Thursday, September 28, 2017

சித்தங் குளிர நீ பாடு ....!!!

கன்னல் பேச்சில் மலர்ந்திருந்தேன்!
கன்னித் தமிழில் கனிந்திருந்தேன்!
உன்றன் பாட்டில் குளிர்ந்திருந்தேன்!

உன்னில் பழுதே இல்லையய்யா!
இன்னும் இன்னும் செவிகுளிர
என்றும் கேட்க விழைகின்றேன்!
அன்னைக் கில்லை பிடிவாதம்
அன்பா யுணர்த்த வந்தேனே!!

முத்தா யொளிரும் பிள்ளையுனை
மூட னென்றா நான்நினைப்பேன்?
சொத்தாய்த் தமிழுன் வசமிருக்கச்
சொர்க்க மதிலே உளம்நனைவேன்!
மெத்த வறிந்த உன்றனுக்கு
மின்னல் வீச்சும் விரல்நுனியில்
சித்தங் குளிர கவிபாடு
தெவிட்டா வரங்கள் தருவேனே!


( இலந்தை ராமசாமி ஐயா அவர்களின் கவிதைக்குப்
பின்னூட்டமாக எழுதியது !) 

மெட்டுக்குப் பாட்டு ...!! ( ராசாத்தி ஒன்ன )


தாலாட்டுப் பாடும் தாயான தாலே நெஞ்சத்தில் பூப்பூத்தது/
தாலாட்டுப் பாடும் தாயான தாலே நெஞ்சத்தில் பூப்பூத்தது/
தாலாட்டுப் பாடும் தாயான தாலே நெஞ்சத்தில் பூப்பூத்தது/
தாலாட்டுப் பாடும் தாயான தாலே நெஞ்சத்தில் பூப்பூத்தது/
அழும்பிள்ளை சத்தம் அதுதீர்க்கும் பித்தம் /
அம்மாவின் உள்ளம் பாடுது /
( தாலாட்டுப் பாடும் தாயான தாலே நெஞ்சத்தில் பூப்பூத்தது )

சரணம்:1
************
கன்னத்தினில் இச்இச்சென கொஞ்சித்தரும்  முத்தத்துளி/ 
தித்தித்திடும் அந்தக்கணம் தேன்தானம்மா/
கன்னத்தினில் இச்இச்சென கொஞ்சித்தரும்  முத்துத்துளி/ 
தித்தித்திடும் அந்தக்கணம் தேன்தானம்மா/
பிள்ளை மொழியோ பொங்கிப் பெருகும்/
அன்னை மனமோ அன்பில் உருகும்/
எந்தன் பழி தீர்க்கும் எழில் பொற்சித்திரம்/
ஊராரின் பேச்சில் உயிர்வாடிப் போனேன்/
வீட்டாரின் ஏச்சில் நிதம்ஏங்க லானேன்/
என்வாழ்வின் அர்த்தம் நீதான் செல்லம்/
தாலாட்டுப் பாடும் தாயான தாலே நெஞ்சத்தில் பூப்பூத்தது )

சரணம்: 2 
*************
கண்ணே உனைக் காணும் வரை கண்ணீர்த் துணை என்றே தினம்/
காலம் அது சென்ற வலி பாட்டில் வைப்பேன்/
கண்ணே உனைக் காணும் வரை கண்ணீர்த் துணை என்றே தினம்/
காலம் அது சென்ற வலி பாட்டில் வைப்பேன்/
சொந்தம் விரட்ட செத்துப் பிழைத்தேன்/ 
சொர்க்கம் தனையே காட்டப் பிறந்தாய்/
கர்ப்பத்திலே நான்தாங்கிய தங்கச்சிலை/
முன்னூறு நாளும் மூச்சாக நீயே/
வாழ்வேனே இன்னும் என்ராணி யோடு/ 
கண்மூடித் தூங்கு பாடல் கேட்டு/
தாலாட்டுப் பாடும் தாயான தாலே நெஞ்சத்தில் பூப்பூத்தது )

சியாமளா ராஜசேகர் 

கல்வியின் சிறப்பு !

நல்லறிவு தந்திடும்; நம்பிக்கை யூட்டிடும்;
செல்லுமிட மெல்லாம் சிறப்பளிக்கும்; - கல்விபோல் 
நன்னெறி காட்டுவது ஞாலத்தில் வேறில்லை 
என்றுணர்ந்தே கற்பீர் இனிது .
     

பேதை நெஞ்சம் ...!!!


புன்னகையைத் தொலைத்துவிட்ட பேதை நெஞ்சம் 
       பொலிவிழந்த காரணத்தைச் சொல்ல அஞ்சும் !
தென்றலது தூக்கமின்றி உலவும் நேரம் 
     திங்களிலும் தீப்பிடிக்கும் உணர்வின் வேகம் !
கன்னத்தில் விழிபோடும் கண்ணீர்க் கோலம் 
     கவலைகளால் மனம்பட்ட காய மாகும் !
சென்றவனின் நினைவுகளோ இடியாய்த் தாக்கும் 
        சேரும்நாள் வருமென்ற கனவில் பூக்கும் !!

சியாமளா ராஜசேகர் 
     

Wednesday, September 27, 2017

இருபா இருஃபது ....!!!



#சிற்றிலக்கிய_வரிசை
இருபா இருஃபது
***********************
காப்பு
********
ஆறுபடை வீட்டின் அழகனைப் போற்றியே
ஈறு முதலியாய் இக்கணம் - வீறுடன்
பாக்கள் இருபஃது பைந்தமிழில் பாடிடவென்
வாக்கில் கணபதியே வா.
நூல்
******
வெண்பா
************
தமிழ்க்கடவு ளென்று தரணியே போற்றும்
அமிர்தை மகனாம் அழகன் ! - குமரன்
திருவடி பற்றித் திருப்புகழ் பாடக்
குருவாய் வருவான் குளிர்ந்து . 1.
அகவல்
**********
குளிர்ச்சியாய் வேலன் கோல மயிலில்
களிப்புட னாடிக் கடுகியே வந்து
கூர்வடி வேலால் குறைகளைப் போக்கும்
சீர்மிகு தலமாம் திருப்பரங் குன்றமே ! 2.
வெண்பா
************
குன்றுகள் தோறும் குடியிருக்கும் கந்தனின்
மின்னும் விழிப்பார்வை வெற்றிதரும்! - புன்னகை
சிந்திடும் தேனூறும் செங்கனி வாயினில்
அந்தமிழ் கொஞ்சும் அழகு . 3.
அகவல்
***********
அழகனைக் குகனை அம்பிகை பாலனைப்
பழமுதிர்ச் சோலையில் பார்த்திடல் பரவசம்
வலமிட மாக வல்லிமார் இருவரும்
நலமுட னருளும் நற்படை வீடே ! 4.
வெண்பா
************
வீடளித்(து) ஆட்கொள்ள வேலன் விரைந்திடுவான்
பாடலினைக் கேட்டுப் பரவசமாய் ! - வேடர்
குலமகள் வள்ளியுடன் கூடி மயிலில்
துலங்கு மெழிற்கோலத் தோடு . 5.
அகவல்
***********
தோடுடைச் செவியன் சொற்றுணை வேதியன்
காடுடை யார்மகன் கார்த்தி கேயனின்
பன்னிரு விழிகளின் பார்வை பட்டால்
துன்பமும் விலகிச் சுகங்கள் பெருகுமே ! 6.
வெண்பா
*************
பெருகிடு மன்பால் பிழைகளும் மாறும்
குருபரன் நல்லருள் கூடும் - முருகனை
ஏரகத் தானை இருவிழி நீர்மல்கச்
சீரகத் தோடுநீ தேடு . 7.
அகவல்
***********
தேடும் குகனைச் சீரலை வாய்தனில்
பாடும் கடலலை பரிவுடன் நாளும்
செந்தூர் அழகனின் சேவடி தொடவே
வந்து கரைதனை வருடிச் செல்லுமே ! 8.
வெண்பா
************
செல்லும் வழிக்குத் திருப்புகழ் பக்களே
வெல்லும் படையாய் வினைவிரட்டும் ! - தொல்லுலகில்
உற்ற துணையாய் உடன்வந்து முப்போதும்
அற்புதஞ் செய்யு மருள் . 9.
அகவல்
***********
அருள்நிறை நோக்கில் ஆணவ மழிந்து
விரும்பிடும் செயல்களில் வெற்றி கிட்டும்
தணிகைவேல் முருகனைத் தமிழால் வாழ்த்திப்
பணிவுடன் தொழுதிடப் பகையும் விலகுமே ! 10.
வெண்பா
************
விலகிடும் வல்வினை வேண்டிட நாளும்
பலனும் பெருகிடும் பல்கி ! - நலமுடன்
வாழ பழனி மலைபாலன் பாங்குடன்
தோழனாய்த் தந்திடுவான் தோள். 11.
அகவல்
***********
தோளினில் காவடி தூக்கி வழிபட
கோளினால் வந்த குறைகள் அகலும்
ஆவினன் குடிவாழ் அறுமுகன் கைகளால்
தாவியே அணைப்பான் தாய்போல் பரிந்தே ! 12.
வெண்பா
************
பரிவுடன் பார்த்திடும் பன்னிரு கண்கள்
புரிந்திடும் லீலைகள் பொற்பாய் - எரித்திடும்
தீயன யாவையும், தேய்ந்திடும் வாழ்வினில்
காயமிது பொய்யெனக் கண்டு . 13.
அகவல்
***********
கண்ட கனவில் கழல்க ளிரண்டில்
தண்டை யுடனே சதங்கையும் கொஞ்சிடச்
செம்பொன் மயிலினில் சிரிப்பொடு வந்தான்
பெம்மான் முருகன் பிரிய முடனே ! 14.
வெண்பா
************
உடனே விரைந்திடில் உள்ள முவக்கும்
கடம்பன் திருமுகம் கண்டே !- இடர்கள்
களையுந் தருணமிதே! கந்த வடிவேலா !
வளைகரத் தாளுடன் வா . 15.
அகவல்
***********
வாராய் மருத மலைவாழ் முருகா
தாராய் வரங்கள் தயவுடன் நீயே
தீரா வினைகள் தீர்த்திட வேண்டும்
வீரா! சூரனை வென்ற தேவே ! 16.
வெண்பா
*************
தேவே! உனையன்றித் தெய்வம் எனக்கில்லை
ஆவேசம் கொண்டபடி ஆடிவரக் - காவேரி
ஆற்றில் கரைபுரளும் ஆனந்த வெள்ளமாய்
ஊற்றெடுத்துப் பொங்கு முளம். 17.
அகவல்
***********
உளமே கோயிலாய் உறையும் முருகா
விளக்கின் சுடராய் விளங்கு மொளியில்
மனத்தில் பதிந்த மாசினை யகற்றி
அனந்த சத்தி அளிப்பவன் நீயே ! 18.
வெண்பா
*************
நீயேயென் வாழ்வினில் நிம்மதியும் தானளித்து
நாயேனை யாட்கொள்வாய் நாடிவந்தே! -நோயேதும்
அண்டாமல் காத்திடும் ஐங்கரன் தம்பியே
தண்டமிழ்ப்பா பாடவரந் தா . 19.
அகவல்
***********
தாங்கும் துணையே! தங்கச் சிலையே!
நீங்கா வருளை நித்தம் பொழிவாய்!
விரல்கள் குவித்தேன் வேலின் வடிவாய்
சரவண பவனே! தருவாய் தமிழே ! 20.
சியாமளா ராஜசேகர்

அழிவின்றிக் காப்போம் ...!!!


அலங்காரச் சிலையெனவே 
***அழகுமிளிர் மங்கையரின்
பலவண்ண அசைவுகளில் 
***பாதங்கள் பதிந்தாட 
சலங்கையொலி கொஞ்சலுடன்
***தரைமீது தாளமிட 
மலர்க்கூந்தல் சேர்ந்தாடும் 
***வளைந்தாடும் மெல்லிடைமேல் !

விழிபேசும் பாவனையும் 
***விரல்காட்டும் முத்திரையும்
மொழியின்றி உணரவைக்கும் 
***முகத்தினிலே நவரசமும் 
எழிலாகப் பூத்திருக்கும் 
***இதயத்தை இதமாக்கும் 
அழிவின்றிக் காத்திடுவோம் 
***அருங்கலையாம் பரதத்தை  !

சியாமளா ராஜசேகர் 

Sunday, September 17, 2017

கொஞ்சுங் கவிதையிலே !


மஞ்சு விரிகையில் விஞ்சு மழகுடன் 
மஞ்ஞை நடமிடுதே ! 
வஞ்சி யவள்முகம் கஞ்ச மலரென 
நெஞ்சி லுறைகிறதே ! 
அஞ்சு விழிகளும் கெஞ்சு மழைப்பினில் 
ஒஞ்சி ஒளிகிறதே ! 
பிஞ்சு விரல்களும் தஞ்ச மடைந்திடும் 
கொஞ்சுங் கவிதையிலே !!

புரட்டாசி ....!!


ஆவணிக்குப் பின்புவரும் ஆன்மீகத் திங்களிது 
ஆவலுடன் பித்ருக்கள் அவனிவரும் காலமிது 
நாவாரப் புகழ்பாடி நாடிவரும் பக்தரது 
பாவங்கள் விலகியோட பரந்தாமன் அருள்மாதம் !

புரட்டாசி நற்திங்கள் புண்ணியங்கள் பலசேர்க்கும் 
பரம்பொருளே பிறப்பெடுத்த பவித்ரமான மாதமிது 
பிரம்மோற்சவம் நடக்கும் பெருமாளின் தலமெங்கும் 
விரதங்கள் இருப்பதனால் வேண்டுகின்ற வரம்கிட்டும் !

கோவிந்தா எனும்நாமம் கோயிலெங்கும் எதிரொலிக்கச் 
சேவிக்க வருவோர்க்குத் தெய்வீக அருள்கூடும் 
தீவினைகள் விலகியோடும் தேவனவன் சன்னதியில் 
தூவிமலர் போற்றிடுவார் தூய புரட் டாசியிலே !

அன்னைசக்தி மகிஷனெனும் அரக்கனுடன் போரிட்டு 
வென்றதனைப் பக்தியுடன் விரதமிருந்து வழிபட்டே  
ஒன்பதுநாள் கொண்டாடும் ஒப்பற்ற நவராத்ரி 
பொன்னொளிர விளங்கிடுமே புரட்டாசி மாதத்தில் !

மலைமகளும் அலைமகளும் மகிழ்வுடனே கலைமகளும் 
குலையாத எழிலுடனே குடியிருக்கும் மாதமிது 
சிலையுருவாய்க் கொலுவீற்றுச் சிறப்பாக வரந்தந்து 
நிலையில்லா வாழ்வினிலும் நிறைவளிக்கும் திங்களிது !

கார்மேகம் திரண்டுவரும் கார்கால மாதமிது 
ஏருழவன் உள்ளமெலாம் இனிதாகும் காலமிது 
நீர்நிலைகள் குளிர்ச்சியுடன் நிரம்பியோடும் திங்களிது 
மார்தட்டி முழங்கிடுவேன் மகத்தான மாதமிதே !

Saturday, September 16, 2017

பனங்காட்டில் .....!!!



பனங்காட்டில் காற்று மோத 
***படபடத்தே ஓலை யாட 
அனலேறின் முழக்கத் தோடே 
***அடைமழையும் கொட்டித் தீர்க்கப் 
பனம்பழம்பொத் தென்று கீழென்
***பக்கத்தில் விழுந்த தாலே 
இனங்காண முடியா அச்சம் 
***இதயத்தை அடைத்த தம்மா !

( அனலேறு - இடி )

Friday, September 15, 2017

வண்ணம் கொண்ட வெண்ணிலவே மெட்டில் ஒரு பாட்டு !

பொன்னாய் மின்னும் தேவதையே !
பொங்கும் அன்பைத் தாராயோ ?
பொன்னாய் மின்னும் தேவதையே !
பொங்கும் அன்பைத் தாராயோ ?

கண்ணிலே காந்தம் இல்லை 
காதல் மனம் ஈர்க்க வில்லை !
கண்ணிலே காந்தம் இல்லை 
காதல் மனம் ஈர்க்க வில்லை !

பொன்னாய் மின்னும் தேவதையே !
பொங்கும் அன்பைத் தாராயோ ?
பொன்னாய் மின்னும் தேவதையே !
பொங்கும் அன்பைத் தாராயோ ?

நெஞ்சத்தில் வீரம் இல்லை 
நேசத்தில் வேஷ மில்லை 
மஞ்சத்தில் தூக்க மில்லை 
மாலையும் பூக்க வில்லை !

நெஞ்சத்தில் வீரம் இல்லை 
நேசத்தில் வேஷ மில்லை 
மஞ்சத்தில் தூக்க மில்லை 
மாலையும் பூக்க வில்லை !

தூது சென்று பேசிவர
தூயவன் யாரு மில்லை !
சுட்டுவிடும் காரணத்தால் 
சூரியனும் போகவில்லை 
துள்ளித் துள்ளி நீயாட 
வானவில்லும் வளைய வில்லை !

பொன்னாய் மின்னும் தேவதையே !
பொங்கும் அன்பைத் தாராயோ ?
பொன்னாய் மின்னும் தேவதையே !
பொங்கும் அன்பைத் தாராயோ ?

வானில் உந்தன் பேரெழுத 
மேகத்தை அனுப்பிவைத்தேன் !
வான மங்கை கண்ணீரில் 
மேகமும் கரைந்ததடி !

மின்னல் வெட்டும் வேளையிலும் 
மேல் நடுங்க வேர்த்திருப்பேன் !
கன்னல் மொழி கேட்கும் வரை 
காற்றைப் போல் நான் மிதப்பேன் !
மாரி வரம் தந்துவிட்டால் 
பூரிப்பில் பூத்திருப்பேன் !

பொன்னாய் மின்னும் தேவதையே !
பொங்கும் அன்பைத் தாராயோ ?
பொன்னாய் மின்னும் தேவதையே !
பொங்கும் அன்பைத் தாராயோ ?

பொன்னாய் மின்னும் தேவதையே !
பொங்கும் அன்பைத் தாராயோ ?
பொன்னாய் மின்னும் தேவதையே !
பொங்கும் அன்பைத் தாராயோ ?

சியாமளா ராஜசேகர் 

Wednesday, September 13, 2017

துணை நீயே !

இடது பதந்தூக்கி யின்ப முடனே
நடனஞ் செயுங்கண நாதா! - இடர்களைய
ஆடுமயில் மீதேறி ஆனந்த மாய்வந்து
பாடுமென்பா வைக்கேட்டுப் பார்.
துணைநீயே! வாழ்வினில் தும்பிக்கை யானே!
அணைத்தென்னைக் காத்திடுவாய்! அன்பாய் - இணையடி
பற்றி உளமுருகிப் பாடிப் பணிந்திடுவேன்
வற்றா வருளை வழங்கு.
களிற்று முகத்தன் கடம்பனின் அண்ணன்
எளியனாய் வந்தே எலிமேல் - தெளிவும்
அருள்வான்; சதுர்த்தியில் ஐங்கரத் தானை
விரும்பிய வண்ணமே வேண்டு.

ஆதி மூல கணபதி !

ஆதி மூல கணபதி சிவ
காமி பாலன் கணபதி
நாத வேத ரூப மான
ஞான தெய்வம் கணபதி!
வீதி தோறும் குடியிருக்கும்
வெள்ளிக் கொம்பன் கணபதி
ஆனை முகமும் பானை வயிறும்
கொண்ட அழகு கணபதி!
அறுகுமாலை சூட்டியே வழிபடும் அடியவர்
அல்லல்களைப் போக்கிடும் ஐங்கரனைப் போற்றுவோம்
விருப்புடன்முக் கனிகளும் அவல்கடலை மோதகம்
வேழமுகத் தானுக்குப் படைத்துவிட்டுப் பாடுவோம்!
ஆரவார மின்றியே அன்புடன் தொழுதிட
ஆறுமுகன் அண்ணனின் ஆசிகளும் கிடைத்திடும்!
பாரதத்தை எழுதிட தந்தமதை ஒடித்தவர்
பாதமலர் பற்றிட பாழ்வினைகள் பறந்திடும்!
தும்பிக்கை ஆட்டியே சுண்டெலியில் சுற்றிடும்
தூயவனின் தரிசனம் தொல்லைகளை ஓட்டிடும்!
நம்பிக்கை வைத்தவர் நலவாழ்வு பெற்றிட
நாடிவந்து அருளிடும் நாயகனை வணங்குவோம்!
சியாமளா ராஜசேகர்

வாட்டமேனோ ...??





வெண்ணிலவு துணையிருக்க வாட்ட மேனோ
விட்டயலூர் சென்றவனின் நினைவால் தானோ?
விண்மீனைத் தூதனுப்பி விவரம் சொல்வாய்!
வெட்கத்தை விடுத்தேநீ காதல் வெல்வாய்!
கண்மூட முடியாமல் காத்தே நிற்கும்
கன்னிமயில் உன்னருமை அறிவான் தானும்!
பெண்ணிலவே வீண்கவலை கொள்ள வேண்டா
பேரின்ப வாழ்வுனக்குத் தருவான் வந்தே!!
இக்கரையில் தனித்திருப்பாய் நீயு மென்றே
இதயத்தை யீந்துவிட்டுப் போனா னோடி?
அக்கரையில் அவனுள்ளம் படுத்தும் பாட்டை
அன்பாலே உணர்ந்திருந்தும் தவிப்பா யோடி?
சொக்கவைக்கும் கண்ணிரண்டில் சோக மேனோ
சுந்தரியே சற்றேனும் உறக்கம் கொள்வாய்!
துக்கத்தைத் துடைத்துவிட்டுப் பாடி யாடு
துணைவந்து சேர்ந்தவுடன் ஊடிக் கூடு!!!
சியாமளா ராஜசேகர்

அன்பால் வெல்வோம் !!

உழைத்துழைத்துத் தேய்ந்தாலும் ஓய்வெதற்கு கண்ணே?
***உள்ளத்தில் உறுதியுடன் உள்ளவரை வாழ்வோம்!
பிழைத்திடவும் வழியுண்டு பிணக்கின்றி என்றும்
***பெற்றெடுத்த பிள்ளையொடு பிரியமுடன் வாழ்வோம்!
மழைபோலக் கருணையுடன் மனங்குளிர வாழ்த்தி
***மகிழ்வுடனே பயிர்செய்து வளமாக வாழ்வோம்!
அழைப்புவந்த பின்னாலே அவ்வுலகு செல்வோம்
***அதுவரையில் பிரியாமல் அன்பாலே வெல்வோம்!
சியாமளா ராஜசேகர்

வாழ்த்தும் உள்ளம் ....!!!

புக்ககம் கிளம்பும் புதல்வியைக் கண்டு
பொங்கிடும் விழிகளில் வெள்ளம்!
அக்கறை யுடனே ஆறுதல் சொல்லி
அணைத்திடும் அன்னையின் உள்ளம்!
துக்கமும் வலியும் தொண்டையை அடைக்கத்
துடித்திடும் தந்தையின் நெஞ்சம்!
முக்கனிச் சுவையாய் வாழ்க்கையும் இனிக்க
முழுமன நிறைவுடன் வாழ்த்தும்!
சியாமளா ராஜசேகர்

கரும்புள்

கரும்புள் கரைந்திடும் காகாகா வென்றே
கரும்புள் கரிக்குருவி காவலும் காக்கும்
கரும்புள் சுவைரசம் காற்றில் மணக்க
கரும்புள் வளையவரும் கா .
கரும்புள் - காகம்
கரும்புள் - கரிக்குருவி
கரும்புள் - உண்ணும் கரும்பிற்குள்
கரும்புள் - பெண்வண்டு
சியாமளா ராஜசேகர்

பல்லாண்டு வாழியவே ....!!!

முகநூலின் குழுக்களிலே முத்திரையுந் தான்பதித்தே
அகத்தினிலே இனித்திருக்கும் அமுதமென கவிநிறைத்தே
முகமறியா நட்புகளை முதல்விழாவில் காணவைத்துச்
சுகமான நினைவுகளைச் சுழலவிடும் படைப்புவிழா !
விருதுகளும் விதவிதமாய் மேடையினை அலங்கரிக்க
விருந்தினர்தம் சிறப்புரையும் வெகுமதியாய் மனம்நிறைக்க
பெருமைமிகு மகாகவியும் பிரியமுடன் வழங்கிடவே
விருப்புடனே பெற்றேன்யான் விருது,கவிச் சுடரென்றே !
படைப்பென்ற குழுமத்தைப் பாராட்ட விழைந்துவிட்டால்
மடைதிறந்த வெள்ளம்போல் வார்த்தைகளும் வந்துவிழும் !
நடைபெற்ற விழாவிற்காய் நன்றிகளை நவில்கின்றேன்
படைத்தோனே ஜின்னா!நீ பல்லாண்டு வாழியவே !
சியாமளா ராஜசேகர்

வாழ்க்கை சிறக்க ....!!!

நன்னெறி காத்து நானிலந் தன்னில்
***நடந்திட வாழ்க்கையுஞ் சிறக்கும்!
சென்றிடும் பாதை மாறிடில் பயணம்
***சேர்வதில் சிக்கலும் இருக்கும்!
ஒன்றெனக் கூடி ஒற்றுமை யுடனே
***ஒழுகிட இல்லறம் துலங்கும்!
குன்றுயர் குணத்தால் குறைகளும் விலகிக்
***குடும்பமும் கோயிலாய்த் திகழும்!
சியாமளா ராஜசேகர்

வழி மறந்த பயணங்கள் ....!!!

வழி மறந்த பயணங்கள்
```````````````````````````````````````
கண்போன போக்கினிலே கால்கள் போனால்
***கவலைகளும் நிழலாகத் தொடர்ந்தே வாட்டும் !
மண்மீதில் வேண்டாத செயல்கள் செய்தால்
***வருங்கால வாழ்விலது துயரைக் கூட்டும் !
அண்டிவரும் பல்வினைகள் அழுத்தும் போது
***ஆன்றோரின் அறநெறியே என்றும் காக்கும் !
பண்பாடு மாறாமல் வாழும் வாழ்க்கைப்
***பயணத்தில் எப்போதும் அமைதி பூக்கும் !
கட்டங்கள் காட்டுவதே உண்மை யென்று
***கண்மூடித் தனமாக நம்ப லாமா ?
வட்டந்தான் வாழ்க்கையதில் இன்ப துன்பம்
***வரும்போகும் நிரந்தரமாய் எதுவு மில்லை !
கட்டுக்குள் அடங்காத துயரம் வந்தால்
***காவிகளைச் சரணடைய ஓட லாமோ ?
பட்டுணர்ந்த பின்னர்தான் வருமோ புத்தி
***பாதையதும் மாறிவிட்டால் பயணம் வீணே !
நதித்தடங்கள் கட்டிடங்க ளாகிப் போனால்
***நதியும்தன் வழிமறந்து தானே போகும் ?
மதியில்லா மக்கள்தம் பிழையா லன்றோ
***மண்ணிற்கு மழைப்பயணம் தடையாய் மாறும் ?
கதியின்றி விவசாயம் படுக்கக் கண்டு
***கடன்பட்டே உழவர்தம் வாழ்வும் மாயும் !
விதியென்று விட்டிடாமல் முயன்றால் மீண்டும்
***வெற்றிபெறும் வழிமறந்த பயணம் யாவும் !
சந்ததமும் மதுவுக்கே அடிமை யானால்
***சத்தியமாய் மகிழ்ச்சிக்கங் கிடமே யில்லை !
அந்தந்த பருவத்தில் கடமை தன்னை
***அயராமல் முடித்துவிட்டால் அல்ல லில்லை !
தொந்தரவாய்த் தான்நினைத்துத் தள்ளிப் போட்டால்
***தோல்விகளால் பயணத்தில் வருமே தொல்லை !
சொந்தமுடன் கூட்டாகச் சேர்ந்து வாழ்ந்தால்
***சுகமான அன்பிற்கு முண்டோ எல்லை ?
அலைபேசி விளையாட்டும் ஆபத் தாகும்
***அடங்காத ஆர்வத்தால் உயிரும் போகும் !
வலைவீசி விழுவோரைத் தன்பால் ஈர்த்து
***வாய்க்கரிசி போட்டிடவே வேட்டை யாடும் !
நிலையில்லா உளத்தோரின் வழியை மாற்றி
***நீலத்தி மிங்கலமே எமனாய் மாறும் !
மலையளவு துயர்வரினும் உறுதி யின்றி
***மதியிழந்து வழிமறந்து போகலாமோ ?
விரல்நுனியில் உலகிருக்கும் வீட்டி னுள்ளே
***விருந்தோம்பு மருங்குணமும் போன தெங்கே ?
சிரந்தாழ்த்தி பெற்றோரை வணங்கும் பண்பு
***சிறிதளவு மில்லாது போன தெங்கே ?
இரவுபகல் இணையத்தில் சுற்றி வந்தே
***இயந்திரமாய் உழலுகின்ற மனித னிங்கே
வரமான பிறவிதனில் முன்னோர் காட்டும்
***வழிமறந்தால் பயணத்தில் இழப்பு தானே ?
சியாமளா ராஜசேகர்

பொன்னந்தி மாலையிலே ...!!!



பொன்னந்தி மாலையிலே
பொங்கிவரும் பாட்டு! - உன்
புன்னகையில் தான்மயங்கிப்
பூத்ததுள்ளம் கேட்டு !
தென்றலுடன் ஆடிடுதே 
தென்னையிளங் கீற்று - பேசும்
செவ்வலகு கிள்ளையொன்று
சித்திரம்போல் வீற்று !!
செம்மஞ்சள் சூரியனும்
செல்லும் விடைபெற்று ! - அந்த
செம்மாந்தப் பேரொளியோ
செம்பவளத் தட்டு !
நம்மிதயம் சேர்ந்திணையும்
நாளினில்கை தொட்டு - நம்
நற்றமிழில் சொல்லெடுத்து
நானிசைப்பேன் மெட்டு !
கூடடையும் தாய்வரவில்
குஞ்சுமுகம் பூக்கும் - அதன்
கொஞ்சுமொழி கேட்டவுடன்
கூர்விழியால் பார்க்கும் !
ஓடமொன்று அக்கரையில்
ஓசையின்றிச் சேர்க்கும் ! -அதை
ஒட்டிவரும் சேல்கெண்டை
உள்ளமதை யீர்க்கும் !!
கார்மேகம் கண்டமயில்
கலாபம் விரித்தாடும் ! - அந்த
காட்சியினைக் கண்டமனம்
காதலியை நாடும் !
சீர்மிகுந்த வெண்ணிலவை
திரையிட்டு மூடும் - முகில்
திங்களொளி பட்டதுமே
சேர்த்தணைக்கத் தேடும் !!
கோலநிலா மீன்களுடன்
கூடியெழில் காட்டும் ! - அது
கும்மிருட்டு வந்தபின்னும்
குலவியொளி கூட்டும் !
சோலைமலர் வாசமது
துன்பத்தை ஓட்டும் !- என்
சுந்தரியே உன்நினைவோ
சொர்க்கத்தைக் காட்டும் !!
சியாமளா ராஜசேகர்