Thursday, March 29, 2018

தங்கநிலா வானிலே ...!!!


தங்கநிலா வானிலே இன்பவுலா போகையில் 
தரணியெலாம் மகிழுதே !
மங்காமல் இரவெல்லாம் ஒளிதந்து காய்கையில்  
வண்ணநிலா கொஞ்சுதே !
வெங்கதிரோன் வரும்வரை நல்லாட்சி செய்கையில்  
விண்ணகமும் குளிர்ந்ததே !!
திங்களொரு நாளிலே விடுப்பெடுத்து மறைகையில்
சிந்தைவாடிக் கலங்குதே !

கண்சிமிட்டும் தாரகைக் கூட்டத்தின் நடுவிலே 
கால்களின்றித் தவழுதே !
விண்முகில்கள் திரையிட அதைமெல்ல விலக்கியே 
விளையாட அழைக்குதே !
வெண்ணிறத்தில் பளிச்சென இருள்துடைத்து விட்டதும் 
மெல்லினமாய்ச் சிரிக்குதே !
மண்ணிலுள்ள குளத்திலே தன்வடிவம் கண்டதும் 
மயக்கத்தில் மூழ்குதே !!

அழகுநிலா கண்பட வாவியிலே அல்லியும்
அரும்பவிழ்த்துச் சிரிக்குதே !
கழனியிலே கதிரெலாம் கவின்நிலவின் ஒளியிலே 
கதைக்கதையாய்ப் பேசுதே !
முழங்கிவரும் அலைகளும் துள்ளலுடன் நனைத்திட 
முழுநிலவு சிலிர்க்குதே !
நிழல்கூட அருகினில் ஓவியமாய்த் தோன்றிட 
நிலவுமுகம் மலர்ந்ததே !!

சியாமளா ராஜசேகர் 

Tuesday, March 27, 2018

சூட்டுவேனே !!

ஆற்றில் நீந்தும் கெண்டை மீனை 
***அன்பே உன்றன் கண்ணில் கண்டேன் !
காற்றில் வந்த உன்றன் பாட்டு 
***காதில் தேனாய்ப் பாயக் கண்டேன் !
ஊற்றெ டுத்த காத லாலென்
***உள்ளம் பூத்தே ஆடக் கண்டேன்  !
ஏற்றுக் கொண்டால் வான வில்லை  
***எட்டிக் கொய்து சூட்டு வேனே ....!!!

நடந்தாய் வாழி காவேரி ...!!!


குடகில் பிறந்து தவழ்ந்துவந்து 
***கொள்ளை யழகாய்க் கரைபுரண்டு 
மடங்கிச் செல்லும் வழியெங்கும் 
***மயங்க வைக்கும் கவின்நதியாய் 
அடவி செழிப்பில்  மலர்ந்தபடி 
***அலைகள் கொஞ்சி விளையாட 
நடந்தாய் வாழி  காவேரி 
***நலமே விளைவித் தாய்நீயே !

தென்றல் குளிர்ந்து தாலாட்ட 
***திங்கள் ஒளியில் பொன்னாயுன்
மின்னும் எழிலைப் பருகுதற்கு 
***விழிக ளிரண்டு போதாதே !
உன்னைக் கண்ட மாத்திரத்தில் 
***உவகை யுடனே கவிபிறக்கும் !
நின்னை வணங்கும் கன்னியரின்
***நெஞ்சம் மகிழ வைத்தாயே !

போகும் பாதை எங்குமன்று 
***புனித மாக்கிச் சென்றிருந்தாய் !
தாகம் தீர்க்க ஏன்மறந்தாய் 
***தமிழர் குரலைக் கேளாயோ ?
பாகு பாடே இல்லாமல் 
***பாய்ந்து வரவே விழைகின்றோம் !
வேக மாகத் தடைதாண்டி 
***விரைந்து நீயும் வருவாயே ..!!!

( மா மா காய் )

சியாமளா ராஜசேகர் 

நீர் - முதல் சொல்

இயற்கையழகு...!!!
*************************
நீரோடும் காவிரியில் நீந்துகின்ற சிற்றலைகள் 
ஏரோடும் நெல்வயலை இன்பமுடன் கண்டோடச் 
சீரோடு வானுலவும் வெண்ணிலவைத் தொட்டணைக்கக்
காரோடும் கோலத்தைக் காண்.

இஃதின்றேல் ....!!!
************************
நீரின்றேல் வாழ்வு நிலத்தில் கிடையாது 
தேரின்றேல் வீதியில் தெய்வமுலா வந்திடாது 
மாரியின்றேல் தாவரங்கள் மண்ணில் செழிக்காது  
காரின்றேல் வானழகா காது.

ஒரு விகற்ப இன்னிசை வெண்பா)

சியாமளா ராஜசேகர் 

மடமையைக் கொளுத்துவோம் !!!

பெண்மையைப் போற்றிப் பேணிடும் நாட்டில்
***பெருமைகள் குறைவறக் கூடும் ! 
கண்ணிமை போலே காத்திடும் பெண்ணால்
***கவலைகள் தலைதெறித் தோடும் !
திண்மையாய் நாளும் நன்னெறி பேணச்
***செம்மையாய்த் திகழ்ந்திடும் வீடும் !
புண்பட அவளை வார்த்தையால் தைத்தால்
***பொங்கிடு முள்ளமும் வாடும் !!!
வித்தென விளங்கி விருட்சமாய் வளர்த்து
***வெற்றியை வசப்பட வைப்பாள் !
மத்தளம் போலும் அடியிரு பக்கம்
***வாங்கினும் தன்னிலைத் தளராள் !
எத்தனை யிடர்கள் எதிர்ப்படும் போதும்
***இரும்பெனத் தாங்கிடும் மங்கை
சத்தியம் காத்துக் கடமையைச் செய்து
***சாதனை படைத்திடத் துடிப்பாள் !!!
வேதனை வரினும் ஒடிந்துவி டாமல்
***வேரெனத் தாங்குவாள் அவளே !
மாதவ மென்றே மங்கையர் வாழ்வை
***மண்ணிலே மாண்புறச் செய்வோம் !
பேதமே யின்றிச் சமத்துவத் தோடு
***பெண்மையை உலவிட வைப்போம் !
மாதரை இழிவாய் நடத்திடத் துடிக்கும்
***மடமையைக் கொளுத்திடு வோமே ...!!!

என்னுயிர்த் தோழி ...!!!

எனக்கோர் தோழி இருக்கின்றாள் 
***என்னுள் கலந்தே உயிர்க்கின்றாள் ! 
மனத்தில் உழலும் துயரறுக்க 
***மௌன மொழியாய்த் துணையிருப்பாள் ! 
வனப்பாய் வளைய வந்தவளும் 
***மன்றந் தனிலே சிறக்கவைப்பாள் ! 
கனவில் கூடத் தோன்றிடுவாள் 
***கருத்தாய் வடிவம் காட்டிடுவாள் !! 

இயல்பாய் வருவாள் சிலநேரம் 
***இழுத்தும் வருவேன் சிலநேரம் 
தயவாய் வருவாள் சிலநேரம் 
***தவிக்க விடுவாள் சிலநேரம் 
மயங்கச் செய்வாள் மரபினிலே 
***மையல் கொண்டே அரவணைப்பேன் ! 
முயன்றும் தோற்பேன் அவளிடத்தில் 
***முடிவி லிணைவேன் வெற்றியுடன் !! 

அள்ளு மழகைப் படம்பிடித்தே 
***அவளுள் செதுக்கிக் களித்திடுவேன் ! 
முள்ளாய்த் தைக்கும் கொடுமைகளை 
***முனைந்து முடிந்து வைத்திடுவேன் ! 
கள்ள மில்லாக் காதலையும் 
***கனிவா யினிதே கலந்திடுவேன் ! 
கிள்ளை மொழியாய்ப் பிதற்றிடினும் 
***கிறுக்காய்த் தொடர்வேன் அவளுடனே !! 

மின்னல் கீற்றாய் வெளிப்பட்டே 
***மிடுக்காய் நடையில் கவர்ந்திடுவாள் ! 
தென்றல் காற்றாய் வருடிவிட்டுச் 
***சிலிர்த்த இதயம் நனைத்திடுவாள் ! 
என்றன் இனிய தோழிக்கே 
***இனிதாய் வாழ்த்து பாடிடுவேன் ! 
கன்னல் பெண்ணாம் கவிதையவள் 
***கண்ணின் மணியாய் வாழியவே !! 

சியாமளா ராஜசேகர்

காதற்சுவையில் கவினுறும் இலக்கியங்கள் ...!!!


சங்ககால இலக்கியத்தில் பேசப் பட்டத்
***தகைமையுடன் திகழ்ந்ததிந்த உண்மைக் காதல் !
சிங்கமெனக் கம்பீர நடையைக் கொண்ட 
***சேரமன்னன் ஆட்டனத்தி அழகில் சொக்கி
மங்காத புகழுடைய கரிகால் சோழன்
***மகளான ஆதிமந்தி மையல் கொண்டாள் !
பொங்கிவரும் ஊற்றாகக் கவிதை பாடும்
***புலமையொடு நாட்டியமும் கற்றி ருந்தாள் !!
ஆட்டனத்தி கழார்த்துறையில் நடன மாட
***அவனுடனே காவிரியு மிணைந்தே ஆட
நாட்டமிகக் கொண்டவளும் கூந்தல் தன்னில்
***நாசுக்காய் மறைத்துள்ளே இட்டுச் செல்லக்
கூட்டத்தார் கண்முன்னே ஆற்றுள் போனாள்
***கோமானும் ஒதுங்கினனே கரையி னோரம் !
மீட்டவனைக் காப்பாற்றி மருதி யென்பாள்
***வேந்தனுடன் வாழ்ந்துவந்தாள் அன்பு கொண்டே !!
காதலனைக் கண்டீரோ என்று கேட்டுக்
***கண்ணீரோ டூரூராய் அலைந்தாள் ஆதி !
வேதனையால் பேதுற்றுப் புலம்பிப் பொங்கி
***மெல்லியலாள் வழிநெடுகத் தேடி னாளே !
பேதையவள் உருக்குலைந்து மயக்க முற்றுப்
***பிதற்றியதை மருதியுந்தான் கண்டு கேட்டாள் !
மாதரசி தன்னிணையை ஒப்ப டைத்தாள்
***வலிமிகவே தனைக்கடலுள் மாய்த்துக் கொண்டாள் !!
உண்மையானக் காதலுக்குத் தோல்வி யில்லை
***எடுத்தியம்பும் இக்கதையில் வஞ்ச மில்லை
கண்மணியாய்க் காத்திருத்து விட்டுத் தந்த
***கற்பரசி மருதிக்கு மீடே யில்லை
வண்டமிழில் இலக்கியங்கள் காட்டு மிந்த
***மகத்தான காதலிலே அழகும் அள்ளும் !
எண்ணற்ற கவின்காதல் கதைகள் கொண்ட
***இலக்கியங்கள் நிலைத்திருக்கும் நெஞ்சில் நன்றே !!
சியாமளா ராஜசேகர்

Friday, March 23, 2018

நொண்டிச் சிந்து ...!!!



பொன்னந்தி மாலையி லே - பூக்கள் 
***பூத்துக்கு லுங்கிடும் சோலையி லே !
சின்னக்கு யில்கூவு தே - சேர்ந்து 
***செல்லமாய்க் கிள்ளையும் கொஞ்சிடு தே !!

பொன்வண்டு சுற்றிவ ரும் - அது 
***பூவுக்குள் தேனுண்டு பாட்டிசைக் கும் !
அன்னமி ணையுட னே - அங்கு 
***அன்புடன் தண்ணீரில் நீந்திடு மே !!

மேகத்தைக் கண்டது வோ - தன் 
***மேனிசி லிர்த்திட நின்றது வோ ?
தோகைவி ரித்தாடு தே - மஞ்ஞை 
***தோம்திமித் தோம்தாளத் தோடாடு தே !!

காவிநி றக்கதி ரோன் - மேற்கில் 
***கண்மறை வாய்ச்சென்று ஓய்வெடுப் பான்!
வாவிக்குள் தாமரை யும் - சற்று 
***வாட்டமுற் றேயிதழ் கூம்பிவி டும் !!

மெல்லயி ருள்பட ரும் - அங்கு 
***மெல்லிசை யாயிளந் தென்றல்வீ  சும் !
அல்லிமு கம்விரி யும் - வெண்
***அம்புலி வானில்த வழ்ந்துவ ரும் !!

காதல்நி னைவுக ளே - என் 
***கண்மணி யைவரச் சொல்லுங்க ளே !
கீதமி சைத்திடு வேன் - அதைக் 
***கேட்டவள் வந்திடில் பூத்திடு வேன் !!

சியாமளா ராஜசேகர் 



Sunday, March 18, 2018

ஆனந்தக் களிப்பு ...!!!

ஏழு மலைகளைத் தாண்டி - நிற்கும் 
***எம்பிரான் சேவடி யைத்தொழ வேண்டி 
பாழு மனத்திலோர் ஆசை - கொண்டு 
***பாவிநான் பக்தியாய்ச் செய்தேனே பூசை !

கோவிந்தா கோவிந்தா என்றே - என் 
***கூக்குரல் கேட்டதோ கூப்பிட்டான் இன்றே !
ஆவித் துடித்திடச் சென்றேன் - அந்த 
***ஆன்மீக நாட்டத்தில் தேனமு துண்டேன் !

வேங்கட வாசனைக் கண்டேன் - என் 
***மேனி சிலிர்த்திடப் பூரித்து நின்றேன் !
பாங்காய வன்திருக் கோலம் - வந்து
***பார்ப்பவர் நெஞ்சில் பதிந்திடும் நாளும் !

சங்குடன் சக்கரம் கொண்டு - சேவை 
***சாதிக்கும் எம்பெரு மானெழில் கண்டு 
பொங்கி வழிந்தது பாட்டு - நீயும் 
***பூத்தாடு ஆனந்தத்  தோடிதைக் கேட்டு !!

சியாமளா ராஜசேகர் 

உயிர்த்திசை ...!!!


கருவிற் சுமந்து கனிவா யனுதினம் காத்திடுவாள் 
உருகி யவளு முதிரம் புகட்டி உயிர்நனைவாள்
திருவாய்க் குருவாய்த் திகழ்ந்து தவற்றைத் திருத்திடுவாள் 
பெருமைக் குரியவள் பெற்றவ ளன்றிப் பிரிதெவரே ??

அன்பைப் புகட்டி யறிவைப் பெருக்கி யகங்குளிர்வாள்
இன்னல் வரிலோ இதய முடைந்தே இறைதுதிப்பாள் 
தன்னை வருத்தித் தனதுயிர்ப் பிள்ளைகள் தாங்கிடுவாள் 
என்றும் நிழலாய் இனிதே தொடரும் இயல்பினளே !

நெஞ்சி லுரத்தொடு நேர்மையாய் வாழ்வை நெறிப்படுத்திப் 
பிஞ்சு மழலைகள் பேணி வளர்ப்பாள் பிரியமுடன் 
துஞ்ச மறந்து சுயத்தை அவளும் தொலைத்திடுவாள் 
வஞ்ச மிலாளை மடிசுமந் தாளை வணங்குகவே !

இன்முகத் தோடவள் இல்லறம் பூக்க இனிதுவப்பாள் 
பன்முக ஆற்றலால் பக்க பலமாய்ப் பரிவளிப்பாள்
தன்னல மில்லா தனித்துவ மிக்கவள் தாயவளே 
அன்னையின் பாசம் அளவுகோ லில்லா அதிசயமே !

ஓய்வொழி வின்றி உடலினால் தேயினும்  உன்னதமாய்த்   
தூய்மையைக் காத்துச் சுகமருள் தெய்வ சொரூபமவள்
தாய்மடி யில்தலை சாய்த்திடத்  துன்பம் சரியுமெனச்  
சேய்மனம் ஆறுதல் தேட விழையும்  தெளிவுடனே ! 

( கட்டளைக் கலித்துறை)

Wednesday, March 14, 2018

நினைவுகளின் மயக்கத்தில் ...!!!

நினைவுகளின் மயக்கத்தில் நித்திரையும் தொலைத்தேன்!
***நெஞ்சமெனும் ஆழ்கடலுள் அலைமோதக் கண்டேன்!
எனைமறந்த நிலையினிலே கனவுகளில் மிதந்தேன்!
***இதயத்தில் தேன்சாரல் நனைத்ததனால் உயிர்த்தேன்!
தினமுன்றன் வரவுக்காய்ச் சோலையிலே பூத்தேன்!
***தென்றலென்னை உரசுகையில் மெய்சிலிர்த்து நின்றேன்!
மனைவியென்ற உரிமையினைத் தந்தாயேல் மகிழ்வேன்!
***மாலைசூடும் நாளையெண்ணி வளையவரு வேனே!!

அழகிய மொட்டே ...!!!


அவிழத் துடிக்கும் அழகிய மொட்டே !
***அடுக்கி வைத்த இதழ்களை விரிப்பாய் !
குவிந்து நீயும் கும்பிடும் கைபோல் 
***கோல வடிவாய் விளங்கிடு மெழிலைக்
கவிதை செய்வேன் படித்ததை மகிழ்வாய் !
***கதிரின் வரவில் கவினுற மலர்வாய் !
தவித்து  வந்த வண்டதன் தாகம் 
***தணிக்க மதுவை வழங்கிடு வாயே  !!

உன் நினைவு கொல்லுதடி ...!!!

முப்போதும் உன்நினைவு முந்திவந்து கொல்லுதடி!
செப்புமொழி கேட்டால் சிலிர்க்குதடி! - அப்பப்பா!
கட்டழகு பொற்சிலையே! காதலொடுன் கண்ணென்மேல்
பட்டாலே போதுமடி பார்.

கனவு மெய்ப்பட வேண்டும் ...!!!

காவிரி யாறு தடைகளை யுடைத்துக் 
***கழனிகள் செழிப்புறும் வண்ணம் 
பூவிரி புனலாய் நனிநடம் புரிந்து 
***பொழிலிடைப் பாய்ந்திட வேண்டும் !
தூவிடும் மேகம் நிலத்தினை நனைத்துத் 
***துயருறும் மேழியர் வாழ்வின் 
தேவைக ளறிந்து வளத்தினைக் கூட்டச்
***சீருடன் பொழிந்திட வேண்டும் !!

கண்ணியத் தோடு கடமைக ளாற்றும்
***கறையிலாத் தலைமையும் வேண்டும் !
அண்டையர் நாடும் வியந்திடும் வண்ணம் 
***ஆட்சியை நடத்திட வேண்டும் ! 
பண்டன மின்றிப் பார்புகழ் நாடாய்ப் 
***பாரதம் விளங்கிட வேண்டும் !
தண்டமிழ் மொழியே தனித்துவ மாகத் 
***தரணியை யாண்டிட வேண்டும் !

பெண்களை மதித்துப் பெருமையாய்க் கருதிப் 
***பேறெனப் பேணிட வேண்டும் !
மண்மிசை பிறந்த பல்லுயிர் யாவும் 
***வளத்துடன் வாழ்ந்திட வேண்டும் ! 
கண்ணெனப் போற்றி யாவரும் கருத்தாய்க் 
***கல்வியைக் கற்றிட வேண்டும் !
விண்டலம் முட்டச் சாதனை படைத்து 
***வெற்றிகள் குவித்திட வேண்டும் !

வறுமையை யொழிக்கத் தீட்டிடும் திட்டம் 
***வண்ணமாய்ச் செயல்பட வேண்டும் !
சிறுமைகள் கண்டால் பொங்கியே எழுந்து 
***தீயெனப் பொசுக்கிட வேண்டும் !
பொறுமையிற் சிறந்தே  இனவெறி களைந்து
***பொதுநலம் காத்திட வேண்டும் !
கறையற விளங்கும் குருவுடை  வாழ்த்தில் 
***கனவுகள் மெய்ப்பட வேண்டும் !!!

( மேழியர் - உழவர் ; பண்டனம் - போர் )

சியாமளா ராஜசேகர் 

சிங்காரப் பைங்கிளியே ...!!!

சிங்காரப் பைங்கிளியே அசைந்சைந்து வாராய்!
செவ்வலகால் கொத்தியொரு சீட்டெடுத்துத் தாராய்!
இங்கிதமாய் நற்சேதி எனக்கின்று வந்தால்
இதயத்தில் அன்பொழுக நெல்மணிகள் தருவேன்!
செங்கனிவாய் யெழில்கண்டு வடித்திடுவேன் பாட்டு
சிந்தையெலாம் இனித்திடுமுன் கொஞ்சுமொழி கேட்டு!
தங்கத்தில் இருந்தாலும் கூண்டுனக்குச் சிறைதான்
தட்டியதைத் திறந்திடுவேன் பறந்தோடு வாயே!!
சியாமளா ராஜசேகர்

வஞ்சித்தாழிசை ...!!!

நற்பெய ரீந்திடும் 
வெற்றிக ளீட்டிடும்
சுற்றிடும் பூமியில் 
நற்றுணை கல்வியே !!

தெளிவுறு சிந்தையும் 
ஒளிர்ந்திடும் ஞானமும் 
களிப்புடன் நற்புகழ் 
அளிப்பது கல்வியே !!

நல்லவை கூட்டிடும்  
அல்லவை யோட்டிடும் 
வல்லமை வாய்ந்ததாம் 
நல்வரம் கல்வியே !!

சியாமளா ராஜசேகர் 

மகளே!!



மலரின் மணமாய் மனத்தி லுறைந்தாய்
நிலவி னொளியாய் நிறைந்தாய் - சலன
மகற்றித் தெளிவு மமைதியுந் தந்தாய் 
மகளே!நீ வாழ்வின் வரம் . 1.
வரமாய்க் கிடைத்த மழலை விருந்தை 
விரும்பிச் சுவைத்து வியந்தேன் ! - கரும்பின் 
இனிப்பாய்ப் பரவ இதயம் குளிரக் 
கனிந்து வனைந்தேன் கவி . 2.
கவியின் கருவாய்க் கமழ்ந்து கலந்தாய் 
தவித்த மனத்தைத் தணித்தாய்! - செவியில் 
குயிலாய் ஒலித்தாய்! குரலால் கவர்ந்தாய்!
உயிரே!நீ தானென் உலகு . 3.
உலகி லுனைவிட வொன்றுமுயர் வில்லை 
மலைத்தேன்நீ யென்றே மலைத்தேன்! - நிலவும் 
குனிந்துனைப் பார்த்துக் கொடுத்தனுப்பும் முத்தம் 
பனித்துளி யாகப் பறந்து. 4.
பறக்கு மியல்பைப் படைத்தவன் தந்தால் 
சிறகு விரித்தழைத்துச் செல்வேன் !- உறங்கும் 
பொழுது மடியிலிட்டுப் பொன்போல்தா லாட்டிப்
பொழிவேன் கவியால் புகழ்ந்து. 5.
புகழில் மயங்கிடாப் புத்தி யுடனே 
மகளே! புவியில் வளர்வாய் !- முகத்தில் 
அறிவொளி வீச அமைதி தவழ 
சிறப்புற வாழ்வாய் தெளிந்து .6.
தெளிந்த மதியொடு தீந்தமிழ் கற்றுக்
களிப்பாய்! அழியாமல் காப்பாய் ! - துளியும் 
தயக்க மிலாதுநம் தாய்மொழி பேணி 
மயக்கம் தவிர்த்து மதி . 7.
மதிப்பொடு நட்பை வரமாய் நினைப்பாய் 
நதிபோல் வளைந்து நகர்வாய் ! - எதிலும் 
பொறுமை யுடனே புரியும் செயலால் 
சிறுமை யொழித்துச் சிதை. 8.
சிதைய விடலாமா செம்மொழிப் பற்றை 
எதையும் துணிவாய் எதிர்கொள் ! - விதைப்பாய் 
மனத்தினு ளன்பை! மடமை தகர்க்க 
முனைந்துநீ செய்து முடி . 9.
முடியுமென்றே நம்பி முயன்றால் முடியும்
விடியல் பிறக்கும் விரைவில் ! - துடிப்பாய்ச்
செயலாற்றி என்றென்றும் திண்மையுடன் நெஞ்சில்
மயலகற்றிக் கொள்கை மலர்த்து. 10.

புன்னகைக்கும் மொட்டு !!!

சேலாடும் பொய்கையில் செம்மலர்கள் சேர்ந்தாடும் 
தாலாட்டும் தென்றலில் தள்ளாடி! - பாலாடை 
மேகங்கள் வானில் மிதக்கு மெழிற்கண்டு 
மோகமுடன் புன்னகைக்கும் மொட்டு .

ஹைக்கூ ...!!!

நடை பயிற்சி 
புத்துணர்சி அளிக்கிறது 
சூடான தேநீர் !


படித்த கவிதை 
நெகிழ வைக்கிறது 
தாய்ப்பாசம் !

மலைவழியில் ....!!

அழகழகாய் வானத்தில் முகில்வரையும் கோலம்
****அழித்தழித்து மீண்டுமது வடிவாகும் ஜாலம் !
கிழக்கிலெழும் பரிதியொளி பட்டருவி மின்னும்
****கிள்ளையொடு குயில்பாட்டும் எழிலூட்டும் இன்னும் !
வழிநெடுக குரங்கமர்ந்து வரவேற்பு சொல்லும் 
****வளைந்தமலைப் பாதையோர மரக்கிளையில் தொங்கும் !
வழுக்கிவிடும் பாறைகளில் மந்திவிளை யாடும்
****வயிற்றிலதன் குட்டியுடன் அங்குமிங்கு மோடும் !!
தின்பண்டம் வைத்திருந்தால் அபகரித்துப் போகும்
****திரும்பியதை நோக்கிடிலோ முகமுழுதும் வேகும் !
தன்னிணையை முன்னமர்த்திப் பேனெடுத்துத் தின்னும்
****தாவியது கிளைகளிலே சாகசத்தைக் காட்டும் !
முன்னோரைக் கண்டமனம் குதூகலித்தே ஆடும்
****முத்தமிழுள் முதற்றமிழில் கவியெழுதிப் பாடும் !
புன்னகைத்து நட்புடனே படம்பிடித்துக் கொள்ளப்
****பூரிப்பில் மந்தியது பல்லிளிப்ப தழகே !!

தீநாக்குத் தீண்டட்டும் ...!!

சின்னஞ் சிறுமலரைத் தேவதையாய் வந்தவளைக்
கொன்று குழிபுதைத்த கூட்டமெங்கே? - வன்கொடுமை
செய்யுஞ் சிரியரைத் தீநாக்குத் தீண்டட்டும்
கொய்தெறி யட்டும் குடல்/குறி.

ஓல மிடுதே உளம் !!!



கோல விழியழகே! கொஞ்சுங் குரலழகே!
சோலை மலரழகே! தோகையளே! - காலழைக்கப்
பாலை நிலத்தினிலே பாழுமுயிர் விட்டனையோ?
ஓல மிடுதே உளம்.

ஒட்டியுற வாடும் உளம் !!!



மெட்டியொலி சந்தமொடு மெல்லிடையாள் கொஞ்சிவரத்
தொட்டு விளையாடத் தோன்றுதே! - கட்டவிழ்த்து
விட்டாற்போல் மையலுடன் மீட்டிடவே தான்நினைத்(து)
ஒட்டியுற வாடும் உளம்.

உருகியழை !! ( ஒற்றிலா வெண்பா )



குருகு கொடியொடு கோல மயிலி
லிருவ ருடனே யினிதா - யருள
வருவா யெனவே வடிவே லவனை
உருகி யுருகி யழை.

ஒற்றிலா வெண்பா !!

கனிமொழி யாளொடு காதலி லூட
வனிதை யுளமது வாட - இனியா
ளவளி னெழிலை யழகு தமிழி
லுவகை யுடனெழுத வோ?

சிந்தையினிக்க வருவாளோ ??

தென்றல் தவழ்ந்துவரத் தென்னங் கீற்றசையத்
திங்கள் முகங்காட்டும் நேரம் !
பொன்னாய் ஒளிவீசிப் பொலிவாய் முகில்திரைக்குள்
புதைந்த கதிர்மறைந்து போகும் !
கன்னல் மொழிபேசிக் கருத்தைக் கவர்ந்தவளைக் 
கண்கள் எதிர்பார்த்துப் பூக்கும் !
அன்பில் அகமலர அள்ளும் அவள்நினைவில்
அன்றில் புள்ளுளறல் கேட்கும் !
அன்னம் நீந்திவர ஆடும் சிற்றலையின்
அழகோ இதயத்தை யள்ளும் !
மின்னும் தாரகைகள் மெல்ல கண்சிமிட்ட
மிஞ்சும் உணர்வலைகள் கொல்லும்!
பின்னல் சடையினிலே பிச்சி சூடியவள்
பித்தா யாக்கிவிட்டாள் உள்ளம்!
சின்ன இதழ்விரித்துச் சிந்தும் மதுமலராய்ச்
சிந்தை யினிக்கவரு வாளோ ??
சியாமளா ராஜசேகர்

வஞ்சியவள் பேரழகே ...!!!

கல்லெல்லாம் கலைவண்ணம்
***கன்னியவள் சிலைவண்ணம்
சொல்லெல்லாம் தமிழ்வண்ணம்
***சுவையெல்லாம் மதுவண்ணம்
முல்லைப்பூச் சிரித்தாற்போல் 
***முத்துப்பல் பால்வண்ணம்
வில்லாக வளைந்தழகாய்
***விளையாடும் விழிவண்ணம் !

கருங்கூந்தல் கார்வண்ணம்
***கால்கொலுசோ இசைவண்ணம்
மருதாணி யிட்டகையோ
***மயங்கவைக்கும் செவ்வண்ணம்
இருந்தாலும் இல்லாப்போல்
***இடையசையும் எழில்வண்ணம்
விருந்தாகும் காதலுக்கு
***விரலெழுதும் கவிவண்ணம் !

எண்ணத்தில் என்றென்றும்
***இனித்திருக்கும் அவள்வண்ணம்
கண்ணுக்குள் காந்தமென
***கவர்ந்திழுக்கும் கவின்வண்ணம்
விண்தோன்றும் வில்லாக
***விளங்குகின்ற பலவண்ணம்
வண்ணத்தில் வனைந்திடுவேன்
***வஞ்சியவள் பேரழகே !!
சியாமளா ராஜசேகர்

இயற்கை அழகே ....!!!


உதய கதிரும் உலவும் நிலவும்
மிதக்கும் முகிலும் வியப்பே ! - நிதமும்
விழிக்கு விருந்தாய் விளங்கிடும் வானின்
எழிலைப் பருகிட இன்பு .
வயலும் வரப்பும் வருடும் வளியும்
மயக்கும் மலரும் வனப்பே ! - இயற்கை
அளித்த கொடையாம் அருவி அழகில்
களிக்கும் மனமும் கனிந்து.
வளரும் இரவில் மதியின் ஒளியில்
குளத்தில் மலர்ந்த குவளை - உளத்தைக்
கவரும்; பகலில் கமலம் விரிய
உவகை பெருகும் ஒளிர்ந்து .
ஒலிக்கும் கடலில் உருண்டுவிளை யாடிப்
பொலிவாய் அலைகள் புரளும் ! - வலித்த
கணத்தில் நுரைகளைக் கக்கித் திரும்பும்
இணக்க முடனே இனிது .
கருத்த முகில்திரளக் கண்டுமயி லாட
விருந்தாய்த் துளிகள் விழுமே ! - மருட்டும்
மனத்தை நனைத்து மகிழ்வுறச் செய்து
வனப்பைக் கொடுக்கும் மழை .
உயர்ந்த மலைகள் உறைபனி போர்த்தி
மயங்கிக் கிடக்கும் வடிவாய் ! - அயர்ச்சி
விலகும்; அமைதி மிளிர அகமும்
மலர்ந்து சிரிக்கும் வரம் .
அடர்ந்த வனமும் அழகிய ஆறும்
கடலும் விரிவானும் கண்டால் - தொடரும்
இனிமை சுகங்கள் இதயத்தை மீட்டக்
கனியும் இயல்பாய்க் கவி .
(இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள் )
சியாமளா ராஜசேகர்

ஹைக்கூ ...!!!


திரண்ட மக்கள் கூட்டம்
வேடிக்கை பார்க்கிறது 
தேருக்குள் சாமி!
பொய்க்கால் குதிரை
திருவிழாவில் களை கட்டுகிறது
சீட்டாட்டம்!
பாட்டுக் கச்சேரி
பரவசம் தரும்
பவளமல்லி வாசம்!

ஹைக்கூ ...!!

விளைந்த செங்கரும்பு
சுவைக்க இனித்தது
செந்தமிழ்!
அமோக விளைச்சல்
பூரிப்பில் விவசாயி
பிறந்தது ஆண்குழந்தை!
கரும்புத் தோட்டம்
நினைத்தாலே இனிக்கும்
இளமைக் குறும்பு!

ஆயர்பாடி மாளிகையில் .....!!!!


கார்முகில் வண்ணன் கவின்மிகு மதனன்
***கண்ணனின் கனிமொழி கரும்பு !
சீர்மிகு செல்வச் சிறுமிய ரோடு 
***சேர்ந்தவன் செய்திடும் குறும்போ
ஈர்த்திடு முள்ளம்; எவரையும் சுண்டி
***யிழுத்திடு மவனது வனப்பு !
மார்புடன் அணைத்து மகிழ்ந்திடத் தோன்றும்
***மாயனை நெஞ்சமே விரும்பு !!
குறுநகை சிந்திக் குழலினை ஊதிக்
***குமரியர் இதயமும் கவர்வான் !
நறுமலர் சூடி நடந்திடு மழகு
***நங்கையர் கூந்தலை யிழுப்பான் !
சிறுவிர லாலே தயிர்க்குட முடைத்துத்
***திருடிய வெண்ணையை யுண்பான் !
பொறுப்புடன் வாயைப் பொத்தியே தாய்முன்
***புன்னகை யோடதை மறுப்பான் !!
கொஞ்சிடும் அன்னை குளிர்ந்திடும் வண்ணம்
***கோகுல பாலனும் சிரிப்பான் !
அஞ்சன விழியாள் அகமகிழ் வுறவே
***அபிநயத் தோடவன் நடிப்பான் !
நெஞ்சினி லினிக்கும் கதைகளைக் கேட்டு
***நிறைவுடன் நிம்மதி கொள்வான் !
பஞ்சணை யின்றித் தாய்மடி தேடிப்
***பாந்தமாய்ப் பாலகன் படுப்பான் !
ஆரிர ராரோ தாயவள் பாட
***ஆயனும் மெய்மறந் திடுவான் !
காரிருள் சூழும் வேளையில் கண்ணன்
***களைப்புடன் கண்ணுறங் கிடுவான் !
சீரிளம் சிங்கம் விழியிமை மடித்துச்
***செல்லமாய்த் துயின்றிடும் போழ்தில்
சூரிய ஒளியாய் மின்னிடு மெழிலில்
***சொர்க்கமும் தோற்றிடுந் தானே !!
( எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )