Wednesday, March 29, 2017

பார்க்க கண் ஆயிரம் வேண்டுமம்மா !!!



முத்துப் பல்லக்கினில் ஏறி வந்தாள் - மாரி
>>>>முன்னைவினை தீர்க்கத் தேடி வந்தாள் 
தித்திக்கும் செந்தமிழ்ப் பாடலினைக் - கேட்டு 
>>>>சிந்தைக் குளிர்ந்தவள் ஓடி வந்தாள் !!

பம்பை உடுக்கையின் சத்தத்திலே - தேவி 
>>>>பாங்குடன் வீதியில் ஆடி வந்தாள் 
கும்மிக் கொட்டிப் பெண்கள் பாடிச்செல்ல - அன்னை 
>>>>கொஞ்சும் சிரிப்புடன் கூட வந்தாள் !! 

செல்லப் பிள்ளையாம் விநாயகன்முன் -செல்ல 
>>>செம்மயில் வாகனத்தில் தொடர்ந்தாள் 
மெல்லக் குலுங்கிடும் கைவளையும் - ஆட 
>>>மின்னலைப் போலவளும் படர்ந்தாள் !!

மஞ்சள் முகத்திலே குங்குமமும் - இட்டு 
>>>மஞ்சள் பட்டுச்சேலை கட்டிவந்தாள் 
குஞ்சமும் ஆடிடும் கூந்தலொடு - கோல 
>>>>கொண்டையில் பில்லையும் சூடிவந்தாள்  !! 

பின்னலில் பிச்சிப்பூ சூடியவள் - தம்மின்  
>>>>பேரழகால் உள்ளம் கொள்ளைகொண்டாள் 
சின்ன இடையினில் மேகலையும் - ஆட 
>>>>சிங்காரப் புன்னகை பூத்து வந்தாள் !!

வண்ணமலர் மாலை தோள்களிலே - தாங்கி 
>>>>மங்கள மாயவள் சுற்றி வந்தாள் 
கண்களிலே அருள் சிந்திடவே - தாயும் 
>>>>காட்சி கொடுத்திட பக்கம்வந்தாள் !!

சக்தியவள் கையில் சூலமுடன் - நின்று 
>>>>சாந்த சொரூபியாய்க் காட்சிதந்தாள்
அக்கினிச் சட்டிக ளேந்திவரும் - பக்தர் 
>>>>அன்பில் நெகிழ்ந்தவள் ஆசி தந்தாள் !!

வேப்பிலை வாசம் நிறைந்தவளாம் - அன்பாய் 
>>>வேண்டும் வரத்தைக் கொடுப்பவளாம் 
கூப்பிடு முன்னரே தாயவளும் - வந்து 
>>>>கோரிக்கை ஈடேறச் செய்பவளாம் !!

பங்குனிப் பொங்கல் விழாவினிலே  - தாயைப் 
>>>>பார்க்கக் கண் ஆயிரம் வேண்டும்மா 
பொங்கிடும் ஆனந்தம் நெஞ்சினிலே - என்றும் 
>>>>பூத்து நிறைந்திடும் வாழ்வினிலே !!

சியாமளா ராஜசேகர் 

Tuesday, March 28, 2017

தமிழ் மணக்கும் !

வஞ்சியவள் கரங்களிலே வளைகுலுங்கும் 
கஞ்சமலர் முகத்தினிலே களைபெருகும் 
கொஞ்சிவரும் குரலிசையோ குளிரவைக்கும் 
நெஞ்சிலவள் நினைவுகளே நிதமினிக்கும்! 

திங்களொளி விழிகளிலே திகழ்ந்திருக்கும் 
மங்கையவள் நடையழகோ மனம்மயக்கும் 
பொங்கிவரும் சிரிப்பொலியோ பொலிவளிக்கும் 
தங்கமகள் அவள்மொழியில் தமிழ்மணக்கும்!

கண்ணா உணர மாட்டாயா ??

என்னை அழைக்க வாராயோ 
***இசையில் மயங்கிக் கிடக்கின்றேன்! 
புன்னை மரத்தின் நிழலினிலே 
***பொறுமை யிழந்து தவிக்கின்றேன்! 
தென்னங் கீற்றும் அசைந்தாட 
***தென்றல் காற்றும் வருடிடுதே! 
கன்னி யென்றன் கவலையினைக் 
***கண்ணா உணர மாட்டாயா??

தாலாட்டும் வெண்ணிலவே ...!!!

தாலாட்டும் வெண்ணிலவே
***தரணிக்கே ஒளிதந்தாய்!
பாலாக வெண்ணிறத்தில்
***பாங்குடனே பவனிவந்தாய்!
மேலாக்காய் முகில்சீலை
***மேனியிலே மூடுவதேன்?
மேலான உன்னழகில்
***மெய்சிலிர்த்து நின்றேனே!!

ஏழு சுரமே !

மொழியே யின்றி முகத்தி லிரண்டு 
விழிக ளசைவில் விளைந்த நாதம் 
அழியா அன்பின் அமுத கானம் 
எழிலாய்ப் பொழியும் ஏழு சுரமே !

சியாமளா ராஜசேகர்

Thursday, March 23, 2017

ஜதியொடு ஆடுகிறாள் ...!!!



ஜல்ஜல் என்றே 
       சலங்கை  கட்டி 
       ஜதியொடு ஆடுகிறாள் - கன்னல்
        தமிழினில் பாடுகிறாள் !!
நில்நில் என்றே 
    நெஞ்சம் துடிக்க 
    நிறைமதி மோதுகிறாள்  - என்றன் 
    நினைவைக் கோதுகிறாள் !!

செம்மா துளையாய் 
    சிவந்த இதழ்களில்  
    சிரிப்பை உதிர்க்கின்றாள் - தங்கச் 
    சிலையாய் ஒளிர்கின்றாள் !!

வெம்மை யகற்றும்     
    வெண்ணில வெழிலாள்
    வியப்புறச் செய்கின்றாள் - உள்ளம்
    மென்மையாய்க் கொய்கின்றாள் !!

கண்களின் மொழியால் 
    காதலைச் சொல்லி 
    கடந்து செல்கின்றாள் - என்னுள் 
    கலந்து வெல்கின்றாள் !!
வண்ணக் கனவில் 
   வடிவாய் வந்தவள் 
   வாழ்வினில் இணைகின்றாள் - அன்பை 
    வளமாய்ப் பொழிகின்றாள் !!      

Tuesday, March 21, 2017

கோகுல பாலா !



கோமகனே நீவாராய் கோகுல பாலா! - உன்
நாமமே நாளும் சொல்வேன் நாதனே வாராய்!
பாதமலர் பற்றிடுவேன் பரந்தாமா வாராய்! - நால்
வேதமோதி வாழ்த்திடுவேன் வாராய் மணிவண்ணா!


 பாடிடுவேன் நித்தமுனைப் பரம்பொருளே வருவாயே!
ஆடிடுவாய் ஆனந்தமாய் ஆயர்ப்பாடி நாயகனே!
கூடிவரும் கோபியரின் கொஞ்சுமொழி கேட்கலையோ?

கோடியின்பம் யாம்பெறவே கோபாலா வந்திடடா!


பாராயோ கண்திறந்து பவளவாய்ப் பேரழகா!
ஆராரோ நான்பாட ஆனந்தமாய் இமைமூடு!
தீராத ஆவலினால் தீந்தமிழில் பாடுகின்றேன்!
வாராயோ கண்மணியே மையலுடன் காத்திருப்பேன்!

மடியில் தவழும் தங்கமே ....!!!

மடியில் தவழும் தங்கமே - ஒரு
கொடியில் பூத்த முல்லையே! - தினம்
துடிக்கும் இதயம் அன்பிலே - உனை
விடியும் வரையில் கொஞ்சுவேன் - எனக்குப்
பிடித்த பாட்டைப் பாடியே!

அழகில் செல்லக் கண்ணனே - உன்
அக்கா என்னைப் பாருடா - வரும்
கனவில் கூட கைவிடேன் - இனி
அம்மா உனக்கு நானடா - என்
மனமும் குளிர்ந்த துன்னாலே!

வளிவருடுவ தேனோ ....???(சந்தப் பாடல் )


வயலருகினில் கொடியிடையினை வளிவருடுவ தேனோ ?
***வளையொலியினி லிசைமலர்வதி லுளமசைவத னாலோ !
கயல்விழிகளு மிருபுருவமு மிகவிரிவது மேனோ ?
***கனிமொழியவள் குரலினிமையில் மனமுருகுவ தாலோ !
வியனுலகினி லுலவிடுமதி குளமுறைவது மேனோ  ?
***மிகவழகிய  வொளிமுகமத னுயிருருகுவ தாலோ !
இயலிசையென வளமிகுதமி ழமுதினைநினை யாளோ ?
***இளநகையொடு கவிவனைவதி லவள்சுகமடை வாளே !!!

கண்ணே வாராய் கனிவோடே

புன்னை வனத்தி லுனைக்கண்டேன் 
***பொலிவாய் மெல்லப் புன்னகைத்தாய் !
கொன்றை மலராய்ச் சிவந்திருந்தாய் 
***கொள்ளை யழகா லெனைவென்றாய் !
குன்றில் ஊதா நிறங்கொண்ட 
***குறிஞ்சிப் பூவாய்க் குளிர்வித்தாய் !
அன்பாய் இதயம் ஈந்திடுவாய் 
***அன்பே ! காதல் ரோஜாவே ...!!

அல்லி இரவில் மலர்வதைப்போல் 
***அழகாய் நீயும் இதழ்பூத்தாய் !
மல்லி வாசம் உளம்துளைக்க 
***வண்டா யுன்னைச் சுற்றிடுவேன் !
எல்லை யில்லா எழிலோடு 
***என்னும் மலர்ந்த தாமரையே !
முல்லைச் சிரிப்பில் விழுந்துவிட்டேன் 
***முத்த மொன்று தருவாயோ ...??

பாந்த முடனே பாவையுன்றன்
***பார்வை என்னைக் கவர்ந்திடுதே !
சாந்து பொட்டு நெற்றியிலே 
***சங்கு பூவாய்ச் சிரித்திடுதே !
கூந்தல் மீது பிச்சிபூ 
***குளிர்ந்து மனத்தைப் பரப்பிடுதே !
காந்தள் விரலால் எனைமீட்ட 
***கண்ணே வாராய் கனிவோடே ...!!

சிணுங்கிடும் பலவண்ணம் !!!


  அலைகடலென அவள்வருகையில்  பனித்துளிகளும்பூக்கும் 
***அமுதெனத்தமிழ் அவளிதழ்களில் தவழ்ந்திடமது தோற்கும் !
மலைமடிதனில் முகிலணைந்திட உளம்ரசித்ததைப் பார்க்கும் 
***மயங்கிடச்செயும் அழகினில்மனம் நினைவலைகளில் மூழ்கும் !
வலைவிரித்திட கயல்விழுந்திடும் விழிகளிலது தங்கும் 
***வயல்வெளியினில் வளிவருடிட சுகம்பெருகிடு மெங்கும் !
சிலைவடிவினள் மலர்முகத்தினில் குழிவிழுந்திடும் கன்னம் 
***சிரிக்கையில்வளைக் கரம்குலுங்கிடச் சிணுங்கிடும்பல வண்ணம் !

சியாமளா ராஜசேகர் 



Monday, March 20, 2017

சிட்டே வாராய் !! ( உலக சிட்டுக்குருவி தினம் )

எங்கேநீ சென்றாயோ என்றுளம் வாடுதே 
தங்கயிட மின்றித் தவித்தாயோ ?- சிங்காரச்
சிட்டேவுன் கீச்சென்ற செல்லச் சிணுங்கலில்
மெட்டியொலி யும்தோற்கு மே !

சிறகடிக்கும் சின்னஞ் சிறுசிட்டே நீயும் 
பறந்துசென்ற தெங்கே பகர்வாய் ! - மறவாமல் 
வந்து மனமகிழ வைப்பாய்! குருவியே !
சிந்தை குளிர்ந்திடச் செய் .

மரக்கிளையில் கூடுகட்டி மக்களுடன் வாழ்ந்தாய் 
இரக்கமிலா நெஞ்சமுடன் யாரோ - விரட்டியது 
சொல்குருவி! என்றுமெங்கள் சொந்தம்நீ யல்லவா  
செல்லாதே வாழுவோம் சேர்ந்து .

கதிர்வீச்சால் நீயுமே காணாமற் போனாய் 
கதியின்றிச் சென்றாய் கடந்து!- அதிரூப 
சிட்டே! சிறகசைத்துச் சீக்கிர மாய்வந்து 
பட்டே பரிவாய்ப் பழகு .

Friday, March 17, 2017

வாட்டம் விலக்கும் வரம்

அன்போ(டு) அரவணைப்பும் ஆறுதலும் கிட்டிடும்
துன்பந் தொலைந்து சுகம்பெருகும் - என்றென்றும்
கூட்டுக் குடும்பமே கூட்டிடும் வாழ்விலின்பம்

வாட்டம் விலக்கும் வரம்.

கனவென்னும் கப்பலேறி ....!!!




காதலெனும் கடலினிலே கனவென்னும் கப்பலேறி 
மோதவந்த அலைநடுவே மோகனமாய் அவளோடு
காததூரம் போகுமுன்னே கார்மேகம் திரண்டுவர

ஆதவனும் கதிர்விரிக்க அழைத்துவந்தேன் கரையருகே!

கரையினிலே குளிர்காற்றில் கன்னிமயில் சிலிர்த்திருக்க 
நுரைபூக்கள் மணற்தொட்டு நோகாமல் முத்தமிட 
வரையாத ஓவியமாய் வனப்போடு நின்றவளை 
விரைவாக அணைத்தபடி விளையாடிக் களித்தேனே !

களிப்பினிலே கனிந்துருகிக் காதலியும் கொஞ்சுகையில் 
கிளிப்பேச்சில் மனம்கரைந்தேன் கெஞ்சுகையில் எனைமறந்தேன் 
நெளிவான சிற்றிடையில் நெஞ்சத்தைப் பறிகொடுத்தேன் 
துளித்துளியாய் மழைதெறிக்க சுகமாக உணர்ந்தேனே !

உணர்வினிலே கலந்தவளை உயிராக நினைத்திருந்தேன் 
கணநேரம் விலகாமல் கடல்வளியில் தவழ்ந்திருந்தேன் 
மணமுடிக்கும் நாளையெண்ணி மங்கையவள் கரம்பிடித்தேன் 
கணவனான தருணத்தில் கனவுகலைய வழிந்தேனே !!

Thursday, March 16, 2017

புன்னகைப் பூவே பேசு ...!!

நிலவென உன்னைக் கண்டேன்
***நிம்மதி நெஞ்சில் கொண்டேன்!
மலரென வதனம் பூக்க

***மதுவுணும் வண்டா யானேன்!
வலம்புரிச் சங்கின் நாதம்
***வஞ்சியுன் குரலில் கேட்டேன்!
நலம்பெற வேண்டு மென்று
***நானுனை வாழ்த்து வேனே!


சந்தன முகமோ மின்னும்
***சந்திர வொளியை மிஞ்சும்!
சிந்திடும் சிரிப்பில் செக்கச் 

***சிவந்திட கமலம் பூக்கும்!
செந்தமிழ் மணக்கும் பேச்சில்
***தென்றலும் இதமாய் வீசும்!
மந்திர மாயஞ் செய்யும்
***மல்லிகைப் பூவின் வாசம்!


கண்களால் பதிலைச் சொல்வாய்
***காதலா லென்னை வெல்வாய்!
தண்டையும் சிலம்பும் கொஞ்ச

****தங்கமே அருகில் வாராய்!
பெண்ணுனைக் கண்ட பின்னே
***பிரமனே வியந்து நின்றான்!
வெண்ணிலா வொளியில் நானும்
***மெழுகென உருகி னேனே!


வேல்விழி யாலே என்னை 
***விரும்பிடும் கன்னி மானே !
கால்களில் கொலுசின் சத்தம் 
***காவலைத் தாண்டிக் கேட்கும் !
பால்முகம் பார்த்த பின்னே 
***பாவையே வருமோ தூக்கம் ?
ஆல்விழு தாக வென்னை 
***அரவணைப் பாயா தோழி ??

புன்னகைப் பூவே பேசு 
***பொன்னில வொளியாய் வீசு !
மென்னிடை வளைவில் தாங்கி 
***மெத்தையில் யாழாய் மீட்டு !
தென்றலாய்த் தழுவி நீயும் 
***தேனிசை யாகப் பாடு !
சென்றதை மறந்து விட்டு 
***செல்லமே வருவாய் இங்கே !

சத்திய மாகச் சொல்வேன் 
***சம்மத மெனக்குக் கிளியே !
சித்தமும் உன்பால் வைத்தேன் 
***சித்திரப் பாவை நீயே !
நித்தமுன் நினைவில் வாடும் 
***நெஞ்சினை வதைக்க லாமா ?
உத்தமி யுன்னைக் கூடி 
*** உலகையே வெல்வேன் நானே !

( அறுசீர் விருத்தம் )
விளம் மா தேமா 

இதயக் கதவைத் திறவாயோ ...???


கொஞ்சிப் பேசி மயக்குகிறாய்
***கொட்டும் மழையாய் நனைக்கின்றாய்!
மஞ்சள் முகத்தில் இதழ்சிவக்க
***மலராய் விரிந்து சிரிக்கின்றாய்!
நெஞ்சத் துடிப்பில் உன்பெயரே
***நித்தம் கேட்கும் அறிவாயா?
வஞ்சி உனையே மணமுடிக்கும்
***வரத்தை எனக்குத் தருவாயா?


அலைகள் கரையை முத்தமிட்டுக்
***காத லாகிக் கரைகிறதே!
மலையை முகிலும் அணைத்தபடி
***மையல் கொண்டே உலவிடுதே!
தொலைவில் விண்மீன் விழிசிமிட்டி
***சுகமாய்க் கவிதை சொல்கிறதே!
சிலையே இன்னும் ஏன்தயக்கம்
***சிற்பி என்னைத் தழுவிக்கொள்!


காஞ்சிப் பட்டுச் சேலைகட்டி
***காலில் மெட்டி யொலியிசைக்க
வாஞ்சை யோடு பக்கத்தில்
***வஞ்சி நீயும் நின்றிருக்க
ஊஞ்ச லாடும் என்மனமும்
***உரிமை யாலே உனையணைக்க
நாஞ்சில் நாட்டுப் பொன்மகளே
***நாடித் துடிப்பும் கூடிடுதே!


பின்னிப் போட்ட கூந்தலிலே
***பிச்சிப் பூவும் மணக்கிறதே!
புன்ன கைக்கும் இதழ்களிலே
***புதிய பாடல் பிறக்கிறதே!
சன்னல் வழியே இளங்காற்றுச்
***சருமம் வருடிச் செல்கிறதே!
மன்னன் என்னைக் கண்டவுடன்
***மறைந்து செல்லல் முறைதானோ?


நதியின் கரையில் நாணல்போல்
***நளின மாக ஆடிடுவாய்!
மதியின் ஒளியாய்க் குளிர்வித்து
***மகிழம் பூவாய் மணந்திடுவாய்!
உதிக்கும் காலைக் கதிரொளியில்
***உதய கீதம் பாடிடுவாய்!
விதியால் பிரிய நேரிடிலோ
***விரட்டி விதியை வென்றிடுவேன் !


வான வில்லை சேலையாக்கி
***வடிவே வுனக்குத் தந்திடுவேன்!
கான மழையைப் பொழிந்ததிலே
***காதல் நெஞ்சைப் பகர்ந்திடுவேன்!
ஆன மட்டும் உன்னருகே
***அரணா யிருந்து காத்திடுவேன்!
வானம் பாடி பறவையைப்போல்
***வாழ்வில் இசையாய் நிறைவேனே!


பிறையாய்ப் புருவம் வளைந்திருக்க
***பெரிது மீர்க்கப் பட்டேனே!
உறையும் பனியின் பொழிவாக

***உள்ளம் குளிர்ந்து மகிழ்ந்தேனே!
நிறைந்த மனத்தில் உன்நினைவை
***நித்தம் சுமந்து களித்தேனே!
இறைவன் அருளால் உன்றனையே
***இணைப்பேன் என்றன் வாழ்வினிலே!


ஒன்றாய்க் கூடிக் களித்திருப்போம்
***உறவை மதித்தே உயிர்கொடுப்போம்!
அன்றில் பறவை போல்நாமும்

***அன்பைப் பகிர்ந்தே இணைந்திருப்போம்!
என்றும் புரிதல் விலகாமல்
***இனிமை யாகக் கழித்திடுவோம்!
கன்னல் மொழியில் கனிந்துருகிக்
***காதல் கவிதை வடித்திடுவோம்!


சந்தங் கொஞ்சும் கவியாலே
***சகியே உன்னை வாழ்த்திடுவேன்!
பந்த பாசம் மறவாமல்
***பரிவா யன்பைப் பகிர்ந்திடுவேன்!
சிந்து பாவில் கவினழகாய்
***தென்றல் போல வருடிடுவேன்!
உந்தும் காதல் உணர்வுகளால்
***உள்ளம் பூத்து மகிழ்வேனே!


இதயக் கதவைத் திறவாயோ
***இனியு மென்னை மறுப்பாயோ?
இதழில் கவிதை வடிப்பாயோ
***இளமை சுகத்தைத் தருவாயோ?
இதமாய்ப் பேசி அணைப்பாயோ
***இருளில் ஒளியாய்த் திகழ்வாயோ?
இதர மொழிக ளறிந்தாலும் 
***இனிமைத் தமிழால் இணைவோமே!

கூடி வாழ்வோம் சேர்ந்து ....!!

உறவுடனே ஒட்டாமல் ஒதுங்கி வாழ்ந்தால்
***உள்ளத்தில் அன்பிற்கு மிடமே யில்லை!
மறவாமல் சொந்தமுடன் கூடி வாழ்ந்தால்

***மனக்கவலை இருந்தவிடம் மறைந்தே போகும்!
அறவழியைக் கற்பித்துப் பாதை காட்டும்
***அறிவொளியை ஏற்றிவைத்தே இருளைப் போக்கும்!
சிறப்பாக வழிகாட்டும் பிழைகள் சுட்டிச்
***சிரத்தையுடன் உறவோடு வாழ்வோம் சேர்ந்தே!

Tuesday, March 14, 2017

ஏங்க வைக்கும் காதலிதே ....!!!



மோதும் காதல் மேகங்களே
***முத்த மழையைப் பொழிவீரோ?
ஊது கின்ற குழலிசையாய்

***உயரே இடியும் முழங்கிடுதோ?
தூது சென்ற வானவில்லும்
***துடிக்க மறந்து நின்றதுவோ?
ஏது சொல்ல இயற்கையினை
***ஏங்க வைக்கும் காதலிதே...!!!

Monday, March 13, 2017

வெண்பாக்கள் பத்து ...!!!

உயிரே உனையே உறவாய் நினைத்தேன்
குயிலாக  நித்தமும் கூவி! - மயிலாய்
எனையாட வைத்த எழிலோ வியமே!

உனையே நினைக்கும் உளம்.


நிழலாக நீயிருக்க நெஞ்சி லினிக்கும்
குழலிசை யாய்நான் குளிர்வேன்!- அழகே !
அழைத்தால் வருவேன்  அருமையாய்ப் பாடி
மழைபோல் பொழிவாய் மகிழ்ந்து.


மகிழும் மனத்தில் வளர்பிறை நீயே!
அகிலாய் மணக்கும் அணங்கே! - சகியே!
பரிவொடு பார்த்திடும் பாச மலரே !
சிரிப்பாய் இதயம் திறந்து .


ஆரமுதே! தேன்மழையே! ஆனந்தப் பூங்காற்றே!
பூரண வான்நிலவே! பூரித்தேன் - ஆரணங்கே!
பாரா முகமேனோ பைங்கிளியே! என்னாசைத்
தீராதே பக்கம்வா சேர்ந்து.


அன்பில் கரைந்தாயோ ஆருயிரே! அன்னமே!
என்னுள் இனிக்கின்றாய் எப்போதும்!- மின்னிடும்
பொன்னொளியே! புத்தம் புதுமலரின் வாசமே!
சொன்னது நீதானோ சொல்.


நினைவால் சிலைவைத்து நெஞ்சம் குளிர்வேன்
உனையே மதிப்பேன் உயிராய்!- வனைவேன்
கவிதை அழகுடன் காதலில் வீழ்ந்து
தெவிட்டாத் தமிழில் திளைத்து .


ஆவாரம் பூமேனி ஆளை மயக்குதே 
பாவாடை தாவணியில் பார்த்தவுடன்! -  தூவானம் 
தூவுகையில் உள்ளமெலாம் துள்ளிக் குதித்திடும்  
தாவும் மனத்தில் தவிப்பு.

தேடி மதுசேர்க்கும் தேனியாய்ச் சுற்றினேன் 
ஓடி ஒளிந்தால் உளம்சோர்வேன் - பாடிப் 
பரவச மாயுனைப் பார்த்திட வேண்டும் 
வரந்தரு வாயா மலர்ந்து .

குவளை விழிகள் குளிர்ந்தது மேனோ 
சிவந்த இதழ்களில் தேனோ?- உவகை 
பெருகிட காதலாய்ப் பேசிக் களிக்க 
வருவாய்நீ யேயென் வரம்.

வண்ணக் கனவில் வடிவினைக் கண்டதும்
எண்ணம் முழுதும் இனித்ததே! - பெண்ணுன்  
இதயக் கதவும் எனக்காய்த்  திறந்தால் 
மிதப்பேன் சிறகு விரித்து .

சியாமளா ராஜசேகர் 

Saturday, March 11, 2017

வசந்தமினி வந்திடுமோ ...???

பட்டுடுத்திப் பொட்டுவைத்து பதுமையைப்போல் பந்தலிலே 
சிட்டுப்போல் சிரிப்புடனே சிங்கார பெண்ணிவளும்
கெட்டிமேளம் தான்முழங்க  கேட்டவுடன் வாழ்த்தொலிக்க
மட்டிலா மகிழ்வுடனே மங்கலநாண் ஏற்றாளே !

கட்டியவன் அரவணைப்பில் காதலிலே கனிந்தவளும் 
தொட்டிலாட கனவுகண்டு துள்ளியுளம் களித்தாளே!
கொட்டுமழைப் பொழுதொன்றில் கொண்டவனைப் பறிகொடுத்தாள் விட்டவளைப் பிரிந்தவனின் விதிமுடிந்து போயிற்றே !

பூவிழந்து பொட்டிழந்து புன்னகையும் தானிழந்துக்
 கேவியழும் அணங்கிவளோ கேதத்தில் உறைந்தாளே
பாவிமனம் படும்பாட்டைப் பாடிடவோர் மொழியுண்டோ 
ஓவியமாய் இருந்தவளும் உருக்குலைந்து போனாளே !

பாழ்வினையை நொந்துநொந்து பாவையவள் வடித்தாளே 
ஊழ்வினையோ உள்நெஞ்சில் ஓலமிட்டுக் கரைந்தாளே
ஆழ்மனத்தின் வேதனையை ஆண்டவனே தானறிவான் 
வாழ்வினிலே அவளுக்கு வசந்தமினி வந்திடுமோ ??

சியமாளா ராஜசேகர்