Sunday, April 30, 2017

வண்ணமிகு வானரமே ...!!


வண்ணமிகு வானரமே வாடியதேன் உன்வதனம் 
வெண்பாவில் தாலாட்டு வேண்டுமோ ? - எண்ணற்ற 
பாவலர்கள் கண்ணில்நீ பட்டுவிட்டால் பாடிடுவார் 
ஆவலுடன் சேர்ந்துநீ ஆடு .

சியாமளா ராஜசேகர் 

Saturday, April 29, 2017

தாய்மை ....!!!


பெண்மையைப் பெருமைப் படுத்துவது தாய்மை !
```````````````````````````````````````````````````````````````````````````````
பெண்ணாகப் பிறந்ததற்கே பெருமையுற  வேண்டுமம்மா
பெண்ணிற்குப் பலவடிவம் பிறவிதனில் இருந்தாலும் 
பெண்ணினமே நிறைவுகொளும் பெருமைமிகு வரமெதென்றால் 
பெண்மைக்கே உரித்தான பெரும்பேறாம் தாய்மைதானே !

கருவுற்ற நாள்முதலாய்க் கனவுகளில் மிதந்திருந்து 
கருணையுடன் முப்போதும் கண்ணிமைபோல் காத்திருந்து 
உருண்டாலும் உதைத்தாலும் உயிருருக அதைரசித்து 
விருப்புகளைப் புறந்தள்ளி வியக்கவைக்கும் தாய்மையொன்றே !

பத்துமாதம் சுமந்தவளும் பத்தியமும் தானிருந்து 
சொத்தாக வேகருதி சோர்வினிலும் சுகம்பெறுவாள் 
நித்திரையை மறந்தவளும் நெஞ்சினிக்க மலர்ந்திடுவாள் 
உத்தமியாள் தியாகத்தின் உறைவிடமாய்த் திகழ்ந்திடுவாள் !

புதிதாகப் புவியினிலே பூத்திட்ட மகவிற்கு 
உதிரத்தைப் பாலாக்கி உளமகிழ்ந்து புகட்டிடுவாள் 
துதிபாடி தெய்வத்தைத் துணைக்கழைப்பாள் நோயுற்றால் 
அதிசயமாம் தாய்மையதன் அடையாளம் பொறுமையேதான்  !

அன்பென்ற ஆயுதத்தால் அனைவரையும் கரைத்திடுவாள் 
தன்னைத்தான் அரைத்தவளும் சந்தனமாய் மணந்திடுவாள்
அன்னையெனும் உறவேதான் அவரவர்க்குக் கடவுளாகும் 
தன்னலமே சிறிதுமிலாத் தனித்துவமே தாய்மையாகும் !

பிழையேதும் செய்தாலும் பிள்ளைகளுக்(கு) எடுத்துரைத்து 
மழைபோல குளிர்விக்கும் மந்திரமும் கற்றிடுவாள் !
உழைத்தோடாய்த் தேய்ந்தாலும் உருக்குலைந்தே போனாலும் 
இழையோடும் பாசத்தில் இம்மியேனும் குறைவையாள் !

பிள்ளைகளுக்(கு) ஒன்றென்றால் பெற்றமனம் துடிதுடிக்கும் 
முள்தைத்துக் கிழித்தாற்போல் மொத்தமாக கசிந்துருகும் 
தள்ளாத வயதினிலும் தாயுளமே தவித்திருக்கும்   
எள்ளளவும் ஈடுசொல்ல இயன்றிடுமோ தாய்மைக்கு ?

தாய்மைக்கு நிகரென்றும் தரணியிலே ஒன்றுமில்லை 
தாயைப்போல் நல்லுறவு தாங்கிடவும் வேறில்லை 
தாய்மடிபோல் ஆறுதலைத் தரவல்ல(து) ஏதுமில்லை 
தாய்மையொன்றே பெண்மைக்குத் தனிப்பெருமை சேர்த்திடுமே !!

சியாமளா ராஜசேகர் 



Tuesday, April 25, 2017

வேல் ! வேல் ! வேல் !


ஆறுபடை வீடுடைய குருபரனின் கையில் 
***அலங்கார மாயொளிரும் அழகான செவ்வேல் ! 
ஏறுமயில் வாகனனின்‌ மார்பொடுற வாடி 
***எழிலார்ந்த குருகுகொடி யுடன்தருமே காட்சி ! 
கூறுமடி யார்வினைகள் வேரறுத்துக் காக்கும் 
***குன்றிலுறை குமரனுக்கே கம்பீரம் கொடுக்கும் ! 
நீறுபூசி வழிபாடு செய்வோரின் வாழ்வில் 
***நிழலாகத் தொடர்ந்துவந்து துணையாகும் வேலே ! 

வேலாயு தத்திற்கு மேலெதுவு மில்லை 
***வெற்றிகளைக் குவித்துவரும் வீரத்தின் சின்னம் ! 
சூலாயு தம்கொண்ட வுமையாளின் கையால் 
***சூரபத்ம னையழிக்கப் பெற்றதிந்த வேலே ! 
பாலாலே அபிடேகம் செய்வோர்தம் வாழ்வை 
***பரிசுத்த மாக்கியொளி கூட்டிடுவான் வேலன் ! 
காலனவ னணுகாமல் துணைநிற்கும் செவ்வேல் 
***கந்தவேளின் கருணையைப்போல் மின்னிடுமே முத்தாய் ! 

முத்தமிழால் வைதாரை யும்வாழ வைக்கும் 
***முருகவேளின் ஆயுதமாம் வேலுக்கீ டில்லை ! 
முத்திக்கும் வழிகோலும் முன்வினையைத் தீர்க்கும் 
***முப்போதும் முன்னின்றே ஐந்தொழிலும் செய்யும் ! 
சத்தியத்திற் குட்பட்டுப் போரிட்டு வெல்லும் 
***சங்கடங்கள் யாவையுமே சரிந்தோடச் செய்யும் ! 
சித்தருடன் ஞானியரும் யோகியரும் வாழ்த்தும் 
***சிறப்புகளைப் பெற்றிருக்கும் வேலைநிதம் போற்று ! 

போற்றிநிதம் வழிபட்டால் பொல்லாங்கு போக்கும் 
***பூத்தூவி வணங்கிடிலோ புதுத்தெளிவு பிறக்கும் ! 
ஊற்றெடுக்கும் அன்பாலே உளமுருகி வேண்ட 
***ஊழ்வினையை வேரோடு களைந்தெறியும் வல்வேல் ! 
கூற்றுவனும் அஞ்சிடுவான் அருகினிலே வந்து 
***கொய்திடவே நல்லுயிரைத் துணையாய்வேல் இருக்க ! 
ஏற்றமிகு நல்வாழ்வு இவ்வுலகில் கிட்டும் 
***ஈடில்லா வீடுபேற்றை யளிப்பதுவும் வேலே ! 

வேல்முகமோ அறிவைப்போல் சுடரிலையாய்ப் படர்ந்தும் 
***வேலினடி அறிவைப்போல் ஆழமாக நீண்டும் 
வேல்நுனியோ கூர்மையாயும் அமைந்துள்ள தாகும் 
***வேலைவழி படுவோர்தம் வேதனையுந் தீரும் ! 
வேலமைத்து வணங்குதலே வேற்கோட்ட மாகும் 
***வேலுக்கே அபிடேகம் பழமுதிர்ச்சோ லையிலே ! 
வேலைநிதம் வணங்குதலே வேலையெனக் கொண்டால் 
***வேலவனும் மிகமகிழ்ந்து வரமருள்வான் நன்றே !!

விருத்தம் - மதுரை


சிற்றிலக்கிய வரிசை
****************************
விருத்தம் ! ( ஊர் விருத்தம் - மதுரை )
***************************************************
( அன்னை மீனாட்சி கோயில்கொண்ட மதுரை பற்றிய விருத்தம் )
காப்பு
********
அங்கயற் கண்ணிநல் லாட்சி புரிந்திடும்
மங்கா மதுரையின் மாண்பினை - பொங்கும்
விருத்தத்தில் யான்வடிக்க வேழமுகத் தோனே
வருவாய் தருவாய் வரம்.
நூல்
******
மீனாட்சி அரசாளும் மதுரை அன்று
 ****மீன்கொடியோன் தலைநகரா யிருந்த வூராம் !
தேனான வைகைநதி பாயு மூராம்
 ***தெய்வீக சிந்தனையை வளர்க்கு மூராம் !
மேனாட்டார் விழியுயர்த்தி வியந்து நோக்கும்
****மேன்மைமிகு கலைகளிலே விஞ்சு மூராம் !
நான்மாடக் கூடலெனப் போற்றப் பெற்ற
***நற்றவத்தோர் வாழ்ந்ததிந்த ஊரின் பேறாம் ! 1.
பேறுகளும் மிகுந்தவிந்த மதுரை மண்ணே
 ***பிறைசூடி விளையாடல் நிகழ்ந்த வூராம் !
நீறுபூசி சுந்தரேசர் மீனாள் கூடி
 ****நெஞ்சினிக்கக் குடிகொண்ட ஆல வாயாம் !
நாறுமலர் மல்லிகையே பெருமை சொல்லும்
***நற்றமிழின் மண்வாசம் சொக்க வைக்கும் !
வேறுபல மகிமைகளும் சொல்ல வந்தேன்
***விருத்தங்கள் வாசிக்கத் தெரியும் சேதி ! 2.
சேதிகேளீர்! கடம்பமரம் மிகுந்த ஊராம்
***தேன்தமிழைச் சங்கங்கள் வளர்த்த ஊராம் !
வீதிகளும் தமிழ்மாதப் பெயரால் மின்னும்
***வெள்ளிச்ச பையிலீசன் காலை மாற்றிப்
பாதிமதி சூடியாடும் அழகு கோலம்
***பார்ப்போரைப் பரவசமும் கொள்ளச் செய்யும் !
நீதிநெறி வழுவாமங் கம்மா ராணி
***நெஞ்சத்தில் வீரத்தோ டாண்ட ஊராம் ! 3.
ஊரினிலே மீனாட்சி யம்மன் கோயில்
***உலகத்தில் பிரசித்திப் பெற்ற கோயில்
பாரிலுயர் அதிசயமாய்ப் பார்க்கப் பட்டுப்
***பழம்பெருமை பேசிநிற்கும் எழிலின் உச்சம் !
நீரிருந்தும் மீனினமே குளத்தில் இல்லை
***நிசமிங்கே பொற்றாம ரைக்கு ளத்தில் !
பேரெழிலாய் ஆயிரங்கால் மண்ட பத்தில்
***பேர்சொல்லும் கண்காட்சி உள்ள திங்கே ! 4.
இங்குள்ள நாயக்கர் அரங்கந் தன்னில்
 ***எழிலான ஓவியங்கள் உள்ளம் அள்ளும் !
மங்காத அழகோடு பெரிய தூண்கள்
***மன்னவனின் கலைத்திறனைப் போற்றிச் சொல்லும் !
சங்கீத இசைத்தூண்கள் சந்தம் கொஞ்சும்
***சத்தத்தில் செவிகளிலே செந்தேன் பாயும் !
சிங்கார மாயொளியு மொலியு மிங்கே
***சிலிர்க்கவைக்கும் காட்சிகளும் நடக்கும் நித்தம் !. 5.
நடைபெறும்வி ழாக்களுக்குப் பஞ்ச மில்லை
***நகரத்தின் விழாக்கோலம் அன்பின் எல்லை !
தடையின்றி நடந்தேறும் ஜல்லிக் கட்டும்
***தமிழினத்தின் வீரத்தை எடுத்துக் காட்டும் !
மடைதிறந்த வெள்ளமென மக்கள் கூட்டம்
***மகிழ்வுடனே அதைக்காண முட்டி மோதும் !
சடைத்திடாமல் விருந்தோம்பும் குணமே சொத்தாய்த்
 ***தமிழ்மாந்தர் மனத்தூறும் அன்பே முத்தாய் ! 6.
முத்தாக ஒளிசிந்தும் மதுரை தன்னில்
 ***முப்போதும் ஆன்மீக வாசம் வீசும் !
சித்திரையில் திருவிழாவும் பேத மின்றிச்
***சீரோடும் சிறப்போடும் நடக்கும் பாங்காய் !
எத்திக்கும் பக்திவெள்ளம் பெருகிப் பாய
***இருசமய ஒற்றுமையில் இன்பம் பொங்கும் !
வித்தாகி நல்லிணக்க மியல்பாய்ப் பூக்கும்
 ***வீண்வாதம் சங்கடங்கள் மறைந்தே செல்லும் ! 7.
செல்லுகின்ற சாலையெல்லாம் மக்கள் கூடிச்
***சீர்மிகுந்த அன்னைமணக் கோலம் கண்டு
 எல்லையில்லா ஆனந்த மெங்கும் பொங்க
***இறைவியின் திருமணத்தில் பங்கு கொள்வர் !
 பல்லாயி ரம்பெண்கள் தாலி நூலைப்
 ***பக்தியுடன் தாமாக மாற்றிக் கொள்ளப்
பல்லக்கில் சொக்கருட னிணைந்தே மீனாள்
***பவனிவரும் அழகினிலே பூக்கும் கண்கள் ! 8.
கள்ளழகர் வைகையிலே இறங்கும் கோலம்
***காண்பதற்கே விழிகளொரு கோடி வேண்டும் !
உள்ளமெலாம் பக்திரசம் நிறைந்து மின்னும்
 ***ஒற்றுமையை வலியுறுத்தும் விழாவாம் இஃதே !
வெள்ளமெனத் திரண்டிருந்த மக்கள் நெஞ்சில்
 ***வித்தியாச மேதுமின்றிப் பகைமை நீங்கும் !
கள்ளமனம் கரைந்தங்குச் சுரக்கும் நேயம்
 ***கனிந்துருகிப் பரவசத்தில் உள்ளம் பூக்கும் ! 9.
பூப்போன்று மணம்வீசும் விருத்தம் பத்தும்
***புனிதமான மதுரைநகர் புகழைப் பாடும் !
கூப்பிட்ட வுடனன்னை ஓடி வந்தே
***கொஞ்சுமொழி யால்வருடி உள்ளம் வெல்வாள் !
தோப்புக்குள் இளங்காற்றாய்க் கருணை யோடு
***சுகராகம் மீட்டிடுவாள் மதுரை தன்னில் !
மாப்பிள்ளை விநாயகரே உமக்கு நன்றி
***மதுரைதனை எழுதவைத்தீர் தடங்க லின்றி ! 10.
சியாமளா ராஜசேகர்

Monday, April 24, 2017

இயற்கையே இவை வேண்டாம் ....!!!

ஆழிப் பேரலை ஆர்ப்பரித்து எழுந்து 
கோரத் தாண்டவம் ஆடிட வேண்டாம் .....! 

பூமா தேவியும் சிலிர்த்து நிமிர்ந்து 
பூகம்ப மாய் வெடித்திட வேண்டாம் .....! 

குமுறிக் கொந்தளித்து தீக் குழம்பை 
எரிமலை என்றும் கக்கிட வேண்டாம் ....! 

வெள்ளம் பெருகி கரையை உடைத்து 
ஆறும் சேதம் விளைத்திட வேண்டாம் ! 

நிலச்சரிவால் மலையில் பாறைகள் உருண்டு 
பாதை வழியும் தடைபட வேண்டாம் ....! 

சாகரம் பொங்கிச் சீற்றம் கொண்டு 
ஊரைச் சுருட்டும் சாகசம் வேண்டாம் ....! 

வீசும் காற்றும் சூறா வளியாய் 
சுழன்று சூறை யாட வேண்டாம் ....! 

உறைபனிப் பொழிவால் நிலமும்மூடும் 
நிலைமை உலகில் இனியும்வேண்டாம் ...! 

பேய்மழை விடாது கொட்டித் தீர்த்து 
பேரிடர் புரியும் அவலம் வேண்டாம் ....! 

வைரக் கீற்றாய் பளிச்சென ஒளிர்ந்து 
மின்னல் பார்வை பறித்திடல் வேண்டாம் ...! 

மேகமோதலில் செவியைச் செவிடாக்கும் 
இடியும் உயிர்ப்பலி வாங்கிட வேண்டாம் ..! 

அணுஅணுவாய் ரசிக்கவைக்கும் இயற்கையே ! 
சீற்ற முறாமல் சாந்தமாய் இரு ......!!!!

Monday, April 10, 2017

கைகள் கூப்பினேன் கவலை போக்கிடு ....!!!

இசைக்க இயலுமோ இதயம் ஒடிந்தபின் 
***இமைகள் இணையுமோ இரவின் மடியினில் 
அசைக்கும் நினைவுகள் அடங்க மறுத்திட 
***அகத்தில் எங்ஙனம் அமைதி மலர்ந்திடும் ?

துணையாய் வாழ்வினில் துயரைப் போக்கிட 
***துடிக்கும் மனத்தினில் துக்கம் துடைத்திட 
அணைக்கும் கரங்களாய் அன்பு காட்டிட 
***அன்னை வந்திடு அருளை வழங்கிடு !

இருக்கும் நாள்வரை என்னை உணர்த்திடு 
***இறைவி உன்னையே என்றும் நம்புவேன் 
திருவே சங்கடம் தீர்த்தே ஆதரி 
***தினமும்  என்னுளே தெளிவைத் தந்திடு !

விதியை மாற்றிட விரைந்து வந்திடு 
***வினைகள் யாவையும் விலக்கி ஓட்டிடு 
கதியே நீயென கண்ணீர் மல்கிட 
***கைகள் கூப்பினேன் கவலை போக்கிடு !

சியாமளா ராஜசேகர் 

Sunday, April 9, 2017

கண்ணைவிட்டு மறையாதே ....!!!



நிறமேழாய் வளைந்திருந்தாய் ஆகாய வீதியிலே 
***நெஞ்சத்தை வளைத்துவிட்ட அரைவட்டப் பேரழகே !
சிறகிருந்தால் பறந்துவந்து பூமிக்குக் கொண்டுவந்து 
***சிறைவைப்பேன் இதயத்தில் காதலுடன் கவிவனைவேன் !
உறவாட வருவாயா உறைந்தங்கே நிற்பாயா 
***உரிமையுடன் கேட்கின்றேன் வானவில்லே பதிலுரைப்பாய் !
துறந்திடவும் மனமில்லை துடிப்பென்னுள் அடங்கவில்லை 
***தொலைந்தேனே  உன்னழகில் கண்ணைவிட்டு மறையாதே !  

சியாமளா ராஜசேகர் 

Saturday, April 8, 2017

ஹைக்கூ ....!!!

மக்கள் வெள்ளம் 
வேடிக்கை பார்க்க வந்தது 
வைகையில் தண்ணீர் ....!!!

மெட்டுக்குப் பாட்டு ....!!!



பாசப் பூந்தேரே ...பிள்ளை நான் இங்கே ...
பாடும் பாடலினைக் கேட்பாய் ...
பக்கத்தில் இருந் தாய் பண்போடு வளர்த் தாய் 

பக்குவமாய் நீ தான் பார்போற்ற வைத் தாய் 
என்னன்னையே என்தெய்வமே நீ தான்  ( பாசப் பூந்தேரே )

துன்பம் தீண்டும் போதிலே தூக்க மின்றி வாடினேன் 
அன்பு நெஞ்சம் துடித்திட அன்னை உன்னைத் தேடினேன் 
இன்பம் கொஞ்சும் வேளையில் இன்றும் எண்ணி ஏங்கினேன் 
பொன்னைப் போன்ற உன்னிடம் பொங்கும் பாசம் வேண்டினேன் 
பிச்சிப்பூவைப் போலே வெள்ளைமனம் கொண்டாய் 
உச்சிமுகர்ந்து அன்பாய்க் கோடிமுத்தம் தந்தாய் 
வாழ்நாளெ லாம் நான்போற்றுவேன் தா யே !  ( பாசப் பூந்தேரே )

கோவிலுக்குள் இல்லையே கும்பிடவும் சாமி யே 
தேவியுன்னைக் காண்கிறேன் தெய்வமாக வீட்டி லே 
ஆவியென்னுள் துடிக்குது ஆசைமுகம் பார்க்க வே 
பாவிநெஞ்சம் பாடுது பாசத்தோடு நாளு மே 
அன்னைமடிக் கேங்கும் பிள்ளையென்னைப் பாராய் 
சென்று விட்ட போதும் பிள்ளை யாய்நீ வாராய் 
வாழ்நாளெ லாம் நான்போற்றுவேன் தா யே ! ( பாசப் பூந்தேரே )


( காதல் ரோஜாவே என்ற மெட்டில் தாயைப் போற்றும் பாடல் )

Tuesday, April 4, 2017

ஆகாயச் சோலையிலே ....!!!

ஆகாயச் சோலையிலே
அழகழகாய் மலர்ந்திருக்கும்
நட்சத்திரப் பூக்களை
வானவில்லில் தொடுத்துன்றன்
கார்மேக கூந்தலிலே
காதலுடன் சூட்டிடவா
மின்னல் கீற்றினையே
மாலையாக்கிப் போட்டிடவா??
சியாமளா ராஜசேகர்

Monday, April 3, 2017

வெண்சுருட்டே வேண்டாம் விடு ....!!!

இருவிரலி டுக்கில் எழும்பிப் புகைந்தே
உருக்குலைத்(து) ஆளை ஒழிக்கும் - வருந்துயர்
எண்ணித் தவிர்த்திடுவாய் என்றும் நலங்கெடுக்கும்

வெண்சுருட்டே வேண்டாம் விடு.

 உடலை யுருக்கி யுயிரைப் பறித்துச்
சுடலைக் கனுப்பும் சுருட்டு! - விடத்தை
விடாதுள் ளிழுத்தால் விரட்டி வருவான்

கடாவில் மறலி கடிது.


 தானே தனக்கென வைத்திடும் கொள்ளியாய்
ஊனே அழிக்கும் உணராயோ - வானேறு 
வாழ்வில் விழுந்திட, வீணாகும் இல்லறமே 

பாழ்சுருட்டை விட்டிடப் பார்.

ஏனோ நீயும் எனைமறந்தாய் ....!!!


இசையில் மயங்கி விட்டேனடா - நான்
இதயம் நெகிழ்ந்து நின்றேனடா
அசையா விழியால் பார்த்தேனடா - நீ

அருகில் வந்தால் பூப்பேனடா!

ஊமைக் கனவாய் ஆனதடா - என்
உள்ளமும் கனன்று எரியுதடா
ஆமை யாய்ப்புலன் அடங்கிடுமோ - உன்
அன்பே என்னை மாற்றுமடா!

கொடியில் படர்ந்த மலர்களுமே - உன்
கோலம் காண ஏங்கிடுதே
துடிக்கும் பெண்மை நிலையுணர்ந்தே - நீ
தோளில் தாங்க வந்திடடா!

காற்றின் உறவில் அரும்பவிழ - அதில்
களிப்புடன் வண்டு மதுசுவைக்கும்
ஏற்றுக் கொண்டிட வருவாயா - கண்ணா
ஏனோ நீயும் எனைமறந்தாய்!