Wednesday, September 30, 2015

புரிந்திடச் செய்யும் துயர் ...!!!



காந்த விழியால் கவர்ந்திடும் கன்னியின் 
கூந்தல் கலைந்ததேன் கூறு .

பூத்ததேன் நீலம் பொலிவானக் கண்களில் 
காத்திருப்பால் வந்தவினை யோ ? 

கலங்கும் விழியில் கவலையின் ரேகை 
நலமிலை யென்றே சொலும் . 

விரிந்தக் குழலும் வழியும் விழியும் 
புரிந்திடச் செய்யும் துயர் .

வருத்த முறைந்த வனிதை வதனம் 
மெருகு குறைந்து விடும் .

Tuesday, September 29, 2015

மரணம் தழுவிட வந்திடும் போது .....!!!

மரணம் தழுவிட வந்திடும் போது 
சரணம் நவின்றே சகலமும் ஒடுங்க 
பரம னருளால் பயமும் விலகி 
சிரத்தைத் தாழ்த்திச் சிரித்தே ஏற்போம் ! 

உறவின் அணைப்பை உதறியே விட்டு 
மறலி யழைப்பை மறுதலிக் காமல் 
அறத்தின் பயனால் அவனுடன் சென்றே 
இறப்பை நாமும் இனிதாய் ஏற்போம் ! 

சவமாய்ச் சிதையில் சரிந்திடும் நேரம் 
சிவத்தின் நினைவே சிந்தையில் நிறைய 
தவத்தின் உயர்வால் சஞ்சல மகன்று 
பவமும் நீங்க பக்தியும் செய்க ! 

உதித்தல் உதிர்தல் உயிர்களின் நியதி 
கொதித்துத் துடித்துக் குமுறிட லாமோ ? 
விதியின் வழியே வினையும் முடியும் 
துதிப்பாய் நெஞ்சே ! துணைவரும் இறையே !

இயற்கையோ டிணைந்தால் இதமே !



தேகம் சிலிர்த்திடும் தென்றல் தீண்டலில் 
சோகம் விலகிடும் சோர்வும் பறந்திடும் 
அலைகள் கொஞ்சிடும் ஆழியைக் கண்டால் 
தொலைந்து போகும் துயரமும் விரைவில் 
கொட்டு மருவியில் குளியல் போட 
மட்டிலா இன்பம் மனதினி லூறும் 
இயற்கையோ டிணைந்தால் இதமே 
மயங்கிய நெஞ்சமும் மகிழ்ச்சியில் பொங்குமே !!

முதுமை !


கருத்தக் குழலும் கழிந்து வெளுக்கும்
சுருங்கும் விழியின் சொலிப்பு மங்கும் 
சருமம் தளர்ந்து சரீரம் ஒடுங்குமே !

கவனம் பிசகும் கருமம் மறக்கும் 
துவளும் நடையும் தொலையும் சுகமும்  
அவதிப் படுத்தும் அடங்காப் பிணியுமே !

உறக்கம் குறையும் உடலும் களைக்கும்
மறதி வந்து மகிழ்வைக் கெடுக்கும் 
மறலி வரவை மனமும் விழையுமே !


( ஆசிரியத் தாழிசை - இலக்கணம் )

*மூன்றடிகளைப் பெற்று,
அடிக்கு நான்கு சீர்களைப் பெற்றுவரும்.
*ஆசிரியவுரிச் சீர்களான மாச்சீர், விளச்சீர்களைப் பெற்றுவரும். சில காய்ச்சீர்களும் வரலாம். அவை மாங்காய்ச் சீராக மட்டுமே வரும்.(வாராதிருத்தல் சிறப்பு.)
*ஒருபொருள் மேல்ஒரு பாடலோ, ஒருபொருள் மேல் மூன்றடுக்கியோ வரும். ஒரே பொருள்முடிவாய் இருக்க வேண்டும்.
*மூன்று அடிகளுக்கும் ஒரே எதுகையும், ஒவ்வொரு அடியிலும் பொழிப்பு மோனையும் பெற்று வரும். (முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் அமைவது பொழிப்பு மோனை எனப்படும்.)
*ஈற்றடி ஏகாரத்தில் முடியும். ஓ,ஆ,ஆல் என்றும் வரலாம். ஏகாரமே சிறப்பு.

Friday, September 11, 2015

லிமரைக்கூ ...!!!



தேர்தல் ....!!!! 

இலவசத்தால் கவருது அரசு 
கிடைப்பதெல்லாம் கைநீட்டி வாங்கும் 
அவலநிலைகண்டு உறுமுது முரசு .....!!! 

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 

தேர்தல் சின்னம் ரிப்பன் 
வேட்பாளர் தலையில் கட்டியபடி 
கேட்டார் ஓட்டு சுப்பன்....!!! 

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 

மேடை அதிரும் பேச்சு 
அள்ளி வீசப்படும் வாக்குறுதிகள் எல்லாம் 
வெற்றிக்குப்பின் போயே போச்சு .....!!! 

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 

மழையால் கால்வாய் அடைப்பு 
மடமடவென நடைபெறும் பணிகள் யாவும் 
தேர்தல்கால கண் துடைப்பு .....!!! 

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

லிமரைக்கூ ....!!!



இடையின் இடையில் மடிப்பு
குடத்துடன் அவள் நடந்து வருகையில்
இளைஞர் இதயத்தில் துடிப்பு ....!!
*********************************************************************
காதல் கைகூடுமாவென சஞ்சலம் 

கவலை ஏதுமின்றி காற்று தாலாட்ட 

ஆடியது குழல்நுனியில் குஞ்சலம் .....!!
********************************************************************
தென்றலாய் தவழ்ந்தது தமிழ் கானம் 

பொங்கிய தேனருவியில் நீராடி மகிழ்ந்து

அள்ளிப் பருகினேன் அமுத பானம் .....!!
*********************************************************************
தவற வைத்தது மோகம் 

கட்டவிழ்ந்து தறிகெட்ட மனதால் 

பாரமாய் அழுத்தியது சோகம் ....!!
******************************************************************
ஈர்த்தது உந்தன் பார்வை 

அடித்தது விழிகலப்பில் குளிர்காய்ச்சல் 

இழுத்து மூடினேன் போர்வை .....!!

மெய் விடுத்து உயிர் பிரிந்தால் ....!!!



மெய் விடுத்து உயிர் பிரிந்தால் 
மெய்யே பொய்யாய் ஆகுமடா 
சீவன் பிரிந்த பின்னே உடற்கு 
பேர்கூட சொந்த மில்லையடா ....!! 

நிலையா யாக்கை உணரா மனமும் 
நான்தான் எனவே ஆடுமடா 
சர்வம் அடங்கி ஒடுங்கிய பின்னே 
சித்தம் சுத்தி அடையுமடா ....!! 

எளியோர் வதைத்து ஏய்த்துப் பிழைக்கும் 
ஏற்றம் நற்கதி தருமோடா 
கணக்காய் சேர்த்த பொன்னும் பொருளும் 
கடைவழித் துணைக்கு வருமோடா ....?? 

பாதகம் செய்யும் பாவியர் நெஞ்சில் 
பதற்றம் சிறிதும் இல்லையடா 
பேராசைப் பிடியுள் சிக்குண்டு நாளும் 
பேரிடர் பட்டே உழலுமடா .....!! 

மாயையின் ஈர்ப்பில் கவரப் பட்டு 
மானுட மதியும் மயங்குதடா 
மார்ச்சரியம் புகுந்த இதயம் இறுகி 
மனிதம் மறைந்தே போனதடா ....!! 

முதுமையில் தாய்தந்தை பேணாப் பிள்ளை 
மண்ணில் பிறந்ததே பாவமடா 
முத்தமிழ் உணரா தமிழன் நிலையும் 
முகவரி தொலைத்த தேடலடா ...!! 

அன்பெனும் வித்து விதைக்கப் பட்டால் 
அகிலத்தில் அமைதி நிலைக்குமடா 
அதிகார வர்க்கம் வேரோடு அழிந்து 
அடிமை நிலையும் மாறுமடா ....!! 

புதுமைப் பெண்கள் புலமையில் சிறக்க 
புன்னகைப் பூக்கள் மலருமடா 
புவனம் முழுதும் அன்பின் அலையால் 
புனிதம் அடைய வேணுமடா ....!!!

அமுதாய்க்கவி பிறக்கும் ....!!!



மலைமேனியில் முகில்தூங்கிடும் வனப்பில்மனம் குதிக்கும் ! 
அலையாடிடும் தரங்கந்தனில் அழகாய்நுரை மிதக்கும் ! 
இலைமேல்பனி உருண்டோடிட இயலாமலுந் தவிக்கும் ! 
கலைகொஞ்சிடும் எழிற்சிற்பமும் கனிவாய்விழி திறக்கும் ! 

நதிபாய்கையில் கரைநாணலும் நனிவீசிடக் குளிரும் ! 
மதிதாரகை புடைசூழ்ந்திட வலம்வந்தது களிக்கும் ! 
புதிதாய்வளி வருடிச்செல பொலிவாயுளம் சிரிக்கும் ! 
அதியற்புதம் விழிகாண்கையில் அமுதாய்க்கவி பிறக்கும் ! 


( இது அதிகரீணி வகையிலான கலி விருத்தம் ) 

புளிமாங்கனி + புளிமாங்கனி + புளிமாங்கனி + புளிமா

Wednesday, September 9, 2015

ஓம் நமசிவாய ....!!!




நான்மறை போற்றும் நாயகா வாழ்க 
நால்வரும் பாடிய நாதனே வாழ்க 
நாற்கவி பேசிடும் நாதமே வாழ்க 
நாதாந்த சோதியின் நல்லொளி வாழ்க ....!!!

தேகம் சிலிர்த்திடநீ சீண்டு .....!!




ஆகாய ஓடையிலே அம்புலியும் நீந்திடும் 
வாகாக விண்மீன்கள் வட்டமிடும் - நோகாமல் 
மேகமே மூடிடு வெண்ணிலவை மையலாய்த்
தேகம் சிலிர்த்திடநீ சீண்டு  

Tuesday, September 8, 2015

இதமாய் வருடிடுமே ....!!!

தமிழுக்கென பணியாற்றிடும் தமிழன்பரின் படைப்பில்
அமிழ்தின்ருசி குறைந்தேவிடும் அருமைக்கவிச் சுவையில் 
சிமிழுள்திரி  ஒளிவீசிடும் சிவப்புச்சுட ரழகாய் 
இமைமூடிட விழிமுன்வரும், இதமாயொரு சுகமே !


( இது அதிகரீணி வகையிலான கலிவிருத்தம் !
  புளிமாங்கனி + புளிமாங்கனி + புளிமாங்கனி + புளிமா )

Monday, September 7, 2015

மஞ்சுள மேனியளை வாழ்த்து .....!!!



சஞ்சலம் தீர்க்கும் சமய புரத்தாளை 
நெஞ்சுருக வேண்டிடில் நிம்மதி கிட்டிடும் 
தஞ்சமடைந் தால்காப்பாள் தாய் . 

மஞ்சள் முகத்தாள் மலர்ப்பதம் பற்றிடில் 
வஞ்ச மகலும் வருந்துயர் தோற்றோடும் 
பஞ்சம் விலகும் பயந்து . 

கஞ்ச மலரால் கனிவுடன் அர்ச்சிக்க 
அஞ்சே லெனவே அபய மளித்திடும் 
மஞ்சுள மேனியளை வாழ்த்து . 


வெள்ளொத் தாழிசை 
``````````````````````````````` 
சிந்தியல் வெண்பாக்கள் மூன்று சேர்ந்து ஒரே பொருளைத் தாங்கிவரின் அதனை வெள்ளொத் தாழிசை என்பர். ஒரு கருத்தை அடியொற்றி மூன்று சிந்தியல் பாக்கள் புனைதலே வெள்ளொத் தாழிசை எனவும் கொள்ளலாம்.

Tuesday, September 1, 2015

வதைக்கிறாய் நெஞ்சுள் மலர்ந்து ....!!!




இலைமறைக் கன்னியோ இன்பத்தேன் ஊற்றோ
சிலையெழிற் சிற்பமோ செப்பு - தலைவி !
கதைபேசும் கண்களில் காந்தமோ கள்ளோ
வதைக்கிறாய் நெஞ்சுள் மலர்ந்து .

பேசும் விழிகள் !




மயக்கும் விழிகளோ மௌனமாய்ப்  பேச
தயவாய் இதயம் தவிக்கும் - வயலுள் 
கயலாய் மிதந்திடும் கண்ணின் மொழியில் 
வியந்து மறந்திடும் மெய் .