Monday, April 29, 2019

வாழ்த்து ...!!!

பைந்தமிழ்ச்செம்மல் வ. க. பரமநாதன் அவர்களுக்கு வாழ்த்து !!!
* * * * * * * * * * * *  * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *  * *
இலங்கையி லுள்ள எழில்மிகு மூராம் 
***இணுவையூர் தனில்பிறந் தவரே !
கலைமக ளருளால் இளம்வய தினிலே 
***கவிவனை வதிற்சிறந் தவரே  !
கலகங்கள் சூழப் பிழைப்பதற் காகக் 
***கலவர பூமியைப் பிரிந்தாய் !
புலம்பெயர்ந் தாலும் தாய்த்திரு நாட்டைப் 
***பொன்னெனப் போற்றியே மதித்தாய் !!

பைந்தமிழ்ப் பற்றால் மரபினைப் பயிலப்
***பைந்தமிழ்ச் சோலையி லிணைந்தாய் !
நைந்திடா வண்ணம் தாய்மொழி காக்க 
***நன்குகற் றறிந்துநீ தேர்ந்தாய் !
பைந்தமிழ்ச் செம்மல் பட்டமும் பெற்றுப் 
***பயின்றதைக் கற்பித்துச் சிறந்தாய் !
'பைந்தமிழ்க் குவை'யென் றொருபெரும் விருதைப் 
***பாவலர் வழங்கிட மகிழ்ந்தாய் !!

கனிவுடன் பேச்சும் பண்புடன் பணிவும்  
***கவிஞனுன் மேன்மையைக் கூட்டும் ! 
நனியழ கான படைப்புகள் யாவும் 
***நண்பநின் திறத்தினைக் காட்டும் !
இனிவருங் காலம் நலத்துடன் வாழ 
***இறைவனின் திருவரு ளாலே 
நினைத்தன யாவும் கைவரப் பெற்று 
***நிம்மதி யோடுநீ வாழி !!


சியாமளா ராஜசேகர் 

முனைவர் அர. விவேகானந்தன் அவர்களுக்கு வாழ்த்து !!!
* *  * * * * * * * * * ** * * * * * * * * * * * * * * * * ** * * * * * * * * * * ** * * * 

விருப்பொடு சோலை நாடி 
***வியத்தகு வெற்றி யீட்டி 
அருந்தமிழ்ப் பற்றி னாலே 
***அயர்விலாச் சேவை யாற்றித் 
திருவண்ணா மலைக்கி ளையைச்
***சிறப்புடன் வழிந டத்தும் 
செருக்கிலா விவேகா னந்த!
***தீந்தமிழ் போல வாழி !

இலக்கியக் கூட்டம் கூட்டி 
***இலக்கண வகுப்பெ டுத்தாய்!
பலவகைப் பாக்கள் நெய்யப்
***பயிற்சிகள் நன்க ளித்தாய்!
தலைக்கனம் சிறிது மின்றித் 
***தமிழையே மூச்சாய்க் கொண்டாய் !
கலைமக ளருலா லென்றும் 
***காசினி போற்ற வாழி !

ஆவலாய் மாணாக் கர்க்கும்
***அழகுவெண் பாட்டி யற்றக் 
காவலாய்த் தானி ருந்துக்
***கருத்துட னதைநூ லாக்கிப்
பூவனம் போல்ம ணக்கும் 
***புகழ்மிகு முனைவ ! சோலைப் 
பாவலர் பாசத் தம்பி 
***பைந்தமிழ்க் குருத்தே வாழி !


மட்டைப் பந்தாட்டம் ...!!!

பதினொருவர் ஓரணிக்கென் றிணைந்தாடு மாட்டம்
***பைத்தியமா யாக்கிவிடும் மட்டைப்பந் தாட்டம் !
மதிமயங்கித் தொலைக்காட்சிப் பெட்டிமுன்ன மர்ந்து
***மகிழ்ச்சியுடன் துடிப்போடு மனம்சுவைக்கு மாட்டம் !
உதிரத்தைச் சூடேற்றி உற்றுநோக்க வைக்கும் 
***உரித்தானோர் வெளியேற இதயத்தைத் தைக்கும் !
இதில்கூட சூதாட்டம் தலைவிரித்தே ஆடும்
***இதையறிந்தும் உளம்விரும்பும் துடுப்பாட்ட மன்றோ ??
சியாமளா ராஜசேகர்

சித்திரையின் முழுநிலவு ...!!!

சீரோடு வளையவரும் சித்திரையின் முழுநிலவு
காரோடும் வான்வெளியில் கண்குளிரக் காட்சிதரும்!
நீரோடு மலைகடலில் நீந்துகின்ற வான்மதியும்
யாரோடு விளையாட இரவுகட லிறங்கியதோ??
சியாமளா ராஜசேகர்

பணி ஓய்வு வாழ்த்து !

நிறைவாகப் பணிசெய்து நிறைவின்று செய்கின்றாய் 
குறைவற்ற உழைப்பாலே குன்றனைய  நிற்கின்றாய் 
கறையில்லாப் பேரோடு களிப்புடனே செல்கின்றாய் 
இறையருளால் எந்நாளும் இனிதாக வாழியவே !!

சுமையென்று கருதாமல் சுறுசுறுப்பாய் நிதமுழைத்தாய் 
இமைப்போதும் சோராமல் இல்லத்தை நிர்வகித்தாய் 
சமைத்ததையும் பிறருக்குச் சளைக்காமல் பங்குவைத்தாய் 
அமைதியுடன் வேலைகளை அலுக்காமல் முடித்தாயே !!

சிறப்பாகப் பிள்ளைகளைச் சீராட்டி வளர்த்துவிட்டாய் 
திறமையுடன் சேமித்துத் திருமணத்தை முடித்துவைத்தாய் 
பிறர்துன்பம் துடைத்திடவே பெரும்பொழுதைக் கழித்திட்டாய் 
உறவோடு நட்பினையும் உயிராக மதித்தாயே !!

உதவியெனக் கேட்குமுன்னே உன்கரத்தை நீட்டிடுவாய் 
இதமான சொற்களினால் இதயத்தை வருடிடுவாய் 
எதிலுமுன்றன் பங்களிப்பால் இமயமென உயர்ந்திடுவாய் 
மதிப்போடு தான்நடந்து மனங்குளிர வைத்தாயே !!

வருகின்ற நாளெல்லாம் மகிழ்வில்நீ மலரவேண்டும் 
விரும்பியன யாவுமுன்றன் வீடுதேடி வரவேண்டும் 
திருமகளே உன்றனுக்குச் சீர்கொண்டு தரவேண்டும் 
பெருமைகளும் உனைச்சேரப் பேரின்பம் பெறுவாயே !!

சியாமளா ராஜசேகர் 

Monday, April 8, 2019

காலத்தை வெல்லும் கண்ணதாசன் ...!!!


குழந்தையுள்ளம் கொண்டவனாம் கண்ண தாசன் 
***குன்றாத புகழுக்குச் சொந்தக் காரன் !
எழுதிவைத்த பாக்களினால் இதயம் கொய்தான் 
***ஏதேதோ மாயங்கள் நம்முள்  செய்தான் ! 
அழுகைவரும் சூழலிலு முள்ளம் தேற்ற
***ஆறுதலைப் பாட்டிடையே பொதிந்து வைத்தான் !
ஒழுக்கநெறி புகட்டிவிடு மாசா னாக 
***உயர்வான தத்துவத்தை எளிதாய்ச் சொன்னான் !!

நற்றமிழின் இலக்கியத்தின் சாறெ டுத்து 
**நயத்தோடு மிகவெளிதாய்ப் பருகத் தந்தான் !
சொற்கட்டில் சந்தங்கள் அணிவ குக்கச்
***சோர்ந்தபோது மயிலிறகாய் நீவச் செய்தான் !
கற்றோர்க்கும் மற்றோர்க்கும் நுட்ப மாகக்
***கருணையுடன் வாழ்வியலைப் புரிய வைத்தான் !
பெற்றவனு பவங்களைத்தன் பாட்டி லேற்றிப் 
***பிறருக்கு நல்லவழி காட்டி யானான் !!

கண்ணேறு படும்வகையில் உதட்டி னின்றும் 
***காட்டருவி யாய்வந்து கவிதை கொட்டும் ! 
வெண்பாக்கள் விருத்தங்கள் சிந்துப் பாக்கள் 
***விரல்நுனியில் கசிந்துவந்து முத்தம்கொஞ்சும் !
எண்ணற்ற படைப்புகளால் ஈர்த்தா னுள்ளம்
***என்றென்றும் இருந்ததில்லை அவனுள் கள்ளம் !
கண்ணனிடம் அன்புவைத்த கவிதைக் கோமான் 
***காலத்தை வென்றேயிப் புவியில் வாழ்வான் !

சியாமளா ராஜசேகர் 

 

வண்ண விருத்தம் ...!!!

ஒற்றிலா வண்ண எழுசீர் விருத்தம்
சந்தக் குழிப்பு .
******************
தனனதன தானானா
தனனதன தானானா
தனனதன தானானா தானானா
அழகுமயி லாடாதோ பறவைமொழி பேசாதோ
அமைதியெனு ளேதேவா ....வாராதோ ?
உழவுநிலை மாறாதோ வருடுவளி வீசாதோ
உலகமதி லேநோயே .....தீராதோ ?
குழலினிசை யோடேநா மிதயமதை யீவோமே
குலவுமெழி லேகேளா .....யோமானே !
மழைவரவு நீளாதோ பசுமைவய லாகாதோ
வருதுயரு மோடாதோ ....மாலோனே !!
வண்ணம் பாடுக ! பயிற்சி - 25 ல் பயின்றது
சியாமளா ராஜசேகர்

பிறந்தநாள் வாழ்த்துகள் ...!!!


பாவலருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ...!!!
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
ஈடிணை யற்ற இனிய தமிழ்மரபைத்
தேடிப் படித்துத் தெளிவுற்றாய் - நாடியிங்கு
வந்தோர்க் கெளிதாய் மரபைப் பயிற்றுவித்தாய் 
செந்தமிழ்ப் பெற்றது சீர் .
சீர்மிகு சோலையில் தித்திக்கும் பாவகைகள்
சோர்வின்றிக் கற்பிக்குந் தூயனே ! - வேர்விட்ட
ஆல மரமாய் அழியாப் புகழுடன்
ஞாலத்தில் சூழ்க நலம் .
நலத்துடன் தான்வாழ நற்றமி ழன்னை
நிலையெனச் சேர்ந்தாளோ நின்னை - சலியா
மனத்துடன் வாழ்கவிவ் வையத்தி லென்றும்
உனக்கவ ளாசிக ளுண்டு.
உண்டு களிப்பி லுறங்கிக் கழிக்காமல்
தொண்டுளத் தோடு தொடர்பணியைக் - கண்டவர்
யாவரும் போற்றியுனை ஏத்திடச் சித்தருடன்
தேவரும் வாழ்த்துவர் சேர்ந்து.
சியாமளா ராஜசேகர்

கோடை மழையே வாராயோ ??

கோடை மழையே வருவாயா 
***கொதிப்பைக் கொஞ்சம் தணிப்பாயா ?
ஓடை காய்ந்து கிடக்கிறதே 
***ஊறும் கிணறும் வற்றியதே !
வாடைக் காற்றை எண்ணியெண்ணி
***மனத்தில் ஏக்கம் பிறக்கிறதே !
பாடி உனையே நானழைப்பேன்
***பரிந்து குளிர்ந்து வந்துவிடு !!

வெளியில் செல்ல முடியவில்லை 
***வெயிலின் கொடுமை தாளவில்லை !
களைப்பில் மேனி சோர்ந்திடுதே 
***கடுப்பில் எரிச்சல் தோன்றிடுதே !
வளியும் அனலாய்ச் சுடுகிறதே 
***வடியும் வியர்வைக் கரிக்கிறதே !
கிளைகள் யோகம் பயில்கிறதோ
***கீழ்மேல் அசைய மறுப்பதுமேன் ??

தாகம் நாவை வறட்டிடுதே
***தண்ணீர் குடித்தும் அடங்கலையே!
தேகம் சூட்டில் தகிக்கிறதே 
***தென்றல் வரவை விழைகிறதே !
மேகம் வானில் சூழாதோ 
***மின்னல் கொடியும் பூக்காதோ ?
வேக மாக நீபொழிந்தால் 
***மேனி குளிர நனைவேனே !!

வருணன் விழிகள் திறவானோ 
***மண்ணிற் கமுத மளிப்பானோ?
தரும மிகுந்த சென்னையிலே 
***தாகந் தணிக்க வாரானோ 
உருண்டு மோதி இடிமுழங்க 
***உயிர்கள் பிழைக்கப் பொழிவானோ?
விரும்பி உனையே அழைக்கின்றேன் 
***விருந்தாய் விரைவாய் இக்கணமே !!

சியாமளா ராஜசேகர் 

Thursday, April 4, 2019

வருமே மாற்றம் ....!!!

கையெடுத்துக் கும்பிட்டே ஓட்டுக் கேட்டால் 
****கடுகளவும் இளகாமல் திருப்பிக் கொள்(ல்)வீர் !
பையெடுத்து வரச்சொல்லிப் பரிசு தந்தால் 
****பட்டென்று தேவையில்லை யென்றே சொல்வீர் !
தையலுக்குப் பாதுகாப்பு தருவோ மென்றால்
****தயங்காமல் சட்டென்று வாய்பொத் தென்பீர் !
மையிட்ட நம்விரலால் வருமே மாற்றம் 
****மயங்காமல் வாக்களித்துப் பெறுவோம் ஏற்றம் !!!

சியாமளா ராஜசேகர் 

வெண்டளையானியன்ற தாழிசை ....!!!


உலகினில் வாழும் உயிர்களைக் காக்கும் 
தலைவநின் தாளைச் சரணடைவ தெக்காலம் ? 1 

அடைந்த பதவிகளால் ஆணவங்கொள் ளாமல் 
கடைவழி காட்டவுன் கண்திறப்ப தெக்காலம்? 2 

கண்திறந்து பார்த்துக் கவலைகளைத் தீர்ப்பதற்கு 
விண்ணின்று வந்து வினையறுப்ப தெக்காலம் ? 3 

அறுக்கும் நினைவுகளால் அன்றாடம் வாட்டி 
வறுக்கும் அவலநிலை மாறுவது மெக்காலம் ?4. 

மாற்றத்தை வேண்டி வணங்கித் துதிப்பவர்க்கு 
ஏற்றத்தைக் காட்டி யிதமளிப்ப தெக்காலம் ? 5. 

அளித்தவை யாவும் அவனன்றி யாரால் 
எளிதாய்க் கிடைக்கு மெனவறிவ தெக்காலம் ? 6. 

அறிவின் துணையோ(டு) அகவிருள் நீங்கிப் 
பிறவிப் பெருங்கடலை நீந்துவது மெக்காலம் ? 7. 

நீந்தும் பொழுதினிலே நீலகண்டன் தன்கரத்தில் 
ஏந்தி யரவணைக்க ஏற்றபொழு தெக்காலம் ? 8. 

பொழுதெலாம் வீணாக்கும் புல்லர் களையும் 
முழுதாக ஆட்கொண்டு முத்திதர லெக்காலம் ? 9. 

முத்திதரு மீசனை முப்போதும் போற்றியே 
சுத்தமெய் ஞானத்தைத் துய்த்துணர்வ தெக்காலம் ? 10. 

உணர்வில் கலந்தோனை ஓர்ந்துமிக வன்பாய் 
வணங்கித் தொழுது வரம்பெறுத லெக்காலம் ?11. 

பெறுதற் கரிய பிறவியெடுத் தாலும் 
தறுதலையாய்ச் சுற்றுவோருன் தாள்சேர்வ தெக்காலம் ? 12. 

சேர்க்கைச் சரியின்றிச் செய்யும் இழிதொழிலால் 
பேர்கெட்டோர் இவ்வுலகில் பேறடைவ தெக்காலம் ? 13. 

பேறாக எண்ணித்தம் பெற்றோரைப் பேணாத 
மாறாக் குணமுடையோர் மாறுவது மெக்காலம் ? 14. 

மாறிவரு மிவ்வுலக மாயைகளில் சிக்காமல் 
ஆறுதலாய்ப் பக்கமிருந் தாட்கொள்வ தெக்காலம் ? 15. 

கொள்கையில் மாறுபட்டுக் குற்றம் புரிவோரின் 
கள்ளத் தனம்போக்கிக் காட்சிதர லெக்காலம் ? 16. 

காட்சியைக் கண்டவுடன் கண்ணீர்ப் பெருக்கெ 
ஓட்டை விடுத்துன்னுள் ஒடுங்குவது மெக்காலம் ? 17. 

ஒடுங்கிய நெஞ்சத்தில் ஓங்கார மாகக் 
கடுகிநீ வந்தெம்மைக் காத்திடுத லெக்காலம் ? 18. 

காத்திருக்கும் வேளைதனில் காலன் அணுகாமல் 
கூத்தனுன் பார்வை குளிர்விப்ப தெக்காலம் ? 19. 

குளிர்ச்சியைத் தாங்கிக் கொதிப்படக்கும் நின்றன் 
வெளிர்நீற்றால் பாவம் விலக்கிடுத லெக்காலம் ? 20. 

விலகும்கொடுந் துன்பம் விரிசடையோன் பார்க்க 
நிலவும் அமைதியினால் நெஞ்சினிப்ப தெக்காலம் ? 21. 

நெஞ்சினிக்கும் மந்திரத்தை நெற்றியில் நீறிட்டு 
நஞ்சுண்டோன் நாமம் நவிலுதலு மெக்காலம் ?22. 

நாமம் நவில்வோர்கள் நற்கதி பெற்றிடவே 
காமத்தைப் போக்கிக் கரையேற்ற லெக்காலம் ? 23. 

கரையேறத் தான்விழைவோர் கண்ணீர் உகுக்க 
விரைந்துவந்து பேரின்ப வீடளிப்ப தெக்காலம் ? 24 . 

வீடுசெல்லும் பேறுபெற்று மேன்மை நிலையடைய 
கூடுவிட்டுக் கூடுபாய்ந்து கூப்பிடுத லெக்காலம் ? 25. 

கூப்பிடும் சத்தத்தில் கோயிலைத் தாண்டிவந்து 
தீப்பிழம்பாய்த் தோன்றிச் சிலிர்க்கவைப்ப தெக்காலம் ? 26. 

சிலிர்த்துப் பரவசத்தில் சேவடியைப் பற்ற 
வலிபறந்து போகும் வரங்கிடைத்த லெக்காலம் ? 27. 

கிடைத்த பொன்பொருளைக் கிஞ்சித்தும் வேண்டா 
அடியாரைப் போல அகந்தெளிவ தெக்காலம் ? 28. 

தெளிந்தவறி வின்றிச் செயற்பட்டு வாழ்வில் 
இளைத்து நலிந்தோரு மின்புறுத லெக்காலம் ? 29. 

இன்புற்ற போதும் இறுமாப்பு கொள்ளாத 
அன்பரைக் கண்டே அடிபணித லெக்காலம் ? 30. 

பணிவே பெருங்கொடையாய்ப் பைந்தமிழர் போற்றும் 
அணியாம் அறிந்தே அதைச்சூட லெக்காலம் ? 31. 

சூடிய கங்கையொடு சூலமு மேந்தியவன் 
ஆடிய பாதனவன் ஆட்கொள்வ தெக்காலம் ? 32. 

ஆட்கொள்ள வேண்டுமெனில் ஐம்புலன்கள் தானடங்கி 
எட்டா உயரத்தை எட்டுவது மெக்காலம் ? 33. 

எட்டும் வழியை எளியவர்க்கும் காட்டுபவன் 
பட்டு மலர்ப்பாதம் பற்றுவது மெக்காலம் ? 34. 

பற்றற்றான் தாளினைப் பற்றிப் பரவசத்தில் 
நற்றமிழில் பாவியற்றி நாடுவது மெக்காலம் ? 35. 

நாடும் நலம்பெறவே நாதன் புகழ்பாடத் 
தேடும் இதயத்தில் தேன்பொழிவ தெக்காலம் ? 36. 

தேனாம் வாசகத்தைத் தித்திக்கப் பாடுவோர்க்கு 
மீனாள் துணைவன் விழிமலர்வ தெக்காலம் ? 37. 

மலரடியைப் பற்றி மனமுருகி வேண்ட 
குலம்விளங்கக் காப்போன் குறைதீர்ப்ப தெக்காலம் ? 38. 

குறைகளால் நொந்து குமுறியழு வோர்க்கு 
மறைபோற்று மீசன்நல் வாழ்வளிப்ப தெக்காலம் ? 39. 

வாழ்வில் வருந்துயரால் உள்ளம் நிலைகுலைய 
ஆழ்மனக்கா யங்களை ஆற்றுவது மெக்காலம் ? 40 . 

காயங்க ளாற்றநெற்றிக் கண்திறந்து பார்த்தாலென் 
தூயவனே உன்கருணைத் துளிர்விடுத லெக்காலம் ? 41. 

துளிர்விடு மாசைகளைச் சுத்தமாய்ப் போக்கி 
எளியேனைக் கைகளில் ஏந்துவது மெக்காலம் ? 42. 

ஏந்திய சூலத்தால் என்பிழைகள் சாய்த்துவிட்டு 
நீந்தும் வழித்துணைக்கு நீவருத லெக்காலம் ? 43 . 

நீவரு வாயெனவே நெஞ்சத் துடிப்போடு 
பாவியென் உள்ளம் பணிசெய்வ தெக்காலம்? 44. 

செய்யும் பணிக்குச் சிவனார் துணையிருக்கப் 
பெய்யும் மழைபோலே பீடுறுவ தெக்காலம் ? 45 . 

பீடுடைய பெம்மான் பிறவிப் பிணிதீர்க்கக் 
காடுடைய நீரணிந்து காட்சிதர லெக்காலம் ? 46. 

காட்சியில் மெய்சிலிர்க்கக் காந்தமாய் உள்ளமீர்க்கச் 
சாட்சியாய் இங்குவந்து தானணைப்ப தெக்காலம் ? 47. 

அணைக்கும் கரங்களினால் ஆன்மசுகம் தந்தே 
இணக்கமுடன் என்னை இயக்குவது மெக்காலம் ? 48. 

இயக்கமும் காப்புமாய் என்னையும் நீயே 
மயக்கம் தெளிய மகிழ்விப்ப தெக்காலம் ? 49. 

மகிழும் பொழுதெலாம் மன்றாடி யுன்னை 
உகந்த இறையாய் உலகியம்ப லெக்காலம் ? 50. 

சியாமளா ராஜசேகர்






























Monday, April 1, 2019

காதல் பாக்கள் ( மண்டலவந்தாதி )

காதல் பாக்கள் .... குறள் வெண்பா
* * * *  * * * * * *  * * ** * * * * * * * * *  * * * * 
மண்டலவந்தாதி
*********************** 
நிலவுமுகம் கண்டேன் நினைவில்நீ வந்தாய் 
மலர்ந்த(து)  இதயம் மகிழ்ந்து 1.

மகிழ்ச்சிக் கடலினில் மௌனமாய் நாமும் 
நெகிழ்ச்சியில் நீந்துவோம் வா. 2.

வான்முகில் தொட்டு வளர்பிறை யைக்கொய்து 
மான்விழியே வைத்திடுவேன் பொட்டு. 3.

பொட்டிட்ட நெற்றியில் பூத்த வியர்வையைத்
தட்டித் துடைப்பேன் தவித்து. 4.

தவிப்புடன் காக்கவைத்த தையலே உன்னைக் 
கவியா லணைப்பேன் கனிந்து.5.

கனிந்த மனத்தில் கவலை எதற்கு 
பனிமலரே சற்றென்னைப் பார் . 6.

பார்வையா லீர்த்தாய் பசிக்கு விருந்தாகச் 
சேர்ந்திங்கு வாழ்தல் சிறப்பு . 7.

சிறந்த குணமும் சிரித்த முகமும் 
உறவாய் நினைக்கும் உனை .8.

உனைநான் பிரியேன் ஒருபோதும் கண்ணே 
எனைநீ புரிந்தால் இதம். 9.

இதமளிக்கும் அன்பில் இதயம் குளிர்ந்தேன் 
மதுமொழி யாலென்னை மாற்று . 10.
மாற்றினாய் என்னை மயக்கந் தணியயிப்  
பாறையிலும்  பூத்தது பாட்டு. 11.

பாட்டி லுனைவைத்துப் பாச மழைபொழிவேன் 
வீட்டில் விளக்கேற்ற வா . 12

வாசலில் கோலமிட்டாய் வைகறை வேளையில் 
ஆசையில் வந்தேன் அறி .13. 

அறிந்தும் அமைதியேன் அன்பை விதைத்தால்
குறையொன்று மில்லை கொடு.14

கொடுத்துப் பெறுவதால் கோடியின்பம் கிட்டும் 
தொடுவதுந் தப்போநீ சொல். 15.

சொல்லி முடிக்குமுன் துள்ளி யெழலாமா 
மெல்லியளே மென்விரலால் மீட்டு . 16. 

மீட்டிய  வீணையின் நாதமாய்க் கொஞ்சியே 
ஊட்டுவாய் காதல் உரம் . 17

உரத்துநீ பேச ஒடிந்திடுமென் உள்ளம் 
அரவணைப் பொன்றே அழகு. 18.

அழகுமயி லுன்னை அணைக்கத் துடித்தேன் 
நழுவாதே நொந்திடுவேன் நான் . 19.

நானுன்னைச் சேர்ந்திடும் நாளினில் ஆவலொடு 
வானுலகும் வாழ்த்தும் வியந்து .20. 

வியக்கிறே னுன்னை விழிகள் விரியத்
தயங்காமல் கன்னத்தில் தா. 21

தாவென்று கேட்டேன் தரமாட்டே னென்றுசொன்னால் 
பாவியென் செய்வேன் பகர். 22

பகர்ந்த மொழியில் பரவசப் பட்டேன் 
சுகமா யிருந்ததந்தச் சொல். 23

சொல்ல வியலாச் சுமையும் விலகிடும்
செல்லமுன்னால் சேரும் சிறப்பு . 24 

சிறப்பொடு நீவனையும் தேன்பாக்கள் நம்மின் 
உறவை வலுப்படுத்தும் ஊற்று . 25.

ஊற்றெனப் பொங்கி உதிரத்தில் பாய்ந்திடத்
தோற்றிடுமோ நம்காதல் சொல் . 26 

சொல்லி யழுதால் துயர்களும் நீங்கிடும் 
வெல்லும் வழியை விளக்கு .27 

விளக்கின் சுடராய் விழிகளும் மின்ன 
இளகிய துள்ள மினிது. 28. 

இனியவளே! கண்ணே ! இளமை ததும்பும் 
கனிமொழியே  ! பக்கம்வா கண்டு. 29.

கண்டவுடன்  கூத்தாடும் கால்களும் எம்பியே 
விண்ணுக்குத் தாவும் விரைந்து .30.

விரைந்துவரும் வான்மழையில் மேனி நனையக்
கரையலாம் ஒன்றாய்க் கலந்து. 31

கலந்த மனங்களில் கள்ளமில்லாக் காதல் 
நிலமிசை வாழும் நிலைத்து. 32

நிலைக்குமென் றெண்ணித்தான் நெஞ்சிலுற வானாய் 
மலைப்பதேன் மானே மருண்டு. 33

மருளும் விழிகளில் மையலைக் கண்டேன் 
இருளி லொளியா யிரு. 34

இருவரின் பார்வை இனிதாய்க் கலக்க 
உருகி வழியும் உயிர் . 35

உயிரில் கலந்தாய் உணர்வில் நிறைந்தாய் 
வயிற்றில் சுமப்பாய் வரம் .36.

வரமாய் நினைத்து வடிவழகே உன்னை 
கரம்பற்றிக் காப்பேன் கனிந்து. 37 

கனியும் பொழுதில் கலங்கிட லாமா 
இனிக்கு முறவுக் கிசை . 38

இசையும் கவியும் இருவிழிக ளாக 
அசைக்கு முளத்தி லடங்கு. 39 

அடங்கிடுமோ வாசை அனுபவிக் காமல் 
உடற்படுத்தும் பாட்டை உணர். 40

உணர்ச்சிப் பிழம்பாய் உருகிடும் போழ்தில் 
அணங்கேவுன் காதல் அழகு . 41. 

அழகே அமுதே அருகில் வருவேன் 
பழகிய கண்களைப் பார். 42 

பார்த்ததும் பூத்திடும் பாவையுன் நெஞ்சத்தில் 
வேர்விட்ட அன்பை விரி . 43 

விரிவானின் வானவில்லை வெட்டி யுனக்குப்
பரிசாய்த் தருவேன் பரிந்து. 44.

பரிவா யுனையணைத்துப் பட்டாடை தந்தே  
உரியவ ளாக்குவேன் ஏற்று. 45 

ஏற்க மறுக்காதே என்னுயிரே தேவதையே 
சீற்றந் தணிவாய் சிரித்து. 46 

சிரித்துச் சிரித்துச் சிறையிலிட்ட பெண்ணே 
நுரைத்த துளமிந் நொடி.. 47. 

நொடிப்பொழுதும் நீயின்றேல் நொந்திடும் வாழ்வு 
மடியில் விளையாட வா .. 48

வாடா மலரே மலையருவிச் சாரலே 
ஈடாய் எதுவுமில்லை இங்கு. 49 

இங்குன்னைக் கண்டதும் இன்பம் பெருகிடுதே
தங்கமே என்னிதயம் தா . 50 

தாமரைப் பூத்த தடாகத்தில் வண்டெனக்
காமமிக வாகுதே கண்டு. 51. 

கண்டாங்கிச் சேலையில் கண்குளிர வைத்தவளே 
சுண்டு விரலைச் சொடுக்கு . 52 

சொடுக்கும் நொடியில் சுவைப்பேன் இதழைக்
கொடுப்பா யுனையே குளிர்ந்து. 53 

குளிர்ந்த இரவில் கொதிப்பு மடங்கக்
களிப்போம் கனிவாய்க் கலந்து. 54

கலந்துற வாடிக் கதைப்பல பேசி 
உலகை மறப்போம் உவந்து. 55 

உவகை யுடனே உனதுகரம் பற்றி 
அவல ழிப்பேன் அணைத்து. 56

அணைப்பின் கதகதப்பில் ஐம்புலனும் சொக்கும்
துணையிருப் பாயா தொடர்ந்து. 57 

தொடர்ந்துவரும் பந்தம் சுகராகம் மீட்ட 
கடந்துவிடும் துன்பம் கரைந்து. 58 

கரைந்துவிடும் சோகம் கடலுக்குள் உப்பாய் 
வரையாத ஓவியமே வா . 59

வாசிப்பேன் புத்தகமாய் வண்ணமலர் போலுன்னை
நேசிப்பேன் வாழிய நீடு. 60

நீடுநீ வாழ நிறைமனத்து டன்வேண்டிப்
போடுவேன் உண்டியலில் பொன் . 61.

பொன்னே! ஒளியே! பொலிவாய் விளங்கிடும்
கன்னக் குழியினைக் காட்டு . 62 

காட்டாற்று வெள்ளமாய்க் காதலுடன் பாய்ந்துவந்(து)
ஊட்டுவே னின்ப முரித்து. 63 

 உரியவனைக் கண்டும் ஒளிந்திட லாமா 
புரியவில்லை நீயே புகல். 64.

புகலும் மொழியால் புனித மடைவேன் 
அகத்தின் இருளை யழி. 65 

அழியா நினைவுகள் ஆட்டுவிக்க நானும் 
விழுந்தேன் கனவில் விழித்து. 66.

விழிகள் கலந்திட வெட்கச் சிவப்பில் 
எழில்கூட மின்னும் இதழ் . 67 

இதழில் கவிவனைய இங்கோடி வந்தேன் 
இதய மலரே எழு. 68 

எழுதிய பாக்களெல்லாம் என்று முனக்காக
முழுதாய்ப் படித்து முடி .69 

முடிச்சுகள் மூன்றிட்டு முத்தந் தருவேன் 
விடியும் வரையில் விழித்து. 70.

விழித்ததும் என்முன்னே மின்னலாய் வந்து 
பொழிந்திடும் அன்பால் புதை . 71.

புதையலாய் நீகிடைத்தாய பொன்போல்நான் காப்பேன் 
வதைக்காமல் அருகிலே வா . 72.

வார்த்தைக ளின்றி மனந்தடு மாறுமுன்
கார்க்குழ லாடிடக் கண்டு .73.

கண்டேன் கனிந்தேன் களிப்பினில் துள்ளினேன்
வண்ணத்தில் வைப்பேன் வளைத்து. 74 

வளைகுலுங்கும் கைகளினால் வாரி யணைக்கத்
திளைப்பேன் இதயம் திறந்து. 75 

திறந்தவிழி மூடாமல் தேடினே னுன்னை
உறைந்தததே என்ற னுளம். 76

உளம்முழுதும் நீயாக ஊட லெதற்கு 
தெளிந்தால் முளைக்கும் சிறகு. 77 

சிறகு விரித்திணைந்து சிட்டாக வானில்
பறந்தே இசைக்கலாம் பாட்டு . 78 

பாட்டி லுருகவைத்த பைங்கிளியே பேசாமல் 
வாட்டுவதேன் கொஞ்சமுன்னை மாற்று .79

மாறா திருப்பாயோ மானே  உனதிதயம்
பாறாங்கல் லென்றுநினைப். பார். 80 

பார்க்கு மிடமெல்லாம் பாவையுன் பூமுகமே
நேர்நிற்கும் என்னுள் நிறைந்து. 81

நிறைகுடமாய் நீயிருக்கும் நெஞ்சத்தி லென்றும் 
குறையேது மில்லையெனக் கூறு . 82

கூறும் மொழியில் குளிர்ந்து கவலகன்(று)
ஆறுதல் கொண்ட(து) அகம். 83 

அகத்தில் இனிக்கின்ற ஆனந்த யாழாய் 
புகட்டுமுன் அன்பு பொலிவு. 84 

பொலிவுடன் பாய்ந்தோடும் பொன்னி நதியின் 
அலைகளில் என்னுடன் ஆடு. 85 

ஆடிவரும் தென்றலை ஆரத் தழுவியே 
கூடுவோம் ஒன்றாய்க் குளிர்ந்து. 86

குளிர்ந்த அருவியில் கொஞ்சிக் குலாவிக்
குளிக்கும் வரத்தைக் கொடு. 87 

கொடுத்துப் பெறுவது கொண்டாட்டம் தானே?
கொடுத்திடி லென்ன குறை . 88

குறையென்மீ துண்டோ குறுநகை ஏனோ
நொறுங்கிடு முள்ளம் நொடிந்து.89

நொடித்த பொழுதினில் நோவு தணிக்க 
மடியிற் கிடத்தி வருடு. 90

வருடி யணைப்பேன் வயல்வெளிக் காற்றாய் 
விருந்து மளிப்பேன் விழைந்து. 91. 

விழைந்த மனத்திற்கு வேண்டியது நல்க 
அழைத்தெனைச் செய்வாயா அன்பு. 92 

அன்பேவுன் சேவைகள் ஆரம்ப மாகட்டும் 
இன்பந் தழுவட்டும் ஈண்டு. 93

ஈண்டுனை யான்பெற என்னதவம் செய்தேனோ 
சீண்டலில் பெற்றேன் சிலிர்ப்பு. 94

சிலிர்க்குமென் ஆவி தெவிட்டாமுத் தத்தில்
பொலிவாய் மலரும் புலன். 95.

புலன்களுக்கென் துன்பம் புரியுமோ பெண்ணே 
சிலசொற்க ளாவது செப்பு. 96

செப்புச் சிலையெழிலே தென்பொதிகைத் தென்றலே 
சப்பரத்துச் சாமியை நாடு. 97.

நாடி வருமென்னை நம்பி வருவாயா 
பாடித் திரிவோம் பழகு .98

பழகிடும் போது பனிமழை சிந்தச்
சுழன்று  நனைந்தபடி சுற்று . 99

சுற்றிவரும் வானில் சுகந்தரும் காதலியின் 
நெற்றியில் பொட்டாய் நிலவு. 100

சியாமளா ராஜசேகர்