீட்பாளோ, உள்ளத்தில் 
சோகமும் ஓடிடும் தோற்று !

அழகு மரம் ....!!



மண்நோக்கும் பச்சிலையும் மஞ்சுளமாய் நாணிட 
விண்பார்க்கும் வெண்பூக்கள் வீரமாய் !- கண்கொள்ளாக் 
காட்சியிது நம்மைக் கவர்ந்திடும் காந்தமாய் 
மாட்சிமை மிக்க மரம் !

அன்னமே நீ சம்மதிச்சா ....!!!


                   



 அத்தமவளே அன்னக்கிளி 
அத்தானென்னப் புடிக்கலையா 
அன்பாசுத்தி வந்தாலும் 
அதட்டிதெனம் வெரட்டுறியே ! 

அட்டக்கருப்பா இருந்தாலும் 
அம்சமாதான நானிருக்கேன் 
அறிவெனக்கு மட்டுன்னாலும் 
அழகிலென்ன கொறச்சல்கண்ட ! 

அரிவாமீச புடிக்கலையா 
அளவுகொஞ்சம் கொறச்சுக்குறேன் 
அக்குள்வாடப் புடிக்கலையா 
அரப்புதேச்சி குளிச்சிவாறேன் ! 

அடுப்பூதப் பழகித்தாறேன் 
அரிசிச்சோறு ஆக்கித்தாறேன் 
அயரமீனு வாங்கிவாறேன் 
அரிஞ்சிக்கொழம்பும் வச்சிதாறேன் ! 

அந்தமூணு நாளுவந்தா 
அக்கறையாப் பாத்துக்குவேன் 
அலுப்பாநீ இருந்தாக்கா 
அமுக்கிடுவேன் காலுகைய ! 

அந்திசாயும் நேரத்துலே 
அல்வாமல்லி வாங்கிவாறேன் 
அசடுன்னு நெனச்சியென்ன 
அசட்டநீ செய்யாதே ! 

அடிக்கரும்பா இனிக்குறியே 
அடிவானமா செவக்குறியே 
அடிக்கடிமுகம் வெட்டுறியே 
அப்பளமாமனச நொறுக்குறியே ! 

அர்த்தசாமக் கனவில்வந்து 
அன்னாடம் படுத்துறியே 
அற்பமாயென்ன எண்ணாத 
அரவணச்சி வச்சிக்குவேன் ! 

அய்யனாரு கோயிலில 
அலகுபோட நேந்துக்கிட்டேன் 
அன்னமேநீ சம்மதிச்சா 
அடுத்தநிமிஷம் கட்டிக்குவேன் ....!!!

Tuesday, May 19, 2015

இசைக்குறள் ....!!




இன்பத்துள் இன்பம் இசையின்பம் அவ்வின்பம் 
இன்பத்துள் எல்லாந் தலை . 

சங்கீதம் யார்யார்வாய்க் கேட்பினும் அக்கீதம் 
இங்கிதம் தானே தெளிவு . 

சுருதியில்லாக்  கீதம் அழகோ ? அழகே 
சுருதிலயம் தப்பா இசை . 

சுரமேழுள் நல்லிசைய டங்கும் அதுவும் 
வரமாக வாணி அருள் . 

உருகும் இதயமும் நல்லிசைக் கேட்க 
மருகும் செவியுள் நுழைந்து . 

தரங்கம் தவழும் அலைகளும் மீட்டும் 
அரங்கினில் இன்னிசைக் கேட்டு . 

பட்டும் நகைநட்டும் இல்லாத கச்சேரி 
எட்டுத் திசையிலு மில் . 

தப்பிய தாளமும் சேரா சுருதியும் 
தப்பே இசையில் உணர் . 

ருசிக்காது சாகித்ய மில்லா இசையும் 
ரசிக்க முறையுடன் கல் . 

இசையில் லயிப்பார் சிறப்பார் இலரே 
வசையினில் வீழ்வார் வெறுப்பு .

கிராமத்துக் காதல் !


கார் கூந்தல் காற்றிலாட 
கயல் விழியும் அசைந்தோட 
சின்ன இடை வளைந்தாட 
கை வளையும் கலகலக்க 
கால் கொலுசு ஒலியெழுப்ப 
வயலோர வரப்பு மேலே 
வண்ண மயில் பெண்ணொருத்தி 
ஒய்யார நடை பயில .... 

வெள்ளயில வேட்டி கட்டி 
தொடைதெரிய மடிச்சு கட்டி 
தோளச்சுற்றி துண்டு போர்த்தி 
முறுக்கு மீசை வச்சுக்கிட்டு 
கட்டழகு காளை அவன் 
வாய்க்காலில் நீந்தி ஆட 
வயலோர வழி தனிலே 
நேரெதிரே நடந்து வர ..... 

குறுக லான வரப்பினிலே 
வழிவிட்டு இவள் விலக 
காலிடரி வயலில் விழ 
காளையவன் கரம் நீட்ட 
கைபிடித்து எழுந்த பெண்ணும் 
நாணத்தால் சிவந்து நிற்க 
அவளழகை அள்ளிப் பருகி 
ஆனந்தம் அவன் அடைய ...... 

தவழ்ந்துவந்த தென்றல் காற்றும் 
சிலிர்த்தமனதில் சில்லென்று வீசி 
இதயம் தடவி வருடிவிட 
மரம் உதிர்த்த பூக்களுமே 
மங்களமாய் வாழ்த் துரைக்க 
மனங்க ளிரண்டும் ஒன்றாகி 
கண்கள் கலந்து உறவாட 
மலர்ந்தது கிராமத்து காதல் ......!!

சூரிய காந்தியே ....!!!



மஞ்சள் பூசி நீராடிய 
தமிழ் மகள் போல் 
நாணங்கொண்டு 
தலை சாய்த்து 
ஒயிலாக காற்றில் 
அங்குமிங்கும் ஆட .... 

ஆகாய சூரியனுக்கு 
அழகான உன் மேல் 
காதல் பூத்ததோ ...? 
அதனால் தான் 
ஆதவன் வரவுகாண 
முகம் மலர்ந்தாயோ .....? 

முழுக்க மலருமுன் 
முங்கி மதுவுண்டு 
மையலான பட்டாம்பூச்சிமேல் 
பொறாமை கொண்டதனால் 
மாலையில் பகலவனும் 
மறைந்து போயினனோ ....??

வசமாகா இதயம் உண்டோ ??



பவழ பர்வத மேனியை 
மரகத தருக்கள் மறைக்க ... 

நீல வான சாலையில் 
வைர சூரியன் உலவ .... 

கதிர் ஒளியில் காட்டருவி 
வைடூரியம் போல் மின்ன .... 

விருட்சம் விரித்த மலர்களும் 
கோமேதகமாய் பிரகாசிக்க .... 

புத்துணர்ச்சி பொங்கும் காலையிலே 
புஷ்பராகம் புள்ளினம் இசைக்க .... 

முத்துச் சிரிப்பினில் இயற்கையும் 
மாணிக்கமாய் மனம் மயக்க ..... 

நவரத்தினக் காட்சி கண்டு 
வசமாகா இதயம் உண்டோ ......???

செக்கச் சிவந்த ரோஜா ....!!!


செக்கச் சிவந்த ரோஜா 
சிங்கார ரோஜா 
செந்நிற இலையிடையே 
சிரிக்கும் அழகு ரோஜா ....!! 

இரத்தம் போல சிவந்ததேனோ 
இரகசியம் சொல்வாய் ? 
இயற்கை தந்த வரமே 
இதில் வியப்பென்ன என்றாய் ...!! 

காதல் சின்னம் நீயே என்ற 
கர்வமும் உண்டோ ...? 
கடவுள் தந்த பரிசேயென 
கருத்தும் சொன்னாய் ...!! 

சிந்தை மயங்க காளையவன் 
சிவந்த ரோசா உன்னை 
சிகை சூட்டி மகிழ்ந்திடவே 
சிலிர்த்தாள் பெண்ணே ....! 

அழியாத காதலுக்கு 
அர்த்தம் சொன்னாய் ...! 
அன்பான வாழ்க்கைக்கே 
அஸ்திவாரமானாய் ....!!

Monday, May 18, 2015

வசமாகும் வானம் ...!!



ஒற்றைக்கால் இல்லையென 
****ஒருநாளும் சோர்ந்ததில்லை 
அற்றைக்கிரை தேடுதற்கு 
****அதிகாலைக் கிளம்பிவிட்டேன் !
பெற்றமகன் துணையிருக்க 
****பெருமகிழ்வு கூடிடுதே 
விற்றிடுவேன் பலூனூதி
****விரட்டிடுவேன் வறுமைதனை !
உற்றதுணை யாயெனக்கு 
****உதவுமிரு ஊன்றுகோலே 
பற்றற்ற வாழ்க்கையிதே 
****பழக்கமாக ஆயிற்றே !
கற்காத காரணத்தால் 
****கவலையென்னை வாட்டுவதால் 
கற்பிப்பேன் பிள்ளைக்கு 
****கடமையது எந்தனுக்கு !
குற்றுயிராய்க் கிடந்தாலும் 
****குனிவுவர விடமாட்டேன் 
நற்பேரும் நானெடுப்பேன் 
****நன்மைகளும் செய்திடுவேன் !
சுற்றியுள்ள பசும்வயலும் 
****சுவர்க்கம்தான் எங்களுக்கு 
வற்றாத வரமாக
****வசமாகும் வானமுமே ….!!



இந்த வாரம் வல்லமையில் சிறந்த கவிஞர் என்ற பாராட்டு பெற்றுத் தந்த கவிதை 

Wednesday, May 13, 2015

குடும்பம் என்னும் குதூகலம் ....!!



உறவுகள் கூடி உயிராகப் பேண
சிறக்கும் குடும்பமும் சீராய் - அறமுடன்
பண்புகளும் பாசமும் பல்கிப் பெருகிடும்
வண்ணமுறச் செய்திடும் வாழ்வு .
அமைதியுந் தந்தே அரவணைக்கும் அன்பாய்
இமைபோலக் காக்கும் இதமாய் - சுமையாய்க்
கருதாமல் யாவரையுங் கண்ணின் மணிபோல்
கருதும் குடும்பம் கனிவு .
கூடிடும்கு தூகலம் கூட்டுக் குடும்பத்தில்
ஈடில்லா நற்பலன் ஈந்திடும் - நீடிக்கும்
ஆனந்தம் என்றென்றும், அல்லவை நீங்கிடும்
வானவரும் வாழ்த்தும் வரம் .



"கவிதைச்சங்கமத்தில் " இரண்டாமிடம் பிடித்த கவிதை 

Tuesday, May 12, 2015

பாசமுள்ள பாட்டிக்கு ...!! (படத்திற்கு ஒரு கவிதை )



காவிரி ஆற்றோரம் கைப்பிடித்துப் போட்டநடை 
பாவியென் நெஞ்சைப் படுத்திடுதே ! - ஓவியமாய்ச் 
செல்லும் நதியலையே! சீக்கிரமா யென்நிலைமை 
சொல்லிடுவாய் பாட்டியிடம் சோர்ந்து . 

அந்நாள் நினைவுகள் ஆர்ப்பரித்து வந்திடுதே 
எந்நாள் இனிக்காண்பேன் என்பாட்டி? - சிந்திட்டக் 
கண்ணீரும் காற்றினில் காய்ந்துலர்ந்துப் போயிற்றே 
மண்பிரிந்தாய் என்னை மறந்து . 

தாயாகித் தந்தையுமாய்த் தாங்கி வளர்த்தவளே 
மாயாவி போல்மறைந்த மாயமென்ன? ஓயாமல் 
பாடுபட்டப் பாசப் பறவையே எங்குனைத் 
தேடுவேன் பித்தந் தெளிந்து . 

மேற்கல்வி கற்றுநீ மேன்மையுற வேண்டுமெனப் 
போற்றி வழியனுப்பிப் போனாயே !- கூற்றுவனுக் 
கென்ன அவசரமோ கேளாமல் கூப்பிட்டான் 
என்செய்வேன் நீயின்றி யான் ? 

வாசிக்கத் தந்த வயலின் அழுகிறதே 
நேசித்த சொந்தமும் நீயென்றே! - ஆசிகள் 
வேண்டித் தவமிருப்பேன் விண்ணி லிருந்தாலும் 
தூண்போல் சுமப்பாய்த் தொடர்ந்து . 

வாட்டும் குளிரிலும் வாடா நினைவுகளால் 
பாட்டியுன் நற்பெருமைப் பாடிடுவேன் - சூட்டிடுவேன் 
வெண்பாப் புகழாரம் விண்ணெட்டக் கேட்டவுடன் 
வெண்ணிலவாய் வந்தென்னை வாழ்த்து !

சோம்பிக் கிடந்திடில் வெற்றி கிடக்கும் தொலைவினிலே !

ஓம்பும் உயர்ந்தோர் உரைத்திடும் நல்மொழி ஊக்கந்தரும் 
தேம்பல் விடுத்துநீ தேறிட தைரியம் சேர்ந்திடுமே 
சூம்பிக் குமைவதில் சோர்வு மிகுந்திடும் சுந்தரனே 
சோம்பிக் கிடந்திடில் வெற்றி கிடக்கும் தொலைவினிலே ! 


( இலந்தையார் தந்த ஈற்றடிக்கு எழுதிய கட்டளைக் கலித்துறை )-

உலக செவிலியர் தினம் ...!!



தன்னல மில்லா தகைமை யுடைத்தவர் 
உன்னதசே வையில் உயர்ந்திடுவார் - என்றும் 
செவிலியர் தொண்டே சிறப்பான தொன்றாம் 
புவிதனிலீ டுண்டோப் புகல்

சித்திரம் பேசுதடி ...!!


கிளைதனிலே பசுங்கிளிகள் மையலுடன் கதைபேச 
வளைந்துவரும் வெள்ளருவி ஓசையுடன் கவிபாட
மயிலோடு பிணைமானும் கரையோரம் ரசித்திருக்க 
ஒயிலாக அசைந்தாடும் செடிகொடியும் களித்திருக்க 

குளிர்வளியும் இடைவருட  குமரியவள் மெய்சிலிர்க்க 
வளைகொஞ்சும் கையாலே மன்னவனின் மார்தழுவ 
மஞ்சமவன் நெஞ்சமென மலர்க்கொடியாள் சாய்ந்திருக்க 
தஞ்சமென்று வந்தவளைத் தன்மையுடன் அவனணைக்க  

தென்றலது தாலாட்டில் பசுந்தளிரும் தலையாட்ட 
அன்றலர்ந்த மலர்போலே அணங்கவளின் முகமொளிர
இயற்கையுடன் இணைந்திட்ட காதலரின் மனமினிக்க 
மயங்கவைத்தக் காட்சியிலே சித்திரமும் பேசுதடி ...!!!

Monday, May 11, 2015

அழியாது ஆயுளுக்கும் ....!!



அலையாடும் கரையோரம் 
அழகான மணற்சிற்பம் 
அன்பிற்கடை யாளமாக  
அக்கறையாய்ச் செதுக்கிட்டேன்
அர்ப்பணிப்பேன் உனக்காக 
அன்பேநீ   திரும்பிப்பார்  !
அடிவானம் கருத்திருச்சு
அடைமழைக்கும் வாய்ப்பிருக்கு 
அலைகளெல்லாம் ஆர்ப்பரித்து 
அருகினிலே வருகிறது
அச்சமென்னுள்  தோன்றிடுது 
அழிந்திடுமோ சிற்பமென ….!
அதற்குள்நீ சீக்கிரமாய்  
அலைபேசிக் காமராவில் 
அடுக்கடுக்காய்ப் படம்பிடிப்பாய்  
அசலழிந்து போனாலும் 
அற்புதமாய்ப்  பதிந்தநகல் 
அழியாது ஆயுளுக்கும் …!!