Sunday, February 24, 2019

நன்றி சொல்வோம் ...!!!

பொலிவுடன் பெருமை மிக்க
***புண்ணிய பூமி தன்னில்
நலமுடன் வூன மின்றி 
***நல்லதோர் பிறவி தந்த
உலகினைப் படைத்துக் காக்கும்
***ஒப்பிலா இறையைப் போற்றி
மலரடி தொழுது நாமும்
***மகிழ்வுடன் நன்றி சொல்வோம் !
கருவிலே திங்கள் பத்துக்
***கனிவுடன் சுமந்து பெற்றுப்
பெருந்துணை யாயி ருந்து
***பிள்ளையைப் பேணி காக்கும்
திருமகள் வடிவாம் தாயின்
***திருவடி பணிந்து என்றும்
அருவியாய் அன்பைக் கொட்டி
***அகம்நிறை நன்றி சொல்வோம் !
பிறந்தது முதலாய் நெஞ்சில்
***பிரியமாய்ச் சுமக்கும் தந்தை
அறநெறி புகட்டி வாழ்வில்
***அறிவொளி கூட்டும் ஆசான்
பொறுப்புடன் சுமைக ளேற்கும்
***பொறுமையிற் சிறந்த இல்லாள்
உறவுக ளோடு நட்புக்(கு)
***உரிமையாய் நன்றி சொல்வோம் !
.பொழுதொடு கழனி சென்று
***பொறுப்புடன் நாற்று நட்டு
முழுமனத் தோடு ழைத்தும்
***முழுப்பயன் என்றும் கிட்டாப்
பழுதிலா மண்ணின் மைந்தர்
***பசித்தவர்க் குணவு நல்கும்
உழுபவர் தமக்கு நாளும்
***உண்மையாய் நன்றி சொல்வோம் !
அல்லல்கள் சூழ்ந்த போதும்
***அல்லிலும் கண்வி ழித்துத்
தொல்லைகள் நமையண் டாமல்
***துணிவுடன் நிமிர்ந்து நின்று
எல்லையில் காவல் காக்கும்
***இராணுவ வீரர் கட்குச்
சொல்லுவோம் இருகை கூப்பிச்
***சுந்தரத் தமிழில் நன்றி !
தமக்கென எதுவும் சேர்க்காத்
***தலைமையை மனத்தால் வாழ்த்தி
சுமையென எண்ணி டாமல்
***சோர்வினை விரட்டி என்றும்
நமக்கென உழைக்கும் நல்லோர்
***நலம்பெற வேண்டு மென்றே
உமையவள் தாள் வணங்கி
***உளமாற நன்றி சொல்வோம் !
மழைதரும் வனங்க ளோடு
***மலைகளும் கடலும் வானும்
அழகுடன் நிலத்தில் பாயும்
***ஆறுகள் வளமை கூட்டச்
செழிப்பொடு விளங்கும் செய்யும்(செய்- வயல்)
***சீரொடு சிறப்பும் சேர்க்க
தொழுதுநாம் இயற்கை பேணி
***தொடருவோம் நன்றி சொல்லி !
வளமையாய் வற்றா வூற்றாய்
***வலம்வரும் தென்றல் காற்றாய்
ஒளிர்ந்திடும் உலக மெங்கும்
***ஒலிக்கையில் அழகு கொஞ்சும்
இளமையாய் இன்பத் தேனாய்
***இணையிலாச் செந்தமி ழாளைக்
களிப்புடன் கூடி வாழ்த்திக்
***கனிவுடன் நன்றி சொல்வோம் !
சேவையாய் முகநூல் தன்னில்
***செவ்வனே மரபை மீட்கக்
காவலாய்த் தானி ருந்து
***கடமையை வகையாய்ச் செய்யும்
பாவலர் கற்பிக் கின்ற
***பைந்தமிழ்ச் சோலைக் கென்றும்
ஆவலாய் நன்றி சொல்லி
***அனைவரும் வாழ்த்து வோமே !!
சியாமளா ராஜசேகர்

வண்ணப் பாடல் !!


சந்தக் குழிப்பு
******************
தந்தன தானா தந்தன தானா
தந்தன தானா . . . . தனதானா
என்கன வேவா மஞ்சுள மேவா
என்துணை நீயே . . . . உணராயோ ?
இன்றுனை நேராய் நெஞ்சொடு சேயாய்
இன்புடன் கையா . . . . லணைவேனோ ?
தென்றலி னூடே சென்றிடு வாயோ
செங்கதிர் மேலே . . . . வருவேளை !
தெங்கிள நீராய் வண்டமி ழைநான்
சிந்திட வேநீ . . . . இளகாயோ ??
அன்பொடு தாராய் பஞ்சணை மேலே
அஞ்சிட லாமோ . . . . அழகேசொல் !
அந்தமி ழாலே பொங்கிடும் பாவாய்
அங்கயல் மீனாம் . . . . விழியாளே !
கண்டத னாலே கொஞ்சிட லாமா
கண்குளிர் வாயோ . . . . கனிவோடே !
கம்பனின் தோழா என்றெனை நீயே
கந்தளம் போலே . . . . ஒளிர்வேனே ...!!
(கந்தளம் - பொன் )
சியாமளா ராஜசேகர்

வண்ணப் பாடல் ....!!!

சந்தக் குழிப்பு
******************
தந்தன தானா தந்தன தானா
தந்தன தானா . . . . தனதானா
குன்றுறை வேலா இன்றமி ழீசா
***குஞ்சரி நாதா . . . . உனைநாளும்
கும்பிட வேதான் நெஞ்சிள காதோ
***குங்கும நீறோ . . . . டருள்வேளே!
தண்டமி ழாலே கொஞ்சிடு வேனே
***சந்தன மார்பா . . . . பணிவோடே. !
தஞ்சமும் நீயே செந்திலின் பேறே
***சங்கரி பாலா . .. . துணைநீயே !
அன்பொடு சேயோ னுன்புகழ் நாவால்
***அண்டரும் பாடா . . . . தெழுவாரோ ?
அந்தகன் வாரா தென்துயர் தீராய்
***அந்தமி லானே . . . . முருகோனே !
என்றுமு ளானே செங்கனி வாயால்
***இன்கவி நானே . . . . பொழிவேனே !
எண்குண னேஓம் மந்திர மூலா
*** என்பதி நீயே . . . . பெருமாளே .
சியாமளா ராஜசேகர்

வண்ண வஞ்சிப்பா !!

புகழ்பெற்றது திசையெட்டிலும்
ழகரத்துட னெழிலுற்றது
வளமிக்கது நிகரற்றது
தெளிவைத்தரு மறிவைத்தரும்
அமுதொத்தது
நிறைவைத் தருமிப் புவியிற்
செறிவைத் தருமற் புதமுத் தமிழே!
சியாமளா ராஜசேகர்

நிலவே வாராயோ???


கஞ்ச முகத்தழகும் கன்னக் குழியழகும்
***கன்னல் மொழியழகும் கற்றைக் குழலழகும்
கொஞ்சும் குரலழகும் கொவ்வை இதழழகும்
***கொண்டை மலரழகும் கொய்யாக் கனியழகும்
இஞ்சி இடுப்பழகும் இன்பக் கவியழகும் 
***இல்லா இடையழகும் எஃகு மனத்தழகும்
வஞ்சி வடிவழகும் வண்ண நகத்தழகும்
***வட்ட பொட்டழகும் வண்டு விழியழகும்
வெண்டை விரலழகும் வெட்கப் படுமழகும்
***வெல்லப் பேச்சழகும் வெற்றித் திமிரழகும்
தண்டை ஒலியழகும் சங்கு கழுத்தழகும்
***தங்க வளையழகும் தந்த நிறத்தழகும்
பெண்மை மிகுவழகும் பின்னல் சடையழகும்
***பிச்சி மணத்தழகும் பெய்யும் இசையழகும்
வண்ண வுடையழகும் வங்கி வளைவழகும்
***மங்கை மடியழகும் மங்கா முகத்தழகும்
முல்லைச் சிரிப்பழகும் முத்துப் பல்லழகும்
***முத்தச் சுவையழகும் மொத்த வுருவழகும்
அல்லி யடியழகும் அள்ளி யணையழகும்
***அன்ன நடையழகும் அன்றில் உறவழகும்
நல்ல குணத்தழகும் நங்கை நாவழகும்
***நண்டுப் பிடியழகும் நன்றி சொலுமழகும்
சொல்லின் பொருளழகும் சொல்லும் விதமழகும்
***சுட்டித் தனமழகும் சொத்தாய்க் கற்பழகும்
என்னை மயக்குதடி இதயம் தவிக்குதடி
***இளமை கொதிக்குதடி ஏக்கம் பிறக்குதடி
அன்பி லுருகுதடி அச்சம் விலகுதடி
***அன்ன முன்நினைவில் அகிலம் மறக்குதடி
தென்றல் வருத்துதடி திங்கள் எரிக்குதடி
***செந்தேன் புளிக்குதடி சித்தம் கலங்குதடி
நின்றன் நினைவுகளில் நித்தம் துடிக்கின்றேன்
***நெஞ்சம் குளிர்விக்க நிலவே வாராயோ ??
சியாமளா ராஜசேகர்

Wednesday, February 13, 2019

வண்ணப்பாடல் - காதல்




சந்தக் குழிப்பு
**********************
தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன - தனதானா
சிற்றிடை வளைவொடு பொற்சிலை யெனவவள்
சித்திர மெழுதிய ததுபோலே !
சிட்டென மலர்பவள் முத்தென மிளிர்பவள்
செப்பிடும் மொழியது மதுவாக !
விற்புரு வமுமெழில் நெற்றியும் பிறையென
மித்திரை யவள்முக மொளிவீச !
வெட்கமு மணிசெயும் நற்குல மகளுடன்
மெச்சிடு வகையினி லிணைவேனோ ?
சுற்றிய புடவையும் பட்டுடல் நழுவிடும்
சொக்கிடும் படியவ ளிடையோடே !
தொட்டிட வுளமது பற்பல கனவொடு
சொத்தென வவள்மடி தவழ்வேனோ ?
உற்றவ ளவளென நெக்குரு கிடுவதும்
உச்சித மெனமனம் விழையாதோ ?
உத்தமி நினைவொடு சொப்பன நிலையதில்
ஒத்துயி ருடலுட னுழல்வேனே!
சியாமளா ராஜசேகர்

வண்ணப்பாடல் - முருகன் திருப்புகழ்

சந்தக் குழிப்பு
**********************
தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன - தனதானா
அட்டிகை யெழிலுற ஒட்டிய மணிகளின்
அற்புத வொளியினில் விழிகூச
அத்தனின் திருவுளம் பித்தென நிறைபவள்
அக்குற மகள்முகம் அழகோடு
பட்டொளி ரிதழ்களில் முத்தமிழ் நடமிடும்
பத்தினி யுளமுறை முருகேசா
பற்றுகள் விலகிடும் பொற்பத மலரது
பற்றிட வருவினை களைவோனே
சிட்டரும் முனிவரும் நித்தமும் பணிவொடு
செப்பிடும் பனுவலில் மகிழ்வோடே
தித்திமி திமியென மத்தள யிசையொடு
தெற்றென மயிலினில் வருவோனே
நட்புட னறுமுகன் நற்புகழ் மொழிபவர்
நற்றுணை யெனவிரு புறமாக
நச்சர வொடுநிதம் பற்பல வடிவினில்
நற்கதி தரவரு பெருமாளே .
சியாமளா ராஜசேகர்

நிழலைத் தேடும் நிஜங்கள்

இமைப்போதும் சோராமல் கண்ணுக்குள் வைத்தே
***இமைபோலத் துன்பங்கள் அண்டாமற் காத்து 
நமைவளர்த்த பெற்றோரை வயதான போது
***நலம்வாழச் செய்வதுவே பிள்ளையர்தம் கடமை !
சுமையென்று கருதாமல் சுகவீன மடைந்தால்
***சுகமான சூழ்நிலையை உருவாக்கித் தந்தே
அமைதியுடன் அவர்வாழ வழிவகுக்க வேண்டும்
***அன்றாடம் அவர்களுடன் அளவளாவ வேண்டும் !!
கொடும்வெயிலில் காய்ந்தாலும் கலக்கங்கொள் ளாது
***குளிர்ச்சியுடன் நிழல்தந்து களைப்பகற்றும் மரமாய்க்
கடுந்துயரம் வந்தாலும் எதிர்நீச்சல் போட்டுக்
***கடுகளவும் பிள்ளைகளை நெருங்காமல் காப்பார் !
நடுக்கடலில் தத்தளிக்கும் நிலைவந்த போதும்
***நம்பிக்கை யொளியூட்டி அச்சத்தைப் போக்கித்
துடுப்பாகத் தானிருந்துக் கரையேற்றி விடுவார்
***தூணாக வலிமையுடன் தோள்கொடுத்து நிற்பார் !!
கள்ளமில்லா அன்புடனே பம்பரமாய்ச் சுழன்று
***காலநேரம் கருதாமல் வேலைகளைப் பார்ப்பார் !
முள்ளாகத் தைத்தாலும் காதில்வாங் காமல்
****முறுவலுடன் தன்பணியைச் செவ்வனேசெய் திடுவார் !
உள்ளவரை அவருழைப்பை உறிஞ்சிப்பி ழிந்தே
***உதவாத சக்கையெனத் தூக்கிப்பின் னெறிந்தால்
எள்ளிநகை யாடாதோ இவ்வுலகம் சொல்வீர்
***என்றேனு மொருநாளில் உணர்ந்திடுவீர் நன்றே !!
பாடுபட்டுச் சேர்த்தவற்றைத் தனக்கெனக்கொள் ளாமல்
***பங்குவைத்துப் பிள்ளைகட்குக் கொடுத்துவிட்டுப் பின்னாள்
கூடுவிட்டுப் பிரிந்துசென்ற உறவுகளை எண்ணிக்
***கொதித்தழுது மனம்நோகும் படிச்செய்தல் முறையோ ?
ஓடியாடி உழைத்தவர்கள் ஓய்ந்துவிட்ட நாளில்
***ஊன்றுகோலாய்த் தாங்கிடுதல் நம்கடமை யன்றோ ?
காடுகொண்டு போனபின்னே கதறியழு தென்ன
***காரிருளில் நிழல்தேடி அலைவதுபோல் தானே ??
எதிர்பார்ப்பே இல்லாமல் பேணிக்காத் தோரை
***எஞ்ஞான்றும் மதிப்போடு நடத்திடவே வேண்டும் !
முதியோரென் றேயவரைப் புறக்கணிக்க லாமோ ?
***முதுகெலும்பில் லாதவர்கள் செயும்செயல தன்றோ ?
மதிகெட்டுக் காப்பகத்தில் கொண்டுவிடும் கொடுமை
***மன்னிக்க முடியாத பாதகத்தி லொன்று !
கதியின்றி அன்பென்னும் நிழல்தேடும் நிஜங்கள்
***கடைசிவரை காப்பாற்றப் படல்வேண்டும் நன்றே !!
சியாமளா ராஜசேகர்

நிலவே வாராயோ ??

கஞ்ச முகத்தழகும் கன்னக் குழியழகும் 
***கன்னல் மொழியழகும் கற்றைக் குழலழகும்
கொஞ்சும் குரலழகும் கொவ்வை இதழழகும்
***கொண்டை மலரழகும் கொய்யாக் கனியழகும்
இஞ்சி இடுப்பழகும் இன்பக் கவியழகும் 
***இல்லா இடையழகும் எஃகு மனத்தழகும்
வஞ்சி வடிவழகும் வண்ண நகத்தழகும் 
***வட்ட பொட்டழகும்  வண்டு விழியழகும் 

வெண்டை விரலழகும் வெட்கப் படுமழகும்
***வெல்லப் பேச்சழகும் வெற்றித் திமிரழகும் 
தண்டை ஒலியழகும் சங்கு கழுத்தழகும் 
***தங்க வளையழகும் தந்த நிறத்தழகும் 
பெண்மை மிகுவழகும் பின்னல் சடையழகும்
***பிச்சி மணத்தழகும் பெய்யும் இசையழகும் 
வண்ண வுடையழகும் வங்கி வளைவழகும்
***மங்கை மடியழகும் மங்கா முகத்தழகும்

முல்லைச் சிரிப்பழகும் முத்துப் பல்லழகும் 
***முத்தச் சுவையழகும் மொத்த வுருவழகும் 
அல்லி யடியழகும் அள்ளி யணையழகும்
***அன்ன நடையழகும் அன்றில் உறவழகும்
நல்ல குணத்தழகும் நங்கை நாவழகும் 
***நண்டுப் பிடியழகும் நன்றி சொலுமழகும் 
சொல்லின் பொருளழகும் சொல்லும் விதமழகும் 
***சுட்டித் தனமழகும் சொத்தாய்க் கற்பழகும் 

என்னை மயக்குதடி இதயம் தவிக்குதடி 
***இளமை கொதிக்குதடி ஏக்கம் பிறக்குதடி 
அன்பி லுருகுதடி அச்சம் விலகுதடி 
***அன்ன முன்நினைவில் அகிலம் மறக்குதடி 
தென்றல்  அரிக்குதடி திங்கள் எரிக்குதடி 
***செந்தேன் புளிக்குதடி சித்தம் கலங்குதடி 
நின்றன் நினைவுகளில் நித்தம் துடிக்கின்றேன் 
***நெஞ்சம் குளிர்விக்க நிலவே வாராயோ ??

சியாமளா ராஜசேகர்