Saturday, January 26, 2019

சந்தக் கலிவிருத்தம் ...!!!

இருள்வேளையில் விரிவானதி லெழிலோவியம் போலே
வருவாளவள் முகில்மூடிட மறைவாள்விளை யாட்டாய்!
உருமாறினு மொளியாலவ ளுலகோருள மீர்ப்பாள்!
மெருகேறிட வழகாய்முழு மதியாள்விரை வாளே!!
சியாமளா ராஜசேகர்

பிறந்தநாள் வாழ்த்து

தெள்ளு தமிழினில் தேனூறும் பாக்களை
அள்ளி வழங்கும் அமுதவூற்று - வெள்ளமெனத்
துள்ளிவரும் சிந்தினில் சொக்கவைக்கும் பாட்டசுரன்

வள்ளியூர்ச் செல்வனுக்கு வாழ்த்து.

மணிவாசகர் அருளிய திருவாசகம் ...!!!

ஆதிரை நாளில் திருநடம் புரிந்த
***அம்பல வாணனின் அருளால் 
பாதியாம் மாதைக் கூடிய பரமன்
***பதமல ரன்புடன் பற்றி
வாதவூர் வண்டு மறைகளி னின்றும்
***வழங்கிய வாசகத் தேனை
மாதவத் தோராய் மாந்திடும் அன்பர்
***வாழ்வினில் திருவருள் கிட்டும் !!
பிறைநில வோடு கங்கையைத் தலையில்
***பிரியமாய்ச் சூடிய பரமன்
உறைந்திடும் தலமாம் தில்லையம் பதியில்
***உளமதை யுருக்கிடும் வண்ணம்
சிறப்புடன் நெஞ்சத் துள்ளிருந் தழகாய்
***திருமணி வாசகர் பாட
இறையவன் தானே அந்தணன் வடிவில்
***எழுதிய பாடல்கள் இஃதே !!
அமிழ்தினு மினிய அழகிய நடையில்
***அகமதை நிறைத்திடும் சுவையில்
கமழ்ந்திடும் பாக்கள் படித்திட உள்ளக்
***கவலைகள் யாவையும் தீரும் !
சுமைமிகு வாழ்வில் சுகப்பட வைக்கும்
***துயர்களைப் பொசுக்கிடும் நெருப்பாய் !
நமனையும் வெல்ல திருவாச கத்தேன்
***நல்வழி காட்டிடும் இனிதே !!
சியாமளா ராஜசேகர்

சந்தக் கலிவிருத்தம் ...!!!

சந்தக் கலிவிருத்தம்
**************************
என்னவளின் கண்ணசைவி லின்பமது கண்டேன்!
பொன்மகளின் பொங்கிவரும் புன்னகையில் நின்றேன்!
மின்னலிடை வஞ்சியவள் விஞ்சுமெழி லுண்டேன்!
அன்புநிறை நெஞ்சமிதை அன்னமவள் வென்றாள்!
சியாமளா ராஜசேகர்

பௌர்ணமி நிலவில் ....!!!



வண்ணவண்ண ஆடைகட்டும் வானப் பெண்ணின்
***வடிவான நெற்றிதனி லிட்ட பொட்டோ ?
கண்கவரும் ஒளியுடனே காண்போ ருள்ளம்
***காந்தமெனக் கவர்ந்திழுக்கும் தங்கத் தட்டோ ?
எண்ணற்றத் தாரகையர் சூழ்ந்தி ருக்க
***இளமையுடன் வளையவரும் காதற் சிட்டோ ?
விண்ணகத்துக் கவினரசி யாகப் பூத்து
***விடியலிலே மறைந்துவிடும் மாய மொட்டோ ??
மிதந்துசெலும் முகிலிடையில் முகம்ம றைத்து
***விளையாடும் வெண்ணிலவின் எழிலைக் கண்டால்
விதவிதமாய்க் கற்பனைகள் ஊற்றெ டுத்து
***விழிதிறந்தே கனவுகளில் மூழ்கச் செய்யும் !
இதமான இரவினிலே இதயம் கொய்தே
***இனியபல நினைவுகளை மீட்டிச் செல்லும் !
மதிமயக்கிக் காதலரை உருக வைத்து
***மணிமணியாய்ப் பலகவிதை எழுதச் சொல்லும் !!
நிறைமதியை நடுநிசியில் காணும் உள்ளம்
***நீளாதா இவ்விரவு மென்றே கெஞ்சும் !
குறைந்தாலும் வளர்ந்தாலும் அன்பில் நாளும்
***கோலவுரு கண்டவுடன் மகிழ்ந்து கொஞ்சும் !
சிறைபிடித்துப் பலமொழியில் கவிகள் வைக்கச்
***சிலையெனவே பூரணையும் கொள்ளும் தஞ்சம் !
முறைப்பெண்ணின் முகம்போலும் நிலவை யெட்டி
***முத்தமிடத் துடிப்பதுமேன் என்றன் நெஞ்சே !!
சியாமளா ராஜசேகர்

மழையில் நனைந்த மனம் ....!!!


வளிவருடும் சுற்றிலும் மண்வாசம் வீசும்
இளஞ்சாரல் தூவு மினிதாய்க் - களிப்பில் 
சுழன்று குதித்தாடிச் சொர்க்கத்தைக் காணும்
மழையில் நனைந்த மனம் . 1.
முகில்கள் உரசி முழங்கும் ஒலியில்
திகிலுட னுள்ளம் சிலிர்க்கும் ! - சுகமாய்ப்
பொழியுமவ் வேளையில் பூரிப்பில் துள்ளும்
மழையில் நனைந்த மனம் . 2 .
மெள்ள விருள்சூழ மின்னல் ஒளிகூட்ட
அள்ளும் அழகுடன் அண்டமும் - வள்ளல்
வழியொப்ப வா(மா)ரி வழங்க மகிழும்
மழையில் நனைந்த மனம் . 3.
வெயிலும் மறைந்து வெளிச்சமும் மங்கிப்
பெயலும் நிலத்தினிற் பெய்யும் - பயிர்கள்
தழைத்துச் சிரிக்கச் சடுகுடு வாடும்
மழையில் நனைந்த மனம். 4.
மேக வுருள்வலமோ மேளதா ளத்துடன்
தாகம் தணிக்கத் தரைவருதோ - சோக
மழிந்து நிலத்தி லமைதி பெறுமே
மழையில் நனைந்த மனம் . 5.
தவளைகளின் சேர்ந்திசைக்குத் தாளமிட்டுச் சிந்தும்
உவகையினை யாவர்க்கு மூட்டும் - புவன
மெழிலுறத் தான்பொழிய இன்பத்தில் பூக்கும்
மழையில் நனைந்த மனம். 6.
மரங்கள் குளித்து மயக்கந் தெளியும்
வரமாய் வருணன் வரவில் - தரையில்
விழுந்துளிகள் நீராட்ட மின்னி வியக்கும்
மழையில் நனைந்த மனம். 7.
நீலவான் தான்கறுக்க நீலமயில் கண்டாடும்
சோலையில் பேரழகாய்ச் சுற்றிவந்து - கோலக்
குழலிசையும் காற்றோடு கொஞ்சிவரப் பாடும்
மழையில் நனைந்த மனம். 8.
ஒட்டியே ஒன்றன்பின் ஒன்றாக நீள்கோடாய்
முட்டி நிலத்தினை முத்தமிடும் - சொட்டு
மெழிலுக் கிணையிங் கெதுவெனத் தேடும்
மழையில் நனைந்த மனம். 9.
மலைமேனி யைத்தடவி மையலுடன் வீழ்ந்தே
அலைதவழப் பாய்ந்தோடு மாறாய் !- தொலைவில்
விழுமருவிச் சத்தத்தில் மெல்லக் கரையும்
மழையில் நனைந்த மனம் . 10.
( ரியாத் தமிழ்ச்சங்கம் நடத்திய முத்தமிழ்க் கலைஞர் நினைவு உலகளாவிய மரபுக் கவிதைப்போட்டி – 2018 -ல் ஆறுதல் பரிசு (ஆயிரம் ரூபாய் ) பெற்றுத்தந்த கவிதை !!
ரியாத் தமிழ்ச் சங்கத்துக்கு மனம் நிறைந்த நன்றிகள் ! மென்மேலும் தமிழ்ப் பணி சிறக்க வாழ்த்துகள் 💐💐💐 )

இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா....!!!



வண்ண நிலவவள் வானில் வலம்வர
விண்மீன்கள் சூழ்ந்து விழிசிமிட்டிப் பூரிக்க 
வெண்டிரை போல்மறைத்து மேகம் விளையாட
ஒண்மை மிகுந்தாள் ஒயிலாய் வெளிப்பட்டுத்
தண்ணீருக் குள்ளே தனதுருக் கண்டதும்
கண்களில் நாணம் கனிய மலர்ந்தனள்
வெண்மதி யாளின் விளங்கு மெழிலென்னை
எண்ணிலாப் பாக்க ளியற்றப் பணித்ததே !!
சியாமளா ராஜசேகர்

வண்ணக் கலிவிருத்தம் ...!!!


குன்றிலுறை யுங்குகனி(ன்) கொஞ்சுவிழி கண்டேன்
அன்புமிக நெஞ்சுருகி அந்திபகல் நின்றேன்
நன்றியொடு நம்புகிற நங்கையிவ ளென்றே
என்றனுள மின்பமுற வின்றுமனை வந்தான் !!
சியாமளா ராஜசேகர்

கலிவிருத்தம் ....!!!

கலிவிருத்தம் !!
********************
மின்னிப் பூத்தவோர் வெண்ணிலா வேளையில்
தென்ற லாமெனுந் தேன்மொழி யாளுடன்
இன்பச் சிந்தினில் இன்னிசை கூட்டிநான் 
கன்னி நெஞ்சினில் காதலைப் பூட்டினேன் !!
சியாமளா ராஜசேகர்

வண்ணக் கலிவிருத்தம் ....!!!



வண்ணக் கலிவிருத்தம்
**************************
என்னவளின் கண்ணசைவி லின்பமது கண்டேன்!
பொன்மகளின் பொங்கிவரும் புன்னகையில் நின்றேன்!
மின்னலிடை வஞ்சியவள் விஞ்சுமெழி லுண்டேன்!
அன்புநிறை நெஞ்சமிதை அன்னமவள் வென்றாள்!
சியாமளா ராஜசேகர்

கலித்தாழிசை ..!!!

கலித்தாழிசை....!!!
*******************
எட்டிப் பிடிக்க எழிலி தொடர்ந்துசெல
வட்டநிலா வானில் வளையவரும் பேரழகாய்!
வட்டநிலா வானில் வளையவரு மென்றாகில்
குட்டைக்குள் காண்பதென்ன கூறாயோ வென்தோழி?
குளிர்நிலவின் விம்பந்தான் கொஞ்சுதடி யென்தோழி!!
சியாமளா ராஜசேகர்

தமிழ் வாழ்த்து ....!!!

முன்னவள் சுவையில் இனியவள் கன்னல்
***மொழியவள் இளமை யானவள் !
தன்னிக ரின்றித் தனித்துவ மாகத் 
***தரணியை ஆளும் தன்மையள் !
நன்னய மிக்க இலக்கண வளமும் 
***நல்லிலக் கியங்கள் கொண்டவள் !
தென்னவன் மன்றில் வளர்ந்தவள் புவியில் 
***செம்மொழி யாகச் சிறந்தவள் !!

இயலுடன் இசையும் நாடக மென்றே 
***இயல்பினில் மூன்றா யானவள் !
உயிரொடு மெய்யும் உயிர்மெயு மாகி 
***ஓரெழுத் தாய்த மானவள் !
துயருறும் போது சுகம்பெற தமிழே 
***துடைத்திடும் கையாய் நீள்பவள் !
தயவுடன் விரும்பும் அன்னியர் தமக்கும் 
***தமிழமிழ் தம்போல் சுவைப்பவள் !!

கல்லையும் கனியச் செய்பவள் தம்மைக் 
***கற்பவ ருள்ளம் நிறைபவள் !
வெல்லமாய் நாவில் இனிப்பவள் என்றும் 
***வெற்றிகள் ஈட்டித் தருபவள் !
நல்லறம் காட்டி மிளிர்பவள் வாழ்வில் 
***நைந்திடா வண்ணம் காப்பவள் !
வல்லவள் ழகரச் சிறப்பவள் எங்கும் 
***மணப்பவள் வாழி வாழியே !!

சியாமளா ராஜசேகர் 

திருமண வாழ்த்து ....!!!

மணமக்கள்
****************
T. அருண் 
P. திவ்யா
நாள்
******
18:01:2019
மங்களமாய்த் தைத்திங்கள் நான்காம்நாள் காலை
***வாசலிலே தோரணங்கள் வண்ணங்கள் சேர்க்கப்
பொங்கிவரும் இன்பத்தில் பூங்காற்றும் சேரப்
***புன்னகைத்து மலர்களெல்லாம் புதுக்கோலம் போட
வங்கத்தின் அலையோசை செவியோரம் இனிக்க
***வசந்தங்கள் வாழ்த்திசைக்க வரிசையிலே நிற்கத்
தங்கங்கள் ஈன்றெடுத்த தங்கமகன் அருணைத்
***தலைவனாகக் கொள்வதற்குக் காத்திருக்கும் நங்கை !!
பார்த்திபனார் அமுதாவின் செல்வமகள் திவ்யா
***பாங்குடனே மணப்பந்தல் காணுகின்ற வேளை
ஊர்த்திரண்டு வந்திருந்து திருப்பூட்டு கண்டே
***உள்ளத்தில் அன்பொழுக அட்சதையைத் தூவ
சீர்மிக்க சொந்தபந்தம் நல்லாசி வழங்க
***செந்தேனாய் மாறாத சுவையோடு வாழ்வில்
பார்போற்ற வாழ்கவென்று நெஞ்சார வாழ்த்திப்
***பாடலொன்று நான்வனைந்தேன் பாசத்தி னாலே !!
குருவருளும் திருவருளும் வழிநடத்திக் காக்கக்
***குலம்விளங்க இல்லறத்தில் இன்பவொளி மின்ன
இருமனங்கள் ஒன்றாகி இணைகின்ற வாழ்வில்
***ஈடில்லா நன்மக்கட் பேறுபெற்றுப் புவியில்
வருகின்ற நாளெல்லாம் வள்ளுவத்தைப் போற்றி
***வாழையடி வாழையென வளத்தோடு வாழி !
அருந்தமிழ்போல் என்றென்றும் இளமையொடு வாழ்வை
***அழகாக்கி நலத்தோடு நூறாண்டு வாழி !!
சியாமளா ராஜசேகர்

தைமகளும் பிறப்பாள் ...!!!



காற்றுவந்து தாலாட்டக்
கதிர்வளைந்து ஆடும் - வாய்க்
காலில் கெண்டை ஓடும் - துள்ளிக்
கயல் மீன்களும் கூடும் - அந்தக்
கண்கொள்ளாக் காட்சிகண்ட
கன்னிமனம் பாடும் !!
சேற்றுக்குள்ளே இறங்கிநின்று 
சேலைசொருகிக் கொண்டாள் - அவள் 
சீராய் நாற்று நட்டாள் - மாமன் 
தேடிவரக் கண்டாள் - அவன் 
சீட்டியொலி கேட்டதுமே 
செக்கச் சிவந்து விட்டாள் !!
ஊர்ப்பார்த்தால் என்னவாகும் 
ஊமைச்சாடை புரிந்தாள் - அவள் 
உறவை எண்ணிப் பயந்தாள் - தன்
உயிருருக வியர்த்தாள் - அவனை 
உலகறியத் தாலிகட்ட
உளமலர அழைத்தாள் !!
மார்கழிக்குப் பின்னாலே 
தைமகளும் பிறப்பாள் - கை 
வளைகுலுங்க வருவாள் - நல்
வரம்மகிழ்ந்து தருவாள் - அவள் 
வாழவைக்க வழிகாட்டி 
வாழ்த்துமழை பொழிவாள் !!
சியாமளா ராஜசேகர்

சோலைக் கவியரங்கம் ...!!! ( இப்படித்தான் விடியும் )

#சோலைக்_கவியரங்கம் - 8 இப்படித்தான் விடியும்
07. பைந்தமிழ்ச்செம்மல் சியாமளா ராஜசேகர்
• இதுவரை 1300 கவிதைகளுக்கு மேல் எழுதியுள்ளார். ‘எழுத்து.காம்’ வலைத்தளத்தில் பதிந்துள்ளார்.
• சிறுகதைகள் எழுதுவார். வாரமலர், மங்கையர் மலர், அவள் விகடன் போன்ற இதழ்களில் பரிசு பெற்ற கதைகளாய் வெளிவந்துள்ளன.
• தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகளில் பல பரிசுகள் பெற்றுள்ளார். முகநூல் குழுமங்களில் பல விருதுகள் பெற்றுள்ளார்.
• பரிசுக்காக அன்றிப் புலமைக்கும் திறமைக்கும் போட்டி என்றே முன்வந்து கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவார்.
• மரபு கவிதைகள் எழுதுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
*** *** *** ***
கவிஞரை வரவேற்றல்
சிந்துவே சந்தமே வண்ணமே என்றெலாம்
செந்தமிழ்த் தாயவள் கொஞ்சுவாள் உம்மையே!
எந்தவொன் றெடுப்பினும் எளிதினில் கைவரச்
சிந்தையில் செதுக்குவீர் சியாமளா அம்மையீர்!
பைந்தமிழ்ச் செம்மல் சியாமளா அம்மா வருக!
சிந்தைக்கு இனிய சிந்திக்க வைக்கும்பா தருக!
*** *** *** ***
தமிழ் வாழ்த்து !!
**********************
பொன்னெழிலே! நித்திலமே! பூவனமே! தீஞ்சுவையாம்
இன்னமுதே! தேன்தமிழே! எந்தாயே! - நின்னையன்பாய்ப்
போற்றி வணங்கப் பொலிவாயென் பாட்டினில்
ஊற்றெனப் பொங்கி யொளிர்.
தலைமை வாழ்த்து !!
**************************
செந்தேனாய்த் தித்திக்கும் செம்மாந்த மொழியாம்
*** செந்தமிழை நேசிக்கும் நிகரில்லாக் கவிஞன்!
சந்தத்தில் துள்ளிவரும் கவிதைகளை யெல்லாம்
*** தணியாத காதலொடு வாசிக்கும் சுவைஞன்!
சொந்தமென மரபினைத்தன் உள்ளத்தில் கொண்டு
*** சோலையிலே பைந்தமிழ்ப்பா மழைபொழியும் அமுதன்!
இந்தமன்றில் கவியரங்கத் தலைமையினை யேற்ற
*** இனியவனாம் தமிழகழ்வன் சிறப்போடு வாழி!!
இப்படித்தான் விடியும் ...!!!
**********************************
ஊர்ப்பசி தீர்க்கும் உழவரின் வீட்டில்
*** உண்பதற் கொருபிடி யில்லை !
காரது பொய்க்கக் கருகிடும் பயிரைக்
*** கண்டவர் கும்பியும் எரியும் !
ஏர்பிடிப் போரின் வறுமையை விரட்ட
*** ஏற்றநல் வழிசெய வேண்டும் !
நேர்மையா யரசு தந்திடும் தீர்வால்
*** நிமிர்ந்திடும் அன்னவர் வாழ்வே !!
உலைகொதிப் பதுபோல் உள்ளமும் குமுறும்
*** உழுபவர் நிலையினைக் கண்டால்
தலைவிதி என்றா ஒதுக்கிட முடியும்
*** தலைமையை தூற்றிடத் தோன்றும்!
நிலையிலாப் பதவி என்றறிந் திருந்தும்
*** நீதியைப் புறக்கணிப் போரே!
விலக்கிடு வீரே கடன்களை யெல்லாம்
*** விடியலைக் காட்டிடு வீரே!!
ஊழலி லூறி அரசியல் செய்வோர்
*** உயரற மெதுவென வுணர்ந்தே
ஏழைகள் வாழ்வில் நிம்மதி காண
*** இனியொரு விதிசெய வேண்டும் !
வீழினும் முயன்றே எழுபவர் வாழ்வில்
*** விடியலைக் காட்டிடத் துணையாய்த்
தோழமை யோடு கைக்கொடுத் துதவித்
*** தோல்வியைத் துரத்திட வேண்டும் !!
நெகிழியே யில்லா நிலையது வந்தால்
*** நிலவளம் நீர்வளம் சிறக்கும்!
மகிழ்ந்திடும் வண்ணம் முற்றிலு மொழிந்தால்
*** மாசுகள் புவியினில் குறையும்!
மிகுந்திடும் நோய்கள் நெகிழியால் தானே
*** விளைவுகள் விபரீத மாகும்!
வகுத்திடும் திட்டம் சீர்பெறு மானால்
*** வண்ணமாய் விடியலும் விளங்கும்!!
இன்முகத் தோடு கழனியைப் பிரியார்
*** எத்தனை யிடர்தொடர்ந் தாலும்
பொன்மணி போலும் நெல்மணி காக்கும்
*** புனிதரைப் பொலிவுறச் செய்வோம் !
அன்னம ளிக்கும் அவரிலை யென்றால்
*** அவனியில் நம்நிலை என்ன ?
என்றிதை யுணர்ந்தால் மாறிடும் நிலையும்
*** என்றும்வி டிந்திடும் நன்றே!!
தரணியில் தமிழர் உளமதை நிறைக்கத்
*** தைமகள் எழிலுடன் வருவாள்!
வருமிடர் யாவும் விலகிடச் செய்து
*** மனத்தினில் மகிழ்ச்சியை விதைப்பாள்!
உரிமைகள் தந்தே அரசுமா தரவாய்
*** உழவரைப் பேணிடு மாயின்
விரிந்தவிவ் வுலகின் இருளதும் நீங்கி
*** விடிந்திடும் நன்மையா யிங்கே!!
*** *** *** *** ***
வாழ்த்து
'கழனிதனைக் காத்துநின்று கவின்பயிரை விளைவிக்கும்
உழவர்களைக் காத்துநின்றால் உலகினுக்கே ஏமாப்பு
வழங்கிவிடும் வகையறிவீர் நம்முடைய கைகொடுப்போம்'
அழகாக எடுத்துரைத்தீர் அம்மையீர் வாழியவே!

கலித்தாழிசை ...!!!

கலித்தாழிசை!!!
*******************
புண்டரிகம் பொய்கையில் பூக்கும் கதிர்வரவு
கண்டவுடன் செவ்விதழ் காட்டியழ காய்ச்சிரிக்கும்!
கண்டவுடன் செவ்விதழ் காட்டுமென் றாமாகில்
தண்ணீரில் தானிருந்தும் தாமரையும் வாடுவதேன்?
தன்காதல் மன்னவனைத் தான்பிரிந்த தால்தானே!
சியாமளா ராஜசேகர்

கலித்தாழிசை ....!!!


கலித்தாழிசை...!!!
*******************
கொட்டிக் கிடக்கும் குளிர்வானில் மின்பூக்கள்
தொட்டுப் பறித்தவற்றைச் சூடிடவே ஆசைவரும்!
தொட்டுப் பறித்ததைச் சூடவாசை என்றாகில்
பட்டுக் கரத்தால் பறிக்காத தேன்தோழி?
பார்வையில் பட்டாலும் பாதையில்லை யேதோழி!!
சியாமளா ராஜசேகர்

பன்னிருசீர்ச் சந்த விருத்தம் ...!!!

மானாட மயிலாட மொட்டோடு மலராட மதுவுண்ட வண்டுமாடும்
மழையோடு மரமாட மலைமீது தாவியே வாலாட்டி மந்தியாடும் !!

வானோடு முகிலாட ஒளியோடு மதியாட விண்மீன்க ளுடனாடிடும் !
வற்றாத நதியாட அலையோடு கயலாட வளையோடு நண்டுமாடும் !!

மீனாளி னழகான விழியனைய சேலாட அன்னந்த(ன்) இணையொடாடும்
மெல்லவரு டுந்தென்ற லுடனாடு மிலைமீது வெண்பனித் துளிகளாடும் !!
ஈனாத பசுவாட அதனோடு விளையாட ஆடிவா என்கண்ணனே !!
இனிதான வேய்ங்குழல் நாதத்தி லுருகியே நானுமுன் னோடாடுவேன் !!!
சியாமளா ராஜசேகர்

பன்னிருசீர்ச் சந்த விருத்தம் ...!!!


நினைவெலாம் பசுமையாய்ப் பூம்பொழில் வாசமாய் நிறைந்துனை நேசிக்கிறேன் ! 
நித்தமும் நின்மலர்த் தாளினைப் போற்றியே கவிதைகள் வாசிக்கிறேன் ! 

பனையளவு பாசமும் வானளவு காதலும் கொண்டுனைப் பூசிக்கிறேன் ! 
பண்போடு நின்னகம் சேரவே நல்வரம் வேண்டிநான் யாசிக்கிறேன் ! 

உனையன்றி உள்ளத்தி லன்புசெய யாருமிலை பரிவாக வழிகாட்டவா ! 
உயிராக இதயத்தி னொலியாக விரலோடு யாழாக இசைமீட்டவா ! 

கனிவான மொழியினால் கண்ணனே கார்மேக வண்ணனே பிதற்றுகிறேன் ! 
கற்கண்டு சொற்கேட்டு நெஞ்சினில் களிப்பொடு மாயனே எனையாளவா !! 
சியாமளா ராஜசேகர்