Wednesday, April 1, 2015

தங்கப் பூரணையே .....!!




வான் மகளின் பரந்த நெற்றியில் 
ஒளிரும் பொன் வண்ணப் பொட்டானாய் ! 
தேன் சிந்தும் இன்னிசை மெட்டுக்களில் 
இளமை ததும்பும் சந்தமானாய் !! 

பஞ்சுபோலும் மஞ்சு கூட்டத்தினூடே 
கண்ணாமூச்சி ஆடலானாய் ! 
கொஞ்சுமொழி குமரியர்க்கு 
உவமை கூறும் பொருளானாய் !! 

காதலர்கள் கனவிற்கு வித்தானாய் ! 
கவிஞர்தம் கற்பனைக்கு உரமானாய் ! 
அன்னமூட்டும் அன்னையர்க்கு கதைக்கருவானாய் 
அடம்பிடிக்கும் மழலையற்கு காட்சிப்படமானாய்!! 

பூரணநிலவாய் இதழ் பூத்துச் சிரிக்கின்றாய் ! 
பூவுலக மாந்தர் பூரிக்க நடமிடுகின்றாய் ! 
திங்கள்ஒருமுறையே உன் வதனம் காட்டுகின்றாய் 
தங்கப் பூரணையே !! உனை முத்தமிழால் வாழ்த்திடுவேன் !!!

No comments:

Post a Comment