Wednesday, May 24, 2017

பாசத்தால் நனைத்தவளே ....!!!

அம்மாவுன் பாசத்திற்(கு) அளவுகோல் உலகிலில்லை 
விம்மியழும் நெஞ்சத்திற்(கு) ஆறுதல் வேறாருமில்லை !

பட்டம்நான் பெற்றுவிட்டால் பட்டதுயர் போகுமென்று 
பட்டணத்தில் படிக்கவைக்கப் பாரத்தைச் சுமந்தாயே !
கட்டியவன் போனாலும் கண்ணீரைத் துடைத்துவிட்டுத்
தட்டாமல் கேட்டவற்றைத் தயவுடனே  அளித்தாயே !    (அம்மாவுன் )

பத்துமாதம் சுமந்தவளே ! பாசத்தால் நனைத்தவளே !
உத்தமியே எனக்காக உருக்குலைந்து போனாயே !
சொத்துபத்து அத்தனையும் துடைத்தெடுத்து விற்றுவிட்டாய் 
எத்தனையோ அல்லலுற்றாய் எனக்காகப் பொறுத்தாயே !    ( அம்மாவுன் )

வேலையேதும் கிடைக்கவில்லை விதியைநொந்து பலனுமில்லை 
சோலைமலர் மணக்கவில்லை சோகமதை மாற்றவில்லை 
தாலாட்டி வளர்த்தவளைத் தவிக்கவிட எண்ணமில்லை 
பாலைவனம் போலவுள்ளம் பசுமையின்றித் துடிக்கிறதே !    ( அம்மாவுன் )

ஓயாமல் தேடுகிறேன் உழைப்பதையே வேண்டுகிறேன் 
நாயாகத் திரிக்கின்றேன் நல்லபணி கிட்டவில்லை 
தாயாரைக் காப்பாற்ற தனயனுக்குக் கடமையுண்டே
ஆயாசம் தானடைந்தேன் ஐயோநான் என்செய்வேன் ???      (அம்மாவுன் )

சியாமளா ராஜசேகர் 




Thursday, May 18, 2017

பாவலர் வரதராசன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து ....!!!



தன்னல மின்றித் தமிழ்ப்பணி யாற்றிடும் 
அன்பிற் கினியநல் லாசானே! - நன்றியுடன் 
நின்பிறந்த நாளினில் நெஞ்சார வாழ்த்துகிறோம் 
இன்பாவாம் வெண்பாவில் ஈண்டு .

பாவலரே தித்திக்கும் பைந்தமிழின் காவலரே 
ஆவலுடன் கற்பித்தாய் யாப்பெமக்கு! - சேவையினை 
மெச்சியுளம் பூத்தோம் மிளிர்வாய் தமிழுலகில் 
உச்சம் தொடுவாய் உயர்ந்து.

சோதனைவந் தாலும் துணிவோ(டு) எதிர்கொண்டு 
சாதனை யாக்கும் தமிழ்மகனே ! - பேதமின்றி 
பாவகைகள் பற்பலவும்  பாங்குட னூட்டிவிட்டாய் 
பூவலியம் வாழ்த்தும் புகழ்ந்து .

வரமாய்,யாம் பெற்ற வரதரா சா,நீ 
சிரத்தையுடன் கற்பித்தாய் சிந்து ! - மரபுமா
மன்னா! உதித்தநாளில் வாழ்த்தி அகமலர்வோம் 
என்றும் மகிழ்வாய் இனிது. 

தாயும் சேயும் ....!!!


திங்கள் பத்துச் சுமந்தவளின் 
***தியாகம் சொல்லில் அடங்கிடுமோ ?
மங்கை யவளின் அன்பிற்கு 
***மண்ணி லுண்டோ ஈடுயிணை ?
கங்கை போலும் வற்றாத 
***கருணை மனத்தைக் கொண்டிடுவாள் 
பொங்கு முவகைப் பெருக்கோடு   
***பொறுமை காப்பாள் இறுதிவரை !

குடலைப் புரட்டி எடுப்பதுபோல் 
 ***குமட்டிக் கொண்டு வந்தாலும் 
உடலும் வலியால் வதைத்தாலும் 
***உள்ளம் சோர்ந்தே போனாலும் 
இடரைச் சற்றும் கருதாமல் 
***இனிமை நினைவைச் சுமந்திடுவாள் 
தடவி வயிற்றைப் பிரியமுடன்  
***தாய்மை உணர்வால் பூரிப்பாள் !

பிஞ்சு காலால் கருவறைக்குள் 
***பிள்ளை எட்டி உதைத்தாலும் 
நெஞ்சம் குளிர்ந்து நெகிழ்ந்திடுவாள் 
***நித்த மதற்காய்த் தவமிருப்பாள் 
கொஞ்சு மொழியைக் கேட்டிடவே 
***குழந்தை முகத்தைப் பார்த்திடவே 
வஞ்சி யவளும் துடித்திருப்பாள் 
***வருகை கண்டே  உயிர்நனைவாள் !

உதிரப் பாலைப் புகட்டிடுவாள் 
***உணர்வி லொன்றிக் கலந்திடுவாள் 
எதிலும் தாய்மை யுணர்வோடு 
***இனிமை வாழ்வில் கூட்டிடுவாள் 
புதிராய் விளங்கும் பிள்ளையையும் 
***புத்தி புகட்டித் திருத்திடுவாள் 
துதிக்கும் தெய்வம் அவளாகத்
***துணையா யிருப்பாள் துணிவாக !

தாய்க்கும் சேய்க்கு முள்ளபந்தம் 
***தகைமை மிக்க உறவாகும் 
தேய்ந்து வளரும் பிறையல்ல  
***தேயாக் கதிர்போல் நிதமொளிரும்
ஓய்த லில்லாக் கடலலைபோல் 
***உரிமை யோடு தொடர்ந்துவரும் 
சாய்ந்து கொள்ள தாய்மடியே 
***சக்தி கொடுக்கும் வாழ்வினிலே !


சியாமளா ராஜசேகர் 


என்னை நீயும் மறந்ததேன் ....!!!



என்னை நீயும்  மறந்ததேன் 
விழிகள் அழுது சிவந்ததேன்
கண்ணை இமைகள் மறந்ததேன்
காரிருள் என்னைச் சூழ்ந்ததேன் ?

காற்றும் கனலாய்ச்  சுடுவதேன் 
கவலை நெஞ்சை அரிப்பதேன்
காதல் இதயம் கசிவதேன் 
கண்ணீர்க் குளமும் வறண்டதேன் ?

மௌனம் குடைந்து கொல்வதேன் 
மனமும் வலியால் மரத்ததேன்
மஞ்சம் நெருப்பை உமிழ்வதேன்  
மரண   வாயில் தெரிவதேன் 

புலன்கள் ஐந்தும் தவிப்பதேன் 
புரித லின்றிப் போனதேன் 
பொழிந்த பாசம் மறைந்ததேன் 
பொறுமை காக்க மறுத்ததேன் ?

அன்னை போல காத்தவன் 
அன்பை வாரித் தெளித்தவன் 
அணைத்து உயிரில் உறைந்தவன் 
அழவும் வைக்கத் துணிவனோ ?

இந்த நிலையும் மாறுமோ  
இருளும் விலகி யோடுமோ 
இறைவா உனையே நம்பினேன் 
இன்பம் மீட்டுத் தந்திடு !

சியாமளா ராஜசேகர் 

சந்திப்போமா நாம் சந்திப்போமா ...??


சாயுங்கால வேளையில சந்தக்கட வீதியில 
***சந்திப்போமா நாம் சந்திப்போமா ?
தேயும்நிலா வானிருக்க தேவதநீ பக்கம்வர 
***சிந்திப்போமா நாம் சிந்திப்போமா ?

ஊருசனம் பாக்குமுன்னே ஊதக்காத்து வீசயில 
***ஊஞ்சலிலே சேர்ந்து  விளையாடுவோமா ?
பேருபெற்ற கோயிலில பேச்சியம்மா  சன்னிதில 
***பேசிமணம்தான் முடிக்க வேண்டுவோமா ?

பஞ்சுமிட்டாய்ச் சீலகட்டி பையநீயும் கிட்டவர
***பட்டுக்கன்னம்  தொட்டு முத்தமிடுவோமா ?
அஞ்சுகமே ஒன்னஅள்ள அத்தான்மனம் கெஞ்சுதடி 
***அச்சம்விட்டு மெல்லக் கட்டியணைப்போமா ?

வட்டபொட்டு நெத்தியில வச்சிக்கிட்டு வாரவளே
***வச்சகண்ணால் செண்டாய் நீயும்பூத்தாயே !
சிட்டுப்போல ஒன்சிரிப்பில் சில்லுவண்டாய்ச் சுத்திவாரேன் 
***செல்லக்கிளி கொஞ்சி பேசவருவாயா ?

மஞ்சத்தாலி ஒன்கழுத்தில் மாமன்கட்டும் நேரத்துல 
***மைவிழியே ஓரக் கண்ணால்ரசிப்பாயா ?
மஞ்சத்துல வொன்னஅள்ளி மல்லிகப்பூ வாசத்துல 
***மையலுடன் கதை சொல்லிமுடிப்பேனே !

சியாமளா ராஜசேகர் 

நெஞ்சு விடு தூது ...!!!

#சிற்றிலக்கிய_வரிசை
********************************
தூது
******
நெஞ்சு விடு தூது 
***********************
விதியின் விளையாட்டால் விண்ணகம் சென்ற
பதியை விருப்பொடு பார்த்துக் - கதியினைச்
சொல்லிட நெஞ்சினைத் தூது விடுப்பேன்யான்
கல்லுறை சாமியே காப்பு .

நூல்
******
பொற்றாலி கட்டிப் புதுவசந்தம் காணவைத்தே
உற்றதுணை யாயிருந்தான் ஊர்மெச்சப் பேரெடுத்தான் !

கல்யாண பந்தத்தில் கைபிடித்த என்பதியின்
நல்லழகில் மெய்சிலிர்த்து நாணிநிற்கும் தேன்பூக்கள் !

சுந்தரனைக் கண்டவுடன் சொந்தமென வேகருதித்
தந்தநிற வான்மதியும் தாரகையும் கண்கொட்டும் !
மன்னவனின் கம்பீரம் மன்மதனும் கொண்டதில்லை
என்னவனின் பேரழகிற்(கு) ஈடுசொல்ல யாருமில்லை !
கேசம் சுருண்டுவந்து கீழ்நெற்றி தொட்டிருக்கும்
வாசம் விலகாத வார்த்தைகளில் தேன்சொட்டும் !
செக்கச் சிவந்தவன்; சிங்கநடை யாலென்னைச்
சொக்கிட வைத்திட்ட தூயவன்; மாயனுந்தான் !
முத்துப்பல் புன்னகையால் மொத்தமாய் உள்ளமள்ளும்
வித்தையினைக் கற்றவன் வேட்டிகட்டும் காளையவன் !
பண்பிற் சிறந்தவன் பாசமழை பெய்தவன்
கண்ணின் இமைபோல் கருணையுடன் காத்தவன் !
அன்பில் கரைத்தவன் ஆண்மைமிகு கட்டழகன்
இன்னாசெய் தாரையும் இன்சொலால் ஈர்த்தவன் !
தாய்மை யளித்தவன் தங்ககுணம் கொண்டவன்
வாய்மை தவறா மனத்தை யுடையவன் !
நேரிழை யென்நெஞ்சை நெய்திட்டான் நற்பண்பால்
வாரிதிபோல் வற்றாமல் வாழ்வில் கலந்தினித்தான் !
பால்போலும் வெள்ளையுளம்; பாசம் உயிர்நனைக்கும்;
ஆல்போலக் காத்தவன் ஆனாலும் இன்றில்லை !
பட்டமர மாக்கியதில் பங்கவனுக் கேதுமில்லை
தொட்டணைத்த தூயவனோ தோற்றுவிட்டான் கூற்றனிடம் !
*
வேர்போலத் தாங்கியவன் வேதனையில் தள்ளிவிட்டுப்
பார்விடுத்து வான்புகுந்தால் பாவைமன மென்செய்யும் ?
சோர்ந்துவிட்டேன் இவ்வாழ்வில் சோகத்தில் ஊன்மெலிந்தேன்
தீர்மானத் தோடே தெளிவினைத் தேடுகிறேன் !
நெஞ்சே அனைத்தையும் நீயறிவா யன்றோசொல்
வஞ்சியென் ஆற்றாமை வார்த்தைகளால் சொல்லிவர
உன்னையன்றி யாருமிலர் உண்மையிஃ தென்பதனால்
நின்னையே தூதனுப்ப நேயமுடன் நான்நினைத்தேன் !
மூவேழ் வருடம் முழுதாய் முடிந்ததுவே
காவேரி ஆறுபோல் காய்ந்தமனம் பொங்கிடவே
தூதாக நீயேசெல் ! துன்பம் துடைத்துவிடத்
தோதான நல்வழியைத் தொய்வின்றித் தான்சொல்வான் !
*
காலனன்று கொல்கையில் காவாமல் விட்டதனால்
மாலவனைத் தூதனுப்பும் வாய்ப்பேது மில்லையிங்கே !
தென்றலைத் தூதுவிட்டால் தேவசுகம் தந்ததென்றே
என்னவனும் எண்ணிவிட்டால் ஏமாற்றம் மிஞ்சிடுமே !
மேகத்தை விட்டாலும் மெய்யதுவும் பேசுமோ
சாகசமாய் விண்ணுலவி சைகைகாட்டிப் போகுமோ ?
பூங்குயிலும் கான்மயிலும் போயென் கணவனிடம்
தாங்காத் தவிப்பினைத் தைரியமாய்க் கூறுமோ ?
பாங்கியைத் தூதனுப்பப் பக்கத்தி லில்லையவன்
ஏங்கவைத்த எந்தலைவன் எட்டாத் தொலைவிலுள்ளான் !
ஆதலினால் என்நெஞ்சே ஐயமின்றி நின்னையே
தூதனுப்பப் போகின்றேன் தோழமையாய் நீயேசெல் !
எப்படியோ சென்றுநீ என்னவனைக் கண்டிடுவாய்
செப்பிடுவாய் என்நிலையை! சேரும்நாள் பார்க்கச்சொல் !
விட்டுவிட்டுச் சென்றபணி மேதினியில் அத்தனையும்
தொட்டுமுடித் திட்டாள் துணிவுடன் என்றேசொல் !
கேட்டுவந்து சொல்வாயேல் கேடழிந்தே இன்புறுவேன்
ஆட்டுவித்த துன்பம் அடங்கிவிட மெய்குளிர்வேன் !
*
நெஞ்சேநீ என்பதியின் நெஞ்சறிந்து நற்பதிலை
அஞ்சாது வாங்கிவந்தால் அன்பி லுருகிடுவேன் !
நெஞ்சே ! உனைநான் நெகிழ்ந்து வணங்கிடுவேன்
கஞ்சமலர்த் தூவிக் கண்ணீரால் நீராட்டிப்
பாமாலை சூட்டிப் பரவசத்தி லாடிடுவேன்
சீமா னிடம்கொண்டு சேர் .
சியாமளா ராஜசேகர்

அன்பே ....அன்பே ....!!!



உதிக்கும் கதிரின் அழகினைப்போல்
***உனக்குள் ஒளியாய்ப் பரவிடுவேன்
நதியின் கரையில் நாணலைப்போல்

***நளின மாக வருடிடுவேன்
புதிதாய்ப் பூத்த மலரினைப்போல்
***புனிதத் தோடு விளங்கிடுவேன்
மதியின் குளிர்ச்சி தந்துனையே
***மயங்க வைப்பேன் மன்மதனே!

கலைந்து போன கனவைப்போல்
***கவலை விலகி மறைந்துவிடும்
வலையில் மீனாய்த் துள்ளாதே

***வலியும் குறைந்து நீங்கிவிடும்
தலைக்கு மேலே வரும்வெள்ளம்
***தணிந்து வடிந்து வற்றிவிடும்
சிலைபோல் நானுன் அருகிருக்க
***திரும்ப மறுப்ப தேனய்யா??


நானும் நாணம் மிகக்கொண்டு
***நடந்தேன் சாலை யோரத்திலே
வானும் என்னைக் கண்டவுடன்

***மழையைத் தூறிக் களித்ததடா
தேனும் பாலும் கலந்தாற்போல்
***திளைத்தேன் காதல் பெருக்காலே
ஊனும் உயிரும் உருகிடவே
***உன்னை நினைத்தேன் என்அன்பே!


 நீதான் எல்லாம் என்றாயே
***நெஞ்சில் நிறைந்து நின்றாயே
மாதா போல பேரன்பை

***வாரி என்னுள் பொழிந்தாயே
ஊதா வண்ண குறிஞ்சியென
***உள்ளம் குளிர வைத்தாயே
நாதா உன்போல் நல்லமனம்
***ஞாலந் தனிலே கண்டதில்லை!

மாயா வுலகில் மயங்காமல்
***மௌனத் தாலே உனைக்கரைப்பேன்
தேயா நிலவாய் மனவானில்
***தேடி அன்பைப் பகிர்ந்திடுவேன்
ஓயா அலையாய்த் தவழ்ந்துவந்து
***உரிமை கீதம் பாடிடுவேன்!

தாயாய் மதிக்கும் காரணத்தால்
***தமிழ்போல் உன்னைப் போற்றிடுவேன்

அன்பே என்றாய் அகமலர்ந்தேன்
***அமுத மொழியாய் அதைரசித்தேன்
இன்பப் பெருக்கில் எனைமறந்தேன்

***இதயச் சிறைக்குள் அகப்பட்டேன்
கன்னஞ் சிவக்க நீதந்த
***கட்டி முத்தம் இனிக்குதடா
தென்றல் தழுவும் போதினிலே
***தேகம் சுகத்தில் மிதக்குதடா!


 மேய்ப்பன் நீயே என்றிருந்தேன்
***மெய்யாய் உன்னில் கலந்திருந்தேன்
காய்க்கும் மரமாய் எனைமாற்ற

***கருணை கூர்ந்து வருவாயா
வாய்த்த பிறவி வரமாக
***வண்ணப் பரிசைத் வழங்கிடுவாய்
தாய்மைப் பேற்றை அன்புடனே
***தைய லெனக்குத் தருவாயே!


வந்தேன் நீயே கதியென்று
***வையம் போற்ற வாழ்ந்திடலாம்
தந்தேன் என்னை உன்னிடத்தில்

***தாங்கிப் பிடிப்பாய் அரவணைத்து
சொந்தம் கூடி வாழ்த்துரைக்க
***சொர்க்க வாழ்வில் அடிவைப்போம்
முந்து தமிழாய்த் தித்திப்பில்
***முகமும் அகமும் மலர்ந்திடுவோம்!


விரிந்த விழியின் வீச்சினிலே
***விழுந்தேன் நானுன் காதலிலே
எரியும் மெழுகாய் உருகிவிட்டேன்

***என்னை முழுதாய்க் கரைத்துவிட்டேன்
தரிசாய்க் கிடந்த என்மனத்தை
***தழைத்து வளரச் செய்துவிட்டாய்
பிரிய முடனே அரவணைப்பாய்
***பிரிவு நம்முள் என்றுமில்லை!


கவிதை யாலே உளம்கொய்தாய்
***கனியும் அன்பைத் தினம்பெய்தாய்
குவிந்த இதழில் இதழ்பதிந்தாய்

***குறும்புத் தனத்தால் எனைக்கவர்ந்தாய்
செவிக்குள் தேனாய் இசைபொழிந்தாய்
***தெவிட்டாச் சுவையை நிதமளித்தாய்
புவியில் அழகன் நீதானே
***புரிதல் நிறைந்த மன்னவனே!