Monday, November 27, 2017

கதைபேசும் கண்கள் ....!!!

கதைபேசும் கண்களிலே காதல் ஏக்கம் 
      கனிவான பார்வையிலே அகமும் பூக்கும் !
இதயத்தின் ஓசைதனை விழிகள் மீட்டும் 
     இமைமூடி யிருந்தாலும் இதமாய்க் காட்டும் !
முதலாக எண்ணத்தை எடுத்துச் சொல்லும் 
     மொழியின்றி மௌனத்தால் மனத்தை வெல்லும் !
வதனத்திற் கழகூட்டி வசியம் செய்யும் 
     மையிட்ட கண்ணிரண்டும் நெஞ்சைக் கொய்தே !!

சியாமளா ராஜசேகர் 

Saturday, November 25, 2017

எங்கோ இசைத்த பாடலிலே ....!!!



எங்கோ இசைத்த பாடலிலே 
      இதயம் அமைதி கொண்டதடி !
மங்கை யுன்றன் குரல்போலும் 
     மனதை மயங்க வைத்ததடி  !
வங்கக் கடலின் அலையொலியாய் 
     வசியம் செய்து சென்றதடி !
சங்கத் தமிழின் இனிமையைப்போல் 
     சந்தம் கொஞ்சி அணைத்ததடி  !

தனிமை வாட்டும் வேளையிலே 
     தாகந் தீர்க்கும் சுகவிருந்தாய் 
வனிதை உன்றன் தேன்குரலும் 
     வளைய வந்து மோதுதடி !
பனியாய் உருகச் செய்ததடி 
     பன்னீர் மணமாய் நிறையுதடி !
கனிவாய் நெஞ்சை வருடுதடி  
     காற்றில் மெல்லக் கலந்துவந்தே !

தேனை யுண்ட வண்டிசையோ
       தென்றல் பாடும் ராகமிதோ
மீனை யொத்த விழியுடையாள்
      மீட்டும் மதுர கானமிதோ
மோனை எதுகை நயத்தோடு
     முழங்கும் கவிதைப் பாச்சரமோ 
ஊனை யுருக்கி விட்டதடி 
     உள்ளம் உரசிக் கொன்றதடி !

யாழின் இசையும் தோற்குதடி 
      என்றன் நிலையை என்சொல்ல ?
சோழி உருட்டி விட்டாற்போல் 
     சொக்கிச் சிலிர்க்க வைத்ததடி !
தோழி! நீயென் அருகிருந்தால் 
     சோகம் யாவும் மறைந்துவிடும் !
வாழி என்று வாழ்த்திசைக்க 
     வருவாய் வண்ணக் கனவினிலே !!

சியாமளா ராஜசேகர் 

Friday, November 24, 2017

செல்லத் தங்கமே ...!!!


பட்டுவண்ண ரோசாவே 
     பாசமுள்ள பைங்கிளியே !
சிட்டைப்போல் சிரிப்பினிலே 
     சித்திரமா சொலிப்பவளே !
சுட்டுவிரல் பிடித்தபடி 
     சுத்திவரும் சுந்தரியே !
மொட்டுவொண்ணு விரிந்தாற்போல் 
     முத்தத்தில் மலர்ந்தாயே !!

அப்பான்னு அழைக்கையிலே 
     ஆயிரம்பூ பூத்ததம்மா !
உப்புமூட்ட சுமந்தபடி 
    ஊர்சுத்திக் காட்டிடுவேன் !
சொப்புவச்சி விளையாடச் 
     சொல்லிநானும் தந்திடுவேன் !
எப்போதும் ஒன்நினைப்பே 
      இனிக்குதம்மா நெஞ்சினிலே !!

கால்கொலுசு சத்தத்தில்
      கண்முழிச்சிப் பாத்திடுவேன் !
பால்வாங்கி வந்துனக்குப்
     பக்குவமா கொடுத்திடுவேன் !
சேல்கெண்டை மீனாட்டம் 
     சேட்டையிலே துள்ளுறியே !
மேல்விழுந்து நீயாட 
     மேனியெல்லாம் சிலிர்க்குதம்மா !

ரெட்டசடை போட்டுவிட்டு 
     ரிப்பனையும் கட்டிவிட்டு 
சுட்டியுன்ன பாடசாலை 
    சுமந்துகொண்டு போவேனே !
அட்டைப்போல் ஒட்டியேநீ
     அடம்பிடித்தால் ஆகாதே !
கட்டிவெல்லத் தங்கமேநீ 
      கலங்காம செல்லமேபோ !!

சியாமளா ராஜசேகர்  

வீரமங்கை வேலுநாச்சியார் ...!!!



வீரத்தின் விளைநிலமாம் சிவகங்கை யாண்ட 
***வீரமங்கை  வேலுநாச்சி யாரென்னும் ராணி! 
பேரழகுப் பெண்மயிலாள் இளம்வயதி லேயே
***பிறமொழிகள் பயின்றதுடன் இலக்கியமும் கற்றாள்!
பூரணமாய்ப் போர்க்கலைகள் பலவற்றில் தேர்ந்தாள்
***புலிபோலும் வீரத்திற் சிறந்தாளைக் கண்டு 
தீர(ன்)முத்து வடுகநாதன் காதலிலே மூழ்கித் 
***திருமணமும் செய்துகொண்டான் வேலுநாச்சி யாரை !

ஆங்கிலேயப் படையெடுப்பில் வஞ்சகமாய்க் கொன்ற 
***அன்பான தன்பதியின் இறந்தசெய்தி கேட்டுத்
தாங்கொணாத துயராலே உடன்கட்டை ஏறித் 
***தன்னுயிரை மாய்த்திடவே முடிவுசெய்தாள் அவளே !
வேங்கையென வெகுண்டெழுந்து பழிவாங்கச் சொன்ன 
***வீரமருது சகோதரர்கள் அமைச்சருடன் சேர்ந்து 
தீங்கிழைத்த எதிரிகளைத் தீர்த்திடவே எண்ணி 
***திண்டுக்கல் கோட்டைக்குப் பாதுகாப்பாய்ப் போனாள் !

ஆண்வேட மணிந்துசென்று  படையுதவி கேட்க 
***ஐதரலி படைகளையும் உடனனுப்பி வைத்தான் !
மூண்டெழுந்த போருக்காய் உயிர்த்தியாகம் செய்ய 
*** முனைந்திட்ட குயிலியுமை யாள்வீரம் பெரிதே !
மீண்டிடவே முடியாமல் எதிரிகளும் தோற்க 
***வெற்றிவாகை சூடிநின்ற தமிழச்சி தானும்
வேண்டியவர் தன்னிடத்தில் மண்டியிட்ட  தாலே
*** வீரமங்கை மன்னித்தாள்  உயிர்ப்பிச்சை தந்தே !!

சியாமளா ராஜசேகர் 


அன்பின் சின்னம் ....!!!



எழில்கொஞ்சும் அதிசயங்கள் ஏழுள் ஒன்றாய்
***யமுனைநதிக் கரையினிலே வியக்கும் வண்ணம்
அழிவில்லாக் காதலுக்கு சாட்சி யாக
***அகிலத்தில் சிறப்புமிக்க அன்பின் சின்னம்!
பொழிந்தவன்பின் ஆலயமாய்க் கட்டப் பட்ட
***புனிதமான கலைக்கூடம் இஃதே யன்றோ?
விழிவிரிய வைத்திடுமே வேலைப் பாடு
***வெண்பளிங்கு மாளிகைக்கிங் கில்லை யீடே!
சியாமளா ராஜசேகர்

Tuesday, November 21, 2017

குடும்பத்தில் மகிழ்ச்சி பெருக ....!!!


குடும்பத்தில் பெருமகிழ்ச்சி நிலவவேண்டு மென்றால் 
***குறைவில்லாப் பாசமொன்றே  இன்பத்தைக் கூட்டும்  !
கொடுப்பதனால் அழியாத அன்பென்னும் பண்பைக்
***கொண்டிருப்போர் இல்லத்தில் ஆனந்தம் பூக்கும் !
கடுகளவும் சந்தேகம் உட்புகாத வண்ணம்  
***கருணையுடன் அன்பொன்றே அரணாகக் காக்கும் !
தடுமாற்ற மில்லாமல் பயணத்தைத் தொடர 
***தன்னலமில் லாஅன்பே தாயைப்போல் தாங்கும் !

பணமிருந்தும் ஏதோவொன் றிழந்தாரைப் போலப்
***பாசத்திற் கேங்குவோரும் பாரினிலே உண்டே !
உணர்வுகளை வெளிக்காட்டாப் பாசத்தால் கூட 
***உபயோக மில்லையென்றே உணர்ந்திடுவீர் நன்றே !
பிணக்கில்லா வாழ்விற்கு வழிவகுக்கும் அன்பால்
***பேரின்ப மடைந்திடலாம் பிடிவாதம் கொன்றே !
வணக்கத்திற் குரித்தான குணநலனெ தென்றால் 
***மகிழ்ச்சியினை மலரவைக்கும் பாசமென்ற வொன்றே !!

உரிமையான இடத்தினிலும் கோபம்தான் சாபம் 
***உறவுகளின் மேன்மையினை வலுப்படுத்தும் நேசம் !
புரிந்துணர்வு கொள்வதற்கோ உள்ளத்தில் பாசம் 
***பூத்தால்தான் நிறைந்திருக்கும் அகம்முழுதும் வாசம் !
கரியமில வளிநுகர்ந்தால் திணறாதோ சுவாசம் 
***கடுஞ்சொற்கள் உமிழ்ந்துவிட்டால் விளைந்திடுமே நாசம் !
பரிவான வார்த்தைகளே தென்றலாக வீசும் 
***பக்குவமாய் உணர்ந்துகொண்டால் பெருமகிழ்ச்சி சேரும் ! 

கூட்டாக வாழ்ந்திருந்த நிலையிங்கின் றில்லை 
***கோடிகளில் புரண்டாலும் பாசமின்றேல் தொல்லை !
வாட்டமுற்ற மனத்திற்குப் பாசந்தான் மருந்து 
***வாழ்வினிலே ஆனந்தம் அளிக்கும்நல் விருந்து ! 
ஆட்டுவிக்கும் ஆசைகளால் அழிவுதானே மிஞ்சும் 
***அன்புமனம் கனிந்துவிட்டால் மகிழ்ச்சியங்கே தஞ்சம்  !
வீட்டிலுள்ளோர் உள்ளங்கள் பாசத்தால் விரிந்தால் 
***விடைபெற்றுச் சென்றிடுமே துன்பங்கள் விரைந்தே !!




Monday, November 20, 2017

இமயம் கண்டேன் ....!!!


உறைபனிக்குள் உடல்மறைத்து  நிமிர்ந்திருக்கும் அரணாய்
***உதயகாலைப் பொழுதினிலே ஒளிர்ந்திருக்கும் பொன்னாய் !
நிறைந்திருக்கும் நீரோடை வழிநெடுகில் எங்கும் 
***நெடுமரங்கள் விண்முட்ட வளர்ந்திருக்கும் எழிலாய் !
மறைத்துவிடும் உச்சிதனை முகிலினங்கள் தவழ்ந்து 
***மகிழ்ச்சியுடன் உறவாடிக் கடந்துசெலும்  மிதந்து !
இறையவனின் உறைவிடமாய்த்  திகழ்ந்திருக்கும் இமயம் 
***இயற்கைநமக் களித்திட்ட பெருங்கொடைதா னன்றோ  ??

சியாமளா ராஜசேகர் 

Friday, November 17, 2017

இயற்கை - அந்தாதி


கதிர்வரவு கண்ட கமலம் விரிந்து 
நதியலையி லாடும் நயந்து ! - செதில்கொண்ட
கெண்டைமீன் நுள்ளக் கிறங்கிய தாமரையும் 
தண்ணீரில் தள்ளாடும் சாய்ந்து . 1.

சாய்ந்தாடும் தெங்கோலைத் தாலாட்டு கேட்டாற்போல் 
வாய்க்கால் கரையில் வளைந்தபடிப் ! - பாய்ந்துவரும் 
நீரில் முகங்கண்டு நேராய் நிமிர்ந்திடும் 
பூரிப்பில் புன்னகைக்கும் பூத்து. 2.

பூத்திருக்குஞ் சோலையில் பொன்வண்(டு) இசைபாடிக் 
காத்திருக்கும் ஆவலுடன் கள்ளுண்ணப் ! - பாத்திக்குள் 
தேடிவந்து செம்மலரில் தேனுறிஞ்சி விட்டதுவும் 
ஆடியே செல்லும் அழகு ! 3.

அழகிய மேகம் அணிதிரண்டு வந்து 
பழகிய வெண்ணிலவைப் பார்க்கக் -  குழவியாய்க்
கொஞ்சிச் சிரித்துக் குளிர்ச்சியாய்க் காய்ந்திடும் 
நெஞ்சைக் கவரும் நிலவு . 4. 

நிலவும் இரவினில் நித்திரை யின்றி 
உலவிடும் வானில் உவப்பாய்க் ! - கலங்காக் 
குளத்தினில் தானும் குளிக்க விரும்பிக் 
களிப்புடன் முங்கும் கனிந்து. 5. 

கனிவுடன் வந்துமெல்ல கால்வருடிச் செல்லும் 
இனிமைசுகம் வேரெதிலு மில்லை - தனிமையாய் 
நீலக் கடலினில் நீந்தும் அலைகளின் 
கோலயெழில் கண்டிடக் கூடு . 6. 

கூடிவரும் வான்முகிலும் கோலா கலமாக 
நாடிவரும் வானவில்லை நாட்டமுடன் - தேடிவந்து 
பார்த்துப் பரவசப் பட்டிருக்கும் காட்சியில்நம்
சோர்வகன்று கிட்டும் சுகம் . 7. 

சுகமாய் மலைமேல் துயிலும் முகிலும் 
மிகவும் அழகாய் விளங்கும் !- ககன 
வெளியி லுலவிடும் வெண்பனி மேகம் 
ஒளியாய்த் தெரியும் உணர் . 8.

உணர்ந்தால் இயற்கை உலகின் வரமே
இணக்க முடனே இயைந்தால்!- வணங்கிட 
என்று மியற்கையால் ஏற்றம் கிடைத்திடும் 
இன்ப மளிக்கும் இதம்.   9.

இதமான தென்றல் இதயம் தழுவும்  
மிதமான சாரல் விருந்தாய்ப் ! - பதமாய் 
நனைக்கும் மழையில் நமதுளம் பூக்க 
வனையும் கவிதை வரம் . 10. 

Thursday, November 16, 2017

உள்ளமும் நீந்தும்


கரைபுரண் டோடும் காவிரி யாற்றில் 
***கயலுடன் உள்ளமும்  நீந்தும் !
நுரையுடன் அலைகள் மேனியைத் தழுவ 
***நொடியினில் இதயமும் பூக்கும் !
இரைச்சலும் கூட  இருசெவி களிலும் 
***இன்னிசை யாகவே கேட்கும் !
விரைத்திடும் வரையில் நதியினி லாட 
***விழைந்திடும் ஆசையி னாலே !

சியாமளா ராஜசேகர்  

புலவோரே பாடும் ...!!!


குடும்பமுடன் கூடிவாழும் குரங்கினத்தைக் காணீர் 
***கொஞ்சுதமிழ்ச் சொல்லெடுத்துப் புலவோரே பாடீர் !
தடுமாற்ற மில்லாமல் கிளைகளிலே தாவும் 
***தன்னோடு குட்டியையும் சுமந்துகொண்டு போகும் !
படுவேக மாகவது மலைமீதி லேறும் 
***பழந்தின்று பசியாறிக் களிப்பினிலே ஆடும் !
வெடுக்கென்று கைப்பொருளைப் பறித்துக்கொண் டோடும்
***விரட்டிவிட்டால்  முறைத்தவண்ணம் பார்த்திருக்கும் நின்றே !! 

அந்திசாயும் வேளையிலே

அந்திசாயும் வேளையிலே பொன்மஞ்சள் வானில்
***அழகாகச் செங்கதிரும் விடைபெற்றுச் செல்ல
முந்திவரும் முகிலினங்கள் ஓவியமாய்த் தோன்ற

***மோகனமாய் முகங்காட்டும் வெண்ணிலவின் வரவில்
செந்தூர வண்ணத்தில் கவின்மலர்கள் வாசம்
***தென்றலிலே கலந்துவந்து மேனியினைத் தழுவச்
சிந்துகின்ற சாரலிலே சிற்றோடைக் கரையில்
***சிலிர்க்கவைத்த அமைதியிலே மகிழ்ந்ததென்றன் நெஞ்சே!

உணர்வீர் நன்றே !!

பூட்டிவைத்த பொன்பொருளும் நிலைப்பதில்லை என்பதனைப் 
***புரிந்து கொண்டால் 
ஆட்டிவைக்கும் அகம்பாவம் விட்டகன்றே உள்ளத்தில் 
***அமைதி பூக்கும் !
மீட்டெடுக்க இயன்றிடுமோ இழந்துவிட்ட இளமைதனை 
***மெய்யாய்ச் சொல்வீர் !
ஊட்டியூட்டி வளர்த்திடினும் யாக்கைக்கும் அழிவுண்டென்(று)
***உணர்வீர் நன்றே !! 

சிறக்கும் விவசாயம் ....!!


ஏர்பிடிக்கும் கைகளின்று வேலை யின்றி 
***ஏங்கிநிற்கும் அவலநிலை மண்ணில் கண்டோம் !
கார்பொய்த்த  காரணத்தால் பயிர்கள் வாட
***கண்ணீரில் அவர்பிழைப்பும் நசியக் கண்டோம் !
நேர்மையுடன் நம்மரசும் கவனத் தோடு
***நீதியினைத் தக்கபடி வழங்கி விட்டால் 
தீர்வின்றித் தடுமாறும் நிலையும் மாறிச் 
***சீர்பெற்றே விவசாயம் சிறக்கும் நன்றே !  

சியாமளா ராஜசேகர் 

கொஞ்சிடத் தூண்டிடுதே ....!!!


குழந்தையின் முகத்தில் குழிவிழும் கன்னம் 
***கொஞ்சிடத் தூண்டிடுதே !
நிழல்தரும்  மரமாய் நெஞ்சமும் குளிர்ந்து 
***நிம்மதி தோன்றிடுதே !
அழகிய மலரின் அற்புத மணமாய்
***அகத்தினை நிறைத்திடுதே !
மழலையின் மொழியோ மனத்தினை மயக்கி 
***மகிழ்வுறச் செய்திடுதே !

சியாமளா ராஜசேகர் 

Thursday, November 9, 2017

பாதங்களால் நிறையும் வீடு ...!!!

#பாதங்களால்_நிறையும்_வீடு 
******************************************
மணமுடித்து நாலிரண்டு வருடங்கள் ஆனபின்னும் 
மணக்கவில்லை இல்வாழ்வு மழலைவாசம் நுகராமல் !
பிணக்குகளே தொடருமென்றால் பிடித்தமெனக் கிருந்திடுமோ ?
வணங்கிநின்றேன் கண்ணன்முன் வரமெனக்குத் தாவென்றே !! 

கூச்சமின்றி  வார்த்தைகளால் கொட்டிடுவார் தேள்போலே
ஏச்சுகளால் உள்ளுக்குள்  ஏளனத்தால் உறைந்துவிட்டேன் 
மூச்சுமுட்டி சாகுமுன்னே முத்தாக முகிழ்த்துவிட்டாய் 
பேச்சிழந்த என்றனுக்குப் பெரும்பேறாய்க் கிடைத்தாயே !!

பார்க்குமிடம் எங்கிலுமுன் பாதங்கள்  பதிந்திருக்கச் 
சீர்பெற்று விளங்குதடா! சிந்தையதும் மகிழுதடா !
தேர்போலும் அசைந்துவரும் தேவமகன் உனைக்கண்டால் 
நீர்வழிந்த விழிகளுக்குள் நிம்மதியும் தோன்றுதடா !!

பாதங்கள் பட்டவிடம்  பால்வீதி யாயொளிரும்
சீதளமா யுன்குரலில் தேவகானம் கலந்தினிக்கும் 
மூதறிவு மிக்கோனாய் முத்தமிழின் முகவரியாய் 
சோதனைகள் எதிர்கொள்வாய் சுட்டுவிரல் திறத்தாலே !!

குலம்விளங்க வந்தவனே குளிர்வித்தாய் என்னகத்தை
பலமென்னுள் கூடுதடா பட்டதுவும் மறந்ததடா !
மலர்போன்ற மென்பாதம் வளையவரும் போதினிலே 
நிலமகளும் பதந்தாங்க நிறைந்திருக்கும் வீட்டினிலே !!

( மரபு கவிதை - தரவு கொச்சகக் கலிப்பா )

பெயர் : சியாமளா ராஜசேகர்