Sunday, March 29, 2020

வண்ணப் பாடல் ...!!!

தனன தான தானான
தனன தான தானான
தனன தான தானான தனனானா
மலையின் மீது கார்மேக
முரசி யாட வேநீல
மயிலு மாட மானோடி விளையாடும் !
வளியி லாடு பூவோடு
கிளைக ளாட வேரோடு
மரமு மாட வாகாக மனமாடும் !
அலைக ளோடு சேலாட
மதகு தாவி நீரோட
அருவி பாயு தேயாடி யிசையோடே !
அழகு நீள வாலோடு
கவிக ளோடி யேயாட
அருகி லேப லாவாசம் நுகராயோ !
இலையெ னாத சீரோடு
நிலவு லாவு வான்மீதில்
இரவு நேர மீனோடு முகிலாட !
இடைய றாது பேசாமல்
அமைதி யோடு பூபாளம்
இதய ராக மேபாட விதுவேளை !
நிலையி லாத வாழ்வோடு
புவியில் மாய நோயோடு
நிலவும் வாதை யேதீர வழியேது ?
நெடிய மாலை யேபாட
விலகி யோடு மேசோகம்
நிலையும் மாற வேயாடி வருவோனே !
சியாமளா ராஜசேகர்

சிவம் தெரியும் ...!!!

உனக்கு ளிருக்கு மிறையவனை
உணர்ந்து கொள்ள விதுதருணம் !
தனிமை கிடைத்த வரமாக
தமிழே நாளுந் துணையாக
மனத்தின் அழுக்கைத் துடைத்துவிட்டு
மௌன மாக வுள்நோக்க
அனைத்து மடங்கி யமைதியிலே
அன்பு கனிந்து சிவம்தெரியும் !!
சியாமளா ராஜசேகர்

வாழ்த்திப் பாடுவேன் ...!!!

Image may contain: one or more people and indoorமண்ணில் வாழுந் தெய்வ மென்று
மருத்து வர்தாள் பணிகிறேன் !
கண்ணி ரண்டின் நீர்ப்பெ ருக்கில்
கைகள் கூப்பித் தொழுகிறேன் !
எண்ணற் றோரின் சேவை யெண்ணி
இதயம் நெகிழ்ந்து சிலிர்க்கிறேன் !
தொண்டு செய்யும் தூய நெஞ்சைத்
தொடர்ந்து வாழ்த்திப் பாடுவேன் !!
சியாமளா ராஜசேகர்
உலக மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள், நன்றிகள் 🙏🙏🙏🙏

மாலன் நாமம் சொல்ல சொல்ல ...!!!

மாலன் நாமம் சொல்ல சொல்ல
மாயத் தொற்று மறைந்திடும் !
காலன் ஓலை வந்த போதும்
காத்து நிற்கும் மந்திரம் !
ஆலை யிற்பி ழிந்த கன்ன
லாக நெஞ்சம் வாடுதோ !
காலை மாலை இரவி லென்றும்
கண்கள் மூடிச் சொல்லுவீர் !!
வீட்டி னுள்ளி ருப்ப தென்ன
வேம்பா கக்க சக்குதோ ?
கூட்டை விட்டுன் னாவிப் போகும்
கூட்டங் கூடிப் பேசினால்
சேட்டைக் காரன் போல்கொ ரோனா
சீட்டு கிழிக்கச் சுற்றுதே!
கேட்டுக் கேட்டி ராமநாமம்
கெஞ்சிக் கொஞ்சிப் பாடுவீர் !!
அச்சு றுத்தும் செய்தி கண்டால்
ஆடிப் போகு தோவுளம் ?
துச்ச மென்றே எண்ண லாமோ
தொற்றுத் தொற்றிக் கொள்ளுமே!
நச்சுக் கிருமி போடு மாட்டம்
நாட்டை யுலுக்கி எடுக்குதே !
பச்சை வண்ணன் பாதம் தன்னைப்
பற்றிக் கொள்வாய் நெஞ்சமே !!
பந்த மென்றும் சொந்த மென்றும்
பாவம் பார்க்கு மோவது ?
கந்து வட்டிக் காரன் போலும்
கருணை யின்றிப் பறித்திடும் !
வந்த வேலை முடியுமட்டும்
வாரிச் சுருட்டிப் போய்விடும் !!
வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சி
வேடிக் கைதான் பார்த்திடும் !!
சுற்ற வெளிக்கி ளம்பி டாமல்
சுத்தந் தன்னைப் பேணுவோம்!
தொற்றை எதிர்த்துத் தனித்தி ருந்து
தோற்க டித்துக் காட்டுவோம்!
நற்ற வத்தோர் வாழு மிந்த
நாட்டை விட்டே ஓட்டுவோம் !
சற்று மேதுங் குழப்ப மின்றிச்
சரித்திரத்தை மாற்றுவோம் !!
சியாமளா ராஜசேகர்

மெல்ல மலரும் மனம் ...!!!

கல்லில் கலைவண்ணம் காணும் பொழுதிலும்
சொல்லில் செதுக்கிய சுந்தரப் பாவிலும்
நல்லிரவில் கேட்கும் நதியின் இசையிலும்
மெல்ல மலரும் மனம்.
கோல நிலவொளியில் கொட்டு மருவியை
நீலவிழி யாற்பருக நெஞ்சம் நனைந்திடும்
சில்லென்ற தென்றலில் தித்திக்கும் கானத்தில்
மெல்ல மலரும் மனம்.
பசியை விரட்டிடும் பைந்தமிழ்த் தேனாய்
வசியப் படுத்தும் மழலை மொழியிலும்
முல்லைச் சிரிப்பிலும் முத்த மழையிலும்
மெல்ல மலரும் மனம்.
சின்ன விரல்தீட்டும் தீந்தமிழ்ப் பாவிலே
கன்னி மயிலாடக் காதல் மொழிபேச
அல்லும் பகலும் அசைபோட்டுப் பார்த்திட
மெல்ல மலரும் மனம்.
( ஈற்றடி - கவிமாமணி ஹரிகிருஷ்ணன் அவர்கள்)
சியாமளா ராஜசேகர்

துடிக்கின்றேன்....!!!

நாட்டு நலத்தை விழைந்தபடி
நம்பிக் கையோ டுழல்கின்றேன் !
பூட்டிக் கொண்டு தனிமையிலே
புரியாத் தொற்றை எதிர்க்கின்றேன் !
வீட்டுக் குள்ளே இருந்தவண்ணம்
விரும்பித் தமிழைச் சுவைக்கின்றேன் !
ஆட்டிப் படைக்கும் கொரோனாவை
அடக்கம் செய்யத் துடிக்கின்றேன் !!
சியாமளா ராஜசேகர்

அன்னை அந்தாதி ....!!!

Image may contain: indoor

உனையலா லிங்கெமக் குற்றதுணை யில்லை
நினைந்துருகி யன்பில் நெகிழ்ந்தேன் - வினைசூழ்
உலகினைக் காக்க உளங்கனிந் திங்கே
மலர்ந்த முகத்துடன் வா . 1
வந்தெம் துயர்துடைத்து வாழ வழிகாட்டு
சிந்தை தெளிவித்துச் சீராக்கு - கந்தனின்
அன்னையே தூயவளே ஆதிபரா சக்தியே
என்றும் கதிநீ இனி. 2
இனியவளே உன்னை இசைத்தமிழால் போற்றித்
தனியாய்ப் பிதற்றுகிறேன் தாயே - பனியாய்
உருகி யிடர்கழுவி யூக்கந் தரவே
அருகிருப் பாயா வமர்ந்து . 3
அமர்ந்திருக்கும் கோவில் அடைத்துவிட் டேயாம்
அமைதியைத் தேடி அலைந்தோம் - உமையே
இமவான் மகளே இதமாய் அணைத்தே
இமைபோலும் காப்பாய் எமை. 4
எமைபாதிக் குந்தொற்றை ஈவிரக்க மின்றி
இமைப்போதில் தாக்கி யெரிப்பாய் - நமனை
விரட்டும் வழியை விரைந்தெமக்குச் சொல்ல
மரகதமே ஓடிவரு வாய் . 5
வாய்த்தநல் வாழ்வு வரமாய்நீ தந்ததன்றோ
பேய்த்தன மாய்ப்பரவும் பீதியால் - தேய்ந்துளம்
நோகின்றோம் அம்மம்மா நொந்தது போதுமே
சாகுமச் சத்தைத் தடு . 6
தடுத்தாட் கொளமறுத்தால் தாயேயென் செய்வோம்
நடுக்கத்தி லேயுழன்று நைந்தோம் - இடுக்கண்
களைந்தெம் உயிர்களைக் காசினியில் காக்க
வளைகுலுங்க சிம்மத்தில் வா . 7
வாரா திருந்தால் வருந்தி அழைத்திடுவேன்
தீராதோ அல்லலெனத் தேம்பிடுவேன் - பாரா
முகமாய் இருந்திடிலோ முத்தமிழில் பாடி
அகங்குளிர வைப்பேன் அணை . 8
அணைப்பில் அடங்கிடும் ஆட்டிப் படைத்த
பிணியும் விலகிப் பிரியும் - அணிந்தநின்
வேப்பிலை யாடையால் மேனி சிலிர்த்திடும்
காப்புநீ யென்றாடும் கண்டு . 9
கண்டதும் தாரையாய்க் கண்ணீர்ப் பெருக்கெடுக்கும்
வண்ண மலர்தூவி வாழ்த்துமுளம் - பொன்னொளியே
கள்ளங் கபடமிலாக் கன்னல் மொழியாளே
உள்ளத்தில் வைத்தே னுனை. 10
சியாமளா ராஜசேகர்

நன்றி !!!

நலம்வாழத் துணைநிற்கும் அனைவ ருக்கும்
நன்றிகளைக் காணிக்கை யாக்கி விட்டோம் !
பலகரங்கள் ஒன்றாகச் சேர்ந்து தட்டிப்
பறைசாற்றி நேயத்தைப் பகிர்ந்து கொண்டோம் !
கொலையாளி கரோனாவைப் பாரை விட்டே
கூண்டோடு விரட்டுதற்கு மணிய டித்தோம்!
விலைமதிப்பில் லாவுயிரைப் பேணிக் காக்க
விட்டொழிப்போம் அச்சத்தை மனத்தை விட்டே!!!
சியாமளா ராஜசேகர்

அலையின் குரல் ...!!!



என்னாச்சோ ஏதாச்சோ
எவரையுமே காணோமே !
இன்றுபோலப் பெருமமைதி
என்றைக்கும் இருந்ததில்லை !
நன்றாய்த்தான் விடிந்ததின்று
நடக்கவரு வோரெங்கே ?
நின்றபடி யெமைரசித்து
நெஞ்சுருகும் மக்களெங்கே ??
எம்பியெம்பிப் பார்க்கின்றேன்
இடையறாது நினைக்கின்றேன் !
தெம்பின்றி மிதந்துவந்து
துவண்டேதான் திரும்புகின்றேன் !
விம்முமென்றன் அலையோசை
விழவிலையோ நும்செவியில் !

நம்பிநானு மலைகின்றேன்
நாளைவரு வீரென்றே!!
தலையொன்றும் காணாமல்
தவிக்கின்றேன் தனிமையிலே !
உலைபொங்கும் சோறுபோலும்
உள்ளந்தான் கொதிக்கின்றேன் !
குலைநடுங்க வைக்குமந்தக்
கொரோனாதான் காரணமோ ?
தொலைந்தோடு மதுவிரைவில்
சுகம்பெறவே விழைகின்றேன் !!
பையவந்து வருடிவிட்டுப்
பதம்நனைக்கத் துடிக்கின்றேன் !
மையலுடன் முத்திடவே
மௌளனத்தி லுறைகின்றேன் !
கையளவு மனமிருந்தும்
கடுகளவும் அன்பிலையோ
வையகத்தில் இதுபோலும்
வரவேண்டாம் ஒருநாளே !!
சியாமளா ராஜசேகர்

வண்ணப் பாடல் ..!!

Image may contain: 3 people

தந்தந்த தனத்தன தாத்தன தனதானா
தந்தந்த தனத்தன தாத்தன தனதானா
இன்றிங்கு வருத்திடு நோய்க்கொரு  விடையேசொல்
என்றென்று முனைத்தொழு வார்க்கருள் முருகோனே !
குன்றந்த னிலற்புத மாய்க்கவி னிசையோடே
கொஞ்சுந்த மிழைச்செவி கேட்டுளம் மகிழாதோ?
துன்பங்கள் விரட்டிட வார்த்தைக ளினியேது
சொந்தங்கொ ளநற்றுணை யாய்க்குற மகளோடு
நன்றிங்கு விருப்பொடு போற்றுவ ரிடர்தீர
நஞ்சுண்ட சிவத்துட னாட்கொள வருவாயே !!
சியாமளா ராஜசேகர்

கொரோனா ....மருந்து !!


No photo description available.
கொலைகார நுண்ணுயிரி கொரோனாவென் னும்பேரில்
உலகெங்கும் ஊடுருவி உயிர்பயத்தை உண்டாக்கக்
கலக்கத்தில் மக்களெல்லாம் கண்களிலே பீதியுடன்
உலவுகின்ற கோலத்தை ஒருநாளும் மறப்போமோ ??
தொட்டாலே ஒட்டுமிது சூழ்ந்துநம்மை வதஞ்செய்யும்
கட்டுக்குள் அடங்காமல் களியாட்டம் தான்போடும்
விட்டுவிட்டால் அந்தகன்போல் விரட்டிவந்தே உறவாடி
மட்டற்ற மகிழ்வோடு மரணத்தைப் பரிசளிக்கும் !!
மருந்தில்லை இதற்கென்று மானுடரே மருளாதீர்
இருக்கிறதே எளியவழி இதையறிந்து பயன்பெறுவீர்
திரிகடுக சூரணமும் திருத்துழாயும் வில்வவேம்பும்
சுருங்கத்தான் காய்ச்சியுண்ணத் துரத்திடலாம் நோய்த்தொற்றை!!
சியாமளா ராஜசேகர்

வண்ணப் பாடல் ...!!!

தன்னனன தானான தனதான
தன்னனன தானான தனதான
வண்ணமது நாவோடு விளையாடும்
மண்ணிசையி லேபாட லுருவாகும் !
கண்ணிமைகள் மூடாம லுனைநாடும்
கண்மடையில் நீரோட விடலாமோ?
வண்ணவிரல் வேலோடு முறவாட
மஞ்ஞையுட னேயாடி வருவாயே !
உண்மையொடு நாடோறு முனையோத
உன்நிழலி லேயாடு வரம்வேணும் !!
சியாமளா ராஜசேகர்

பெண்ணே நீ பேசு ...!!!

Image may contain: 3 people, people on stage and people standing


பெண்ணே நீ பேசு
*************************
இன்னுமேன் தயக்கம் பெண்ணே
இன்முகங் காட்டு கண்ணே !
அன்பிலே கரைந்து விட்டாய்
அடுத்தவர் நலம் விழைந்தாய் !
நன்னெறி காத்து வாழ்வில்
நலங்களும் பெருகச் செய்தாய் !
புன்னகை மாறி டாமல்
பொறுமையால் துன்பம் வென்றாய் !!
வன்முறை எதிர்கொண் டாலும்
மௌனமாய்த் தாங்கிக் கொண்டாய் !
சென்றதை நினைத்து நொந்து
சிந்தையும் கலங்கு கின்றாய் !
குன்றென நிமிர்ந்து நிற்பாய்
கொள்கையை உரத்துச் சொல்வாய் !!
தன்னல மின்றி நீயே
தரணியில் வாழு கின்றாய் !!
ஆயினும் கிடைத்த தென்ன
ஆலயம் கட்டி னாரோ ?
தாயென இருகை தூக்கித்
தலைக்குமேல் கும்பிட் டாரோ ?
நேயமாய் அருகி ருந்து
நிம்மதி தந்தா ரோசொல் !
வாயிருந் தென்ன பெண்ணே
மௌனத்தை யுடைப்பாய் முன்னே !!
கடமையைச் செய்த பின்னும்
கண்களில் நீரெதற்கு ?
முடங்கிய தெல்லாம் போதும்
முயற்சியில் பின்வாங் காதே !
தடைகளை உடைத்தெ றிந்து
சாதனை படைக்க வாராய் !
விடியலும் தொலைவி லில்லை
வெற்றிக்கு வானே எல்லை !!
கன்னலாய் இனிக்கப் பேசிக்
காரியம் முடித்துக் கொள்(ல்)வார்!
தென்றலாய் வருட வேண்டா
தீயெனச் சுட்டெரிப்பார் !
அன்னமே மானே என்றே
அடைமழை யாகப் பெய்வார் !
பொன்மயி லேயென் றாலும்
புகழ்மயக் கங்கொள் ளாதே !!
மொட்டையும் விடுவ தில்லை
முகர்ந்திட அலையும் கூட்டம்
பட்டுடல் தொட்டுத் தீண்டப்
பார்த்திடும் கால நேரம் !
கட்டுடல் கன்னி கண்டால்
காதலில் தள்ளி வீழ்த்தும் !
கொட்டத்தை அடக்க நீயும்
கோலினை எடுப்பாய் பெண்ணே !!
மாதராய்ப் பிறந்த தைநாம்
வரமெனத் தான்நினைத்தோம் !
சோதனை வந்த போதும்
சொல்லற அமைதி காத்தோம் !
பாதகம் செய்வோர் கண்டால்
பதறியே உளந்துடித்தோம் !
வேதனை இனியெ தற்கு
வேங்கையாய்ச் சீறிப் பாய்வோம் !!
துணிவினைத் துணையாய்க் கொண்டு
சோர்வினை ஒதுக்கி விட்டு
பணிவினை நெஞ்சுள் வைத்துப்
பாரதி கண்ட பெண்ணாய்
இனிவரும் நாட்க ளெல்லாம்
இரும்பென உறுதி யோடு
நனிசிறப் பாக நாளும்
நானிலம் போற்ற வாழ்வோம் !!
ஆற்றலில் வல்ல வள்நீ
அன்பினிற் சிறந்த வள்நீ !
காற்றையும் கைப்பி டித்துக்
காதலாய்ப் பேசும் கள்நீ !
ஊற்றெனப் பெருகும் நீராய்
உள்ளூரச் சுரக்கும் தேன்நீ!
சீற்றமாய்ப் பொங்கும் போது
சிந்தையில் தைக்கும் முள்நீ !!
சாதனை படைப்ப தற்குத்
தமிழுனக் குதவி செய்யும் !
ஆதலால் அச்ச மின்றி
அதிசயம் நிகழ்த்திக் காட்டப்
பாதைகள் வகுத்துச் செல்வாய்
பகுத்தறி வோடு வெல்வாய் !
பேதைநீ யல்ல இன்னும்
பேசுபெண் ணேநீ பேசு !!
( முனைவர் கிருஷ்ண திலகா தலைமையில் பண்ணைத் தமிழ்ச் சங்கத்தில் வாசித்த கவிதை)
சியாமளா ராஜசேகர்

வண்ணப் பாடல் ... சிவன் திருப்புகழ் ...!!!


தான தந்த தான தந்த
தான தந்த தான தந்த
தான தந்த தான தந்த தனதானா
ஆல முண்ட நீல கண்ட
னோடி ணைந்து தேவி யன்பி
லாடு கின்ற கோலம் நெஞ்சி லகலாதே !
ஆசை யுண்டு நேச முண்டு
காத லுண்டு வாழ்வி லென்று
மாதி யந்த மேது மின்றி யுழல்வோனே!
ஞால மெங்கு மேவி ரிந்து
பூத மைந்து மாய்நி றைந்து
நாக மொன்றை யேய ணிந்து வருவோனே !
நாளு மன்பி லேக ரைந்து
நாம மென்று மேமொ ழிந்து
நாடி வந்து பாடி யுன்ற னடிபேண !
கால னஞ்சு மாறு திங்க
ளோடு கங்கை சூடி வந்து
காவல் நின்ற ஈச னின்ப மருள்வானே!
காடு றைந்து மேனி யெங்கும்
நீற ணிந்து மாயை வென்ற
காள கண்ட னாடு கின்ற கயிலாயம்!
வேல னன்பி லேக னிந்த
போது ளம்சி வாய வென்று
மேவு செஞ்சொ லோது முன்ற செவிகேளாய்!
வீணி லென்ற வாழ்வ ழிந்து
காயம் வெந்து போகு முன்பு
வீட டைந்த பேறு தந்த பெருமானே.
சியாமளா ராஜசேகர்

வண்ணப்பாடல்...சிறுவாபுரி முருகன் திருப்புகழ் ...!!!




தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன ...... தனதானா
வளமிகு வயல்வெளி யிடையொரு தலமதில்
மரகத மயிலுட னுறைவோனே
மனமது மகிழ்வுற முருகனு னருகினில்
வடிவொடு குறமக ளிணைவாளே
ஒளிவிடு விழிகளு மருள்மழை பொழிகையி
லுருகிய வுளமது குளிராதோ
உளறிடு மிதயமும் மொழியது குழறிட
உனையென துளறிய விழைவேனே
குளமென விழிகளும் பெருகிட வருபவர்
குறைகளும் விலகிட நெகிழ்வாரே
குமரனின் மலர்முகம் பரவச நிலையொடு
குளிர்நில வெனமிக வெழிலோடே
தெளிவுட னுனதடி பணிவொடு தொழுபவர்
திருமண வரமது தருவாயே
திருவுட னுறையுளும் பரிவுட னருளிடு
சிறுவையி னழகிய பெருமாளே .
சியாமளா ராஜசேகர்

பூந்துவிளை யாடும் புலம் !!

வெண்பா விருத்தமென வெவ்வேறு பாவகையில்
எண்ணற்ற பாக்க ளியற்றிடினும் - வண்டமிழில்
காந்தமென வென்னைக் கவர்ந்திழுக்கும் வண்ணந்தான்
பூந்துவிளை யாடும் புலம் .
பண்டிகை வந்துவிட்டால் பட்டுப் புடவைகள்
கண்முன் நிழலாடிக் களிப்பூட்டும் - வண்ணமாய்
ஏந்திழையார் மொய்க்கும் எழிற்காஞ்சி யேதான்யான்
பூந்துவிளை யாடும் புலம் .
(ஈற்றடி - கவிமாமணி ஹரி கிருஷ்ணன் அவர்கள்)
சியாமளா ராஜசேகர்

வண்ணப் பாடல் ..காதல் !!!

Image may contain: 1 person, text

தான தந்த தனத்த தத்த தனதானா
தான தந்த தனத்த தத்த தனதானா
ஆசை கொண்ட மனத்தை விட்டு விலகாமல்
ஆளு மன்பி னணைப்பில் நித்தம் மகிழ்வேனோ!
வீசு தென்ற லுளத்தி னிக்கு மிதம்போலும்
மேவு மின்பம் வெளிப்ப டுத்த வியலாதே!
ஓசை யின்றி முகிழ்த்த முத்த விசையாலே
ஊட லின்றி மயக்க முற்று விழுவாயோ?
தேசு விஞ்சு முகத்தி லச்ச மினுமேனோ
தேவி யுன்ற னுயிர்த்து டிப்பு மறிவேனே!!
சியாமளா ராஜசேகர்

வண்ணப் பாடல் ...!!


தனந்த தானந் தனதன தானன தனதானா
தனந்த தானந் தனதன தானன தனதானா
மலர்ந்த பூவுஞ் செடியினி லாடிடு மழகாக
மணந்து நாளும் பரவச மேதரு மிதமாக
அலைந்த மேகந் தனிமையில் வானொடு விளையாடும்
அணிந்த நாணந் திரையிட வாசையில் மதியோடும்
குலுங்கி யாடுங் கிளைகளி லேகுயி லிசைபாடும்
குளிர்ந்து வீசும் வளியொடு நாணலு முறவாடும் !
வலிந்து பாடுங் கவிதையி லேவுள மிளகாதே
மகிழ்ந்து கூடும் பொழுதினி லேயிதழ் பிரியாதே
சியாமளா ராஜசேகர்

வேலேந்தி வா !!

No photo description available.

கொத்தாகக் கொன்று குவிக்கும் கொரோனாவைக்
குத்திக் கிழித்துக் கொடூரமாய் - மொத்திக்
குழியிட்டு மூடிக் குவலயங்காக் கும்நல்
வழிகாட்ட வேலேந்தி வா.
சியாமளா ராஜசேகர்

Thursday, March 26, 2020

வண்ணப்பாடல்.. அம்மன் ...!!!


Image may contain: 1 person
தனதாத்த தன்ன தனதாத்த தன்ன
தனதாத்த தன்ன தனதானா ( அரையடிக்கு )
அடியார்க்கு நன்மை களையூட்டு மம்மை
அறிவூட்டி மின்ன லொளிபோலும்
அருளூட்டி யென்னை வினைதாக்கு முன்னம்
அணைபோட்ட தென்ன பரிவோடே!
கொடியோர்க்கு வன்ம குணம்மாற்று மன்னை
கொலுவீற்ற தெண்ணி நெகிழ்வேனே!
குதிபோட்டு மண்ணி விதிமாற்றி நம்மின்
கொடும்பாட்டை யுன்ன மறவாளோ?
மடிபோட்டு வண்ண மலர்சூட்டி விண்ணின்
மதிகாட்டி யுண்ண வமுதீயும்
மயல்நீக்கி விம்மு மொலிகேட்டு முன்னல்
மகிழ்வூட்டி யென்னு ளுறைவாளோ?
உடைமாற்றும் பொம்மை விளையாட்டி லொன்னி
ஒருகூட்டி லன்னை யெனநீயே
உருவேற்றி நுண்மை மதிசேர்த்த பின்னம்
உயர்வீட்டி லென்னை விடுவாயே!!!
சியாமளா ராஜசேகர்

வண்ணப் பாடல் ..!!

Image may contain: Sukhumar Thiagarajan

தான தானதன தான தானதன
தான தானதன தனதானா

சேவ லாடமயி லாட வேலனொடு
தேரு மாடிவரு மழகோடே!
தேவ தேவனொடு கோல தேவியொடு
சீவ னாடிவரு மொளியோடே!

ஆவ லோடுமனம் வானி லேவிரிய
ஆசை மோதவரு மலைபோலே!
ஆவி போகுமுனம் பாவி யேனுயிரும்
ஆடி யாடியுனை யடையாதோ!

நாவி லேயுனது நாம மேமொழிய
நாத னேகருணை புரிவாயே!
ஞான மேவடிவ மான மாமுனியை
நாடி யேதொழுது மகிழ்வேனே!

பாவி லேயுருகி வீடு பேரருளும்
பால னேநினடி பணிவேனே!
பாதை யானறிய மூல மாமுனது
பாத மேபணிய வருள்வாயே!!

சியாமளா ராஜசேகர்


https://drive.google.com/file/d/1mjbASNSCOg4AMvuQ8DY7HgIwqcU3Ci0c/view?usp=drivesdk

வண்ணம் ...!!!

Image may contain: 2 people

தன்ன தன்ன தானன
தன்ன தன்ன தானன
கண்ண னென்னும் மாயவன்
கன்னி யென்னை யாள்பவன் !
வெண்ணெ யுண்ணும் பாலகன்
விம்மு மன்னை வாழ்வவன் !
வண்ண வண்ண மாயவன்
மன்னும் வண்மை யானவன் !
எண்ணி யெண்ணி நானழ
என்னை நண்ணும் நாயகன் !!
சியாமளா ராஜசேகர்

வண்ணப் பாடல் ...காதல் !!!



Image may contain: 2 people, including Makeshwaran Nagarajan

தானன தனன தானன தான
தானன தனன ....தானானா
வீசிய வளியில் நாணலு மாட
வேலியில் மலர்க ளாடாதோ ?
வீணையி லசையும் மைவிழி யாளின்
விரல்களும் நளினம் பூணாதோ ?
பேசிடு மிதழ்க ளோசையில் மோகம்
பீறிடு மினிமை நீளாதோ ?
பேதையின் மடியி லாசைவி டாது
பீலியின் வருட லாகாதோ ?
நேசமு டனவ ராடிடும் வேளை
நீலவி ழிகளும் மூடாதோ ?
நேரமு ழுமையு மோடிய போதும்
நீடுயர் மகிழ்வு கூடாதோ ?
பாசமும் பரிவும் பாதியி லூடும்
பார்வையி லமைதி மேவாதோ ?
பாவையி னிடையில் மேகலை யோடு
பாதகொ லுசொலி மீளாதோ ??
சியாமளா ராஜசேகர்

வண்ணப்பாடல் ...காதல் ..!!!

Image may contain: 2 people, including Sukhumar Thiagarajan

தனதனன தனந்த தானன தந்தனானா
தனதனன தனந்த தானன தந்தனானா
உனதழகை வியந்து பேசிடும் பெண்களாலே
உரிமையுட னிணைந்து காதலி லொன்றுவேனே!
மனமுருகி நெகிழ்ந்து பாடிடு மன்பினாலே
மதிமுகமும் மயங்கி நாணிடு மின்சொலாலே!
கனவுகளில் விரும்பி யாடிடு வஞ்சியோடே
கடலிலெழு தரங்க மாயிசை சிந்துவேனே
நினைவுகளி லுழன்று போரிடு நெஞ்சினோடே
நிதமுமுனை மறந்தெ னாருயிர் சென்றுபோமோ ?
சியாமளா ராஜசேகர்

வண்ணப்பாடல் ..கணபதி ...!!!



Image may contain: one or more people

தனனா தனனா தனதானா
தனனா தனனா தனதானா
திருமே னியில்நீ றணிவோனே
சிவனார் மகனே முதல்வோனே!
கரிமா முகனே கணநாதா
கனிவா யருள்வா யுமைபாலா!
வருவா யெலிமே லெளியோனே
வடிவா யசையா முறம்போலும்
இருகா துடையோ யிளகாயோ
எளியேன் குறைநீ களையாயோ?
சியாமளா ராஜசேகர்

காளியம்மா...!!!

Image may contain: 1 person, standing

காளி யம்மா உன்னைக் காணக்
கண்கள் ரெண்டும் ஏங்குது !
தோளை யழுத்துஞ் சுமையால் நெஞ்சம்
சோக ராகம் பாடுது !
தாளை யிறுகப் பற்றிக் கொண்டு
தாயு னருளை நாடுது !
நாளை விடியும் வாழ்வு மென்ற
நம்பிக் கையுங் கூடுது !!
காயப் பட்ட உள்ளந் தன்னைக்
கனிவாய்த் தேற்ற யாருளர் ?
தாயை விட்டால் யார ணைப்பர்
தயவு செய்ய வேண்டுமே !
வாயி லுன்றன் நாமம் தவிர
வார்த்தை யேது மில்லையே !
காயம் பொய்த்துப் போகும் முன்னம்
கருணை காட்ட வோடிவா!!
உருவம் கண்டு பயந்த தில்லை
உன்னைத் தாயாய்க் கருதினேன் !
பெருகு மன்பில் விழிநீர் சிந்தப்
பிள்ளை நானும் பாடினேன் !
வருந்தி வருந்தி அழைத்த போதும்
வாரா விட்டால் வாடுவேன்!
அருகில் வந்துன் கைக ளாலே
அணைத்தால் மகிழ்வி லாடுவேன் !!
பட்ட துன்பம் போது மென்று
பாசத் தோடு நீவுவாய் !
மொட்டை முட்டும் தென்றல் போலும்
முத்தத் தால்ம யக்கு வாய் !
அட்டி யின்றி அரை நொடிக்குள்
அச்சந் தன்னை நீக்குவாய் !
தட்டித் தட்டி மாச கற்றித்
தங்கம் போலும் மாற்றுவாய் !!
சியாமளா ராஜசேகர்

வண்ணப் பாடல் ...!!!

Image may contain: 1 person, mountain


தான தந்தன தானா தனானன
தான தந்தன தானா தனானன
தான தந்தன தானா தனானன தனதானா
ஆதி யந்தமி லானே நமோநம
கோல வம்பிகை நாதா நமோநம
ஆடு மம்பல வாணா நமோநம நடராசா!
ஆல முண்டருள் வோனே நமோநம
நீல கண்டனு மானாய் நமோ நம
ஆண வங்களை வோனே நமோநம அழகேசா!
மாதி டங்கொளு பாகா நமோநம
நீற ணிந்திடு மார்பா நமோநம
மால னும்பணி கோவே நமோநம வினைதீராய்!
வானி ளம்பிறை யோடே நமோநம
தூய வெண்பனி யானாய் நமோநம
மாந டம்புரி வோனே நமோநம அருள்வாயே !
நாத வின்பமு மானாய் நமோ நம
பாடு மன்பரின் நேயா நமோநம
ஞால முந்தொழு தேவே நமோநம எனவோத!
நாடி வந்திடு வோனே நமோ நம
நாவி லின்றமி ழீவாய் நமோநம
ஞான முந்தரு கோவே நமோநம எனையாள்வாய்!
வேத மும்புகழ் வோனே நமோநம
யோக மந்திர மூலா நமோநம
வேட னன்பினை யாள்வாய் நமோநம செகதீசா!
வீறு கொண்டெழும் வீரா நமோநம
பூத மைந்தென வானாய் நமோ நம
மேவி டுங்கயி லாயா நமோநம பெருமானே!
சியாமளா ராஜசேகர்

வண்ணப் பாடல்... சிவன் ...!!!



Image may contain: 1 person, mountain

தனதன தனதன தனதன தனனா
தனதன தனதன தனதன தனனா
தனதன தனதன தனதன தனனா தனதானா
சிலையென வுளமதில் நடமிடு பவனே
உருகிடு மடியவ ரிடர்களை பவனே
திருநிறை யுமையவ ளுடனுறை பவனே பெருமானே!
சிவசிவ சிவவென நிதமுரை மனமே
கனவிலும் நனவிலு மினியிலை பயமே
திருமல ரடியினை வழிபட வளமே பெருகாதோ!
அலைதவழ் நதியொடு பிறையணி பதியே
புலியுடை யிடையினி லணிசெயு மிறையே
அழகிய பனிமலை தனிலுறை பரமே அருளாளா!
அகமதி லுனைநினை பவரது துணையே
இரவிலும் பகலிலு முடன்வரு முறவே
அருளுடன் மயிலையி லுறைபவ ளிணையே யருள்வாயே!
நிலமென வளியென அனலென விரிவா
னொடுசல மெனநிறை பவனிரு கழலே
நிலையென நனைபவ ருருகிட நலமே புரிவோனே!
நிழலென வருவினை களும்வில கிடவே
அமுதினை யருளிட விரைபவ னவனே
நிமலனி னெழில்மிகு விழியசை வினிலே நெகிழ்வேனே !
மலையர சனின்மகள் மனமகிழ் வுறவே
கயிலையி லவளொடு நடமிடு மரசே
மனமதி லருளினை யடைமழை யெனவே பொழிவாயே !
மலர்முக மெழிலொடு சுடர்விடு திருவே
யமபடர் வரும்பொழு துனையுளம் பிரியா
வரமதை யருளிட வரகர சிவனே வருவாயே!
சியாமளா ராஜசேகர்

தென்னங்கீற்றூஞ்சலில் ...!!!

Image may contain: plant, tree and outdoor

தென்றலாள் தாலாட்டத் தென்னங்கீற் றூஞ்சலில்
சின்னக் கிளிகள் சிலிர்த்தாடும்! - கன்னங்
கரியகுயில் பாடும் களிப்புடன் சிட்டுக்
குருவியுஞ்சேர்ந் தாடுங் குளிர்ந்து.
சியாமளா ராஜசேகர்

எங்கெங்கெங்கோ தேடுகிறேன் ...!!!

என்னுள் ளிருக்கும் உனைமறந்தே
எங்கெங் கெங்கோ தேடுகிறேன் !
அன்புப் பெருக்கால் விழிநனைய
அடங்கா ஆவ லோடுன்னை
இன்னும் தேடி யலைகின்றேன்
இறைவா விடையும் கிடைக்கவில்லை !
கன்றின் தவிப்பை அறியாயோ
கனிவாய் உணர்த்த மாட்டாயோ ??
சியாமளா ராஜசேகர்

இதமாயருகிருப்பேன்...!!!

Image may contain: சிறீ சிறீஸ்கந்தராசா

புளிமாங்கனி யவள்பாடலில் பொலிவாயிடம் பிடிக்கும்
எளிதாயொரு கருகூடிட எழிலாய்க்கவி பிறக்கும்
வளிவீசிடு மதிகாலையில் மனம்காதலை நினைக்கும்
வளையாடிடு மொலிகாதினில் மதுபோதையை விதைக்கும் !!
அலைபேசிடும் மொழியாயவ ளழகாய்நகை புரிவாள்
மலைமேனியில் முகில்போலவள் மழையாயுடல் நனைப்பாள்
கலங்காதிரு மனமேயெனக் கனிவாயெனை யணைப்பாள்
இலையோவெனு மிடையாளுட னிணைவேனொரு தினமே!
கனவோவிலை நனவோவிது கதையோவென வறியேன்
எனைப்பாடிடு முயிர்த்தோழியி னிசையோடுளம் நெகிழ்வேன்
வனைவேனொரு கவிநானதில் வளர்காதலை யுரைப்பேன்
இனியாளுடன் மணநாளினி லிதமாயரு கிருப்பேன் !!
சியாமளா ராஜசேகர்

காய்களுக்கிடையே ...!!!

Image may contain: 1 person, smiling, plant and outdoor

காய்களுக் கிடையே சிறுகிளி யொன்று
கனிவுடன் கவிதையாய்ப் பேசும் !
தாய்மனம் மகிழ்ந்து புகைப்பட மெடுக்கத்
தாமரை யாய்முகம் பூக்கும் !
வாய்நிறை சிரிப்பும் கண்களில் குறும்பும்
மாமர விலைகளை யீர்க்கும் !
வேய்ங்குழல் போலும் கொஞ்சிடும் குரலில்
வீசிடும் தென்றலும் மயங்கும் !!
சியாமளா ராஜசேகர்

புகை வேண்டா ...!!!

No photo description available.

நண்பர்கள் ஒன்றாகக் கூடும் போது
நலக்கேடு விளைவிக்கு மென்ற றிந்தும்
வெண்சுருட்டை யிதழ்களிடைப் பற்ற வைத்து
வேடிக்கை யாய்ப்புகையை உள்ளி ழுத்துக்
கண்டபடி வாயினின்றும் மூக்கி னின்றும்
காற்றினிலே சுருள்சுருளாய் வெளியே விட்டால்
எண்ணற்றோர் பாதிக்கப் படுவா ரும்மால்
இலவசமாய்த் துன்பத்திற் காளா வாரே!!
விளையாட்டாய்ப் பழகியதே வினையாய்ப் போகும்
விடாப்பிடியாய் அப்பழக்கம் தொற்றிக் கொள்ளும்!
களையிழந்தே உதடுகளும் கறுத்துப் போகும் !
காசநோயால் வறட்டிருமல் ஆளைக் கொல்லும்!
இளைப்புவந்து மூச்சுவிடக் கடின மாகும்
இதயத்திற் கும்கேடு வந்து சேரும்!
வளமாக நோயின்றி நலமாய் வாழ
மறந்தேனும் புகைபிடிக்க எண்ண வேண்டா! !
சியாமளா ராஜசேகர்

நெஞ்சை உலுக்கியதே ...1!!

ஆடை களைந்து சோதித்த
அவலம் நெஞ்சை உலுக்கியதே!
மூடத் தனத்திற் களவிலையோ
மூளும் விளைவு புரியலையோ ?
கூடி இளைய சமுதாயம்
கொதித்துச் சீறிப் பொங்கிவிடில்
ஆடித் தானே போவீர்கள்
அனலில் வெந்து சாவீர்கள் !!
சியாமளா ராஜசேகர்

பன்னீர் ரோசாவே ...!!!

Image may contain: flower, plant, nature and outdoor
இலைக ளிடையில் முகங்காட்டி
இதழுள் தேனைச் சுமந்தபடி
மலர்ந்தும் மலரா நிலையினிலும்
மணக்கும் பன்னீர் ரோசாவே !
உலர்ந்து மாலை வேளையிலே
உதிர்ந்து மண்ணில் வீழாமல்
நலமாய் இறைவன் பதஞ்சேர
நானும் உன்னை வாழ்த்துவனே !!
சியாமளா ராஜசேகர்

விரைந்து வந்து சேரடா !!



Image may contain: one or more people and outdoor

சாரல் பட்டால் உள்ளம் சிலிர்த்துச்
சந்தத் தோடு பாடுதே !
தூர வானில் நிலவைக் கண்டால்
துள்ளி மயங்கி யாடுதே!
ஈரக் காற்று தழுவிச் செல்ல
இதயம் உன்னைத் தேடுதே !
ஓர விழியின் பார்வை என்றன்
உயிரை உரசிப் போகுதே !!
காத்தி ருப்ப தறிந்த பின்னும்
கண்ணா மூச்சி ஏனடா ?
பார்த்து விட்டுப் பாரா முகமாய்ப்
பையத் திரும்ப லாகுமா?
பூத்த மலராய் நானி ருக்கப்
போவ தெங்கே கூறடா!
கோத்த ணிந்த மணிச்சரத்தின்
கொதிக்கும் நிலையைப் பாரடா !!
காற்றி லாடும் பூக்க ளெல்லாம்
கண்ணை வெட்டிச் சிரிக்குதே!
ஊற்றெ டுக்கு மன்பி னாலே
உள்ள முன்னு ளுருகுதே!
நேற்று வரையில் நெஞ்சி னித்த
நேச மெங்கே போனதோ?
வீற்றி ருப்பேன் விடியு மட்டும்
விரைந்து வந்து சேரடா !!
சியாமளா ராஜசேகர்

வண்ணப் பாடல் ....நர்த்தகி நட்ராஜ்



Image may contain: Narthaki Nataraj, standing, outdoor and nature
தனதன தனதன தனதன தானன
தனதன தனதன தனதன தானன
தனதன தனதன தனதன தானன தனதானா
மலரொடு மலரென மகிழ்வுட னாடிடு
மவளுடை யிதயமு மமைதியை நாடிடும்
மதுரையி னழகிய தமிழ்மக ளேயென வறியாயோ?
வருகிற வழிதனி லுலவிடு மேயிள
வளியது திருமக ளிடையினை நீவிட
வருடிய இதமதி லெழில்முகம் நாணிடு மழகோடே!
சிலையென வடிவொடு கவின்மிக வேகொலு
சொலியொடு நடைபயில் மடமயி லாளது
சிறுவிதழ் முறுவலில் மதுமல ராசையி லுழலாதோ?
திமிகிட திமிகிட ஜதிசொல ஆளிலை
சருகுக ளுரசலி லெழுமொலி யோயிலை
செடிகளி னிசையொடு மலருட னேநட மிடுவாளே !
மலையென வுறுதியில் வலிகளு மாறிடும்
விலகிடு மிருளதும் நிலமிசை வாழ்வினில்
மனமது மயர்வற மகிழ்வுக ளேநித மடைவாளே!
மதியொளி வதனமும் பிறைநுத லோவென
வளைவுடன் மிளிர்வது மதிசய மேயிது
மறைபுக ழிறைவனின் வரமென வேமனம் நெகிழாதோ?
அலைகளில் நுரையென அணிசெயு மோவிய
மெனவழ கியகயல் விழிகளும் பேசிட
அமுதென வரிகளி லபிநய மேபுரி பவளோடே!
அகமதில் நிறைவொடு துணைவரு தோழியும்
பரிவொடு நலம்விழை பவள்நின தாருயிர்
அணைபவ ளவளென நனைபவ ளேயுனை மறவேனே!!
சியாமளா ராஜசேகர்

கண்களிலே காதலோடு ...!!!

கண்களிலே காதலோடு
காத்திருக்கிறாள் - அவள்
கண்ணன்வரும் திசைநோக்கிக்
கனிந்து நிற்கிறாள் !!
பண்ணிசைத்துப் பரவசத்தில்
பாடி மகிழ்கிறாள் - வரும்
பாதையிலே கவனமாகப்
பார்வை பதிக்கிறாள்!
வெண்ணிலவைத் தூதுசெல்ல
வேண்டிக் கொள்கிறாள் - தன்
வெட்கத்தை விட்டுவிட்டு
விடயம் சொல்கிறாள் !!
கெண்டைவிழி படபடக்கக்
கெஞ்சிக் கேட்கிறாள் - நிலா
கேலிசெய்தும் தளராமல்
கிளம்பச் சொல்கிறாள் !!
தென்றலுடன் மௌனமாகச்
சிறகு விரிக்கிறாள் - தன்
செங்கனிவாய் திறந்துமெல்லச்
சிரிப்புதிர்க்கிறாள் !!
அன்றலர்ந்த மலர்போலும்
அழகில் மிளிர்பவள் - இன்று
அன்பொளிரும் முகத்தினிலே
அமைதி இழந்தனள் !!
பொன்னிலவைக் காணாமல்
பொறுமை இழந்தனள் - அவள்
பொங்கிவந்த கண்ணீரைப்
பொத்தி மறைத்தனள்!!
கன்னிமனம் படும்பாடு
கண்ணன் அறிவனோ - அந்தக்
கட்டழகன் கால்கடுக்கக்
காக்க வைப்பனோ ?
முகில்திரையைத் தான்விலக்கி
முல்லைச் சிரிப்புடன் - வான்
முத்துநிலா அவன்வரவை
முந்திச் செப்பினள் !!
சகியவளின் சொற்கேட்டுச்
சாந்த மானவள் - தன்
தங்கநிலாப் பெண்ணைப்பைந்
தமிழில் வாழ்த்தினள் !
மகிழ்ச்சிவெள்ளம் பெருக்கெடுக்க
மங்கை மிதந்தனள் - கை
வளைகுலுங்க மயில்போலும்
மயங்கி யாடினள்!
அகங்குளிர வைத்தவனின்
அணைப்பி லுருகினள்! - அங்கு
ஆனந்த மீட்டலிலே
அன்பைப் பொழிந்தனள்!!
சியாமளா ராஜசேகர்

வெற்றி தெரியுது ...!!!

Image may contain: 1 person

உள்ள மெங்கு முன்றன் நாமம்
ஓங்கி ஒலிக்குது !
கள்ள மெல்லாம் சிறுக சிறுகக்
கரைந்து போகுது !
துள்ளி வந்த சந்தப் பாட்டு
சொக்க வைக்குது !
தெள்ளு தமிழைக் கேட்டு மயங்கித்
தென்ற லாடுது !!
தந்தம் கொண்டோன் தம்பி யுன்றன்
சரணம் கேட்குது !
கந்த வேளுன் சந்நி திக்குள்
கவலை மறக்குது !
புந்தி தெளிந்து புனித மாகிப்
பொலிவும் கூடுது !
முந்திக் கொண்டு மூண்ட வினைகள்
முடிவை யெட்டுது !!
எண்ண மெல்லாம் வேலன் நினைவே
இன்ப மளிக்குது !
வண்ண மயிலில் வந்த கோலம்
மனத்தை அள்ளுது !
கொண்டை கொண்ட சேவற் கொடியும்
கொஞ்சி அழைக்குது !
கண்ணைக் கவரும் வேலின் அழகில்
கவிதை பிறக்குது !!
படிக ளேறிப் பரமன் மகனைப்
பார்க்கத் தோணுது !
பிடித்த பாக்கள் காதி லுரசப்
பித்த னாக்குது !
வடிவே லழகன் வடிவு கண்டு
மனங்கு ளிர்ந்தது !
விடியு மென்ற நம்பிக் கையில்
வெற்றி தெரியுது !!
சியாமளா ராஜசேகர்