Tuesday, December 20, 2016

நிலையாமை !

ஆட்டம் முடிந்ததும் ஆறடி மண்ணுள் அடங்கியப்பின் 
ஈட்டிய செல்வம் எதுவும் வருமோ இதையுணர்வாய் !
கோட்டை பிடிப்பினும் கூட்டைப் பிரிந்தவர் கொள்வதெது ?
பாட்டை யறிந்தால் பதப்படு முள்ளமும் பண்புடனே ! 

ஆகாவுன் காட்சி அழகு ....!!!



ஆகாவுன் காட்சி அழகு ....!!!
*****************************************
கருணை விழிகளால் காத்திடும் தாயே
மருவூ ரரசியே வாராய் ! - விருப்புடன்
பூமாலை சூட்டிட பூரித்தாய், நான்சூட்டும் 
பாமாலை யும்கேட்டுப் பார் . 1.
பார்போற்றும் அன்னையே! பாவத்தைப் போக்கிடுவாய்
கூர்விழியால் நோக்கிக் குறைகளைவாய் - தேர்மீதில்
வாகாய்ப் பவனி வரும்பரா சக்தியே !
ஆகாவுன் காட்சி அழகு . 2.
அழகே யுருவான அன்னையின் கோலக்
கழலின் தரிசனம் கண்டால் - உழலும்
மனக்கவலை தீரும், மகிழ்ச்சிப் பெருகும்
கனவும்கைக் கூடிடும் காண் . 3.
காண்பேனோ வுன்றன் கமலமலர்த் தாளினை
வீண்பொழுது போக்காமல் வேண்டுவனோ - நீண்டொலிக்கும்
கோவில் மணியாய்க் குளிர்ந்திடச் செய்வேனோ
பாவியெனைக் காப்பாய் பரிந்து . 4 .
பரிந்துநீ காவாக்கால் பார்தூற்று மம்மா
சரியென்றால் விட்டுவிடு தாயே! - உரிமையுடன்
கேட்கிறேன் அன்பினால் கெஞ்சிக் கதறுகிறேன்
ஆட்கொள்வா யென்னை அணைத்து. 5.
அணைக்குமுன் கைகளை ஆசையுடன் தொட்டுப்
பிணைத்துக்கொள் வேன்நானும் பேறாய் ! - துணையாய்
வருமுன்னை நெஞ்சத்தில் வைத்துச் சுமப்பேன்
திருமுகம் கண்டே திளைத்து . 6.
திளைக்குமென் னுள்ளமும் தேவியுனைக் கண்டு
சளைக்காமல் சந்ததமும் தாவும் !- விளையாட்டும்
ஏனம்மா? பிள்ளையெனை ஏற்பாய் பரிவுடன்
தேனமு தூட்டியெனைத் தேற்று . 7.
தேற்றும் பரிவுகண்டு தேம்பி யழுவேனே
போற்றி யடிபணிவேன் பூரிப்பில் ! - கூற்றுவன்
வந்தால் கலங்கவே மாட்டேன், முழுமனதாய்
அந்தகனு டன்செல்வேன் ஆம். 8.
ஆமம்மா! உன்னருளே ஆயுளுக்கும் போதுமுன்
நாமமே சொல்லி நலம்பெறுவேன்! - கோமதியே !
கொண்டைப்பூ வாசம் குளிர்விக்கக், கால்களிலே
தண்டையுங் கொஞ்சவந்து தாங்கு . 9.
தாங்கினாய் மேல்மருவூர் தாயே! தயாபரியே!
ஓங்கார ரூபிணியே! உத்தமியே! - பாங்குடன்
ஆடிப்பூ ரத்தில் அழகாய்ப் பவனிவரப்
பாடிடுவேன் வெண்பா படைத்து . 10.

ஒற்றை ரோஜா ....!!!


முள்ளிடையே மலர்ந்தாலும் மோகனமாய்ப் புன்னகைக்கும் 
கள்ளிருக்க வண்டீர்க்கும் காற்றினிலே அசைந்தாடும் 
கிள்ளியதைச் சூடிடவே கெஞ்சிநிற்கும் கன்னிமனம் 
கொள்ளைகொள்ளும் காதலரைக் கொஞ்சிடவே ஏங்கிநிற்கும்  !

இளஞ்சிவப்பு நிறத்தினிலே இனிதாக மொட்டவிழும் 
இளங்காலைப் பொழுதினிலே இதயத்தை வருடிவிடும் 
களங்கமிலாப் பனித்துளியைக் கனிவுடனே சுமந்திருக்கும் 
உளம்விரும்பும் மலர்களிலே ஒற்றைரோஜா மிகவழகே !

Sunday, December 11, 2016

முத்துக் குமரா வருக வருக ...!!!





முதிரா யிளமை யோடே யென்றும் 
****முத்தா யொளிரும் முத்துக் குமரன் !
துதிக்கு மடியார் துயரைத் துடைக்க 
****துள்ளி குதித்தே ஓடி வருவான் !
விதியை மாற்றி விளங்க வைப்பான் 
****வீடு பேற்றை விரும்பி அருள்வான் !
கதியே நீதா னென்றா லவனும் 
****கண்ணீர்த் துடைக்கக் கடிதே வருவான் !

குருகு கொடியைக் கையி லேந்திக்
****கோல மயிலில் குளிர்ந்தே வருவான் !
உருகி யழைத்தால் உள்ள மினிக்க 
****உவகை யோடு காட்சி கொடுப்பான் !
முருகா வென்றால் முன்னே நிற்பான் 
****முடியாச் செயலை  முடித்து வைப்பான் !
விருத்தம் பாடி வெண்ணீ றணிய 
****விரைந்து வந்தே வினைகள் தீர்ப்பான் !

குறைகள் களைய குகனே வருக 
****குன்றி லமர்ந்த கோவே வருக !
மறைகள் போற்று மழகா வருக  
****வள்ளி மணாளா வருக வருக !
நிறைந்த மனத்தில் நிமலா வருக 
****நெஞ்சம் கனிந்து தயவாய் வருக !
இறைவா நீயும் இனிதே வருக 
****ஈசன் மகனே இசைந்தே வருக !


Friday, December 9, 2016

உடையாத நீர்க்குமிழி ....!!!

கலங்க வேண்டாம் அன்னையே ....!!!



அன்னை யுன்றன் வேதனை 
****அறிய முடிய வில்லையே !
என்ன சொல்லித் தேற்றிட 
****எனக்கு வயது மில்லையே !
சின்னப் பிள்ளை யாயினும் 
****சிறந்தத் துணையாய் விளங்குவேன் !
உன்னை வாழும் நாள்வரை 
****உள்ளன் போடு போற்றுவேன் !

சென்ற நாளை மறந்திடு 
****செல்ல மகனை நினைத்திடு !
வென்று நானும் காட்டுவேன் 
****விடியல் பூக்கும் பொறுத்திரு !
துன்பம் விலகும் நிச்சயம் 
****துடைப்பேன் உன்றன் துயரினை !
நன்மை கூடி வந்திடும் 
****நடுக்கம் வேண்டாம் வாழ்வினில் !

வண்ண மாக மாற்றுவேன் 
****வருத்தம் வந்தால் ஓட்டுவேன் !
புண்ணாய்ப் போன மனத்தினைப் 
****புரிந்து நடப்பேன் என்றுமே !
விண்ணும் மண்ணும் போற்றிட 
****வியக்கச் செய்வேன் உண்மையாய் !
கண்ணுள் வைத்துத் தாங்குவேன் 
****கலங்க வேண்டாம் அன்னையே ! 

Thursday, December 8, 2016

வளமாக வாழ்ந்திடுவோம் ....!!!

கரமிரண்டும் சேர்ந்தால்தான் பிறக்கும் சத்தம் 
****கவனத்தில் கொண்டாலே தெளியும் பித்தம் !
உரமிட்டு வளர்த்திடுவோம் உறவைப் பேணி 
****உரிமையுடன்  கரைசேர்க்கும்  பாசத் தோணி !
தரணியிலே தாயன்புக் கீடே யில்லை  
****தண்டமிழின் இனிமைக்கு முண்டோ யெல்லை   !
வரமான பண்பாட்டைக் கண்போல் காத்து 
****வளமாக வாழ்ந்திடுவோம்  மண்ணில் பூத்தே  ...!!

Tuesday, December 6, 2016

அழகு !



வழியும் விழியில் வடிவாய் விளங்கும் 
அழியா முதல்வி அழகு !

வழியும் விழியில் வதனம் மலர 
அழியா முதல்வி அழகு .



மதித்திடு தாய்மொழித் தமிழை ....!!!

இயலிசை யோடு நாடக மென்ற
***இன்றமிழ்  மூன்றினைப் போலே 
மயக்கிடும் வேறு மொழியெது முண்டோ
***மதித்திடு தாய்மொழித் தமிழை !
சுயத்துடன் விளங்கும் செம்மொழி தன்னைச் 
***சுத்தமாய்க் கலப்பட மின்றி 
வியத்தகு வண்ணம் தனித்தமிழ் பேசி
***விளங்கிடச் செய்திடல் நன்றே !

ஈரவிழி காயவில்லை இன்று ....!!!


அஞ்சாத சிம்மமே! ஆற்றலில் கொற்றவையே! 
நெஞ்சுள் நிறைந்தாய் நினைவுகளாய்!- எஞ்ஞான்றும் 
ஈடில்லாப் பெண்ணரசி! என்றினி காண்போம்யாம் 
வாடினோம் கண்ணீர் வடித்து. 

அங்குவிழி மூடி அமைதியாய்த் தூங்குகிறாய் 
பொங்கிவரும் கண்ணீரால் போற்றுகிறேன்! - மங்காதே 
உன்றன் புகழிவ் வுலகமும் உள்ளவரைச் 
சென்றுவா அம்மா சிறந்து. 

திரும்பாத நல்லிடந் தேடியே சென்றாய் 
செருக்கின்றி வாழ்ந்தாய்ச் சிறப்பாய்! - அரும்புமுன் 
புன்சிரிப்பும் எங்கினிப் பூக்குமோ சொல்லம்மா 
வென்றாயெ முள்ளம் விரைந்து 

இங்கென் மனமும் இளகித் தவிக்கிறதே 
வங்கக் கரையில் வனப்பாய்த் துயில்வாயோ 
மங்கையுன் சக்தி மகத்தான சக்தியம்மா 
எங்கும் நிறையும் இனிது. 

பகுத்தறிந்து பாங்குடனே பாதை வகுத்தாய் 
தகுதியுடன் நல்லாட்சி தந்தாய் - வெகுமதியாய்ப் 
பெற்றோமே யுன்னைப்! பிரிவென்றால் தாங்குமோ 
பற்றுடன் பாடினேன் பா. 

மதிக்கு மிதயத்தில் வாழ்வாய்நீ என்றும் 
எதிலுனையான் காண்பேன் இனிமேல்! -விதியால் 
பிரிந்திடினும் தாயேநற் பேறேநீ தானே 
மரித்தாலும் இம்மண்ணில் வாழ். 

வளர்த்தக் கழகத்தை மாசின்றிக் காப்போம் 
உளமார நேசிப்போம் உய்யத்!- தளர்வின்றி 
நாளு முயர்ந்திட நாமும் துணையிருப்போம் 
தோளுடனீ வோம்தோள் தொடர்ந்து. 

விதவிதமா யஞ்சலி வெண்பாவாய்ப் பூக்கும் 
முதல்வருக் கன்புடன் முத்தாய்! - இதமாய்த் 
துயிலுமம் மாவுக்குச் சூட்டுவேன் மாலை 
உயிராய் நினைப்பேன் உணர்ந்து. 

குளிர்வித்தா யம்மா கொடைவள்ளல் நீயே 
களிப்புறச் செய்தாய்க் கனிந்து !- உளியாய்ச் 
செதுக்கித் தமிழ்நாட்டைச் சீர்தூக்கி விட்ட 
புதுமைப்பெண் தொண்டினைப் போற்று . 

விண்ணிற்குச் சென்றாலும் மேதினியில் யாம்மறவோம் 
கண்ணின் மணியாய்க் கருதிடுவோம் !- பெண்களிலே 
பேரரசி! நற்புகழ் பெற்றக் கலையரசி! 
ஈரவிழி காயவில்லை இன்று .

Thursday, December 1, 2016

வாழ்த்து ...!!!




செல்லாமற் போனதேன்? சேமித்து வைத்தவற்றை 
இல்லாமல் மாற்றிடவே இல்லைமனம்! - சில்லறையாய் 
ஆயிரமும் ஐநூறும் கைமாற்றி வாங்கிடினும் 
வாயிலாத் தாட்களை வாழ்த்து.

இதழகல் வெண்பா ....!!!



கண்ணேநின் கட்டழகைக் கண்டதிலே ஏங்கிநின்றேன் 
எண்ணத்தில் தித்தித்தாய் ஏந்திழையே!- தண்நிலா 
காய்கிறதே! தாரகை கண்ணடித்தே செல்கிறதே! 
தேய்ந்தேனென் ஏக்கத்தைத் தீர்.