Thursday, December 20, 2018

செப்பேலோ ரெம்பாவாய் ...!!!

கோல வெழிலனைக் கோயிலுறை மாதவ
மாலவனை மண்ணையுண்ட மாயனைச் சென்றுதொழ
பாலைக் கறக்கும் பசுக்களும் கூடின;
சோலைக் குயில்கள் சுகமாகக் கூவின
காலை மலர்ந்ததே; காற்றில் பனங்குருத்
தோலைகளு ராய்ந்தே ஒலியெழுப்பக் கேட்டிலையோ?
சேலை யுடுத்தித் திலகமிட்டுப் பூச்சூடி
சீலத்து டன்நாமம் செப்பேலோ ரெம்பாவாய் !!
சியாமளா ராஜசேகர்

பாரதியே !

வெள்ளையனை வெளியேற்றத்
துடித்தாய் - தேச
விடுதலைக்கு வித்தாகத்
திகழ்ந்தாய் - மக்கள்
உள்ளமதில் அடிமைத்தளை
உடைத்தெறியும் பக்குவத்தை
உணர்ச்சிமிகு உரைகளினால்
வளர்த்தாய் - அவர்தம்
உயிர்க்காற்றாய் உணர்வுகளில்
நிறைந்தாய் !!
தாரணியில் பலமொழிகள்
கற்றாய் - நம்
தமிழ்மொழிபோல் இனிமையில்லை
என்றாய் - இந்தப்
பாரதிரப் புயலெனவே
பறங்கியரின் கொட்டத்தைப்
பாரதத்தில் நசுக்கிவிட
எழுந்தாய் - தமிழ்ப்
பாக்களிலே வீரத்தை
விதைத்தாய் !!
சாதிமத வேற்றுமைகள்
களைந்தாய் - பாட்டில்
சமத்துவத்தைக் காட்டியுளம்
கனிந்தாய்! - நல்ல
நீதிநெறி யில்நின்று
நெஞ்சத்தில் உரமூட்டி
நெருப்புமிழும் கவிதைகளால்
கனன்றாய் - மண்ணில்
நிலைகெட்ட மாந்தரெண்ணித்
தவித்தாய் !!
சிறுமைகளைக் கண்டுபொங்கிச்
சினந்தாய் - நற்
சிந்தனைகள் பாமழையாய்ப்
பொழிந்தாய் - நன்கு
முறுக்கிவிட்ட மீசையொடு
முண்டாசு கவியேநீ
மூச்செனவே சுதந்திரத்தை
நுகர்ந்தாய் - வெற்றி
முரசொலிக்க விடுதைலையை
உணர்ந்தாய் !!
புதுமைகளை வரவேற்கத்
துணிந்தாய் - பெரும்
புயலெனவே புரட்சிகளைப்
புரிந்தாய் - சாதி
மதம்பிடித்துத் திரிபவரின்
மடமைகளைக் களையெடுத்து
மகிமைமிகு பலகவிகள்
நெய்தாய் - நெஞ்சில்
மனிதநேயம் ஊற்றெடுக்கச்
செய்தாய் !!
பெண்ணடிமை கண்டுமனம்
கொதித்தாய் - பெண்டிர்ப்
பெருமையுற வேண்டுமென
நினைத்தாய் - நீ
விண்ணளவு குரல்கொடுத்து
விடுதலைக்குப் போராடி
விலங்குகளைத் தகர்த்தெறியச்
செய்தாய் - மாதர்
மேன்மைநிலை அடையவழி
வகுத்தாய் !!

கோல விழி மீனாள் ...!!!

சந்தக் கலிவிருத்தம்....!!!
********************************
( தானதன தானதன தானதன தானா )
கூட(ல்)நகர் மாதரசி கோலவிழி மீனாள்
ஆடலர சோடுநட மாடிவர லானாள்
நாடிவரு மேழையரை ஞானவடி வோடே
மாடுமனை யோடுநலம் வாழவருள் வாளே...!!!
சியாமளா ராஜசேகர்

அழகு சிரிக்குதே ...!!!

எண்ணம் முழுதும் அவளின் நினைவில்
இளமை பூக்குதே !
கண்ட வுடனே கவிதை யூற்று
கனிந்து பொங்குதே !
கண்கள் தொடுத்த கணையி லுள்ளம் 
களவு போனதே !
வண்ணக் கனவு வளைய வந்து
மனத்தைத் தாக்குதே !!
இதழ்கள் ஒட்டிப் பேச மறந்த
இதயம் துடிக்குதே !
மிதந்து செல்லும் மேக மாக
விண்ணில் அலையுதே !
வதனப் பொட்டு நிலவு போன்று
வடிவங் காட்டுதே !
உதயங் காணும் கிழக்கின் சிவப்பாய்
ஒளிர்ந்து மின்னுதே !!
அன்னம் தோற்கும் அவள்தம் நடையில்
அழகு சிரிக்குதே !
சின்ன விடையின் வளைவில் வழுக்கிச்
சேலை நழுவுதே !
பின்னிப் போட்ட கூந்தல் தன்னில்
பிச்சி மணக்குதே !
கன்னல் மொழியில் அழைக்கும் போது
காதி லினிக்குதே !!
வெள்ளிக் கொலுசின் சலங்கைச் சத்தம்
மீட்டும் இசையிலே
தெள்ளு தமிழில் கொஞ்சிக் கொஞ்சிச்
சிந்து பாடுவேன் !
புள்ளிக் கோலம் போட்டு நடுவில்
பூவை வைத்திடும்
கள்ளி யவளைக் கட்டி யணைத்துக்
காதல் பேசுவேன் !!
சியாமளா ராஜசேகர்

வீர சுதந்திரம்

கனல்தெறிக்கும் கவிதைகளால் எழுச்சி யூட்டிக்
***கருத்துகளால் உதிரத்தில் வீரம் பாய்ச்சி
மனத்தினிலே தமிழனென்ற இறுமாப் போடு 
***மக்கள்தம் உள்ளத்தைப் பண்ப டுத்தி
இனமதத்தைக் கடந்தன்பால் தமிழர் வாழ்வில்
***ஏற்றத்தை மலர்வித்த பாச ஏணி !
மனக்கண்ணில் சுதந்திரத்தை முன்பே கண்டு
***மகிழ்ச்சியுடன் பாநெய்த தேச ஞானி !!
வீரசுதந் திரம்வேண்டி வெகுண்டெ ழுந்து
***விடுதலைக்கு வித்திட்டுப் பாய்ந்த வேங்கை !
பாரதிரப் பாக்களினால் புரட்சி செய்து
***பக்குவமாய் மக்களுள மீர்த்த செம்மல் !
ஆரமுதாம் தமிழ்மொழியில் பற்று கொண்டே
***அழியாத கவிதைகளைத் தந்த கோமான் !
ஈரமனத் தோடுசமத் துவத்தைப் போற்றி
***இத்தரணி யில்செழிக்க வைத்த வல்லோன் !!
பெண்ணுரிமைக் காய்த்தொடர்ந்து குரல்கொடுத்துப்
***பெண்ணினத்தின் உயர்வுக்கு வழிவகுத்து
மண்ணுலகில் மங்கையர்தம் நிலையை மாற்றி
***மாண்போடு வாழவழி செய்த நல்லோன் !
புண்ணாகப் புரையோடிப் போய்க்கிடந்த
***பொலிவிழந்த சமூகத்தின் இருளைப் போக்க
விண்ணதிர முழக்கமிட்டு மீட்டுத் தந்த
***வீரசுதந் திரத்தையென்றும் பேணு வோமே ..!!!
( பாரதியார் இல்லத்தில் )

Sunday, December 9, 2018

கலைஞருக்குப் புகழாஞ்சலி ...!!!

அஞ்சுகத்தாய் ஈன்றெடுத்த ஆரூரின் வித்தே
***அண்ணாவின் இதயத்தில் இடம்பிடித்த முத்தே !
அஞ்சாத உறுதியுடன் பகுத்தறிவுச் சுடராய்
***ஐந்துமுறை அரசாண்ட தமிழகத்தின் சொத்தே !
வஞ்சகமாய் நஞ்சுமிழ்ந்த எதிரிக்கும் நயமாய் 
***மனங்கோணா எள்ளலுடன் பதிலளித்த கனிவே !
தஞ்சமென வந்தோரை அரவணைத்து மகிழும்
***தமிழ்த்தாயின் தவப்புதல்வ ! வரலாறாய் வாழி !!
நற்றிறமை யோடுநலத் திட்டங்கள் தீட்டி
***நலிந்தோரும் ஏற்றமுற வழிவகைகள் செய்தாய் !
பற்றுடனே கழகத்தைப் பக்குவமாய்ப் பேணிப்
***பார்வியக்கப் பகைவிரட்டிப் போராடி வென்றாய் !
முற்போக்குக் கருத்துகளைப் படைப்புகளில் பெய்து
***முத்தமிழின் முகவரியாய் முப்போதும் திகழ்ந்தாய் !
சொற்பொழிவு கேட்போரை மெய்மறக்கச் செய்யும்
***சூத்திரத்தை நன்குணர்ந்தே அருவியெனப் பொழிந்தாய் !!
அண்ணாவின் வழியொற்றிக் கொள்கைகளிற் சிறந்தே
***அயராத உழைப்பாலே நற்பணிகள் செய்தாய் !
பெண்களுக்குச் சொத்துரிமைத் தடையாவு மகற்றிப்
***பெருமதிப்பாய் அவர்நிலையும் சீர்பெறவே செய்தாய் !
கண்ணான செந்தமிழைச் செம்மொழியாய் உயர்த்திக்
***கடைக்கோடித் தமிழனையும் பூரிக்க வைத்தாய் !
மண்ணுலகம் உள்ளவரை மறக்காதிவ் வையம்
***மாண்புமிகு தலைமையெனப் பேர்பெறுவாய் திண்ணம் !!
விடைபெற்றுச் சென்றாலும் மறக்கவில்லை நெஞ்சம்
***மீண்டுமுன்றன் தமிழ்கேட்க செவியிரண்டும் கெஞ்சும் !
கடலலைகள் ஓசையில்நீ கண்விழிக்க வேண்டும்
***கரகரப்பு குரலாலே கவர்ந்திழுக்க வேண்டும் !
மடைதிறந்த வெள்ளமாய்நின் கவிபாய வேண்டும்
***மறுபடியும் அதைப்பருகிக் கசிந்துருக வேண்டும் !
உடன்பிறப்பே எனவிளித்து மடல்விரிய வேண்டும்
***உரைவீச்சின் ஈர்ப்பினிலே புவிமயங்க வேண்டும் !!
சியாமளா ராஜசேகர்

வெண்பாத்_துணர் ...!!!



வெண்பாத்_துணர்...!!!
************************
குறள் வெண்பா ...!!!
**********************
கண்ணன் குழலிசை காற்றில் கலந்துவர
வண்ணமாய்ப் பூத்தது வான்.
நேரிசைச் சிந்தியல் வெண்பா....!!!
****************************************************
கண்ணனைக் கண்டதும் கன்னியர் காதலில்
எண்ணிலாப் பாக்க ளிசைத்திட - நண்பகலில்
மண்ணி லிறங்கியது வான்.
நேரிசை வெண்பா....!!!
*************************
கண்ணன் வரவில் கலாபம் விரித்தழகாய்த்
தண்டலையில் நீலமயில் தானாடும் - மண்ணிலிந்தக்
கண்கவருங் காட்சியைக் கண்டு மகிழ்ந்திடும்
வண்ணச் சிரிப்பொடு வான்.
இன்னிசை வெண்பா ....!!!
****************************
கண்ணனவன் செய்திடுங் கள்ளத் தனமறிந்தும்
கண்டிக்க உள்ளமின்றிக் காத்திருக்குந் பெண்ணவளின்
வண்ணமலர்ப் பாதம் வணங்கித் திரும்பிட
மண்ணிற்கு வந்தது வான்.
பஃறொடை வெண்பா ....!!!
*****************************
கண்ணன் மலர்முகம் காணாமல் வாடிநிற்கும்
வெண்மதியும் வானத்து வீதியில்! - தண்ணளியாள்
சோகத்தைத் தீர்த்துச் சுகமளிக்க வாரானோ
மோகத்தில் தாரானோ முத்தமொன்று - மேகங்கள்
கொண்டலுடன் தாளமிட்டுக் கொஞ்சுகையி லின்புடன்
மண்ணில் பொழிந்தது வான்.
சியாமளா ராஜசேகர்

தமிழ் வாழ்த்து

ஓடுகின்ற உதிரத்தில்
கலந்தாய் - என்றன்
உணர்வுகளில் உயிர்த்தெழுந்து
நிறைந்தாய் - உன்னைப்
பாடுகின்ற போதுவிழி
பரவசத்தில் நீர்ச்சொரியப்
பார்த்துநீயும் பூரித்து
மகிழ்ந்தாய் - என்னைப்
பைந்தமிழே பரிவுடனே
அணைத்தாய் !!
கன்னலெனச் சுவையினிலுன்
இனிமை ! - உண்டு
கண்டவர்க்கோ என்றுமில்லை
தனிமை - உன்னை
அன்புடனே அண்டியவர்
அகங்குளிரச் செய்திடுவாய்
அழகேவுன் வடிவமென்றும்
இளமை - இந்த
அவனியிலே உனக்குமுண்டோ
முதுமை !!
வாயார வாழ்த்திடுவேன்
நித்தம் - உன்னை
வணங்குகையில் குளிர்ந்திடுமென்
சித்தம் - என்னைத்
தாயாகத் தாங்கிடும்நீ
தயவுடனே இவ்வரங்கில்
சந்தத்துடன் துள்ளிவரும்
சத்தம் - கேட்டுத்
தமிழன்னாய் ! தணிந்திடுமென்
பித்தம் !!
எளியவளால் சீர்பெறுமா
பாட்டு - என்
இனியவளே வந்துசுவை
கூட்டு - இன்று
களிப்புடனே கற்கண்டாய்க்
கவிபாடச் செய்திடுவாய்
கைகுவித்து வணங்கிடுவேன்
ஏற்று - உன்
கருணைவிழி மலர்ந்தென்னை
மீட்டு !!
சியாமளா ராஜசேகர்

ஏழ மவ பொலம்பல்...!!

காச்சமரம் சாஞ்சிருச்சி
காத்துகொன்னு போட்டுருச்சி !
கண்ணுபட்டுப் போயிருச்சோ
காலனது வேலதானோ ??
பூச்சூட்டிப் பாத்தபுள்ள
பூப்படஞ்ச செல்லமவ
பூமிக்குப் பாரமுன்னு
புயல்கொண்டு போயிருச்சோ ??
பேச்செழந்து நடபொணமா
பீதியில ஒறஞ்சிநிக்கோம் !
பேக்காத்துப் போட்டஆட்டம்
பேதலிக்க வச்சிருச்சே !!
சீச்சீன்னு யெம்பொழப்பு
சீரழிஞ்சி போயிருச்சே !
சீறிவந்த கசாப்புயலு
செறகொடிச்சிப் போட்டிருச்சே !!
காதடச்சிப் போயிருக்கு
கடும்பசியும் தாங்கலயே
கால்வவுறு நெரம்பலயே
கால்கையில வலுவுமில்ல !!
வேதனையச் சொன்னாத்தான்
வெந்தமனம் ஆறுமய்யா
வேரோட நாசமானா
வேறென்ன செய்வதய்யா ??
ஆதரவா அரசுமில்ல
அக்கறையும் காட்டவில்ல
ஆருசெஞ்ச பாவமிதோ
ஆண்டவனே நீயுமில்ல !!
ஏதுசெய்ய என்னசெய்ய
எடுத்துரைக்க நாதியில்ல
ஏழைமக்க வாக்கையில
என்னைக்கும் ஏத்தமில்ல !!
பாடுபட்ட கழனியெல்லாம்
பாழாக்கிப் போட்டுருச்சே
பாருசாமி எங்கோலம்
பைத்தியமா ஆக்கிருச்சே !!
வீடுவாசல் ஏதுமில்ல
வீதியெது தெரியவில்ல
வேறுபொழப் பேதுமில்ல
விதிப்படியே நடக்கட்டும்
காடுகொண்டு போறவரை
கைகாலு சுகமிருந்தா
காடுகர வெளையவச்சி
கரையேறி பொழச்சிடுவோம்
நாடிவந்து பலவொதவி
நல்லமன சோடுசெஞ்சி
நனையவச்ச சாமிகளே
நன்றிசொல்ல வார்த்தையில்லே !!
சியாமளா ராஜசேகர்

வண்ண விருத்தம் ....!!



வண்ண விருத்தம் !!!
**************************
மழைச்சார லோடு முகிற்கோலம் போட 
***மலைக்கோயில் மீது மயிலோடே 
எழிற்கூடு மாறு தனித்தாடு வேல
***இளைக்காம லோடி வரவேணும் !
அழைக்காத போதும் விழிப்போடு பேணு
***மருட்தேவ னேவு னிணையோடே 
செழிப்பான சோலை மலைக்கார நீயும் 
***சிறப்போடு வாழ அருள்வாயே !
சியாமளா ராஜசேகர்

வஞ்சியுன் சொல்லில் மலர்ந்து

செஞ்சாலி சாய்ந்தாடும் தென்றல் தழுவலில்
கஞ்சமது பூக்கும் கதிர்வரவில் - நெஞ்செலாம்
பஞ்சுப் பொதியாய்ப் பறந்து மிதந்திடும்
வஞ்சியுன் சொல்லில் மலர்ந்து.
சியாமளா ராஜசேகர்

தென்றல் ...!!!

நதிக்கரை யோரம் நளினமாய்க் கொஞ்சி நடைபழகும்
புதுமலர்ச் சோலையில் பூக்கள் மணத்தில் புரண்டுவரும் 
மதியொளிர் வேளை வருடி யிதமாய் மதிமயக்கும்
அதியழ காக அருவமாய் வந்தே அணைத்திடுமே !!
( கட்டளைக் கலித்துறை )
சியாமளா ராஜசேகர்

எழுசீர்ச் சந்த விருத்தம் ...!!!

எழுசீர்ச் சந்த விருத்தம் ..!!!
***************************************
மந்தி யாட மயிலு மாட
மானு மாடி மகிழுதே !
வந்த யானை யோடு காளை
மாடு கூடி யாடுதே !
அந்தி வானை மஞ்சு மூடி
அழகு கவிதை யாகுதே !
இந்த நேர மின்ப மாக
என்ற னுக்கு மானதே !!
சியாமளா ராஜசேகர்

கால் முளைத்த கனவுகள் !!


கால்முளைத்த கனவுகள் !! ( எழுசீர் விருத்தம் )
*************************************
வாடிய உழவர் மாடமா ளிகையில் 
     மகிழ்வுடன் உலவிடக் கண்டேன் !
பாடிய படியே தேக்கினில் செய்த 
     படிகளில் ஏறிட வியந்தேன் !
கூடிய நண்பர் குழுவுடன் சேர்ந்து 
     குறுங்கவி சமைத்திடச் சுவைத்தேன் !
ஈடிலா வின்பம் நுகர்ந்திடும் அவர்தம் 
       இயல்பினைக் கண்டுளம் நனைந்தேன் !

சுற்றிலும் படர்ந்த வயல்வெளி யெங்கும்
     சோர்விலாப் புன்னகை கண்டேன் !
நற்றமிழ் செழிப்பாய் உழுபவர் நாவில் 
     நனிநடம் புரிந்திடக் கண்டேன் !
புற்களின் மேலே பனித்துளி யாவும் 
     பொன்னென மின்னிடக் கண்டேன் !
நெற்கதி ராடச் சுமந்திடும் தாயாய் 
     நிலமகள் மலர்ந்திடக் கண்டேன் !!

தேங்கிய நீரில் மீன்களைக் கொத்தித் 
      தின்றிட நாரைகள் சூழ
ஓங்கிய தென்னை மரங்களின் நிழலில் 
     உழத்தியர் அம்மானை யாடப் 
பாங்கிய ரோடு கும்மிய டித்துப் 
     பழங்கதை களிப்புடன் பேசப்
பூங்குயில் பாட்டில் புத்துணர் வோடு
     பொறுமையாய்ப் பணிதொடர்ந் தனரே !!

பொன்னெழில் சிந்தும் அந்தியில் பரிதி 
     போகவே  வுளமின்றிச் சிவக்கத்
தென்றலி லாடும் நாற்றுகள் திரும்பிச் 
     செல்வோர்க்கு வாழ்த்துகள் கூற 
மென்னகை மாறா முகத்தொடே யவர்கள்  
     விடைபெறும் அழகினைக் கண்டு 
புன்சிரிப் போடு நெல்ஜெய ராமன் 
     புவனத்தி லுயிர்த்திடச் சிலிர்த்தேன் !!

எட்டிய தொலைவில் கால்முளைத் தாற்போல் 
     எழுந்தெதோ செல்வதை யுணர்ந்தேன் !
கட்டிலில் புரள நித்திரை கலைந்து 
     கண்டது கனவென அறிந்தேன் ! 
பட்டினிச் சாவு கண்முனே படமாய்ப் 
     பரிகசித் திடமனம் கசிந்தேன் !
மட்டிலா இன்பம் வழங்கிட இறையை
      வணங்கினேன் கைகளைக்  குவித்தே!! 

சியாமளா ராஜசேகர் 
      

தனிமையில் வருவாளோ ...?? ( எண்சீர் வண்ண விருத்தம் )


எண்சீர் வண்ண விருத்தம்... !!!
*****************************************
சந்தக் குழிப்பு :
********************
தனதன தத்தத் தனதன தத்தத்
தனதன தத்தத் தனதன தனதானா
பொலிவொடு பட்டுப் புடவையு டுத்திப் 
     பொடிநடை யிட்டுத் தனிமையில் வருவாளோ ?
சிலையென வெட்கப் படுமிரு சுட்டிச் 
     சிறுவிழி முத்துப் பரலென வொளிவீசும் !
தலைவியை மெச்சிக் கனிவொடு தொட்டுத் 
     தழுவிட யிற்றைக் கினியவள் விடுவாளோ ?
குலமகள் மத்தத் துடனெனை யொட்டிக் 
     குலவிட முத்தச் சுகமது புரிவேனே !!

சியாமளா ராஜசேகர்