Wednesday, April 29, 2015

என்ன விந்தையிது ....??



அடுக்களையில் எலி கண்டால் 
அலறி கூச்சல் போடுவாள் ! 
ஆங்கில எலியை மட்டும் 
அணைத்து உள்ளங்கைக்குள் 
அழகாய்ப் பிடித்து 
அசைக்கிறாளே ....!!

சாட்டை சுழற்று ....!!

பச்சைவண்ணப் பட்டுடுத்தி 
பொன்னணி கலன்பூட்டி 
வாசமல்லிச் சரஞ்சூடி 
வாட்டமான மனதோடு 
நாணத்தால் தலைகவிழ 
நான்நின்றேன் உன்முன்னே !! 

மண்பார்த்து நின்றயெனை 
கண்நோக்கிப் பார்த்தநொடி 
உன்முகம்போன போக்கென்ன ? 
உன்னுறவுகளும் முழித்ததென்ன ? 
களையானபெண்ணென்று
 தரகருஞ் சொன்னாரோ ? 
கருப்பென்றஉண்மைதனைச் 
சொல்லாது மறைத்தாரோ ? 

வாய்பேசாது வயிறுநிறைத்து 
போய்ப்பின்னே சொல்வோமென 
விடைபெற்றுச் சென்றீரே .... 
விடையிலெனைக் கழித்தீரே ...! 
மங்கையுள்ளங் கொதிக்கிறதே ... 
கங்கைபோலப் பொங்கிடுதே ...! 

குணம்பாராமல் நிறங்கண்டாய் 
குறையென்றே புறக்கணித்தாய் ! 
காக்கைச்சிறகின் வண்ணத்தில் 
கண்ணனைக்கண்ட மீசைபாரதியே ! 
மீண்டுமுதித்துவா முண்டாசுகவியே ! 
வண்ணபேதமொழிய சாட்டைசுழற்று ...!!

மனைவிக்கு விண்ணப்பம் ....!!

அன்பால் எனை ஆளவந்த திருமகளே ! 
இன்சொல்லால் எம்மை வசீகரித்தாய் ... 
புன்முறுவலுடன் பணி புரிந்தாய் ... 
பின்தூங்கி முன் விழித்தாய் ....!! 

அயர்வின்றி அடுக்களையில் வேலை செய்தாய் ! 
ஆளுக்கொரு விதமாய் சமைத்துக் கொடுத்தாய்! 
அன்பாய் நம் பிள்ளைகளை அரவணைத்தாய் ! 
அருமையாய் என் தாய்தந்தை சேவித்தாய் ...! 

ஆத்திரத்தில் வார்த்தைகளை அள்ளி வீசினாலும் 
அமைதிகாத்து என்னை நாண வைத்தாய் ! 
தப்பேதும் நடந்தால் தப்பாமல் தப்பை 
சுட்டிக்காட்டி தப்பினி நடவாது தடுத்தாய் ! 

துளிர்த்த வியர்வை துடைக்கவும் மறந்து 
துரித கதியில் தேனியாய் சுழன்றாய் ...! 
துயர் வந்தபோது தோள் கொடுத்தாய் ! 
துலாக் கோலாய் நியாயம் காத்தாய் ! 

கோபத்திலும் நிதானமாய் செயல் பட்டாய் ! 
சோகத்தையும் சுகமான சுமையாய் சுமந்தாய் ! 
சோதனையைத் துணிந்து எதிர் கொண்டாய் ! 
வேதனையை வந்தவழி விரட்டி அடித்தாய் ! 

நீ சலித்து நான் பார்த்ததில்லை ... 
நான் கேட்டு நீ மறுத்ததில்லை ... 
நீ வேண்டும் இனிவரும் பிறவியும்..... 
பொன்மகளே உன் சம்மதம் தருவாயா .....???

ஒலியும் ....ஒளியும் .....!!



உருண்டு மிரட்டும் இடியின் ஒலியும் 
நீண்டு கிளைபரப்பும் மின்னல் ஒளியும் 
வான தொலைக்காட்சியில் 
ஒலியும் ஒளியுமாய்..... 
மழைக் கால இரவுகளில் 
நட்சத்திர நிலாப் பெண்டிரின் 
நேயர் விருப்பமாய் ..... 
தேனிசைச் சாரலாய் .... 
இதயம் நனைக்கும் ....! 
பார்வையாளர்கள் .... 
பாரிலுள்ளோர் ......!!!

சிந்திப்பீர் ....!!

ராசிக்கல் போட்டுக் கொண்டால் 
ராஜ யோகம் கூடிடுமோ ? 
கங்கை நதியில் நீராட 
கர்ம வினை நீங்கிடுமோ ? 

வாஸ்துப்படி வாசல் மாற்ற 
வந்த துன்பம் போய்விடுமோ ? 
எண்கணிதப்படி பெயர் மாற்ற 
எட்டா உயரம் கிட்டிடுமோ ? 

கட்டம்காட்டும் வழி செல்ல 
பட்ட பாடு பறந்திடுமோ ? 
சாமியாரைச் சரண் அடைந்தால் 
சகல யோகம் சித்திக்குமோ ? 

சிந்தித்து செயல்பட்டால் 
சிந்தனையில் தெளிவிருந்தால் 
தன்னம்பிக்கை நிறைந்திருந்தால் 
தளராத திடமிருந்தால் 

போராடும் துணிவிருந்தால் 
நேர்மைக் குணமிருந்தால் 
கிட்டவரும் வினைகளுமே 
எட்டிச்செல்லும் காண்பீரே .....!!!!

ரசிக்க வாங்க ....!!

ஆற்றோர நாணல் அது 
அழகாக வீசிவிட ... 

கரை நிற்கும் மாந்தருவில் 
கனிபிளந்து சாறுசொட்ட ... 

பாதை வழித் தென்றலும் 
பூவாசம் சுமந்துவர ... 

நீருக்குள் கெண்டைக் கூட்டம் 
ஒய்யார நடனமிட ... 

மைனா அமர்ந்த மரவிழுதும் 
ஊஞ்சல்போல் அசைந்தாட ... 

மலர் நாடும் வண்டினமும் 
சங்கீதமாய் ரீங்காரமிட .... 

பொந்துள் ளிருந்து பார்த்தபடி 
மரங்கொத்தி குரலெழுப்ப ... 

மெல்லவந்து எட்டிப் பார்த்த 
நத்தையாரும் வாழ்த்துரைக்க ... 

நீர்ப்பாம்பு தலை தூக்கி 
காட்சிகளைப் படம்பிடிக்க ... 

தாவி குதிக்கும் தவளைகளும் 
உற்சாக முழக்கமிட .... 

நீலவண்ண வான் மகளும் 
சாரல்மழை பூத்தூவ ... 

சிறகு விரிக்கும் பட்டம்பூச்சி 
சிங்காரமாய் ஆடிவர ... 

பொன்எழிலாள் வரும் வழியில் 
பூமரமும் குடை விரிக்க .... 

மேகத்திரை விலக்கிக் கதிரும் 
ரசித்திடவே நிலம் நோக்க ... 

தன்னந்தனி வழி வந்து 
நீந்தி களித்து நீராடி ... 

மஞ்சள் மேனி பளபளக்க 
ஒயிலாக நடை போட்டாள்.... 

கன்னியவள் வனப்பு கண்டு 
விரிந்தஇதழ் சிவந்திருக்க .... 

தடாகத் தாமரையும் போதையில் 
ஆடியதே அலைகளிலே ....!!!

நட்பு என்றும் ஒளிரட்டும் .....!!



ஒளிமயமான விளக்கின் சுடர் போல் ....! 
நாத வடிவான கீத ஒலிபோல் ....! 
காரிருள்சூழ் கானக அமைதிபோல் ....! 
கரைமோதும் அலைகடல் இரைச்சல்போல் ....! 
கொட்டும் மலையருவியின் பேரொலிபோல் ....! 
பூஞ்சோலைதவழ் சுகந்த தென்றல்போல் ....! 
சாரல்மழை மேனிநனைக்கும் இனியசுகம்போல்....! 
இதயமதை குளிர்விக்கும் மழலைமொழிபோல் ....! 
இதழ்விரித்து மணம் கூட்டும் வாசமலர்போல் ...! 
நம்நட்பு என்றும் ஒளிரட்டும் ....!!! ...மிளிரட்டும் ....!!

காதல் மழை ...!!



மனங்குளிர மகிழ்ந்திருப்பார் மழைநனைத்த மரத்தடியில் 
கனவுலகில் கரங்கோர்த்து காதலுடன் கலந்திருப்பார் 
தவழ்தென்றல் தருதழுவ கிளையசைந்து நீர்தெளிக்க 
உவகையிலே உளம்சிலிர்க்க வைத்திடுமே காதல்மழை ! 

புல்வெளியில் அமர்ந்தபடி பேசிடுவார் புதுக்கதைகள் 
சொல்வனத்தில் கவிபடித்து உருகிமிக ரசித்திடுவார் 
கடற்கரையில் கால்நனைத்து மணலிழுக்க சிரித்திடுவார் 
மடல்விடுத்து பதில்கிடைக்க கமலமென மலர்ந்திடுவார் ! 

பிரிவுவந்த பொழுதினிலே நினைவுகளால் வாழ்ந்திருப்பார் 
மரித்திடவும் முடியாமல் தனிமையிலே விழிவடிப்பார் 
உரித்தான மெய்க்காதல் விலகாமல் சேர்ந்திடுமோ 
புரிந்ததுவும் பெய்திடுமோ பொய்த்திடுமோ காதல்மழை .....??? 

Tuesday, April 28, 2015

சீக்கிரமே வந்திடுவாய் !



தூக்கமின்றிக் காத்திருக்கேன் தூதுசென்ற மேகமே !
சீக்கிரமே வந்திடுவாய் சேதிசொல்ல - ஏக்கமுடன் 
விண்பார்த்து நிற்கின்றேன், வேதனைத் தீர்த்தேயென் 
கண்பூக்கு முன்வா கனிந்து .

Friday, April 24, 2015

வாய்ப்பு வருகையில் வாசல் திறந்திடு மானிடனே !

ஏய்ப்பு மிகுந்திடும் ஏதிலார் தோழமை ஏற்புடைத்தோ
காய்ப்பு விலகிடும் காலம் வரும்வரைக் காத்திருப்பாய் 
சாய்ப்பு நடக்குமுன் சண்டை விரோதமும் தள்ளிவிடு 
வாய்ப்பு வருகையில் வாசல் திறந்திடு மானிடனே !


        ( கட்டளைக் கலித்துறை )

Thursday, April 23, 2015

சிறப்புறும் வாழ்வு !



பார்வையில் காட்டமேன் பாலகா  சொல்லடா 
சோர்ந்தாயோ நீயும் சுமைதூக்கி – நேர்வழி 
சென்றால் பயமில்லை செல்வா ! கலங்காதே 
நன்றாய் சிறப்புறும் வாழ்வு 

Wednesday, April 22, 2015

அன்பே ....!!!



விழியிரண்டில் காதல் தேக்கி 
>>>>வெண்ணிலவாய் ஒளிர்ந்து நின்றாய் ! 
குழிவிழுந்த சிவந்த கன்னம் 
>>>>குளிர்ந்திடவே சிரித்துச் சென்றாய் ! 
பொழிகின்ற மழையைப் போலே 
>>>>புன்னகையால் சிலிர்க்க வைத்தாய் ! 
மொழிமறந்து தவித்த போது 
>>>>முத்தான கவிதை தந்தாய் ! 

ஏழைச் சிறுவனின் ஏக்கம் !!



பள்ளிக்கூடம் சென்றதில்லை 
புத்தகமும் புரட்டவில்லை 
தோளில்பை சுமந்ததில்லை 
தோழனொடுகை கோர்த்ததில்லை ! 

சீருடையும் அணிந்ததில்லை 
சிரித்தரட்டை அடித்ததில்லை 
வீட்டுப்பாடம் செய்ததில்லை 
விரலெழுதி வலித்ததில்லை ! 

கண்முழித்துப் படித்ததில்லை 
கனவிலுமிது நடந்ததில்லை 
தேர்வுநானும் எழுதவில்லை 
தேர்ச்சியெனக்கு கிடைக்கவில்லை ! 

ஏழையாய்ப் பிறந்துவிட்டால் 
ஏற்றம்வாழ்வில் வாராதோ 
ஏக்கமுடன் கேட்கின்றேன் 
ஏட்டுக்கல்வி எனக்கும்வேண்டும் ! 

பாடசாலைப் போகவேண்டும் 
பாடம்நானும் படிக்கவேண்டும் 
தாயழைத்துச் செல்லவேண்டும் 
தன்கையால்சோறு ஊட்டவேண்டும் ! 

ஓடிவிளை யாடவேண்டும் 
ஓய்வும்கொஞ்சம் எடுக்கவேண்டும் 
மதிப்பெண்நிறைய வாங்கவேண்டும் 
மதிப்பாய்நானும் வாழவேண்டும் ! 

அன்றாடப் பாடங்களை 
அன்றன்றே படிக்கவேண்டும் 
ஆசைகள்யாவும் ஈடேற 
ஆண்டவனின் அருள்வேண்டும் ....!!!

காக்கைச் சிறகினிலே ....!!!




கூர்கெட்ட மக்கள் குறைதீர்த்தாய்ப் பாக்களால் 
மார்தட்டிச் சொல்வோம் மகாகவி நீர்தானே 
கார்வண்ணன் கண்டாயே காக்கைச் சிறகினில் 
வேர்நீ மரமாவோ மே !

Tuesday, April 21, 2015

ஏக்கம் ....!!



மூன்றுமுடிச்சு கழுத்தில்போட்டு 
மூவைந்து வருடமாச்சு 
முத்தென்னுள் முகிழ்க்கவில்லை 
மூடர்வார்த்தை தைத்திடுதே ! 

மூடுபனி என்வாழ்வை 
மூடிவைத்த மாயமென்ன 
மூப்புவந்து சேருமுன்னே 
மூரலென்னுள் மலராதோ ? 

வளைஅடுக்க வழியில்லை 
வளைகாப்பு நடக்கவில்லை 
பூச்சூடிப் பார்க்கவில்லை 
பூயென்னுள் பூக்கவில்லை ! 

பனிக்குடம் உடைந்ததில்லை 
பால்வடிந்து மணந்ததில்லை 
பழிசுமந்து கிடந்திடவே 
பாவமென்ன செய்தேனோ ? 

சொத்துசுகம் இருந்தென்ன 
சொர்க்கமே பிள்ளையன்றோ 
தாய்மைவரம் வேண்டுகின்றேன் 
தாயாகத் தவிக்கின்றேன் ! 

மார்பணைத்துப் பால்புகட்ட 
மங்கைமனம் துடிக்கிறதே 
மறலிவந்து கூப்பிடுமுன் 
மழலைமடி நிரப்பாதோ ? 

மலடியென்ற பட்டத்துடன் 
மயானம்போக மனமில்லை 
மாதம்பத்து நான்சுமக்க 
மடிப்பிச்சை கேட்கின்றேன் !!

நுரை நுரையாய் ....!!


ஆகாய அரவம் தீண்டலில் 
அலைகடலும் விஷமானதோ ? 
கத்துங் கடல் நீலம்பூத்து 
கக்குகிறதே நுரை நுரையாய் !!

துயிலும் அழகு ....!!




பஞ்சுமெத்தை மீதினில் பள்ளிகொண்ட தேவதையின் 
பிஞ்சுமுகம் கள்ளமிலாப் பேரெழிலே ! -கொஞ்சிட 
உள்ளந் தவித்திடும் உற்சாகந் துள்ளிவரும் 
அள்ளிடத் தோன்றும் அழகு ! 

கண்மையால் பொட்டொன்றைக் கன்னத்தில் வைத்திடுவேன் 
கண்ணே றுபடாமல் காத்திடுவேன் - பெண்ணழகே 
நித்திரையில் சொர்க்கமோ? நிம்மதியாய்க் கண்துயில்வாய் 
சித்திரமே சிங்காரச் சிட்டு !

Sunday, April 19, 2015

விடை பெற்றனையோ ....??


விசேடம் என்றாலும் 
விசனம் என்றாலும் - தகவல் 
விநியோகிக்கும் தந்தியே .....! 
விரைவுக்கு எடுத்துக்காட்டாய் 
விளித்தோமே உன்னையே ...! 

ஒன்றரை நூற்றாண்டு கடந்தும் 
ஒப்பிலா பணி புரிந்தாய் ...! 
சேவை செய்து முடித்து விட்டாய் ! 
தேவை எமக்கு போதுமட்டும்....!! 

விருப்ப ஓய்வு எடுக்கவில்லை 
விஞ்ஞானத்தின் வளர்ச்சியினால் 
விரல் சொடுக்கில் உன் பணியும் 
வினாடியில் முடிவதனால் 
விடுதலையே கொடுத்து விட்டோம் 
விடை நீயும் பெற்றிடுவாய் ...! 

பழையன கழித்து புதியன புகுதல் 
காலத்தின் கட்டாயமன்றோ ....? 
காலாவதி நீ ஆனாலும் 
காலம் கடந்தும் நினைவில் நிற்பாய்....!!!

அன்னம் நாணும் அழகுடையாள் 
கன்னம் சிவக்கும் எழிலுடையாள் 

மின்னல் போலும் இடையுடையாள் 
கன்னல் மிஞ்சும் பேச்சுடையாள் 

பின்னல் ஜடையில் மலருடையாள் 
இன்னல் தீர்க்கும் குணமுடையாள் ....!!

வெட்கம் களைவாய் விரைந்து

நாயகன் தொட்டதும் நாணத்தில் பூத்தவளே 
நேயமுடன் வாழியவே நீடூழி ! - தூயவனாம் 
கட்டியவன் பக்கத்தில் காதலுடன் காத்திருக்க 
வெட்கம் களைவாய் விரைந்து .

மயங்கியதே ....!!


பனித்த மலரழகினில் 
இனித்த மதுச்சுவையினில் 
சிவந்த இதழ்ருசியினில் 
கனிந்த மனம்மயங்கியதே !!

Saturday, April 18, 2015

இதயச் சிலிர்ப்பு ....!!!


இளவேனிற் பருவத்தை 
இனிதாய் வரவேற்க 
செங்கொன்றை மரங்களின் 
செம்பூ விரிப்பு ...! 

தெம்மாங்கு பாடி 
தென்றலுந் தாலாட்ட 
சிந்தும் இதழ்களில் 
செந்தேன் இனிப்பு ....! 

மரகத மரமேனியை 
முழுமையாய் மூடிய 
பவள மலர்களில் 
அழகின் சிரிப்பு ....! 

சாலை யோரங்களில் 
சாமரம் வீசிடும் 
இயற்கை வனப்பினில் 
இதயச் சிலிர்ப்பு .....!!

இசையில் லயித்தால் சுகம்தானே ....!!!

கவலை மனதை அறுத்தாலும் 
தடைகள் வழியை மறித்தாலும் 
துயர்கள் துரத்தித் தொடர்ந்தாலும் 
வறுமை வறுத்து எடுத்தாலும் 
பிணியும் விடாது வதைத்தாலும் 
மதியும் குழம்பித் தவித்தாலும்  
தொழிலில் பிடிப்பே குறைந்தாலும் 
இசையில் லயித்தால் சுகம்தானே ...!!!

பித்தானேன் ....!!!




வெண்பட்டுக் கம்பளமாய் வீதியைப் போர்த்திய 
கண்கொள்ளாக் காட்சியைக் கண்டீரோ ?- மண்மறைத்த 
வித்தையைக் கற்றதெங்கே வெண்பனியே நீசொல்வாய் 
பித்தானே னுன்னழகில் நான் .

Friday, April 17, 2015

அன்பு ...!!



அன்பொன்றே நிலைக்கணும் 
அவனியிலே சிறக்கணும் ! 
அன்பாயுதம் இதயமேந்த 
அனைத்தும் சுமுகமாகிடும்...!! 

பகைமைதனை விரட்டிடும் 
பழியுணர்வைப் போக்கிடும் 
பரிவுகாட்டி அணைத்திடும் 
பண்படுத்தி வழிகாட்டிடும் ....!! 

காலப்போக்கில் தீக்குணமும் 
காலாவதி ஆகணும் 
காழ்ப்புணர்ச்சி கழிந்திட்டால் 
கருணையுள்ளம் கடவுளாம் ...!! 

நஞ்சைமட்டும் சேமித்தால் 
நெஞ்சிலமைதி விலகிடும் 
நித்திரையும் தொலைந்திடும் 
நிம்மதியும் பறந்தோடிடும் ...!! 

மன்னிப்பெனும் மாமருந்து 
மறக்கச்செய்யும் தவறினை 
மன்னித்தால் மனந்திறந்து 
மனிதம் புனிதமாகிடுமே ....!!

வாராயோ ....????



கவலை தீர்க்க கனவில் வந்து 
கண்ணீர் துடைக்கும் முல்லையே ...! 
நனவில் வந்து ஏக்கம் தவிர்க்க 
கருவறை நிறைக்க விரைவாயோ ...? 

களர்நிலம் போலும் என்றன் வயிற்றில் 
களங்கம் போக்கக் கருவாகி 
மருதம் விளைந்த கதிராய் என்றன் 
மருள் நீக்க வாராயோ ......? 

குழந்தை இல்லா நிலையும் கொடுமை 
குறைதனைக் குத்திக் காட்டும் 
குடும்ப உறவின் முகத்திரை கிழிக்க 
குறிஞ்சி மலராய் பூப்பாயோ ......? 

நெருப்பு வார்த்தைகள் அள்ளி வீச 
நெஞ்சம் கொதித்து தகிக்கும் 
நெய்தல் நீராய் வெம்மை தணித்து 
சேயாய் குளிர்விக்க உதிப்பாயோ .....? 

பாதத்தில் குத்தும் நெருஞ்சி முள்ளாய் 
பாவை என்னை வதைக்கும் 
பாலை நெஞ்சில் பாலூற நீயும் 
பாலகனாய் வந்து பிறப்பாயோ ......?

Wednesday, April 15, 2015

வாளேந்தி ஆடிவர .....!!



செஞ்சாந்து பொட்டிட்டு செவ்வாடை மேலுடுத்தி 
மஞ்சளிலே நீராடி மங்களமாய் - அஞ்சாமல் 
வஞ்சியரும் வில்லுடன் வாளேந்தி ஆடிவர 
தஞ்சமுற கெஞ்சும் சனம் .

Tuesday, April 14, 2015

தவிக்க விட்டனரோ ....???



சாய்ந்தபடி கைக்கட்டிச் சாதகம் செய்கிறாய் 
வாய்மூ டியமர்ந்தே மௌனமுடன் - தாய்த்தந்தை 
தன்னந் தனியே தவிக்கவிட்டுச் சென்றனரோ 

துன்பம் விலகிடும் தூங்கு .

சிரிப்பலைகள் ....!!



வெட்கச் சிரிப்பலையோ வெள்ளந்திப் புன்னகையோ 
கட்டுக் கடங்காக் களிப்புடன் - தொட்டிமையாய்
பெண்களுங் கூடியேப் பேசி மகிழ்ந்திட 

கண்ணே றுபடுமோக் கண்டு . (தொட்டிமை - ஒற்றுமை , அழகு )

Monday, April 13, 2015

தமிழாய் ....தமிழுக்காய் ....!!



உதிரங் கலந்து உணர்வில் நிறைந்து
அதிசய மூட்டும் அழகு ! - பதியும்
மனதில் எளிதாய் மகத்துவ மிக்க 
எனதருமைத் தாய்மொழி யே !
இனிமை பயக்கும் இளமை ததும்பும்
தனித்து இயங்கிடும் தாயாய் - நனிசிறந்
தோங்கும் புவிதனில் தீந்தமிழ்ச் செம்மொழி
பாங்காய் பவனிவரும் பார் .
முத்தமிழில் முக்குளிக்க மூப்பும் மறந்துவிடும்
சித்தந் தெளிவாகும் சீலமுடன் - உத்தமமாய்
ஞாலத்தில் மிக்க ஞயமாய் தமிழ்மொழியே
காலத்தை வெல்லுங் கனிந்து .
எந்நாடு சென்றாலும் எம்மொழியில் பேசிநிதம்
சிந்தையில் வைத்தே சிறப்பிப்பேன் - சொந்தமெனக்
கொள்வேன் உரிமையாய்க் கொண்டாடி யின்புறுவேன்
தெள்ளுதமிழ் செம்மொழித் தேன் .

மன்மத ஆண்டே ....!!



மன்மத ஆண்டே ! மகிழ்ச்சி கொடுத்திட 
கன்னித் தமிழ்மொழிக் காத்திட - என்றென்றும்
அன்பால் மனிதம் அழகாய் மலர்விக்க 
இன்றுநீ பூத்தாய் இனிது .

Sunday, April 12, 2015

.தன்னலமில்லாத் தந்தை ...!!



பட்டுவிரல்  நோகுமென்று பாலகனைத் தோள்சுமப்பார் 
சுட்டியவன் சேட்டைகளில் சொக்கிடுவார் – மட்டிலா 
அன்பால் கரைத்திடுவார் ஆக்கமுடன் கற்பிப்பார் 
தன்னல மில்லாத்தந் தந்தை .

Friday, April 10, 2015

சம்மதிப்பாயா அம்மா ....???

மனதிற்குப் பிடித்தவரை 
மணாளனாய் வரிந்திட்டேன் 
மனதார சம்மதித்து 
மகளென்னை வாழ்த்திடுவாய் ! 

இருமனமும் கலந்தபின்னே 
இணைத்துவைத்தல் முறைதானே ! 
இடையூறாய் நீயிருந்தால் 
இதயம்நூறாய் வெடித்திடுமே ! 

தாயேயுன் சம்மதத்தை 
தயவுடனே வேண்டுகின்றேன் 
தயங்குவதேன் கலங்குவதேன் 
தடுப்பதெது சொல்லம்மா ! 

களங்கமில்லா காதல்தான் 
கட்டுப்பாடு மீறலையே 
கடலளவு கண்ணீர்விட்டும் 
கல்மனமும் கரையலையே ! 

சாதிவெறி கொண்டவுள்ளம் 
சம்மதிக்க மறுக்கிறதோ ? 
சாகும்வரை போராடுவேன் - நீ 
சரிசொலாமல் மணமுடியேன் ! 

சாதிக்குள்ளே மணம்செய்தால் 
சாகாவரம் கிடைத்திடுமோ ? 
சந்தோசம் நிலைத்திடுமோ ? 
சால்பெனக்குத் தந்திடுமோ ? 

தரையிலிட்ட மீன்போலே 
தவிக்கின்றேன் துடிக்கின்றேன் 
தாலிஎந்தன் கழுத்திலேற 
தாயேநீ அருள்புரிவாய் ! 

என்காதல் ஏற்றுக்கொள்ள 
எள்ளளவும் மனமிலையோ ? 
கன்னியாய் நாள்கழிப்பேன் 
கள்ளத்தனம் நான்செய்யேன் ! 

கடவுளெனக்கு நீயம்மா 
காதலுனக்குப் பிறகம்மா 
கனியுமென்ற நம்பிக்கையில் 
காத்திருப்பேன் என்அம்மா ....!!!

அக்கச்சியும் அன்னையே ....!!



அரவணைக்கும் அக்காவும் 
அன்பில் அன்னைதான் 
அக்கறையாய் அளவளாவி 
அறிவூட்டி அகங்குளிர்வாள் ! 

அகங்காரம் அகத்திலில்லை 
அகம்பாவம் அவளுக்கில்லை 
அன்னபானம் அவளூட்ட 
அம்மாவின் அன்புதோற்கும் ! 

அச்சத்தால் அழுதாலும் 
அஞ்சலென அபயமளிப்பாள் 
அயர்ச்சியிலும் அசராது 
அனுகூலம் அருளிடுவாள் ! 

அடுக்கடுக்காய் அல்லல்வரினும் 
அடைக்கலமாய் அணைத்திடுவாள் 
அஞ்சனவிழியாள் அஞ்சுகமொழியாள் 
அழகுமயிலாள் அருமைகுணத்தாள் ! 

அத்தியின் அர்ப்பணிப்பு 
அபாரமானது அபரிமிதமானது 
அக்கச்சியும் அம்மாவே 
அகிலத்தில் அறிவீரே ...!!!

இல்லறமே இம்சையாகும் ....!!!



கூண்டுக்குள் கிளிபோல 
பெண்களை அடைத்திடுவார் 
கூடவே சிறகுவெட்டி 
திறமைகளை முடக்கிடுவார் ...!! 

தன்னிலும் பேரெடுத்தால் 
பொறாமையில் வெந்திடுவார் 
தன்னிலை உணர்ந்தவுடன் 
தாழ்ந்துமனம் வெம்பிடுவார் ....!! 

தவறுகள் சுட்டிடிலோ 
திமிரானவள் என்றுரைப்பார் 
தட்டிக்கேட்டு விட்டாலோ 
அடங்காப் பிடாரியென்பார் ....!! 

குனியக்குனிய குட்டிடுவார் 
நிமிர்ந்திடில் பழித்திடுவார் 
குறைபேசிக் கழிப்பதனால் 
குடும்பத்தில் அமைதியுண்டோ ...!! 

மதித்து மனைவியை நேசித்தால் 
இல்வாழ்க்கை இனிமையாகும் 
மறுத்து வாட்டி வதைத்திடிலோ 
இல்லறமே இம்சையாகும் ......!!!