Saturday, March 30, 2019

வண்ண வண்ண வெண்பா விரி ...!!!

விண்பொய்க்க நீரின்றி வெந்துழல் கின்றோரின்
கண்ணீர் துடைக்கக் கருத்தாக - மண்ணுலகத்
தண்ணீர் தினத்தில் தவிப்படங்கும் வண்ணம்நீ
வண்ணவண்ண வெண்பா விரி.
பாலை நிலத்தெழிலைப் பச்சை வயல்வெளியை
நீலக் கடல்வனப்பை நீள்வனத்தைக் - கோலமிகு
விண்முட்டும் மாமலையை மெத்தப் புகழ்ந்தழகாய்
வண்ணவண்ண வெண்பா விரி.
மன்றாடி மைந்தனை வண்ணமயில் வாகனனைக்
குன்றத்தி லாடுங் குமரனை - அன்புடன்
எண்ணி வுளமுருகி இன்றேவெண் தாளெடுத்து
வண்ணவண்ணவெண்பா விரி.
புன்னை மரநிழலில் புல்லாங் குழலூதிக்
கன்னிய ருள்ளம் கவர்ந்திழுக்கும் - மன்னவனாம்
கண்ணன் எழில்முகத்தைக் கண்டதும் காதலொடு
வண்ணவண்ண வெண்பா விரி.
மலையேழு தாண்டியந்த மாதவனைக் கண்டால்
தொலைந்தோடும் வல்வினைகள் தோற்றே! - சிலைபோலும்
கண்மூடி மெய்மறந்த காட்சியை நெஞ்சிலெண்ணி
வண்ணவண்ண வெண்பா விரி.
( ஈற்றடி - கவிமாமணி ஹரிகிருஷ்ணன் அவர்கள்)
சியாமளா ராஜசேகர்

சிங்காரத் தோட்டத்தில் சேனியம்மா...!!!

சேனியம்மன் கொலுவிருக்கும் அழகியகற் கோட்டம்
***சீர்மிகவே அமைந்திருக்கும் சிங்காரத் தோட்டம் !
வானிலொளிர் வெண்மதியாய் அன்னையவள் தோற்றம்
***வற்றாத கருணையினால் வாழ்வில்வரும் மாற்றம் !
தேனினிய சொல்லெடுத்துப் பக்தியுடன் பாடத் 
***தேவியவள் குளிர்ந்துநம்மை ஆட்கொள்வாள் மெல்ல !
நானிலத்தில் நல்லவழி காட்டிடுவாள் என்றும்
***நம்பிடுவோர் குறைகளையத் துணைவருவாள் நன்றே !!
அன்னரத மீதேறி ஆனந்த மாக
***அண்டுவார்தம் உள்ளத்தில் குடியிருக்க வருவாள் !
புன்னகையில் முத்தொளிர ஒய்யார மாகப்
***பூரிப்பில் தனைமறந்து பொலிவோடு வருவாள் !
கண்ணாடி வளையோசை கலகலவென் றொலிக்கக்
***கனிவாக அணைத்திடவே களமிறங்கி வருவாள் !
பன்னீரும் சந்தனமும் வீதியெங்கும் மணக்கப்
***பரிவாக மஞ்சளொடு குங்குமமும் தருவாள் !!
வேப்பிலையின் வாசத்தில் நெகிழ்ந்தவளும் விரைந்து
***வெவ்வினைகள் வேரறுக்கப் பிரம்பெடுத்து வருவாள் !
பூப்போட்டு வணங்குபவர் வாழ்விலொளி யேற்றப்
***பூரணியாய்ப் பொன்முகத்தில் சிரிப்பேந்தி வருவாள் !
கூப்பிட்ட குரல்கேட்டுக் கடைக்கண்ணால் நோக்கிக்
***குழந்தையைப்போல் குதித்தோடி குறைதீர்க்க வருவாள் !
காப்பணிந்து தீச்சட்டி ஏந்திவரு வோரைக்
***காப்பதற்குக் கண்முன்னே கனலாக வருவாள் !!
சிம்மவாக னத்தினிலே சிங்கார மாகச்
***சிலைபோலும் பேரழகி சிலம்பொலிக்க வருவாள் !
பம்பையோடு பறையதிரத் தாளத்தோ(டு) ஆடிப்
***பாங்குடனே பிறைநுதலை உயர்த்தியவள் வருவாள் !
தெம்மாங்கு பாட்டோடு கும்மிகொட்டி னாலும்
***சிந்தைகுளிர்ந்து தலையாட்டிச் சிலிர்த்தவண்ணம் வருவாள் !
அம்மையவள் அழகுகண்டால் கூத்தாடும் நெஞ்சம்
***அடிபணிய விலகிடுமே மனத்திலுள்ள வஞ்சம் !!
காதுகளில் தோடாடக் கருங்கூந்த லாடக்
***கட்டிவைத்த பூச்சரமும் கொண்டைதனி லாட
மாதவளின் மெல்லிடையில் மேகலையு மாட
***மார்பினிலே மணிச்சரமும் பெருமையுட னாட
ஓதுகின்ற மந்திரத்தின் ஒலியிலுள மாட
***ஓங்கார மானவளின் திருவுருவைக் கண்டால்
வேதனைகள் விலகிவிடும் வெற்றிவந்து சேரும்
***மேன்மையுடன் மெய்ஞானம் கூடிவரும் நன்றே !!!
சியாமளா ராஜசேகர்

பறம்பு மலையும், பாரி வள்ளலும்

இயற்கைவளம் நிறைந்தமலை பறம்புமலை அம்மே
***இனியவனாம் வேள்பாரி ஆண்டமலை அம்மே !
அயர்வின்றி உழைக்குமக்க ளுள்ளமலை அம்மே 
***ஔவைமுதல் பலர்பாடும் அழகுமலை அம்மே !
நயமான மூங்கில்நெல் விளையுமலை அம்மே
***நற்சுவையாம் பனிச்சுனைநீர் கொண்டமலை அம்மே !
வியக்கவைக்கும் தேனடைகள் மிகுந்தமலை அம்மே
***வேர்ப்பலாக்கள் மணம்பரப்பி யீர்க்குமலை அம்மே !!
நாட்டுமக்கள் நலமொன்றே நெஞ்சத்தில் கொண்டோன்
***நாடிவந்தோர்க் கில்லையென்று சொல்லாமல் கொடுப்போன் !
கேட்பவர்க்குக் கேட்டவற்றை உடனளிக்கும் செம்மல்
***கிஞ்சித்தும் மறுத்தறியாப் பாரியென்ற வள்ளல் !
கோட்டைக்குள் இருந்துகொண்டே மூவேந்த ரோடு
***குன்றாமல் முற்றுகையை எதிர்கொண்ட கோமான் !
பாட்டெழுதும் பாணரைப்போல் வேடமிட்டுச் சென்று
***பாடியமூ வேந்தருக்கும் வேண்டியத ளித்தான் !!
முல்லைக்குத் தேரீந்த கொடைவள்ளல் பாரி
***மூவேந்தர் யாசிக்க நல்லுயிரை ஈந்தான் !
வெல்வதற்கு வழிசொன்ன கபிலருளம் நொந்து
***விரக்தியொடு தன்முடிவைத் தேடநினைத் தாலும்
வல்லவனாம் தன்நண்பன் பாரியிடம் கொடுத்த
***வாக்கைக்காப் பாற்றிடவே மனம்தேறி நின்றார் !
கல்மனமும் இளகிவிடும் தொடர்ந்தகதை கேட்டால்
***கண்ணீரும் கன்னத்தில் வழிந்தோடும் அம்மே !!!
சியாமளா ராஜசேகர்

வண்ணப் பாடல் ....!!!( தேர்தல் ஸ்பெஷல் )

வண்ணப் பாடல் ...!!!
* * * * * * * * * * * * * * * * *
சந்தக்குழிப்பு ...!!!
* * * * * * ** * * * * * *
தனதனன தான தனதனன தான
தனதனன . . . . தனதானா
அவரையிவர் சாட யிவரையவர் சாட
அரசியலின் வேத . . . . . மிதுதானோ ?
அடிபிடியு மாக நிதமுருளு மானால்
அமைதியினி யேது . . . . . பகர்வாயே !
செவிகசியு மாறு பிறழுமொழி யோடு
சிறுநரிக ளாக . . . . வெறியோடே !
செலுமிடமெ லாமு மெதிரணிக ளோடு
தெறுதலுடன் மோதல் . . . . . முறைதானோ ?
உவகையுறு மாறு மிகவதிக மாக
உறுதிமொழி வீச . . . . . லழகாமோ ?
ஒருசிறிது மேனும் பணவெறியி லாத
உயர்தலைமை நாடி . . . . . யினிசேர்வாய் !
கவனமுடன் போட விரல்நுனியை நாடு
கறைகளினி மாறு . . . . . மெளிதாமே !
கடமைமற வாது நடுநிலைமை யோடு
கவலைகளு மோட . . . . . விரைவாயே !!
சியாமளா ராஜசேகர்

வண்ணப் பாடல் ....!!!


வண்ணப்பாடல்...
சந்தக் குழிப்பு :
**************
தனத்த தானன தானன தானன
தத்தத் தனதன தந்தன தந்தன
தனதன தனதன தனதன தனதன.  . . . . .  தனதானா


கிழக்கி லேயெழு ஞாயிறு  பேரொளி 
   வட்டத் தினையிரு கண்களு முண்டது
     கிடுகிடு கிடுவென இருளது விலகிடு . . . . மதிகாலை !
கிறுக்கி னேனொரு பாடலை யாவலில்
     ஒற்றைக் கதிரதை நெஞ்சமும் வென்றது 
     கிளுகிளு கிளுவென எழுதிய கவிதையு . . . . மிதுதானே !
செழித்த சோலையி லேதிகழ்  வாவியில் 
     மெத்தக் கனிவோடு கெண்டையி ரண்டுடன்
     சிறுகயல் மலரொடு குலவிடு மழகினில் . . . . . நனைவேனே 
தெறித்து நீரலை மேனியி லேபட 
      முத்துச் சரமென நெஞ்சில்வ ழிந்ததன் 
       திகழொளி விழிகளி னிமைகளை வருடிடு . . . . . மிதமாமே !
வழக்க மாயிது தான்நித மேகிடும்
     சுற்றிக் குளமதில் வண்டுப றந்திடும் 
     மழைவரு பொழுதினில் மலரித ழடியினை . . . . . யதுநாடும் !
வருத்த மேயிலை யோவெனும் பார்வையில் 
      வெட்கப் படுமலர் கண்டுநெ கிழ்ந்திடும் 
      மதுவுண மொகுமொகு மொகுவென வொலிசெயும் . . . . . வடிவோடே !

உழைக்கு மேருழ வோரது காளைகள்
     பட்டிக் கதவுதி றந்திட வந்திடும் 
     ஒலியது கலகல கலவென  விருசெவி . . . . . களில்மோதும்
உளத்தில் லோடிடு மாவலி மாறிட
      நத்தத் துடனவர் சென்றுதொ டர்ந்திட 
      உழவரி னுயர்தொழி லிதுவென மனமது . . . . மகிழாதோ ?

சியாமளா ராஜசேகர் 

Tuesday, March 19, 2019

வேர்த்திரள்....!!

வேர்த்திரள் ....!!!
* * * * * * * * * * * * 
அடர்வனத்தில் மரமானேன் அமைதியுடன் வாழ்ந்திருந்தேன் 
கடவுளுக்கு நன்றிசொன்னேன் கானகத்தில் படைத்ததற்கு !
படர்ந்தவிந்த உலகினிலே பகுத்தறியும் மானுடரின் 
இடர்களைய முடிவெடுத்தேன் இயன்றவரை இனத்துடனே !!

பல்லுயிர்க்கும் புகலிடமாய்ப் பயனளிக்கும் வனத்தினிலே 
நல்லதொரு துணையெனவே நலமளித்துக் களித்திருந்தேன் !
இல்லையெணா(து) உயிர்வளியை ஈந்துதவி புரிந்திருந்தேன் 
பொல்லாங்கு நினைப்போரைப் புன்னகையால் வென்றேனே !

நிலச்சரிவு நிகழாமல் நிமிர்ந்தபடி நிறுத்திவிட்டேன் 
அலைக்கழிக்கும் மண்ணரிப்பை அடியோடு தடுத்துவிட்டேன் 
சலனத்தால் மிகக்குளிர்ந்து தருவித்தேன் வான்மழையை 
மலரனைய மென்மனத்தில் மௌனமொழி பகர்ந்தேனே !

விலங்குகளும் பறவைகளும் விளையாடும் களமானேன்
தலைமகளாய்க் கானகத்தில் தண்ணிழலில் அரவணைத்தேன் 
நிலையில்லாப் பிறவியென நினைத்ததில்லை கனவினிலும் 
வலைவீசிக் கொண்டுசெல வந்தானோ கூற்றுவனே !

வெண்சுருட்டை அணைக்காமல் வீசிவிட்டுச் சென்றவனால்
கண்பார்க்கும் நேரத்தில் கனல்பற்றி எரிந்ததம்மா !
விண்முட்ட உயர்ந்தவென்றன் வேர்த்திரளும் அழிந்ததம்மா !
புண்பட்டு மாய்ந்தேனே புகையோடு கரைந்தேனே ! 

பாவியரே உம்மாலே பயனற்றுப் போனேனே 
ஆவியெலாம் துடிக்கிறதே அனைத்துயிரும் கருகினவே !
ஏவியவர் யார்யாரோ ? இறைவாநீ தானறிவாய்
தீவினையைச் செய்தவர்க்குத் தீர்ப்பளிக்க விரைவாயே !!

சியாமளா ராஜசேகர் 

உலக தூக்க தினம் ...!!!

இமைக்கதவைச் சாத்தியதும் தழுவிக் கொள்ள
***இதமாக நீவேண்டும் களைப்பை வெல்ல!
சுமைதாங்கு முள்ளத்தின் அழுத்தம் போக்கச்
***சுகமாக இரவினிலே வருவாய் காக்க !
குமுறவைக்கும் கவலைகளை மறக்கடிக்கக் 
***குழைவாக மஞ்சத்தில் கருணை யோடே
அமைதியுடன் விடியுமட்டும் தாயைப் போலே
***அரவணைக்கும் தூக்கமேநீ என்றும் வாழி !!
சியாமளா ராஜசேகர்

மெல்லிசை வண்ண எழுசீர் விருத்தம் ...!!!

சந்தக்குழிப்பு ...!!!
* * * * * * * * * * * * *
தன்ன தான தன்ன தானா
தன்ன தான .....தன்னனா
வண்ண மாலை என்னி லாட
வண்ண மாகு .....மென்மனம்
எண்ணி லாத மஞ்ஞை யாடு
மெண்ண மோடு .....மென்னுளே !
கண்ண னோடு கன்னி ராதை
கண்ணி லாடு ....மின்முகம்
மண்ணில் மாய னுண்மை யோடு
மண்ணு மாசை .... என்னிலே!!
சியாமளா ராஜசேகர்

வேர்த்திரள் ...!!!


நீடுயர் மரங்கள் மிகுந்துள வனமே
***நிலமகள் வேர்த்திர ளாகும் !!
காடுகள் இன்றேல் நாட்டினில் பாயும்
***கவின்மிகு நதிகளு முண்டோ ?
ஈடிணை யில்லா இயற்கையைச் சிதைத்தால்
***இழப்புகள் நமக்கெனத் தெளிவோம்!
கேடுகள் நீங்கக் கானகம் காத்துக்
***குறைகளைக் களையெடுத் திடுவோம் !
அறிவினுக் கெட்டா அதிசய மாக
அற்புத அழகுடன் விளங்கும் !
உறைவிட மாகும் பல்லுயிர் கட்கும்
***உளவரை உணவையு மளிக்கும் !
குறைவறத் தூய உயிர்வளி தந்து
***குவலயம் குளிர்ந்திடச் செய்யும் !
நிறைமனத் தோடு கானகம் பேண
***நிம்மதி யாய்ப்புவி சுழலும் !
வரையறை யின்றி மரங்களைச் சாய்த்தால்
***வறட்சியில் மண்வளம் குன்றும் !
அரணெனத் திகழும் அணிநிழற் காட்டை
***அழித்திட எண்ணிட லாமா ?
பரவிடும் நெருப்பால் பல்லுயிர் மாயும்
***பகுத்தறி வில்லையோ மனிதா !
வரமெனக் கருதி வனங்களைக் காத்தால்
***வளம்பல பெற்றிட லாமே !!
சியாமளா ராஜசேகர்

Friday, March 15, 2019

தமிழ் ...தமிழ் ...

குறைவில்லா வளத்துடனே இளமையொடு வாழும் 
***குன்றாத புகழோடு குவலயத்தை யாளும் !
நிறைவான இலக்கணந்தான் செம்மொழியைக் காக்கும் 
***நிகரில்லா இலக்கியங்கள் உலகோரை யீர்க்கும் !
அறநெறியைப் புகட்டிநல்ல தாயாகத் தாங்கும் 
***அறிவொளியைத் தான்கூட்டி அகவிருளை நீக்கும் !
சிறப்புகளை அளந்திடிலோ அதன்பெருமை நீளும் 
***செம்மாந்த தமிழிங்கு யாம்பெற்ற பேறே !!

சியாமளா ராஜசேகர் 

வேர்விட்ட காதலை மீட்டு ...!!



கூர்விழிப் பார்வையெனைக் கொத்தித்தான் போனதடி
போர்முனைக்கஞ் சேனையுன் புன்னகை கொன்றதடி
பேரிட் டழைத்தும் பிடிவாத மேனடி
வேர்விட்ட காதலை மீட்டு.
சியாமளா ராஜசேகர்

எல்லைச்சாமிகளுக்கு வண்ணத்தில் ஒரு பாடல் !!




வண்ணப் பாடல்
************************
சந்தக்குழிப்பு
******************
தத்தத்தன தத்தத் தனதன 
தத்தத்தன தத்தத் தனதன 
தத்தத்தன தத்தத் தனதன . . . . . தனதானா
குற்றத்தையொ டுக்கிக் கழுவிட
அச்சத்தினை விட்டுப் பகைவரின்
கொட்டத்தை யடக்கிப் பதிலடி . . . . . யளியாரோ ?
குட்டிக்குனி வித்துக் குழலது
சுட்டுச்செலும் பச்சைத் திமிரொடு
கொத்தித்தசை வெட்டிப் பலியிட . . . . . முனைவாரே !
அற்றைக்கவன் சுட்டுக் கொலவுட 
லெட்டிச்சித றிப்பற் பலவிடம்
அக்கக்கென வெட்டித் தொலைவினில் . . . . . விழுமாறே !
அற்பத்தனம் மிக்குக் கயவரின் 
நச்சொத்தவெ றிக்குத் துணிவுடன் 
அத்திக்கையெ திர்த்துச் சமரிட . . . . . விரையாரோ ?
சுற்றத்தைவி டுத்துத் தெளிவுடன் 
பற்றிக்கொள நட்புச் சிறகொடு
துக்கத்தைம றைத்துக் கனலென . . . . . எழும்வீரா!
துட்டத்தைந சுக்கப் புயலென
நுட்பத்தொடு திட்டத் தினிலவர் 
சொக்கத்திறம் மக்கட் புரிவதும் . . . . . மெளிதாமே !
எற்றத்துடன் வெற்றிப் பரிசினை 
மட்டற்றவு ழைப்பிற் கனிவுடன் 
இற்றைக்கவர் பெற்றுத் தருவது . . . . . மகிழ்வோடே !
இட்டத்துட னிப்பொற் படையினை 
ஒப்பற்றவ ணக்கத் தொடுமனம் 
எட்டுத்திசை மெச்சப் பணிவொடு . . . . . நினைவேனே !!
சியாமளா ராஜசேகர்
( எல்லையில் பணியாற்றும் வீரர்களுக்குச் சமர்ப்பணம் )

வல்லிசை வண்ண எண்சீர் விருத்தம் !

வல்லிசை வண்ண எண்சீர் விருத்தம்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
சந்தக் குழிப்பு (அரையடிக்கு)
தத்தத்தன தத்தத்தன தத்தத்தன தத்தா
அற்றைத்தினம் இச்இச்சென முத்தத்தினை யிட்டாய்
அச்சத்துடன் திக்திக்கென விட்டத்தைவெ றித்தேன் !
சுற்றத்தினை விட்டுச்செல எற்றைக்கு(ம்)ம றுப்பேன்
சொத்தத்தனை கொட்டித்தரின் பற்றற்றுவெ டிப்பேன்!
சிற்றப்பனி னொப்பைப்பெற நட்பைத்துணை யுற்றேன்
திக்கெட்டிலு மொப்புக்கொள மிச்சத்தைநி னைப்பேன் !
வெற்றிக்கனி பெற்றுக்கொடு தித்திக்கம ணப்பேன்
வெட்கத்தொடு பித்தத்துடன் சொர்க்கத்தில்மி தப்பேன் !
சியாமளா ராஜசேகர்

இடையிசை வண்ண எழுசீர் விருத்தம் ...!!!


தய்ய தய்யதன தய்ய தய்யதன
தய்ய தய்யதன தய்யனா
துள்ளு முள்ளமது நல்ல பிள்ளையொடு
தொல்லை யில்லைதுய ரில்லையே!
கள்ள மில்லதொரு பள்ளி செல்லவிடு
கல்வி நெய்யுமிட ரில்லையே!
அள்ளு தெள்ளமுதை யுள்ளி யெவ்வளவு(ம்)
அய்ய(ன்) வள்ளுவனை மெல்லவே!
எள்ள லில்லையிது பொய்யு மில்லையறி
எவ்வை வெல்லவழி செய்யுமே!!
( எவ்வை - கவலை )
சியாமளா ராஜசேகர்

Thursday, March 14, 2019

இசைப் பாடல் ...!!!




எடுப்பு
*********
காந்தள் விரல்களி னாலே - குழல்
கற்றையைக் காதோரம் தள்ளிடு வாளே !

தொடுப்பு
*************
பூந்துகி லாடிடும் காற்றில் - பாவைப்
பொன்முகம் செக்கச் சிவந்திடும் சூட்டில் ! ( காந்தள் )
முடிப்பு
**********
கிளிகளை விரட்டித் தினைப்புனம் காத்துக்
கிளிஞ்சலாய்ச் சிரித்திடு வாளே !
துளிகளாய் வியர்வை நெற்றியி லரும்ப
துடைத்தவள் களைத்திடு வாளே !
பளிங்கினை யொத்த நீர்ச்சுனை கண்டு
பருகிட தலைகுனி வாளே !
விளித்திடும் காளை மணிக்குரல் கேட்டு
மின்னலாய்ப் பூத்திடு வாளே !! ( காந்தள் )
சிறகுகள் விரித்துப் பறந்திடும் மனத்தை
சிக்கெனப் பிடித்தவள் இழுப்பாள் !
முறத்தினால் புலியை விரட்டியக் குலத்தாள்
முகிலுடன் காதலைப் பகிர்வாள் !
குறமகள் வள்ளிக் கணவனை வேண்டிக்
குணவதி மணவரம் கேட்பாள் !
அறவழி தன்னில் அமைதியா யிருந்தே
அன்பினை வென்றிடு வாளே !! ( காந்தள் )
வீரனே தனக்குத் துணையென வரவே
விழைந்திடும் அன்னவள் நெஞ்சம் !
சேரவே துடித்த தேன்மொழி யாளின்
சிந்தையி லினித்திடும் மஞ்சம் !
தாரணி போற்றும் பிள்ளைகள் பெற்றால்
தாய்மையும் கடவுளை மிஞ்சும் !
வேரென விளங்கி விழுதுகள் பரப்பி
விந்தைகள் புரிந்திடு வாளே ...!!! ( காந்தள் )
சியாமளா ராஜசேகர்

வண்ணப் பாடல் ...!!!

வண்ணப் பாடல்
************************
சந்தக்குழிப்பு
******************
தத்தத்தன தத்தத் தனதன 
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன . . . . . தனதானா

தித்தித்திடும் முத்துத் தமிழினை
நுட்பத்தொடு கற்றுத் தெளிபவர்
சித்தத்தைநி மிர்த்தித் தருமென . . . . . அறிவாயே
திக்கெட்டிலும் வெற்றிக் கொடியொடு
சுற்றிப்பரி வட்டத் துடனொளிர்
தெப்பத்தொரு செப்புச் சிலையென . . . . . வழகாக
மெத்தப்புகழ் பெற்றுத் தரணியில்
உச்சத்தினை யெட்டித் தொடுமதை
விட்டுச்சிலர் பித்தத் தொடுமனம் . . . . . பிறழ்வாரே !
வெட்கத்தைவி டுத்துப் பிறமொழி
நற்சொத்தென எத்திப் புகழ்பவர்
வித்தைக்கும றுப்பைச் சொலிவிடல் . . . . . முறைதானே !
புத்தித்தெளி வித்துப் பரிவுடன்
பக்கத்திலி ருத்திச் சடுதியில்
பொச்சத்தையு ணர்த்திக் கசடற . . . . . மொழிவாரால்
பொத்தித்தறி கெட்டுத் துணிவொடு
சத்தத்தைய டக்கிச் செறிவுடன்
பொற்பைப்புரி வித்துத் தமிழுட . . . .. னுறவாடும்
பத்தத்தொடு பற்றிக் கொளவது
முட்கட்தமை வெட்டிச் சரிசெயும்
பக்கத்துணை நிற்றற் குரியது . . . . . தமிழ்தானே
பட்டொத்தவு ளத்திற் கனிவுடன்
அச்சத்தைவி ரட்டித் தமிழவள்
பட்டத்தொடு பொற்சித் திரமென . . . . . வருவாளே !!
சியாமளா ராஜசேகர்

குற்றாலக் குறவஞ்சியில் கொஞ்சுதமிழ் ....!!!

குற்றாலக் குறவஞ்சியில் கொஞ்சும் தமிழ் ...!!!
****************************************************************

அழகாக பச்சையுடை அணிந்தமலை ஈர்க்கும் 
***அலையலையாய் மிதந்துசெலும் முகிலைமுட்டிப் பார்க்கும் !
வழுக்கிவிழும் மலையருவி நிலத்திலிடும் முத்தம் 
***மனங்குளிரச் செய்யுமந்த இதமான சத்தம் !
பழங்களொடு பூக்களதன் மணம்கொள்ளை கொள்ளும் 
***பனிபடர்ந்த இரவுகளில் மதிமயக்கு முள்ளம் !
மழைத்துளிகள் தென்றலொடு தழுவிவிட்டுப் போகும் 
***வருடலிலே சுகங்கண்டு சிலிர்க்காதோ தேகம் ??

 வழியெங்கும் தொடர்ந்துவரும் மந்திகளின் கூட்டம் 
***மரங்களிலே கனிகொய்து தின்றுபோடும் ஆட்டம் !
எழில்சிந்தும் மலையினிலே கருங்குயில்கள் பாடும் !
***எழிலிவரக் கண்டமஞ்ஞை தோகைவிரித் தாடும் !
அழைத்தவுடன் பசுங்கிளிகள் நட்போடு பேசும் 
***அஞ்சுகத்தின் கொஞ்சலிலே புரியுமதன் நேசம் !
கிழக்கிலெழும் கதிரொளியில் கவினருவி மின்னும் 
***கிளர்ந்தெழுந்த போதினிலே அணிசேர்க்கும் இன்னும் !

குற்றால மலையழகைக் குறவஞ்சி பாடும் 
***கொஞ்சிவரும் சந்தத்தில் சலங்கைகட்டி யாடும் !
முற்றாத இளமையொடு தண்டமிழில் பேசும் 
***முக்கனியின் சாறெனவே நறுமணமாய் வீசும் !
சொற்களெல்லாம் எளிமையுடன் சொக்கவைக்கும் நெஞ்சம் 
***துள்ளலிசை யோடுவந்து படித்திடவே கெஞ்சும் !
நற்றமிழில் இறைமீது பாடியவிப் பாக்கள் 
***நயத்தோடு கவிராயர் கட்டிவைத்த பூக்கள் !!

சியாமளா ராஜசேகர்