Thursday, January 4, 2018

பாவை பத்து ....!!!


மஞ்சுளமாய்க் கீழ்த்திசை வானில் கதிரோனும்
செஞ்சுட ராகத் திருமுகம் காட்டுமுன் 
அஞ்சனம் தீட்டிய அங்கயற் கண்களில் 
கெஞ்சிடும் தூக்கத்தைக் கிள்ளி எறிந்திட்டு
பஞ்சணை விட்டெழுந்து பாற்கடல் வாசனை 
நெஞ்சில் நினைந்துருகி நீராடிப் பக்தியுடன்
சஞ்சலம் நீங்கி தரிசனம் செய்திட 
வஞ்சியரே   கூடி வணங்கேலோ ரெம்பாவாய் ! 1.

புள்ளினம் கூவும் புலர்காலைப் போழ்தினில் 
உள்ளத்தி லன்புடன் உத்தம னைப்போற்றிப்
பள்ளி யெழுப்பப் பனிவிழும் வைகறையில்
கள்ளப் புலனைந்தைக் கட்டுப் படுத்தியே 
தெள்ளு தமிழினில் தித்திக்கப் பாடிடக் 
கொள்ளை யெழிலுடன் கோபாலன் கண்மலர்ந்(து) 
அள்ளி யருள்வழங்கும் அற்புதம் காண்பதற்குத் 
துள்ளிநிதம் கூடச் சுகமேலோ ரெம்பாவாய் ! 2.

மாதவ மாயனை வைகுந்த வாசனைப் 
பூதமைந்தும் ஏத்திப் புகழ்வ தறியாயோ ?
கூதலால் வாட்டமோ? கோயில் மணியிசைக்கும் 
கீதம் செவியோரம் கேட்டிலையோ சொல்,தோழி !
பாதம் பணிந்திட பாவாய்நீ வா!நவ 
நீதமுண் டோனின் நிழலினைப் பின்பற்றிப் 
பேதமின்றிச் செல்லும் பெரும்பே றடைந்திடத் 
தீதகன்று நாளும் சிறப்பேலோ ரெம்பாவாய் !!4. 3.

வெண்பனி பூத்த விடியலின் வாசலில் 
கண்கவர் கோலங்கள் கன்னியர்கை வண்ணத்தில் 
மண்வீதி யெங்கிலும் மங்கலங் கூட்டிட 
வண்டுண்ண தேன்சொரிந்து வண்ணமலர் காத்தாற்போல் 
கண்ணனங்கே நிற்கின்றான் காதலுடன் கண்டுவரக்  
கெண்டை விழிமலர்ந்து கேசவனைச் சேவிக்கப் 
பெண்ணே விரைந்தெழு! பித்தந் தெளிவுறக்,கார் 
வண்ணனை வேண்டி மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் !!  4.

குன்றைக் குடையெனக் கொண்டானைக், கம்சனைக் 
கொன்றானைக், கோகுலத்தில் கோபியர் உள்ளமதை 
வென்றானைக், கையிலள்ளி வெண்ணெயுண்  டானை,மண் 
தின்றானை, எண்ணிலாச் சேட்டைகள் செய்தானைக் 
கன்றுகள் காதினில் கட்டெறும்பு விட்டானை 
அன்னை யசோதையின் அன்பிற் குகந்தானை  
நன்மொழி செப்பிய நல்லழகு நாயகனைச்
சென்று தொழுதல்  சிறப்பேலோ ரெம்பாவாய் !8. 5.

வண்ணமயிற் பீலி வடிவாய் யணிந்தசிறு 
கொண்டையும், கையில் குழலும், சலங்கையுடன் 
தண்டையும், மார்பினில் சந்தன மும்பூசி 
வெண்பட் டுடுத்திய வேணுகோ பாலனைக் 
கண்ணாரக் காண்பதற்குக் காலையிள ஞாயிறும் 
வெண்ணொளி பாய்ச்சி,வான் மேகங் களிடையெழும் ;
கண்ணுறக்கம் போதும்; கடுகிவந்து கைத்தொழ 
பெண்ணே! பெரும்பேறு பெற்றேலோ ரெம்பாவாய் ! 6.

கல்லுங் கனிந்துருக கண்ணனவன் கைகளில்
புல்லாங் குழலெடுத்துப் பூபாளம் வாசிக்க 
மெல்லிசையில் ஆநிரை மெய்மறந்து நின்றிருக்கும்;
புல்லுந் தலையசைக்கும்; புன்னைமரம் பூச்சொரியும்;
எல்லையிலா வன்பில் யசோதை இளங்கன்றின் 
முல்லைச் சிரிப்பில் முழுதா யுளங்கரையும்;
நில்லா மனத்தை நிறுத்திவழி காட்டுவானைச் 
சொல்லெடுத்துப் பாட சுகமேலோ ரெம்பாவாய் ! 7.

விடிந்த தறிகிலையோ? வேல்விழி யாளே!
துடிக்கு மிமைகளின் சோர்வை விரட்டி 
நெடியோன் திருமாலை நெஞ்சில் நினைந்து 
கடிதெழுந்து நீராடிக் கண்ணனைக் காண 
நொடியில் புறப்படு; நூபுரம் கொஞ்சும் 
அடியினைப் போற்றிட ஆவ லுடனே
படியிறங்கி வந்தே  பனிவிழும் காலை 
வடிவுடை யானை வணங்கேலோ ரெம்பாவாய் ! 8.

பச்சை மயிற்பீலி பாங்காய்த் தரித்தானை
நச்சரவம் மீது நடனம் புரிந்தானை 
மெச்சிப் புகழ்பாட மெய்மறந்து கேட்பானை 
அச்சுதனை ஆயனை ஆலிலைக் கண்ணனை 
இச்சையுடன் போற்றிட யாவரும் சென்றுவிட 
பிச்சிப்பூ சூடிய பிள்ளாய்! எழுந்திராய்! 
மிச்சம்நீ மட்டும் விழியிமை சாத்தியதேன்?
அச்சோ! இதுதகுமோ? ஆற்றேலோ ரெம்பாவாய் 9.
1.
விண்ணில் கதிரோன் விரைந்தெழுமுன் தான்விழித்துச் 
சுண்ணப் பொடிபூசித் தூய்மையாய் நீராடி 
வெண்முல்லைப் பூச்சூடி வேல்விழியில் மைதீட்டித்
தண்டையணி காலில் சலங்கையொலி கொஞ்சிடக் 
கண்ணன் திருக்கோலம் கண்டு மனமுருகிக் 
கண்மூடிக் கைகூப்பிக் கார்க்குழல் கோதையர்தம் 
எண்ணத்தைப் பாட்டில் இனிதாய்ச் சொல்லி,மணி 
வண்ணனை வேண்டிட வாரேலோ ரெம்பாவாய் ! 10.