Saturday, July 28, 2018

ஊஞ்சலிது ஊஞ்சலிது ...!!!


கண்ணனுடன் எழில்ராதை இணைந்தாடும் ஊஞ்சல் 
***கன்னியர்கள் சுற்றிநின்றே ஆட்டிவிடும் ஊஞ்சல் !
வெண்ணையுண்ணும் மாயவனின் லீலைகளை எண்ணி 
***வியந்தபடி கோபியர்கள் விரைந்தாட்டும் ஊஞ்சல் !
செண்பகப்பூந் தோட்டத்தில் ஆநிரைகள் சூழச் 
***சிரித்தபடி கேசவனைத் தாலாட்டும் ஊஞ்சல் !
வண்ணமயில் தோகையினை விரித்தாடிக் காட்ட
***வடிவழகன் மகிழ்ச்சியிலே திளைத்தாடும் ஊஞ்சல் !!

மான்களொடு புள்ளினமும் அருகிருந்து பார்க்க
***மாலவனின் பெருமைகளை நினைத்தாடும் ஊஞ்சல் !
தேன்மலரில் மதுவுண்ணும் பொன்வண்டு பாட  
***தேனிதழாள் நாணத்தில் குனிந்தாடும் ஊஞ்சல் !
மீன்விழியாள் கடைக்கண்ணால் மன்னவனை நோக்க 
***மின்னதிர்வில் தனைமறந்து சிலிர்த்தாடும் ஊஞ்சல் !
வான்மலர்ந்த விண்மீன்கள் வாழ்த்துகளைச் சொல்ல 
***வசுதேவர் தேவகியும் இணைந்தாட்டும் ஊஞ்சல் !

தென்றலிலே கலந்தினிக்கும் தேவசுகந் தன்னைத்
***தெவிட்டாமல் தான்தாங்கித் திளைத்தாடும் ஊஞ்சல் !
கன்றுகளும் குழலிசையைக் கேட்டவுடன் கூடிக்
***கனிவான மொழிபேசிக் கவர்ந்தாட்டும் ஊஞ்சல் !
சின்னவனின் குறும்புகளைப் பூரிப்பாய்க் கூறிச்
***சீர்மிகவே தேவர்களும் சேர்ந்தாட்டும் ஊஞ்சல் !
அன்றலர்ந்த மலர்போலும் அழகுநங்கை பார்க்க 
***அன்னங்களும் பையவந்து அசைத்தாட்டும் ஊஞ்சல் !

தீஞ்சுவையாம் கனித்தமிழில் கவிநிதமும் பாடித்
***தித்திக்கப் புலவோர்கள் புகழ்ந்தாட்டும் ஊஞ்சல் !
வாஞ்சையுடன் நந்தகோபர் யசோதையுடன்  ஒன்றாய் 
***மனம்குளிர்ந்து பக்கத்தில் தொட்டாட்டும் ஊஞ்சல் !
பூஞ்சோலைக் காற்றோடு கலந்துவரும் வாசம் 
***புனிதத்தை நிறைத்திருக்க பூத்தாடும் ஊஞ்சல் !
ஊஞ்சலிது பொன்னூஞ்சல் ஒப்பில்லா ஊஞ்சல் 
***உள்ளத்தை ஆட்டுவிக்கும் உயர்வான ஊஞ்சல் !!

சியாமளா ராஜசேகர் 


Monday, July 16, 2018

ஒற்றிலாக் குறள் ...!!

அலைகளி லாடு மழகிய மீனை
வலைவீசி வாரிடநீ வா .

கைவிர லாலே கவிதை எழுதியே
மைவிழி யாளை வளை.
முழுமதி போலே முகமுடை யாளை
அழவிட லாமோ அழை .
பெரிய வுருவொடு பேரழ கான
அரிய வரிமா வது .
கருநீல மேனியனே காதலொடு பாட
வருவாயா தேடி மனை .
தனிமை யிரவு வனிதை மகிழ
இனிய கவிதை எழுது.
இரவு நிலவோ டினிய உறவு
விரிய விரிய இளகு
சியாமளா ராஜசேகர்

முத்தமிழே ...!!!


எத்திக்கும் நற்புகழ் ஈட்டித் தருமென்றும்
தித்திக்கு முள்ளத்தில் தீந்தமிழாம் - முத்தமிழே
வித்தாகும் நந்தமிழர் வெற்றிக்குப் பாரினில் 
அத்தனைக்கும் மூத்ததுவே யாம் .
கத்துங் கடல்தவழ் காற்றாய்க் குளிர்வித்து
நித்தம் புதிதாய் நிறைவளிக்கும்! - முத்தமிழே
பித்தந் தெளிவித்துப் பீடுறச் செய்திடும்
புத்தி புகட்டும் பொலிந்து .
பத்தரை மாற்றுப் பசும்பொன்னாய் மிக்கொளிர்ந்து
முத்திரை யும்பதிக்கும் மூவினமாய் ! - முத்தமிழே
இத்தரணி வெல்லும் இயலிசை நாடகமாய்
எத்துணை யின்ப மிது?
புத்தம் புதுமலராய்ப் பூரிக்க வைத்திடும்
ஒத்தட மாகும் உளவலிக்கு ! - முத்தமிழே
பத்தி நெறிபுகட்டிப் பக்குவமுந் தந்திடும்
சொத்தாய் விளங்குஞ் சுகம் .
முத்துத் தமிழர் முயற்சியில் ஆர்வர்டில்
மெத்தவளர்ந் தின்னும் மிளிர்ந்திடும் ! - முத்தமிழே
மொத்தத்தில் மேன்மை மொழியாக என்றென்றும்
சித்த மினிக்கச் செயும்.
சியாமளா ராஜசேகர்

அன்பு மகனே !


உலவும் காற்றில் கலந்தாயோ
***உலகைத் தாண்டிப் பறந்தாயோ ?
நிலவைத் தொட்டுப் பார்த்தாயோ
***நினைக்க எம்மை மறந்தாயோ ?
கலங்கி யழுதும் இரங்காயோ
***கனவில் முகத்தைக் காட்டாயோ ?
நலமாய் எம்மை வழிநடத்த
***நமனின் பின்னே சென்றாயோ ??

இரண்டு வருடம் உருண்டோட
***இதயம் இறுகிக் கிடக்கின்றேன் !
வரமாய்க் கிடைத்த மகனுன்னை
***மனத்துள் ளிருத்தித் துதிக்கின்றேன் !
உருவம் மறைந்து போனாலும்
***உள்ள முருகி அழைக்கின்றேன் !
அருவ மாக அருகிருந்தே
***அனைத்தும் நடத்த விழைகின்றேன் !
நினைத்த போது கண்முன்னே
***நிழலாய்க் கூட வரவேண்டும் !
மனத்தின் சுமைகள் போக்குதற்கு
***வழியைக் காட்டித் தரவேண்டும் !
கனலாய் நெஞ்சம் கொதிக்கையிலே
***கனிவாய்க் குளிரச் செயவேண்டும் !
உனையே எண்ணும் அன்னையுளம்
***உன்னைக் காணும் வரம்வேண்டும் !
சிரித்து வெளியில் நடித்தாலும்
***தேம்பி யுள்ளே அழுகின்றேன் !
பிரிந்து சென்ற தேனென்றுப்
***பித்தாய் நாளும் கேட்கின்றேன் !
மரிக்கும் வயதா உன்றனுக்கு
***மகனே பதில்சொல் இக்கணமே !
விரிந்த விண்ணி லிடம்பிடித்தாய்
***விரைவி லழைப்பா யென்னையுமே !!
சியாமளா ராஜசேகர்

பொன்மேனி காட்டாத தென்றல் ...!!!



பொன்மேனி காட்டாத பூஞ்சோலைத் தென்றல்
***பொருநைநதி தவழ்ந்துவந்து பொலிவூட்டும் தென்றல் !
இன்பத்தில் மிதக்கவைக்கும் இதமான தென்றல் 
***இதயங்கள் கலந்தினிக்கும் இளமாலைத் தென்றல் !
அன்புதனைக் காதோரம் கிசுகிசுக்கும் தென்றல் 
***அத்தானின் உள்ளத்தை அள்ளிவரும் தென்றல் !
பொன்னிலவு முற்றத்தில் பூத்திருக்கும் தென்றல் 
***பூரிப்பில் முகிலினத்தை உரசிவிடும் தென்றல் !
மலரிதழில் பனித்துளியை முத்தமிடும் தென்றல்
***மரக்கிளைகள் அசைத்துவிட்டு விளையாடும் தென்றல் !
உலவுகின்ற வழியெங்கும் குலவுகின்ற தென்றல்
***உடைகலைத்தே உற்சாகம் கொள்ளுகின்ற தென்றல் !
மலையருவிச் சாரலுடன் உறவாடும் தென்றல்
***மனங்குளிரச் செய்யுமந்த மணம்மிகுந்த தென்றல் !
தலைவனிடம் தூதுசென்று தவிப்புசொல்லும் தென்றல்
***தயங்காமல் நற்சேதி தாங்கிவரும் தென்றல் !
மழைத்தூறல் போடுகையில் கொஞ்சிவரும் தென்றல்
***மண்வாசம் அந்நேரம் மலர்விக்கும் தென்றல் !
அழையாது விட்டாலும் அரவணைக்கும் தென்றல்
***ஆசையுடன் கேட்டாலும் முகம்காட்டாத் தென்றல் !
உழைப்போர்கள் வியர்வையினை உலரவைக்கும் தென்றல்
***உருவமில்லை என்றாலும் உணரவைக்கும் தென்றல் !
கழனியிலே நெற்கதிரைத் தாலாட்டும் தென்றல்
***கவியெழுதும் பாவலர்க்குக் கருவான தென்றல் !!
திறந்திருக்கும் சாளரத்தில் நுழைந்துவரும் தென்றல்
***தேன்நிலவின் தண்ணொளியைத் துணைக்கழைக்கும் தென்றல் !
சிறகின்றிச் சுற்றிவந்து சிலிர்க்கவைக்கும் தென்றல்
***தீண்டுகையில் சொர்க்கத்தைக் காட்டிவிடும் தென்றல் !
உறங்கவைத்துச் சோர்வகற்றிச் சுகம்கொடுக்கும் தென்றல்
***உச்சிவெயில் வேளையினில் ஓய்வெடுக்கும் தென்றல் !
இறைவனது படைப்பினிலே வரமான தென்றல்
***இளவேனில் காலத்தில் வீசுகின்ற தென்றல் !!
சியாமளா ராஜசேகர்

பிறந்தநாள் வாழ்த்து பிரனீத் குட்டிக்கு ...!!!( ஜூன் 30)

பிறந்தநாள் வாழ்த்து ....!!!
***********************************
தத்தித் தத்தி நடைபயின்று
***தங்க ரதம்போல் வளையவந்து
கொத்து மலராய் இதழ்விரித்துக் 
***கொஞ்சிக் கொஞ்சிச் சிரித்திடுவான் !
முத்துச் சிப்பித் திறந்தாற்போல்
***முத்த தாலே உயிர்நனைப்பான் !
பித்தா யென்னை யாக்கிவைத்தப்
***பிரிய பெயரன் இவனன்றோ??
கண்ணில் பட்ட பொருளெல்லாம்
***கையால் இழுத்துப் போட்டிடுவான் !
உண்ண கொஞ்சம் அடம்பிடிப்பான் !
***ஊட்டி விட்டால் துப்பிடுவான் !
தண்ணீர் கண்டால் கொண்டாட்டம்
***தட்டித் தட்டி ஆடிடுவான் !
வண்ண வண்ண மின்னொளியில்
***மயங்கி மகிழ்ந்து புன்னகைப்பான் !
அடுக்கி வைத்த துணிகளெல்லாம்
***அடுத்த நொடியில் கலைத்திடுவான் !
எடுத்து வைத்து முடிப்பதற்குள்
***எழுந்து மீண்டும் உலைத்திடுவான் !
தடுத்தால் ஓடி ஒளிந்திடுவான்
***தாயின் மடியைத் தேடிடுவான் !
படுக்க வைத்துத் தாலாட்டப்
***பைய இமைகள் மூடிடுவான் !
கண்ணின் இமையாய்க் காத்திருந்து
***கனிவாய்ப் பேணும் தந்தைமுகம்
கண்ட வுடனே அன்பொழுக
***காலைச் சுற்றி வந்திடுவான் !
வண்ண பொம்மை கொடுத்திடிலோ
***வாங்கித் தூர எறிந்துவிட்டுத்
தண்டை குலுங்க ஓடிவந்து
***சட்டிப் பானை உருட்டிடுவான் !
அல்லும் பகலும் பாட்டில்தான்
***அவனின் பொழுது நிதம்கழியும் !
கல்லைக் கூட கனிவிக்கும்
***கன்னல் பேச்சில் மதுவழியும் !
செல்லக் கண்ணன் செய்கின்ற
***சேட்டை அதிக மென்றாலும்
வெல்லும் வித்தை அறிந்திருக்கும்
***வெல்லக் கட்டி இவன்தானே !
வருட மொன்று பறந்துவிட
***வளர்ந்து விட்டான் அழகாக !
விருந்தாய் அன்பை நொடிதோறும்
***விடாமல் பொழிவான் மழையாக !
வருத்தும் துன்பம் யாவுமிவன்
***வதனம் பார்த்தால் மறைந்துவிடும் !
விரும்பும் மனமும் என்றென்றும்
***விருத்தத் தாலே வாழ்த்துரைக்கும் !
இவன்தான் அவனே என்றிருந்தேன்
***இதயச் சிலிர்ப்பில் நெகிழ்ந்திருந்தேன் !
கவலை மறக்கக் காரணமாய்க்
***கடவுள் தந்த வரந்தானோ !
துவண்ட போதில் என்றனுளச்
***சுமையைக் குறைக்க வந்தவனை
உவகை பொங்க வாழ்த்திடுவேன்
***உலகம் மெச்ச வாழியவே ...!!!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பிரனீத் குட்டி 💐💐💐❤️❤️❤️🎂🎂🎂🎉🎉🎉🎈🎈🎈

குறள் வித்தகம் !

அடி முடி இடை முரண் குறள்
*****************************************
வெண்மதியைக் கார்மேகம் மூடித் திறப்பதைக்
கண்ணிருந்தும் காணாதோ சம்பு.
( சம்பு - சூரியன் )
ஆடா(து) அசையாது செந்நெல் பசும்வயலில்
பாடாமல் பாடிநீ யாடு.
இரவும் பகலும் உறங்கி விழித்தால்.
வருவாயும் வாரா(து) ஒளி.
நல்லன கெட்டன ஆராய்ந் தறியாயேல்
நில்லாமல் செல்லுமோ தீது.

போய்விடும் வந்ததுபோல் இன்பமும் துன்பமும்
வாய்மையுடன் பொய்விலக்கி வா .
சியாமளா ராஜசேகர்

மாமலை சபரியிலே ....!!!

மலைமீதில் மணிகண்டன் வீற்றிருக்கும் கோலம்
***மனங்குளிர தரிசித்தால் விலகுமகங் காரம் !
சிலைவடிவில் சிங்கார மாயமர்ந்த காட்சி
***சீர்மிகுந்த சபரியிலே என்றுமவன் ஆட்சி !
அலைகடலாய்த் திரண்டுவரும் அடியவர்கள் கூட்டம் 
***அன்பொழுக வேண்டிடிலோ மறைந்துவிடும் வாட்டம் !
தலைமேலே இருமுடியைச் சுமந்தபடிச் செல்வார்
***சரணங்கள் கைதட்டி வழிநெடுகச் சொல்வார் !

பதினெட்டுப் படியேறப் பரவசமும் கூடும்
***பம்பையிலே நீராடப் பாவங்கள் தீரும் !
அதிரூபன் முகங்கண்டால் அகமுழுதும் பூக்கும்
***அலங்காரப் பிரியனவன் அருட்பார்வை யீர்க்கும் !
மதிசூடி மைந்தனவன் கமலமலர்ப் பாதம்
***மயக்கிவிடும்; இருவிழியோ பேசுமொழி வேதம் !
துதிப்போரை யரவணைத்துக் கருணைமழை பெய்வான்
***துணைநின்று சந்ததமும் பக்தருளம் கொய்வான் !
மெய்யன்பா யுருகிவிழி நீர்மல்கி வேண்ட
***மெய்ப்பொருளைக் கண்டிடலாம் மாமலையி லிங்கே !
நெய்யாலே அபிடேகம் சுவாமிக்குச் செய்ய
***நெஞ்சுக்குள் நிம்மதியும் ஊற்றெடுக்கு மிங்கே !
தெய்வத்தின் சன்னிதியில் திருவிளக்கை ஏற்ற
***தீராத வினையாவும் தீர்ந்திடுமா மிங்கே !
ஐயப்ப னருளாலே மகரஜோதி கண்டால்
***ஐம்புலனு மடங்கிப்பின் அமைதியுறு மிங்கே !!
சியாமளா ராஜசேகர்