Wednesday, July 19, 2017

மெல்லினமாய் ஒரு மெல்லிசைப் பாடல்சங்கு கழுத்தினில் தங்க மணிச்சரம்
அங்க மழகாக்கும் ! - அதில்
பொங்கும் சிரிப்பது மங்கைக் கனியிதழ்
தங்கும் வரமாகும் !

கஞ்ச மலரென வஞ்சி முகமதில்
மஞ்சள் களைகூட்டும் ! - அவள்
கொஞ்சு மிளமையும் நெஞ்சம் கவர்ந்திட
கெஞ்சி உறவாடும் !
செண்டு மலர்மணம் கொண்ட வனிதையின்
கெண்டை விழிபேசும்! - அவள்
வண்டு கருவிழி கண்ட அவன்மனம்
உண்டு பசியாறும்!
சிந்து மழையினில் சிந்தை குளிர்ந்திட
சொந்தம் வலுவாகும் ! - அவள்
சந்த மிசைத்திட வந்த கவியதும்
முந்தி விளையாடும் !
செம்மை யழகுடன் கும்மி யடிப்பவள்
கம்மல் அசைந்தாடும் ! - கவிக்
கம்பன் உறவென அம்மன் வடிவென
நம்பிக் கதைபேசும் !
மின்ன லிடையினைப் பின்னல் தழுவிடச்
சின்ன யிதழ்கூசும் ! - அவள்
கன்னல் மொழியினில் தன்னை யிழந்தவன்
இன்பம் பலவாகும் !
சியாமளா ராஜசேகர்

Tuesday, July 18, 2017

என் காதல் ரோசாவே .....!!!என்காதல் ரோசாவே ஏன்தவிக்க விட்டாய் 
****ஏங்குமுளம் உன்நினைவில் எங்கேநீ சென்றாய் ?
புன்னகைத்த பைங்கிளியே பொங்குதடி உள்ளம் 
****பொலிவிழந்து போனாயோ புரியவில்லை கள்ளம் !
சென்றவிடம் சொல்லாமல் செயலிழக்கச் செய்தாய் 
****செந்தூரப் பொட்டழகே தெரிந்துமுயிர் கொய்தாய் !
மின்னுமெழில் முகங்கண்டு  மிகவுடைந்து நின்றேன் 
***மெட்டியொலி சத்தத்தில் மெய்விதிர்த்தேன் நானே  !

சியாமளா ராஜசேகர் 

கிழக்கால கதிரவனும் ......!!!


கிழக்கால கதிரவனும் 
     கெளம்பிமேல வருகுது !
அழகான வெண்ணிலவ 
     அனுப்பிவிட்டுச் சிரிக்குது !
கழனியிலே காத்தடிக்கக்
      கதிரெல்லாம் அசையுது !
வழக்கம்போல பசுங்கொடியில் 
     மல்லிமொட்டு விரியுது  !

கூரமேல ஏறிநின்னு
     கொண்டச்சேவல் கூவுது !
ஈரக்காத்து எதமாக 
    இதயத்த நனைக்குது !
வீரபாண்டி கோயிலிலே 
     வெள்ளிமணி ஒலிக்குது !
சாரப்பாம்பு பொந்துக்குள்ள 
     சலசலத்து ஓடுது !

தூங்குமூஞ்சி மரமெல்லாம் 
     சுருண்டயில திறக்குது !
பூங்குயிலும் ராகத்தோடு 
     பூபாளம் பாடுது ! 
மூங்கிலிலைப்  பனித்துளியும் 
     முத்தாக மின்னுது !
தேங்கிநிக்கும் குளத்தினிலே 
     செங்கமலம் சிரிக்குது !

மாமரத்துக் கிளியழகா 
     மாங்காயக் கொறிக்குது !
சாமரமும் வீசினாப்போல் 
    சாஞ்சகிளை ஆடுது !
பூமணக்கும் தென்றலிலே 
     புதுராகம் கேக்குது !
தாமரையும் இதழ்விரிக்கத் 
     தவிப்போடு பாக்குது ! 

சியாமளா ராஜசேகர் 

Monday, July 17, 2017

பொங்கிடு தமிழா ....!!!

நாட்டினில் நடக்கும் வன்முறை கண்டால் 
        நரம்பொடு நாடியும் துடிக்கும் !
சூட்டுடன் எதிர்த்தால் ஆணவ அரசோ 
     தொல்லைகள் ஆயிரம் கொடுக்கும் !
தீட்டிய திட்டம் சரியிலை  யெனினும் 
     செயல்பட வைத்தது நெருக்கும் !
கூட்டிய வரியால் மக்களின் நெஞ்சைக் 
      கூரிய ஈட்டியாய்ப் பிளக்கும் !

விற்பனை யாகும் கலப்படப் பொருளால் 
     விளைவுகள் பயங்கர மாகும் !
பற்றுடன் தமிழைப் பேசிட மறப்போர் 
      பாசமும் போலியாய்த் தோன்றும் !
நற்றமி ழறிந்தும் அறிந்திடாற் போல 
       நாவினில் ஆங்கிலம் உருளும் !
பெற்றவர் தம்மைக் காப்பகம் அனுப்பும் 
      பிள்ளையும் மிருகமாய்த் தெரியும் !

தஞ்சையின் கதிரா மங்கலம் நிலையால் 
      தவித்திடும் மக்களின் நெஞ்சம் !
வஞ்சியர்க் கிங்கே இழைத்திடும் கொடுமை 
     வதைத்திடும் உளத்தினை நித்தம் !
நஞ்சென மாறும் ஆலைகள் கழிவால்
      நதிகளும் பொலிவினை இழக்கும் !
பஞ்சமும் தோன்ற பட்டினிச் சாவால்
     பகைமையும் போட்டியும் பெருகும் !

வறுமையின் பிடியில் உழவனின் வாழ்வும் 
      மண்மிசை நரகென உழலும் !
உறுதியாய் நின்று துணிவுடன் எதிர்த்தும் 
      உண்மைகள் ஊமையாய் உறங்கும் !
இறுகிடும் இதயம் சாதியத் தீயால் 
      இறுதியில் தன்னுயிர் இழக்கும் !
சிறுமைகள் கண்டு பொங்கிடு தமிழா 
      சீறிடும் சிங்கமாய்ச் சிலிர்த்தே ! 

சியாமளா ராஜசேகர் 


Thursday, July 6, 2017

பாசமலரே ..... ராஜகுமாரா ....!!!

ராஜகுமாரா .....!!!!
**************************

மறைந்தேநீ  போனாலும் மறந்திடவே  இல்லையடா 
உறைந்துவிட்டாய் உள்ளத்தில் உயிருருகித் துடிக்குதடா 
இறைநிலையை எட்டிவிட்டாய் இரவுபகல் துணையிருப்பாய்  
குறையின்றிக் காத்திடுவாய் குலம்விளங்கச் செய்திடுவாய் !

ஆண்டொன்று போனாலும் ஆறுதலே இல்லையடா 
காண்பதெல்லாம் உன்னுருவாய்க் கண்முன்னே தோன்றுதடா 
தூண்போலத் தாங்கிநின்றாய் துயரின்றி மகிழ்ந்திருந்தேன் 
மீண்டுமுனைத் தரிசிக்க விழியிரண்டும் ஏங்குதடா !

நீயில்லா உலகத்தில் நெஞ்சத்தில் அமைதியில்லை 
கோயிலுக்கும் செல்லவில்லை கொண்டாட்டம் ஏதுமில்லை 
தீயிடையே மெழுகினைப்போல் தினந்தினமும் உருகுகின்றேன்  
வாயிருந்தும் பேச்சுவர மறுப்பதைநீ  அறியாயோ ?

சமைத்தாலும் ருசிக்கவில்லை சாப்பிடவும் மனமில்லை 
இமைக்கதவை மூடிடினும் இதமான உறக்கமில்லை 
சுமையான பயணத்தில் சுரத்தின்றித் தவிக்கின்றேன் 
அமைதியினை அளித்திடவே அருவமாயென் அருகிருப்பாய் !

வற்றாத கருணையுடன் வள்ளலைப்போல் வாழ்ந்தவனே 
சற்றேனும் இளகாயோ தைரியத்தை வழங்காயோ 
பெற்றவளென் துயர்கண்டால் பிரிவுக்கும் அழுகைவரும் 
பற்றதிகம் வைத்ததனால் பரிதவித்துக் கிடக்கின்றேன் !

உற்றாரோ(டு) உறவினரும் உனைநினையா நாளில்லை 
கற்பிப்பாய் மேலிருந்தே கடமைகளை ஆற்றிடவே 
நற்றமிழால் வாழுகிறேன் நனைந்தவுளம் தேறுகிறேன் 
மற்றெதுவும் வேண்டுகிலேன் வழிகாட்டு கண்மணியே  ....!!!

அம்மா 
சியாமளா ராஜசேகர் 
Wednesday, June 28, 2017

மீட்டிடுவேன் அன்பாலே ...!!!மலரோடு மலரானாள்
    மனத்தோடு மணமானாள்
நிலத்தோடு நடைபோடும் 
    நிழலாகத் துணையானாள்
புலர்காலைப்  பொழுதினிலே 
    புதுக்கவிதை போலானாள்
உலவாத மலைமீதில் 
    உருமாறும் முகிலானாள் !

இரவோடு நிலவானாள்
    இதயத்தின் துடிப்பானாள்
சுரமெழுள் ஒலியானாள்
    சுகமான இசையானாள்
பிரதான மூச்சானாள்
    பிரியமான  சகியானாள்
விரலோடு வீணையைப்போல் 
     விளையாடும் உறவானாள் !

துவளாத கொடியானாள்
     துவர்க்காத கனியானாள்
கவலைக்கு மருந்தானாள்
     கருணைக்கு மொழியானாள்
உவமைக்குக் கருவானாள்
     உயிருக்கும் உயிரானாள்
புவனத்தில் பூப்போலே 
    பொலிவான பெண்ணானாள் ! 

வயலோடு வளிவீச 
    வருடிவிடும் சிலிர்ப்பினைப்போல் 
கயலாடும் விழியாலே 
    காதலுடன் அவள்பார்க்க
மயங்கிவிட்ட இதயத்தால் 
   மன்மதனாய்க் கிறங்கிநின்றேன் 
வியக்கவைக்கும் மெல்லிசையாய் 
     மீட்டிடுவேன் அன்பாலே  !!!

சியாமளா ராஜசேகர் 

Tuesday, June 27, 2017

இதயத்தை அள்ளிடுதே ....!!!!


இளங்காலைப் பொழுதினிலே 
     இனியவளாம் மதிமறைய 
களங்கமின்றிக் குளித்தெழும்பும் 
     கதிரவனின் ஒளியினிலே 
பளபளக்கும் நதியலையும் 
      பையவந்து கரைதழுவ 
உளமெங்கும் புத்துணர்வில் 
      உற்சாகம்  பெருகிடுதே   !

பொன்னொளிரும் மேகங்கள் 
      புதுப்பெண்ணாய் விண்ணுலவத் 
தென்னையிளங் கீற்றதுவும் 
      தென்றலிலே அசைந்தாடக் 
கன்னலெனக் குரலெழுப்பிக் 
     கருங்குயிலும் சுதிகூட்ட 
இன்பவெள்ளம் பொங்கிடுதே 
      இதயத்தை அள்ளிடுதே !