Thursday, September 5, 2019

கவியரங்கம்


தமிழ் வாழ்த்து !!
**********************
முன்னவள் சுவையில் இனியவள் கன்னல் 
***
மொழியவள் இளமை யானவள் ! 
தன்னிக ரின்றித் தனித்துவ மாகத் 
***
தரணியை ஆளும் தன்மையள் ! 
நன்னய மிக்க இலக்கண வளமும் 
***
நல்லிலக் கியங்கள் கொண்டவள் ! 
தென்னவன் மன்றில் வளர்ந்தவள் புவியில் 
***
செம்மொழி யாகச் சிறந்தவள் !! 

இயலுடன் இசையும் நாடக மென்றே 
***
இயல்பினில் மூன்றா யானவள் ! 
உயிரொடு மெய்யும் உயிர்மெயு மாகி 
***
ஓரெழுத் தாய்த மானவள் ! 
துயருறும் போது சுகம்பெற தமிழே 
***
துடைத்திடும் கையாய் நீள்பவள் ! 
தயவுடன் விரும்பும் அன்னியர் தமக்கும் 
***
தமிழமிழ் தம்போல் சுவைப்பவள் !! 

கல்லையும் கனியச் செய்பவள் தம்மைக் 
***
கற்பவ ருள்ளம் நிறைபவள் ! 
வெல்லமாய் நாவில் இனிப்பவள் என்றும் 
***
வெற்றிகள் ஈட்டித் தருபவள் ! 
நல்லறம் காட்டி மிளிர்பவள் வாழ்வில் 
***
நைந்திடா வண்ணம் காப்பவள் ! 
வல்லவள் ழகரச் சிறப்பவள் எங்கும் 
***
மணப்பவள் வாழி வாழியே !! 

அவை வாழ்த்து ...!!
*************************
கட்செவிக் குழுக்கள் பற்பல வற்றுள் 
***கலைகளை மதித்திடும் குழுமம் !
நட்புக ளுடனே நகமொடு சதையாய் 
***நனியழ காய்நடை போடும் !
எட்டிடும் உச்சம்  படைப்புக ளாலே 
***ஈட்டிடும் நற்பெயர் எங்கும் !
மட்டிலா மகிழ்வில் வாழ்த்துகள் கூறி 
***மாண்பினைப் போற்றிடு வோமே !

தலைவனாய் சு.ரவி .குழுதனை நடத்தும் 
***தகைமையை மெச்சிடும் வையம் !
கலைமகள் வடிவைக் கருணையின் உருவைக்
***கலங்கரை விளக்கெனப் போற்றும் !
கலைநயம் கொஞ்சும் சிலையெழில் கண்டால் 
***கைவிரல் தூரிகை யாகும் !
புலமையை மதித்துப் புகழ்பெற வாழ்த்திப் 
***போற்றிவ ணங்கிடு வோமே !!

இனியது கேட்கின் ...!!!
*******************************
இணையவழிக் கவியரங்கில் கலந்து கொண்டே 
     இனியவற்றை எடுத்தியம்ப பலரும் ஒன்றாய் 
இணைந்திருக்கும் எழிற்கோலம் இங்கே கண்டால் 
      இதயத்தில் பூஞ்சாரல் இனிதாய்த் தூவும் !
தணியாத கவியார்வத் தோடே இன்று 
       தண்டமிழில் கவிபொழிய வந்தோர்க் கெல்லாம் 
வணக்கத்தைப் பணிவாக அவைமுன் வைத்து 
     வாழ்த்திவர வேற்பதிலே உவகை கொள்வேன் !

மனத்திற்குள் நிறைந்திருக்கும் இனிய ஒன்றை 
     மகிழ்வுடனே அதுஎதுவென எடுத்துச் சொல்வீர் !
தனக்குநிக ரில்லாத இறையோ இன்றோ 
      தயையினிதோ இசையினிதோ தர்மந் தானோ 
வனப்பான இயற்கையோஏ காந்தம் தானோ ?
     வாசிக்கும் நூலினிதோ ஞானம் தானோ 
அனைத்திற்கும் மேலான வீடு பேறோ
      அன்பில்பெண் மையினிதோ பாட வாரீர் !!

முதலாவதாக .....கவிபாட வருகிறார் 

1. கவிஞர் சுந்தர ராஜன் ( இறை இனிது )
********************************
மந்திரச் சொற்கள் மனந்தனை யீர்க்க 
    வரிசையில் அழகுடன் நிற்கும் !
சந்தமும் துள்ளி நாட்டிய மாடும் 
    சரவெடி முழக்கமும் நடத்தும் !
சுந்தர ராச! நின்கவிப் பொழிவில் 
    சுகம்சுகம் என்றுளம் திளைக்கும் !
அந்தமிழ் அவையில் இறையினி தென்றே
     அனுபவித் தேகவி தொடுப்பாய் !!

நன்றி !
*********
உருவாக அருவாக உளனாக இலனாக
      உள்ளத்தி லேவாழ்பவன்!
உயிராக மெய்யாக உறவாக நட்பாக 
     உணர்வினி(ல்) உறைகின்றவன் !

கருணையே வடிவாக வளமையாய் எழுதிடும் 
      கவிதையில் கருவானவன் !
கடலிலே அலைகளாய்க் காற்றிலே ஆடிடும்
      கதிரிலே மணியானவன் !

மரமாக வளியாக மலரோடு மணமாக 
      மழையாக நிறைவானவன் !
மனதார வேண்டுவோர் வேண்டுதல் நிறைவேற்ற 
     வரமருட் புரிவானவன் !

இரவோடு பகலாக இருளிலே ஒளியான
     இறைபுகழ் பறைசாற்றினாய் !
இறையவன் பெருமையே இனியதென்(று)  உரைத்தனை 
     இனியனே சுந்தர்வாழி !!


2. கவிஞர் ரவி கல்யாணராமன்  ( இசை இனிது )
******************************************
நற்கவி கண்டால் நயஞ்சுட்டிப் பாராட்டும் 
அற்புதப் பாவலர் ! அன்னைத் தமிழினில் 
கற்பனைக் கெட்டாக் கவின்கவி நெய்பவர் !
பற்பல வண்ணத்தில் பாட்டிசைக்கும் வித்தகர் !
வெற்றிக ளீட்டிடும் மேன்மைமிகு நாவலர் !
பொற்புடன் பாரதியைப் போற்றிப் பணிபவர் !
வற்றா நதியாய் வளங்கூட்டும் வள்ளலே !
இற்றைக்குப் பாட இனிதே வருகவே !!
     
      ( இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா )

நன்றி !
*********
வாணியிடம் விண்ணப்பம் செய்கின்ற பக்தன் 
      வார்த்தைகளால் மாயவித்தை புரிகின்ற சித்தன் !
காணிநிலம் வேண்டுமென்ற பாரதியின் பித்தன் 
     கார்முகிலாய் இதமான கவிப்பொழிவில் சுத்தன் ! - உன்
தேனினிய அந்தாதி உருக்கியதே நெஞ்சம் - அந்த 
     தேவசுக மீட்டலிலே கலைமகளும் தஞ்சம் ! - நம்
மேனியெல்லாம் சிலிர்க்கவைக்கும் இனியஇசை தானே - அதை 
     வேண்டிநின்ற பிள்ளையுன்னை அரவணைப்பாள் தாயே !!

தென்றலாய்  இதயம் தொட்ட தேனிசைப் பாவலருக்கு
அன்பான நன்றி !


3. கவிஞர் விவேக் பாரதி ( இயற்கை இனிது )
**********************************
சந்தமுளச் செந்தமிழைச் சந்ததமும் ஆள்பவன்
     சங்கதிகள் கொஞ்சிவரும் இன்னிசையில் பூப்பவன் !
சிந்துமுதல் வண்ண(ம்)வரை செம்மையுற யாப்பவன் 
    சிம்மமென நன்னடையில் தன்னிறைவு கொள்பவன் !
இந்தநொடி சிந்தைதனில் விந்தைகளில் தோய்பவன் 
    இங்கியற்கை இன்பமென இன்சுவையைச் சேர்ப்பவன் !
வந்தினிய கொண்டலென மஞ்சுகவி பெய்பவன் 
     மன்றமிதில் பொங்கிவரு கங்கையெனப் பாய்கவே !! 

நன்றி !!
**********
இயற்கை கூட்டும் இனிமைகளை 
     இங்கே நயமாய் எடுத்துரைத்தாய் !
வியப்பின் உச்ச மாய்விளங்கும் 
      மேலாம் இயற்கை இனிதென்றாய் !
பெயலாய் உன்றன் கவிப்பொழிவால்
      பெருமை சேர்த்தாய் இவ்வரங்கில்!
மயங்க வைத்தாய் உன்பாட்டில் 
      மகனே! வாழ்த்தி மகிழ்வேனே !!

4. கவிஞர் நீரஜா  ( ஏகாந்தம் இனிது )
**********************
திருமாலின் மலர்ப்பதமே துணையென்று நம்பித்
     தேனமுதாய்த் தித்திக்கும் தமிழ்ப்பாக்கள் நெய்வார் !
குருவருளும் வழிகாட்டச் செய்தொழிலில் சிறந்து 
     குவலயத்தில் பொதுநலத்தை யும்பேண முனைவார் !
பெருமகிழ்வாய் நதிநீரை இணைக்கப்போ ராடும்  
     பெண்ணிவளின் உழைப்புக்கு வாழ்த்துகளைச் சொல்லி 
அருங்கவிதை ஏகாந்த மினிதென்று பாட 
     அன்போடு நீரஜாவை விரும்பியழைப் போமே !!

நன்றி !
*********
தனிமைமற்றும் ஏகாந்தத் தின்வேறு பாட்டைத் 
      தனித்தனியே எடுத்தழகாய்க் கவிதையிலே காட்டி 
இனியதென்றும் ஏகாந்தம் என்றிங்கு ணர்த்தி
      இறையவனின் வரமென்று தெளிவோடு ரைத்தாய் !
கனிந்துவிட்டால் ஏகாந்தம் மிகவினிய தென்று 
       கருத்துகளைப் பிறரறிய இம்மன்றில் வைத்தாய் !
மனம்நிறைந்து வாழ்த்துரைக்க முன்வந்தேன் இங்கே 
      மகிழ்வோடு நன்றிகளை ஏற்றுக்கொள் வாயே !!


5. சாந்தி மீனாட்சி ( மழலை இனிது )
************************
புன்னகை ததும்பும் பெண்ணிவள்  உள்ளம் 
     பொதுநலம் ஒன்றையே விழையும் !
துன்புகண் டுருகும் மென்மனம் கொண்டாள்
     தொண்டினில் தாய்மையே தெரியும் !
அன்புடன் வனையும் பாக்களில் இவள்தம்
     அந்தமிழ்ப் புலமையும் விளங்கும் !
இன்றினி தென்று மழலையைப் பாட 
     என்னருந் தங்கையே வருக !!


 நன்றி!
*********
வளர் பிறையை
வளர் விதையை
வசந்தத்தின் சிறுதேரை  
வரமான கவிதையை 
வடித்தாய் புதுக் கவிதையில் 

" உமிழ்கையில் அமிழ்தம் 
உதைக்கையில் மோக்ஷம் 
கையுள் வரும் சுவர்க்கம் 
கண்காணும் தெய்வதம் "

ஆஹா..! இதைவிட வேறு 
எப்படிச் சொல்ல?
மழலை இனிதே !!!
அழகிய கவிதை !

6. சீனி சுந்தர்ராஜன் ( புத்தகம் இனிது )
*****************************
சிந்தனைக் கோட்டத்தின் செம்மாந்த பாவலர் 
     சீர்மிகு வெண்பாவில் வித்தகராம் !
அந்தமிழ் ஆங்கிலம் யாவற்றி லும்பாடும்
      அற்புத ஆற்றல் படைத்தவராம் !!

கல்விக்கூ டங்களைக் கோயிலெ னப்போற்றிக்
     காணிக்கை யாய்ப்பொருள் ஈந்தவராம் !
வல்லமை மிக்கம ருத்துவ ராம்பாரில் 
     மாட்சிமை  மிக்கஆ லோசகராம் !!

வண்ணங்கள் கொஞ்சிடத் தீட்டிடும் சித்திரம் 
     மௌனமாய் உள்ளத்தை அள்ளிடுமே !
பண்பிற்சி றந்துவி ளங்கும ருத்துவர் 
      பாட்டினில் புத்தகம் பூரிக்குமே !!

நன்றி !
*********
முத்துமுத்தாய் இன்கருத்தை முன்னெடுத்து  வெண்பாட்டில் 
தித்திக்கத் தான்தந்த சீனியய்யா ! - புத்தகத்தின் 
நற்பயனை யிங்கு நயம்படத் தீட்டியநின் 
பொற்கைக்குச் சேரும் புகழ். 

7. கவிஞர் நதிநேசன் கணேஷ் நாராயணன் ( இன்று இனிது )
**********************************************************
சிங்கையில் வாழ்ந்திடினும் செந்தமிழைச் சீராட்டிக்
தெங்கிள நீராய்த் தெவிட்டாக் கவிதைகளை 
நன்றே வழங்கும் நதிநேச ! இன்றினி(து) 
என்றியம்ப வாராய் எழுந்து. 

நன்றி !
*********
அவ்வையன்று வேலனிடம் இனிய வற்றை 
     அழகான சொற்களினால் அடுக்கி னாற்போல் 
எவ்வெவற்றால் இன்றுஇனிய தென்று சொன்ன 
     இன்கவிதை இதயத்தை அள்ளிக் கொள்ள 
வெவ்வேறு காரணங்கள் இருந்தால் கூட 
     விளையுமின்பம் தான்பெற்ற அன்பால் என்றாய் !
எவ்வண்ணம் பாராட்டி சொல்வேன் நன்றி 
     இத்தருணம் இன்றினிதே உணர்ந்தேன் நன்றே !!


8. கவிஞர் சாய்ரேணு ( தர்மம் இனிது )
******************************
பாவையிவள் சொற்பொழிவில் பக்திமணம் மிகுந்திருக்கும் 
ஆவலுடன் கேட்கையிலே ஐம்புலனும் அடங்கிவிடும் 
பூவனத்துத் தென்றலென புதுசுகத்தைத் தவழவிடும் 
நாவிலுறைக் கலைமகளும் நல்லதமிழ்ச் சொற்கொடுக்கும் !!

பாவடித்துச் சோதரியைப் பாடவைத்தே உருகிநிற்கும்
தேவசுக மீட்டலிலே தெய்வீகம் நிறைந்திருக்கும் !
வாவென்று நானழைக்க வந்தினிதாய்ப் பொழிந்திடம்மா 
தாவென்று கேட்குமுன்னே சாய்ரேணு தாருமம்மா !!

நன்றி !
*********
இனியன யாவையும் பட்டிய லிட்டாய்
இனியது தர்மமே எனமுழங் கிட்டாய் 
இனிதினும் இனியதாம் அறவழி நின்றால் 
இனிவரும் நாள்களில் நலமிகும் என்றாய் !

அப்பப்பா என்றெனை வியந்திட வைத்தாய் 
செப்பிய நின்கவி நனிசிறப் பம்மா !
ஒப்பிலாத் திறமைகள் பெற்றவ ளுன்னை
எப்படி வாழ்த்துவேன் இக்கணம் நானே !


9. கவிஞர் சுதர்சனா ( தயை இனிது )
****************************
அரங்கன்மேல் அன்புவைத்த ஆண்டாளைப் போல 
     அருந்தமிழில் சொற்பொழிவு நிகழ்த்திடுவாள் அழகாய் !
வரம்பெற்று வந்தாற்போல் குழந்தைமுதல் இன்றும் 
     வைணவத்தில் இசையுரையை நடத்திடுவாள் இனிதாய் !
பெருமைமிக்க கோயில்நகர் கும்பகோணம் தந்த 
     பேறுபெற்ற பெண்ணிவளை மனதார வாழ்த்தி 
ஒருகவிதை தயையொன்றே இனிதென்று பாட 
     உள்ளன்போ டழைக்கின்றேன் பொன்மகளே வருக !!

சுதர்சனா வருக ! சுகமாய்க் கவிபொழிக !!

நன்றி !
*********
கருத்துகளை மணிமணியாய்க் கோத்துச் சேர்த்து 
     கவினழகுச் சரமாக்கிச் சூட்டி விட்டாய் !
விருத்தத்தில் அடுக்கடுக்காய் உன்றன் கூற்றை 
     விரிவாக இவ்வரங்கில் பதிய வைத்தாய் !
பொருத்தமான தலைப்பேற்றுச் சிறக்கச் செய்தாய்
     பொலிவாக தயையினிதே என்று பெய்தாய் !
சுருக்கமாகச் சொல்வதென்றால் அருமை தானே !
      சுதர்சனாவுன் கவிமழையில் நனைந்தேன் நானே !!

10. கவிஞர் ஷோபனா ரவி ( பெண்மை இனிது )
************************************
வண்ணங்கள் பலவுண்டு வடிவங்கள் பலகொண்டு
மணக்கின்ற வாழ்வின் வரமே !
ஒண்டமிழோ டுறவாடி ஒப்பற்ற பணிசெய்தே 
ஓங்குபுகழ் பெற்ற அணங்கே !
கண்ணனவன் மீதுகொண்ட தீராத காதலினால் 
கவியியற்றிப் பாடுங் குயிலே !
பெண்மையொன்றே இனியதென்று கவியரங்கை ஆளவந்து
பெருமையுடன் கவிதருகவே !!

நன்றி !!
*********
ஆணுள் இருக்கும் பெண்மை யுணர்ந்தே 
அவளாய்க் கவிசமைத்தாய் !
பேணி வளர்த்த அன்னை வைத்த 
பெயரில் பொருந்திநின்றாய் !
காணும் தோற்றம் ஆணா யிருந்தும் 
களித்தாய் பெண்ணாக !
ஆணுள் முகிழ்த்த பெண்மை இனிதே 
அழகாய்க் காட்டிவிட்டாய் !!

11. கவிஞர் சங்கர நாராயணன் ( ஞானம் இனிது )
*****************************************
சங்கீதத் தில்முறையாய்ப் பயிற்சி பெற்று 
     தானெழுதி இசைக்கூட்டி இனிதாய்ப் பாடி 
பொங்கிவரும் ஆனந்தப் பெருக்கால் செய்யும் 
     பூசைகளில் பக்திமணம் கமழ்ந்திருக்கும் !
செங்கரும்பின் இன்சுவையை மிஞ்சும் வண்ணம் 
     செந்தமிழில் ஞானமினி தென்று பாட 
சங்கரநா ராயணரே அழைத்தேன் உம்மை  
     தந்திடுக நற்கவிதை அவையின் முன்னே !!

தென்காசி சாரலே வருக ! ஐந்தருவியாய்ப் பொழிக !!

நன்றி !
*********
ஞான மென்றால் எதுவென் றுரைத்து
     ஞான மடையும் வழியைச் சொல்லி 
தேனாய்க் கருத்தைக் கவியில் கலந்து 
      தெவிட்டா வண்ணம் சுவைக்கக் கொடுத்து 
ஞான மினிதே என்ற தலைப்பில் 
     ஞயமாய்த் தெளிவாய் மழையாய்ப் பொழிந்த 
கானம் பாடி உம்மை வாழ்த்தி 
     கைகள் குவித்து நன்றி சொல்வேன் !!

12. கவிஞர் சுரேஷ் குமார் ( வீடு இனிது )
***********************************
மயிலையிலே பிறந்தவராம் மாலவனைத் துதிப்பவராம் 
உயர்வான நட்புகளை உயிராக மதிப்பவராம் !
வியக்குவண்ணம் இவ்வரங்கில் வீடொன்றே இனிதென்று 
தயக்கமின்றிப் பாடுதற்குத் தலைவணங்கி அழைக்கின்றேன் !!

ஐயா வருக ! அமுதைப் பொழிக !!


நன்றி !
*********
இறையுறைத் தலமா ? இல்லற நிலமா ?
குறைவற இன்பம் கொடுப்பவை யிரண்டும் 
என்றே சிறப்பாய் இனிதாம் வீட்டை 
நன்றாய் அலசி நயம்பட உரைத்தீர் !
அறத்துடன் ஈட்டிய பொருளே இன்பம் 
அறிந்திடில் வீடுபே(று) அதனினும் இனிதெனச் 
செம்மை யாகச் செப்பினீர் இங்கே 
உம்மை வணங்கி உள்ளம் மகிழ்ந்து 
நன்றி அன்புடன் நவில்வேன்
கன்னல் கவியே கைகள் குவித்தே !!



என் கவிதை !
******************
கொஞ்சுதமிழ்ச் சொல்லெடுத்துக் கோடியின்ப சுவைகூட்டி
நெஞ்சத்தைக் கொள்ளைகொண்ட நிறைவான கவியரங்கம் !

துள்ளிவந்த கவிதைகளால் சுகமான இனிமைகளை 
உள்ளமெனும் உயர்வனத்தில் உலவவிட்ட  எழிலரங்கம் !

பன்னிருவர் ஒன்றாகப் பைந்தமிழில் உறவாடி 
இன்பத்தைக் கொட்டிவிட்ட இணையவழிக் கவினரங்கம் !

தித்திக்கும் இனியவற்றைத் தெவிட்டாமல் அடுக்கடுக்காய் 
முத்தான கருத்துகளை முன்வைத்த சுவையரங்கம் !

இத்தருண மிதுகேட்டே எழிலார்ந்த தமிழன்னை 
புத்துணர்ச்சி யோடிங்கே புன்னகைத்து வந்திடுவாள் !!

தேனருவிக் கவிதைகளில் திளைத்திருந்த காரணத்தால் 
வானமகள் பூச்சொரிந்து வாழ்த்துரைக்கக் காத்திருப்பாள் !

இமயங்கள் சூழ்ந்திருக்க இக்குன்றை முன்னிறுத்தி 
இமைபனிக்கச் செய்திட்ட ஈடில்லா இவ்வரங்கில் 

என்கருத்தை முன்வைக்க இப்போது வருகின்றேன் 
அன்புடனே செவிமடுப்பீர்  அவையோரே ! சான்றோரே !!

இதயத்தை வசப்படுத்தும் ஆற்றல் கொண்ட 
      இன்னிசைக்கு மயங்காதார் எவரு முண்டோ ?
வதங்காமல் குளிர்விக்கும் தென்ற லாக 
     வருடிவிட்டே உயிர்நனைக்கும் இசைக்கீ டில்லை !
அதிகாலைச் சூரியனும் அந்தி வானும் 
     அலைகடலும் முழுமதியும் மலையும் ஆறும் 
இதமான இளங்காற்றும் பசுமைபூத்த 
     இயற்கையினை விரும்பாதோர் யாரு மில்லை !!

மழலையரின் குறும்புகளோ இனிக்கும் கண்டாய் 
     வந்துவிழும் வார்த்தைகளும் மணக்கும் செண்டாய்!
குழலோசை போலினிக்கும் மழலை கீதம்
     குழந்தைகளே என்றென்றும் வாழ்வின் வேதம் !
சுழலுகின்ற உலகத்தில் சுமைகள் வாட்டும் 
     சோர்வகற்ற தனிமையொன்றே இனிமை  கூட்டும் !
பழகிவிட்டால் ஏகாந்தம் பிடித்துப் போகும்!
     பக்குவத்தைப் பெற்றுவிட்டால் சொர்க்கம் அஃதே !

வாசிக்கும் பழக்கத்தை மேற்கொண் டாலே 
     மனமாசு தானகன்று வாழ்வி னிக்கும் !
நேசிக்கும் புத்தகங்கள் உடனி ருந்தால் 
     நிறைகுடமாய் விளங்கிடலாம் வையந் தன்னில் !
வாசமலர் ஆயுளெல்லாம்  ஒற்றை நாளே 
      வாழுமட்டும் மகிழ்வோடு மணம்பரப்பும்  !
ஆசையுடன் வாழ்கின்ற இற்றை நாளே 
     அகத்தினிலே இன்பத்தை நிறைத்துச் செல்லும் !!

இல்லாருக் கில்லையென்று சொல்லா வண்ணம் 
     ஈவதுவும் இனியதென்று நன்கு ணர்வோம் !
நல்லமனத் துடன்தர்மம் செய்யும் போது
     நமக்குள்ளே இன்பவெள்ளம் ஊற்றெ டுக்கும் !
சொல்லுகின்ற வார்த்தைகளில் தயையி ருந்தால் 
     சுகமான இனிமையினை எங்கும் மீட்டும் !
பல்லுயிர்கள் மீதுகொண்ட கருணை யாலே 
      பன்மடங்காய் இன்பமழை நம்மில் பெய்யும் !!

பெண்மைதரும் இன்பத்தைப் போல விங்கு
     பிறவெதுவுந் தந்திடுமோ சந்தே கந்தான் !
மண்ணுலகில் இனிதான தாய்மைப் பேற்றை
     வரமாகப் பெற்றதுவும் பெண்மை யன்றோ ?
நுண்ணறிவால் பெருமின்பம் இனிக்கும் தேனாய் 
     நுகர்கின்ற ஞானந்தான் விரியும் வானாய் !
கண்ணுக்குப் புலப்படாத ஒன்றைக் கூடக்
     கடைந்துணரும் தெள்ளறிவும் இனிமை தானே !!

குவலயத்தில் தாய்மடியில் பிறப்பெ டுத்துக் 
      குடும்பத்தில் நல்லுறவாய்க் கழித்த லின்பம் !
உவகையுடன் புவிவாழ்வை நிறைவு செய்தே 
     உயர்ஞான வீடுபேற்றை அடைத லின்பம் !
இவையெல்லாம் உருவாக மூல மான 
     இறையொன்றே மிகவினிதென்(று)  உணர்வாய் நெஞ்சே !!

இறையினிதே இறையினிதே என்று பாடி 
      இனிதாக கவியரங்கை நிறைவு செய்வோம் !
மறைபோற்றும் இறையவனைத் தூய அன்பால்
      மனமுருகி வணங்கிநிதம் நன்றி சொல்வோம் !
குறையேது மில்லாமல் இறையே காக்கும் 
     குன்றாத இன்பத்தை வழங்கும் நாளும் !
உறைந்திருக்கும் உள்ளமெனும் கோயில் தன்னில் 
     உணர்ந்திடிலோ பேரின்பம் பெற்றிட  லாமே !!