Wednesday, July 29, 2015

மீட்டும் மௌன ராகம் ....!!!




தேடிப் பூவைச் சென்று 
***தேனை யுண்ட வண்டு 
பாடிக் கொண்டே பைய
***பக்கம் பார்த்துப் போகும் !
ஆடிக் காற்று வீச 
***ஆட்டம் கண்டு அஞ்சி 
மாடி வீட்டி லேறி 
***மௌன ராகம் மீட்டும் !

Monday, July 27, 2015

நீ பொழிவாயென ....!!




நடுநிசியில் 
சுழன்றடித்துக் 
கொட்டித் தீர்த்தது மழை ! 

கதவை இழுத்து மூடி 
கட்டிலில் முடங்காமல் 
சாளரம் திறந்து 
சாரலில் குளிர்ந்து 
சத்தமுடன் 
சிந்தும் பெயலை ரசித்தேன் ...! 

அவ்வப்போது 
வெட்டிச் சென்ற மின்னலும் 
செவிப்பறையை 
அதிரச்செய்த இடியும் 
அச்சமூட்டினாலும் ..... 

அழகே உன்னை 
ஆராதிப்பேன் ! 
வானமுதே 
காத்திருப்பேன் என்றென்றும் 
நீ பொழிவாயென ....!!

Sunday, July 26, 2015

முகில் தாண்டிச் சென்றாள் ....!!!

அக்கினியில் பூத்து அணங்கவளும் வந்தாள் 
சக்தியவள் காலில் சலங்கையுடன் நின்றாள் 
விக்கினங்கள் தீர்க்க விளக்கேந்தி வந்தாள் 
முக்திபதம் பெற்றே முகில்தாண்டிச் சென்றாளே ..!! 

துதிபாடி வந்தாள் துடிப்புடனே வந்தாள் 
முதிராத தோகை முடிவிரித்து வந்தாள் 
மதிபோலும் மங்கை வளைகுலுங்க வந்தாள் 
விதிதன்னை மாற்றி விதிர்விதிர்த்துச் சென்றாளே ...!!

Saturday, July 25, 2015

குள்ள வாத்து நீந்தும் ....!!



குளத்தில் மலர்ந்த அல்லி யருகே 
***குள்ள வாத்து நீந்தும் ! 
பிளந்த அலகில் இரையைப் பற்றி 
***பிள்ளை கட்கு ஊட்டும் ! 
வளர்ந்த மரத்தின் பூக்கள் கொட்டி 
***வண்ண மெத்தை போடும் ! 
களங்க மில்லா ஆட்டுக் குட்டி 
***கண்ணை மூடித் தூங்கும் !

நெடியோன் அடியைப் பிடி ....!!

குடித்து மடிதல் கொடிது கொடிது 
இடிந்த குடியும் நொடிந்துத் துடிக்கும் 
முடிந்த படியால் விடியல் கடினம் 
நெடியோன் அடியைப் பிடி .


    (ஒரெதுகை வெண்பா )

வடிவாய் எழுதி முடித்தேன் ....!!

விருத்த மெழுத விருப்பங் கொண்டு 
***விருந்து படைக்க நினைத்தேன் !
அரும்பும் வார்த்தை அவிழு முன்னே
***அழிந்துப் போக நொந்தேன் !
கரும்பின் இனிப்பும் கசப்பாய்த் தெரிய
***கவிதை நினைப்பை மறந்தேன் !
வருத்தங் கொண்ட மனத்தைத் தேற்றி
***வடிவாய் எழுதி முடித்தேன் ...!!

Friday, July 24, 2015

துன்பத்தில் நிற்பாள் துணை ....!!!



கூப்பிடுமுன் ஓடிவந்து கோலவிழி காட்டிடுவாள் 
வேப்பிலையின் வாசமுடன் வேண்டுவன தந்திடுவாள் 
பக்திசெயும் அன்பர்தம் பல்வினைகள் ஓட்டிடுவாள் 
சக்தியவள் யாவர்க்கும் தாய் .

தாயாய்ப் பரிந்து தயவாய் அருள்புரிவாள் 
நோயாய்க் கிடந்தால் நொடிக்குள் அரவணைப்பாள்
அன்பால் விழிவழிய அன்னையவள் தானுருகி 
துன்பத்தில் நிற்பாள் துணை .

மங்கள ரூபிணி மாங்கல்யம் காத்திடுவாள் 
செங்கமல வல்லியவள் சீராட்டத் தாங்கிடுவாள் 
சங்கரி சௌந்தரி சர்வ நிவாரணி 
அங்கயற் கண்ணி அருள் .

ஆடிவெள்ளி நாளினிலே ஆலயத்தில் பொங்கலிட்டு 
கூடிநின்ற பெண்கள் குலவையிட்டுக் கும்பிட 
நாடிவந்து நல்லாசி நல்குவதே தாயவள்தம்  
வாடிக்கை யென்றேக்கொள் வாள் 

கற்பூர ஜோதியில் கண்டேனே உன்னழகை 
பொற்பதம் பற்றியேப் போற்றிடுவேன், என்றன்
மயக்கம் தெளிவித்து மாயை யகற்றி
பயமும் களைவாய்ப் பரிந்து .

மலையில் சிந்தும் அருவி ...!!



மயக்கி மனத்தை மகிழச் செய்யும் 
***மலையில் சிந்தும் அருவி !
தயக்க மின்றி தண்ணீர் கொட்ட 
***தலையில் முட்டித் தெறிக்கும் ! 
வியக்க வைத்து விழுந்துப் புரண்டு 
***விரைந்துப் பாயும் நதியாய் !
இயற்கை யழகில் இதயம் ஒன்றி 
***இன்பக் கவிதைப் படைக்கும் ...!!

Thursday, July 23, 2015

மங்கை எண்ணிப் பூத்தாள் ....!!


காலை நேரத் தென்றல் 
***கன்னம் கிள்ளிச் செல்ல 
சோலைப் பூக்கள் வாசம் 
***சோர்வு நீக்கும் மெல்ல 
மேலை வானில் மேகம் 
***வேக மாகப் போக 
சாலை யோரப் பூங்கா 
***சாந்தப் பார்வை பார்க்க 

கோலைத் தட்ட மந்தி
***குட்டிக் கர்ணம் போட 
ஓலைக் கீற்றில் கிள்ளை
***ஓசை யின்றி ஆட 
ஆலைக் கன்னல் சாறாய்
***அன்னம் கொஞ்சிப் பேச 
மாலை சூடும் நாளை 
***மங்கை எண்ணிப் பூத்தாள் !!

Wednesday, July 22, 2015

மெய்யனே கண் திறப்பாயே !

பாற்கடல் வாசனின் பாதம் 
***பற்றிடப் பாவமும் தீரும் !
மாற்றிடும் வல்வினை யாவும் 
***மாலவன் மந்திர நாமம் !
போற்றியே பாடிட வேண்டும் 
***பொன்னடி சேர்ந்திட வேண்டும் !
கூற்றுவன் வந்திடு முன்னர் 
***கும்பிடு வாய்மட நெஞ்சே !

சாற்றிய மாலையும் தோளில் 
***சௌமிய மாய்மணம் வீசும் !
ஏற்றிய சோதியின் முன்னர் 
****ஏங்கியே கூப்பிட வாராய் !
தேற்றிட யாருமே யின்றி 
***தேம்பிடும் பிள்ளையைப் பாராய் !
வேற்றுமைப் பார்த்திட லாமோ 
***மெய்யனே கண்திறப் பாயே ...!!

Tuesday, July 21, 2015

மனத்தை மயங்க வைக்கும் ....!!

 மலரும் மலரின் மணமும் மனத்தை மயங்கவைக்கும் 
புலரும் பொழுதில் புதிதாய்ப் புவியும் புனைந்திருக்கும் 
உலகும் உவக்க உறவின் உயிர்ப்பில் உளம்மகிழும் 

விலகும் வினையும் வியப்பாய் விரைவாய் விடைபெறுமே !


        (கட்டளைக் கலித்துறை )

Monday, July 20, 2015

பூத்தது வைகறை வானம் ....!!



பொன்னெழில் பொங்கிடும் காலை 
***பூங்குயில் மீட்டிடும் ராகம் ! 
தென்னையில் பைங்கிளி கத்தும் 
***தேன்குரல் கொண்டது பேசும் !
சென்னியில் கொண்டையுங் கொண்ட 
***சேவலுங் கூவிடும் வேளை !
கொன்றையின் செந்நிறப் பூக்கள் 
***கொட்டியேப்  பாதையை மூடும் !

அன்னமும் தன்னிணை யோடு 
***அன்புடன் நீரினில் நீந்தும் !
தென்றலும் மெல்லென வீச 
***தேகமும் சில்லெனக் கூச 
கன்னலின் இன்சுவை வெல்லும் 
***கன்னியின் பாட்டினில் உள்ளம் !
புன்னகை சிந்திடும் கோலம் 
***பூத்தது வைகறை வானம் !

Tuesday, July 14, 2015

சித்தினியே புத்தொளிரும் சித்திரமே ....!!




அன்றலர்ந்த மென்மலராய் அன்னமவள் புன்னகையால் 
மின்னலிடை பொன்னெழிலாள் வென்றனளே - அன்புடையாள் 
கன்னலென இன்சுவையாள் கன்னியிடம், என்மனதை 
தென்றலதும் சொன்னதுவோ சென்று. 

முத்தமிழில் வித்தகியே முத்தழகே உத்தமியே 
சித்தினியே புத்தொளிரும் சித்திரமே- தித்திக்க 
நித்திரையில் சத்தமின்றி நித்தமுமே முத்தமிட்ட 
மித்திரைநீ பித்தாக்கும் வித்து .

மெட்டுப் போட்ட மன்னன் ...!!



தொட்டில் சேயும் கேட்டு சொக்கித் தூங்கிப் போகும் 
கட்டிப் போட்டு மாயம் செய்யும் கானம் தந்தார் 
மெட்டு போட்ட மன்னன் மண்ணை விட்டுச் சென்றார் 
சொட்டும் கண்கள் துக்கம் பொங்க சோகம் கக்கும் !

Wednesday, July 8, 2015

புண்ணியம் சிந்தும் பூவெழில் ரமழான் ....!!!


இன்றைக்கு வேண்டும் இது .....!!!

விலைவாசி குறைய வேண்டும் 
***விலையில்லாக் கல்வி வேண்டும் 
நிலையான கொள்கை வேண்டும் 
***நெஞ்சத்தில் உறுதி வேண்டும் 
குலைநடுங்க குண்டு வைக்கும் 
***கொடுமைகளும் மாள வேண்டும் 
கலைமகளின் அருளால் இங்கு 
***கவிபாடும் ஆற்றல் வேண்டும் ...!!! 

மடலெழுதி அஞ்சல் செய்யும் 
***மனமகிழ்ச்சி மீண்டும் வேண்டும் 
வடகங்கை தெற்கில் பாய்ந்து 
***வளமைதனைக் கூட்ட வேண்டும் 
தடங்கலின்றி வேளை மூன்றும் 
***தண்ணீர்,மின் சாரம் வேண்டும் 
உடலுறுப்பு தானம் செய்யும் 
***உறுதிமொழி எடுக்க வேண்டும் ...!!! 

பெற்றெடுத்த தந்தைத் தாயை 
***பேணிடும்,நல் லிதயம் வேண்டும் 
கற்றறிந்தோர் அவையில் நானும் 
***கற்றவற்றை உரைக்க வேண்டும் 
நற்றமிழில் கதைக்க வேண்டும் 
***நயமுடனே சொல்ல வேண்டும் 
வெற்றிடமாய் இருக்கும் நெஞ்சை 
***மெய்யன்பால் நிரப்ப வேண்டும் ...!!! 

மும்மாரி பொழிய வேண்டும் 
***முப்போகம் விளைய வேண்டும் 
எம்மதமும் போற்ற வேண்டும் 
***எழுத்தினிலே ஏற்றம் வேண்டும் 
செம்மொழியாம் தமிழைப் பாரில் 
***செழுமைபெறச் செய்ய வேண்டும் 
தெம்மாங்குப் பாட்டில் நெஞ்சம் 
***தெளிவடைந்து மகிழ வேண்டும் ...!!! 

பிணியில்லா உடலும் வேண்டும் 
***பிணக்கில்லா வாழ்க்கை வேண்டும் 
கணிணியிலே புலமை வேண்டும் 
***கற்பிக்க இலந்தை வேண்டும் 
பணியிடத்தில் நேர்மை வேண்டும் 
***பகுத்தறியும் தன்மை வேண்டும் 
துணிச்சலுடன் பெண்கள் நாட்டில் 
***தொல்லைகளைத் துரத்த வேண்டும் ...!!! 

நிலமகளை மலடாக் காமல் 
***நெகிழிதனை ஒழிக்க வேண்டும் 
விலங்குகளை வேட்டை யாடும் 
***மிருகத்தனம் மடிய வேண்டும் 
நலத்திட்டம் அரசு தீட்டி 
***நலிவுற்றோர் பேண வேண்டும் 
புலம்பெயர்ந்த தமிழர் உள்ளம் 
***பூரிப்பில் விரிய வேண்டும் ...!!! 

வனங்களையும் காத்து மண்ணில் 
***மழைவளத்தைப் பெருக்க வேண்டும் 
இனக்கொலைக்கு முற்றுப் புள்ளி 
***இட்டிடவே வேண்டும் வேண்டும் 
மனவுளைச்சல் போக்க நாட்டில் 
***மதுவிலக்கு என்றும் வேண்டும் 
கனவினிலேக் கண்ட காட்சி 
***கண்முன்னே நடக்க வேண்டும் ...!!! 

கறையில்லாக் கரமும் வேண்டும் 
***கையூட்டு ஒழிய வேண்டும் 
குறைவற்ற செல்வம் வேண்டும் 
***கொடுத்துதவும் குணமும் வேண்டும் 
மறையெங்கும் ஒலிக்க வேண்டும் 
***மனிதமிங்கேப் பூக்க வேண்டும் 
இறையெண்ணம் நாளும் வேண்டும் 
***இறையருளால் சிறக்க வேண்டும் ...!!!