Monday, December 21, 2015

சுவடாய் நெஞ்சில் பதியுமோ ....??




கொட்டித் தீர்த்த மழையினால் 
***கொதித்துப் போன துள்ளமே ! 
கட்டு டைத்த ஏரியால் 
***கலங்கிப் போச்சு நகரமே ! 
திட்ட மில்லாச் செய்கையால் 
***தேடிக் கொண்டோம் அழிவையே 
பட்ட பின்னே புரிந்தது 
***பாடம் கற்றுக் கொடுத்தது ! 

ஏரி வழியை மறித்திடல் 
***ஏற்பு டைய செய்கையோ ? 
மாரி மீது பிழையிலை 
***மக்கள் செய்த குற்றமே ! 
நேரில் கண்டக் காட்சியோ 
***நெஞ்சை உலுக்கி விட்டது 
பேரி ழப்பைக் கண்டதும் 
***பேத லித்துப் போனது ! 

அரசின் மெத்தப் போக்கினால் 
***அழிவு அதிக மானதே ! 
வரவுக் கென்ன செய்வது 
***வாட்டம் மனதை அரித்ததே 
கரங்கள் நீட்டும் உதவியால் 
***கண்கள் பனித்து வடிந்ததே ! 
மரத்துப் போன நிலையிலும் 
***மனிதம் மண்ணில் பூத்ததே ! 

கட்டுக் கட்டாய் இருப்பினும் 
***காசு செல்ல வில்லையே ! 
கட்டுச் சாதம் வருமெனக் 
***காத்தி ருப்பும் கொடுமையே ! 
விட்டு வந்தப் பொருளெலாம் 
***வீணாய்ப் போன வேளையில் 
சுட்ட நினைவு ஆறுமோ 
***சுவடாய் நெஞ்சில் பதியுமோ ??

Friday, December 18, 2015

வண்ணமயில் கோல மழகு ....!!!




கோதையவள் போட்டதும் கோலமயி லாடிடும் 
பாதைவழி செல்வோரும் பார்த்திட - தாதையென 
கண்களையு மீர்த்திடும் காதலாய்ப் பேசிடும் 
வண்ணமயில் கோல மழகு .

கன்னக் குழிதனைக் கண்டு !




மானென்பே னாடும் மயிலென்பேன் நீந்திடும் 
மீனென்பேன் பார்வையோ மின்னலென்பேன்- தேனென்பேன்
தென்றல் வருடிடத் தெம்மாங்குப் பாட்டிசைப்பேன்
கன்னக் குழிதனைக் கண்டு .

Thursday, December 17, 2015

குறட்பா வித்தகம் !

பருவ வயதில் பளிங்கு முகத்தில் 
அரும்பு மழகாய்ப் பரு. 

கனிவாய்ப் பழகிடும் கன்னி யிதழின் 
இனிப்பினில் தோற்கும் கனி. 

குவிந்த அரும்பும் விரிந்திடக் கண்டு 
கவிதை யெழுதிக் குவி. 

கதிரின் வரவில் கமலம் மலரும் 
உதித்திடு நீயே கதி ! 

இனிமை ததும்பும் இளமை நினைவு 
கனிந்து வருமோ இனி ? 

குளிரும் நடுக்கக் குளத்தி லிறங்கிக் 
களிப்புற முங்கிக் குளி . 

எழுவாய் பயனிலை யாவு மழகாய் 
எழுதிப் பழக எழு . 

தொழுவத்தில் கட்டி யிருக்கும் பசுவை 
எழுந்ததும் கண்டுத் தொழு . 

படியேறிச் சென்று பகவானை வேண்டித் 
துடிப்புடன் பாடம் படி . 

கொடுமையைக் கண்டால் கொதித்துக் கிளர்ந்துக் 
கடுந்தண்ட ணையைக் கொடு . 

*************************************************************************** 
குறட்பா வித்தகம் : முதற்சொல் முடிவில் 
************************** 
[இந்த உத்தியில் முதற்சீரில் வரும் சொல் ஈற்றுச் சீர்களில் 
வேறு பொருளில் வரும்.]

மேகக்கன்னி !




பொன்னந்திப் பொழுதில் 
கதிரவனைக் கண்டதும் 
நாணத்தில் சிவந்து 
நளினமாய் நகருகிறாள் 
மேகக்கன்னி !

பூவையர் வாழ்வும் பூத்துக் குலுங்குமே !




முற்றமதில் சுழிக்கோலம் முறுவலித்துச் சிரித்திடுமே 
சிற்றெறும்போ அதையுண்டுத் திளைப்புடனே நகர்ந்திடுமே 
நற்றமிழி லிசைவெள்ளம் நயமுடனே ஒலித்திடுமே 
குற்றமிலா இறைபக்தி குலம்விளங்கச் செய்திடுமே ! 
மார்கழியில் , 
பாவை நோன்பை பக்தியாய் நோற்றுப் 
பாவையர் பாவைப் பாட 
பூவையர் வாழ்வும் பூத்துக் குலுங்குமே ! 


கலிப்பா நான்கு வகையாகும். அவை ஒத்தாழிசைக் கலிப்பா, கொச்சகக் கலிப்பா, கட்டளைக் கலிப்பா, வெண்கலிப்பா என்பன. 
இப்பாடல் கலிப்பாவின் வகையான "கொச்சகக் கலிப்பா " ஆகும். 
கொச்சகம் என்பது கொச்சை (சிறப்பிழந்த) என்று பொருள்படும். ஒத்தாழிசைக் கலிப்பாவின் உறுப்புகளுள் சில பெற்றும், கூடியும், மயங்கியும், பிறழ்ந்தும், உறழ்ந்தும் வருவதால் கொச்சகக் கலிப்பா எனப்பெற்றது. 
கொச்சகக் கலிப்பா ஐந்து வகைப்படும். அவை, 
தரவு கொச்சகக் கலிப்பா, தரவிணைக் கொச்சகக் கலிப்பா, சிஃற்றாழிசைக் கொச்சகக் கலிப்பா, பஃற்றாழிசைக் கலிப்பா, மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா. 
நாம் பயிற்சிக்கு எடுத்துக் கொண்டது "தரவு கொச்சகக் கலிப்பா " ஆகும். 
பொது இலக்கணம் 
************************ 
★ நான்கடி கொண்டதாய், 
★ நான்கடிகளும் ஒரே எதுகையைக் 
பெற்று, 
★ அடிதோறும் பொழிப்பு மோனை 
பெற்று, 
★ தரவோடு இணைந்த பொருள் 
கொண்ட "தனிச்சொல்" பெற்று, 
ஆசிரியச் சுரிதகத்தைப் பெற்று 
(வெண்பா சுரிதகமும் வரலாம். 
ஆனால் பயிற்சியில் ஆசிரியச் 
சுரிதகமே கொள்க) 
★கலித்தளையைப் பெற்று 
(காய்முன்நிரை) 
நேரீற்றுக் காய்ச்சீர் ஒன்றிரண்டு 
வரலாம். கலித்தளையான் 
வருவது துள்ளலோசையுடன் 
சிறக்கும். 
★ஆசிரியச் சுரிதகம் ஆசிரியப் 
பாவின் இலக்கணம் பெற்றும், 
வருவது "தரவு கொச்சகக் 
கலிப்பா " எனப்படும். 
குறிப்பு:- 
இவ்வகையைத் தற்காலத்தில் தனிச்சொல், சுரிதகம் இல்லாமலும் எழுதுகிறார்கள். கொச்சை என்பதே இதன் பெயர்க்காரணம் என்பதால் அவ்வாறு எழுதுவதும் தவறில்லை. 

(பைந்தமிழ்ச் சோலையில் பாவலர் மா . வரதராசன் அவர்கள் பயிற்சி அளித்தது .

முன்முடுகு வெண்பா !

கந்தனின் பொன்னுளங் கண்டதும் பொங்கிடும் 
சுந்தரன் மந்திரஞ் சொன்னதும் -சந்ததம் 
மங்களந் தந்திடும் மன்னவன் மென்பதம் 
தங்கிடும் நெஞ்சந் தணிந்து . 

சந்தன மங்கள சங்கரி சுந்தரி 
தந்தன தந்தன கொஞ்சிட - வந்திடு 
சிந்திய புன்னகை சிந்தைநி றைத்திடு 
தந்தியி னின்னிசை யே ! 

முன்முடுகு வெண்பா ! 
~~~~~~~~~~~~~~~~~~~~ 
வெற்றுப்ப யற்சொற்ற இற்றுச்சொ லுட்பட்டு 
முற்றுப்பெ றற்கெற்று மொத்தத்தி - லிற்றைக்கு 
நாட்டை இழந்து நலங்கெட்ட எந்தமிழர் 
மீட்சி யடைவர் மிளிர்ந்து. 

இஃது சற்றே கடினமான யாப்பு வகை. நேரிசை வெண்பா தான். ஆனால் முன்னிரண்டு அடிகள் ஒருவித விரைவு நடையுடன் இலங்குகின்றன. இந்த விரைவு நடைக்கு "முடுகு " எனப்பெயர். முடுகு என்றால் விரைவு எனப்பொருள். இப்பாடல் முன்னிரண்டு அடிகளில் "தத்தத்த" என்ற சந்தத்துடன் முடுகி நடப்பதால் இது "முன்முடுகு வெண்பா " ஆகும். 
இசைப்பாக்களான சிந்துப்பாடல்கள் பலவும் முடுகியலைக் கொண்டு திகழும். 
முடுகியல் சந்தங் கொண்டு நடப்பதால் அவற்றை நாம் தேமா, புளிமா போன்ற வாய்ப்பாடுகளால் அளவிட முடியாது. மாத்திரை வேறுபட்டுச் சந்தம் தப்பி ஒலிக்கும். எனவே, முடுகியலைச் சந்த இலக்கணப்படியே வரையறை செய்தல் வேண்டும். 
சந்த இலக்கணம் 
★(இதைத் தனியாகக் குறித்து வைத்துக் கொள்ளவும்) 
குறில், ஒற்று - 2 மாத்திரை 
நெடில், ஒற்று - 2 மாத்திரை 
நெடில் - 2 மாத்திரை 
குறில் - 1 மாத்திரை 
சுருங்கக் கூறின், குறிலுக்கு ஒரு மாத்திரை, மற்றவற்றிற்கு இரண்டு மாத்திரை. 
இருகுறில் இணைந்து வரும்போதும் அதைத் தனித்தனியாகவே குறிக்க வேண்டும். இருகுறில் அடுத்து ஒற்று வரின் முதல் குறிலைத் தனியாகவும், அடுத்த குறில் ஒற்றைத் தனியாகவும் அலகிட வேண்டும். 
அனைத்திற்கும் சான்றுகள். 
கண் 
கால் 
பா 
இவை இரண்டு மாத்திரை. 
ப - இது ஒருமாத்திரை. 
இருகுறிலொற்றுக்குச் சான்று. 
எமன். இதை எ /மன் எனப் பிரிக்க வேண்டும். 
சந்த வாய்ப்பாடு 
****************** 
தத்த, தாத்த, தந்த, தாந்த, தன, தான, தன்ன, தய்ய இவை எட்டும் அடிப்படையானவை. 
இவற்றின் இறுதி நீட்டங்கள் சார்புச் சந்தங்கள் எனப்படும். தத்தா, தாத்தா என்பது போல். 
இவற்றுடன் இணையும் அரைச்சந்தங்கள், 
த்,ந்,,ன,த,னா,தா,னத்,தத்,னாத்,தாத்,னந்,தந்,னாந்,தாந், என்பனவாகும். 
இவை ஒன்றுடனோ, பலவற்றுடனோ கூடிச் சந்தம் இசைக்கும். 
சான்றாக, மேற்கண்ட பாடலில், 
தத் என்ற அரைச்சந்தம், தத்த என்பதுடன் கூடித் "தத்தத்த " என்று இசைக்கிறது. 
இவ்வாறு கோடிக்கணக்கான சந்தங்களை உருவாக்கலாம். 
இவ்வாய்ப்பாட்டை இசையாசிரியர் "தத்தகாரம் " என்பர். 
வண்ணப் பாடல்களுக்கும், சந்தப் பாடல்களுக்கும் அடிப்படை இந்தச் சந்தங்களே என்பதால், 
இந்த இலக்கணத்தைக் குறித்து வைத்துக் கொள்ளவும். இனிவரும் பயிற்சிகளுக்கு உதவும். 
★முக்கிய குறிப்பு★ 
முடுகு என்பது வண்ணப் பாடலைப் போல் மாறாச் சந்தத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்பதால் 
சந்த வாய்ப்பாட்டில் கொடுக்கப்படும் ஒற்று எந்த இனத்தைச் சார்ந்ததோ அதே இனவொற்றெழுத்தே தத்தகாரத்தில் பயின்றுவர வேண்டும். 
தத்த என்பது வாய்ப்பாடு எனில் பாடலில், குறில்,வல்லொற்று, குறில் என்று வரவேண்டும். 
சான்று பாடலில், 
தத்தத்த என்பது வாய்ப்பாடு என்பதால், குறில்,வல்லொற்று,குறில்,வல்லொற்று.குறில் என்று அனைத்து ஒற்றுகளும் வல்லொற்றுகளே வந்துள்ளதைக் கவனிக்கவும். 
தந்தந்த என வாய்ப்பாட்டைக் கொண்டால், ஒற்றுகள் மெல்லொற்றுகளாக இருக்க வேண்டும். 
வல்லினம் மிகுமிடங்களால் மிகா இடங்களால் சந்தம் மாறாமல் வரும்படி எழுத வேண்டும். 
நெற்றிக்கு பொட்டிட்டு என எழுதினால், நெற்றிக்கு"ப்" என தத்தத்தத் சந்தமாகிவிடும். 
குற்றியலுகரப் புணர்ச்சியையும் பார்க்க வேண்டும். 
பாட்டுக்கு ஏட்டிக்கு என்றால், பாட்டுக் கேட்டிக்கு என்று சந்தம் மாறும். 
★ 
நண்பர்களே! புரிகிறதா? உங்கள் ஐயங்களை இப்பதிவின் கருத்துப் பகுதியிலேயே கேளுங்கள். பயிற்சிப் பாடலையும் அதிலேயே எழுதுங்கள். 
*பின்னிரண்டு அடிகளில் முடுகியல் வருவது "பின்முடுகு" என்றும், பா முழுதும் முடுகி வருவது "முற்று முடுகு " என்றும் அழைக்கப்பெறும். ஈற்றுச்சீரில் சிறு நுட்பம் மட்டும் உண்டு. 

( இது பைந்தமிழ்ச் சோலையில் பாவலர் மா . வரதராசன் அவர்கள் பயிற்றுவித்தது )

மீண்டும் மீண்டும் !

தோண்டத் தோண்டப் பாறைக் கடியில் 
***சுவையாய்த் தண்ணீர்ப் பெருக்கெடுக்கும் ! 
தாண்டத் தாண்டத் தோல்வி கூட 
***தானும் தோற்றே யோடிவிடும் ! 
வேண்ட வேண்ட இறைவ னருளால் 
***மீளாத் துயரும் விலகிவிடும் ! 
மீண்டும் மீண்டும் முயற்சி செய்தால் 
***வெற்றி வுந்தன் வசமாகும் ...!!!

அரும்புகள் !!



பையைத் தோளில் சுமந்திடும் 
***பள்ளிச் செல்லும் அரும்புகள் ! 
கையை யாட்டி நடந்திடும் 
***கட்டிச் சுட்டி எறும்புகள் ! 
சைகை யாலே பாவனை 
***சாலச் செய்யும் குறும்புகள் ! 
வைகை யோர நாணலாய் 
***வளைந்துக் கொடுக்கும் கரும்புகள் ! 

சோக முற்ற வேளையில் 
***சோர்வு நீக்கும் ஔடதம் ! 
தேகம் தளரும் போதிலே 
***தேற்று விக்கும் யௌவனம் ! 
நோக வைக்க அறிந்திடா 
***நுட்ப மான சௌந்தரம் ! 
வேகம் நிறைந்த வாழ்விலே 
***வெற்றி கூட்டும் மந்திரம் ! 

மழலைப் பேச்சில் மயக்கிடும் 
***மனத்தில் மகிழ்ச்சி நிறைத்திடும் ! 
பழகப் பழக இனித்திடும் 
***பாலும் கூடப் புளித்திடும் ! 
அழகில் முல்லை தோற்றிடும் 
***அகத்தில் சிலிர்ப்புத் தோன்றிடும் ! 
குழவி யுள்ள வீட்டிலே 
***குடும்ப உறவும் சொர்க்கமே !

மழைக்கு ஒரு விண்ணப்பம் ....!!!




மழையே ! 
இன்னும் நீ பெய்தழிப்பாய் என்று 
இங்கும் அங்கும் 
தகவல்களின் உலா 
வானிலை அறிவிப்பு முதல் 
வாட்ஸ்-அப் வரை ! 

உன்னால் விளைந்த 
பாதிப்புகளால் 
உனக்கே அழுகை 
முட்டிக்கொண்டு வருகிறதோ ? 

கருணை வள்ளலே 
கண்ணீர் சிந்திவிடாதே ! 
அடக்கிக்கொண்டு 
வானவீதியில் நடமாடு ! 
அழைக்கும் போது மட்டும் வா ! 

உன்னை .... 
கண்டிக்கவில்லை 
கனிவாய்தான் சொல்கிறோம் .... 
நாங்கள் எங்களை 
ஆயத்தப்படுத்திக் கொள்ள 
அவகாசம் கொடு !

Saturday, December 12, 2015

பொங்கிவரு மின்பம் பொலிந்து !



மங்கையவள்  கைகள் மகரயாழ் மீட்டிட 
செங்கனிவாய்ப் புன்னகை சிந்திட -அங்கமும்  
தங்கமென மின்னிடத் தையலவள் பாடுகையில் 
பொங்கிவரு மின்பம் பொலிந்து .

அவள் ....!!!




தலைவிதியை நொந்தபடி தலையணையில் முகம்புதையாள் !
மலையளவு துயர்வரினும் மங்கையவள் மதிமயங்காள் !
அலைதவழும் ஆழியைப்போல் அடங்காத நினைவுகளை 
உறைபனியின் திடமாக உள்ளத்தில் எதிர்கொண்டாள் !!

கடவுளின் ஆதங்கம் ....!!

மனிதா !

நீ .....இயற்கையை சிதைத்தாய் !
நீர்நிலை வழியை அபகரித்தாய் !
தண்ணீர் தாங்கிடும் மேனியில் 
அலங்கார அடுக்ககங்களும்
ஆடம்பர வீடுகளும் எழுப்பினாய் !

ஆற்றின் அபயக்குரலும் கேட்கவில்லை 
அபாய அறிவிப்பும் எட்டவில்லை!
கண்ணீருடன் அவை எங்குசெல்லும் ?

நிறைந்ததும் போவதெங்கே ?...தவித்தது 
பாதை தேடியே ஓடியது 
தடந்தெரியாது கண்டவழியெங்கும் 
புகுந்தோடியது !

நியாயம் கேட்டு இல்லக்கதவைத் தட்டியதோ ?
சீற்றங்கொண்டு சிங்காரச் சென்னையை 
சீரழித்ததோ ?

மனிதா ...!
உன் பிழையைத் தட்டிக் கேட்காமல் 
வாய்மூடி மௌனியாய் கற்சிலையாய் 
அமர்ந்ததால் தானோ ....

பாய்ந்து வந்த வெள்ளம் 
ஆலயப்பிரவேசம் செய்ததோ ?
ஆசாரமுடன் புனிதநீரால் அபிஷேகம் நடந்த எனக்கு 
முழுவீச்சாய் முழுநேர நீராட்டு நடந்ததே !

சந்தனத்தில் மணந்த என்னை 
சாக்கடை நீரில் நாறவிட்டது யார்பிழையோ ?
இனியேனும் .....
அதனதன் பாதையை அவற்றிற்கே விட்டிடுவீர் !
அவரவர் தேவையை அல்லலின்றி பெற்றிடுவீர் !

  

Thursday, December 10, 2015

அரவணைப்பாயா ...??



தலையில் குடமேந்தித் தள்ளாடி  நின்றால்   
அலையடிக்கு முள்ளத்தில், அன்பே !-சிலையாய்க் 
குழலிசையில் மெய்மறந்து கொஞ்சியழைப் பாயா ? 
அழகே! அரவணைப்பா யா ?

Wednesday, December 9, 2015

போதும் அடங்கு !



போதுமட்டும் பெய்துவிட்டுப் போய்விடுவா யென்றிருந்தோம் 
ஏதுகுறை வைத்தோம் இயம்பிடுவாய் !- காதுனக்குக் 
கேட்காதோ? வான்மழையே! கெஞ்சுகிறோம் ஆடிய 
ஆட்டமும் போதும் அடங்கு .

Thursday, November 26, 2015

மரத்தின் புன்னகை ....!!!


மழைக் காற்றில்
குலுங்கிக் குதித்துக் 
குத்தாட்டம் போட்ட மரங்கள் 
குளித்து முடித்து 
சுத்தமாய் தலை உலர்ந்த 
பூரிப்பில் ....
அமைதியாய் அழகாய் 
அசைந்தாடின 
பச்சை இலைகளில் 
புன்னகை சுமந்தபடி !

Sunday, November 15, 2015

வான் மழையே ....!!!




ஏன்வந்தா யென்றுனை ஏச முடியவில்லை 
தேன்மாரி யென்றுந் திளைக்கவில்லை - வான்மழையே ! 
கொட்டியது போதும் குமுறாதே, சீற்றத்தை 
விட்டுவிட்டுச் செல்கவுன் வீடு .

நின் புகழ் வாழுமே நீடு !

தன்னல மில்லாத் தகைமையிற் சீலரே
தன்னடக் கத்தின் தலைமகனே ! - அன்புடன்
தன்னம்பிக் கையூட்டிச் சாதிக்கச் செய்தவரே
நின்புகழ் வாழுமே நீடு !
வல்லரசாய்த் தாய்நாட்டை மாற்ற வழிகாட்டி
நல்லறி வூட்டிய நாயக !- செல்லுமிட
மெல்லாம்நீ மாணவரு ளேற்றிய ஞானவொளி
வெல்லு முலகில் மிளிர்ந்து .
கண்ணியத் தோடு கடமைக ளாற்றியே
மண்ணில்நற் பேரெடுத்த வல்லவரே !- உண்மையில்
எண்ணிவியக் கின்றோம் எளிமையின் உச்சமே
விண்சென்றா யெம்மையழ விட்டு .
இன்முக வித்தகர் ஏவுகணை நாயகர்
அன்பில் கலாமும் அதிசயமே ! - அன்னார்
கனவைமெய்ப் பிக்க கனவுகள் கண்டே
நனவாக்கு வோமின்றே நாம் .
வித்தை விதைத்தீர் விருட்ச மெனவளர்வோம்
முத்தாய் ஒளிர்வோம் முதன்மையாய் - நித்தமும்
சத்திய மாய்முயன்று சாதிப்போம்! எண்ணத்தில்
உத்தம!நீ யெம்மை உயர்த்து .
தூய்மையின் சின்னமாய்ச் சோர்வின்றித் தன்பணியில்
வாய்மையே கொள்கையாய் வாழ்ந்தவ ! - மாய்ந்தவுனைத்
தாய்மடி போலவே தன்னுள்ளே தாங்கிட
பேய்க்கரும்புப் பெற்றதோ பேறு ?

       ( துபாய் தமிழர் சங்கமம் நடத்திய உலகளாவிய கவிதைப் போட்டி -2015 - ல்
         முதல் சுற்றில் தேர்வானக் கவிதை )

Thursday, November 12, 2015

காதல் பேசும் கடுதாசி .....!!!




விழிகள் பேசாக் கதைகளையும் 
***விளக்கிப் பேசும் கடுதாசி !
பொழியும் அன்பில் உருகவைக்கும் 
***புதிதாய் நிதமும் உணரவைக்கும் !
பிழிந்தே உணர்வை வெளிப்படுத்தும் 
***பிரிவைக் கூடத் தாங்கவைக்கும் !
அழியாக் காதல் சுமந்துவரும் 
***அருமைத் தோழன் கடுதாசி ...!! 

Wednesday, November 11, 2015

காணாமற் போனாயோ ...???



கொட்டியது வான்மழை, கோடுகளாய் மின்னலும் 
வெட்டியது, விண்ணிலிடி வேட்டுவைக்க - கட்டியே
போட்டதுபோல் காணாமற் போனாயோ வெண்ணிலவே 
பூட்டியதா ரென்றே புகல். 



பூட்டிய தாரெனப் பொன்நிலவே நீசொல்வாய் 
வாட்டி வதைத்திடுவேன் வார்த்தைகளால் ! - மீட்டுவந்து 
மீண்டு முனைவான் வெளியி லுலவவிட்டு 
ஈண்டுக் களிப்பேன் இனிது .









































Saturday, November 7, 2015

கொம்பே துணை



தள்ளாடும் வேளையில் தாங்கிட யாருமில்லா 
உள்ளத்தின் வேதனை ஓயாதோ ?- பிள்ளை
யிதயமும் கல்லோ ? யிரும்போ? கைவிட்டார்க்  
குதவிடும் கொம்பே துணை .

Thursday, November 5, 2015

வரந்தரும் விநாயகா ....!! ( பாடல் )



பல்லவி 
````````````` 
மங்களம் பொங்கிட வரந்தரும் விநாயகா 
எங்களுக் கருளவே இக்கணம் வருகவே ! 

அனுபல்லவி 
~~~~~~~~~~~~ 
திங்களும் கங்கையும் சிரசினில் சூடிய 
சங்கரன் மைந்தனே சண்முகன் சோதரா ! 

சரணம் 
```````````` 
மோதகப் பிரியனே மூஷிக வாகனா 
பாதமும் பணிந்திட பரிவுடன் காத்திடு 
சோதனை போதுமெம் சுமைகளைத் தாங்கிடு 
வேதனை நீக்கிடு விக்கின விநாயகா ! 


( விளச்சீர்களால் அமைந்த பாடல் )

Wednesday, November 4, 2015

சேய்போல மகிழ்வுதரும் சொந்தமுண்டோ ?



தாய்ப்பாடுந் தாலாட்டில் சொக்கிப் போகும் 
***தாய்மடியே குழந்தைக்குத் தூளி யாகும் ! 
பாய்போட்டுப் படுத்தாலும் பக்கம் வந்து 
***பாசமுட னணைத்தபடி யுடனே தூங்கும் ! 
சாய்ந்தாடுந் தலையாட்டிப் பொம்மை கண்டால் 
***தானாடிக் கண்ணாடி முன்னே பார்க்கும் ! 
சேய்போல மகிழ்வுதரும் சொந்த முண்டோ ? 
***செகத்தோரே சொல்வீரே சரியா வென்றே ...!!!

அன்பினிலே கரைந்தேன் நானே !



சாபமெனப் பருப்புவிலை யேறிப் போக 
***சாம்பாரை மறந்திடத்தான் வேண்டு மென்றாள் ! 
கோபமுடன் தட்டோடு தூக்கி வீச 
***கூப்பாடு போட்டவளும் திட்டித் தீர்த்தாள் ! 
தீபமென ஒளிவீசும் வாழ்வில் சண்டை 
***தீராதோ எந்நாளும் தட்டுப் பாட்டால் ! 
தாபமுடன் அணைத்திடவே குளிர்ந்தாள் மெல்லத் 
***தாரத்தின் அன்பினிலே கரைந்தேன் நானே ! 




( எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ) 
காய் காய் மா தேமா 
காய் காய் மா தேமா

Tuesday, November 3, 2015

வசியமுடன் சிரித்திடுதே ....!!!




விண்மீன்கள் கண்சிமிட்டி மின்னிக் கொஞ்சி 
***விளையாடும் இரவினிலே நாளும் வானில் !
வெண்பூக்கள் அந்தியிலே அவிழ்க்கும் மொட்டால்
***மென்வாசம் பரவிடுமே தென்றல் காற்றில் !
மண்டூகம் குரலோங்கக் கத்துஞ் சத்தம் 
***மழையடித்து விட்டதுமே கேட்கும் காதில் !
வண்ணத்துப் பூச்சிக்கு  மதுவைத் தந்து 
***வசியமுடன் சிரித்திடுதே  வண்ணப் பூவே ....!!


       ( எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )

Wednesday, October 28, 2015

தயவுடன் திருந்திடச் செய்வாய் !! ( எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )



முப்புர மெரித்த சங்கரன் மகனே 
***முன்னவ நின்னடிப் பணிந்தேன் !
தப்பெது செயினும் தடுத்திட வருவாய்
***தயவுடன் திருந்திடச் செய்வாய் !
அப்பமும் வடையும் அவலொடு கடலை
***அன்புடன் படைத்திட மகிழ்வாய் !
ஒப்புமை யில்லா உச்சிதத் தேவே
***ஒற்றுமை ஓங்கிட வருளே !

Tuesday, October 27, 2015

தனிமையுணர்வை மாற்றினாள் ....!!



சன்ன லோர இருக்கையில் 
***சாய்ந்துக் கண்ணை மூடினாள்!
என்ன இந்த வாழ்வென
***எரிச்சல் கொண்டு வாடினாள்!

அன்புக் காட்டி மறுத்தவன் 
***அமைதி பறித்துப் போகவே 
சின்ன மனத்தில் வேதனை 
***சிறகு விரிக்க ஏங்கினாள்!

கன்னந் தழுவும் தென்றலால் 
***களைப்பு மெல்ல நீங்கினாள்!
புன்ன கையைத் தொலைத்தவள் 
***புதிதாய் மூச்சு வாங்கினாள்!

தன்கை என்று முதவிடும் 
***தவித்த நெஞ்சைத் தேற்றினாள்!
தன்னம் பிக்கைத் துணைவர
***தனிமை யுணர்வை மாற்றினாள்...!!!

Saturday, October 24, 2015

காதல் பாக்கள் வடிக்குது ....!!!



பட்டுக் கன்னம் தொட்டுத் தீண்டப் 
***பாச நெஞ்சம் துடிக்குது ! 
கட்டிப் போட்ட கையி னாலே 
***காதல் பாக்கள் வடிக்குது ! 
எட்டி நின்று பார்க்கும் கண்ணில் 
***ஏக்கம் மட்டும் தெரியுது ! 
விட்டுச் செல்ல வுள்ள மின்றி 
***வீட்டுக் குள்ளே மறையுதே !! 

(எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ) 
( தேமா தேமா தேமா தேமா 
தேமா தேமா விளம் )

வாழ்வும் சொர்க்க மாயிற்றே ....!!!



காஞ்சிப் பட்டுச் சேலை கட்டிக்  
***காதல் பார்வைப் பார்த்தாளே !
ஊஞ்ச லாடும் உள்ளந் தன்னை 
***ஊற்றாய்ப் பொங்க வைத்தாளே !
தீஞ்சொல் லாலே யீர்த்தா ளென்னை 
***தேனும் தோற்றுப் போயிற்றே !
வாஞ்சை யோடு கட்டிக் கொள்ள 
***வாழ்வும் சொர்க்க மாயிற்றே !

     ( எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )

Tuesday, October 20, 2015

நெஞ்சம் நெகிழும் ...!!! ( அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )

நீலமயில் வாகனனின் திருப்புகழைப் பாடிவந்தால் 
***நெகிழும் நெஞ்சம் !
மாலவனின் மருகனவன் மலர்த்தாளைப் பற்றிடிலோ 
***மயக்கம் தீரும் !
கோலவிழிக் குறமகளும் குறைதீர்க்க உடன்வருவாள் 
***கொழிக்கும் செல்வம் !
வேலவனின் அருள்கிட்ட மேதினியில் சிறப்புற்று 
***விளங்கும் வாழ்வே ! 

Thursday, October 15, 2015

மெல்லச் சென்று மறைந்ததே ....!!!



கொட்டுச் சத்தம் வானில் கேட்டுக் 
***கோலத் திங்கள் பயந்ததோ ?
எட்டிப் பார்த்து மின்னல் பூக்க 
***ஏத்திச் செவ்வாய் மலர்ந்ததோ ?
சொட்டு மாரி போட்ட தாலே 
***சொக்கி மேனி சிலிர்த்ததோ ?
விட்ட பின்னர் மீண்டும் தோன்ற 
***மெல்லச் சென்று மறைந்ததே ....!!!

     ( ஏழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )

Wednesday, October 14, 2015

நீங்கா திருப்பாய் நிறைந்து .....!!! ( அந்தாதி வெண்பாக்கள் )

கருணை விழியால் கனிவுடன் நோக்கி 
வருந்துயர் போக்குவாள் மாரி !- விரும்பி 
வணங்கு மடியவர் வாழ்வி னொளியாய்
இணங்கி யருள்வாள் இனிது . 

இனியவள் காட்டிடும் ஈடிலா அன்பில் 
பனித்திடும் கண்கள் பரிவாய் !- செனித்த 
பிறவியில் தாயவள் பேரருள் கிட்ட 
சிறந்திடும் வாழ்வும் தெளிந்து .

தெளிந்த அறிவுடன் தேவியை எண்ண
எளிதாய் வருவாள் இறங்கி ! - ஒளிரும் 
சுடரிலும் தோன்றியே சூலினி காப்பாள் 
இடர்வரின் சிட்டாய் எழுந்து .

எழுந்தோடி வந்தாய் எளியேனைக் காக்க 
தொழுதவென் துன்பம் தொலைத்தாய் ! - விழுதாகத் 
தாங்கினாய்த் தாயே! தயாபரியே! என்றென்றும் 
நீங்கா திருப்பாய் நிறைந்து .

Tuesday, October 13, 2015

வரமெனக் கொள்வோமே ....!!!

விளம்பர மில்லாப் பொருட்களும் பெரிதாய் 
***விற்பனை யாவதுண்டோ ? 
களம்பல கண்ட மன்னனும் போரில் 
***கடைசியில் தோற்பதுண்டோ ? 
குளத்திடை சேற்றில் பூப்பினும் கமலம் 
***கோயிலில் மறுப்பதுண்டோ ? 
வளமிகு பாக்கள் வழங்கிடும் எழுத்தை 
***வரமெனக் கொள்வோமே ! 


( அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ) 


( விளம் + மா +விளம் +மா 
விளம் + காய் )