Tuesday, June 23, 2015

வென்றாயெம் உள்ளம் ...!!!




கன்னத்தில் வைத்திட்ட கண்திருஷ்டிப் பொட்டுடன்
சின்னப்பெண் உந்தன் சிரிப்பும் கவர்ந்திழுக்க
மின்னும்வெண் பற்களும் வெட்டியெழில் கூட்டிட 
வென்றாயெம் முள்ளம் விழைந்து 

இணையத் தமிழே இனி ....!!



இணையத் தமிழே இனிய வரமாம் 
துணைவரும் என்றென்றும் துய்க்க - இணையிலாத் 
தன்மையால் தாயாய்த் தரணியை ஆண்டிடும் 
தொன்மைத் தமிழே தொடர்ந்து .

வியக்கும் வகைதனில் விஞ்ஞான ஞானம் 
உயர்த்தும் தொழில்நுட்பம் ஓம்பி - நயமாய் 
இதழ்கள் வெளியாகி ஏற்ற மளிக்கும் 
முதன்மையாய்த் தோன்றும் முனைந்து .

காலத்திற் கேற்ற களமாய் இணையமே 
ஞாலத்தில் நல்லறிவை நாட்டிடும் - நூலகமாய்ப் 
புத்தியைத் தீட்டிப் புதுமைகள் செய்விக்கும் 
சத்தாம் இணையத் தமிழ் . 

அழியா நிலையை அடைந்தேப் பொலிவாய்த் 
தழைக்கும் இணையத் தமிழே ! - மொழியிற்
சிறந்தே பவனிவரும் சீராய் உலகில் 
இறவாப் புகழினை ஏற்று .

கறையான் அரிக்காது; கள்வன் திருடான் 
நிறைவாய் வளரும் நிதமும்  - முறையாய்  
அணையாகக் காக்கும்; அறிவியல் பேசும்  
இணையத் தமிழே இனி .


            (ரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி -2015 ல் மூன்றாம் இடம் பெற்ற கவிதை இது )

Monday, June 22, 2015

மயங்கி மனம் குளிரும் ...!!!



பொதிகைத் தென்றல் தவழ்ந்து வந்து 
****பொருநை நதிசேரும் ! 
நதியி லாடும் அலைக ளெல்லாம் 
****நல்ல தமிழ்பாடும் ! 
சுதியும் கூட்டும் மீன்கள் கூட்டம் 
****சுற்றி விளையாடும் ! 
மதியும் அந்திப் பொழுதில் கண்டு 
****மயங்கி மனங்குளிரும் ...!!!

Sunday, June 21, 2015

கள்ளின் போதை தந்திடுமே ....!!



ஆற்று நீரில் துள்ளும் மீன்கள் 
****ஆளைக் கண்டால் ஓடிடுமே ! 
காற்று வீசப் பூக்கள் வாசம் 
****கள்ளின் போதை தந்திடுமே ! 
சீற்றம் கொண்ட மேகம் யுத்தம் 
****செய்யும் சத்தம் கேட்டிடுமே ! 
தோற்றுப் போன தாலே வானம் 
****தூறல் கண்ணீர் சிந்திடுமே ...!!! 

அழிப்போம் சீமைக் கருவேல மரத்தை !



சீமைக் கருவேலம் சீரழிக்கும் மண்வளத்தை 
தீமை விளைவிக்கும் தேவையின்றி - ஊமையாய் 
நின்றே உறிஞ்சும் நிலத்தடித் தண்ணீரை 
நன்றாய் துளிர்த்திடும் நஞ்சு . 

அடர்ந்து வளர்ந்திடும் ஆக்கிர மிக்கும் 
படர்ந்து செழித்துப் பரவும் - விடமாய் 
அமைந்த கொடுமுள்ளால் ஆபத்தும் நேரும் 
குமையும் மனமும் கொதித்து . 

உயிர்வளியை சொற்பமாய் உற்பத்திச் செய்யும் 
உயிரினங்கள் வாழ உதவா - பயிர்கள் 
விளையவிடா காட்டு விடத்தருவை நாமும் 
சளைக்காமல் வெட்டிடுவோம் சாய்த்து . 

மண்ணின் எதிரியை மண்ணைவிட்டேப் போக்கிட 
கண்மூடி வெட்டிக் களைந்திடுக - எண்ணிடவே 
அச்சம் விளைத்தே அபாயமளிக் கும்மரத்தை 
மிச்ச மிருக்காமல் வெட்டு .

வெட்கம் ஏனடியோ ....??



வெள்ளை ரோஜா புன்ன கைக்க 
****வெட்கம் ஏனடியோ ?
கிள்ளை கூண்டில் கொஞ்சும் பேச்சைக் 
****கேட்டுப் பாரடியோ !
கள்ள மில்லா பிள்ளை முத்தம் 
****கன்னல் தானடியோ !
உள்ளம் கொள்ளை கொள்ளு மிந்த
****உண்மை தேனடியோ !

Saturday, June 20, 2015

தனிமையுடன் நாளைத் தள்ளிடுவேன் அன்பே !!



பெண்ணுன்னைப் பார்த்தேன் 
****பிரமித்து நின்றேன் ! 
கண்பார்த்துப் பூத்தேன் 
****காதலிலே வீழ்ந்தேன் ! 
எண்ணற்றப் பாக்கள் 
****ஏக்கமுடன் யாத்தேன் ! 
வண்டாக உன்னை 
****வட்டமிட்டு வந்தேன் ! 

தென்றலெனத் தவழ்ந்தாய் 
****தெவிட்டாமல் இனித்தாய் ! 
பொன்னென்று நினைத்தேன் 
****புன்னகையால் கொன்றாய் ! 
மின்னலென ஒளிர்ந்தாய் 
****மின்வெட்டாய் மறைந்தாய் ! 
என்னென்று சொல்வேன் 
****ஏமாற்றம் தந்தாய் ! 

கனிந்திட்ட நெஞ்சம் 
****கசந்ததுவும் ஏனோ ? 
அனிச்சமலர் போலே 
****அகம்வாட லாமோ ? 
இனியென்றன் வாழ்வில் 
****இடம்பெண்ணுக் கில்லை ! 
தனிமையுடன் நாளை 
****தள்ளிடுவேன் அன்பே ...!!!

மெள்ளத் தவழும் விழித்து ...!!



நீலத் தரங்கத்தில் நீராடி மெல்லெழுந்து 
கோலக் கதிர்விரித்தான் கோகபந்து ! -ஓலமிட்டுத் 
துள்ளும் அலைகளும் தூக்கக் கலக்கத்தில் 
மெள்ளத் தவழும் விழித்து ! 

( கோகபந்து - சூரியன் )

Monday, June 15, 2015

மிதந்தாள் மங்கை ....!!



கயலாடும் ஆற்றினிலே நீந்திடவே மிகவிரும்பிக் 
கற்றாள் நீச்சல் 
பயத்தோடு பழகியவள் நாளாகப் பயம்விலகி
பாய்ந்தாள் ஆற்றில் 
சுயமாகப் பலவிதமாய் நீச்சலிலே சாதித்தாள்
சொந்த மண்ணில் 
வியந்தோரும் போற்றினரே விருதுகளும் தந்தனரே 
மிதந்தாள் மங்கை !

Sunday, June 14, 2015

படம் ஒன்று பா இரண்டு ....!!


மெல்ல எழுந்து விடு ....!! 
`````````````````````````````````````` 
வாசித்துப் பார்த்தாயோ வங்கியம் என்றெண்ணி 
மாசில்லா உள்ளமுடன் மந்தியே !- நேசித்த 
புல்லாங் குழலல்ல பூரித்து நீயிசைக்க 
மெல்ல எழுந்து விடு . 


குடிநீர் கொஞ்சம் கிடைக்காதோ ...?? 
````````````````````````````````````````````````````` 
குறிஞ்சி நிலமும் பாலையாச்சோ 
குடிக்கும் நீரும் வற்றிடுச்சோ 
குன்ற மெங்கும் காய்ந்திடுச்சோ 
குட்டைக் குளமும் வறண்டிடுச்சோ 
குதித்துத் தாவ மரமுமில்லை 
குடலின் பசிக்கு கனியுமில்லை 
குழாயு மிருந்தும் பயனுமில்லை 
குடிக்கத் தண்ணீர் வரவுமில்லை 
குரங்கின் தாகம் தீராதோ 
குடிநீர் கொஞ்சம் கிடைக்காதோ ….!!!

பறந்தோடும் துயரம் ....!!

அதிகாலைத் துயிலெழுந்து துடிப்புடனே செயல்பட்டால் 
அயர்வு நீங்கும் 
மதிசென்று கதிர்வரவில் இருள்விலகி உள்ளத்தின் 
மயக்கம் தீரும் 
கொதிக்கின்ற இதயத்தின் கொந்தளிப்பும் விலகிவிடும் 
கோபம் மாறும்  
துதிபாடி பக்தியுடன் வேண்டிடிலோ பறந்தோடும் 
துயரம் காண்பீர் !

Friday, June 12, 2015

நீயும் நானும் யாரோ அன்று !

நீயும் நானும் யாரோ இன்று 
***நினைவில் வாழக் கற்றது நன்று 
காயும் நிலவை ரசித்தோம் சேர்ந்து 
***கடமை அழைக்கச் சென்றோம் பிரிந்து ! 

இதயம் ஒன்றாய் இணைந்தோம் அன்று 
***இன்னல் தொலைத்தோம் காதலை வென்று 
உதய வாழ்வில் ஊமை யானோம் 
***உண்மை யன்பை மனதினுள் புதைத்தோம் ! 

சூழல் உணர்ந்து விலகி னாலும் 
***சுயமாய் ஏற்கப் பழகிக் கொண்டோம் 
வாழக் கற்றோம் அவரவர் வழியே 
***வரமாய்ப் பெற்ற குணத்தால் உயர்ந்தோம் ! 

சுமையைக் கூட சுகமாய் நினைத்தோம் 
***சுவர்க்கம் நரகம் மண்ணில் கண்டோம் 
அமைந்த வாழ்க்கை அமைதியாய் ஏற்றோம் 
***அழகாய் மழலை இருவரும் பெற்றோம் ! 

பிரிவும் நிம்மை வாட்டிட வில்லை 
***பிள்ளைச் செல்வமே இன்பத்தின் எல்லை 
புரியா தவர்க்குப் புதிராய்த் தோன்றும் 
***புரிந்த மனமோ புனிதம் அறியும் ! 

பாயில் படுத்தால் நினைவுகள் வாட்டும் 
***பக்தியே மருந்தாய்க் கவலையை ஓட்டும் 
நோயில் சுருண்டு முடியும் தருணம் 
***நோக்க ஒருமுறை அனுமதிப் பாயா ....?
?

வானிலாடும் பட்டம்



விட்ட பட்டம் வானிலே 
***வெட்டி வெட்டித் தள்ளுது 
வட்ட மிட்டுச் சுற்றுது
***வந்து கீழும் முட்டுது
கட்டு நூலும் போனது 
***காற்று வீச ஆடுது 
பட்டம் மீண்டும் கேட்டிடில் 
***பட்டுக் கன்னம் வீங்குமே !

Monday, June 8, 2015

அன்னமுன் நாணம் அழகு !



கண்ணனைக் கண்டதும் காதலில் பாடினையோ 
கண்ணிணை நோக்காமல் கையசைத்து - பெண்ணுனை
மன்னனும் கண்டதும் மையலில் வீழ்ந்திட்டான் 
அன்னமுன் நாணம் அழகு.  

Sunday, June 7, 2015

புள்ளே வாழ்க பல்லாண்டு !



வலசை போகும் பறவைக்கு
****வசிக்க வீடு கிடைக்கலையோ ?
அலகில் குச்சிக் கவ்விப்போய் 
****அழகாய்க் கூடு கட்டிடுவாய் !
பலமாய்க் காற்று அடித்தாலும் 
****பழுது நேரக் கூடாது !
நிலமும் நடுங்கும் அஞ்சாதே 
****நிலையும் மாறும் கலங்காதே !

இலக்கை அடைய வான்வழியே 
****இரவும் பகலும் பறந்தாயோ ?
சிலவர் கண்டால் ஒதுங்கிவிடு 
****சிறகை விரித்தே ஓடிவிடு !
நலமாய்த் திரும்பி வந்திடுவாய் 
****நடுக்கம் வேண்டாம் கவலைவிடு !
புலமும் பெயர்ந்துச் சென்றாலும் 
****புள்ளே! வாழ்க பல்லாண்டு !


காலத்தை வென்ற கவி



கற்பனைக் கெட்டாக் களஞ்சியமே கண்ணதாசா!
நற்கவி தந்திட்ட நாயகனே! - பெற்றோம் 
பெரும்பேறு, நின்றன் பிரவாகப் பாக்கள் 
திருவாய் வடித்திடும் தேன். 

முத்துக்கள் ஒவ்வொன்றும் முத்தையா நின்பாடல்
சொத்தாகும், வாசிப்போர் சோர்வகற்றும் - தித்திக்கும் 
தேன்பாக்கள் உள்ளத்தைத் தென்றலாய்த் தாலாட்டும் 
மேன்மையாய் ஓங்கும் மிளிர்ந்து. 

இளமை ததும்ப இதமாய் வருடும் 
வளமை வரிகளால் வாழும் - உளமும் 
குளிரும் உவகையுங் கொள்ளும், எழுத்தில் 
களிக்கும் இதயங் கனிந்து.

காலங் கடந்தாலும் காற்றில் கலந்தொலிக்கும்
ஞாலம் முழுதிலும் நாதமாய்! - கோலமாய் 
நெஞ்சில் பதிந்திடும் நீங்கா நினைவுகளாய் 
தஞ்ச மடையும் தகவு.

Wednesday, June 3, 2015

தந்திடுவான் வேண்டும் வரம் !




நந்தவனப் பூப்பறித்து நாரிலே கட்டியதை 
சுந்தரவி நாயகனின் தாளிலே சூட்டிடுவாய் 
கந்தனின்ச கோதரனும் காத்தருள் செய்திடுவான் 
தந்திடுவான் வேண்டும்  வரம்.