Thursday, June 20, 2019

சொல்லிடுவாய் ...!!!

கொவ்வையாய்ச் சிவந்தவான் பார்த்துக்
***கொண்டலே! உன்னிடம் கேட்பேன் !
ஒவ்வொரு நிமிடமும் ஏங்கி 
***உனக்கெனக் காத்திருந் தேனே !
அவ்விடம் வந்துசென் றாயாம்
***அறிந்தவர் மகிழ்வுடன் சொன்னார் !
இவ்விடம் வருவதெப் போதாம் 
***இக்கணம் சொல்லிடு வாயே !!

சியாமளா ராஜசேகர் 

ஈற்றடிக்கு வெண்பா ...!!!

வேலை நிறுத்தமென வீணாய்க் கழிக்காமல் 
ஆலைப் பணியாற்றி(டு) அன்றாடம் - வேலையெதும் 
இல்லையேல் பட்டினியால் இன்னுயிர்க்கா பத்ததனால் 
நில்லா(து) இயங்கிடுவாய் நீ. 

ஊருக்குச் சென்றுவர உன்தயவும் தேவைதான் 
நேரும் விபத்துக்கு நீபொறுப்பா? - பேருந்தே! 
மல்லுகட் டாமலே மாநகர வீதிகளில் 
நில்லா(து) இயங்கிடுவாய் நீ. 

வதைக்கும் வலியால் வதங்கி விடாதே 
பதமாய் மருத்துவம் பார்ப்பேன்! - இதயமே! 
வெல்வதற்குன் நற்றுணை வேண்டும்! துடிப்பொடு 
நில்லா(து) இயங்கிடுவாய் நீ. 

தாவிக் குதித்துத் தலையாட்டும் பொம்மையே 
சாவி கொடுத்ததும் சாய்ந்ததேன்? - ஓவியமாய் 
மெல்லவெழு! பேத்தி விளையாட வந்திடுமுன் 
நில்லா(து) இயங்கிடுவாய் நீ.

சியாமளா ராஜசேகர் 

பிறந்தநாள் வாழ்த்து !! (16;::06:2019)

கொஞ்சிப் பேசும் பைங்கிளியோ 
கூவும் இனிய பூங்குயிலோ? 
நெஞ்சை யள்ளும் தேன்சிட்டோ 
நீல வண்ணப் பெண்மயிலோ? 
பஞ்சு போலும் வெண்புறாவோ 
பாச முள்ள மைனாவோ? 
அஞ்சு கம்போல் வளையவரும் 
அழகே உன்பேர் ஆஷினியோ?? 

***************************** 
சின்ன சின்ன ரோசாப்பூ 
சிரித்து மணக்கும் செண்பகப்பூ 
தென்றல் தழுவும் தாழம்பூ 
சிவந்த அழகு தாமரைப்பூ 
புன்ன கைக்கும் முல்லைப்பூ 
பொலிவாய் மலரும் அல்லிப்பூ 
கன்னல் மொழியில் பேசும்பூ 
கள்ள மில்லா ஆஷினிப்பூ!! 

***************************** 

பாசமழை பொழிந்திடுவாள் 
பால்நிலவாய்க் குளிர்விப்பாள்! 
ஓசையின்றி அற்புதமாய் 
ஓவியங்கள் தீட்டிடுவாள்! 
ஆசையொடு தங்கையுடன் 
ஆனந்த நடம்புரிவாள்! 
ஈசனருள் துணையிருக்க இன்புற்று வாழியவே!!! 

வாழ்க வளமுடன் ஆஷினிலேகா 🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹 

அழகு செல்லத்துக்கு அன்பான வாழ்த்துகள்🌹🌹🌹💐💐💐❤❤❤🌷🌷🌷🍫🍫🍫🎂🎂🎂🎉🎉🎉🎁🎁🎁🎈🎈🎈

தாலாட்டு பாடல் ....!!!

ஆராரோ ஆரிரரோ அழகுநிலா கண்ணுறங்கு 
சீராட்டிக் கொஞ்சிடுவேன் சிரித்தபடி நீயுறங்கு 
தீராத ஆசையொடு தேன்தமிழில் நான்பாட
வாராதோ நித்திரையும் வண்ணமயில் நீயுறங்கு !!

புன்னகைக்கும் செங்குருத்தே! பொலிவான பொன்மணியே!
என்னகத்தை நிறைக்கவந்த எழிலான சித்திரமே!
நன்னெறிகள் கற்பித்து நல்லவனாய் வளர்த்திடுவேன் 
அன்னையென்றன் குரல்கேட்டே அச்சமின்றி நீயுறங்கு !!

பட்டுவண்ண ரோசாவே! பால்வடியும் பூமுகமே!
தொட்டுன்னைப் பார்க்கையிலே துள்ளுமென்றன் அன்புமனம் 
கட்டியுன்னை முத்தமிட்டுக் காதோரம் கதைசொல்லித்
தட்டியுன்னைத் தோள்மீது தாங்கிடுவேன் கண்ணுறங்கு !!

தாய்மாமன் அன்புடனே சந்தையிலே உனக்காகப் 
பாய்விரித்தால் வலிக்குமென்று பட்டுமெத்தை வாங்கிவந்தான் 
தேய்வில்லாச் சூரியனே! செங்கனியின் நறுஞ்சுவையே 
வாய்நிறையப் பாடிடுவேன் மனங்குளிர்ந்து நீயுறங்கு !!

சியாமளா ராஜசேகர் 

Wednesday, June 19, 2019

தேவதையே கண்வளராய் ...!!



சிங்காரக் கண்ணே! சின்னஞ் சிறுமலரே!
தங்கச் சிலையழகே! தாவிவரும் பொன்ரதமே!
மங்காத ஓவியமே! வான்தவழ் வெண்மதியே!
பொங்கிவிழும் தேனூற்றே! பூஞ்சாரல் மென்சுகமே!
செங்கரும்பின் இன்சுவையே! செவ்வந்திப் புன்சிரிப்பே!
திங்களின் தண்ணொளியே! சிட்டே! குலக்கொழுந்தே!
சங்கத் தமிழ்மணமே! தாலாட்டு தாய்பாடச்
செங்கமலப் பூமுகமே! தேவதையே! கண்வளராய் !!!
(இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா )
சியாமளா ராஜசேகர்

வாராரய்யா வாராரு கருப்பசாமி வாராரு ....!!!

வாராரய்யா வாராரு - எங்க 
கருப்பசாமி வாராரு !!
வாராரய்யா வாராரு - எங்க 
கருப்பசாமி வாராரு !!
ஊராரின் குறைகேட்க 
ஊர்வலமா வாராரு !!
உருவேற்ற உத்தமனார் 
ஓடோடி வாராரு !!

வீச்சரிவா கையிலேந்தி விழியுருட்டி வாராரு
தீச்செயல்கள் செய்வோரைத் திருத்திடத்தான் வாராரு
சூழ்ச்சிகளை முறியடிக்கச் சூட்டோடு வாராரு
பூச்சூட்டி வணங்குவோரைப் பூரிக்கச் செய்வாரு !!
காற்சலங்கை ஒலியதிரக் கச்சையோடு வாராரு
வேற்றுமைகள் விலக்கிடவே வேட்டையாட வாராரு
ஏற்றத்தைத் தருவதற்கே எடுத்தேறி வாராரு
போற்றுபவர் மனத்திலொளி பொங்கிடவே செய்வாரு !!
முறுக்குமீச அச்சுறுத்த முறைச்சபடி வாராரு
சிறுகொண்டை சாய்ந்திருக்க செருக்கோடு வாராரு
புறப்பட்டுப் புயலாகப் புரவியேறி வாராரு
வறுமைதனை விரட்டிவிட்டு மனங்குளிரச் செய்வாரு !!
சந்தனத்தில் பொட்டுவச்சு சாந்தமாக வாராரு
நொந்தவுளம் தேற்றிடவே நொடிப்போதில் வாராரு
வந்தவினை தீர்ப்பதற்கு மகிழ்ந்தோடி வாராரு
சந்ததமும் நினைப்போரைத் தலைநிமிரச் செய்வாரு !!
தர்ப்பையிலே பிறந்தவரு தனிமையிலே வாராரு
சப்பரத்தில் ஏறினாலும் தன்னிறைவாய் வாராரு
அப்பழுக்கே இல்லாமல் ஆடியாடி வாராரு
குப்பைகளைத் துடைத்துவிட்டுக் குலம்விளங்கச் செய்வாரு !!
பதினெட்டாம் படிகருப்பர் படியிறங்கி வாராரு
மதிமயக்கும் கள்ளழகர் மனம்படித்து வாராரு
துதிப்பவர்கள் துயர்களையத் துள்ளலொடு வாராரு
கதியென்று சரணடைந்தோர் கவலைநீங்கச் செய்வாரு !!
விளைநிலத்தைக் காத்திருக்க வீரனாக வாராரு
இளைத்தோரின் குரல்கேட்டே எளிமையாக வாராரு
வளமாக வாழ்வதற்கு வரங்கொடுக்க வாராரு
விளக்கேத்தி வழிபட்டால் விளங்கிடவே செய்வாரு !!
கம்பீர உருக்கொண்டு கருப்பசாமி வாராரு
செம்பவள இதழ்களிலே சிரிப்பேந்தி வாராரு
பெம்மானாம் கருப்பனாரு பிரம்பேந்தி வாராரு
தம்மைநம்பும் அடியவரைத் தரணிபோற்றச் செய்வாரு !!
சியாமளா ராஜசேகர்

Saturday, June 15, 2019

அன்புள்ள அப்பா ...!!!

அன்புள்ள அப்பா ...!!
***************************
உயிர்தந்தாய் ! முப்போதும் உள்ளத்தி லேசுமந்தாய் !
அயர்விலா நல்லுழைப்பால் அன்றாடத் தேவைகளை
இயன்றவரை ஈடேற்றி ஏற்றம் பெறச்செய்தாய் !
தயவாய் அரவணைப்பில்  தாயையும் மிஞ்சினாய் !
உயர்நெறிகள் கற்பித்தாய் ஒப்பற்ற ஆசானாய் !
பயன்மரமாய் வாழவைத்தாய்! பன்மடங்கு பாசத்தைப் 
பெயலாய்ப் பொழிந்தாய் ! பெரும்பேறு பெற்றதெண்ணி
வியக்கின்றேன் ! எந்தையே ! வேண்டுமுன் ஆசிகளே !!

வழிகாட்டி யாய்விளங்கி வாழ்வை மலர்வித்தாய் !
மொழிப்பற்றை ஊட்டிவிட முத்தமிழும் கற்பித்தாய் ! 
பழிபாவத் திற்கஞ்சும் பக்குவத்தைக் காட்டிவிட்டாய் !
பிழைசுட்டி நற்பண்பைப் பேணும் வகைசெய்தாய் !
விழிப்புடன் தாங்கிடும் வேர்த்திரள் நீயானாய் !
உழைப்பதற் கஞ்சாத ஓய்வறியாச் சூரியனே !
சுழலு முலகில் சுமைகளால் சோர்வுற்றேன் !
தொழுதழைப்பே னுன்னை ! துயர்துடைக்க வாராயோ ?

காயும் முழுமதியைக் காட்டிக் கதைசொன்னாய் !
தாயும் அதைச்சுவைக்கத் தானும் மிகமகிழ்ந்தாய் !
தீயன நீக்கும் தெளிவை உணர்த்தினாய் !
ஆயுள் முடியுமட்டும் அன்பினால் கட்டிவைத்தாய் !
தேயும் பிறைநிலவாய்த் தேகம் மிகமெலிந்தாய் !
நோயிடம் தோற்று நொடிப்போதில் நீமறைந்தாய்  !
பாயும் நினைவுகளால் பாகாய் உருகுகின்றேன்
தூயனே ! என்றும் துணையாய்  இருப்பாயே !!

சியாமளா ராஜசேகர் 
இராயபுரம் 
சென்னை - 600013 

Friday, June 7, 2019

வயலூரில் வாழுமழகே ...!!!


சிங்கார வேலவனே! சக்தியுமை பாலகனே !
தேவர்கள் போற்றுமெழிலே!
செவ்வேலால் செந்தூரில் கொடுஞ்சூர னையழிக்கச்
செஞ்சேவற் கொடியானதே !
தங்கரத மீதினிலே அழகாகப் பவனிவரும் 
சண்முகனே ! காங்கேயனே !
தகப்பனுக்கே உபதேசம் ஏரகத்தில் தான்செய்த
சரவணனே ! சுவாமிநாதனே !
திங்களொடு கங்கைநதி சடையணிந்த பெருமானாம்
சிவனாரின் அருட்செல்வனே !
தித்திக்கும் தெள்ளமுதாம் திருப்புகழில் மெய்மறந்து
திளைக்கின்ற கதிர்வேலனே !
மங்களமாய் வாழ்வளித்து மாங்கல்ய வரம்தந்து
வளம்கூட்டும் மால்மருகனே !
வள்ளியுடன் குஞ்சரியும் வலவிடமாய் இணைந்திருக்க
வயலூரில் வாழுமழகே !!
உதட்டளவில் சிரிக்கின்றேன் உள்ளத்தில் அழுகின்றேன்
உண்மையிதை அறியவில்லையோ ?
ஓங்காரப் பொருளோனே ! ஐங்கரனுக் கிளையோனே !
உடைந்தவுளம் உணரவில்லையோ ?
கதைமுடிந்து போகுமுன்னே கண்முன்னே காட்சிதரக்
கருணையொரு சிறிதுமில்லையோ ?
கள்ளமனம் கரைந்துவிடக் கவிபாடி அழைக்கின்றேன்
கனிவோடு கடைத்தேற்றவா !
சிதைமீதி லெரித்தாலும் மண்ணுக்குள் புதைத்தாலும்
திருவடிகள் பற்றிக்கொள்வேன் !
சினந்தாலும் கடிந்தாலும் காலெட்டி யுதைத்தாலும்
சிரித்தபடி தாங்கிக்கொள்வேன் !
வதைக்கின்ற வலிபோதும் கடைவழிக்குத் துணைவருவாய்
மயிலேறும் மாணிக்கமே !
வயலூரில் எழுந்தருளி அருணைமுனி பாடவைத்த
வடிவான தமிழ்த்தெய்வமே !!
அடியார்தம் மனஞ்சலிக்கச் செய்வதுன்றன் அழகல்ல
அறுபடையின் எழில்நாயகா !
அண்டிவந்தோர்க் காறுதலை அன்புடனே தரமறுத்தால்
அகிலமுனைத் தான்பழிக்குமே !
துடிக்கின்ற இதயத்தை மயிலிறகால் நீவிவிட்டு
துயர்துடைக்க ஓடோடிவா !
சுடரனைய திருமுகத்தின் கடைக்கண்ணைக் காட்டிவிடு
சுகம்பெற்றுன் துதிபாடுவேன் !
படிக்கின்ற திருப்புகழால் பக்குவத்தைப் பெற்றுவிட்டேன்
படியேறிப் பழநிவருவேன் !
பதம்பார்க்கச் சோதனைகள் தந்ததெல்லாம் போதுமப்பா
பதமலரில் சேர்த்துக்கொள்வாய் !
மடிதந்து சேயென்னைத் தாயன்பு கொண்டணைத்தால்
மகிழ்ச்சியுடன் உனைவணங்குவேன் !
வன்னிமர நீழலிலே வரமருளி ஆட்கொள்ள
வந்திடுவாய் வயலூர்வாழ்வே !!
சியாமளா ராஜசேகர்

நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி




பொதிகையிலே புறப்பட்டுப் பொருநை யாற்றில்
***புரண்டுவந்து தேகத்தைத் தழுவுந் தென்றல் !
மதிமயக்கி நாளெல்லாம் தானும் சேர்ந்து
***மலர்களுடன் புதுராகம் பாடுந் தென்றல் !
அதியழகு மலையினின்று துள்ளி வீழும் 
***அருவியிலே தான்நனைந்து குளிருந் தென்றல் !
புதியதொரு சுகந்தந்து சிலிர்க்க வைத்துப் 
***பொலிவான பசுங்கொடியை அசைக்குந் தென்றல் !!
இருள்சூழ்ந்த வேளையிலும் அமைதி கொஞ்ச 
***இதயத்தை இதமாக வருடுந் தென்றல் !
உருவத்தைக் காட்டாமல் மறைத்த வாறே 
***உள்ளத்தைக் கனிவாக உரசுந் தென்றல் !
தருக்களொடு வாஞ்சையுடன் கதைகள் பேசித் 
***தலைகோதித் தாலாட்டி மகிழுந் தென்றல் !
வரும்வழியில் இசைமழையைச் சுருட்டி வந்து 
***மனம்நிறைத்துத் தாளமிட வைக்குந் தென்றல் !
கடலலையில் காதலுடன் கலந்தெ ழுந்து 
***கன்னியரின் உடைகலைக்க உலவுந் தென்றல் !
குடகுமலைச் சாரலொடு மிதந்து வந்து 
***குற்றால அருவியிலே குளிக்குந் தென்றல் !
நடைபழகி மெதுவாகச் சுற்றி வந்து 
***நகரத்தார் மனம்கொள்ளை கொண்ட தென்றல் !
அடடடடா என்னசுக மென்றே பாட 
***அணைத்துவிட்டுச் சொல்லாமல் அகலுந் தென்றல் !!
மல்லிகையின் மொட்டுடைத்து மாலை வேளை
***மணந்திருடித் தன்னோடு கொண்டு செல்லும் !
புல்நுனியில் பனித்துளியை ஆட விட்டுப்
***புன்னகைத்துத் தன்முகத்தைப் பார்த்துச் செல்லும் !
நெல்மணிகள் நிலம்நோக்கித் தாழ்ந்தி ருக்க 
***நிமிர்த்திவிட முட்டிவிட்டு முன்னே செல்லும் !
முல்லைவண்ண முகில்மீது மோகங் கொண்டு 
***முத்தமிட்டே உறவாடுந் தென்றல் காற்றே !!
சியாமளா ராஜசேகர்

தமிழ் வாழ்த்து !

முத்தமிழாய்ப் பூத்தாளை மூச்சில் நிறைந்தாளைத்
தித்திக்கும் தேனாய்த் தெவிட்டா திருப்பாளைப் 
பத்தரை மாற்றுப் பசும்பொன்னாம் தூயவளைப் 
புத்தியைத் தீட்டிப் புகழெய்த வைத்தாளை 
வித்தைபல கற்பித்து வெற்றிக ளீந்தாளை 
இத்தரணி யேவியக்கும் ஈடிணை யற்றவளை
எத்திக்கும் போற்றும் எழில்கொஞ்சும் தாயவளை
நத்தி யுறவாடி நன்றியுடன் வாழ்த்துவனே !!


( இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா)

மாதரியின் புலம்பல் ...!!!



மாதரியின் புலம்பல் ...!!!
* * * * * * * * * * * * * * * * * * *
அடைக்கல மாக வந்தவர் தம்மை
அன்புடன் அணைத்திட விழைந்தேன் !
இடையரின் குலத்தில் பிறந்தவென் வீட்டில் 
இருவருந் தங்கிட மகிழ்ந்தேன் !
படைகொண்ட மன்னன் கற்புடைப் பெண்ணின் 
பதிகொன்ற சேதியில் அதிர்ந்தேன் !
துடித்திட வியலாத் துயரினைக் கண்டு 
தூயவள் கொதித்திடத் துடித்தேன் !!
மாசறு பொன்னாம் கண்ணகி சபிக்க 
மதுரையும் எரிந்திடக் கண்டேன் !
பேசவு மியலா ஊமையைப் போலே 
பேதமை நெஞ்சொடு கிடந்தேன் !
பாசமும் பரிவும் இதயத்தி லிருந்தும் 
பாவையைத் தேற்றிட வில்லை !
ஆசைக ளழித்த அணங்கவள் மனத்தை 
ஆற்றிட வழியெது மில்லை !
காலனே உனக்குக் கண்களு மிலையோ
காத்திட மறந்தது மேனோ ?
மாலவன் நீயும் கோவல னுயிரை 
மாய்த்திட வேநினைத் தாயோ ?
சீலமாய் வாழ்ந்த மங்கல மடந்தை 
சீரிழந் திடவிட லாமா ?
சோலையின் மலராய் மணந்திருந் தவளைச்
சோகத்தில் தள்ளுத லேனோ ??
பொறுப்புடன் தானே கடமையைச் செய்தேன் 
போனபின் புலம்புகின் றேனே ! 
அறுத்திடுந் துயரால் துடிக்குதே நெஞ்சம் 
ஐயகோ ! யாதுநான் செய்வேன் ?
மறுபடி கவுந்தி யடிகளைக் காண 
மனத்தினில் வலிமையு மில்லை !
உறுத்திடும் நிகழ்வால் உலகினி லெனக்கும்
உயிர்த்திட வழியினி யில்லை !!
எனைநம்பி வந்த இணையரைக் காவா 
என்னுயிர் இருந்தென பயனோ?
நனைந்திடு மிதயம் வஞ்சகங் கண்டு 
நடுங்கிட பாவியென் செய்வேன் ?
வினைப்பயன் இஃதோ விதிப்பய னீதோ 
வெடித்திடு தேயுளம் தூளாய் !
அனைவரும் சூழ அனலிடைப் புகுவேன் 
ஆட்கொள்வாய் அக்கினித் தாயே !!
கொளுந்துவிட் டெரிவாய் கொண்டுயிர் சேர்ப்பாய் 
கோவலன் கண்ணகி யிடமே !
துளியள வேணும் இரங்கிவி டாதே 
சுத்தமாய் முடித்திடென் கதையை !
பளிங்கினை யொத்த பால்மதி முகத்தாள்
பரவெளி அடைந்திடப் புகுந்தாள் !
உளமது கசிய அவள்தரி சனத்தை
உயர்வெளி யில்பெறு வேனே !!
சியாமளா ராஜசேகர்