Tuesday, March 31, 2015

இப்படி நாம் காதலிப்போம் .....!!( போட்டிக்கான கவிதை )




வானக வீதியிலே வட்டநிலா வெள்ளொளியில்
வானவில்லில் வீடுகட்டி வாழவைப்பேன் - தேனமுதச்
சொல்லால் கவர்ந்தாயே சுந்தரனென் உள்ளத்தை
வெல்வாய்நீ அன்பில் விழுந்து .
விண்மீன்கள் கண்சிமிட்ட வெண்மேகம் பாய்போட
பெண்மானே காதலாய்ப் பேசிடுவோம் - பண்ணிசைத்தேப்
பாடிடுவோம் செவ்வாய்ப் பசுங்கிளியே பொன்மகளே
கூடிடுவோம் அன்பில் குளிர்ந்து .
தங்கமாய் மின்னினாய் தாரகைக் கூட்டத்துள்
திங்களும் நாணினாள் தேன்மொழியே -மங்கையருள்
நன்மணியே என்னிதய நாயகியே நேரிழையே
இன்பமே பொங்கும் இனி .
அந்திசாயும் வேளையிலே ஆதவனும் கண்சிவந்தான்
சிந்திக்கா மல்காதல் செய்தானோ ? - சொந்தமென
நானிருக்க வேலையென்ன ஞாயிறே, மூடிடுவுன்
மேனிதனைச் சீக்கிர மாய் .
ஆகாயக் காதலால் ஆனந்தம் கொண்டேனே
ஏகாந்தம் இன்பமே என்னுள்ளே -வாகாக
சொப்பனத்தில் செய்திடினும் சொர்க்கமே காண்போமே
இப்படியே காதலிப்போம் யாம் .
கற்பனையில் நான்கண்ட காரிகையே காதலியே
சிற்பமா யுன்னைச் செதுக்கினேன் - அற்புதமாய்
செப்படி வித்தைகள் செய்தென்னை ஈர்ப்பவளே
இப்படியே காதலிப்போம் யாம் .
(இப்படி நாம் காதலிப்போம் என்ற தலைப்புக்கு எழுதிய வெண்பாக்கள் )

புரிஞ்சியவ நடப்பாளோ .....???

ஒத்தயில சிரிக்கிறா
ஒருவிதமா நடக்குறா
ஆளோடும் பேரோடும்
ஒட்டாம ஒதுங்குறா ...!
வட்டில்சோத்த வெரலாலே
எண்ணிஎண்ணி கொரிக்கிறா
விட்டத்தையே வெறிக்கிறா
விடிஞ்சபின்னே தூங்குறா ...!
கொஞ்சிகொஞ்சி பேசுறா
கொமரிப்பொண்ணு ஒளறுறா
கோடித்துணி உடுத்துறா
கோயில்கொளம் சுத்துறா ...!
உதட்டுச்சாயம் பூசுறா
நெகம்கடிச்சி துப்புறா
நெலக்கண்ணாடி பாக்குறா
நெலயில்லாம தவிக்கிறா ....!
தாளிலேதோ கிறுக்குறா
தாளக்கையால் கசக்குறா
எழுதியெழுதி படிக்கிறா
ஏனோஅதக் கிழிக்கிறா ...!
குறுஞ்சேதி படிக்கிறா
குழந்தபோல துள்ளுறா
குறுகுறுன்னு பாக்குறா
குசுகுசுன்னு பேசுறா ....!
பதினெட்டு வயசுல
பக்குவமும் பத்தல
ஆசமவ இவளுக்கு
ஆனதென்ன புரியல ....!
காதலோ கத்தரிக்காயோ
கடவுள்தான் காக்கணும்
அப்பனுக்கு தெரிஞ்சுபுட்டா
அறிவாளத் தூக்கிடுவான்... !
பெத்தமனசு துடிக்குது
பாவிமவ நெனப்பிலே
புத்திமதி சொன்னாலும்
புரிஞ்சியவ நடப்பாளோ ....??

Sunday, March 29, 2015

வற்றிடா அன்பே மருந்து ....!!



ஏற்க மறுத்தாரோ ஏங்கிட வைத்தாரோ
தோற்க மனமின்றி தோழமையாய் – வீற்றிருப்பீர்
கற்சிலையாய் குன்றின்மேல், காலங் கனிந்துவரும்
வற்றிடா அன்பே மருந்து



வல்லமை குழுமத்தின் படக்கவிதை போட்டி -5 ல்  குறிப்பிடத்தக்க கவிஞர் என்ற பாராட்டு கிடைத்ததில் பெருமகிழ்ச்சி .

இவள் யாரோ ....??




தாவணி கட்டிய தாரகையோ மங்கையருள் 
தேவதையோ புன்னகைக்கும் தேன்மலரோ- ஆவணியில் 
மாங்கல்யம் சூடிடும் மங்கையோ வெட்கத்தால் 
பாங்காய் தலைகவிழ்ப் பாள் !

Friday, March 27, 2015

பாரதி கண்ட புதுமைப் பெண் ....!!!




பாட்டுக் கொருபுலவன் பாரதி கண்டபெண்
கூட்டுக் குளடங்காக் கோகிலமே - வீட்டுக்குள்
பூட்டியே வைத்தாலும் போராடி வந்திடுவாள் 
ஆட்டத்தில் வெல்வாள் அணங்கு .
நல்லறங் கூட்டிடுவாள் நன்னடையா லீர்த்திடுவாள்
பல்வகை நூல்கள் பயின்றிடுவாள் - மெல்லினத்தாள்
நெஞ்சிலுரங் கொண்டவளாய் நேர்மைத் திறம்வளர்த்து
அஞ்சிடாது வாழ்வா ளவள் .
கள்ளத் தனமின்றி கற்பியல் காத்திடுவாள்
உள்ளத்தி லன்பூற உய்த்திடுவாள் - ஒள்ளியளாள்
நல்லதோர் வீணையாய் நன்னெறி பேணுவாள்
இல்லற நாத மிசைத்து .
மூடுவிழா செய்திடுவாள் மூடக்கொள் கைக்கவள்
ஈடுபெண்ணிற் கில்லையே இப்புவியில் - கேடுகண்டால்
பொங்கிடுவாள் பேரலையாய், பூகம்ப மாய்வெடிப்பாள்
செங்கனலாய்ச் சுட்டெரிப்பாள் தீய்த்து .
இமைபோலக் காப்பாள் இடுக்கண் வருங்கால்
அமைதிக்குப் பேர்தான் அணங்கோ ?- சுமையாக
எண்ணாது தம்மக்கள் ஏற்றமுறச் செய்வதே
மண்ணில் புதுமைப்பெண் மாண்பு .
விண்வெளி சென்றிடுவாள் வித்தைகள் கற்றிடுவாள்
நுண்ணறிவால் செய்திடுவாள் நூதனங்கள் - மண்ணுலகில்
மங்கையர் ஒன்றிணைந்தால் மாபெரும் சக்தியாய்
எங்கும் நிறையும் இனிது .

வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள் ....!!!




வெள்ளிப் பனியுருகி வெள்ளமாய்ப் பாய்ந்தோட 
உள்ளமுமு டன்செல்லும் ஊர்கோலம் - துள்ளியோடும் 
வற்றா நதிகளின் வைரமணி நீரலைகள் 
நற்பா இசைக்கும் குளிர்ந்து. 

கரைபுரண் டோடுகையில் கண்ணிரண்டை ஈர்த்தாய் 
நுரைபொங்கு மாறே நுவல்வாய் ! - விரைந்தோடக் 
காரண மென்ன கவின்நதியே ? சங்கமிக்க 
நேரமான தோசொல்லிச் செல் . 

ஓடியதால் கால்வலியோ ஓரிடத்தில் தங்கிவிட்டாய் 
நாடிடும் பல்லுயிரின் நண்பனே ! -ஓடியநீ 
தேங்கிட்டால் தீர்ப்பதார் தேவைகளை ? யோசித்து 
ஏங்கிட வைக்காமல் ஓடு . 

நதிகளே கைகோர்த்து நட்புறவா டுங்கள் 
புதிதாய்ப் பொலிவாகும் பூமி ! - துதித்தால் 
வசந்தம் பெருகிட வாழ்வும் சிறந்து 
கசப்பும் மறைந்திடும் காண்.

Thursday, March 26, 2015

பனித்திடும் விழிகளும் .....!!!




பனித்திடும் விழிகளும் பரமனின் பதமலர்ப் புகழினைப் பாடிடும் 
இனித்திடும் எண்ணமும் ஈசனின் திருவருள் துணையென இதமுறும் 
களித்திடும் இதயமும் காதலாய்க் கசிந்திட கல்மனம் கரைந்திடும் 
கனிந்திடும் பக்தியும் கதியென திருவடி பற்றியே கைத்தொழும் !

கும்மிப் பாடல்



நந்த வனத்திலே கூடிடுவோம் -செந்தில் 
>>>>நாதனை எண்ணியே பாடிடுவோம் 
சந்தத் திருப்புகழ் கற்றிடுவோம் - கந்த
>>>>சாமியை நாளுமே போற்றிடுவோம் !

கோலக் குறமகள் நாதனடி - தன்னை 
>>>>கும்பிடும் பக்தரின் தேவனடி 
வேல வனின்திருப் பாதமடி - அன்பாய் 
>>>>வேண்ட வரந்தரும் பாலனடி !

ஆடும் மயிலினில் வந்திடுவான் - நேரில் 
>>>>அற்புத லீலைகள் செய்திடுவான் 
பாடும் அடியவர்க் காத்திடுவான் - பாரில் 
>>>>பட்டத் துயரமும் தீர்த்திடுவான் !

வேழ முகத்தினன் சோதரனே - என்றும் 
>>>>வெற்றி குவித்திடும் வேலவனே 
வாழ வழிசெயும் மாயவனே - என்றும்  
>>>>வஞ்ச மகற்றிடும் தூயவனே !

பாத சிலம்பொலி ஓங்கியதே - அன்பர் 
>>>>பஞ்சக் கிலேசமும் நீங்கியதே 
கீத மிசைத்திட தேங்கியதே -இன்பம் 
>>>>கெஞ்சி இதயமும் தாங்கியதே !

தேவி உமையவள் பாலகனாம் - அள்ளும் 
>>>>தெள்ளு தமிழ்மொழிக் காவலனாம் 
கூவி அழைத்திடில் ஓடிவந்து - உள்ளம் 
>>>>தாவி அணைத்திடும் தாயவனாம் !

நாடு மடியவர் தாசனடி - தம்மை 
>>>>நம்பித் துதிப்பவர் தேசனடி 
ஈடு இணையிலா வாசனடி - இம்மை 
>>>>இன்னல் கலைந்திடும் ராசனடி ! 

கூடிக் குலவையும் போடயிலே - பெண்கள் 
>>>>கும்மி யடித்திடும் வேளையிலே
நாடித் தொழுதிடும் வேளையிலே - மண்ணில் 
நன்மை பெருகிடச் செய்துவிடு ! 

Saturday, March 21, 2015

கவிதை செய்யும் மாயம் !!



உள்ள வலியை உரக்க உரைத்திடும் 
தள்ளுந் துயரைத் தடுத்திடும் -துள்ளலுடன் 
காதலும் பேசும் கவினழகு பாடிடும் 
மோதலுஞ் செய்யும் முனைந்து . 

இதய மொழிதனை இங்கிதமாய்க் கூறும்
மதமா னமனதை மாற்றும் - பதமா
யுணர்த்து மிடித்து முரைக்கு மெழுத்தில் 
வரையுங் கவிதை வனப்பு .  

உதிரங் கலந்த உணர்வு கவிதை 
புதிதாய் அனுதினம் பூக்கும் - நதியாய் 
வளைந்து நெளிந்து வளமும் பெருக்கும்
களையாய்த் திகழுங் கவி . 

கவிதை தினத்தினில் காதலுங் கொண்டே 
குவித்தேன் கவிமலர்க் கோலம் - கவிதையே !
நெஞ்சம் நிறைந்தாய் நெகிழ்ந்துனைப் போற்றுவேன் 
தஞ்சமென் றென்மனந் தங்கு  

Thursday, March 19, 2015

அள்ளும் அழகு ...!!





வெள்ளருவி பொங்கி விழுந்து 
>>>>வண்ணநீரில் கலக்கும் ! 
கிள்ளிவைத்த முகில் கூடி 
>>>>கிரிவலம் போகும் !! 

தள்ளும்நுரை கரை யோரம் 
>>>>சலதரங்கம் இசைக்கும் ! 
தெள்ளு தமிழ் தென்றலிலே 
>>>>தெம்மாங்கு பாடும் !! 

பள்ளிகொள்ளும் மலை மேனியில் 
>>>>வெண்மேகக் கூட்டம் ! 
மெள்ளவந்து எட்டிப் பார்த்து 
>>>>தென்னை அருவிரசிக்கும் !! 

துள்ளியோடும் நதி நீரில் 
>>>>சேல்கெண்டை மீனும் 
புள்ளிவைத்த கோலம் போல 
>>>>வளைந்துநெளிந்து ஓடும் !! 

கள்ளமில்லா சிரிப்பில் பூக்கள் 
>>>>கல்மனதையும் கரைக்கும் ! 
உள்ளமெல்லாம் உவகை பொங்க 
>>>>உலகத்தையே மறக்கும் !! 

அள்ளுமழகில் இயற்கை கூட 
>>>>கடவுளாகத் தெரியும் ! 
கொள்ளைபோன எந்தன் இதயம் 
>>>>கவிதைபல படைக்கும் !!

Wednesday, March 18, 2015

காத்திருக்கும் கன்னி .....!!!




கண்ணிரண்டில் காதலுடன் காத்திருக்கும் கட்டழகி
கண்டாங்கி கட்டிக் கவர்ந்திடுவாள் - எண்ணற்ற
கற்பனைகள் நெஞ்சிலாடக் கால்கடுக்க நின்றிருக்கும்
கற்பிற் சிறந்தவள் காண் .

செஞ்சாந்து பொட்டுவைத்து செவ்வரளிப் பூத்தொடுத்து
கெஞ்சுவிழிப் பார்வையால் கிள்ளினாய் -மஞ்சுளமே
முத்துநகைப் போட்டவளே முல்லைப்பூ வைத்தவளே
சித்திரமே பெண்ணே சிரி .
பூக்கூடை மெல்லிடையில் புன்முறுவல் பூத்தபடி
ஏக்கமுடன் பார்த்தல் எவருக்காய் ?- சீக்கிரமே
வாரானோ காக்கவே வைப்பானோ அன்றியும்
சேரானோ உன்னைச் செப்பு .
கடிதம் வருமெனக் காத்திருந்து மெல்லத்
துடிக்கும் இதயத்தைத் தேற்றி - அடித்த
மணியோசைக் கேட்டு மலரை, சிலைக்கு
அணிவிக்கச் சென்றாள் அணங்கு .
மஞ்சளிலே பட்டுடுத்தி மாங்கல்யம் சூட்டிட
வஞ்சியைக் கைப்பிடிக்க வந்தானோ ?- கொஞ்சிட
இன்பமது பொங்கும் இசைவெள்ளம் பாய்ந்திடும்
அன்பினால் கூடும் அழகு . .
கன்னியவள் பார்வை கவிதைபல சொல்லிடும்
தென்பொதிகைச் சாரலாய் பூத்தூவும் - கன்னலாய்
தித்திக்கும் வான்மழையும் தேன்சிந்தும் என்றுமே
சித்திக்கும் காதல் சிறப்பு

சிலிர்த்த இதயம் சிரித்ததே ....!!




தென்றலும் தீண்டிடத் தெம்மாங்கு பாடிடும் தேனருவி 
கொன்றை விரிகையில் கூவிடும் காலையில் கோகிலமே 
வென்றதென் நெஞ்சமும் வெள்ளொளி பாய்ச்சிய வெண்ணிலவு
சென்றதன் பின்னால் சிலிர்த்த இதயம் சிரித்ததுவே ....!!

Tuesday, March 17, 2015

சிசுவின் குரல்




கள்ளிப்பால் ஊற்றிக் கொல்லத்தானா 
பத்துத் திங்கள் சுமந்திருந்தாய் ? 
அள்ளி அணைத்து முலைப்பால் புகட்டாமல் 
கண் திறக்குமுன்னே மண்புகச் செய்வாயோ? 

பசு ஈன்ற பெண்கன்றைப் போற்றிய நீ 
உன் மகவு பெண்ணென்றால் தூற்றலாமோ ? 
சிசு பேதம் பார்க்கத் துணிந்த 
நீயும் ஒரு பெண்தானே ? 

உறவுகள் உதாசீனப்படுத்தினாலும் 
உதிரப்பால் நீ தர மறுக்கலாமா ? 
துறவு மேற்கொண்டேனும் என்னைத் 
தூர எறியாமல் காப்பாயா ? 

கல்லுக்குள்ளும் ஈரமுண்டே -எந்தாயே! 
இத்தரணியில் என்னை வாழவிடு ! 
நல்லதோர் வீணையாய் உன் பெருமை 
நானிலம் போற்ற நானும் செய்வேன் !!

மழலைப் பாடல் .....!!!




கள்ளங் கபடம் இல்லா உள்ளம் 
துள்ளல் துடிப்பில் இதயம் கிள்ளும் 
அள்ளும் அழகில் மயக்கும் நெஞ்சம் 
பிள்ளைக் கனியாய் மதுரம் கொஞ்சும் ! 

சுட்டிக் குறும்பால் மனதை வெல்லும் 
கட்டிக் கரும்பாய் மகிழும் சொல்லும் 
பட்டுச் சிரிப்பில் மறையும் துன்பம் 
குட்டிக் குழந்தை குணத்தால் தெய்வம் ! 

சேட்டை செய்து அடமும் பிடிக்கும் 
கேட்டால் சிரித்து மழுப்பி நடிக்கும் 
வீட்டைக் கலகலப் பாக்கும் மழலை 
பாட்டில் பதிந்த அழகின் கவிதை ! 

கையால் கடைந்த பருப்புச் சோற்றை 
கைவிரல் சுட்டிப் பகிர்ந்து கொடுக்கும் 
பொக்கை வாயைப் பிளந்துக் காட்டி 
மெல்வது போலே பாவனை செய்யும் ! 

தூங்க வைக்கத் தூளியில் போட்டால் 
தாங்க மாட்டா சேட்டை செய்யும் 
தொட்டில் புடவை சற்றே விலக்கி 
எட்டிப் பார்த்தே குறுநகைப் புரியும் ! 

மறைத்த சீலைக்குள் அமுதுண் டாலும் 
முகத்தைத் தூக்கி வேடிக்கைப் பார்க்கும் 
வாய்க்குள் பாலை நிறைத்துக் கொண்டு 
ஃபூவென ஊதியே மழையாய்த் தூறும் ! 

அடிப்பது போலே கையைத் தூக்க 
அடித்தது போலே அழுகை முட்டும் 
உதட்டைப் பிதுக்கி பொய்யாய் விம்மி 
பயந்தது போலே பாவனை செய்யும் ! 

விரட்டிச் சென்று எறும்பு பிடிக்கும் 
விரலைக் கடித்தால் ஓவெனக் கத்தும் 
எழுதும் குச்சியை ரசித்துத் தின்னும் 
அழுதடம் பிடித்துக் கண்டதைக் கேட்கும் ! 

பாட்டுக் கேட்டால் தலையை ஆட்டும் 
ஆட்டம் பார்த்தால் தானும் ஆடும் 
விளம்பரம் வந்தால் ரசித்து நோக்கும் 
விளங்கி யதுபோல் நகைத்துக் கொள்ளும் ! 

தாளைக் கண்டால் கிழித்துப் போடும் 
தாயைக் காணா விட்டால் தேடும் 
கள்ளினும் போதை யூட்டும் கீதம் 
பிள்ளை மொழிக்கு ஈடோ வேதம் ? 

குழந்தை இருக்கும் இல்லம் சொர்க்கம் 
மழலைப் பேச்சில் விலகும் துக்கம் 
அழகில் ஒவ்வொரு பிள்ளையும் உச்சம் 
பழகிப் பார்த்தால் புரியும் மிச்சம் .....!!!

Monday, March 16, 2015

பாவையே வாட்டமேன் ....??




பாதஞ் சிவந்ததேன் பாவையே வாட்டமேன் 
நாதனைக் காணவே நாட்டமோ ? - வேதனையால் 
கண்ணீர் பெருக்கெடுத் துக்காய்ந்து போனதே 
பெண்ணின் கவலை பெரிது . 

நீங்கா நினைவுகளால் நிம்மதி போயிற்றோ 
தூங்கா விழிகளில் துக்கமோ ? - ஏங்காதே 
கூடையில் வைத்தப்பூ கொட்டுமுன்னே வந்திடுவான் 
கோடை மழையாய்க் குளிர்ந்து .

Friday, March 13, 2015

தூங்கும் மலை ...!!




உத்தர வின்றிமேகம் உள்நுழையா மல்தடுக்க
பத்திரமாய் மூடிப் பதுங்கிடும் - சத்தமின்றி 
கூடார மிட்டுக் குளிர்க்கம்ப ளம்போர்த்தி 
ஆடாமல் தூங்கும் மலை .

Thursday, March 12, 2015

குளிர்ந்து வீசும் தென்றல் ...!!




யமுனைக் கரையில் யதுகுலக் கண்ணன் 
அமுதாய்ப் பொழிந்தனன் அன்பை ! - குமுதமாய்ப் 
பூத்தராதை பாடிப் புகழ்ந்திடக், கேட்டுவீசும் 
ஆத்தோரத் தென்றல் குளிர்ந்து 

குளிர்ந்துவீசும் மாருதமும் கோகானம் கேட்டு 
தளிர்மரத்தைத் தாலாட்டும் தாயாய் !- தெளிந்தோடும் 
ஆற்றோரப் பூஞ்செடியும் ஆனந்த ஆடலைப் 
போற்றி வணங்கும் மலர்ந்து .

மலர்க்கொடியாள் மையலினால் மாயனுட  னாட
சிலம்பொலியும் நாதமெனச் சேர - அலம்பும் 
நதியலைகள் பையவந்து நாணமுடன் நோக்கும் 
அதிசயக் காட்சி வியப்பு !

வியந்தே ரசித்தனள் வேணுகானம் மீட்ட
மயக்க நிலையில் மகிழ்ந்து - இயற்கையும் 
கூடிக் களித்திடும், கோபால னைக்காண  
ஓடிவரும் மேகம் விரைந்து 


நீ மறைந்த மாயமென்ன ?




அண்ணாந்து நான் பார்த்தேன் 
அதிர்ந்தே தான் போனேன் 
ஆகாயப் பொலி வெங்கே 
அற்புதக் கோல மெங்கே ....? 

சவரம் செய்த வதனமாய் 
மழித்து விட்ட சிரமாய் 
சலவை சென்று வந்தாற்போல் 
வெளுத்து விரியக் கண்டேன் ...!! 

அழகழகாய் தவழ்ந்து வரும் 
அலை மேகம் எங்கே ? 
சுருள்சுருளாய் புகை போலே 
சுழலும் முகில் எங்கே ....? 

ஊதிவிட்ட பஞ்சுப் பொதியாய் 
ஊரும் மஞ்சு எங்கே ? 
மழலை வரைந்த ஓவியமாய் 
முகில் இனமும் எங்கே ....? 

தூரிகை தீட்டிய சித்திரமாய் 
தூதுசெல்லும் மங்குல் எங்கே ? 
கதிர்நிலவு மறைக்கு மந்த 
வெண்மேகத் திரை எங்கே ....? 

கடலுள் கலந்து நுரைத்தாளோ 
கானக இருளில் கலந்தாளோ 
மலையில் புகுந்து ஒளிந்தாளோ 
மண்ணில் விழுந்து மறைந்தாளோ...?? 

கண்எட்டும் தூரம் வரை 
மிகரம் விழியில் படவில்லை 
வானமகள் சேலை துவைத்து 
விரித்தே காயப் போட்டாளோ ....??

கேளாயோ தோழி ....!!!



கங்கையின் பிரவாகமாய் 
மங்கையெனுள் ஊற்றெடுத்த 
சங்கத்தமிழ் சொல்லெடுத்து 
பொங்கிவரும் கற்பனையால் 
தங்கமென வார்த்தெடுத்து 
பங்கமின்றி கவிவடித்து 
இங்கிதமாய் இசையமைத்து 
சங்கதிகள் அதில்கூட்டி 
மங்கியதோர் நிலவொளியில் 
வங்கக்கரை மணல்வெளியில் 
திங்களும் வாழ்த்துரைக்க 
சிங்காரமாய் பாடுகையில் 
பொங்குகடல் அருகில்வந்து 
சங்கீதம் ரசித்தஅழகை 
வங்கணத்தி என்சொல்வேன் ......??? 

(வங்கணத்தி - உற்ற தோழி )

Wednesday, March 11, 2015

பேரர் குறள்....!!!




சிறந்தவரன் பில்யவரெ னில்பே ரரென
திறந்து உரைப்பேன்  மனம் . (1)

நையாண்டி நக்கல்  இழைந்தே கலந்தோடும்
பையனிவன் பேச்சில் சுவை . (2)
சிறுவ ரெனினும்  சிலநேரம் பேசயில்
சிந்திக்க வைப்பர் உணர்ந்து . (3)
அடித்துக்கொண் டாலும் நொடிக்குள் மறந்து
கூடிக் களிப்பர் மகிழ்ந்து . (4)
சுட்டிதா னானாலும் சேட்டையே செய்தாலும்
கட்டிக் கரும்பாய்  உணர் . (5)
சூரர் படிப்பி  லிருவரும், வாழிய
பேரரென போற்று முளம் . (6)
தந்தைதாய்ப் போற்றிடுவார்  தட்டியுங் கேட்டிடுவார்
விந்தையாய் எண்ணும் மனம் . (7)
விளையாட்டும் வீரமும் கண்ணெனக் கொள்வார்
களைகூட் டும்முகங் காண் . (8)
சேர்ந்து சிரித்து கதைத்து மகிழ்வார்
சோர்ந்து விடாது நட்பு . (9)
 அடங்குவார் அன்பினால் பேரரும்அன்றியும்
அடக்கிட மடங்கா தவர் . (10)

பூக்களோடு ஒரு கைக்குலுக்கல்

https://www.youtube.com/watch?v=OucHcTfk_Xg


எண்ணப் பூக்கள் மலர்ந்திருக்கும் தாளினிலே 
எழுதி வைத்தேன் கவிதையென்ற பேரினிலே ! 

வண்ணப் பூக்கள் மலர்ந்திருக்கும் செடியினிலே 
வண்டுகளை ஈர்த்திடும் மதுச் சுவையினிலே ! 

மழலைப் பூக்கள் மகிழ்ந்திருக்கும் பள்ளியிலே 
சிங்காரமாய் பவனி வரும் சீருடையிலே ! 

வெள்ளிப் பூக்கள் முளைத்திருக்கும் வானத்திலே 
விழிசிமிட்டி ஒளி கூட்டும் இரவினிலே ! 

கோலப் பூக்கள் படர்ந்திருக்கும் மார்கழியிலே 
கோதையர் விரல் வண்ணத்தில் வீதியிலே ! 

நட்பு பூக்கள் நிறைந்திருக்கும் எழுத்துதளத்தினிலே 
களித்திருக்கும் அழகிய தமிழ் சொர்க்கத்திலே ! 

காதல் பூக்கள் கவிபாடும் கடற்கரையிலே 
கண்களாலே கதை பேசும் மணல்வெளியிலே ! 

நுரை பூக்கள் பொங்கிவரும் கரையிலே 
பாதம் நனைத்து பையச்செல்லும் கடலுக்குள்ளே ! 

கன்னி பூக்கள் வரம்கேட்கும் கோயிலிலே 
கல்யாண மாலை பூக்கும் இறையருளிலே ! 

பனிப் பூக்கள் குடியிருக்கும் இலைகளிலே 
பரிதிமுகம் கண்டு மறையும் காற்றினிலே ! 

மேகப் பூக்கள் ஓய்வெடுக்கும் மலைமேனியிலே 
மெல்லமெல்ல கலைந்து போகும் உயரத்திலே ! 

கண்ணீர் பூக்கள் பெருக்கெடுக்கும் விழிகளிலே 
பரிசுபெற்ற சேதி கேட்ட நொடியினிலே ! 

பூக்களெல்லாம் சிரித்திட 
பூரிப்புடன் கைக்குலுக்குவோம் .....!!!

புன்னகைப் பூத்திடும் பொன்நிலவு ....!!

மின்மினிப் பூச்சியாய் மின்னலின் கீற்றுபோல்
புன்னகைப் பூத்திடும் பொன்நிலவு ! - மென்பட்டுக்
கைத்தட்டிக் கொஞ்சிக் கவின்பேச்சால் கட்டியே
பைத்திய மாக்கும் அழகு 

கண்வளராய் .... கண்வளராய் ....!!





என்மடி சாய்ந்து தமிழ்த்தாயே நீ துயில வேண்டும் 
>>>>>உன்எழில் கண்டு எனைமறந்து நான் ரசிக்க வேண்டும் !! 
என்விரல் கோதும் சுகத்தில் நீ மெய்சிலிர்க்க வேண்டும் 
>>>>>அந்தநிலை கண்ட பரவசத்தில் நான் மகிழ வேண்டும் !! 
என்குரல் மீட்டும் தாலாட்டில் உன்விழி சொக்க வேண்டும் 
>>>>>அந்த சுகந்தனிலே சொர்க்கத்தை நீ உணர வேண்டும் !! 
என்இதழ் சிந்தும் முத்தத்தில் நீ நெகிழ வேண்டும் 
>>>>>அந்த பூரிப்பில் எனக்கு நீ வரமருள வேண்டும் !! 
உன்வரத்தால் நான் தேன்தமிழில் கவிபுனைய வேண்டும் 
>>>>>அந்த கவிகண்டு உன்கரங்கள் எனை அணைக்க வேண்டும் !!!

நிலையென்று மாறுமோ ....???





இனம்விட்டு மணமுடித்தால் உறவினின்று ஒதுக்கிடுவார் 
சினங்கொண்டு பொறுமையின்றி பழிவாங்கத் துடித்திடுவார் 
மனங்கொத்தி ரணமாக்கி வலிகண்டு உளம்மகிழ்வார்
அனல்மேலே புழுபோலே துடிப்பதையும்  ரசித்திருப்பார்  !

துவண்டாலும் சரிந்தாலும் அரவணைக்க மறுத்திடுவார் 
கவலையிலே உழன்றாலும் கடுகளவும் மனமிரங்கார் 
சவமாகிக் கிடந்திடினும் கரையாது இறுகிநிற்பார் 
புவனத்தில் கலப்புமணம் எளிதாகும் தினம்வருமோ ....???

Tuesday, March 10, 2015

அடடாவோ அடடா ...!!





மலரிதழில் பனித்துளியும் அசையாது அமர்ந்திருக்கும் 
மலைமுகட்டில் முகில்படுத்து அழகாகத் துயிலணையும் 
இளந்தென்றல் இதழ்வருட அரும்புகளும் மொட்டவிழும் 
இமயகிரி உறைபனியும் இறைவனையே உணரவைக்கும் !

முகில்குளிர்ந்து பொழிமழையில் புவிசெழித்து வளங்கொழிக்கும்
மழைநீரில் மரங்குளித்து தலைசொட்ட நனைந்திருக்கும்
மழையுறிஞ்சும் நிலத்தினிலே பயிர்களெல்லாம் செழித்திருக்கும் 
மழைபொழிந்து முடிந்தபின்னே கவின்காளான் குடைபிடிக்கும் !

கருமேகந் திரண்டிருந்தால் மயில்தோகை விரித்தாடும் 
கவினருவி கவிபாடிக் களிப்புடனே குதித்துவிழும் 
கனிபழுத்துத் தருக்களிலே கிளிகொய்யக் காத்திருக்கும் 
நதிக்கரையில் கொக்குகளும் ஒருகாலில் தவமிருக்கும் ! 

கிழக்கினிலே உதிக்கையிலே கதிரவனும் விழிசிவக்கும் 
பரிதிமுக தரிசனத்தில் கமலமலர் இதழ்விரிக்கும் 
மதிதவழும் வழியெங்கும் விண்மீன்கள் கண்சிமிட்டும் 
எழுவண்ண வானவில்லும் அலங்கார வளைவமைக்கும் !

வயல்வெளியும் குளிர்ச்சியுடன் பசுமைதனைப் பரிசளிக்கும் 
வசந்தருது பிறந்ததுமே உதிர்ந்தமரம் துளிர்த்துவிடும் 
கடலலைகள் கரையோரம் மிதந்துவந்து நுரைதள்ளும் 
இசைபாடும் அலையோசை இதமாக உளங்கிள்ளும் !

இயற்கையொடு மனமிணைந்து வியப்புடனே சிலிர்த்திருக்கும் 
அடடாவோ அட!வெனவே  அணுஅணுவாய்த் தினம்ரசிக்கும் 
இயற்கையிலே இறைகண்டு விழிகசிந்து நெகிழ்ந்திருக்கும் 
அடடாவோ அடடாவாய் அதிசயித்துத் தலைவணங்கும் !!

Friday, March 6, 2015

நாளைய தமிழும் தமிழரும்




தமிழுக்கென்ன? சிறந்திருப்பாள் 
தமிழர்நாவில் தவழ்ந்திருப்பாள் 
விண்ணும்மண்ணும் உள்ளவரை 
வியக்கும்வண்ணம் வாழ்ந்திருப்பாள் ! 

ஐம்புலனில் கலந்திருப்பாள் 
ஐம்பாவில் மகிழ்ந்திருப்பாள் 
செம்மொழியாள் உயர்ந்திருப்பாள் 
செருக்குடனே வலம்வருவாள் ! 

இலக்கியத்தால் புவியீர்ப்பாள் 
இன்சுவையால் மனம்வெல்வாள் 
பிறமொழிகள் புறந்தள்ளி 
பிரகாசமாய் ஒளிர்ந்திடுவாள் ! 

மாற்றம்வந்து மானுடரின் 
மாயத்திரை விலக்கிவிடும் 
தமிழ்ப்பாவே பாவாகும் 
தமிழ்மொழியே பாராளும் ! 

உலகத்தமிழர் ஒன்றிணைவர் 
உரிமையாவும் மீட்டெடுப்பர் 
உயர்பதவி வகித்திருப்பர் 
உலகோர்தரத்தில் முன்னிருப்பர் ! 

பாரம்பரியம் போற்றிடுவர் 
பாரினில்நற் பேரெடுப்பர் 
கலாச்சாரம் காத்திடுவர் 
கன்னித்தமிழால் களிப்புறுவர் ....!!