Monday, August 3, 2020

நலன்கள் நல்கிட வருவாள் ....!!!




ஆடி பிறந்ததும் அன்னையைப் போற்றி அகங்குளிரக்
கூடி யிருகரம் கூப்பி வணங்கிக் குலவையிட்டுப்
பாடி யழைத்தால் பரிவுடன் கேட்டுப் பரவசத்தில்
நாடி வருவாள் நமக்கு நலங்களை நல்கிடவே !

மஞ்சள் முகத்தில் மங்கலப் பொட்டு மலர்ந்திருக்கக்
கொஞ்சும் சிரிப்புடன் கோல விழிகளும் குளிர்ந்திருக்க
நெஞ்ச முருகி நெகிழ்ந்து தொழுது நினைப்பவர்க்குத்
தஞ்ச மளித்துத் தயவுடன் காத்திடும் தாயவளே!

கால்களில் தண்டை கலகல வென்று கவியிசைக்கச்
சேல்விழிப் பார்வை செறிவா யருளைத் தினம்வழங்கப்
பால்முகப் புன்னகை பாச வுணர்வைப் பரிசளிக்க
நால்வரும் பாடிய நாயக னோடுறை நாயகியே !

வளைகள் குலுங்க வலம்வரும் செவ்விய மாதரசி
திளைக்க திளைக்கச் செவிக்கமு தீந்திடும் தேனரசி
களைப்பை விரட்டிக் களிப்பை யளிக்குங் கலையரசி
ஒளிருஞ் சுடர்தனில் ஓவிய மாக உயிர்ப்பவளே !

இடையொடு மேகலை இன்பந் ததும்ப இணைந்திருக்கச்
சடையினிற் சூடிய சம்பங்கிப் பூச்சரம் தான்மணக்கக்
கடைவிழி யாலே கரோனாவை ஓட்டிக் கருணையுடன்
துடைத்திடு வாளே துயர்தனை நாமும் சுகம்பெறவே !

கூழினை யூற்றக் குடித்து மகிழ்ந்து குளிர்ந்திடுவாள்
தோழியைப் போல்நம் சுமைகளைத் தோளில் சுமந்திடுவாள்
வாழுமிப் பூமியை வாட்டிடும் நுண்மியை மாய்த்திடுவாள்
ஏழுல கெங்கு மிசைந்தே நிறையு மிவளருளே !!

சியாமளா ராஜசேகர்

உயிர் நீ உற்ற உறவும் நீ ...!!!

உயிர்நீ உற்ற உறவுநீ கந்தா
கயிலை வாழ்முக் கண்ணன் புதல்வா !
மயில்வா கனனே வள்ளி மணாளா
துயரறுத் திடவே துடிப்புடன் வாராய் !

தஞ்ச மடைந்தோர் தவிப்பினை யுணர்ந்து
குஞ்சரி நாதா குறைகளைக் களைவாய் !
அஞ்சே லென்றே அபய மளித்து
நெஞ்சம் குளிர நிறைநலங் கொடுப்பாய் !

அச்சங் கூட்டி அமைதியைக் குலைக்கும்
இச்சை கொண்டே இன்னுயி ரெடுக்கும்
நச்சுத் தொற்றினை நசுக்கிப் போடப்
பச்சை மயிலில் பரிவாய் வருவாய்!

பாரின் நிலையைப் பன்னிரு விழிகளால்
பார்த்த பிறகும் பாரா முகமேன்?
ஈரறு கைகளில் ஏந்தி வந்து
கூர்வே லாலே குத்திக் கிழிப்பாய்!

தீயன பொசுக்கும் சேவற் கொடியோய்
மாயத் தொற்றை மறையச் செய்வாய் !
நோயில் விழுந்தோர் நொந்துவா டாமல்
தாயின் பரிவுடன் தலைகோ திடுவாய் !

இடிபோல் தாக்கி இதயம் நிறுத்தித்
துடிக்கத் துடிக்கச் சுற்றத் தினரழ
எடுத்துச் செல்லும் எமனாம் கொரோனா
பிடியில் விழாது பெருமான் காப்பாய் !

உன்னை யன்றி உள்ளம் யாரையும்
என்றும் துணையாய் ஏற்க நினையுமோ ?
பன்னிரு விழிகளுள் பரிவா யெமக்காய்
ஒன்றைத் திறந்தால் உய்வோம் யாமே !

அண்டமும் குலுங்க அதிரடி யாகக்
கிண்கிணி யொலிக்கக் கிளர்ந்தெழு வாயே !
மண்ணுல குய்ய வடிவே லழகா
விண்ணைத் தாண்டி விரைந்து வாராய் !

வறியோர் துன்பம் மாற்றப் புறப்படு
சிறியோர் பெரியோர் சீர்பெறச் செய்திடு
அறியாப் பிள்ளை அழைப்பது கேட்டதும்
குறைகள் களையக் குமரா வருக !

ஒருகழல் சற்றே உயர்த்தி மிதித்தால்
உருதெரி யாமல் ஒழியும் நுண்மி!
வருவாய் முருகா வந்தருள் புரிவாய்
தருவாய் நிம்மதி தரணியி லெமக்கே !!

சியாமளா ராஜசேகர்

எதுவரையில் போகும் இது ....!!!

எதுவரையில் போகும் இது ?
*****************************************
சீனத்தில் பிறப்பெடுத்த தீநுண்மி உரிமையுடன்
தேகம் தீண்டும் !
ஊனுடம்போ(டு) உறவாடி உலகெங்கும் தான்பரவி
உச்சம் எட்டும் !
மானுடர்க்குச் சவால்விட்டு மாசற்ற மேனியையும்
மாய்த்துச் சாய்க்கும் !
நானென்றே மார்தட்டும் வல்லரசு நாட்டினையும்
நடுங்க வைக்கும் !
காசினியைச் சுற்றிவந்து கட்டுக்குள் அடங்காமல்
கலங்கச் செய்யும் !
நாசிவழி தான்நுழைந்து நச்சென்று தொண்டைகவ்வி
நலத்தைக் கொய்யும் !
நேசிக்கும் உறவுகளை நேர்சென்று காணாத
நிலைக்குத் தள்ளும் !
பூசிக்கும் கடவுளையும் போய்வணங்க வியலாமல்
பூட்டச் செய்யும் !
தந்திரமாய்த் தொட்டவுடன் தயங்காமல் சட்டென்று
தாவிக் கொள்ளும் !
முந்திவந்து சளிஇருமல் மூச்சிறைப்பைப் பரிசளித்து
மூச்ச டக்கும் !
கந்துவட்டிக் காரன்போல் கழுத்தழுத்தித் துடிக்கவைக்கக்
காத்தி ருக்கும் !
அந்தகனாய் உயிர்சுருட்டும் ஆவலுடன் தொடர்ந்துவந்தே
ஆட்டம் போடும் !
அனைவரையும் அச்சமின்றி அதனோடு பழகிவாழ
அரசு சொல்லும்!
தனித்திருந்து விழித்திருந்தும் தைரியமாய்த் தானிருந்தும்
தவிப்பே மிஞ்சும்!
மனவழுத்தம் காரணமாய் மருத்துவரை நாடுதற்கும்
மனமே அஞ்சும்!
இனியென்று நம்வாழ்வில் இயல்புநிலை திரும்புமென
ஏங்க வைக்கும்!
விடக்கிருமி இரக்கமின்றி விழிகட்குப் புலப்படாமல்
வேட்டை யாடும்!
முடுக்கிவிட்ட இயந்திரம்போல் முள்முடிநுண் தொற்றிஃது
மோதிப் பார்க்கும்!
குடும்பத்து விழாக்களிலும் கூடமுடி யாதுமனம்
குமைய வைக்கும்!
தொடரிழப்பால் படுந்துயரைச் சொல்லியழ வியலாமல்
துக்கம் கூட்டும்!
அழகராற்றில் இறங்கவில்லை ஆலயத்தேர் ஓடவில்லை
அகம்க சிந்தோம் !
உழைப்பதற்கும் முடியாமல் ஊரடங்கால் வீடடங்கி
உள்ளம் வேர்த்தோம் !
பிழைப்பதற்கே வழியில்லா பெரும்பாடு படும்வறியோர்
பிதற்றல் கண்டோம் !
இழப்புகளால் கவலுற்று இரவுபகல் தூக்கமின்றி
இதயம் நொந்தோம் !
அப்பப்பா என்செய்ய அதிரவைக்கும் கொரொனாவை
அழிப்பார் யாரோ ?
தப்பாட்டம் போட்டிங்கே தலைதெறிக்க அலைகிறதே
தடுப்பார் யாரோ ?
நிப்பாட்ட வியலாமல் நிம்மதியும் தொலைகிறதே
நெறிப்பார் யாரோ ?
எப்படியும் ஒடுக்கிவிட இவ்வுலகே துடிக்கிறதே
எரிப்பார் யாரோ ?
உதவிசெய நினைத்தாலும் உயிர்பயத்தால் உறவுகளை
உதறச் செய்யும் !
கதிகலங்க வைக்குமிதைக் கனவினிலே நினைத்தாலும்
கத்தத் தோன்றும் !
எதுவரையில் போகுமிந்த இடர்த்தொற்றின் நச்சாட்டம்
யாரைக் கேட்க ?
அதுவரையில் இறைவாவுன் அரவணைப்பில் எமையிருத்தி
அமைதி தாராய் !!
சியாமளா ராஜசேகர்
( கவிவேழம் இலந்தை இராமசாமி ஐயா அவர்களின் தலைமையில் பைந்தமிழ்ச் சோலை இலக்கியக் கூடல் இணையவழிக் கவியரங்கில் வாசித்த என் கவிதை ! இலந்தை ஐயா அவர்களுக்கும் , வாய்ப்பினை நல்கிய பாவலர் அவர்களுக்கும் , இந்த ஏற்பாட்டைச் சிறப்பாகச் செய்த அன்புமகன் விவேக் பாரதிக்கும் மனம் நிறைந்த நன்றி )

உள்ளம் தடுமாறும் போது ...!!!

உள்ளம் தடுமாறும் போது - எனை
உன்றன் கரமணைக்க வேண்டும் !
கள்ளம் கபடமில்லா நெஞ்சை - இனங்
காண உனதருளும் வேண்டும் !
துன்பம் சுழற்றியடித் தாலும் - துயர்
துடைக்க விரைந்துவர வேண்டும் !
இன்ப வெளிதன்னைக் காட்டி - என(து)
இதயம் குளிர்விக்க வேண்டும்!
பட்ட துயரெல்லாம் போதும் - இரு
பக்கத் துணையாக வேண்டும்!
எட்டுக் குடிவாழும் வேலா - இந்த
ஏழைக் குதவிசெய வேண்டும்!
கந்தா உனையன்றி யார்தான் - மனக்
கவலை தனைத்தீர்த்து வைப்பார்?
சிந்தி லிசைப்பாடற் கேட்டு - நின்
சிந்தை மகிழ்ந்திங்கு வாராய்!
நெஞ்ச முருகியுனைப் பாடி - என்
நெற்றி தனில்நீறு பூசி
கெஞ்சி யழைத்தும்வா ராயேல் - என்
கெண்டை விழிகளில்நீர் கொட்டும்!
நின்னைத் துதிக்குமடி யாரை - வேலா
நீயே அரவணைக்கா விட்டால்
பின்னர் எவர்வருவார் சொல்வாய் - உன்
பிள்ளை யெனைத்தாங்கிக் கொள்வாய்!!
சியாமளா ராஜசேகர்

முத்துவிழா வாழ்த்து (22:06:2020)

பத்துக்குப் பின்பிறந்த பதினொன்றாம் பிள்ளை
     பாசமுள்ள கிரேஸ்ஆச்சி பெற்றெடுத்த முல்லை !
உத்திரம்மாள் தங்கமகள் ரேவதியை மணந்த
    உயர்வான பண்புநிறை எங்கள்தாய் மாமன் !
வித்தகனாய் வலம்வந்து வெற்றிகளை யீட்டி 
    வேரூன்றி ஆலாக நிழல்கொடுக்கும் வள்ளல் !
தித்திக்கும் ஸ்ரீராமன் மந்திரத்தை நாளும்
    தினந்தோறும் உள்ளுருகி உச்சரிக்கும் பக்தன் !!

குலதெய்வ அருளாலே  நன்மக்கட் பெற்று
    கோவையிலே வாழ்ந்திருக்கும் நற்பேறு பெற்றாய்!
கலைமகளும் அலைமகளும் கருணையுடன் பார்க்க
     கல்வியுடன் பல்வளமும் பிள்ளைகட்(கு) அளித்தாய்!
இலையென்று சொல்லாமல் இல்லாதோர்க் கீயும்
     இதயத்தால் எம்மனதில்  இமயமென உயர்ந்தாய் !
நலத்துடனே எந்நாளும் நோய்நொடிக ளின்றி
நற்றமிழ்போல் வற்றாத வளத்துடனே வாழி!!

மருமகளும் மறுமகளாய்க் குடும்பத்தில் சேர
    மனத்தினுள்ளே மகிழ்ச்சிவெள்ளம் கரைபுரளக் கண்டோம்!
விருந்தோம்பும் பண்பைநின்  இல்லத்தில் தானே
     விரும்பிநாங்கள் அறியவேண்டும் என்றுமுடி வெடுத்தோம் !
திருமகனாம் தலைமகனின் வெற்றியினைக் கண்டு
    திருவுள்ளம் பூரிக்கும் தந்தைதாயாய் நீவிர்
பெருமைமிக இப்புவியில் வாழ்வாங்கு வாழப்
    பெருந்துணையாய் ஸ்ரீராமன் காவலிருப் பானே !!

நின்போலும் இறைபணியை அன்போடு செய்ய
    நெஞ்சத்தில் என்றனுக்கு நல்லுறுதி வேண்டும்!
கண்மணியாய் உறவுகளைக் கருத்தாகக் காக்கும்
    கனிவான தாய்போலும் கருணையுள்ளம் வேண்டும்!
இன்பதுன்பம் இரண்டையுமே சமமாக நோக்கும்
      இதயத்தை உன்னிடமே யான்கற்க வேண்டும்!
சொன்னவற்றை சொன்னவண்ணம் செய்துகாட்டும் திண்மை
      தூயவனே! உன்னிடந்தான் பயிற்சிபெற வேண்டும்!!

பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழி
    பலர்போற்ற பார்போற்ற பல்லாண்டு வாழி!
நில்லாது சுற்றுமிந்த பூமியிலே என்றும் 
      நெஞ்சத்தில் அமைதியுடன் பல்லாண்டு வாழி !
எல்லோரும் வாழ்த்திடவே பல்லாண்டு வாழி
   எண்பதைநீ நிறைவுசெய்தாய் பல்லாண்டு வாழி!
நல்லோனுன் வாழ்த்துகளை எமக்களித்து வாழி
       நன்றியுடன் கரம்குவித்தேன் நூறாண்டு வாழி!!

🍀🌹🍀🌹🍀🌹🍀🌹🍀🌹🍀🌹🍀🌹🍀🌹

முத்துவிழா காணும் எங்கள் லஜி மாமாவும்( Dr. லட்சுமண சிங்)  ரேவதி மாமியும் நிறை நலத்துடன் நூறாண்டு வாழ வேண்டுகிறேன்.
எங்களையும் உங்கள் வாழ்த்து மழையால் குளிர்விக்க பதம் தொட்டு வணங்கி வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏

கிரேஸி மோகன் நினைவஞ்சலி ...!!!

வண்ணப் பாடல் ....!!! :103
*************************
தந்தனான தான தந்த
தந்தனான தான தந்த
தந்தனான தான தந்த தனதானா

நம்கிரேசி மோக னென்ற
அன்பனான மேதை யென்றும்
நஞ்சிலாது பேசு மின்ப மொழியோனே!

நண்பனோடு பாவ றிந்து
பொங்குமாவ லோடு ணர்ந்து
நன்றியோடு தானி ணைந்த குணசீலா!

தம்பியோடு மேடை கண்டு
பந்தபாசம் பேணி வந்து
தந்தைபோலும் பாச மென்றும் பொழிவோனே!

சந்தம்பாட ஞான முண்டு
நெஞ்சிலூறும் வேக முண்டு
தங்கமான பாசு ரங்க ளருள்வோனே!

எம்பிரானின் தோள ணைந்து
தந்தையார்சொல் வேத மென்றும்
எந்தநாளும் வாழ்வில் நம்பு மெளியோனை

இன்றுநாமும் ஊர டங்கி
வென்றுவாழும் வாழ்வி லன்பை
என்றுகாண வென்று சிந்தை விழையாதோ?

உம்பரோடு நாட கங்கள்
அங்குநீயும் போட வன்றும்
ஒண்டியாக வேப றந்த அழகோனே!

ஒன்றுகூடி யாம்வணங்க
உந்துமாவ லோடு வந்த
உன்றனீடி லாவி ளங்கு புகழ்வாழி!!

சியாமளா ராஜசேகர்

நல்லழகில் நாணலும் நாணும் ...!!!

அல்லிக் குளத்தில் அதிகாலை யிற்குளித்து
முல்லைச் சிரிப்பில் முகம்பூத்தாள் - மெல்லிடையாள்
நல்லழகில் நாணலும் நாணிக் கரையோரம்
மெல்லநெளிந் தாடும் வியந்து .
சியாமளா ராஜசேகர்


Image may contain: சிறீ சிறீஸ்கந்தராசா

கிளிக்கண்ணி ....!!!


கன்னல் மொழிபேசிக் காதல் கலந்தினிக்க
மன்னவன் வந்தானடி - கிளியே
மையலில் வீழ்ந்தானடி!
மீசை முறுக்கிவிட்டு மெல்ல அருகில்வந்தே
ஆசை விதைத்தானடி - கிளியே
அள்ளி யணைத்தானடி!
சின்ன இடைதழுவும் தென்றலைத் தூதுவிட்டுத்
தன்னை மறந்தானடி - கிளியே
தஞ்ச மடைந்தானடி!
கோல மயிலென்று கொஞ்சி யழைத்தென்றன்
சேலை யிழுத்தானடி - கிளியே
சீண்டி மகிழ்ந்தானடி !
அந்திப் பொழுதினிலே ஆரத் தழுவிடவே
தந்திரம் செய்தானடி - கிளியே
சங்கதி சொன்னானடி!
கொட்டும் மழைநனைக்கக் கோதை எனையிழுத்துக்
கட்டிப் பிடித்தானடி - கிளியே
காதல் மொழிந்தானடி!
தங்க நிலவொளியில் சந்தக் கவிதைசொல்ல
அங்கம் குளிர்ந்தானடி - கிளியே
அன்பில் விழுந்தானடி!
எண்ணம் முழுதுமவன் இன்ப நினைவுகளில்
வண்ணம் வரைந்தேனடி - கிளியே
வார்த்தை மறந்தேனடி!
சியாமளா ராஜசேகர்
( சோலையில் பயின்றது)