Wednesday, June 28, 2017

மீட்டிடுவேன் அன்பாலே ...!!!



மலரோடு மலரானாள்
    மனத்தோடு மணமானாள்
நிலத்தோடு நடைபோடும் 
    நிழலாகத் துணையானாள்
புலர்காலைப்  பொழுதினிலே 
    புதுக்கவிதை போலானாள்
உலவாத மலைமீதில் 
    உருமாறும் முகிலானாள் !

இரவோடு நிலவானாள்
    இதயத்தின் துடிப்பானாள்
சுரமெழுள் ஒலியானாள்
    சுகமான இசையானாள்
பிரதான மூச்சானாள்
    பிரியமான  சகியானாள்
விரலோடு வீணையைப்போல் 
     விளையாடும் உறவானாள் !

துவளாத கொடியானாள்
     துவர்க்காத கனியானாள்
கவலைக்கு மருந்தானாள்
     கருணைக்கு மொழியானாள்
உவமைக்குக் கருவானாள்
     உயிருக்கும் உயிரானாள்
புவனத்தில் பூப்போலே 
    பொலிவான பெண்ணானாள் ! 

வயலோடு வளிவீச 
    வருடிவிடும் சிலிர்ப்பினைப்போல் 
கயலாடும் விழியாலே 
    காதலுடன் அவள்பார்க்க
மயங்கிவிட்ட இதயத்தால் 
   மன்மதனாய்க் கிறங்கிநின்றேன் 
வியக்கவைக்கும் மெல்லிசையாய் 
     மீட்டிடுவேன் அன்பாலே  !!!

சியாமளா ராஜசேகர் 

Tuesday, June 27, 2017

இதயத்தை அள்ளிடுதே ....!!!!


இளங்காலைப் பொழுதினிலே 
     இனியவளாம் மதிமறைய 
களங்கமின்றிக் குளித்தெழும்பும் 
     கதிரவனின் ஒளியினிலே 
பளபளக்கும் நதியலையும் 
      பையவந்து கரைதழுவ 
உளமெங்கும் புத்துணர்வில் 
      உற்சாகம்  பெருகிடுதே   !

பொன்னொளிரும் மேகங்கள் 
      புதுப்பெண்ணாய் விண்ணுலவத் 
தென்னையிளங் கீற்றதுவும் 
      தென்றலிலே அசைந்தாடக் 
கன்னலெனக் குரலெழுப்பிக் 
     கருங்குயிலும் சுதிகூட்ட 
இன்பவெள்ளம் பொங்கிடுதே 
      இதயத்தை அள்ளிடுதே !
      

Sunday, June 25, 2017

இதயம் நனையுமே ....!!!

அருண னுதிக்கு மழகிய தருணம்
இருளும் விலகு மினிதாய்!
பனிவிழுஞ் சோலை பார்த்தால்

தனிசுகங் கிட்டும்!
சிறகுக ளசைக்கும்
பறவைக லொலியும்
மயங்கிடச் செய்யும் மனத்தை
இயற்கை வரத்தா லிதயம் நனையுமே!


( இணைக்குறள் ஆசிரியப்பா )

கண்ணதாசா .....!!!



செந்தமிழைத் தாலாட்டும் சிங்காரத் தென்றல்நீ
சந்தங்கள் நடனமிடும் தமிழமுத தரங்கம்நீ 
சிந்துவகைச் சொந்தமெனச் சிந்திவிட்டச் சித்தன்நீ
அந்தமிலாப் புகழ்சேர்த்த அருட்பாவின் அத்தன்நீ !


கொட்டிடுமுன் நாவினின்றும் கொஞ்சுமணி வார்த்தைகள்
தொட்டுவிடும் காரணத்தால் தொலைந்துவிடும் கேட்குமுளம்
மெட்டுக்குப் பதம்பூட்ட மிரண்டுவிடும் சுரமேழும்
கட்டுக்குள் அடங்காதக் காட்டாறு போல்பாயும் !

நெஞ்சினிக்கும் காதலுக்கு நிழல்செய்யும் நித்திலம்நீ
பஞ்சபூதம் பாடிவைத்த பார்போற்றும் பாவலன்நீ
தஞ்சமென்றே உன்பாட்டில் சரணடைந்தோர் தலைவன்நீ
மிஞ்சிடவும் இயலாத மின்சாரக் கண்ணன்நீ !

கம்பரசம் ஊற்றெடுக்கும் கற்பனையின் களஞ்சியம்நீ
அம்புலியை மிகரசித்தே அழகுசெய்த சுவைஞன்நீ
செம்மொழியில் விளையாடும் தெவிட்டாத மலைத்தேன்நீ !
எம்மனத்தில் நீங்காமல் இடம்பிடித்த கவிஞன்நீ !

தத்துவங்கள் சொல்லிவைத்தாய் தகப்பனைப்போல் ஏட்டில்நீ
முத்துகளாய் ஒவ்வொன்றும் முன்நின்று வழிகாட்டும்
இத்தரணி வாழ்வினிலே எத்தனையோ இடர்வரினும்
சொத்தெனவுன் பாட்டிருக்க சுகமாகும் சோகமுமே !

பெய்கின்றாய் நித்தமும்நீ பேரருவி யாயெம்முள்
நெய்கின்றாய் பாட்டாலே நெஞ்சத்தின் மாசுகளை
தெய்வங்கள் விழைந்திடுமுன் தேன்பாட்டில் குடியிருக்க
பொய்யில்லா மெய்யோடு புகழ்வோமே புவியரசே !
சியாமளா ராஜசேகர்

Thursday, June 22, 2017

என்னோடு கலந்துவிடு !!!


மான்விழியாள் பார்வையிலே மைய லானேன் 
     மயங்கவைக்கும் மொழிவீச்சில் மௌன மானேன் 
தேன்கவிதை அவள்நினைவில் வனைய லானேன்
    தேவதையாள் கவினழகை வரைய லானேன்  
வான்மிதக்கும் வெண்முகிலே தூது செல்வாய்
    வண்ணமுடன் என்னுள்ளம் எடுத்துச் சொல்வாய்  
ஏன்படுத்து கின்றாளோ தெரிய வில்லை 
    என்னவளும் அறியாளோ அன்பின் எல்லை ??

அன்னநடை பயின்றுவரும்  அழகின் உச்சம் 
    அபிநயிக்கும் அசைவுகளில் தெரியும் மிச்சம் 
 பொன்மயிலாள் செவ்விதழோ மதுவின் கிண்ணம் 
     புன்சிரிப்பில்  தும்பைப்பூ தோற்கும் திண்ணம் 
கன்னத்தின் குழியழகில் வீழும் உள்ளம் 
     காட்டாறாய்ப் பெருக்கெடுக்கும் மகிழ்ச்சி வெள்ளம் 
இன்னிசையாய் மனம்வருடும்  இதயப் பூவே 
     என்னோடு கலந்துவிடு மெய்யாய் இன்றே !



      

புன்னகைக்கும் ஒற்றைப்பூ ....!!!


பூங்காற்றுத் தவழ்ந்துவரப் புத்துணர்வில் முகம்மலர்ந்து 
பொலிவை யூட்டும் !
மாங்குயிலின் தேனிசையும் மனம்மயக்கி இதமளித்து 
மகிழ்வைக் கூட்டும் !
தூங்காத நினைவுகளும் சுகமாகக் கிளர்ந்தெழுந்து
சுமையை வோட்டும் !
ஓங்கிவளர் பசுங்கொடியில் ஒற்றைப்பூ புன்னகைக்கும் 
உள்ளம் வென்றே !!!

( அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
 ( காய் காய் காய் காய் மா தேமா )

சியாமளா ராஜசேகர் 

Tuesday, June 20, 2017

காதல் பிறந்தது ....!!!


கண்ணும் கண்ணும் கலந்த  போது
>>>காதல் பிறந்தது !
எண்ணம் முழுதும் அந்த நினைவே 
>>>இனிமை சேர்த்தது !
வண்ண கனவு  நாண மின்றி 
>>>வளைய வந்தது !
நண்பன் கூட தொல்லை யாக 
>>>நாளும் தெரிந்தது !

இணையைக் காண வில்லை யென்றால்
>>>இதயம் தவித்தது !
துணையைக் கண்ட பின்பு தானே 
>>>துடிப்பும் நின்றது !
அணைப்பில் தன்னை மறந்த உள்ளம் 
>>>அடங்க மறுத்தது !
பிணையைச் சேர்ந்த மானாய் மகிழ்ந்து 
>>>பெருமை கொண்டது !

மலர்ந்த பூவில் மதுவை உண்ணும் 
>>>வண்டாய்ப் பறந்தது !
கலந்த அன்பில் கனிந்தே உருகி 
>>>களித்துச் சிலிர்த்தது !
புலன்கள் ஐந்தும் அடங்க மறுத்தும் 
>>>புரிதல் தொடர்ந்தது !
சுலப தவணை முறையில் அச்சம் 
>>>துடைத்துப் போனது !

விழிகள் பேசும் காதல் கதையோ 
>>>வேகம் மிகுந்தது !
மொழிகள் மறந்த மௌனம் கூட 
>>>மோகங் கொண்டது !
வழியைத் தேடி இறையை வணங்க
>>>வரமும் கிடைத்தது !
பொழியும் மழையாய் நெஞ்சம் குளிர்ந்து 
>>>புனிதம் அடைந்தது .....!!!

சியாமளா ராஜசேகர் 

Monday, June 19, 2017

பரிவுடனே அருளே ...!!!

சிரம்மேலே கரங்கூப்பிச் சேவித்து நின்றேன் 
***செவ்வேளே! வேலென்று சிரித்தபடி வந்தாய் 
அரவணைப்பில் விழிகசிய அகங்குளிர்ந்து  நின்றேன் 
*** அலையுமுளம் அடங்கிடவே அருளாசி தந்தாய் 
இரவுபகல் மறவாமல் இசைந்துருகிப் பாட 
***இனியேனும் திருப்புகழை எந்நாவில் தாராய் 
பரமசிவ மைந்தனுன்றன் பதமலரைப் பற்ற 
***பரமபத வாழ்வுதனைப் பரிவுடனே அருளே !

மாலையிட வருவாயே ....!!!!




பாராமல் போனாயேல் பளிங்குமுகம் வாடாதோ?
தீராத சோகத்தில் தேம்பிடுவேன் அறியாயோ?
வீராதி வீரனே விரும்புமெனை ஏற்பாயோ ?

ஊரார்கண் பட்டதுவோ உள்ளத்தில் வலிக்கிறதே!

மடியினிலே தாங்கிட்டாய் மயக்கத்திலே மிதந்திருந்தேன்
துடியிடையில் விரல்படவே துவண்டுவிட்டேன் கண்ணாளா!
வடிவழகில் கவர்ந்தேனோ வாய்மொழியில் வீழ்ந்தாயோ?

விடிவெள்ளி நீதானே வியப்பிலெனை ஆழ்த்தியவா!


சுற்றிவரு மிடமெல்லாம் சொர்க்கமென நான்நினைப்பேன்!
பொற்கரத்தைப் பிடித்தபடி புன்னகைத்து வலம்வருவேன்
வற்றாத பேரன்பை வழங்கிடவே அகம்மலர்வேன்!

நற்றமிழில் சொல்லெடுத்து நாயகனே கவிவனைவேன்!


கனவுலகில் சஞ்சரித்துக் காதலிலே திளைத்திடுவோம்
மனமிரண்டும் ஒன்றிவிட மையலுடன் கலந்திருப்போம்
புனலிலெமு சிற்றலையாய் புத்துணர்வில் மெய்நனைவோம்!

தினந்தோறும் அன்பள்ளித் திகட்டாமல் பருகிடுவோம்!


தேவதைநீ என்றுசொன்னாய் தேவசுகம் கிடைத்ததடா
ஆதவனாய் என்வானில் ஆசையுடன் உதித்தாயே
நாதனுனைச் சேர்வதற்கு நாள்பார்த்துத் தவிக்கின்றேன்

மாதவம்யான் செய்தேனே மாலையிட வருவாயே!


Sunday, June 18, 2017

புன்னகை சிந்தும் !



கதிரு முதிக்க கமலம் விரிந்து களிப்பளிக்கும் 
மதியின் வரவில் மலர்ந்திடும் அல்லி மனங்கவரும் 
நதியின் கரைதனில் நாணல் வளைந்து நடனமிடும் 
பொதிகை மலைவளி புன்னகை சிந்தும் பொலிவுடனே !

கட்டளை கலித்துறை 

Saturday, June 17, 2017

முத்தமிட்டுக் கொண்டனவே ...!!!


பட்டுடலை மூடிப் பருவமங்கை போலொளிரும் 
வட்டநிலா வானில் வளையவரும் போதினிலே 
தொட்டுவிடத் தான்துடிக்கும் சுற்றிவரும் மேகங்கள் 
கட்டுக் குலைந்தவையும் காணாமற் போனதெங்கே
சுட்டனவோ விண்மீன்கள் சுண்டி யிழுத்தனவோ  ?
சொட்டுந் துளிகள் சுகமாய் நனைத்தனவோ ?
வெட்டிய மின்னலால் வெட்கத்தில் ஓடினவோ  ?
முட்டிமோதிப் பேரிடியாய் முத்தமிட்டுக் கொண்டனவே !   

இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா

ஒற்றிலா வெண்பா ...!!!


ஒற்றிலா வெண்பா!
***********************
மயிலினி லேறி மருத மலையி
லொயிலா யருளு மொளியே! - கயிலாய
வாசனா மீசனுமை மாதவ பாலகனே
நேசமுட னாளவா நீ.

Monday, June 12, 2017

கவி'அரசு' கண்ணதாசன் ....!!!



போட்டிக ளின்றிப் புகுந்துவிட்டாய் நெஞ்சத்தில் 
பாட்டா லெனைவென்ற 'பா'ரதமே ! - வாட்டம் 
விலக்குமுன் கீதங்கள் வெற்றிக்கு வித்தாய் 
மலர்ந்திடச் செய்யும் வரம் .

இதயம் வருடி இதமளிக்கும் என்றும் 
உதய கதிராய் ஒளிரும் !- பதமாய் 
மனத்தில் நிறைந்ததுவும் மௌனமாய்ப் பேச 
நனையும் உயிரும் நகும்.

பாட்டாற்றில் மூழ்கிப் பரவச மாகின்றேன் 
காட்டாறாய்ப் பாய்ந்தோடும் கண்ணதாச ! - மீட்டுகின்றாய் 
நெஞ்சில் சுபராகம்; நெக்குருகி விம்முகின்றேன் 
தஞ்சமுன் பாடல்கள் தாம் .

தவித்தவுளந் தேறிடத் தத்துவஞ் சொன்னாய் 
புவியிலுண்டோ நின்போல் புலவன் ? - கவிக்கண்ண 
தாசா! கவிமழையால் தாகம் தணித்திடும்
ஆசான்நீ யாவர்க்கும் ஆம் .

முத்தமிழும் கொஞ்சியுனை முத்தமிட்டுச் சேர்த்தணைக்க
முத்துமுத்துப் பாக்கள் முகிழ்த்தனவோ - மொத்தத்தில் 
முத்தையா! நின்பாட்டில் மோகம் மிகக்கொண்டு 
முத்துநீர் கொட்டும் முகில் .

சொற்சதங்கைப் பூட்டிநின்று சொக்கவைக்கு முன்வரிகள் 
கற்பனைக்கோ எல்லையின்றிக் கால்முளைக்கும்! - நற்றமிழில் 
துள்ளிவந்து கிள்ளிவிட்டுத் தூங்கவைக்கும்; பூங்காற்றாய் 
உள்ளமள்ளிக் கொள்ளும் உவப்பு .

சந்தங்கள் தாளமிட்டுத் தாலாட்டும் பேரழகோ
சொந்தமெனக் காட்டிவிடும் சொர்க்கத்தை ! மந்திரமென்
செய்தாயோ? கட்டுண்டோம்; தேனருவிச் சாரலாய்க் 
கொய்தாயே நெஞ்சைக் குடைந்து.

கம்பனைக் காட்டினாய் கற்கண்டு பாக்களில் 
உம்பரும் கேட்டால் உவந்திடுவர் ! - சிம்மமாய்க் 
கோலோச்சும் தாசா!நின் கொஞ்சிவரும் பாச்சரமோ
பாலோடு சேர்ந்த பழம் .

குட்டியதும் திட்டியதும் கொட்டினாய் பாக்களிலே 
பட்டதையும் பூட்டினாய் பக்குவமாய்ச் - சுட்டதும் 
தொட்டதும் பூத்துத் தொடர்ந்துவர, தென்றலொடு
சொட்டும் மழைபோல் சுகம் .

ஆவிபிரிந் தாலென்? அமுத கவியுன்றன்
நாவில் உதித்தபா நானிலத்தில் - பூவின் 
மணமாய்ப் புகழ்பரப்பும்; வானகமும் வாழ்த்தி 
வணங்குமுல(கு) உள்ள வரை .

சியாமளா ராஜசேகர்

முத்துச்சிப்பி சிரிப்பழகு ...!!!

தத்தித் தவழ்ந்து நடைபழகி
***தங்க ரதம்போ லசைந்சைந்து
சொத்தாய் வீட்டில் வளையவந்து
***சொர்க்கம் காட்டும் மழலையதன்
முத்துச் சிப்பிச் சிரிப்பழகு
***முதலாய்ப் பேசும் மொழியழகு
முத்தங் கொஞ்சு மிதழழகு
***முட்டை விழியும் மிகவழகே!!
சியாமளா ராஜசேகர்

அன்பே என்செய்வேன் ...???


கவிதைக்குள் நுட்பமுடன் காதல் சொல்லக்
***கன்னலெனக் கற்பனையும் கலந்தேன் நன்றாய்
குவிந்ததுவே கசக்கியதாள் குப்பை மேடாய்
***கொடுமையிதே யெனநினைத்துக் குழம்பி விட்டேன்!
தவித்தமனம் தள்ளாடச் சத்த மின்றிக்
***தனிமையிலே இமைக்கதவைச் சாத்தி விட்டேன்!
அவிழாத மொட்டதுவும் அழகாய்ப் பூக்க
***அன்பேயென் செய்வேன்நான் அறியேன் கண்ணே!
சியாமளா ராஜசேகர்

Friday, June 9, 2017

காட்சிக்கேற்ற கானம் ....!!!


வளிவருடி உளம்நனைக்க வான்மழையோ உடல்நனைக்க 
களிப்பினிலே உயிர்நனைய கலந்தினிக்கும் காதலுடன் 
கிளிமொழியாள் அருகிருக்க கிளுகிளுப்பில் மனம்துவள 
நெளிந்தசையும் மரஞ்செடியை நெக்குருகி ரசித்தனரோ ?

அலைகடலின் ஓரத்திலே அழகியதோர் வெளியினிலே 
கலைகொஞ்சும் சிற்பங்கள் கவின்கோயில் கண்டிடவே 
சிலைபோலும் கன்னியுடன் சிலிர்ப்புடனே கரங்கோர்த்து 
மலைப்போடு குடைக்குள்ளே மனம்நெகிழ நடந்தனரோ  ?

மல்லையிலே எழில்கொஞ்சி மண்பெருமை தனைச்சொல்லும் 
பல்லவனின் கலைத்திறனைப்  பாருக்குப் பறைசாற்றும்
கல்லழகைக் காணவந்த காதலரின் நல்வாழ்வும் 
வெல்லட்டும் இனிதாக மேதினியில் வாழ்த்துவமே !!

சியாமளா ராஜசேகர்