Tuesday, March 30, 2021

இதழகல் நேரிசை அகவல்....!!!


நின்னை நினைத்தே நின்றே னிங்கே
தென்னங் கீற்றில் தென்றல் காற்றாய்
அழகே சிலையே அழைத்த கணத்தில்
எழிலிடை யாட இழைந்த இசையாய்
அங்கயற் கண்ணியே அங்கே
தங்கத் தேராய்த் தங்கி னாலென்?
சியாமளா ராஜசேகர்

மங்காச் செல்வம் ...!!!

 இதழொட்டும் நிலைமண்டில ஆசிரியப்பா ....!!!

வளியாய் வருடும் மனத்தை மயக்கும்
களைப்பை விரட்டும் கவலை தீர்க்கும்
மழலை என்னும் மங்காச் செல்வம்
மழைபோல் பொழியும் வற்றா இன்பம்
வீட்டில் பெருகிட விளையும் சுகத்தைப்
பாட்டில் விதைத்தேன் பாசத் தோடே!!
சியாமளா ராஜசேகர்

ஞாயிறே போற்றி ...!!!

 விடியலைப் போற்றி பொழிப்பெதுகை அமைந்த நிலைமண்டில ஆசிரியப்பா !!

****************************************************************
இரவில் சூழ்ந்த இருளை விரட்டக்
கருணை யுடனே கரங்கள் நீட்டி
ஒளியால் மெழுகி உளமது வியக்கக்
களையாய்க் கிழக்கில் களிப்புட னெழுந்தாய் !
உயிர்கள் வாழ்வில் உயர்வை யெட்டத்
தயக்க மின்றி தயைநீ புரிந்தாய் !
ஓயுமோ நின்பணி? ஓயா துழைக்கும்
நாயக! வானொளிர் ஞாயிறே வாழியே!!
சியாமளா ராஜசேகர்

Tuesday, January 12, 2021

வண்ணம் -123

 வண்ணம்: 123

****************
தான தத்த தான தத்த
தான தத்த தனதானா ( அரையடிக்கு )
மாம னுக்கு வாச மிக்க
மாலை யிட்டு மகிழ்வேனே
மாதெ னக்கு வீட ளித்து
வாழ்வு கிட்ட அருள்வானோ
நாம ணக்க யாழி சைத்து
நானு ரைக்க வரும்போது
நாவி னிக்க வாசை முத்து
நாடி யத்த னிடுவானோ
ஊமை யொத்த பேதை மெச்ச
ஊரை விட்டு வருவானோ
ஊடி நிற்கு மாறு சொக்க
ஊர டக்கி விடுவானோ
வீம முற்ற போது கட்டி
மீசை குத்த வணையானோ
மேனி தொட்டு மார்ப ணைக்க
வேறு சொர்க்கம் அறியேனே !!
வீமம் - அச்சம்
சியாமளா ராஜசேகர்

அம்மா ....காரிகை ..!!!

 அம்மா எனத் தொடங்கும் அகம், புறம் பற்றிய காரிகை...!!!

அம்மா ( அகம் )
அம்மா மனத்திலும் ஆசை வளர்த்தவென் ஆரணங்கே
சும்மா நினைக்க சுகத்தி லிதயந் துடிக்கிறதே
செம்மா துளைவாய்ச் சிரிப்பில் கவிழ்த்துச் சிறைபிடித்தாய்
எம்மா துமுனக்கீ டில்லை யறிந்தேன் எனதுயிரே!
அம்மா ( புறம்)
அம்மா மகனையும் அப்ப னுடனே அனுப்பிவைப்பாள்
தம்மின் உறுதியாய்த் தாய்நாடு காக்கத் தனித்திருப்பாள்
வம்போ வழக்கோ துவளாது தானே வகையறிவாள்
வெம்பும் நிலையிலும் வீரம் விதைக்க விழைபவளே !!
சியாமளா ராஜசேகர்

அம்மா ...!!!

 அம்மா

அம்மா எனவே அழைத்தால் உடனே அகமகிழ்வாள்
சும்மா விருப்பினுஞ் சோறு கொடுத்துச் சுமைபொறுப்பாள்
இம்மா நிலத்தில் இவள்போல் இதயம் எவர்க்குமிலை
தம்மா லியன்றதைத் தானாகச் செய்வாள் தயவுடனே !!
சியாமளா ராஜசேகர்

சந்தக் கலிவிருத்தம் ...!!!

 கண்ணாவென அழைத்தாலவன் கனிவாயுடன் வருவான்

பண்ணால்புகழ் பாடுங்குரல் கேட்டாலவன் மகிழ்வான்
கொண்டாடிடு முளம்பூத்திடக் குழலாலிசை பொழிவான்
விண்தாரகை யொளிவீசிட வெண்முத்தெனச் சிரிப்பான் !!
சியாமளா ராஜசேகர்

வஞ்சி விருத்தம்

 தந்த தந்த தனதானா ( வஞ்சி விருத்தம்)

தொந்தி கொண்ட கணநாதா
முந்தி வந்து துயர்தீராய்
எந்தை யுன்ற னருளாலே
குந்த கங்கள் விலகாதோ ?
சியாமளா ராஜசேகர்

அறுசீர் விருத்தம்

 அடிதோறும் முதற்சீர்கள் கனிச்சீராய் (காய்ச்சீர் ) அறுசீர் விருத்தம்

ஆடும்மயில் மீத மர்ந்தே
ஆவல்மிக வோடி யிங்கு
வேடர்மக ளோடு வந்து
வீணர்களைத் தான ழித்து
வாடும்மகள் பிழைபொ றுத்து
வாசல்வர வேண்டு கின்றேன்
பாடும்பணி யைத்தா வேலா
பாதம்பணிந் திடுவேன் யானே !!
சியாமளா ராஜசேகர்

இதழகல் கலிவிருத்தம்


(கண்ணே - கனியே)
கண்ணே யிளங்கிளியே காதற் கலையழகே
எண்ணச் சிறகினிலே ஏறிச் சிலிர்த்தனனே
செண்டை யிசைநயத்தில் தென்றல் நடைதளரக்
கண்ணில் கதையிணையக் கண்டேன் எழிற்கனியே!
சியாமளா ராஜசேகர்

பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

காய் காய் காய் காய் தேமா
காய் காய் காய் காய் தேமா
வண்டொன்று தேனுண்ண மலர்நாடி பறந்துசெலும் வேளை
வனப்பான சோலைதனில் மணம்பரவும் இளமஞ்சள் மாலை
மண்மணமும் நிறைந்திருக்க வளியிதமாய் வருடிவிட்டுக் கொஞ்சும்
மழைவருமென் றறிவிக்கும் வானவில்லில் பறிபோகும் நெஞ்சம்
கண்ணிரண்டு காத்திருக்கும் காதலுடன் அவள்வரவை நாடி
கனவுகளும் கற்பனையும் கலந்துவரக் கவிதைகளைப் பாடி
வண்ணவண்ண சிறுமலர்கள் மயக்குகின்ற அவன்குரலில் தஞ்சம்
மழைவருமுன் வஞ்சியவள் வருவாளோ என்றுமனம் கெஞ்சும் !!
சியாமளா ராஜசேகர்

சந்தக் கலிவிருத்தம்

 சந்தக் கலிவிருத்தம்

தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி தேமா
ஆலாபனை நான்பாடிட ஆடுங்கொடி யேந்திக்
கோலாகல மாய்வேலொடு கூத்தாடிட வாராய்
சூலாயுத மேந்தும்பிறை சூடன்மக னாரே
வேலாவுனை நாளுந்தொழ மேலாம்நிலை தாராய் !
சியாமளா ராஜசேகர்

கண்ணோடு காண்பதெல்லாம்...!!!

 அடிதோறும் தலையாகு எதுகை, இயைபுடன் எண்சீர் விருத்தம்....!!!

கண்ணோடு காண்பதெலாம் சொந்த மில்லை
காதலென்ற பாதையிலே முள்ளு மில்லை
பெண்ணோடு சொன்னதெலாம் உண்மை யில்லை
பித்தாக்கு மென்பதுவும் பொய்யு மில்லை
விண்ணோடு மேகத்திற்(கு) ஊட லில்லை
வெண்ணிலவு விளையாடத் தடையு மில்லை
மண்ணோடு வானுக்குக் கோப மில்லை
மழைநனையு மின்பத்திற் கெல்லை யில்லை !!
சியாமளா ராஜசேகர்

பன்னிருசீர் விருத்தம்...!!!

 பன்னிருசீர் விருத்தம்


விளம் மா விளம் மா
கூவிளம் தேமாங்காய் ( அரையடிக்கு )
செந்தமி ழாலே செந்திலாண் டவனின்
சேவடி போற்றேனோ ?
சிந்தையில் பூக்கும் பாடல்கள் கேட்டுச்
செம்முகம் பூப்பானோ ?
வந்தவர்க் கெல்லாம் அருள்மழை பொழியும்
வள்ளிம ணாளாவா !
மாயையை நீக்கி மயக்க மறுத்து
மாண்பினை நீயேதா !
கந்தனைப் பாடும் கடலலை யாவும்
காலடி பற்றாதா ?
காவடி யெடுத்துச் சேந்தனை யழைக்கக்
காவலாய் வாராயோ ?
அந்தகன் வருமுன் அவனைவி ரட்டும்
ஆறுதல் நீதானே !
அன்னையின் கரத்தால் வேலினை வாங்கி
அன்பொடு காப்பாயே !
சியாமளா ராஜசேகர்

வண்ணம் _ 122

 எழுசீர் வண்ண விருத்தம் : 122

தனதான தான தனதான தான
தனதான தான தனதானா
அலையோடு சேலு மினிதாக நாளு
மழகாக ஆடி உறவாடும்
வலைமீது வீழ வெளிதாக வோடி
வளமாக வாழு மதுதானும்
நிலவோடு வானு மிரவோடு கூட
நிறைவாக மூடு முகிலோடே
தொலைதூர மீனி னொளிவீசு மாறு
சுகமாக நீரி லுலவாதோ ?
சியாமளா ராஜசேகர்

வெண்பாத்துணர் ( தமிழ் - அமிழ்து)

 வெண்பாத்துணர் ( தமிழ் - அமிழ்து)

குறள் வெண்பா...!!
தமிழி னினிமைபோல் தாரணியி லுண்டோ
அமலம் நிறைந்த அமிழ்து .
(அமலம் - தூய்மை)
நேரிசை சிந்தியல் வெண்பா....!!!
தமிழ்மறை யொன்றே தலைசிறந்த நூலாய்த்
தமிழர் புகழ்பறை சாற்றும் - தமிழாள்
அமர்ந்துபரி மாறும் அமிழ்து.
இன்னிசை வெண்பா .....!!!
தமிழுக் கிணையே தரணியில் இல்லை
இமையவர் தாமும் இனிதே சுவைக்கும்
மமதை அழிக்கும் மருந்தாய் விளங்கும்
அமைதி மிகுந்த அமிழ்து .
அமைதி - மாட்சிமை
நேரிசை வெண்பா.....!!!
தமிழ்நதி பாயும் தமிழ்மணம் வீசும்
உமையாள் அரசாளும் ஊராம் - அமைதியாய்ச்
சங்கம் வளர்த்த தமிழாய்ப் பொழிந்திடுவாள்
அங்கயற் கண்ணி அமிழ்து.
நேரிசை பஃறொடை வெண்பா ....!!!
தமிழ்ச்சுவை போலும் தனிச்சுவை எங்கும்
தமிழரே கண்டிலர் தாயே ! - தமிழன்னாய்!
ஏற்றமென்றும் தந்தே இதயம் குளிர்விப்பாய்
போற்றி வணங்கிட பூரிப்பில் - ஊற்றாய்ப்
பெருகி உலகில் பெருமையுறச் செய்யும்
அருந்துயர் தீர்க்கும் அமிழ்து .
சியாமளா ராஜசேகர்

இரட்டுற மொழிதல் வெண்பா....( வான், நடிகை )

 இரட்டுற மொழிதல் வெண்பா....( வான், நடிகை )

ஒளிபாய வந்துகொட்டி உள்ளம் நனைக்கும்
களிப்பளிக்கும் யாவரும் கண்டால் - அளவிலா
ஆனந்த மள்ளித் தெளிக்கும் திரைதோன்றும்
வானுக்கொப் பாம்நடிக்கும் மாது.
நடிகை
********
1. கேமரா ஒளிபட்டதும் வசனம் வாயினின்று கொட்டும்.
2. பார்ப்பதும் உவகைதான்
3. மட்டற்ற மகிழ்ச்சி கிட்டும்.
4. வெள்ளித்திரையில் தோன்றுவார்.
வான்
******
1.மின்னலுக்குப்பின் மழை கொட்டும்.
2. பார்த்தாலே உள்ளம் நனையும்.
3. மிக்க மகிழ்ச்சி தரும்.
4.வானில் மேகம் திரைபோடும்.
சியாமளா ராஜசேகர்

மெல்லின வெண்பா...!!!

 மெல்லின வெண்பா...!!!

**************************
வஞ்சியவ ளன்பினில் வஞ்சமென்ன கண்டனை
நெஞ்சினி லென்றென்றும் நின்பதமே - தஞ்சமென்று
நம்பிவந்த பைங்கிளியை நஞ்சுண்டோன் மைந்தனே
எம்பெருமா னுன்பதில்சொல் லிங்கு.

முன்முடுகு வெண்பா ( தத்ததன)

 முன்முடுகு வெண்பா ( தத்ததன)

உற்றதுணை அத்தையென உச்சிதனை முத்தமிட
வெற்றிவழி சுட்டிமகிழ் வித்தவளை - உற்றளவு
கண்கலங்கா மல்வைத்துக் காப்பாற்றும் நல்வழியைக்
கண்மூன் றுடையவா காட்டு.
சியாமளா ராஜசேகர்

பொழிப்பெதுகை அமைந்த பஃறொடைவெண்பா ...!!!

 பொழிப்பெதுகை அமைந்த பஃறொடைவெண்பா ...!!!

எத்திக்கும் முன்னிற்கும் இத்தரணி யேவியக்கும்
முத்தமிழின் பேரழகு முத்தொளிரும் - நித்தம்
களைப்பகற்றும் கன்னலாம் கன்னித் தமிழே
இளமையா யென்று மெளிதாய் - வளமையாய்
முப்பாலில் பூத்திருக்கும் முப்போதும் நெஞ்சள்ளிச்
செப்பனிடும் வாழ்வெனச் செப்பு.
சியாமளா ராஜசேகர்

அடிதோறும் முற்று மோனை அமைந்த வெண்பா ....!!!

 அடிதோறும் முற்று மோனை அமைந்த வெண்பா ....!!!

கன்னல் கனிரசமே கற்கண்டே கட்டழகே
சின்னவிதழ் தீண்டிச் சிலிர்ப்பூட்டுந் - தென்றலால்
புன்னகையில் பூத்த பொலிவுமிளிர் பொற்சிலையே
என்மனத்தி லென்று மிரு .
சியாமளா ராஜசேகர்

இதழ்குவி வெண்பா ...!!!

 இதழ்குவி வெண்பா

************************
அறுபடை வீடுடை ஆறு முகத்தோன்
உறுதுணை யாய்வருவா னோடி! - நறுமலர்
சூடிய தோள்களும் சொக்கும் விழிகளோ(டு)
ஆடும் முருக னழகு.
சியாமளா ராஜசேகர்

இதழகல் வெண்பா

 இதழகல் வெண்பா

*********************
சந்த நடையில் சலங்கை யிசையினில்
கந்தனின் காட்சியே கண்களில் - செந்தணலே
தீயாரைக் கண்டாலே சீறி யெரித்திடத்
தாயாரின் கையிரங்கித் தை.
சியாமளா ராஜசேகர்

வண்ணம் -121 ...!!!

 வண்ணம் : 121

தனதன தனதன தனதானா
தனதன தனதன தனதானா
உமையவ ளொடுநட மிடுவோனே
உயர்கதி தரவரு மிறையோனே
எமபட ரணுகுமுன் விடைமீது
எளியனும் நலம்பெற விரைவாயே
குமரனு மழகுட னுபதேசம்
குருவென வருளிட மகிழ்வோனே
கமழ்சடை மிசைநதி மதியோடே
கயிலையி லுறைசிவ பெருமானே .
சியாமளா ராஜசேகர்

இதழகல் காரிகை !!!

 தண்ணெழிலே என்ற சீரைக் கொண்ட இதழகல்

காரிகை ....!!!
தண்டை சிலிர்க்கச் சலங்கை யிசையதன் தண்ணெழிலே
கண்ணே கனிச்சாறே காதற் சிலையே கலையழகே
எண்ணங் களிலே இனிதாய் நிறைந்த இளங்கிளியே
செண்டை யதிரத் தென்றலி லாடிச் சிரித்தனையே ! !
சியாமளா ராஜசேகர்

அ வில் தொடங்கி ன வில் முடியும் காரிகை ...!!!

 அ வில் தொடங்கி  ன வில் முடியும் காரிகை ...!!!

அடங்காக் கிருமி அவனியைச் சுற்றி அழித்திடுதே
முடங்கிக் கிடப்பினும் மூச்சை நிறுத்த முனைந்திடுதே
நடக்கும் நிலையிதில் நாட்டின் நலனும் நலிந்திடுதே
விடியல் வரவை விரும்பி இறைவனை வேண்டுவனே!!
சியாமளா ராஜசேகர்

அடிமறி மண்டில காரிகை...!!!

 அடிமறி மண்டில காரிகை

மலையி லருவி வழுக்கி விழுந்து மகிழ்ந்திடுமே
உலவும் நிலவும் உயரே இரவில் ஒளிர்ந்திடுமே
அலைக ளொலியி லமைதி அடங்கி அதிர்ந்திடுமே
மலர்கள் குலுங்கி மணத்தால் இதயம் வருடிடுமே !!
சியாமளா ராஜசேகர்

வாணுதலே...!!!

 வாணுதலே .... வாழியவே ( காரிகை )

வாணுத லேயென் மனத்தைப் புரிந்தால் மகிழ்ந்திடுவேன்
ஆணுல கேபெரும் ஆபத் தெனநீ அறிந்தனையோ?
பேணிடு வேனுனைப் பெற்றவன் போலும் பெருமையுடன்
மாணவி யேநீ வழுவற மாண்புடன் வாழியவே!!
சியாமளா ராஜசேகர்