Thursday, January 23, 2020

சோலைக் கவியரங்கம் -09 (15:01:2020)

சோலைக் கவியரங்கம் : 09 

கவிஞர் அழைப்பு
**********************
அந்தமிழ் மீது கொண்ட 
       அளவிலாக் காத லாலே 
பைந்தமிழ்ச் சோலை நாடிப் 
      பல்வகைப் பாக்கள் கற்ற
செந்தமிழ்க் கவியே இங்குச்
      செம்மையாய் ஏரைப் போற்றிச்
சந்தன மாய்ம ணக்குந்
       தண்டமிழ்க் கவிதை தாராய்! 


அழகரே வருக! அருங்கவி தருக!!
      

தமிழ்தாய் வாழ்த்து

ஆதியில் மண்ணில் வந்த
     அருந்தமிழ் மொழியே உன்னை
ஓதினோர் தாழ்ந்த தில்லை
     உலகையே வென்றார் தானே
சோதியாய் என்றும் நாட்டில்
     சுடர்விடும் தமிழே உன்னை
வேதமாய் நெஞ்சில் வைத்தே
     விழியெனப் போற்று வேனே!

தலைப்பு:ஏருக்குச் சீர்செய்வோம்

ஏருக்குச் சீர்செய்வோம் வாரீர் என்றே
     என்தலைவர் அழைக்கின்றார்! கவிதை கொண்டு
போருக்கும் துணிகின்ற நெஞ்சம் தந்த
பைந்தமிழை வணங்குகின்றேன்! நமது சோலை
யாருக்கும் சளைத்ததல்ல! கவிதை பூக்கும்
     எழிலார்ந்த சோலைக்குள் வந்தோர் எல்லாம்
கார்போலக் கவிதைமழை பொழிவர்! அந்தக்
     காட்சிக்குச் சாட்சியிந்த அரங்கம் தானே!

விளைந்தபொருள் வீடுவந்து சேரும் காலம்
     வீடெங்கும் மகிழ்ச்சியிலே திளைக்கும் கோலம்
களைத்தமனம் களிப்புடனே துள்ளும்! இந்தக்
     காட்சியினைத் தருவதுதை மாதம் தானே!
இளைத்திருக்கும் வயிற்றுக்குச் சோறு போடும்
     எம்முழவர் எதிர்நிற்குந் தெய்வம்! அன்னார்
வளையாது வாழ்வாங்கு வாழ வேண்டி
     வணங்கிடுவோம் வான்வழங்கும் மாரித் தாயை!

ஏதேதோ தொழிலின்று நாட்டில் உண்டு
     இருந்தாலும் அதற்கெனவோர் காலம் உண்டு
தீதான பலசெயல்கள் நடந்த போதும்
     திருந்தாத மக்களுக்குப் பாடம் சொல்லும்
மூதாதை யர்வகுத்த உழவு தானே
     முன்னின்று வழிகாட்டும் வாழ்க்கை யாகும்
வேதங்கள் பொய்த்தாலும் விளைச்சல் காணும்
     விவசாயி நமையென்றும் ஏய்த்த தில்லை!

வயிற்றுக்கு உணவளிக்கும் அந்தத் தெய்வம்
     வாழ்க்கையது சிறப்பதற்கு வகையைச் செய்வோம்
பயிர்வாழப் பாடுபடும் மள்ளர் வாழ்வு
     பலகாலம் மேன்மையுடன் சிறப்புப் பெற்றே
உயர்ந்தோங்க வேண்டுமெனச் சபதம் செய்வோம்
     உலகுள்ளோர் நலத்துடனே அன்றும் இன்றும்
உயிர்வாழச் செய்துவரும் உழவர் தம்மை
     ஊரோடு கொண்டாடி மகிழ்வோம் நாமே!


இரா.அழகர்சாமி.

வாழ்த்து !
*************
சுழலுமிவ் வுலகில்  ஏர்தான்
      சோறிடு மென்று ணர்ந்தே
உழவரைத் தெய்வ மாக 
      உயர்த்தியே கவிதை செய்தீர்!
மழைமுகில் வானில் கண்ட 
      மயிலென மனமு மாட 
அழகரே நன்றி சொல்லி
      அன்புடன் வாழ்த்து வேனே!!


2.ஏருக்குச் சீர் செய்வோம்.
பைந்தமிழ்ச்செம்மல் வெங்கடேசன்.

கவிஞர் அழைப்பு
***********************
பட்டங்கள் பற்பல பெற்றவராம்  - இவர் 
      பைந்தமிழ்ச் சோலையில்  கற்றவராம்!
நுட்பத்து டன்கவி நெய்பவராம் - நல்ல 
       நூல்களைத் தேடிப் படிப்வராம் !

நாடியே நன்மைகள் செய்பவராம் - இவர் 
      நற்றமிழ்த் தாயைத் துதிப்பவராம் !
கூடிய அன்பர்கள் கூட்டத்திலே - கவிக்
      கொட்டிடவே இங்குக் கூப்பிடுவேன் !!

வியன்கவி தரவே வெங்கடேசன் வருக!!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * 
தமிழ் வாழ்த்து
****************
எங்கள் தமிழே இனியாளே 
     என்றும் எங்கள் வழியாளே!
சங்கம் கண்ட மூத்தோளே
    தரணி வந்த முதலாளே!
தங்க மென்ன வெள்ளியென்ன 
தமிழுன் ஒலிக்கு நிகராமோ 
      இங்கிச் சபையில் உனைவணங்கி 
      இனிதே கவிதை பாடுகிறேன் !!

தலைமை , அவை வாழ்த்து
****************************
தேனா யினிக்கும் பாவெல்லாம் 
     தெளிவா யாக்கும் சியாமளாம்மா !
ஆனா ரரங்கின் தலைமையென 
    அன்னார் அவர்க்கென் தலைவணக்கம் !
தேனைச் சுவைக்கும் சிறுவண்டாய்த்
      திரண்ட புலவர் அவைமுன்னால் 
யானும் கவிதை வழங்கவந்தேன் 
      அனைவ ருக்கும் என்வணக்கம் !!
செல்வத் தின்பின் செல்வோரும்
சிறிதே கொஞ்சம் சோறிலையேல்
பல்வா றாகத் துயருறுவார்
பணத்தால் ஏதும் பயனின்றி
அல்லும் பகலும் உழவோரால்
ஆழ உழப்பட் டெந்நிலமும்
நெல்வ ளத்தைப் பெறுவதற்கு
நீண்ட ஏரின் துணைவேண்டும்

வேண்டும் வரைக்கும் உதவிபெற்று
விலகி நிற்கும் உலகோரே
யாண்டும் உந்தம் பசிநீக்கும்
அழகுச் செந்நெல் வளர்வதற்கு
நீண்ட ஏரே மண்ணோடி
நிலத்தை வளமாய் ஆக்குவதால்
வேண்டு மட்டும் சீர்செய்வீர்
விந்தை செய்யும் ஏரதனை!

ஏரென் னுஞ்சொல் தமிழினிலே
இரண்டு பொருளில் வருமன்றோ 
நீரைப் பாய்ச்சும் முன்னாலே
நிலத்தை உழுமோர் கருவியொன்று
சீராய்ச் சிறப்பாய் உளவொன்றைத்
தெளிவாய்ப் புகழும் சொல்லொன்றாம்
ஏரின் சீரை இதனின்றும்
இனிதாய் உரைக்க ஏலாதே

உரைப்ப தற்கும் ஏலாதே
உழவன் கைக்கொள் ஏர்ப்பெருமை
தரையில் உள்ளோர் பசிதன்னைத்
தணிக்கும் ஏரின் பெருமையதை
உரத்துச் சொல்லிக் கவிசெய்ய
உவந்தே என்னை இங்கழைத்த
தரத்தில் பெரிய சோலையர்க்குத்
தந்தேன் நன்றி பலபலவே!

வாழ்த்து
***********
கவிதை மூலம் ஏருக்குக்
கணக்காய்க் கருத்தாய்ச் சீர்செய்தீர்!
செவிக்கு விருந்தாய்க் குரல்பதிவால்
சிந்தை குளிர வைத்துவிட்டீர்!
உவந்தே ஏரின் பெருமைதனை
உரத்துச் சொல்லிச் சிறப்பித்தீர்!
அவையி லுமக்கு நன்றியுடன்
அன்பாய் வாழ்த்து சொல்வேனே!

3.ஏருக்குச் சீர்செய்வோம்.   
நெடுவை இரவீந்திரன்.

கவிஞர் அழைப்பு
***********************



காருண்ட மேகத்தின்    தயவாலே

       காடெங்கு மேபட்டின்    நிறைவோடே
ஆரின்று பாடிக்கொஞ்    சிடுவாரோ 
        ஆனந்த மாகட்டுந்    தமிழாலே 
ஏரென்று மார்தட்டுந்     தகை யோனே 
       ஏடெங்கு மேசொட்டுஞ் சுவையாலே
நீரின்று சோலைப்பொன்    னொளிமேவ 
      நேர்வந்து வாசித்திங்    கருள்வாயே!

தமிழ்வாழ்த்து. 

(அறுசீர்ச் சந்த விருத்தம்)
தானந்த - 5 மாத்திரை
தானத்தந் - 6மாத்திரை
தனதான- 5 மாத்திரை

தமிழ்வாழ்த்து.

நேசங்கொள் வானத்தின்  ..... கதிர்போலே
    நீளங்கொள் ஆழத்தின் .....மொழியாளே
தேசங்கொள் யாவர்க்கும் .... நலமேவ
       தேகங்கொள் ஊணுக்குந் ...... தொழுவானே
பாசங்கொள் வாழ்வைக்கொண் ..... டதனாலே
       பாருங்கொள் பாவிற்தண்....... கவிபாட
ஈசன்கொள் வானெட்டுந் .... தமிழாளே
       ஏறென்றன்  நாவிற்குள் ..... இசையோடே



      
குருவணக்கம்.  
தூசங்கொள் யானைக்கண் ...... குருவோனே
        தூரங்கொள் நூலுக்குந் தனியாளாய்
மாசங்கு மூதிப்பண் ணிசைபாட
      மாசின்றிப் பாத்தந்தும் பதிவீரே
மாசங்கு வீழக்கண் ....... ணிமைமாற
       மார்பொங்கி வேலைக்கொண் ....... டெறிவோனே
பாசங்கொள் சீர்மிக்குந் ...... தமிழாலே
     பாச்சிந்தி நான்வந்தும் பணிவேனே

அவையடக்கம். 

 வாருங்கள் மேடைக்கும் ....... புலவோரே
        மாமண்ணில் ஊருக்கும் தருவானைப்
பாரெங்கும் நேசிக்குந் ...... தமிழாலே
       பாவண்ணம் வாசித்தும் ....... தருவேனே
பாருங்கள்  வானெட்டும் ...... மரபாலே
        பாவெங்கும் தேன்சொட்டும் ...... செவிமீதே
தாருங்கள் நாசிக்கும் ....... கவிமீது
       தாளங்கள் நீரிட்டும் ........ மகிழ்வீரே

ஏருக்கும் சீர் செய்வோம்.  
(எழுசீர்ச் சந்த விருத்தம்)
தனதான - 5 மாத்திரை
தந்த - 3 மாத்திரை. தனதானா.  - 6 மாத்திரை.


புவிமீது வந்து புகழோடு கந்து பொலிவாகி நின்ற....... உழவோனே
       புதிதாய்வி ளைந்த மணியோடு வந்து
           புதுப்பானை பொங்க ....... லிடுவாயே
கவினாக உண்ண உணவாக மண்ணில் 
       கலியாக  வென்று ..... மருள்வாயே           
   கடலோடு ழன்று கயல்யாவும் கொண்டு
          கலமேறி வந்து ........ மிடுவாயே
புவியோரு முன்றன் உடையால ணிந்து
    புறமானம் வென்று ....... வருவாரே
       புலவோரு முன்னை மானதார வந்து
            புகழ்மாலை தந்து ...... மிசைபாட

இவையாவு முன்றன் வினையால்வி ளைந்து
        மிடுவாரி டைஞ்ச ....... லுருவாக
            இடராக வந்து கரைமேலு றைந்த 
               கயல்போல நெஞ்சு ........ மிறுகாதோ


திசைமாறு மந்த ஒளியோனு முந்தி 
         மறுவாற கன்று ......... வருநாளே
     திருநாளு மென்று தெளிவாய றிந்து
        செறிவோடு சொன்ன ......... உழவோனே
பசுமாடு தந்த மடிபாலும் பொங்கப்
     பழமோடு மஞ்சள் ....... கணுவோடு
          பரிமாறி யந்த மணிமான னுண்ண
             இலைவாழை கொண்டு ....... தருவாயே
நெசவாளி தந்த புதுவாடை மின்ன
       நெய்வானை யெண்ணி ....... நெகிழ்வாயே
           நிழலாடு மண்ணி லிருதாளி றைஞ்சி
               நெறியோடு மின்று ........ விழுவாயே
பசையோடு தம்த முறவோடு மின்னும்
      பலரோடு மொன்றி ...... மகிழ்வீரே!
           பழமேவ யிஞ்சி அருகோடு வந்து
               பலகோலம் முன்றி....... லிடுவாயே (2)

எறிவாயு கொண்டு நிலமாதை யழுந்தி
  இடமாற நஞ்சை விலைபேச
   இடராலும் நெஞ்சு வலியால்மெ லிந்து முயிர்வீழ நினைவானே

நெறிமீறு மிந்த அரசாரும் அந்த 
  நெடிதான துன்பம் அயல்மாற
    நிலமாலை வந்த வழிமாற நின்று
       நெடுவாறு கண்டு வரையாதோ

அறியாரின் வஞ்ச செயலாலெ ரிந்து
      மவன்வாழ்வில் நொந்து தொலைவானே
        அரசாளு மந்த கொடியோனும் நின்று
            அரசாணை ஒன்று மெழுதாதே

வறியாரின் நெஞ்சம் பலமாகி யெங்கும் வளமாகி யென்றும் நடமாட
       வருமான மிஞ்சி மிசைவாழ்வு பொங்க மனதார ஒன்ற நினைவோமே

நன்றி. 
வசைபாடு மென்றன் மனையாளும் வந்து 
       வரம்போடு சண்டை ....... யிடுவாளை
            வரமாக எண்ணி மனதார யென்றும்
                 வளமேவ நன்றி ....... யுணர்வேனே
இசைபாடி இன்று முகநூலி லுங்க 
      ளிடமேறி நன்றி ....... பறைவேனே
          இதையாரும் வந்த இடர்போல எண்ணி 
             முகமாறி யெங்கு ....... மலையாதீர்
வசைகூறும் என்றன் உறவாறும் வந்து
      மனமாறி இந்த ....... கவிகேள
         வலைமீது ழன்று செவிசாயும் உங்கள் 
              மனமீது நன்றி ......யுதிர்வேனே
அசையாமல் நின்று கவிகேளு மிந்த 
        அவைமீது நன்றி ....... கொளுவேனே
           அவையாளு மிந்த தலைமீது கவிபாடி
            நன்றி ...... பதிவேனே!

வாழ்த்து
***********
அடடாவென வியக்கும்படி அழகாய்க்கவி நெய்தாய்
வடிவாயதில் பலபாக்களில் மழைபோல்வணம் பெய்தாய் 
குடியானவன் மனம்பூத்திடக் கொடையாயிதைச் செய்தாய் 
படிப்போருளங் கவர்ந்தாயுனைப் பலர்வாழ்த்திடு வாரே !!

       நெடுவையாருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி !

4.ஏருக்குச் சீர் செய்வோம்
++++++++++++++++++++++
கவிஞர் அழைப்பு
**********************

நெஞ்சி லன்புடன் சந்தக் கவிமணி 

       நின்னை அழைப்பதில் மகிழ்ந்தேன்!

கொஞ்சுங் குயிலெனக்  கூவு மின்சுவை
       குரலைக் கேட்டிட விழைந்தேன்!
வஞ்சி யுனைக்கவி பாட வரங்கினில்
     வணங்கி வாழ்த்துடன் அழைப்பேன் !
விஞ்சு மழகுடன் ஏரைப் போற்றிட
       விரைந்து நீவரு வாயே!!

அன்னைத் தமிழே கவிவடிக்க
அகத்தால் நின்றன் தாள்போற்றி
இன்னல் நீங்கி உழவரெலாம்
ஏற்றம் பெருகி வாழவென்று
மன்றின் வண்ணத் தலைவருக்கு
மரபின் மகிழ்வாய்க் கரங்கூப்பிப்
பண்பில் சிறந்த அவையோரைப்
பணிவாய் வணங்கிப் பாடவந்தேன்

உழுதொழில் செய்வோர் வாழ்வில்
உயர்வினைக் காண வைப்போம்
உழவியல் வசதி கிட்ட
உறுதுணை யாக நிற்போம்
வழிதனை வகுத்து நல்க
வயலது விளைச்சல் காணும்
தொழிலினில் உள்ள சிக்கல்
சுமைகளை நீக்கு வோமே

கடனதைப் பெற்று வட்டிக்
கடலினுள் மூழ்கி வீழும்
இடரினைக் களைந்து வாழ்வில்
இன்புறச் செய்ய வேண்டும்
விடுமுறை யின்றி நாளும்
வெயிலினில் உழைக்கும் வர்க்கம்
கடும்பசி யின்றி வாழக்
காசினி உதவ வேண்டும்

மழையினால் பயிர்கள் மூழ்கி
மண்ணிலே சாய்ந்து விட்டால்
உழைத்தவன் அதனை எண்ணி
உயிருடல் வாடி நிற்க
அழைத்தவன் வாட்டம் போக்க
அகிலமே திரண்டு வந்தே
உழுதொழில் சிறக்கக் காப்போ
டூக்கமும் கொடுத்து நிற்போம்

குறைகளைக் கேட்டு நாமே
குவலயம் சிறக்க வைப்போம்
வறட்சியில் ஆற்றின் நீரும்
வயலினில் பாய வைப்போம்
திறமையை வளர்க்க நாளும்
தெளிவுறப் பயிற்சி நல்கி
நிறைவினைக் கொடுக்க வைத்தால்
நெஞ்சமும் மகிழு மன்றோ

பைந்தமிழ்ச் செம்மல் நிர்மலா சிவராசசிங்கம்

நன்றி
*********


உழுபவர் உயர்வை யெட்ட

      உற்றநற் கருத்தைச் சொன்னீர்!

சுழலுமிவ் வுலகி லன்னார்
      துயர்களைக் களையெ டுத்துப்
பழுதிலா வாழ்வு வாழப்
     பயனுள வழியைக் காட்டி
அழகிய கவிதை தந்தீர்
     அன்புடன் வாழ்த்து வேனே!

5. மதுரா

கவிஞர் அழைப்பு
**********************


வாசிப்பை நேசிக்கும் பண்பு டையாள்

       மரபினிலே பாட்டியற்றும் மாண்பு டையாள் !

காசினியில் பைந்தமிழைக் கண்ணாய்ப் போற்றிக்
      கவிமழையில் குளிர்விக்கும் சிறப்பு டையாள்!
ஆசையுடன் ஏருக்குப் பெருமை சேர்க்க
      அன்னவளை எண்சீரில் விருத்தம் பாடி
 மாசில்லாத் தேன்மொழியே வருக வென்று
        மனம்நிறைந்த வாழ்த்துடனே அழைத்தேன் நானே!


தமிழ் வாழ்த்து

உயிரில் கலந்தென் உணர்வில் நிறைந்தே
உயர்வை யளித்திடும் உன்னதத் தாயே
தொழுவே னுனைநான் துணையா யிருந்து
பழுதிலாப் பாடலைத் தா.

தலைமை வாழ்த்து

நாமணக்கும் நற்றமிழை நாளெல்லாம் பாடுகின்ற
பாமலருஞ் சோலை பணிந்தே வணங்குகிறேன்
தேமதுரச் சொல்லரசி தீந்தமிழின் பாவரசி
மாமன்றில் ஏற்பாய் மகிழ்ந்து.

ஏருக்குச்_சீர்_செய்வோம்

சேற்றினிலே நெற்கதிரும் செழிப்பாக நின்று
சீரோடு மகிழ்வோடும் சிறந்ததொரு காலம்
நாற்றுநடக் களையெடுக்க நாளெல்லாம் போக
நடுவீட்டில் பத்தாயம் நிரம்புமொரு காலம்
காற்றடிக்கும் நேரத்தில் கதிரடித்து வேலை
கணக்காக வாழ்ந்திங்குக் களித்ததொரு காலம்
மாற்றாக வந்ததுவே மழையற்ற மேகம்
மண்ணெல்லாம் தரிசாகி மனம்வெதும்புங் கோலம்.

ஆனைகட்டிப் போரடித்த அழகான நாளும்
அயல்நாட்டு மோகத்தால் அடிபட்டுப் போகக்
கானலதை நம்பிநாமும் கழனிகளை விற்றுக்
கனவுலகில் வாழ்கின்றோம் கடுமுழைப்பை விட்டு.
வானமதுப் பொய்த்துநிற்க வறண்டுவிட்ட பூமி
வயல்வெளிகள் குடியிருப்பாய் வளமிழந்த காட்சி
கானழித்துப் பெருங்கேட்டைக் கவலையின்றிச் செய்தோம்
கண்ணியம முழவுதனைக் களையிழக்க வைத்தோம்

ஈடில்லா உழவினைநா மெப்படித்தான் மறந்தோம்
இவ்வுலகில் உணவின்றி எங்ஙனம்நாம் வாழ்வோம்
வாடிநிற்கு முழவர்வாழ் வைமீட்க வேண்டும்
வாய்ப்புகளை உருவாக்கி வளமாக்க வேண்டும்
பீடுடைய விவசாயம் பேணியதைக் காப்போம்
பெய்கின்ற பெருமழையைச் சேமித்து வைப்போம்
நாடெங்கும் நதியிணைத்து நல்லுலகம் காண்போம்
நஞ்சைபுஞ்சை வளங்கொழிக்க நாளெல்லாம் நினைப்போம்.


ஊரெல்லாம் செழிப்பாக்க ஊருணியை அமைப்போம்.
உழவருக்கு முயர்வளிக்க உறுதுணையா யிருப்போம்.
பாரெல்லாம் சிறந்தோங்க பயிர்த்தொழிலை வளர்ப்போம்
பங்கிட்டுப் பகிர்ந்துண்ணும் பண்பதனை யேற்போம்.
நீருக்குக் கையேந்தும் நிலைமைதனைத் தவிர்த்து
நிறைவான திட்டத்தால் நீரதனைச் சேர்ப்போம்.
ஏருக்குச் சீர்செய்து எழுச்சிதனை யடைவோம்
என்றென்றும் தமிழோடு மியற்கையதைக் காப்போம்.

வாழ்த்து
***********


ஈடில்லாப் பயிர்த்தொழிலை மறந்து விட்டால் 

       இனியுணவுக் கென்செயவென் றுள்ளம் நொந்தாய் !

வாடிநிற்கும் ஏருழவர் வாழ்வை மீட்டு 
      வளமாக்க நல்வழிகள் சொல்லித் தந்தாய்!
காடுகரை விளையவில்லை என்றால் பாரில்
      காசிருந்தும் பயனில்லை என்று ணர்ந்து
பாடியநின் கவிகேட்டால்  பெருகு மூக்கம் 
     பாவையுனை வாழ்த்திடவே சோலை பூக்கும் !!

#மதுரா
)

6. ஏருக்குச் சீர் செய்வோம்.
     ----------------------------------------------
கவிஞர் அழைப்பு
*********************
பாலையிலே வாழ்ந்தாலும் சோலையினைச் சுற்றிவந்து
      பாட்டியற்றக் கற்பவரே வாங்க! வாங்க!
மாலவனின் பேரருளால் மாலையிட்டுச் சீர்செய்ய 
      மன்றமிதில் நல்லகவி தாங்க! தாங்க!!

     
வெண்கலிப்பாக்கள்

தமிழ் வாழ்த்து..

செந்தமிழே வந்தனம் சந்தமிகும் மந்திரம்
சந்தனமே நிந்தையில் சொந்தமென்றா னந்தம்
சிந்தையிலே விந்தைகள் சிந்தியதோ செந்தேன் 
எந்தனிலே வந்ததின்ப மே.

அவை வணக்கம்..
வாய்மையும் விதைத்தோர் வியப்பினி லாழ்வோர்
வாய்ப்பினைப் படைத்தோர் வயதினில் மூத்தோர்
வியர்வையில் நனைந்தோர் இயக்கத்தில் வாழ்வோர்
வையகத்தின் வளர்பிறை யாம்.!

ஏருக்குச் சீர் செய்வோம்.
-----------------------------------------

துளியொன்றை மணியாக்கித் தயவென்ற வரமாகும்
தளிரொன்றை வளமாக்கும் தரணிக்கும் துணையாகிப்
பளுதாங்கிப் பரிவாகப் பயிராக்கும் உழவனே
உளமார்ந்து உணவுந்து வான்

எளிதொன்றைப் புரிவோரும் வழிதந்த அறிவாளி
உளிசெய்து புதிதாக்கும் எழில்மிக்க படைப்பாளி
பளிங்குன்றிப் பசியாகும் பொழுதிற்கும் உழவனே
அளவில்லா உணவுந்து வான்

செழிப்பாக்கும் தொழிலொன்றே சிரங்கொணட குணமாகச்
செழுமைக்கும் தொண்டாற்றிச் சிலிர்ப்பாக்கு மடிவேராய்
முழித்துச்செல் உலகோரின் மகிழ்வுக்கும் உழவனே
உழவாக்கி உணவாக்கும் வேர். 

விழியெங்கும் கனவாக்கி விதையொன்றை உயிராக்க
வழியெங்கு முயர்வாக்கி வரப்பிற்கு முயர்வெய்திப்
பழித்துப்பொய் களைகிள்ளிப் பயிராக்கும் உழவனே
உழவெய்தி உலகாக்கும் வேர்.

தருமேகம் மழையென்றால் தாங்கியதைப் பயிராக்கத்
திருவாக்கித் தருமென்றால் தழுவியதை உயிராக்க
விரும்புகின்ற வரந்தந்தே விளைவாக்கும் உழவனே
விருதென்று விதையாக்கு வோம்

உருளுகின்ற உலகத்தில் உழுதொண்டு நிலமாக
உருக்கொண்ட உயர்வுக்குத் தொழுதுண்டு நலமாகப்
பெருகின்ற செல்வத்தில் பழுதின்றி உழவனே
பெருமைக்குள் புகழாக்கு வோம்! 

நாடுகின்ற குலதெய்வம் நலமீய வருமாப்போல்
நாடெங்கும் சீராக்கும் உழவென்றும் உயர்வாக
ஏடெங்கும் சிறப்பாக்கும் தமிழேரால் உழவனின்
ஏருக்குச் சீர்செய்கு  வோம்.
     ------------------------
பி.எம். நாகராஜன்.

வாழ்த்துப்பா !!
*******************
உழுதொழிலின் சிறப்புகளை உளமகிழ்வோ(டு) உயர்வாக 
அழகியவெண் கலிப்பாவில் அற்புதமாய்த் தீட்டியநின்
கவிமலரைச் செவிமடுத்துக் களிப்புடனே வாழ்த்துகளை 
நவின்றிடுவேன் நன்றியுடன் நான் .

7. 

ஏருக்குச் சீர் செய்வோம்

சதீஷ் காளிதாஸ்

கவிஞர் அழைப்பு
**********************


பந்தநல் லூரில் பிறந்தவனே -  நம்   

   பைந்தமிழ் சோலையின் மாணவனே !

அந்தமிழ்ப் பற்றுடன் பாக்களி யற்றிடும் 
    அற்புத ஆற்றல் மிகுந்தவனே!

செம்மையாய்ப் பாட்டொன்று நின்குரலில் - பாட 
   தீங்கவியோ டிங்கே வந்திடுவாய் !
இம்மன்றில் சோலையின் செல்லப்பிள்ளை - நீயும் 
      ஏருக்குச் சீரினைச் செய்திடுவாய் !!
தமிழ் வாழ்த்து

அன்னைத் தமிழே அழகு மொழியுடை
உன்னை வணங்கி உயர்ந்திட - இன்ப 
உழவை இனிதாய் உயர்த்திட வந்தேன்
அழகாய் வரியுள் அருள்.

தலைமை வாழ்த்து

ஏற்றமிகு சோலையிலே ஏற்றிய பாவலரே
சாற்றுகிறேன் பாமாலை சங்கத் தலைமைமுன்னே
பாட்டறியாப் பாமரனின் பாவினையும் கேட்டருள்வீர்
நாட்டுகிறேன் ஆற்றல் நடவு.

தலைப்பு - ஏருக்குச் சீர் செய்வோம்

காதலனைப் பிரிந்ததொரு காதலியாய் நீரும்
   காடுமலை போகாது காய்ந்திருக்கு பாரும்
ஆதவனும் அன்றாடம் அகன்றகதிர் வீச
    ஆளுமில்லை உழவினையே ஆழமாகப் பேச
நாதமுடைக் கானமழை நாற்றுநட்டுப் பாட
     நாளுமின்றி ஓடிடுதே நல்லிசையும் கூட
மாதரினைப் போலிங்கு மண்ணினமும் தாயே
      மாண்புடனே போற்றிடவே மகுடமுடன் வாராய்! 


நகரவாழ்வு நன்றெனவே நால்வரவர் கூற
    நாமுமிற்றைக் கிழந்தோமே நல்வாழ்வை ஊரில்
அகரத்தைக் கற்றவனும் அரிசியையே உண்ண
    அதைப்பயிலப் பாராமல் அலைவதுவும் ஏனோ?
இகழ்ச்சியினைக் காணாமல் இன்பமாக ஈயும்
     இறைவனவன் உழவனென இனிநீயும் கூறு
பகல்முழுதும் பயிரிட்டுப் பண்புடனே வாழ்வோம்
   பகற்கழிய வீடுவந்து பொழுதோடு  சேர்வோம்


பாரினிலே பாட்டுரைக்கும் பாமரனு மின்று
     பயிரினையே பரமனாகப் பாடிடுவான் நன்று
தேரினையே இழுத்தவனும் தென்றலுடன் சேர்ந்து
     தென்னையினை விதைத்தானே தோப்பினிலே அன்று
பாரியைப்போல் வள்ளலுமே படைப்பவனுக் கில்லை
    பாவமந்தப் பயிரென்ற பதில்தானே எல்லை
ஏரியிலே நீரிரைத்திங்(கு) ஏற்றமுடன் இங்கு
    என்னினிய விவசாயம் ஏற்றிடுவோம் எங்கும்.

ஏருழுவும் தெய்வத்தை ஏழையெனச் சொல்லி
    ஏரெடுத்தும் பார்க்காமல் ஏசிடுவர்ச் சொல்லை
ஊருணியால் உழவுசெய்து ஊரினுக்கு அள்ளி
      உளமாறக் கொடுப்பாரே உழவருமே நெல்லை
வேருடைய எம்தொழிலை வேட்டிடவு முண்டோ?
      வேலையென வரத்தினையும் வழங்கிடுத லுண்டோ?
ஓருருவாய் உழவுக்காய் ஒன்றிணைவோம் நாமே
   பேறுபெற்று வாழ்ந்திடுவோம் பெருமையுடன் தானே...


வாழ்த்துப்பா ...!!!
*********************
இறைவனென்றே உழவோரைக் காணச் சொல்லும் 
       இளைஞனிவன் இன்குரலில் கவிதை கேட்டேன் !
குறைவரினும் பிறருக்காய் உழைப்பை நல்கிக் 
      குணக்குன்றாய்த் திகழ்வோர்தம் பாட்டைக் கேட்டேன் !
உறவாக ஒன்றிணைய வேண்டு மென்றே 
      உருகியிவன் கவிவடித்த பாங்கைக் கேட்டேன் !
நிறைமனத்தோ(டு) இவனுக்கு நன்றி சொல்லி 
        நீடூழி வாழநானும் வாழ்த்து வேனே !!


8. திருத்தம் செய்தது...


கவிஞர் அழைப்பு!

********************

இயற்பியல் பயிலும் மாணவன் எனினும்   
      இயற்றமிழ்க் காதலில் வீழ்ந்தான்! 
மயக்கிய மரபு கவிதைக ளீர்க்க
      வரதரைத் தஞ்சம டைந்தான்!
பயிற்சியி லிணைந்து மரபினை நித்தம்
      பைந்தமிழ்ச் சோலையில் கற்றான்!
பெயலெனப் பொழியும் கவியர விந்தன்
     பெரும்புக ழடையவாழ்த் துவனே!

அரவிந்தா வருக! அருங்கவி தருக!

தமிழ் வணக்கம்
******************
பாரண்டப் பேருடைப் பைந்தமிழே! சந்தனத்
தேராய்க் கமகமக்கும் தீந்தமிழே! பாராய்நீ!
மாறாச் சுவையே! மங்கா அமுதேநீ!
வாராய் எழுத்தையே ஆய்ந்து..

தலைமை, அவைவணக்கம்
*****************************
பைந்தமிழ்ச் சோலையுடைப் பாவலர் மாமணியே!
பூந்தமிழால் போற்றினேன்நும் பொற்பாதம் - தீந்தமிழால்
பாவியற்றும் பூங்கரத்துப் பாவலர்க ளே!கேள்மின்
நாவியம்பும் பாப்படைத்தேன் நாற்று.

தலைப்பு: ஏருக்குச் சீர் செய்வோம்
************************************
கள்ளமேது மில்லாக் கருமுகில் வண்ணவுடல்
உள்ளார்ந்த தேடலில் ஓடுவதும் ஓய்ந்ததோ
எள்ளிநகை யாடும் எருமைச்சா ணத்தீக்கள்
துள்ளி விளையாடித் தூக்கத்தைத் தின்கிறதோ
கள்ளிக் கிளையொன்று காதைச் சொறிகையில்
வெள்ளி முளைத்திடும் வேளை வந்ததுவோ
தள்ளிப் படுத்துறங்கும் தங்கமவள் நீரிறைக்கப்
புள்ளிதனை வைக்கிறாளே பூக்கோலப் பொன்னியவள்! 

ஏற்றமேத் தாதிங்கே ஏர்ப்பிடிக்க ஏதுவழி
ஊற்றும்நீ ரின்றியே ஊறவும் ஏதுவழி
ஆற்றோரக் கால்வாயும் ஆறிரண்டாய்ப் பங்கங்கே
சாற்றும் தவளையோ சங்காய்ச் சடசடக்க
நாற்று நடவிற்கு நாளையோடு பட்டமில்லை
வேற்று கிரகத்து விண்மீன்கொட் டும்பனி
கூற்றுவனாய் நீடிக்க ஊசியெனக் குத்திடுதே
சாற்றிட ஏதுமில்லை சல்லடையாய்க் கந்தலே

காளையனைப் பூட்டிவைத்துக் காடெல்லாம் சேறாக்கி
நாளைமறக் காதிடையில் நைந்த இலைத்தழையும்
வேளைப்பார்த் திட்டு விளைந்த பயிரதுவும்
மாலைவந்து சேர்ந்து மலையாகி நிற்குமே
தோலையுரித் துக்கொட்டும் தொள்ளாயிர முத்துக்கள்
காலையில் காட்டிடுமே கொத்தனமும் போட்டதைப்
பாலைக்கா ணாது பதறும் குழவிக்கு
வாலைக்காட் டும்மந்த வாசலையும் என்னவென. . ..

பொன்னேரு கட்டுபவன் பொண்ணுக்கி ணையன்றோ
தன்னுடல்வ ருத்தியும் தானென்று வாழாதான்
வன்னுடல் எங்கிலும் வாடியஉ வர்மலர்கள்
வண்ணான் வெளுத்திடா ஆடையுடை வள்ளலவன்
கண்ணில் களவிலாக் கண்ணிய உள்ளமுடை
மண்ணுலகு போற்றும் மனிதவின மானவன்
அன்னையவ ளையொத் தகமுடை மானுடத்தைப்
பொன்னென எண்ணியே பூவுலகில் போற்றுவமே!!

வே.அரவிந்தன்

வாழ்த்துப்பா !
*******************
தன்னுடல் நோகத் தனக்கென வாழாத 
பொன்னேர் உழவரைப் போற்றிப் பொலிவாக 
இன்றமிழ்ப் பாவினை இவ்வரங் கிற்பொழிந்தாய் !
நின்பா மழையினால் நெஞ்சம் நெகிழவைத்தாய் !
தென்றலாய்த் தொட்டுத் திளைத்திட வுஞ்செய்தாய் !
கன்றுனை வாழ்த்தக் காத்திருப் பாள்தமிழ்த்தாய்!
அன்புடன் வாழ்த்தி அகமகிழ் வோடுனக்கு 
நன்றிகளைச் சொல்வேன் நனைந்த விழியோடே !!

9. கவியரங்கம்
ஏருக்குச் சீர் செய்வோம்

கவிஞர் அழைப்பு
*********************


கணினிப் பணியில் இருந்தாலும் 

     கன்னல் மொழியில் பாவனையத்

தணியா ஆர்வத் துடன்கற்றுத்
     சந்தங் கொஞ்சும் மரபினிலே
மணியாய்ப் பாக்கள் தீட்டுமன்ப!
     மன்றம் நின்று கவிபாட
வணக்கம் சொல்லி அழைக்கின்றேன்
        வருக வெங்கள் தமிழ்மகனே!!

கவியரங்கத் தலைமை
பைந்தமிழ்ச்செம்மல் சியாமளா ராஜசேகர் அவர்கள்

தமிழ் வாழ்த்து

எண்ணும் போதே என்னுள்ளம் 
     ஏற்கும் இன்பம் இன்றமிழே!
பண்ணும் போதே பாதைகளைப் 
     பரப்பி நிரப்பும் பைந்தமிழே!
கண்ணும் கருத்தும் உன்மீதே 
     கவிதை செய்யப் பணிக்கிறதே!
மண்ணும் விண்ணும் நீயென்பேன் 
      வளர்க்கும் தமிழே வாழியவே!

தலைவர் வணக்கம், அவையடக்கம்

செவியரங்கை மகிழ்விக்கும் செந்தமிழைப் பாடுகின்ற  
கவியரங்கத் தலைமைக்குக் கனிவான வணக்கங்கள்!
புவியரங்கம் முழுதுள்ள பொற்கவிஞர் தாள்போற்றிக்
கவியரங்கம் வந்துள்ளேன் கருணையோடு வாழ்த்துகவே!

ஏருக்குச் சீர் செய்வோம்

கார்தூக்கி வளம்பரப்பக் காணரிய நிலையினிலும்
ஏர்தூக்கிப் பார்தூக்கும் எழிலாளன் ஏழையெனல்
வேர்தூக்க நீரூற்றா வெங்கொடுமை யாமன்றோ?
சீர்துக்கிப் பார்ப்பதற்காய்ச் சீர்துக்கிப் பாடுவமே! 1

பாடுபடும் உழவனுக்குப் பருவங்க ளேமுதலாம் 
ஊடுபனி எந்நாளோ? உயந்தகதிர் எந்நாளோ?
நாடுங்கண் நாள்பார்க்கும் நல்லமழைக் காலமெது?
தேடுவது கிடைப்பதற்குத் தெளிவான மனம்வேண்டும் 2

வேண்டுமவன் உள்ளத்தில் விலகாத உறுதி;மழை
வேண்டுமள விருக்கவேண்டும் விழியாகக் காத்திருக்க 
வேண்டுமவன் விழிப்போடு காத்திருக்க வேண்டுமன்றோ?
தூண்டுமுளத் தெண்ணத்தாற் றுளியேனும் சுரக்காதா? 3

சுரக்காதா அமுதமெனச் சோர்ந்திருத்தல் சரியாமோ?
கரவாது கலப்பையினைக் கைப்பிடித்து நேர்நிறுத்திப்
பரப்புக!மண் படரட்டும் பலப்பலவாய் விளைச்சலினை 
வரமாக வழங்கட்டும் வையத்தார் வாழ்வதற்கே! 4

வாழ்வின்றி அழிவதுவோ? வளமாக்க வேண்டியன 
தாழ்வின்றிச் செயல்வேண்டும் தடையாக வந்தபெரும் 
பாழ்படுத்தும் செயற்கையினைப் பதரெனவே துணிந்தெறிவோம் 
வீழ்த்துகின்ற வீண்செயலர் வினையொடித்து நாம்நடுவோம்! 5

நடுவதியார் நடுவதியார் நாளெல்லலாம் திரிந்தலைந்து
கெடுவதியார் எனும்நிலைமை கெட்டழிந்து போகட்டும் 
தொடுவதியார் சேற்றினையே தொடத்தயங்கு வோர்தம்மைத் 
தொடுவதியார் சோற்றினையே எனத்தடுத்துப் புரியவைப்போம்  6

புரியவைக்கச் சிறுவயதே புதையலென வயல்வெளியில் 
திரியவைக்க வேண்டுவது தேவையெனக் குரல்கொடுப்போம் 
அரியவகை எனவாக ஆகுமுனே உணவெதுவென்(று)
உரியவகை எடுத்துரைப்போம் உழுவதுவே உயர்வென்போம் 7

உயரத்தில் இருந்(து)ஆளும் ஒண்கதிரோன் வாழியவே!
இயற்றுங்கை ஏற்கின்ற ஏர்க்கலப்பை வாழியவே!
உயர்வடைந்த உள்ளத்தான் உழவன்தாள் வாழியவே!
துயர்தீர்க்க வருகின்ற தூநீர்கார் வாழியவே! 8

                - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

வாழ்த்துப்பா !
******************
ஏர்தூக்கும் எழிலோனைச் சீர்தூக்கிப் பாவடித்த 
       இக்கவிக்கு நன்றிசொல்வோம் வாங்க வாங்க !
ஊரறிய உறவறிய பாரறிய இவ்வரங்கில் 
       உள்ளன்பாய் வாழ்த்துகளைத் தாங்க தாங்க !!

10.சோலைக் கவியரங்கம் - 09.

கவிமாமணி சேலம்பாலன்


கவிஞர் அழைப்பு!

*******************

யாருக்கும் அஞ்சாத சிங்கம்

     ஈரோட்டின் தன்மானத் தங்கம் !
நேருக்கு நேர்பேசும் பாலன்
      நேர்மைவழி யிற்செல்லும் சீலன் !
ஏருக்குச் சீர்செய்ய வேண்டும் 
     என்றதலைப் பிற்கவிதை பாட 
வாருங்கள் அண்ணாவென் றேநான் 
     வணங்கியழைக் கின்றேனிக் கணமே !!

ஐயா வருக அருங்கவி தருக!

                               குரலொலிக்           கவியரங்கம்

ஏருக்குச் சீர் செய்வோம் !

தமிழ்த்தாய் வாழ்த்து ! 

திண்ண மாகவே தோன்றிய தென்றெனச் 
செப்பிட முடியாச் செந்தமிழ்த் தாயே ! 
கண்ணின் மணியாய்ச் சிறந்தவள் நீயே ! 
கருத்தினில் நின்று காத்திடு வாயே !

தலைமைக்கு வணக்கம் !

எவரின் உளத்தையும்
  ஈர்க்கும் வகையிலே
கவரும் பாத்தரும்
  கவித்தலைவி!வணக்கம்!

அவை வணக்கம்

குரலொலிக் கவிதையைக்
  குளிர்ந்து கேட்கும்
தரமிகு சுவைஞரே !
  தந்தேன் வணக்கம் !

ஏருக்குச் சீர்செய்வோம் !

உலகினில் உள்ள   தொழில்களில் எல்லாம்   
உழவுதான் உயர்ந்ததே   என்போம்!
பலன்தரும் தொழிலைப் பாரினில் செய்தே
பணந்தனைச் சேர்த்தவர், மற்றோர்
நலத்துடன் உலவல் நாளினைப் போக்கல்
நாட்டமாய்ச் சுற்றலும் நித்தம்
நிலத்தினில் விளைந்த நிகரிலா உணவை
நித்தமும் உண்பதால் தானே!

உழவொடு நல்ல தொழிலுமே நன்றாய் 
உயர்ந்திட யாவரும் மகிழ்வர் !
உழவினைச் செய்யும் உழவரோ இந்நாள் 
உயர்ந்திட நல்வழி காணோம் !
உழவுசெய் நிலங்கள் மனைகளாய் மாற 
உலகமே துன்பினில் ஆழும் !
உழவரும் தொழிலை மாற்றிடும் போதில் 
உண்மையில்  இடர்பல சூழும்!

இருப்பவர் எவரும் இனிமையாய் உண்டே
ஏறுபோல் வாழ்கிறார் என்றால்
ஒருசிலர் நிலத்தில் சோற்றினில் கையை
ஊன்றியே உழைப்பதால் தானே!
இருப்பவர் உயிரோ டிருந்திடும் மட்டும்
என்றுமே உணவது வேண்டும்!
விருப்புடன் என்றும் உடல்வளர்த் திடும்நாம்
ஏருக்குச் செய்வமே சீரே!


ஏரினைப் போல இணையொரு  கருவி
இவ்வுல கத்திலே இல்லை!
ஏரினைக் கொண்டு நிலத்தினை உழுவோர்
இல்லையேல் இல்லையே மகிழ்வு!
பாரிலே மூத்த தமிழரின் நல்ல
பண்பது நன்றியே சொல்லல்!
ஏரினை என்றுமே போற்றியே நாமே
இன்புடன் செய்வமே சீரே !

  கவிமாமணி சேலம் பாலன்


11. 



கவிஞர் அழைப்பு ...!!!

***********************

கண்ணில் விரியும் கனவுகளைக்
     கன்னித் தமிழில் கவிசெய்யும்
பண்பிற் சிறந்த பாவலரைப்
      பாசத் துடனே அழைக்கின்றேன் !
மண்ணி லுயிர்கள் வாழ்ந்திடவே
      வரமாய் விளங்கும் ஏருழவைக்
கன்னல் மொழியில் சீராட்டிக்
        கவிதை யொன்று தருவீரே !!

அப்துல்லாஹ் வருக!  அழகாய்க் கவிதருக!
★தமிழ் வாழ்த்து★


நற்குண மானிடர் வாழ்வே வுருவாகப்
பொற்பதங்கள் சேர்ந்த புகழோவி யங்களின்
அற்புதமே ! அன்னைத் தமிழே ! தமிழனாய்நான்
பெற்ற பிறப்பே புகழ் !

★தலைவர், அவை வாழ்த்து★

தேவனில் தானுருகித் தேன்தமிழ் பாவெழுதும்
காவிய நாயகியின் நற்றலைமை சீர்தளத்தில்
பாவலர் நம்வரதர் பாதை வழிவந்த
பாவலருள் நிற்பதே பேறு !

★ஏருக்குச் சீர் செய்வோம்★

பாரினில் நம்தமிழ் நாடு தனிப்புகழ்
வீரியம் கொண்டது வெற்றிகள் கண்டது
காரியம் கைக்கூடக் களத்தி லிணைந்தொன்றாய்க்
கோரிக்கை வெல்வதற்குக் கூர்மை மதிதீட்டி
ஏர்கொண்டே வாழ்ந்தார்க ளெங்கும் பசுமையில்
வேர்விட்டு ஆனந்தம் ! வீரவிளை யாட்டுடன்
சீர்கொடுக்கச் செல்வங்கள் சேர்த்தும் உறவிலின்பம்
பார்க்கு மினமேதான் நம்தமிழர் திண்ணம்!
கடின உழைப்பு களத்தி லிறங்கி
விடியும் பொழுதில் விதைக்கும் குணத்தில்
மடிய விடமாட்டார் மானிடர் மான்பைத்
துடிப்பு மிகுந்த துவளாத் தமிழர் !
வழிபாடாம் சைவ வழியில் வணக்கம்
'அழிந்தாலும் ஒன்றே அடர்ந்தாலும் ஒன்றே'
விழித்தது தானே வினையாற்றும் சீவன் !
ஒழிந்தாற் சிவனென்றே ஓர்ந்துணர்ந்த கொள்கை !
ஓருயி ரென்றே உணர்ந்தா லனைத்துமிங்கே !
ஊரு முலகும் உயர்வாகு மமைதியாய் !
பாரும் ! மரக்கிளைப் பற்றி யொடிக்கநாடின்
யாருயிரும் தன்னுயி ரென்பதாற் பற்றவிடார் ! 
நாளுந் தமிழர் நலன்விரும்பி வாழ்ந்தார்கள்
மூளும் பகைகள் முடிந்தோர் பிரித்தாளும்
பாழும் உயர்வுதாழ்வு பார்வை விதிகளென்ற
தேளும் கடிபாம்பாம் தீரா வியாதி !
முடித்தொழிக்க முன்வந்தே முற்று முணர்ந்தும்
விடிவும் பெறவும் விதைத்தார்நேர் மாற்றம் !
'இறைவன் எனக்கொள்வது ஏமாற்றே' என்றும்
முறையாய் 'அவனில்லை முட்டாளே !' என்றார் ?
ஏர்கொண்டு ழைத்தவன் ஏருக்குச் சீர்செய்ய
வேர்கொண்டு பற்றவைக்கும் வித்தைகள் வென்றொழிக்க
நேர்கொண்ட தன்பார்வை நின்று நிலமெங்கும்
தீர்க்க நினைத்தாரோ தீர்வு !

ஷேக் அப்துல்லாஹ் அ
அதிராம்பட்டினம்.

வாழ்த்துப்பா ...!!!
**********************
அழைப்பிற் கிணங்கிக் கவிவடித்த 
     அதிராம் பட்டி னத்தாரே !
மழையா யிங்குக் கொட்டிவிட்டீர் 
     மனத்தைத் தைத்த வற்றையெல்லாம் !
உழைப்பால் வுயர்வு கிட்டட்டும் 
     உழவர் வாழ்வு சிறக்கட்டும் !
அழகுத் தமிழில் நன்றிகளை
     அன்பாய்ச் சொல்லி வாழ்த்துவனே !!

12. 
கவிஞர் அழைப்பு !
***********************
இயற்கையை விரும்பி இறைவனைப் போற்றும் 
அயலகம் வாழும் அருந்தமிழ்க் கவியே !
உழவரின் உறவாம் உன்னத ஏரை 
எழுத்தில் செதுக்கி ஏற்ற மளித்துக் 
கவின்மழை யாகக் கவிதையில் 
செவிகுளிர் வண்ணம்  சிறப்புறப் பொழிக !!

சுரேஜமீ வருக ! சுவைமிகு கவிதை தருக !!

தமிழ் வாழ்த்து 

பெருவெளியில் பூதங்கள் பின்னலிடும் முன்னே 
வருமொலியாய் வந்ததமிழ் வாழ்த்தே! - உருவமெனும் 
ஓரறிவு கொண்ட உயிர்தொடங்கி யாவர்க்கும் 
பேரறிவு வார்ப்பவளைப் போற்று!

தலைவர், அவை வாழ்த்து!

கூடு மிடமெலாம் கூவிடும் பாவலர் 
நாடு மன்பரை நற்றமிழ்ப் பாடிட 
ஏடு செய்பவர், இவ்வவைக் கூட்டிட 
நீடு வணங்கியே நிலைபெற வாழ்த்துவோம்.

தலைப்பு

'ஏருக்குச் சீர் செய்வோம்'

வானம் பொய்க்கா வண்ணம் காடும் 
தானம் தர்மம் ஓங்கும் வீடும் 
பாவம் புண்ணிய மறமாய் வாழ்வும் 
தாவும் மனத்தைத் தட்டும் மாண்பும் 
புள்ளினம் போற்றிப் புழுவினம் காத்து               ....5
வள்ளியோர் வாழ்ந்த வண்டமிழ் பூமி 
இன்றோ எல்லாம் அழித்து, இன்பம் 
இன்றித் தவிக்கக் காரணம் ஏது?
உழவை மறந்து உண்டு கழித்துப்  
பழமை மிதித்து பண்பை வீழ்த்தி                             ...10
அறிவைத் தொலைத்து ஆசை மிகுத்து 
செறிவில் சமூக மாகி விட்டதே!
பரந்த நிலத்தில் பாயும் ஆறு 
விரிந்து வாய்க்கால் விரவும் நீரை 
செழித்து வளரும் செந்நெல் உயர                            ...15
கொழித்துக் கிடக்கும் சோலை நாடே 
வரப்பு மூடி வரம்பு கெட்டு 
பரப்பு முழுதும் பணமாய் மாற்றிக்  
கிடைத்த பணத்தைக் கொட்டி இரைத்துப்  
படைத்த கேட்டால் பண்பு ஒழிந்தது!                      ...20
இனிமேல் எல்லாம் இருந்தது ஆகும் 
பனிமேல் பட்ட பகலவன் ஒளிபோல் 
கல்வி என்பது கயமை ஆனால் 
பல்கிப் பெருத்துப் பயனென் ஆகும்?
நல்லோர் சொல்லோ நஞ்சென ஆனபின்             ..25
புல்லோர் எங்கும் புன்மை விதைக்க 
எல்லாம் மறந்ததே! இன்பம் தொலைந்ததே!
இன்னும் இங்கே பாவலர் போன்றோர் 
பண்ணின் மூலம் பழையதை மீட்க 
ஏரினைப் பூட்டி இன்பம் தேட                                        ...30
பாரினை அழைத்தார்! சீரதை 
ஏருக்குச் செய்தே வேரினை மீட்போம்!

- சுரேஜமீ 
மஸ்கட் 

வாழ்த்துப்பா !
*******************
ஆசிரியப் பாவில் அழகாய் வனைந்தகவி 
வாசித்து நன்றியுடன் வாழ்த்துவேன் ! - வீசும் 
புயலாய்க் கவிதையில் பொங்கி யெழுந்தாய் 
வயலுக்கும் வாழ்வு வரும் .

13.
ஏருலகைச்சீர்செய்வோம்
+++++++++++++++++++++++++++++++
 பொதுநலத் தோடும் பகுத்தறி வோடும்
      புரட்சியை நெய்திடும் கவிஞன் !
கொதிப்புடன் பொங்கிப் போர்க்குணத் தோடு
      கொடுமைக  ளெதிர்ப்பதில் முதல்வன்!
பதிவுகள் படித்துக் கருத்துக ளளிக்கும் 
     பைந்தமிழ்ப் பாக்களின் சுவைஞன்!
அதியழ காக இக்கவி யரங்கில்
      அடைமழை யாய்க்கவி பொழிக!!

சோமுசக்தி ஐயா வருக! சுந்தர கவிதை தருக!
தமிழ்வாழ்த்து:

செந்தமிழேசிந்துவகைப்பாவால் – நான்
சிந்துமொழிசெம்மையுறநாவால் – உன்
தீந்தமிழில்காவடியாற்சிந்துகவிபாடிடவே
தேர்வாய்எனைச்சேர்வாய் !

அவைவாழ்த்து:

பாட்டரசிதாங்குமவைபாரீர்என்
பாட்டிதனைக்கேட்பதற்குவாரீர்தாய்ப்
பாட்டிசையில்மீட்டுமிசைப்பாருலகைமீட்பதற்குப்
பாடும்பணிந்தாடும்

பொருள்:ஏருலகைச்சீர்செய்வோம்

ஏருலகைச்சீர்செயவேநாளும் - இங்கு
ஏற்றதொருதிட்டமிடலாளும் –வெறும்
எண்ணிலதைஏற்றிவிட்டுகண்ணிலதைக்காட்டிவிட்டு
ஏய்க்கும்நிலைஓய்க்கும்
நீர்வரவைசேர்த்துவைக்கமோதும் – பிழை
நேற்றுவரைசெய்ததெலாம்போதும் – மழை
நீர்ப்பிடிப்பைத்தேக்கிவைத்துஏர்த்தொழிலைமீட்பதற்கு
நேர்க்கும்நிலைவேர்க்கும்

நல்லுரத்தைநாமிடவேநாளும்வளர்
நற்பயிரின்தாள்மடலும்நீளும்-வரும்
ஞாலமெலாம்நெற்பயிரைக்காலமெலாம்காத்திடுமே
ஞானம்பெறும்மானம்
மெல்விதையைமின்னனுவால்மாற்றும் – பயிர்
வெல்வகையைநாசமுறத்தேற்றும் – நம்
மேலுழவைச்சேதமுறமேலுதட்டில்வேடமிட
மேய்க்கும்நிலைசாய்க்கும்

வங்கிகளேசெல்வமதுதேங்கும் – கடும்
வட்டியின்றிஏழைகளும்வாங்கும் – பல
மங்கலமாய்ப்பொங்குவளம்மண்ணிறைந்துதங்கவளம்
வாங்கும்வகைதாங்கும்
வந்தபொருள்நல்விலைக்குப்போக – ஒரு
மந்தநிலைகொள்விலையால்நோக – முன்
வந்தநிலைமாறுவதால்மாந்தநிலைதீருவதால்
வாழும்தொழில்சூழும்

சோறிடவேசேறிறங்குநீயும் – பசி
சோர்வினிலேதேசமதுகாயும் –ஒரு
தோள்வலியும்தோழமையும்சூளுரைத்துவென்றுவரும்
தோழாதுயர்சூழா
வேறிடத்தில்தீர்விதற்குஇல்லை –ஒரு
வேரிடத்தில்சேர்ப்பதற்கேன்தொல்லை –இதை
மேலிடத்தில்மேய்ப்பதற்கும்வேலிடத்தால்ஏய்ப்பதற்கும்
வேளேன்இதைக்கேளேன்
ஏருலகை…….)
(பொருள்நேர்க்கும் –நேர்ப்படுத்தும்;வேர்க்கும் – அடிப்படையாக்கும்சூள்-உறுதிஎடுத்தல்வேள்-ஆசை,விருப்பம்)

-சோமுசக்தி (01-01-2020)

வாழ்த்து 
***********
சிந்துமழை இவ்வரங்கில் பெய்தார் - நம்
சிந்தையினை யுங்குளிரச் செய்தார் - இவர்
       சீர்மிகுந்த பாக்களினால் ஏருழவர் வாழ்வில்வளம் 
        சேரும்- துயர் - தீரும் !!

அந்தமிழில் சோமுசக்தி பாட்டு - தமிழ் 
அன்னையவ ளும்மலர்ந்தாள் கேட்டு - இங்கு 
        அன்புடனே எல்லோரும் நன்றிசொல்லி வாழ்த்திடுவோம் 
        ஆடி - கவி - பாடி !! 
14. புலவர் இரா.மாது
கவிஞர் அழைப்பு
***********************
திருச்சிவாழ் பாவலரே! தீந்தமிழ்க் காவலரே!
அருள்நெறி நாவலரே! ஆன்மீக ஆர்வலரே!
பரிவுடன் பண்புமிக்க பட்டிமன்ற நாயகரே!
மரபுமீது கொண்ட வளமான காதலால்  
வரதனார் சோலையில் வாஞ்சையு டன்பயிலும் 
கருணை மிகுந்தவரே! கம்பனில் தோய்ந்தவரே!
இருகைகள் கூப்பியுமை ஏருக்குச் சீர்செய்ய 
வருகவென இம்மன்றில் வாழ்த்திவர வேற்பேனே !!

இலக்கியச் செம்மலே வருக! இன்கவி தருக!

சோலைக் கவியரங்கம் - 9                              கவிதைத் தலைப்பு - ஏருக்குச் சீர் செய்வோம்                                              
                                                                
 தமிழ் வாழ்த்து                                                                                                                              
                                                   ி   நேரிசை வெண்பா                                                                 
                                                     
வல்லோர் அறிவில் வளர்ந்திட்டாய் 
                        எந்நாளும்                            நல்லோர் மொழியில் நடம்கொண்டாய் - அல்லோர்                    மகிழ்ந்து புகழ்ந்திடும் வண்டமிழே தாயே                                                                                    நெகிழ்ந்து பணிந்தேன் உனை.                       
                                                    
தலைவர் - அவை வாழ்த்து                
                                                       
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்                                            
                                            
கருத்துறப்  பாதா என்றிடும் தலைமைக்  
   கருத்தம்   மாவுனை வணங்கி                                                          
 விருப்புடன் பாவை விசையுறப் பதிவி    
வேகனைச்  சாலவே போற்றி                             அருத்தமாய்ப்  பாவும்   தேர்ந்திட விளக்கும்    
   அருமையர்  பாவல வாரா         வருவர தாயான் பாவினால் நும்மை 
            அவையினை   வணங்கினேன் யானே!                    
                                                
(கருத்தம்மா - சியாமளா - கருத்தோடு செயலாற்றும் அன்னை                           
                                                           வாரா வருவரதா - நேரில் வாரா பாவலர் - முகநூல் மூலம் வரும் பாவலர்)                                       
                                                    
கவிதைத் தலைப்பு   - ஏருக்குச் சீர் செய்வோம்                                                     1. கலித்தாழிசை                                                                        
                                                    
பாராண்ட மன்னரும் பணிந்துநிற்பர் யாரை?                                                                               போராண்ட  வீரரும்  போற்றிநிற்பர்  யாரை?                                                                             சீராண்ட  பாவலர்  சிந்தைசெய்வர் யாரை?,                                                                        ஏராண்ட   நம்பியைப்  பீடுடை உழவரை யேற்றமிகு எம்பியைக் காட்டு                   
                                                                   2. நிலைமண்டில ஆசிரியப் பா                                                                         
                                                     
வடிசாறு   வார்த்துச்   செழிக்கும் வணிகர்  
கொடிய மதுவை யருந்தும் மாக்கள்                                                                            மடிநோக்குச் சூதினைக் காட்டும்  சூழ்ச்சியர் 
கடிபோ யாடிக் களிக்கும் பதர்கள்                                                     அடிச்சேறு கண்ட உழவன் தனக்குப் 
பிடிசோறு மின்றி நாளும் வருந்தி        
மிடிநோக்கச்  சாதல் அறிந்தும் திருந்தார் 
உடைநா டுற்றசீர்  குன்றிக் கெடுமே                                
                                                                   3. கட்டளைக் கலித்துறை                                        
                                              படைப்பத னாலே படைப்போன் எனநான் வணங்குவனோ                                                           மடைக்கோலிக் காத்தலால் மாலன்!எனவே வழங்குவனோ                                                படைகொண்டு காக்கும்நற்  பாங்கினில் நம்பன் பரசிவனோ                                       விடையினால் ஏரோட்டும் வீரரால் மானுடம் வென்றதம்மா           
                                                                   4. நேரிசை வெண்பா                                        கொஞ்சும் பசுங்கிளியே கேளிதுநீ என்னவன்                                                                             விஞ்சுபுகழ; ஏராளும் வித்தகன்  - மஞ்சுசூழ்
நாவிலன்னம் தந்து நலங்கூட்டும் அன்னாரை
ஆவியென அன்பால் அணை.
வாழ்த்து !
**************
ஏராளும் நம்பியை ஏற்றமிகு பாக்களால்
சீராகப் போற்றிச் சிறப்பித்தீர் ! - பாராட்டச் 
சொற்களைத் தேடித் தொலைகிறேன் என்றுமுமை  
வெற்றிகள் சேரும் விழைந்து.