Saturday, November 10, 2018

பிறந்தநாள் வாழ்த்து ....!!! ( காவிரி மைந்தன் )

முத்தமிழும் சொந்தமென உன்னைச் சுட்ட
***முக்கனியின் சுவையினைநின் படைப்பு வெல்ல

முத்தான பாக்களினால் நெஞ்சை யள்ளி
***முழுமதியாய்க் கவிவானில் உலவும் உன்னை
முத்தய்யா முந்திவந்து வாழ்த்து  சொல்ல

***முப்பாலைத் தந்தோனும் ஆசி கூற
முத்தமிட்டுத் தமிழன்னை அணைப்பாள் அன்பாய்
***முல்லைப்பூ புன்னகையால் ஏற்பாய் இனிதே !!!


இனிய பிறந்தநாள்  வாழ்த்துகள் கவிஞர் காவிரி மைந்தன் அவர்களுக்கு 

காவிரியில் நீரோட ...!!!

எண்சீர்ச் சந்த விருத்தம் ...!!!
****************************************
காவிரியில் நீரோடக் கண்டவுள்ள மாடும் 
***காதலுடன் மன்னவனைக் கண்விரியத் தேடும் !
ஓவியமாய்க் கள்ளமிலா நெஞ்சத்தில் நிறைந்த 
***உத்தமனைக் கரையோரம் காணாமல் வாடும் !
பூவிலுள்ள மதுவுண்ணச் சுற்றிவந்து பாடும் 
***பொன்வண்டைத் தூதனுப்ப அன்புடனே வேண்டும் !
தாவிவரும் சிற்றலைகள் தனிமையிலே நிற்கும் 
***தையலெனைப் பரிவுடனே தள்ளாமற் போகும் !

சியாமளா ராஜசேகர் 

Friday, November 9, 2018

ஒற்றிலாச் சந்த இன்னிசை வெண்பா

(ஒற்றிலாச் சந்த இன்னிசை வெண்பா) 

காதல் நினைவொடு காலை முதலவள்
தூது  செலவொரு தோழி யறிகிலள்
பாடி யழுதனள் பாலை நிலமதில்
வாடி யுருகினள் மாது. 

சியாமளா ராஜசேகர் 

மழைக்கு ஒதுங்கிய வானம் ...!!

களிப்புட னாடுங் கருமுகிற் கண்ட கவின்மயிலாய்
உளத்தினிற் பொங்கு முவகை யிதமாய் உயிர்நனைக்கும்!
குளிர்வளி யோடு குலவிப் பெயலது கொஞ்சிவந்து 
துளித்துளி யாயுடற் தொட்டு நனைக்கும் சுகம்சுகமே !!
சுகத்தினி லுள்ளஞ் சுரங்க ளிசைத்துத் துயில்மறந்து
மகிழ்வுட னன்பாய் வரவேற் பளித்திடும் வான்மழைக்கு
நெகிழ்வுடன் மின்னல் நெளிந்து வளைந்து நிமிர்ந்தொளிர
முகில்களின் கூடலில் முத்த மிடியாய் முழங்கிடுமே !!
முழங்கு மொலியோ முறையாய் வருவதை முன்மொழிய
மழையின் பயணம் வடிவாய்த் தொடங்கி மயங்கவைக்கும் !
கழனி செழிக்க கடைக்கண் திறக்கும் கவின்மழையால்
உழவர் நிலையும் உயர்ந்திட வாழ்வும் உயிர்த்திடுமே !!
உயிர்ப்பொடு நாளு முயிரினம் யாவு முலகினிலே
துயர்களும் நீங்கிச் சுகத்துடன் வாழத் துணையிருக்கும்
இயற்கையைப் பேணுத லென்றும் கடமை யெனநினைப்போம்
பெயல்பொழி வாலே பெரும்பய னுண்டு பிழைத்திடவே !!
பிழைத்திடும் வண்ணம் பெருமழை பெய்திடில் பேறெனவே
விழைந்ததைச் சேமித்தால் மேன்மை யுறலாம் மிகவெளிதாய்
மழையிலை யென்றால் வறுமையும் பஞ்சமும் வாட்டிடுமே
மழையினைப் போற்றி வரமெனப் பண்பாடி வாழ்த்துவமே !!
( கட்டளைக் கலித்துறை )

மலையருவிச் சாரலிலே ....!!!



மலையருவிச் சாரலிலே மனம்சிலிர்த்துத் துள்ளும்
***வழியெங்கும் வெண்மேகம் வந்துமுத்தங் கொஞ்சும் !
குலைதள்ளும் வாழைப்பூ குங்குமமாய்ச் சிவக்கும்
***குளிர்ந்தாடித் தென்றலிலே கொடிமலரும் விரியும் !
வலைதப்பும் கயல்மீன்கள் வடிவாகச் சிரிக்கும் 
***மடைவழியே பாய்ந்திடவே வழிதேடித் திரியும் !
தலைமீதில் தண்ணீருந் தடையின்றிக் கொட்டும் 
***தாமரையும் புன்னகைக்கும் தள்ளாடிக் கொண்டே !!
சியாமளா ராஜசேகர்

இதழகல் நேரிசையகவற்பா ...!!!

இதழகல் நேரிசையகவற்பா..!!!
* * * * * * * * * * * * * * * * * * *.*.*.*.*.
ஆற்றில் கெண்டை யழகாய் நீந்தக்
காற்றி லாடிக் கதிர்கள் சிரிக்கத் 
தென்னங் கீற்றைத் தென்றலா ளசைக்கச்
சின்னச் சின்ன சிறகினை யடித்தே
கிளையினில் நல்லெழிற் கிளிகள்
இளகின காதலில் இதயஞ் சிலிர்த்தே !!
.
சியாமளா ராஜசேகர்

உலகாளும் உமையவளே

உலகாளும் உமையவளே உன்னை யெண்ணி
***உழலுமெனை ஒதுக்காமல் காப்பாய் தாயே !
தலந்தோறும் உன்புகழைப் பாடி நின்றேன்
***தாயேவுன் அருள்பெறவே ஏங்கிநின்றேன் !!
சிலர்வாழ பலர்தாழச் செய்தல் நன்றோ ?
***சிறியேனைக் கடைக்கண்ணால் பார்த்தா லென்ன?
சிலையாக இருந்தாலும் சத்தங் கேட்டுச்
***சிரித்தபடி அரவணைக்க விரைந்து வாராய் !!
மலர்போலும் கவின்முகத்தில் மஞ்சள் பூசி
***மங்களமாய்க் குங்குமத்தில் பொட்டு மிட்டுக்
கலகலவென் றேகையில் வளைகு லுங்கக்
***கருங்குழலில் மல்லிகையின் மணமும் மிஞ்ச
வலக்கையில் திரிசூலம் ஏந்திக் கொண்டு
***வடிவான இடையில்மே கலையும் பூட்டிச்
சலங்கையொலி கொஞ்சிடவே சந்தத் தோடு
***சதுராடி வருமழகைக் காண வேண்டும் !!
குழையாடத் தோள்களிலே மாலை யாடக்
***குறுநகையும் இதழோரம் அழகாய்ப் பூக்க
அழைக்குமுன்னே ஓடோடி வருப வள்தான்
***அன்னையென்றே உனைக்காட்டிச் சிலிர்க்க வேண்டும்!
பிழையேதும் நான்செயினும் தண்டிக் காமல்
***பெற்றவளாய்ப் பொறுமையுடன் உணர வைத்து
மழைபோலும் நின்னருளைப் பொழிந்தே என்றன்
***மனவழுக்கைச் சுத்தமாய்நீ கழுவ வேண்டும் !!
மொழிக்குழறிக் கசிந்துருகிப் பாடும் போது
***முன்வினையால் படுந்துயரைக் களையா விட்டால்
பழிவுனக்கே வந்துசேரும் அறியா யோநீ
***பார்நகைக்கும், தாங்குமோவென் னுள்ள மம்மா !
இழிவாகப் பிறர்பேசும் முன்னர் வந்தே
***எளியேனை யுன்மார்போ டணைக்க வேண்டும் !
விழிமலர்ந்து தலைகோதி முத்த மிட்டு
***மென்விரலால் கண்ணீரைத் துடைப்பாய் தாயே !!!
சியாமளா ராஜசேகர்

கவிஞர் பழனிகுமார் அவர்களுக்கு மணிவிழா வாழ்த்து ...!!!

அன்பான உறவுகளின் அரவணைப்பில் நீயும்
***ஆறுபத்தை நிறைவுசெய்தே அடுத்தவடி வைத்தாய் !
இன்றுன்றன் பிறந்தநாளில் மனம்நிறைந்த வாழ்த்தை
***இன்றமிழில் சொல்லிடுவேன் ஏற்றுக்கொள் வாயே !
என்றும்நீ உடல்நலமும் உளநலமும் பெற்றே 
***எழுகதிராய்க் கவிவானில் வளையவர வேண்டும் !
பொன்போலும் மிக்கொளிரும் பண்பிலுயர் நட்பே
***புவனத்தில் பேரோடும் புகழோடும் வாழி !!
சித்தமெலாம் குமுகாய நலந்தன்னை நாடும்
***சீர்திருத்தும் எண்ணத்தில் அதுகுறித்தே பாடும் !
சத்தியத்தின் வழிநின்று அறிவுரைகள் சொல்லும்
***சமத்துவத்தை வலியுறுத்தி நற்படைப்பு நல்கும் !
முத்தான கவிதைகளில் மனிதநேயம் பூக்கும்
***முப்போதும் முழுவீச்சில் வாட்டத்தைப் போக்கும் !
தித்திக்கும் தமிழன்னை ஆசிகளால் நீயும்
***சீரோடும் சிறப்போடும் பல்லாண்டு வாழி !!
ஈன்றெடுத்த அன்னைமனம் ஈரவிழி யுடனே
***எங்கிருந்த போதுமுனை அன்போடு வாழ்த்தும் !
வான்மேகம் குளிர்ந்துவந்து வாழ்த்துமழை தூவும்
***வளர்நிலவும் வழிமொழிந்து தண்ணொளியால் வாழ்த்தும் !
மேன்மைமிகு நின்பாக்கள் பார்மெச்ச வேண்டும்
***வித்தகனே நின்பெருமை விண்பேச வேண்டும் !
தேன்தமிழ்போல் இனிமையுடன் இளமையொடு நாளும்
****திக்கெட்டும் புகழ்மணக்க நூறாண்டு வாழி !!
அன்பிற்கினிய சகோதரர் கவிஞர் பழனிகுமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 💐💐💐💐💐💐

மழைக்கு ஒதுங்கிய வானம்


#மழைக்கு_ஒதுங்கிய_வானம் 

களிப்புட னாடுங் கருமுகிற் கண்ட கவின்மயிலாய்
உளத்தினிற் பொங்கு முவகை யிதமாய் உயிர்நனைக்கும்!
குளிர்வளி யோடு குலவிப் பெயலது கொஞ்சிவந்து 
துளித்துளி யாயுடற் தொட்டு நனைக்கும் சுகம்சுகமே !!

சுகத்தினி லுள்ளஞ் சுரங்க ளிசைத்துத் துயில்மறந்து 
மகிழ்வுட னன்பாய் வரவேற் பளித்திடும் வான்மழைக்கு 
நெகிழ்வுடன் மின்னல் நெளிந்து வளைந்து நிமிர்ந்தொளிர
முகில்களின் கூடலில் முத்த மிடியாய் முழங்கிடுமே !!

முழங்கு மொலியோ முறையாய் வருவதை முன்மொழிய 
மழையின் பயணம் வடிவாய்த் தொடங்கி மயங்கவைக்கும் !
கழனி செழிக்க கடைக்கண் திறக்கும் கவின்மழையால் 
உழவர் நிலையும் உயர்ந்திட வாழ்வும் உயிர்த்திடுமே !!

உயிர்ப்பொடு நாளு முயிரினம் யாவு முலகினிலே 
துயர்களும் நீங்கிச் சுகத்துடன் வாழத் துணையிருக்கும்
இயற்கையைப் பேணுத லென்றும் கடமை யெனநினைப்போம்
பெயல்பொழி வாலே பெரும்பய னுண்டு பிழைத்திடவே !!

பிழைத்திடும் வண்ணம் பெருமழை பெய்திடில் பேறெனவே
விழைந்ததைச் சேமித்தால் மேன்மை யுறலாம் மிகவெளிதாய் 
மழையிலை யென்றால் வறுமையும் பஞ்சமும் வாட்டிடுமே 
மழையினைப் போற்றி வரமெனப் பண்பாடி வாழ்த்துவமே !!

( கட்டளைக் கலித்துறை )