Wednesday, November 30, 2016

காவிரியே களித்தோடிவா ...!!!



தடைபோட்டுத் தடுத்தாலும் தமிழ்நாட்டின் வளம்காக்கத் 
****தயங்காமல் தவழ்ந்தோடிவா ! 
இடையூறு கொடுத்தாலும் இமைப்போதும் அசராமல் 
***இயல்பாக எதிர்த்தோடிவா ! 
விடைகூறி விரைவாக விவசாயம் செழித்தோங்க 
****விருப்போடு சிரித்தோடிவா ! 
புடைசூழ வருவோரின் புரியாத பகைமாற்றிப் 
****பொலிவோடு புரண்டோடிவா ! 

அடைத்தாலும் மறித்தாலும் அடங்காமல் திமிராக 
****அணைப்போரை இனங்காணவா ! 
மடைதாவி விளையாடி மருண்டோடும் கயல்மீனை 
****மறவாமல் உடன்கூட்டிவா ! 
நடைபோட்டு மிடுக்காக நதியேயுன் எழிலோடு 
****நலம்வாழக் குதித்தோடிவா ! 
கடைத்தேற வழிபார்த்து கருவாயுன் கவிகேட்டுக் 
****கனிவோடு களித்தாடிவா ....!!!

என்னுயிர் நீதானே ....!!!

உன்னையே எண்ணினேன் நீலவண்ணா 
****உலகமே நீயென வாழ்ந்திருந்தேன் !
அன்பினால் இறைஞ்சினேன் கழல்பணிந்து 
****அருகினில் நீவர ஏங்கிநின்றேன் !
இன்பமோ துன்பமோ  எதுவரினும் 
****இனியவன் உன்னுடன் ஏற்றிடுவேன் !
மின்னலாய் மறைந்தது மேன்கண்ணா ?
****விரைந்திடு என்னுயிர் துடிக்குதடா !

மூடிய திரைதனை நீக்கிவிடு 
****முன்பனி வாட்டுமுன் வந்துவிடு !
தோடியில் பாடினேன் கேட்கலையோ
****தோகையென் இன்குரல் ஈர்க்கலையோ ?
தேடினேன் நதிக்கரை வழியெங்கும் 
****தேகமும் அசதியில் சோர்ந்ததடா !
வாடிய பயிரென வதங்கிவிட்டேன் 
****மாயனே மயக்கிட வாராயோ ?

கோதையின் நெஞ்சமும் அறியாயோ 
****கோபியர் கொஞ்சிடக் களித்தாயோ ?
கீதையின் நாயகா கெஞ்சுகிறேன் 
****கீதமுன் காதிலே கேட்கலையோ ?
பாதையில் பார்வையைப் பதித்தேனே 
****பாவியென் நிலையினைப் பாராயோ ?
பேதையைத் தவித்திட வைப்பாயோ 
****பேறென அணைத்துக் கொள்வாயோ ?

ஊதிடும் குழலிசை கேளாமல் 
****ஊனமாய் ஆனதே என்னிதயம் !
சேதியை யாரிடம் சொல்லுவதோ 
****சேடியும் இவ்விடம் காணலையே !
சோதியில் நின்முகம்  தெரிந்ததடா 
****சொர்க்கமாய்க் காட்சியும் இனித்ததடா !
காதிலுன் நாமமே ஒலிக்குதடா 
****கண்ணனே என்னுயிர் நீதானே !



Tuesday, November 29, 2016

நதிக்கரையினிலே ....!!!

ஆற்றோரப் பாதையெல்லாம் அடர்ந்தமரம் பூச்சொரியும் 
காற்றோடு நாணலதும் காதலுடன் வீசிவிடும் 
சேற்றோடு விராலுடனே சேல்கெண்டை போட்டியிடும் 
ஊற்றெடுக்கும் நினைவுகளில் உள்ளமதும் உடன்செல்லும் ! 

இணைபிரியா அன்னங்கள் இன்பமுடன் நீந்திவரும் 
பிணையுடனே கலைமானும் பிரியமுடன் நீர்குடிக்கும் 
துணையிருக்கும் வான்நிலவும் துயிலாமல் விழித்திருக்கும் 
அணைபோட்டுத் தடுத்தாலும் அடங்கிடுமோ நதியோ(யா)சை ? 

ஒற்றைக்கால் கொக்குகளும் உணவுக்காய் தவமிருக்கும் 
நிற்காமல் தவழ்கின்ற நீரலையில் நுரைபூக்கும் 
பொற்கிரணக் கதிர்விரிய புதுவெள்ளம் புன்னகைக்கும் 
சுற்றிவரும் வழியெங்கும் சுகராகம் மீட்டிடுமே 

நதிக்கரை ஞாபகங்கள் ....!!!


வளைந்துசெலும் வழியெங்கும் வளத்தைக் கூட்டும் 
****வனப்பினிலே அகங்குளிர வதனம் பூக்கும் ! 
களைப்பகற்றத் தென்றலுடன் கலந்து வந்து 
****காலடியை முத்தமிட்டுக் காதல் சொல்லும் ! 
திளைத்தமனம் புத்துணர்வால் தெளிவைப் பெற்றுச் 
****செயலாற்ற நாள்முழுதும் சிறப்பாய்ச் செல்லும் ! 
விளைந்திருக்கும் நெற்கதிர்கள் வெட்கம் மின்ன 
****விருப்பமுடன் தலையசைத்து நன்றி கூறும் ...!!! 

மதிவந்து முகம் பார்த்து மயங்கி நிற்க 
****மகிழ்வுடனே நதிநீரும் மையல் கொள்ளும் ! 
குதித்தோடிக் கயலுடனே குலவும் கெண்டை 
****கொஞ்சிவிளை யாடிடுமே கூடி ஒன்றாய் ! 
நதியோடு நினைவலையில் நனைந்து மூழ்க 
****நடந்ததெலாம் மனத்திரையில் நடன மாடும் ! 
புதிராகப் போயிற்றே புனலில் போக்கு 
****பொலிவிழந்தக் காரணத்தைப் புரட்டு முள்ளம் ...!!! 

செழிப்பான நதியெங்கே தேடிப் பார்க்கும் 
****சிறுவர்தம் மணல்வீடாய்ச் சிதைய லாச்சோ ? 
கழிவுகளால் சீர்கெட்டுக் கசடாய் மாறிக் 
****கருவேலம் படர்ந்துள்ளக் காடாய்க் கண்டோம் ! 
வழித்தெடுத்து மணற்கொள்ளை வகையாய்ச் செய்யும் 
****வஞ்சகரால் விவசாயி வாழ்வும் மங்கும் ! 
அழிந்துவரும் நதிவளத்தை அரசும் காத்து 
****அனைத்துநலத் திட்டங்களும் அளித்தால் நன்றே ...!!! 

( எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )

நிலவும் நானும் ....!!!


நிலவுடன் நானும் தோழமை யோடு 
****நினைவுகள் யாவையும் பகிர்ந்தேன் !
மலர்ந்தவள் வானில் வந்திடும் தருணம் 
****மகிழ்வுடன் நெஞ்சமும் குளிர்ந்தேன் !
உலகமே வியக்கும் வெண்ணில வவளை 
****உரிமையாய் உறவெனக் கொண்டேன் !
பலகணி வழியே பாத்தவ ளழகைப் 
****பருகியே கவிதையும் வனைந்தேன் !

மயக்கிடும் அந்திப் பொழுதினில் மெல்ல 
****மதிமுகம் கண்டதும் சிலிர்த்தேன் !
வியப்புறும் வண்ணம் வடிவினைக் கண்டு 
****விடிந்திடும் வரையிலும் விழித்தேன் !
நயம்பட நாளும் நடந்ததைச் சொல்லி 
****நலமுடன் நட்பினை வளர்த்தேன் !
இயற்கையின் எழிலை அனுதினம் ரசித்தே  
****இறைவனை வந்தனை செய்தேன் !

முகிலினுள் ஒளிந்து முகத்திரை போட்டு 
****முழுவதும் மறைந்ததில் துடித்தேன் !
சகியவள் வெளியே வந்ததும் தானே 
****தனிமையில் புன்னகை புரிந்தேன் !
நெகிழ்வுடன் பேசி நிழலெனத் தொடரும் 
****நிலவுடன் உள்ளமும் கலந்தேன் !
பகிர்ந்திட ஆசை கொண்டத னாலே 
****பழகிய சுகந்தனை வடித்தேன் !

சியாமளா ராஜசேகர் 

தேடு ....!!!


மண்ணுலக வாழ்விற்குப் பொருளைத் தேடு!
***மகிழ்வாகும் இல்வாழ்வு நாளும் ஓடு!
விண்ணுலக வாழ்விற்கோ அருளைத் தேடு!
***வித்தாகு மான்மீக மிதுகண் கூடு!
நுண்ணறிவு பெற்றிடவே குருவைத் தேடு!
***நொந்தமனம் தெளிவுபெற உதவும் ஏடு!
திண்மையுடன் உள்ளமதில் இறையைத் தேடத்
***தீவினைகள் தோற்றோடக் காண்பாய் நெஞ்சே !
சியாமளா ராஜசேகர்

தனிச்சொல் வெண்பா ....!!!

கண்ணுக்கு ளுன்னைவைப்பேன்! காலமெல்லாம் காத்திருப்பேன்! 
எண்ணமெல்லாம் நீயாக ஏங்கிடுவேன்!- கண்ணம்மா ! 
வண்ணப்பா வொன்றை வடிவா யியற்றிடுவேன் 
பண்ணிசைத்துப் பாடிடுவேன் பார் . (1) 

சின்ன இடையினில் சேலை நழுவிடும் 
கன்னக் குழியும் கவிபாடும் - என்னவளின் 
புன்னகை யில்மனம் பூத்துக் குலுங்கிடும் 
பொன்னொளிர் மேனி பொலிவு . (2) 


தனிச்சொல் வெண்பா 
``````````````````````````````````` 
தனிச்சொல், வெண்பாவின் நான்கு அடிகளுக்கும் பொருந்திப் பொருள்தரவேண்டும்!

அவளும் நானும் ....!!!



அவளும் நானும் அன்பா லிணைந்தோம் 
உவகைப் பெருக்கால் உள்ளம் பூத்தோம் 
கவலை மறந்து கனவை வளர்த்தோம் 
சிவந்த இதயச் சிலிர்ப்பில் நெகிழ்ந்தோம் ! 

நிலவின் ஒளியில் நெஞ்சம் குளிர்ந்தோம் 
மலரின் மணத்தில் மயங்கிக் கிடந்தோம் 
குலவி தினமும் கொஞ்சி மகிழ்ந்தோம் 
புலனை வென்று புரிந்து நடந்தோம் ! 

அருவிக் கரையில் அவளும் நானும் 
பெருகும் நினைவில் பெருமை கொண்டோம் 
விருப்பத் தொடு விருந்தா யானோம் 
வருத்த மின்றி வளைய வந்தோம் ! 

கனிவாய்ப் பேசிக் காதல் வளர்த்தோம் 
இனிமை ததும்பும் இயற்கை ரசித்தோம் 
பனியில் நனைய பழுதும் மறந்தோம் 
புனிதம் காத்துப் புகழைப் பெற்றோம் ! 

அழகின் சிரிப்பில் அவளும் நானும் 
பழகிப் பார்த்துப் பயணம் தொடர்ந்தோம் 
எழிலாம் இனிய இயற்கை ரசித்தோம் 
விழியின் மொழியில் விதைத்தோம் அன்பை !

Thursday, November 24, 2016

கண்ணன் திருப்புகழ் ....!!!




தானன தானன தானன தந்தத்
தானன தானன தானன தந்தத்
தானன தானன தானன தந்தத் - தனதானா
சீலமு லாவிய கோபியர் நெஞ்சத்
தோவிய மாயுறை மோகன னின்பொற்
சேவடி யேகதி யேயென யின்புற் - றிடுவேனோ
தேடியு மோடிடு பாசமு டன்சிட்
டாகது வாரகை யேகிவி ளங்கித்
தேவதை போலெழி லாளைவி ரும்பித் - தடுமாறும்
பாலனை மாயனை நேசமு டன்பித்
தானது போலுள மாகிட வஞ்சிப்
பாடலொ டாடிடு வோனைவ ணங்கிப் - பணிவேனே
பாவைய ராசையி னாலுனை நம்பிப்
பாசுர மேதின மோதிம யங்கிப்
பாவன மேபுரி ராதையி னன்பைப் - பெறுவோனே !
சோலையி லேகுழ லூதம யங்கித்
தோழியர் கூடிட லீலைநி ரம்பித்
தோகையர் பூவிழி பேசிட அந்திப் - பொழுதோடே
சூடிய பூவது வாடிடு முன்பட்
டாடையி லேயொரு சேடிந டுங்கிச்
சோதனை தீரவி னாவிடு கெஞ்சிக் - கனிவோடே
கோகுல வாசனை மாலையில் கொஞ்சிக்
காதலி னோடுகு லாவிட வொன்றிக்
கூடிய கோபிய ரோடும னஞ்சற் - றிளகாதோ
கோமள னேமது சூதன னின்பொய்க்
கோபமு மேயறி யாதவ னன்பிற்
கோதையி னோடுற வாடும னந்தப் - பெருமாளே !

Thursday, November 17, 2016

மனம்மயக்க வருவாயா ...???

காத்திருந்த நேரமெல்லாம் கண்ணனுனைக் காணாமல் 
பூத்தவிழி சோர்ந்துவிட புன்னகையும் மறந்ததடா !
சாத்திவிட்ட மனக்கதவைத் தட்டியெழுப்பி அணைப்பாயோ ?
ஆத்தாடி ! என்செய்வேன் ஐம்புலனும் தவிக்குதடா !

நித்தமுன்றன் நினைவாலே நெஞ்சமெல்லாம் கொதிக்குதடா 
நித்திரையும் மறந்ததடா! நெக்குருக மாட்டாயோ ?
சுத்தமனத் தொடுன்னைச் சுற்றிவரு மென்னைநீ 
பித்தாக்கி விடுவாயோ ? பிழையென்ன கண்டாய்சொல் !

தென்றலெனைச் சுட்டிடுதே செந்தேனும் புளித்திடுதே 
கன்னலதும்  கசந்திடுதே காதலுளம் கசிந்திடுதே 
சின்னயிடைத் துவண்டிடுதே செவ்விதழும் உலர்ந்திடுதே 
மன்னவனே வந்திடடா மனமுருக வேண்டுகிறேன் !

கால்கடுக்க நிற்கின்றேன் காத்திருப்பு கொடுமையடா 
சேல்விழியும் கலங்குதடா சீக்கிரமே வந்திடடா !
பால்முகமும் வாடுதடா பாவையெனைப் பார்த்திடடா 
மால்வண்ணா! குழலூதி மனம்மயக்க வருவாயா ....?

புசித்துக்கொள் வயிறாற கிடைக்கும் போதே ...!!!

விண்பொய்த்தால் நீரின்றி விளைச்சல் குன்றும் 
****வேதனைதான் விவசாயி வாழ்வில் மிஞ்சும் !
கண்போன்ற நிலமதுவும் காய்ந்து போக 
****கண்ணீரில் உழவனவன் காலம் செல்லும் !
தண்ணிலவு வருமுன்பே விரைவாய் மேய்வாய்
****தனியாக பிறகசையும் போட்டுக் கொள்வாய் !
புண்ணாக்கு வேண்டாமே புல்லை மட்டும் 
****புசித்துக்கொள் வயிறாற கிடைக்கும் போதே ...!!!

சியாமளா ராஜசேகர் 

செவிகுளிர்ந்தேன் நானே ...!!!

தேன்சொட்டும் மலரினிலே தேன்சிட்டுத் தேனைத் 
***தேடிவந்து தித்திக்கும் தேனமுதை உண்டு 
தேனுண்டக் களிப்பினிலே தேன்சிட்டும் தூங்க 
***தேன்பூவை முத்தமிட்டுத் தேன்வண்டும் கொஞ்ச 
தேனூறும் காட்சியிலே தேன்மொழியாள் சொக்க 
***தேன்கவிதை ஊற்றெடுத்துத் தேனாறாய்ப் பாய 
தேன்தமிழைச் சோலையிலே தேவதைநீ பாட 
***திருவாச கத்தேன்போல் செவிகுளிர்ந்தேன் நானே !!

சிவபெருமான் திருப்புகழ் !



"தனத்த தந்தன தானன தானன 
தனத்த தந்தன தானன தானன 
தனத்த தந்தன தானன தானன. - தனதானா 

அகத்தி லன்புட னேதுதி பாடிட 
அணைக்க வந்திடு வாயெனு மாசையில் 
அழைப்பி லின்பமு மேவரு மேயெனு - முரைகேளாய் ! 

அடைக்க லந்தரு வாயென நாடிட 
அடக்கி யென்றனை யாதறி நீகதி 
அளிப்ப துன்கட னேசிவ னேயிதை - உணராயோ ? 

சுகத்து டன்பரி வோடெனை வாழவை 
துலக்க மிங்கிலை யேகனி வாயொரு 
துடித்த நெஞ்சினி லோடிடு தேசிவ - பெருமானே ! 

துடிப்பு டன்கரு நாகமு மேனியில் 
சுழித்து டம்பினி லாடிட வேமகிழ் 
தொடுக்கு மன்பினி லேபிற வாவர - மருள்வாயே ! 

புகட்ட வந்திடு வாயென நாடிடு 
பொழிப்பு டன்பல காலமு மேதொழு 
பொருட்ப டுந்திரு வாசக மோதிட - மகிழ்வோனே ! 

புலப்ப டும்படி நீறணி மேனியில் 
புறத்தி ருந்தவ ளாமுமை கூடயில் 
பொதுக்கு மன்பிலு லாவரு வேணிய -னருள்கோவே ! 

நகைப்பி லஞ்சிடு வோரினை மாநடன் 
நடித்த மஞ்சுள சோதிய னேநனி 
நயப்பு டன்கிரி மீதினி லேறிடு - முமைகோவே ! 

நனைத்த நஞ்சுணி யேநட ராசனை 
நடத்து மம்பிகை யேயெழி லாளொடு 
நரிப்பு டன்பிறை சூடிய மாமணி - வருவாயே !

வண்ணப் பாடல் ! முருகன் திருப்புகழ் !


"தனத்த தந்தன தனனன தனனன
தனத்த தந்தன தனனன தனனன
தனத்த தந்தன தனனன தனனன - தனதானா

நிருத்த னின்தன யனைவடி வழகனை 
நிவத்த லுஞ்செய துணைவரு முருகனை 
நிரப்பு மன்புட னுளமதி லுருகியு       மடிபேண

நினைத்த தும்தரி சனமரு ளிடுவென
நெருக்கு மென்றனி னுளமுறை குருபர 
நிலைப்பு டன்திரு மலரடி தொழுதிட     வருவாயே  

விருத்த முஞ்சொலி வழிபடு மடியவர் 
விதிப்பை வென்றிட மயிலுட னடமிடு
விகற்ப மும்பழி விலகிட வகைசெயு          மழகோனே  !

விபுத்து வந்தனை யறிகில னெனைநனி 
விளக்கி நெஞ்சினி லிடமது தருமுனை 
வியப்பு டன்துதி செயுமெனை நலமுற       அருள்வாயே !

திருக்கு டந்தையி லுறையுமை சிவனொடு 
சிறப்பு றும்படி வடிவழ கியகுக
தினைப்பு னந்தனி லுலவிடு குறமக        லிணைவோனே !

திளைப்பி லஞ்சன விழியொடு சிலையென 
விருப்பு டன்கரி மகளொடு மணமுறு 
திருப்ப ரங்கிரி யினிலெழி லுறவரு               மயில்வீரா !

வருத்த மும்பட விடுவது மழகிலை
வழுத்தி யுன்றனை வழிபடு மடியரை 
வடித்த நெஞ்சொடு வருதுயர் விலகிட அருள்பாலா!

வனப்பு டன்சடை மதியணி பரமனின் 
மனத்து றைந்திடு அறுமுக வடிவினை 
வணக்க முஞ்செய சகலமு மருளிடு பெருமாளே !

விண்ணுலகம் போற்றும் வியந்து ....!!!

கண்ணுக்குக் கண்ணாகக் காப்பவள் பெற்றவளே 
பெண்ணவளின் அன்பே பெரும்பேறாம்! -உண்டோசொல் 
மண்ணுலகில் தாய்க்கீடு? வையகமும் வாழ்த்திட 
விண்ணுலகம் போற்றும் வியந்து . 

கண்ணே கனிமொழியே கற்கண்டே தெள்ளமுதே 
வெண்மதியும் தோற்றிடும் விந்தைநீ - வண்ணமிகு 
பெண்ணே,நம் காதலைப் பேணிடும் பேரழகை 
விண்ணுலகம் போற்றும் வியந்து . 

கண்டாங்கிச் சேலைகட்டி கார்குழலில் பூச்சூடி 
கண்களிலே மைதீட்டக் காண்போரின் - கண்படுமே! 
வெண்சுடரும் எட்டி விழிவிரித்துப் பார்த்திட 
விண்ணுலகம் போற்றும் வியந்து . 

பண்பாடு காத்துப் பலகலைகள் போற்றிடுவார் 
நுண்மையுடன் கற்றிடுவார் நூற்பாவும் !- பண்புடன் 
எண்ணற்ற வித்தைகற்ற ஈடில்லாப் பாவலரை 
விண்ணுலகம் போற்றும் வியந்து . 

புண்பட்ட நெஞ்சைப் புரிந்துதவி செய்திடும் 
நண்பனைப் போலுண்டோ நல்லுறவு? - மண்ணுலகில் 
திண்ணிய உள்ளமுடன் சீராட்டும் நட்புதனை 
விண்ணுலகம் போற்றும் வியந்து .

ஞாயிறும் உதித்திடுமே !





வெண்மதி வானில் முகிலினுள் மறைந்து 
****விரும்பியே விளையாடும் !
எண்ணிலா விண்மீன் தோழிய ரோடு 
****இனிமையாய்க் கதைபேசும் !
மண்ணுள குளத்தில் தன்முகம் பார்த்து
****மகிழ்ச்சியில் களித்திருக்கும் !
நண்பனின் வரவில் நழுவிட மெல்ல
****ஞாயிறும் உதித்திடுமே !

Thursday, November 10, 2016

கனவே கலையாதே ....!!!



கால்வலிக்கக் காத்திருந்தேன் கண்ணாநீ வருவாயா
பால்முகத்தைக் காணாமல் பாவைவிழி பூத்திருந்தேன் 
சால்புடனே உன்புகழைத் தவிப்புடனே பாடுகின்றேன் 
வேல்விழியும் சோர்ந்ததடா வேடிக்கை போதுமடா !

நதிக்கரையின் ஓரத்தில் நாதனுனை நினைக்கின்றேன் 
கதிநீயே என்றுன்னைக் காதலினால் தேடுகின்றேன் 
குதிபோடு மென்னிதயம் குழலோசை கேட்டுவிட்டால்
கொதிக்கின்ற நெஞ்சத்தைக் குளிர்விக்க வருவாயா ?

கார்மேக வண்ணாவுன் கட்டழகில் மயங்கிவிட்டேன் 
மார்போடு சேர்த்திடவே மாதவனே வந்திடடா 
சீர்மிகவே குழலூதி சீக்கிரமே வந்துவிடு 
தேர்போலுன் கம்பீரத் திருநடனக் காட்சிகொடு !

இளந்தென்றல் தாலாட்டில் எனைமறந்தே கண்ணயர்ந்தேன் 
களையான கள்வனைநான் கனவினிலே கண்டுகொண்டேன் 
உளமார்ந்த நேசமுடன் உறவாடி மகிழ்ந்திருந்தேன் 
விளங்குமெழில் கண்ணனுடன் விளையாடிக் களித்திருந்தேன் !

எண்ணமெல்லாம் அவனினிக்க என்பசியை மறந்திருந்தேன் 
வண்ணமலர்ப் பூச்சூடி  வளையவந்தேன் அவனுடனே 
கொண்டாடிக் களித்தேனே கோகுலத்தில் மன்னனுடன் 
கண்ணனுடன் இணைந்துவிட்டேன் கனவேநீ கலையாதே ....!!!

Wednesday, November 9, 2016

மழலை இன்பம் ....!!!



தவழும் மழலையைத் தாயவள் கண்டால் 
கவலை பறந்திடும் காற்றிலே! தேனாய்  
உவகைப் பெருகிட உள்ளமும் சொக்கிப்
பவனி வருபவள் பார் .

விழிகள் விரிந்திட விந்தையாய்ப் பார்க்கும் 
மொழிக லறிந்திடா மொட்டெனப் பூக்கும் 
அழகாய்த் தவழ்கையில் அம்புலி தோற்கும் 
மழலை நலமுற வாழ்த்து .   

நாணமேன் ....???



மங்கையே பாராய்! நாணமேன் சொல்வாய்! 
****நாயகன் வருகையின் விளைவோ?
செங்கனி வாயில் செவ்விதழ் பூக்க 
****சிந்திய முத்தெனச் சிரிப்போ ?
தங்கமாய் மின்னும் தாரகை வுன்றன் 
****தாமரை நெஞ்சினில் சிலிர்ப்போ ?
திங்களின் ஒளியும் செம்முகில் வனப்பும் 
****சேர்ந்ததாய் அமைந்ததுன் அழகோ ....!!

மஞ்சுள முகத்தில் மங்கள மாக 
****மலர்ந்திடும் புன்னகை யிழுக்க 
அஞ்சன விழியும் அதிசயம் காட்ட 
****அன்னமுன் கைவளை குலுங்க 
கொஞ்சிடும் பேச்சில் குயிலிசை தோற்க 
****கொடியிடை அசைந்திடக் கண்டு 
வஞ்சியே அன்பாய் மன்னனும் அழைக்க 
****வந்திடு வெட்கமும் விட்டே ...!!

உள்ளத்திற் கஃதே உயர்வு .....!!!

முருகனரு ளால்கிடைத்த முத்துப் புகழாம் 
அருணகிரி நாத ரளித்தப் - பெருமைமிகு 
தெள்ளுதமிழ்ப் பாட்டாம் திருப்புகழ் கேட்டிட 
உள்ளத்திற் கஃதே உயர்வு .

தத்தித் தவழ்ந்துவரும் தங்க நிலவென 
சொத்தாய் விளங்கும் சுகமதுவே ! - தித்திக்கக் 
கள்ளமிலாப் பேச்சால் கவரும் மழலைகண்டால்
உள்ளத்திற் கஃதே உயர்வு .

பக்தியுடன் தேவியைப் பாடித் துதித்திட 
சக்தியவள் போக்கிடுவாள் சஞ்சலத்தை! - நெக்குருகி .
வெள்ளைக் கிழமை விரத மிருந்திட 
உள்ளத்திற் கஃதே உயர்வு .

மல்லிகைப் பூவும் மனத்தை மயக்கிடும் 
முல்லை விரியுமே முன்னிரவில் - இல்லத்தில் 
முள்ளில் மலர்ந்திடினும் மொட்டுடன்ரோ சாமணக்க 
உள்ளத்திற் கஃதே உயர்வு .

வளைந்தோடும் ஆற்றின் வழியெங்கும் செந்நெல் 
விளைந்திடும், தென்றலும் வீசத் - திளைத்திடும் 
வெள்ளறுவித் துள்ளி விழுவதைக் கண்டிடில் 
உள்ளத்திற் கஃதே உயர்வு .