Wednesday, May 29, 2019

மனம் போன போக்கெல்லாம் போக வேண்டா ...!!!

மனம்போன போக்கெல்லாம் போக வேண்டா ...!!!
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *  * * * * * * * * * * * 
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டா 
***மதவெறியால் தறிகெட்டுத் திரிய வேண்டா 
சினங்கொண்டு சுடுசொற்கள் உமிழ வேண்டா 
***தீயோரை நட்பாகக் கொள்ளல் வேண்டா 
கனித்தமிழில் பேசுதற்குத் தயக்கம் வேண்டா 
***கடுகளவும் பிறரைப்புண் படுத்த வேண்டா 
புனிதமிகு பண்பாட்டை மறக்க வேண்டா 
***பொலிவான இயற்கைதனைச் சிதைக்க வேண்டா !!

உதவிசெய்ய ஒருபோதும் தயங்க வேண்டா 
***உயிர்களிடம் அன்புகாட்ட மறக்க வேண்டா 
வதந்திகளை அப்படியே நம்ப வேண்டா 
***வருந்துயரால் கவலையிலே மூழ்க வேண்டா 
பதவியினால் பொல்லாங்கு செய்ய வேண்டா 
***பணத்தாலே விலைக்குவாங்க எண்ண வேண்டா 
விதியென்று மூலையிலே முடங்க வேண்டா 
***வியர்வைசிந்த உழைக்காமல் இருக்க வேண்டா !!

முகநூலில் முப்போதும் மூழ்க வேண்டா 
***முகம்தெரியா மனிதருடன் பழக வேண்டா 
சுகம்மட்டும் வாழ்வென்று கருத வேண்டா 
***சோகத்தை இதயத்தில் சுமக்க வேண்டா 
புகழென்னும் போதையிலே திளைக்க வேண்டா 
***பொய்யான காதலொடு திரிய  வேண்டா 
அகல்விளக்காய் ஒளிகொடுக்கத் தயங்க வேண்டா 
***அடைக்காலமாய் வருவோரை வெறுக்க வேண்டா !!

புறங்கூறி நல்லபெயர் வாங்க வேண்டா 
***பொறுப்புகளை உதறிவிட்டுச் சுற்ற வேண்டா 
அறநெறியின் வழியினின்றும் விலக வேண்டா 
***ஆசைகளை அளவின்றிச் சுமக்க வேண்டா 
பிறர்பொருளை அபகரிக்க முயல வேண்டா 
***பெற்றோரைச் சுமையாகக் கருத வேண்டா 
இறப்புவரு மென்றுதினம் அஞ்ச வேண்டா 
***இறைவனது தாள்பற்ற மறவாய் நெஞ்சே !!

சியாமளா ராஜசேகர் 

Friday, May 24, 2019

விழித்தெழு பெண்ணே ....!!!

விழித்தெழு பெண்ணே ...!!!
*************************************
ஆணையும் படைத்த ஆண்டவன் தானே 
அவனியில் பெண்ணையும் படைத்தான் !
ஆணவத் தோடே ஆடிடு வோரை 
அடக்கிட ஏனவன் மறந்தான் ?
நாணமும் மடமும் அச்சமும் பயிர்ப்பும் 
நங்கையர்க் கழகெனச் சொல்வார் !
வீணரால் வாழ்வில்  வதைபடும் போது
வீறுகொண் டெழுவது சரியே !!

மானின மென்பார் மயிலின மென்பார் 
மங்கையே மயங்கிட வேண்டா !
தேனினு மினிய சொற்களா லீர்த்தே 
தேவைகள் நிறைவேற்றிக் கொள்வார் !
ஏனினும் தயக்கம் புறப்படு புயலாய் 
எரிமலை யாய்ப்பொசுக் கிடுவாய் !
நானிலம் போற்ற நன்னடை பழகி 
நற்றமிழ் மகளெனத் திகழ்வாய் !!

காமுகன் கையில் சிக்கிடில் வாழ்வு 
கந்தலாய்க் கிழிபடும் திண்ணம் !
ஆமையைப் போலே ஐந்தையும் அடக்க 
அமைதியாய் வாழ்க்கையும் சிறக்கும் !
தீமைகள் சூழ்ந்த உலகினில் நீயும் 
தென்றலாய்த் தவழ்ந்திட வியலா !
ஊமையாய் வாழ்ந்து பட்டது போதும் 
உண்மையை உணர்ந்திடு பெண்ணே !!

தோள்களில் சுமக்கும் சுமைகளெல் லாமே 
தோல்வியில் முடிவது மில்லை !
கோள்களை நம்பி முயற்சியை விடுத்தால் 
கொள்கையில் நற்பய னில்லை !
நாள்களும் நகரும் ஆண்டுகள் கழியும் 
நலம்பெற வழியெது மில்லை !
மீள்வது கடின மெனக்கரு தாமல் 
மீண்டெழ முயற்சிசெய் வாயே !!

இருளினைக் கிழித்துச் சுடர்விடும் விளக்காய் 
இல்லறம் நல்லற மாக்கு !
கருத்துடன் என்றும் கடமையைச் செய்து 
கனவுக ளைநன வாக்கு !
அருந்தமிழ் போற்றி அறநெறி பேணி 
அகந்தையை அடியொடு நீக்கு !
விரும்பிய வண்ணம் எதிர்நீச்சல் போட்டு 
வெற்றியை உன்வச மாக்கு !!

தடைகளைத் தகர்த்துச் சாதனை படைக்கத் 
தாமதம் இன்னுமேன் சொல்வாய் !
முடங்கிய காலம் முடிந்ததென் றெண்ணி 
முன்னேற்றப் பாதையில் செல்வாய் !
உடைத்திட வியலா நெஞ்சுரத் தோடே 
உயிர்ப்புடன் உலகையே வெல்வாய் !
விடியலைக் காணும் மகிழ்ச்சியில் துள்ளி 
விழித்தெழு ! விழித்தெழு !பெண்ணே !!

சியாமளா ராஜசேகர் 













முருகன் அந்தாதி ...!!!




உலகம் முழுவதும் உன்னருள் வேண்ட
மலர்ந்த முகத்துடன் வாராய் ! - தலையில்
மதிநதி சூடிய மன்றாடி மைந்த!
துதிப்போர்க்கு நீயே துணை . 1.
துணையாய் மயிலும் சுடர்வடி வேலும் 
இணைந்து வருமே எழிலாய் - அணைப்பில் 
உருகி விழிநீர் உகுக்க மனத்தின் 
இருளும் விலகும் இனி. 2.
இனியொரு துன்பம் எனக்கிலை யென்றே 
இனிமையாய்ப் பாடு மிதயம் ! - பனிமலை .
மீதுறை யீசன் விரும்பும் உமைபாலன்
மாதவத் தோனை வணங்கு. 3 .
வணங்கிடும் கைகள் வடிவத்தைக் கண்டே 
இணங்கியதை வேலென எண்ணி - கணமும் 
பொறுக்கா துடனே புயலென வந்து 
மறுக்கா தணைப்பான் மகிழ்ந்து. 4.
மகிழ்ந்தாடும் வள்ளியுடன் வண்ண மயிலில் 
குகனவன் சிந்தை குளிர்ந்தே - புகழ்பாடும் 
அன்பர்தம் துன்ப மகற்ற விரைந்துவந்து 
இன்பம் தருவான் இனிது. 5.
இனிதாம் தமிழை இசையொடு கேட்டுக் 
கனிவாய் மலர்ந்திடும் கந்தன் ! - தனத்தொடு 
ஞான மருளுவன் நாத வடிவினன்
வானவர் போற்றும் வரம் . 6.
வரங்களை நல்கும் வடிவே லவனின்
திருவடி பற்றவினை தீரும் - உருவில் 
அழகன் குமரன் அறுமுகத் தானைத் 
தொழுதிடத் தோன்றும் சுகம். 7.
சுகத்தைக் கருதிச் சுயநலத் தோடே 
அகத்திலன் பின்றி அலைந்தால் - பகைமைதான் 
மிஞ்சிநிற்கும்! வாழ்வினில் வெல்ல குருபரனை
நெஞ்சே நிதமும் நினை . 8.
நினைத்து நினைத்து நெகிழ்ந்து பணிந்து 
நனைந்த மனத்துடன் நைந்தேன் !- அனைத்து 
மறிந்து மறியான்போ லாட்கொளவா ராயேல் 
சிறியேன் பிழைப்பேனோ செப்பு. 9.
செப்பு மொழியாலென் சிந்தை கவர்ந்திடும் 
அப்பனே! வாழ்த்தால் அலங்கரிப்பேன்! - முப்போதும் 
சூட்டுவேன் பாமாலை! தூயனே! நின்னன்பை
ஊட்டிட வாழும் உலகு. 10.
சியாமளா ராஜசேகர்

பாலைவனமானதடா ...!!!


நீரோடும் வைகையிலே நீரு மில்லை
நீள்விழியாள் நெஞ்சத்தில் நேச மில்லை !
காரோடும் வான்வெளியில் காரு மில்லை
காரிகையின் கவின்சிரிப்பில் கனிவு மில்லை !
ஏரோடும் வயலினிலே ஏரு மில்லை 
ஏந்திழையாள் இதழ்களிலே ஈர மில்லை !
தேரோடும் வீதியிலே தேரு மில்லை
தேன்மொழியாள் வார்த்தைகளில் தேனு மில்லை !!
பாலைவன மானதடா பாவை யுள்ளம்
பசுமையான நினைவுகளி லில்லை கள்ளம் !
சோலையிலே மதுமலரைத் தென்றல் மோதும்
சுட்டதுபோல் மலரதுவும் உதிர்ந்தே போகும் !
காலையெழும் இளங்கதிரும் கனலைக் கக்கும்
கன்னத்தில் நீருருள வார்த்தைத் திக்கும் !
ஓலைவரும் நாளதனை எண்ணிப் பார்க்கும்
உடைந்தமனம் விதியைநொந்து திட்டித் தீர்க்கும் !!
சியாமளா ராஜசேகர்

அம்மா !! அம்மா !!


கருவிற் சுமந்தாளைக் கண்ணெனக் காத்தாளை
அருவியாய்க் கொட்டியெனை அன்பில் நனைத்தாளை
உருகும் மெழுகாய் உழைத்தெம்மைப் பேணி
விரும்பியன ஈடேற்றி வெற்றிபெறச் செய்தாளை
மருந்தாய் விளங்கி மனக்காய மாற்றி 
வருத்தந் துடைத்தாளை வாஞ்சைமிகக் கொண்டாளை
இருள்துடைக்கும் பேரொளியாய் என்னுள் நிறைந்தாளைத்
திருத்தாள் பணிந்து தினமும் தொழுவேனே !!
பாலோடு பாசத்தைப் பாங்காய்ப் பகிர்ந்தாளைத்
தாலாட்டுப் பாட்டில் தமிழூட்டி விட்டாளைச்
சேலாடும் கண்களுக்குள் சேயென்னைக் காத்தாளை
வாலாடும் பட்டமாய் வானுயரச் செய்தாளை
மாலோன் மருகனாம் வள்ளிமண வாளனை
வேலோடு வந்து வினைதீர்க்க எம்பொருட்டு
மேலான பத்தியினால் வேண்டித் தொழுதாளை
ஆலாய் விரிந்தாளை அன்புடன் வாழ்த்துவனே !!
சியாமளா ராஜசேகர்

பிள்ளைகளே ...பிள்ளைகளே ...!!!



பிள்ளைகளே பிள்ளைகளே
பெரியோர்சொல் கேளுங்க !
புள்ளினமாய்க் காலையிலே
புத்துணர்வு கொள்ளுங்க !
துள்ளிவரும் மான்களைப்போல்
சுறுசுறுப்பாய் ஒடுங்க !
பள்ளிக்குத் தினம்சென்று
பாடத்தைப் படியுங்க !!
வீட்டுக்குள் முடங்கிடாமல்
விளையாடச் செல்லுங்க !
தோட்டத்தைச் சுற்றிவந்து
தூயகாற்றைச் சுவாசிங்க !
வாட்டமில்லாப் பூக்களுடன்
வாஞ்சையுடன் பேசுங்க !
பாட்டிசொல்லும் கதைகளெல்லாம்
படுத்தபடி கேளுங்க !!
சொற்களிலே இனிமைகூட்டிச்
சுதந்திரமாய்ப் பேசுங்க !
நற்றமிழில் உறவாடி
நாவாரப் போற்றுங்க !
கற்றவித்தை கைகொடுக்கும்
கடவுளென மதியுங்க !
பெற்றோருக் குதவிசெய்து
பிரியத்தைக் காட்டுங்க !
அந்தந்த வேலைகளை
அன்றன்றே முடியுங்க !
சிந்தைக்கு விருந்தளிக்கும்
திருக்குறளைப் படியுங்க !
செந்தமிழே உலகத்தில்
சிறந்ததென்று பாடுங்க !
நந்தமிழர்ப் பண்பாட்டை
நன்றியுடன் பேணுங்க !!
தக்கவழி காட்டும்நற்
சான்றோர்நூல் வாசிங்க !
சிக்கனத்தைக் கடைபிடித்துச்
செம்மையாக வாழுங்க !
அக்கறையாய் உயிர்களிடம்
அன்புகாட்டப் பழகுங்க !
எக்கணமும் மறவாமல்
இயற்கைதனைப் போற்றுங்க !!
விடுமுறையில் உறவினர்கள்
வீட்டுக்குச் செல்லுங்க !
அடுக்கடுக்காய் ஆசையுடன்
அளவளாவி மகிழுங்க !
படுத்திருக்கும் போதினிலே
பழையகதை பேசுங்க !
கடுகளவும் கள்ளமின்றிக்
களிப்புடனே ஆடுங்க !!
அலைபேசி விளையாட்டை
அடியோடு நிறுத்துங்க !
வலைவிரித்தே அடிமையாக்கும்
மயங்கிடாமல் மீளுங்க !
தலைசிறந்த தெய்வமெனத்
தாயைநிதம் வணங்குங்க !
நிலையான மனத்தோடு
நிம்மதியாய் வாழுங்க !!
சியாமளா ராஜசேகர்

Monday, May 13, 2019

அன்பு மகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து ...!!!

அன்பிற் குரியவன் பண்பிற் சிறந்தவன் 
அழகில் மன்மதன் !
கன்னல் மொழியினன் பழக இனியவன் 
கருணை மனத்தினன் !
பொன்னின் நிறத்தவன் பூப்போல் உளத்தவன்
பொலிவில் சுந்தரன் !
என்றன் மகனிவன் என்றும் நலத்துடன் 
இனிதே வாழ்கவே !!

கண்ணின் மணியென மனைவி மக்களைக் 
கருதும் தூயவன் !
எண்ணம் முழுதும் பிறருக் குதவிடும் 
இதயம் படைத்தவன் !
அண்ணன் தம்பியர் அக்கா தங்கையர்
அன்பில் நனைபவன் !
வண்ணக் கனவுகள் விரிய புவியினில் 
வாழ்க வாழ்கவே !!

அன்புமகன் விஜய் -க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் EmojiEmojiEmojiEmojiEmoji


Sunday, May 5, 2019

ஒப்பற்ற தலைவன் ...!!!

நல்லோரைத் தாழ்த்திவிட்டு
அல்லாரை மேலுயர்த்தி
வேடிக்கைப் பார்த்திருக்கும்
ஒருவன் - காட்டும்
வித்தைகளால் வினையகற்றும்
தலைவன் !!
நிலவுக்குள் ஒளியாக
மலருக்குள் மணமாக
மறைவாகத் தானிருக்கும்
ஒருவன் - நான்கு
மறைபோற்றும் ஒப்பற்ற
தலைவன் !
கற்சிலையாய் நின்றாலும்
அற்புதங்கள் பலநிகழ்த்தி
நம்பியவர் நெஞ்சுறையும்
இறைவன் - அவனே
நடத்துகின்ற நாடகத்தின்
தலைவன் !!
சியாமளா ராஜசேகர்

Friday, May 3, 2019

ஐயப்பன் பாடல் ....!!!



  பல்லவி 
                 ************
மனமுருகி உனையழைத்தேன்
     வாராயோ மணிகண்டா ! - உன் 
மலர்ப்பாத தரிசனம்போல் 
     மகிழ்வேதும் இனியுண்டா ?

               அனுபல்லவி 
               ******************
தினம்பாடிக் கதறுவதுன் 
     செவிகளிலே விழவிலையா ? - உன் 
திருவருளைப் பொழிந்திடவே 
      சிறிதேனும் உளமிலையா ??

                  சரணம் 
                  **********
மெய்யென்றே உனைக்கருதி மெய்விதிர்க்க  வேண்டிநின்றேன் 
செய்தவற்றை மன்னித்துச் சேயென்னைக் காத்திடுவாய் 
நெய்யாலே அபிஷேகம் நெஞ்சத்தை உருக்காதோ ?
அய்யப்பா இனியாற்றேன் அன்புடனே அரவணைப்பாய் !!     ( மனமுருகி )

சாந்தமுடன் எழிலுருவில் சந்தனமும் மணக்குதய்யா
ஏந்திவரும் இருமுடியில் என்னிதயம் சிலிர்க்குதய்யா
காந்தமலை ஜோதியிலே கள்ளமனம் கரையுதய்யா
நீந்திவரும் வானலையில் நீகாட்சி தந்திடய்யா !!       ( மனமுருகி )

சியாமளா ராஜசேகர் 

Thursday, May 2, 2019

உணர்வாய் நெஞ்சே ....!!!


இல்லறத்தை நல்லறமாய்ப் பேணி வாழ்ந்தால்
***இல்வாழ்வில் என்றென்றும் அமைதி தங்கும் !
கல்லெறிந்தால் கலங்கிவிடும் குட்டை நீராய்க்
***கவலைகளை நினைத்திருந்தால் குழம்பும் நெஞ்சம் !
பல்வேறு சங்கடங்கள் தொடர்ந்த போதும் 
***பக்குவமாய்க் கலந்துபேசப் பறந்து போகும் !
வெல்லுவழி புரிந்துகொள்ள மூத்தோர் கூற்றை
***விருப்போடு செவிகொடுத்துக் கேட்டல் நன்றே !!

இருகைகள் தட்டினாற்தான் கேட்கும் சத்தம்
***இதையுணர்ந்து கொண்டாலே நீங்கும் பித்தம் !
ஒருவருக்கொ ருவர்விட்டுக் கொடுத்து வாழ்ந்தால்
***ஒருபோதும் நிம்மதிக்கு மில்லை பஞ்சம் !
செருக்கோடு தானென்று மார்தட் டாமல்
***சிறுபிணக்கை முளையினிலே கிள்ளல் வேண்டும் !
வருந்துயரைத் துணிந்துயெதிர் நீச்சல் போட்டால்
***வாழ்க்கையெனும் படகுகரை சேரும் நன்றே !!
பிறைநிலவை குறையென்று நீல வானம்
***பிரித்துவைத்தா தான்மகிழ்ச்சி இரவில் கொள்ளும் ?
குறைகளையே எப்போதும் குத்திக் காட்ட
***குமைந்திருக்கும்‌ மென்மனமும் கனலைக் கக்கும் !
நிறைகண்டால் பாராட்டும் உயர்ந்த வுள்ளம்
***நீடித்த மகிழ்விற்கு வித்தே யாகும் !
உறவுகளை மதித்திருந்தால் மேன்மை பெற்றே
***உயர்ந்திடலாம் வாழ்வினிலே நாளும் நன்றே !!
அன்பென்னும் ஆயுதத்தால் விலகும் துன்பம்
***அதைப்பொழியத் துளிர்விட்டுப் பெருகு மின்பம் !
கன்னலென இன்சொற்கள் பேசி வந்தால்
***காயங்கள் மாறிமனப் புண்ணு மாறும் !
முன்னுக்குப் பின்முரணாய் நடக்கும் பண்பால்
***முடிவின்றித் தொல்லைகளும் தொடர்ந்தே சுற்றும் !
என்றென்றும் இருக்குமிட மறிந்தி ருந்தால்
***இன்பநிலை கூடுமென் றுணர்வாய் நெஞ்சே !!!
சியாமளா ராஜசேகர்