Monday, August 31, 2015

நாயகனும் சொக்கினனே ....!!!



காதோரம் தோடாட கார்கூந்தல் அசைந்தாட 
காலோரம் கொலுசாட கைகளிலே வளையாட 
நாணத்தில் முகஞ்சிவந்து நாயகியின் இதழ்விரிய 
நாவினிக்கும் பாடலிலே நாயகனும் சொக்கினனே !

வெண்மதியே கண்வளராய் ....!!! ( பதினான்கு மண்டில வெண்பா )

1)விண்ணுலவும் தண்ணொளியாள் வெண்மதியே கண்வளராய் 
வெண்கவியில் வெண்டளையால் செண்ணிடுவேன் - பெண்ணவளின் 
வண்ணமதை எண்ணிடிலோ மண்மகளும் கண்குளிர்வாள் 
கொண்டலதும் நண்ணிடு தே .

2)தண்ணொளியாள் வெண்மதியே கண்வளராய் வெண்கவியில் 
வெண்டளையால்  செண்ணிடுவேன் பெண்ணவளின் - வண்ணமதை
எண்ணிடிலோ மண்மகளும் கண்குளிர்வாள் கொண்டலதும் 
நண்ணிடுதே விண்ணுல வும் .

3)வெண்மதியே கண்வளராய் வெண்கவியில் வெண்டளையால்  
செண்ணிடுவேன் பெண்ணவளின் வண்ணமதை - எண்ணிடிலோ 
மண்மகளும் கண்குளிர்வாள் கொண்டலதும் நண்ணிடுதே 
விண்ணுலவும் தண்ணொளி யாள் .

4)கண்வளராய் வெண்கவியில் வெண்டளையால்  செண்ணிடுவேன் 
பெண்ணவளின் வண்ணமதை எண்ணிடிலோ - மண்மகளும் 
கண்குளிர்வாள் கொண்டலதும் நண்ணிடுதே விண்ணுலவும் 
தண்ணளியாள் வெண்மதி யே !

5)வெண்கவியில் வெண்டளையால்  செண்ணிடுவேன் பெண்ணவளின்
வண்ணமதை எண்ணிடிலோ  மண்மகளும் -  கண்குளிர்வாள் 
கொண்டலதும் நண்ணிடுதே விண்ணுலவும் தண்ணளியாள் 
வெண்மதியே கண்வள ராய் .

6)வெண்டளையால்  செண்ணிடுவேன் பெண்ணவளின் வண்ணமதை 
எண்ணிடிலோ  மண்மகளும் கண்குளிர்வாள் - கொண்டலதும் 
நண்ணிடுதே விண்ணுலவும் தண்ணளியாள் வெண்மதியே 
கண்வளராய் வெண்கவி யில் 

7)செண்ணிடுவேன் பெண்ணவளின் வண்ணமதை எண்ணிடிலோ 
மண்மகளும் கண்குளிர்வாள் கொண்டலதும் - நண்ணிடுதே 
விண்ணுலவும் தண்ணொளியாள்  வெண்மதியே கண்வளராய் 
வெண்கவியில் வெண்டளை யால்   .

8)பெண்ணவளின் வண்ணமதை எண்ணிடிலோ மண்மகளும் 
கண்குளிர்வாள் கொண்டலதும் நண்ணிடுதே - விண்ணுலவும்
தண்ணொளியாள்  வெண்மதியே கண்வளராய் வெண்கவியில் 
வெண்டளையால்  செண்ணிடு வேன் .

9)வண்ணமதை எண்ணிடிலோ மண்மகளும் கண்குளிர்வாள் 
கொண்டலதும் நண்ணிடுதே விண்ணுலவும் - தண்ணொளியாள் 
வெண்மதியே கண்வளராய் வெண்கவியில் வெண்டளையால்  
செண்ணிடுவேன் பெண்ணவ ளின்  .

10)எண்ணிடிலோ மண்மகளும் கண்குளிர்வாள் கொண்டலதும்
நண்ணிடுதே விண்ணுலவும் தண்ணொளியாள் - வெண்மதியே 
கண்வளராய் வெண்கவியில் வெண்டளையால்  செண்ணிடுவேன் 
பெண்ணவளின் வண்ணம் அதை  .

11)மண்மகளும் கண்குளிர்வாள் கொண்டலதும் நண்ணிடுதே 
விண்ணுலவும் தண்ணொளியாள் வெண்மதியே - கண்வளராய் 
வெண்கவியில் வெண்டளையால்  செண்ணிடுவேன் பெண்ணவளின் 
வண்ணமதை  எண்ணிடி லோ .

12)கண்குளிர்வாள் கொண்டலதும் நண்ணிடுதே விண்ணுலவும்
தண்ணொளியாள் வெண்மதியே கண்வளராய் - வெண்கவியில்
வெண்டளையால்  செண்ணிடுவேன் பெண்ணவளின் வண்ணமதை  
எண்ணிடிலோ மண்மக ளும் .

13)கொண்டலதும் நண்ணிடுதே விண்ணுலவும் தண்ணொளியாள் 
வெண்மதியே கண்வளராய் வெண்கவியில் - வெண்டளையால்  
செண்ணிடுவேன் பெண்ணவளின் வண்ணமதை  எண்ணிடிலோ 
மண்மகளும் கண்குளிர் வாள் .

14)நண்ணிடுதே விண்ணுலவும் தண்ணொளியாள் வெண்மதியே
கண்வளராய் வெண்கவியில் வெண்டளையால்  - செண்ணிடுவேன் 
பெண்ணவளின் வண்ணமதை எண்ணிடிலோ மண்மகளும் 
கண்குளிர்வாள் கொண்டல் அது .


இலக்கணக் குறிப்பு 
``````````````````````````````` 

பதினான்கு மண்டிலம் என்பது முதல் வெண்பாவின் முதல் சீர், இரண்டாம் வெண்பாவில் இறுதியாக வரும். இரண்டாம் சீர் முதல் சீராக வரும். இப்படியாகப் பதினான்குச் சீர்களும் முதல் சீராக வந்தமையப் பாடுவது. முதல் வெண்பாவில் உள்ள சீர்களைப் போன்றே, எழுத்துகளும் அனைத்து வெண்பாவில் வரவேண்டும். வல்லினம் மிகும் சொற்கள் இம்மண்டிலத்தில் வாரா!



Tuesday, August 25, 2015

கவ்விடும் உள்ளம் ....!!



பூங்காற்றின் தாலாட்டில் பூவிரியும் சத்தமின்றி 
மாங்குயிலின் பாட்டோ மனம்மயக்கும் !- பைங்கிளியின் 
செவ்வலகும், கொஞ்சிடும் சிங்காரக் கீச்சொலியும் 
கவ்விடு முள்ளங் கவர்ந்து 

நல்லழகு நாயகியாள் ....!!!



ஆனை முகத்தோனை ஆறிரண்டு கைகளுடன் 
பானை வயிறின்றிப் பார்த்தோமே பெண்ணுருவில் 
நல்லழகு நாயகியாள் நல்லருளைத் தந்திடுவாள் 
வல்வினைகள் ஓட்டிடு வாள் .

மிளிர்ந்து மணக்குதே ....!!



விண்ணில் உலவும் மேகம் கண்டால் 
மண்ணில் என்மனம் மகிழ்ந்து துள்ளுமே !

வண்ண நிலவின் வனப்பில் இதயமும் 
செண்டாய்ப் பூத்திட தேன்மழை சிந்துதே !
 
கண்ணில் கண்ட காட்சிகள் யாவும் 
வண்ணக் கனவாய் மனதில் உதிக்குதே !
 
பண்ணுடன் பாவும் பைந்தமிழ்ச் சோலையில் 
வெண்செந் துறையாய் மிளிர்ந்து  மணக்குதே !
 

Monday, August 17, 2015

மும்மண்டில வெண்பா - ( 4 )




செவ்விதழ் முத்தத்தில் செங்கரும்பின் இன்சுவையும் 
கொவ்வையின் தித்திப்பும் மங்கிடும் - அவ்விதமே 
பித்தாக்கும் பொங்கிவரும் புன்சிரிப்பும் நெஞ்சள்ளும் 
புத்தழகில் அங்கமெங்கும் பொன் . 

முத்தத்தில் செங்கரும்பின் இன்சுவையும் கொவ்வையின் 
தித்திப்பும் மங்கிடும் அவ்விதமே -பித்தாக்கும் 
பொங்கிவரும் புன்சிரிப்பும் நெஞ்சள்ளும் புத்தழகில் 
அங்கமெங்கும் பொன்செவ்வி தழ் . 

செங்கரும்பின் இன்சுவையும் கொவ்வையின் தித்திப்பும் 
மங்கிடும் அவ்விதமே பித்தாக்கும் -பொங்கிவரும் 
புன்சிரிப்பும் நெஞ்சள்ளும் புத்தழகில் அங்கமெங்கும் 
பொன்செவ்வி தழ்முத்தத் தில் 

இலக்கண விளக்கம் 
```````````````````````````````` 
மும்மண்டில வெண்பா என்பது அப்பாடலின் இரண்டாம் மூன்றாம் சீர்களை முதல் சீராக வைத்து வெண்பாவை மாற்றி எழுதினாலும் வெண்பா இலக்கணம் கெடாமல் இருக்கும் செய்யுள்!


மன்னனெனைச் சேர் ....!!

மெட்டியொலி மெல்லிசையில் மெய்சிலிர்த்துப் போனேனே 
பட்டுடல் புல்லரிக்கப் பத்தினியே !- வெட்கத்தில் 
முல்லையிதழ் மொட்டவிழும் மோகவலை தான்விரிக்கும் 
செல்லமே மன்னனெனைச் சேர் . 

பாமகளே ....!!





தாரகையோ வான்முகிலோ தாமரையோ தாயவளோ
பூரணையோ மான்விழியோ பொன்மயிலோ - சாரலுடன்
தேன்மழையோ காமதையோ தென்றலாள் சீதனமோ 
நான்கண்டேன் பாமகளே என்று !





பாலமுதூட்டுவேன் ....!!




பாலமுதம் ஊட்டிடுவேன் பால்நிலா தண்ணொளியில் 
பாலகனே பையவே பக்கம்வா !- காலகற்றி 
வைக்காதே, மெல்லவே வந்திடடா தாயுன்னை
கைக்குள் அரவணைப்பேன் காண்  

Friday, August 14, 2015

மும்மண்டில வெண்பா -3




மன்றாடு மண்டியிட்டு மன்றாடி மைந்தனைக் 
குன்றாமல் கொண்டாடு குன்றாடும் கோமானை 
வண்ணமுற தென்றமிழில் வாய்விட்டுப் பாடுநெஞ்சே 
கண்பனிக்க அன்புசெய்கு வாய் . 

மண்டியிட்டு மன்றாடி மைந்தனைக் குன்றாமல் 
கொண்டாடு, குன்றாடும் கோமானை வண்ணமுற 
தென்றமிழில் வாய்விட்டுப் பாடுநெஞ்சே கண்பனிக்க 
அன்புசெய்கு வாய்,மன்றா டு . 

மன்றாடி மைந்தனைக் குன்றாமல் கொண்டாடு 
குன்றாடும் கோமானை வண்ணமுற தென்றமிழில் 
வாய்விட்டுப் பாடுநெஞ்சே கண்பனிக்க அன்புசெய்கு 
வாய்,மன்றா(டு) மண்டியிட் டு . 

மும்மண்டில வெண்பா - 2



கற்கண்டுச் சொல்லாலே கண்ணனையே சொக்கவைப்பேன் 
சிற்றடியை மெல்லவந்துச் செண்ணுவேன் - பற்றிடுவேன் 
செல்லமாய் வெண்ணையுண்டோன் தீங்கனிச் செவ்விதழை 
தல்லைநான் மண்டியிட்டேன் தாங்கு . 

சொல்லாலே கண்ணனையே சொக்கவைப்பேன் சிற்றடியை 
மெல்லவந்துச் செண்ணுவேன் பற்றிடுவேன் - செல்லமாய் 
வெண்ணையுண்டோன் தீங்கனிச் செவ்விதழை தல்லைநான் 
மண்டியிட்டேன் தாங்குக(ற்) கண்டு . 

கண்ணனையே சொக்கவைப்பேன் சிற்றடியை மெல்லவந்து 
செண்ணுவேன் பற்றிடுவேன் செல்லமாய்- வெண்ணையுண்டோன் 
தீங்கனிச் செவ்விதழை தல்லைநான் மண்டியிட்டேன் 
தாங்குகற்கண் டுச்சொல்லா லே . 


( செண்ணுதல் - அலங்கரித்தல் 
தல்லை - இளம் பெண் ) 


இலக்கண விளக்கம் 
```````````````````````````````` 
மும்மண்டில வெண்பா என்பது அப்பாடலின் இரண்டாம் மூன்றாம் சீர்களை முதல் சீராக வைத்து வெண்பாவை மாற்றி எழுதினாலும் வெண்பா இலக்கணம் கெடாமல் இருக்கும் செய்யுள்!

அருள்புரி ஐயனே .....!!



ஐந்தும் அடங்க அகமழ காகுமே
ஐந்தும் அடக்க அவனருள் வேண்டுமே  
ஐம்பூத மானவன் அம்பல வாணனே
ஐம்புலன் வெல்ல அருள்புரி ஐயனே   

Wednesday, August 12, 2015

மும்மண்டில வெண்பா !

பூச்செண்டு நான்தந்தேன் பொன்மகளே நாயகியே 
பாச்சரமும் யான்தொடுத்தேன் பன்னசியே ! - பேச்சினிலே 
தேன்குழைத்தே இன்னமுதம் சீண்டிநீ தந்திடுவாய் 
மான்விழியே தென்றலெனத் தீண்டு . 

நான்தந்தேன் பொன்மகளே நாயகியே பாச்சரமும் 
யான்தொடுத்தேன் பன்னசியே பேச்சினிலே - தேன்குழைத்தே 
இன்னமுதம் சீண்டிநீ தந்திடுவாய் மான்விழியே 
தென்றலெனத் தீண்டு,பூச் செண்டு . 

பொன்மகளே நாயகியே பாச்சரமும் யான்தொடுத்தேன் 
பன்னசியே பேச்சினிலே தேன்குழைத்தே -இன்னமுதம் 
சீண்டிநீ தந்திடுவாய் மான்விழியே தென்றலெனத் 
தீண்டு,பூச் செண்டுநான்தந் தேன் . 

இலக்கண விளக்கம் 
```````````````````````````````` 
மும்மண்டில வெண்பா என்பது அப்பாடலின் இரண்டாம் மூன்றாம் சீர்களை முதல் சீராக வைத்து வெண்பாவை மாற்றி எழுதினாலும் வெண்பா இலக்கணம் கெடாமல் இருக்கும் செய்யுள்!

Monday, August 10, 2015

அசையும் விரல்கள் அழகு ....!!



மடிதவழும் வீணையை மங்கையவள் மீட்ட 
கடிதுவரும் கூட்டமுடன் காக்கை -பிடித்த 
இசையில் லயிக்க இனிமை ததும்ப 
அசையும் விரல்கள் அழகு .


கலாபம் விரித்தாடு காதலனே ....!!



கலாபம் விரித்தாடு காதலனே, விண்ணில்
உலாவருதே கார்மேகம், ஒய்யார மாய்நாம்
குலாவிக் களித்திடும் கொள்ளை யழகை
சிலாகிப்பர் செல்ஃபி எடுத்து !
( படத்தைப் போட்டு என்ன பேசியிருக்கும் என்று கேட்க .....பதில் மேலே )

Saturday, August 8, 2015

ஏக்கமோ ....???




ஏக்கமோ சோகமோ ஏகாந்தம் ஏனென்று 
சீக்கிரம் கூறினால் தேற்றுவேன் ! - போக்கிடம் 
இல்லையோ? சொந்தமும் ஏற்க மறுத்ததோ 
சொல்லிடு தீர்ப்பேன் துயர் .

வண்டலூர் வந்தால் வருத்தமெலாம் மாறிடும்
எண்ணற்ற நண்பர் இருப்பரிங்கே ! - மண்புகும்
நாள்வரையில் வாழலாம் ஞாலத்தில் இன்பமாய் 
தோள்கொடுத்துத் தாங்குவர் சூழ்ந்து .

Friday, August 7, 2015

தங்க ரதத்திலே நீவருவாய் ....!!! ( முருகன் பக்திப் பாடல் )





                                              பல்லவி 
                                             `````````````
மலையேறி வரும்போது மயிலகவு தய்யா 
மயிலகவும் ஒலிகேட்டு மனம்சிலிர்க்கு தய்யா

                                             அனுபல்லவி 
                                           `````````````````````
ஓங்கார ஓசையிலே உயிருருகு தய்யா 
ஆங்கார மகன்றோடி அகமகிழு தய்யா 
ஏங்குகின்றேன் அடிபணிந்து இதமளிப்பா யய்யா 
பாங்குடனே நீயாடி வரவேணு மய்யா !           ( மலையேறி )  

                                              சரணம் 
                                             `````````````
சந்தம் கொஞ்சிட சலங்கை குலுங்கிட 
***சக்தி மைந்தனே நீவருவாய் !
செந்தூர் வேலவ திருவாய் மலர்ந்திட 
***சேவற் கொடியுடன் நீவருவாய் !
கந்த வேளுனைக் கனிவாய்த் தொழுதிட 
***கண்கள் பனித்திடும் நீவருவாய் ! 
வந்த வேதனை வருத்தம் தொலைத்திட 
***வண்ண மயிலிலே நீவருவாய் !             ( மலையேறி )

மாயை நீங்கிட மனமும் தெளிந்திட 
***மாலின் மருகனே நீவருவாய் !
நோயை விரட்டிட நொசிதல் விலக்கிட
***நோக்கம் எழிலுற நீவருவாய் !
தாயைப் போற்றியே தடங்கல் தவிர்த்திட 
***தங்க ரதத்திலே நீவருவாய் ! 
சேயை அணைத்திட செதுக்கும் அழகுடன் 
***சிந்தை குளிர்ந்திட நீவருவாய் !                 ( மலையேறி )

Thursday, August 6, 2015

கலந்தாடி மகிழ்ந்தனனே ....!!







இளந்தென்றல் இதமளிக்க எழில்மேகம் திரண்டிருக்க
வளங்கொழிக்கும் நதிக்கரையில் வண்ணமயில் பார்த்திருக்க
உளம்மகிழ ராதையவள் ஒயிலாக நடனமிட 
களங்கமில்லாக் கண்ணனுமே கலந்தாடி மகிழ்ந்தனனே ! 

கார்கூந்தல் சுழன்றாட கைவளையும் சேர்ந்தாட 
மார்தவழும் ஆரமுடன் மயிலிறகும் மகிழ்ந்தாட 
நேர்வகிடின் உச்சியிலே நெற்றிச்சுட் டியுமாட 
சோர்வின்றி இருவரையும் சொக்கவைக்கும் நாட்டியமே !


Wednesday, August 5, 2015

மண்ணுண்டோன் லீலை வனப்பு ....!!!



கண்ணனைச் சுற்றியிளங் கன்னியர் வீற்றிருக்க 
வெண்ணிலவு வெள்ளொளியில் வேணுகா  னம்பிறக்க 
பண்ணிசையில் அன்னங்கள் பக்கத்தில் வந்துநிற்க 
விண்சூழும் மேகம் விரைந்து  

கண்ணாடிக் கைவளையல் காற்றில் கலந்தாட  
அண்ணார்ந்துப் பார்த்திட்ட ஆம்பலும் பூத்திருக்க 
கண்டோமே காட்சிதனைக் கண்குளிரச் சித்திரத்தில் 
மண்ணுண்டோன் லீலை வனப்பு . 

அலை தவழும் ஆழியிலே ....!!!



அலைதவழும் ஆழியிலே 
குலைநடுக்கும் குளிரினிலும் 
உலைகொதிக்க வேண்டுமெனில் 
தொலைதூரம் படகில்போய் 
வலைவீசி மீன்பிடித்து 
கலையாத கனவோடு 
விலைபோகு மென்றுநம்பும் 
நிலைதானே நித்தமுமே …!!

காதல் வெண்பா ...!!!



வேங்குழலின் ரீங்காரம் தேங்கியதோர்ப் பூங்காவில் 
பூங்கொடியாள் ஏங்கினளே தூங்காமல் - சோங்கியப் 
பைங்கிளியை ஆங்கணே வேங்கையவன் பூங்கரத்தில் 
தாங்கிடவே ஓங்கிடும் பாங்கு .

Tuesday, August 4, 2015

மெய்சிலிர்க்க வைத்திடுதே !




உச்சியிலே அலங்காரக் கொண்டைப் போட்டு 
***உன்னதமாய் உயிர்ப்பித்து மிளிர்ந்த கோலம் 
பிச்சிமலர் மாலையிட்டுக் குஞ்சங் கட்டி 
***பின்னலிட்ட சடையினிலே துலங்கும் வாசம் 
கச்சிதமாய்க் குத்துக்கா லிட்டு வீற்று 
***கைமடக்கித் தாங்குகையில் பொங்கும் சீலம் 
மிச்சமின்றி எழிலனைத்தும் ஒன்றாய் சேர்ந்து 
***மெய்சிலிர்க்க வைத்திடுதே எந்தன் தாயே !! 

பட்டுடுத்தி நகைபூட்டி நீறு பூசி 
***பாங்குடனே மருதாணி கையி லிட்டு 
பொட்டுவைத்த வதனத்தில் கருணைப் பொங்க 
***பொற்பதத்தில் கொலுசுகளின் சத்தம் கொஞ்ச 
மெட்டியொலி செவியோரம் மெல்லக் கேட்க 
***மெய்மறந்து போகுமெந்தன் உள்ளம் அம்மா 
எட்டிநின்று ரசிக்கையிலே இதயம் துள்ளி 
***ஏங்கிநிற்கும் உன்னருளைப் பெறவே தாயே ! 

ஆடிவெள்ளி அலங்காரம் அழகு அம்மா 
***அன்னையுந்தன் எழிற்கோலம் கண்டோம் அம்மா 
பாடிடுவோம் உன்புகழை நாளும் அம்மா 
***பக்தியுடன் வணங்கிடுவோம் உம்மை அம்மா 
கோடிநாம அர்ச்சனையால் தொழுவோம் அம்மா 
***கோயிலிலே எழுந்தருளி ஏற்பாய் அம்மா 
வாடிநிற்கும் வேளையிலே காப்பாய் அம்மா 
***வாழ்வினிலே தீபஒளி ஏற்று தாயே !

கள்ளமில்லாச் சிரிப்பில் ....!!





கள்ள மில்லாச் சிரிப்பில் 
***கரைந்து போகும் இதயம் !
அள்ளு மழகில் நெஞ்சம் 
***அணைத்துக் கொள்ளக் கெஞ்சும் !

வெள்ளை முல்லைப் பற்கள் 
***விரிந்த இதழுள் மலரும் !
புள்ளிக் கோலம் போலே 
***புன்ன கையால் பூக்கும் !

வெள்ளி நிலவு வதனம் 
***வெகுளி யான உள்ளம் !
துள்ளும் கெண்டை மீன்கள் 
***துடிக்கும் விழியி னுள்ளே !

கிள்ளிக் கன்னம் கொஞ்சக் 
***கிலேச மெல்லாம் தீரும் !
தெள்ளு தமிழில் பேசித் 
***தேனைப் பாய்ச்சும் காதில் !

பிள்ளை மொழியின் இன்பம்  
***பெற்றால் தானே புரியும் 
எள்ளித் தள்ள வேண்டாம் 
***ஏழைச் சிறுமி என்றே !

Saturday, August 1, 2015

பாடும் பணியே பணியாய் அருள்வாய் ....!!




ஆல கண்டன் அருமைப் புதல்வா 
கோலக் குமரா குறத்தி மணாளா
சூல மேந்தித் துடிப்பாய் வருவாய்  
காலன் வருமுன் காப்பாய் முருகா !

சேவற் கொடியோய் செந்தில் வேலா 
பாவம் தீர்ப்பாய் பழனி வேலா 
ஆவல் கொண்டே அழைத்தேன் அழகா 
தேவ யானை தேவி நாதா !

விருத்தம் பாட விரைந்தே வாராய் 
வருத்தம் தீர வரமும் தாராய்
குருவாய் எந்தன் குறைகள் கேளாய் 
திருவாய் மலர்ந்தே தீர்ப்பைக் கூறாய் !

ஆடும் மயிலில் அமர்ந்தே வருவாய் 
பாடும் பணியே பணியாய் அருள்வாய்
ஈடு இணையே இல்லா தேவா 
வீடு பேற்றை வேண்டத் தருவாய் !