Thursday, July 27, 2017

மாமழை போற்றிட ....!!!

கார்மேகம் கூடிக் கனத்த இடியுடன் 
கூர்மின்னல் வெட்டிடக் கொட்டுமாம் - ஏருழவன் 
வாழ்வில் வளம்கொழிக்கும்; மண்ணில் மழைதானே 
தாழ்வின்றிக் காக்கும் தகை . 

மாமழை போற்றிட மண்ணில் பொழிந்திடும் 
நாமணக்கப் பாடுவோம் நற்றமிழில் - பாமழை 
கண்டதும் சோலை களிப்புறும்; தேமதுர  
வண்ணமும் சிந்தும் வரும் .

இறைவ னருளால் இயற்கை வரமும்
நிறைவாய்க் கிடைக்கும் நிசமாய் !- குறைவறப்
பெய்யும் மழையால் பெருகும் வளங்களால்
தொய்வின்றிப் போகும் தொழில் . 

செய்த வினைப்பயனோ சீராய் மழையின்றி 
வெய்யோனும் வாட்டிடுதல் வேதனையே! - பொய்க்காமல் 
பூமியிலே சிந்துக பொன்வானே உன்கருணை 
சாமிபோல் ஆகட்டும் தா . 

Wednesday, July 26, 2017

அந்தியிலே வானம் ....!!!

பொன்னொளி சிந்தும் மாலை 
>>>புத்துணர் வளிக்கும் வேளை
சென்றிடத் துடிக்கும் வெய்யோன் 
>>>செந்நிற மாகத் தோன்றும் 
இன்பமாய் விடையும் பெற்று  
>>>இரவினை அழைக்கச் செல்லும் 
ஒன்றுமே அறியாற் போல 
>>>ஒளிந்திடும் மேகத் துள்ளே !

அந்தியில் மஞ்சள் பூசி 
>>>அழகிய கதிரும் நோக்க 
இந்திர லோகம் கூட 
>>>எட்டியே அதனைப் பார்க்கும் 
மந்திர மிட்டாற் போல 
>>>மாயமாய் மறைந்து போகும் 
சந்திரன் வருவ தற்குச்
>>>சம்மதம் தானும் சொல்லும் !

சிவந்ததேன் வெள்ளை மேனி 
>>>சிரித்ததால் மட்டும் தானோ ?
உவகையாய்க் கரங்கள் நீட்டி 
>>>உறவினைப் பிரியத் தானோ ?
தவமென நினைத்தே அஃதும்
>>>தரணியில் காலை பூக்கும் !
கவலைக ளின்றி வானில் 
>>>கருமுகில் கூட்டம் ஓடும் !

அந்தியில் தென்றல் காற்றும் 
>>>அற்புத கானம் பாடும் !
வெந்தழல் சூடு மாற 
>>>மேனியில் வியர்வை காயும் !
செந்நிற வானம் பார்த்துச் 
>>>சிந்துவில் பாடத் தோன்றும் !
நிந்தனை செய்வோர் கூட 
>>>நிம்மதி  கொள்வர் தாமும் !

கொடியிலே மல்லி பூத்துக்
>>>குலுங்கிட மனமு மாடும் !
குடித்திட மலரில் தேனைக் 
>>>குனிந்திடும் வண்டு பாடும் !
துடிப்புடன் அடையும் கூட்டை 
>>>தொலைவிடம் சென்ற புள்ளும் !
பிடித்திடா மாலை  யுண்டோ 
>>>பிரியமும் கூட்டும் நன்றே !

சியாமளா ராஜசேகர் 


அம்பு விடுத்தனையோ ....??

அம்பு விடுத்தனையோ ஆழ்மனத்தில் தைக்கிறதே 
கம்பன் மகனோ கவிதையிலே? - வம்பை 
விலைகொடுத்து வாங்காதே; வீரனே! காதல் 
வலைவீசு முள்ளம் வனப்பு .

இரவும் பகலும் இனியென்ன வேலை
சுரமேழில் பாடு சுகமாய் ! - வரமாகப் 
பெற்றேன் உனைநான் பிரியமுள்ள தோழனே 
சற்றே எனைப்பார்,கண் சாய்த்து .

உயர்வான நம்காதல் ஊர்பேச லாமோ 
துயர்வந்து சேராதோ சொல்வாய்! - கயலாடும் 
கண்களில் சிந்திடும் கண்ணீர் துடைத்திட 
கண்ணனே வாராய் கனிந்து .

புகல்கின்ற வார்த்தைகள் பொன்மொழி யாக 
பகலிரவும் உன்நினைவே பாரில் ! - நிகரில்லாப்
பேரழகா! பூத்திடும் பெண்ணென் உளத்தினைச்
சாரலாய்ப் பெய்து தணி..

நிறைந்தென் இதயத்தில் நித்த மிருப்பாய் 
சிறைவைத்தே னுன்னைத் திருடி! - குறையின்றிக்
காப்பாய் உயிராய்க் கருதி இதமளிக்கப்
பூப்பேன் இதழ்சிவந்தாற் போல் ..

தொடர்ந்து வருவேன் துயரந் துடைக்கப்
படர்ந்து வருவேன் பனியாய்ச்! .- சுடரனைய 
தேகத்தைத் தீண்டுவேன் தென்றலாய், முப்போதும் 
சோகமே யில்லாச் சுகம் . 

சுடரா யொளிரும் சுகமாய்ப் பரவும் 
மடலாய் விரியும் மனிதம் - விடலைப் 
பருவ மறிந்தும் பருகத் துடித்தும் 
உருகும் மனமே உரம் . 

புகழால் கருவமின்றிப் பொன்னா யொளிர்ந்தாய்  
மகத்தில் பிறந்தயென் மன்னா ! - அகத்தினில் 
உன்னை நினைத்தே உலகை மறந்தேனே
என்னதவம் செய்தேனோ யான் ?

குதித்துவிழும் ஐந்தருவி குற்றாலந் தன்னில் 
நதியாய்ப் பெருகியோட நானும் - மதிமயங்கி 
விட்டேன்; எழுதினேன் வெண்பா, உனக்கிது
சொட்டும் மழைபோல் சுகம் . 

இறைவன் அருளாலே இல்வாழ்வில் சேர்ந்தே 
குறைவிலா இன்பத்தைக் கொள்வோம் !- நிறைவுடன் 
காதல் வனத்தில் களிப்புடன் ஆடியே
கீதம் இசைப்போம் கிளர்ந்து .

Tuesday, July 25, 2017

என்னருகி நீயிருக்க ....!!!


என்னருகில்  நீயிருந்தால் 
>>>இதயத்தில் தேன்பாயும் !
பொன்னந்தி மாலையிலே 
>>>புதுக்கவிதை தினம்பாடும் !
அன்னநடை நீபயில 
>>>அழகுரதம் போலிருக்கும் !
கன்னிமயில் நீபார்க்க 
>>>காதலிலே மெய்யுருகும் !!

வண்ணங்கள் ஏழுகொண்ட 
>>>வானவில்லின் ஜாலம்நீ !
எண்ணத்தில் எந்நாளும் 
>>>இனிக்கின்ற கீதம்நீ !
வெண்ணிலவின் கரங்கோர்த்து 
>>>விளையாடும் தாரகைநீ ! 
பெண்ணாகப் பிறப்பெடுத்த 
>>>பிரியமுள்ள தேவதைநீ !!

கொஞ்சிவரும் உன்சிரிப்பில் 
>>>குற்றுயிராய்ப் போனேனே !
வஞ்சிமலர் உனைச்சுற்றும்
>>>வண்டாக ஆனேனே !
மஞ்சத்திலே உனையணைக்க 
>>>மையலினால் துடித்தேனே !
நெஞ்சத்தில் சுமந்ததனால் 
>>>நிம்மதியும் கொண்டேனே !!

பொட்டுவைத்த வட்டமுகம் 
>>>புன்னகைக்க வாராயோ ?
மொட்டவிழ்ந்த காதலினால் 
>>>மோகனமாய்ப் பாடாயோ ?
தொட்டுவிட்டு நமைநனைக்கும் 
>>>தேன்மழையில் ஆடாயோ ?
பட்டுமெத்தைக் காத்திருக்க 
>>>பைங்கிளியே கூடாயோ ?

அல்லியிதழ் சிவந்ததைப்போல் 
>>>அழகாகச் சிரித்திடுவாய் !
முல்லைமலர்  நறுமணமாய்  
>>>மூச்சினிலே கலந்திடுவாய் !
நில்லாத மாருதமாய் 
>>>நெஞ்சத்தில் தவழ்ந்திடுவாய் !
சொல்லாத கதையெல்லாம் 
>>>சுகமாகச் சொல்வாயே !!! 

சியாமளா ராஜசேகர் 

விவசாயம் காப்போம் ...!!!

பாடுபட்டுப் பலகோடி சேர்த்தாலும் பசித்தால்
பணத்தையுண்டு பசிவெல்ல முடிந்திடுமோ சொல்வீர்!
காடுகரை யாவுமிங்கே கட்டிடங்கள் ஆனால்
கால்வயிற்றுக் கஞ்சிக்கும் தவிக்கத்தான் வேண்டும்!
கேடுகளை வேரறுத்து வயல்வெளியைக் காத்தால்
கிள்ளியேனும் உணவுண்ண வாய்ப்புண்டு காண்பீர்!
ஈடுசொல்ல முடியாத தொழிலெதுதா னென்றால்
ஏருழவன் செய்கின்ற விவசாயம் ஒன்றே!
விளைநிலங்கள் இக்கணத்தில் விலைநிலமாய்ப் போனால்
விளைவுகளும் விபரீதம் ஆகிடுமே உணர்வீர்!
களையெடுத்துப் பயிர்காக்கும் உழவர்தம் நிலையும்
கழனியிலே கதிர்போலக் காணாமல் போகும்!
சளைக்காமல் போராடி உரிமைகளை மீட்டுத்
தரணியிலே தழைத்தோங்க வழிவகைமை செய்வோம்!
இளைக்காமல் விவசாயி வாழ்வினையும் பேணி
இயற்கையுடன் இயைந்தேநாம் விவசாயம் காப்போம்!

கண்ணா ....!!!


தேடினேன் அவனை எங்கும்
தென்பட வில்லை கண்ணன்!
ஓடினேன் அங்கு மிங்கும்
ஓரிடம் தனிலும் காணேன்!
பாடினேன் உருகி நெஞ்சம்
பரவசத் தோடு கொஞ்சி
வாடியே நொந்து நைந்தேன்
மாலவா எங்கு சென்றாய்?
மூடிய விழிகள் மெல்ல
முழித்ததும் அவனை வேண்டி
ஆடியின் முன்னே நின்றேன்
அரங்கனை அதிலே கண்டேன்!
நாடிய மாய கண்ணன்
நம்முளே இருப்பான் என்றே
சூடினேன் விருத்த மாலை
சுகமுடன் ஏற்பாய் கண்ணா !!!

Wednesday, July 19, 2017

மெல்லினமாய் ஒரு மெல்லிசைப் பாடல்



சங்கு கழுத்தினில் தங்க மணிச்சரம்
அங்க மழகாக்கும் ! - அதில்
பொங்கும் சிரிப்பது மங்கைக் கனியிதழ்
தங்கும் வரமாகும் !

கஞ்ச மலரென வஞ்சி முகமதில்
மஞ்சள் களைகூட்டும் ! - அவள்
கொஞ்சு மிளமையும் நெஞ்சம் கவர்ந்திட
கெஞ்சி உறவாடும் !
செண்டு மலர்மணம் கொண்ட வனிதையின்
கெண்டை விழிபேசும்! - அவள்
வண்டு கருவிழி கண்ட அவன்மனம்
உண்டு பசியாறும்!
சிந்து மழையினில் சிந்தை குளிர்ந்திட
சொந்தம் வலுவாகும் ! - அவள்
சந்த மிசைத்திட வந்த கவியதும்
முந்தி விளையாடும் !
செம்மை யழகுடன் கும்மி யடிப்பவள்
கம்மல் அசைந்தாடும் ! - கவிக்
கம்பன் உறவென அம்மன் வடிவென
நம்பிக் கதைபேசும் !
மின்ன லிடையினைப் பின்னல் தழுவிடச்
சின்ன யிதழ்கூசும் ! - அவள்
கன்னல் மொழியினில் தன்னை யிழந்தவன்
இன்பம் பலவாகும் !
சியாமளா ராஜசேகர்

Tuesday, July 18, 2017

என் காதல் ரோசாவே .....!!!



என்காதல் ரோசாவே ஏன்தவிக்க விட்டாய் 
****ஏங்குமுளம் உன்நினைவில் எங்கேநீ சென்றாய் ?
புன்னகைத்த பைங்கிளியே பொங்குதடி உள்ளம் 
****பொலிவிழந்து போனாயோ புரியவில்லை கள்ளம் !
சென்றவிடம் சொல்லாமல் செயலிழக்கச் செய்தாய் 
****செந்தூரப் பொட்டழகே தெரிந்துமுயிர் கொய்தாய் !
மின்னுமெழில் முகங்கண்டு  மிகவுடைந்து நின்றேன் 
***மெட்டியொலி சத்தத்தில் மெய்விதிர்த்தேன் நானே  !

சியாமளா ராஜசேகர் 

கிழக்கால கதிரவனும் ......!!!


கிழக்கால கதிரவனும் 
     கெளம்பிமேல வருகுது !
அழகான வெண்ணிலவ 
     அனுப்பிவிட்டுச் சிரிக்குது !
கழனியிலே காத்தடிக்கக்
      கதிரெல்லாம் அசையுது !
வழக்கம்போல பசுங்கொடியில் 
     மல்லிமொட்டு விரியுது  !

கூரமேல ஏறிநின்னு
     கொண்டச்சேவல் கூவுது !
ஈரக்காத்து எதமாக 
    இதயத்த நனைக்குது !
வீரபாண்டி கோயிலிலே 
     வெள்ளிமணி ஒலிக்குது !
சாரப்பாம்பு பொந்துக்குள்ள 
     சலசலத்து ஓடுது !

தூங்குமூஞ்சி மரமெல்லாம் 
     சுருண்டயில திறக்குது !
பூங்குயிலும் ராகத்தோடு 
     பூபாளம் பாடுது ! 
மூங்கிலிலைப்  பனித்துளியும் 
     முத்தாக மின்னுது !
தேங்கிநிக்கும் குளத்தினிலே 
     செங்கமலம் சிரிக்குது !

மாமரத்துக் கிளியழகா 
     மாங்காயக் கொறிக்குது !
சாமரமும் வீசினாப்போல் 
    சாஞ்சகிளை ஆடுது !
பூமணக்கும் தென்றலிலே 
     புதுராகம் கேக்குது !
தாமரையும் இதழ்விரிக்கத் 
     தவிப்போடு பாக்குது ! 

சியாமளா ராஜசேகர் 

Monday, July 17, 2017

பொங்கிடு தமிழா ....!!!

நாட்டினில் நடக்கும் வன்முறை கண்டால் 
        நரம்பொடு நாடியும் துடிக்கும் !
சூட்டுடன் எதிர்த்தால் ஆணவ அரசோ 
     தொல்லைகள் ஆயிரம் கொடுக்கும் !
தீட்டிய திட்டம் சரியிலை  யெனினும் 
     செயல்பட வைத்தது நெருக்கும் !
கூட்டிய வரியால் மக்களின் நெஞ்சைக் 
      கூரிய ஈட்டியாய்ப் பிளக்கும் !

விற்பனை யாகும் கலப்படப் பொருளால் 
     விளைவுகள் பயங்கர மாகும் !
பற்றுடன் தமிழைப் பேசிட மறப்போர் 
      பாசமும் போலியாய்த் தோன்றும் !
நற்றமி ழறிந்தும் அறிந்திடாற் போல 
       நாவினில் ஆங்கிலம் உருளும் !
பெற்றவர் தம்மைக் காப்பகம் அனுப்பும் 
      பிள்ளையும் மிருகமாய்த் தெரியும் !

தஞ்சையின் கதிரா மங்கலம் நிலையால் 
      தவித்திடும் மக்களின் நெஞ்சம் !
வஞ்சியர்க் கிங்கே இழைத்திடும் கொடுமை 
     வதைத்திடும் உளத்தினை நித்தம் !
நஞ்சென மாறும் ஆலைகள் கழிவால்
      நதிகளும் பொலிவினை இழக்கும் !
பஞ்சமும் தோன்ற பட்டினிச் சாவால்
     பகைமையும் போட்டியும் பெருகும் !

வறுமையின் பிடியில் உழவனின் வாழ்வும் 
      மண்மிசை நரகென உழலும் !
உறுதியாய் நின்று துணிவுடன் எதிர்த்தும் 
      உண்மைகள் ஊமையாய் உறங்கும் !
இறுகிடும் இதயம் சாதியத் தீயால் 
      இறுதியில் தன்னுயிர் இழக்கும் !
சிறுமைகள் கண்டு பொங்கிடு தமிழா 
      சீறிடும் சிங்கமாய்ச் சிலிர்த்தே ! 

சியாமளா ராஜசேகர் 


Thursday, July 6, 2017

பாசமலரே ..... ராஜகுமாரா ....!!!

ராஜகுமாரா .....!!!!
**************************

மறைந்தேநீ  போனாலும் மறந்திடவே  இல்லையடா 
உறைந்துவிட்டாய் உள்ளத்தில் உயிருருகித் துடிக்குதடா 
இறைநிலையை எட்டிவிட்டாய் இரவுபகல் துணையிருப்பாய்  
குறையின்றிக் காத்திடுவாய் குலம்விளங்கச் செய்திடுவாய் !

ஆண்டொன்று போனாலும் ஆறுதலே இல்லையடா 
காண்பதெல்லாம் உன்னுருவாய்க் கண்முன்னே தோன்றுதடா 
தூண்போலத் தாங்கிநின்றாய் துயரின்றி மகிழ்ந்திருந்தேன் 
மீண்டுமுனைத் தரிசிக்க விழியிரண்டும் ஏங்குதடா !

நீயில்லா உலகத்தில் நெஞ்சத்தில் அமைதியில்லை 
கோயிலுக்கும் செல்லவில்லை கொண்டாட்டம் ஏதுமில்லை 
தீயிடையே மெழுகினைப்போல் தினந்தினமும் உருகுகின்றேன்  
வாயிருந்தும் பேச்சுவர மறுப்பதைநீ  அறியாயோ ?

சமைத்தாலும் ருசிக்கவில்லை சாப்பிடவும் மனமில்லை 
இமைக்கதவை மூடிடினும் இதமான உறக்கமில்லை 
சுமையான பயணத்தில் சுரத்தின்றித் தவிக்கின்றேன் 
அமைதியினை அளித்திடவே அருவமாயென் அருகிருப்பாய் !

வற்றாத கருணையுடன் வள்ளலைப்போல் வாழ்ந்தவனே 
சற்றேனும் இளகாயோ தைரியத்தை வழங்காயோ 
பெற்றவளென் துயர்கண்டால் பிரிவுக்கும் அழுகைவரும் 
பற்றதிகம் வைத்ததனால் பரிதவித்துக் கிடக்கின்றேன் !

உற்றாரோ(டு) உறவினரும் உனைநினையா நாளில்லை 
கற்பிப்பாய் மேலிருந்தே கடமைகளை ஆற்றிடவே 
நற்றமிழால் வாழுகிறேன் நனைந்தவுளம் தேறுகிறேன் 
மற்றெதுவும் வேண்டுகிலேன் வழிகாட்டு கண்மணியே  ....!!!

அம்மா 
சியாமளா ராஜசேகர்