Wednesday, October 25, 2017

தென்றலே ....!!!



தென்றலே மெல்ல நீதொடும் தருணம்
செவ்விதழ் மலர்ந்திடச் செய்தாய் !
அன்றலர் பூவின் நறுமணம் வாங்கி 
அம்பொழில் முழுவதும் நிறைத்தாய் !
இன்பமாய்ப் பாடும் கருங்குயில் குரலின்
இனிமையும் தாங்கிநீ தவழ்ந்தாய் !
பொன்னிற வண்டு சிறகினை விரித்துப்
புன்னகை புரிந்திட அசைந்தாய் !
நதிக்கரை யோரம் நாணலைத் தழுவி
நளினமா யாடிட வைத்தாய் !
கதிரெழும் நேரம் கடலலை யுடனே
கைகளும் கோர்த்துநீ அலைந்தாய் !
குதித்திடு மருவி நீரினில் கலந்து
குளித்திட ஆசையும் கொண்டாய் !
கொதித்திடும் பகலில் மரநிழல் தேடி
குளிர்ந்திட மறந்துநீ ஒளிந்தாய் !
பலகணி திறந்தே என்னவள் எட்டிப்
பார்த்திடும் பொழுதினில் அணைப்பாய் !
கலகல வென்றே சிரித்திடு மவளின்
கண்களில் காதலை விதைப்பாய் !
புலவனென் இதயம் புரிந்திட வைத்துப்
புனைந்தவென் கவிதையைப் பகர்வாய் !
நலமுற வாழ வாழ்த்தினைச் சொல்லி
நகன்றிடு அவ்விடம் விட்டே !!

காவியாய் விரிந்த வானில் ...!!!


காவியாய் விரிந்த வானில் 
***கதிரவன் உதிக்கும் கோலம் 
ஓவியம் தீட்டி னாற்போல் 
***ஊர்ந்திடும் மேகக் கூட்டம் 
தூவிடும் ஒளியும் பட்டுச் 
***சுந்தர புவனம் பூக்கும் !
வாவியில் மலர்க ளாடும்
***வனப்பிலே உள்ளந் துள்ளும்  !

கூம்பிய இதழ்கள் மெல்ல 
***கோலமாய் விரிந்த தாலே 
காம்புடன் நிற்கும் பூவும் 
***களிநடம் புரியும் நீரில் !
பூம்புனல் பார்க்கும் வேளை
***பொங்கிடும் இதயம் தன்னால் !
சோம்பலும் மறைந்தே போகும் 
***சூரிய உதயத் தாலே !!

சியாமளா ராஜசேகர் 

Sunday, October 22, 2017

விவேக் பாரதிக்கு வாழ்த்து !


அந்தமிழ்த் தாயின் அருந்தவச் செல்வன்நீ !
சந்தங்கள் கொஞ்சிடும் சாகரம்நீ ! - சுந்தரன்நீ
வந்துதித்த நாளில் மகாகவியின் ஆசியொடு
சந்ததம் வாழ்க தழைத்து .
வெண்பாப் புலிநீ ! விருத்தத்தில் வேழம்நீ !
வண்ணம் வனைவதில் மன்னன்நீ !-கண்மணிநீ !
பண்ணுடன் பாடிடும் பைந்தமிழ்ப் பாவலன்நீ !
விண்ணுமுனை வாழ்த்தும் வியந்து
அன்பு மகனுக்கு அம்மாவின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் !!

Saturday, October 21, 2017

செந்தில் வேலவா ....!!! ( நேரிசை ஆசிரியப்பா )


செந்தூர்க் கடலின் சிற்றலை கூடக் 
கந்தன் புகழைக் கனிவுடன் பாடும் !
சேவற் கொடியும் சீர்மிகு வேலும் 
காவ லிருக்கும்; கடும்பகை வெல்லும் !
பாடி யழைத்தால் பரிவுடன் 
தேடி வருவான் செந்தில் நாதனே ...!!!

Friday, October 20, 2017

வசமாகும் நெஞ்சே !

பொதிகையிலே தவழ்தென்றல் புறப்பட்டு வந்து 
     பொருநைநதிக் கரையோரம் இதமாக வீச 
நதிக்கரையின் வழிநெடுக வரவேற்பு கூறும் 
      நாணலதும் தலையாட்டிப் பதமாக ஆட
உதிராத மலரிதழில் மதுவுண்ட  வண்டோ 
     உளமகிழ்ந்து  சிறகசைய  அழகாகப் பாட 
மதிபூக்கும் முன்னிரவில் குளிர்ச்சியுடன் தானும் 
     மயங்கவைக்கும் இளங்காற்றில் வசமாகும்  நெஞ்சே !
     

Thursday, October 19, 2017

கவிபிறக்கும் நன்றே ....!!!


நீலவண்ண ஆடைகட்டி விரிந்த வானில் 
     நீந்திவரும் வெண்பஞ்சு முகிலின் கூட்டம் !
ஓலமிடும் வாரிதியின் அலைகள் துள்ளி 
     ஓயாமல் விண்பார்க்கத் துடிக்கும் நாட்டம் !
கோலமுடன் கரையெங்கும் பசுமை பூக்கக் 
    கொஞ்சிவரும் தென்றலுடன் கிளையின் ஆட்டம் ! 
காலமகள் போடுகின்ற இயற்கைக் கோலம்  
     கண்டவுடன் கவியொன்று பிறக்கும் நன்றே !

சியாமளா ராஜசேகர் 
      

காத்திருப்பேன் உனக்காக ....!!!



சில்லென்ற காற்றினிலே கலந்த வாசம் 
    சிலிர்த்துவிட்டேன் உணர்வுகளில்  உன்றன் நேசம் !
நில்லாமல் அலைபாயும் நெஞ்சின் ஏக்கம் 
     நித்திரையைக் கலைத்ததடா நினைவின் தாக்கம் !
நல்லிரவும் சுட்டெரிக்கும் கதையைக் கேட்டால் 
    நதியலைக்கும் அழுகைவந்து கரையை முட்டும் !
சொல்லெடுத்துப்  பாடிடுவாய் தணியும் வேகம் 
     தொலைவினில்நீ இருந்தாலும் தீரும் சோகம் ....!!!

இளங்காற்றைத் தூதாக அனுப்பி விட்டே 
     இமைக்கதவை மூடாமல் காத்துக் கிடப்பேன் !
அளப்பரிய என்காதல்  நெஞ்சைச் சொல்லும் 
    அதுகேட்டால் கல்மனமும் கரையக் காண்பாய் !
உளங்குளிர பதிலைநீ அனுப்பி வைத்தே  
      உடைந்தமனம் அமைதியுற வகையும் செய்வாய் !
குளமான விழிகளிலே அன்பைத் தேக்கிக் 
      குடியிருக்க வரும்நாளைப் பார்ப்பேன் எண்ணி !!!
      
      
    

வலிக்கு மருந்து ...!!!


மிளகுசுக்கு திப்பிலியும் வெந்தயத்தோ டோமம் அளவோடு மல்லி அரைத்தே - இளகும் கருப்பட்டிப் பாகில் கலந்துதேன் சேர்ப்பின் வருத்தும் வலிக்கு மருந்து .

மனதை உடையாதோ ??


போட்டுடைப்பார் வீதியிலே பூசணியைச் சுற்றித்தன்
வீட்டாரின் கண்ணேறு விட்டகல! - ஓட்டிவரும் 
வாகனத்திற் பட்டுவிழ மண்டை உடையாதோ 
சோகத்தி லாழ்த்தாதோ சொல் ?

Wednesday, October 18, 2017

பட்டாசு போட்டாச்சு...!!!


பட்டாசு போட்டாச்சு; பண்டிகையும் போயாச்சு ;
துட்டும் கரியாச்சு; சுற்றுவெளி - கட்டோடு
நச்சாச்சு மாசுபட்டு; நன்னாள் பரிசாக
அச்சமின்றி நோயுமண்டு மாம்.

Sunday, October 15, 2017

ஆதிசிவன் தந்த ஆடற்கலை ...!!




ஆடிய பாதன் அளித்தநற் கலையாம் 
***அற்புத நாட்டியக் கலையே !
சூடிய புலித்தோ லாடையு மிடையில் 
***சுற்றிய அரவமும் கொண்டு 
மூடிய கையில் டமருகம் அடித்து 
***முயலகன் காலினில் மிதித்தே 
ஆடினார் உடுக்கை மான்மழு வுடனே 
***அக்கினி ஏந்திய சிவனே !

பதஞ்சலி வியாக்ர பாதரின் தவத்தால்  
***பரமனின் தாண்டவம் காண  
சிதம்பரந் தலத்தில் அம்பலந் தன்னில் 
***திருநடம் புரிந்தனன் அன்றே !
பதமிடந் தூக்கி யாடிடும் கோலம் 
***பார்த்திட அள்ளிடும் உள்ளம் !
விதவித மாக நாட்டியம் புரியும் 
***விமலனின் திருவுரு அழகே !

தாண்டவ மாடு மீசனே முதலாய்த் 
***தந்ததிவ் வருங்கலை தானே !
காண்பதற் கெழிலாய் மங்கைய ராட 
***கலைநயங் கொஞ்சிடும் திண்ணம் !
ஆண்டிடுந் தேவன் அருளிய கலையை 
***ஆண்களு மாடுவ துண்டே !
ஈண்டிதற் கில்லை ஈடென வுணர்ந்தே 
***இக்கலை வளர்த்திடு வோமே !

( எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )

சியாமளா ராஜசேகர் 

Saturday, October 14, 2017

இளங்காலை ஆட்சி ...!!!



கடல்குளித்த கதிரெழுந்து 
கனிவுடனே விழிதிறக்க 
கவினுறவே சிவந்திருக்கும் 
     கோலம் - அந்த 
சுடரொளியில் இருள்விலக
சுகமான பரவசத்தில் 
துயிலவிழ்ந்து மணந்திருக்கும்
        ஞாலம் .... !! 

விடைகொடுத்து மதியனுப்பி 
விட்டுவந்த கதிரவனின்
மெல்ல எழும் எழில்கொஞ்சும் 
     தோற்றம் -  அதன் 
சடைவிரிய கீழ்வானில் 
சாந்தமுகம் காண்பதற்கு 
தவழ்ந்துவரும் முகிலலையின் 
      கூட்டம் .... !!

பொற்கிரண ஒளி உமிழ 
பொங்கியெழும் வெள்ளலைகள்
புத்துணர்வில் மெல்லிசையை  
    மீட்டும் - அந்த 
சொற்களில்லா இன்னிசையும் 
சொக்கவைக்கும் இதயத்தைச்
சோர்வகற்றிச் சுகந்தன்னைக்
       கூட்டும் .... !!

கரைதொட்டுக் கதைபேசிக் 
கணநேரம் உறவாடிக் 
காதலுடன் மீண்டுமுள்ளே 
     திரும்பும்  - அந்த 
நுரைபூக்கள் வாழ்வுசில 
நொடியேதான் என்றாலும் 
நுவளாமல் பயணத்தை 
      விரும்பும் !

தென்றலுடன் மிதந்துவரும் 
செம்மலரின் மணமீர்க்க 
செவ்வண்டு மதுவருந்தத்
      துடிக்கும் ! -  அந்த 
இன்பத்தில் தனை மறந்தே 
இசைபாடிப் பறந்துவந்து  
இதழ்முத்த மிட்டுத்தேன்
     குடிக்கும்     !!

பச்சைவயல் வெளிதன்னில் 
படர்ந்திருக்கும் புகைபோலே 
பனிமூட்டம் கண்மறைக்கும் 
    காட்சி - அது 
மிச்சமின்றி மெதுமெதுவாய் 
விட்டகலும் காரணமே 
வெய்யோனின் இளங்காலை 
     ஆட்சி .... !!

புல்லாக்கு போட்டதுபோல் 
புல்நுனியில் பனித்துளிகள் 
பூத்துநிற்கும் அசையாமல் 
    பாரீர் ! - அதை 
வில்லம்பு ஏதுமின்றி 
வெண்கதிரோன் பார்வையினால் 
விரட்டிவிடும் சாகசத்தைக் 
      காணீர் ....!!

புன்னகையைப் பரிசளிக்கும் 
புலர்காலைப் பொழுதினிலே 
பூபாளம் செவியோரம் 
        ஒலிக்கும் - இது 
அன்றாடம் நடந்தாலும் 
அன்றதுதான் நிகழ்வதுபோல் 
ஐம்புலனும் புத்துணர்வில் 
       களிக்கும் !

அம்மம்மா அழகதிலே 
அகமுழுதும் லயித்திருக்கும் 
அதனூடே உன் நினைவும் 
     மோதும்  ! - உன் 
தும்பைப்பூ சிரிப்பினிலே 
துள்ளிவரும்  பேச்சினிலே 
தொலைந்துவிட்ட என் மனத்தைத்  
       தேடும் .... !!

மாஞ்சோலைக் கிளிகொஞ்ச 
மையலிலே உடல்துவள
மௌனத்தில் மனம்கரையும் 
     காலை  - மிக 
வாஞ்சையுடன் கனவினிலே 
வஞ்சமின்றி  வளையவந்து 
வார்த்துவிட்டாய் என்நெஞ்சில் 
      பாலை .... !!

சியாமளா ராஜசேகர் 


        


Thursday, October 12, 2017

தமிழன்னாய் - வெளிவிருத்தம்



வெளிவிருத்தம் 
*********************
முத்தா யொளிர்கின்ற முத்தமிழ் காப்பவளே - தமிழன்னாய் !
மொத்த மொழிகளிலும் மூத்தவள் நீதானே - தமிழன்னாய் !
நித்தம் துதித்திடுவேன் நின்புகழ் பாடிடுவேன் - தமிழன்னாய் ! 
சித்தந் தெளிவாக்கிச் சீர்பெறச் செய்திடுவாய் - தமிழன்னாய் !

சியாமளா ராஜசேகர் 

Wednesday, October 11, 2017

பாவலர் பழனிகுமார் அவர்களுக்கு அறுபதாம் பிறந்தநாள் வாழ்த்து ....!!!

அறுபதைத் தொட்ட தமிழ்க்கவி நின்னை 
     அன்புடன் வாழ்த்திட வந்தேன் !
குறுநகை யோடு கொள்கையிற் சிறந்து 
     குவலயம் போற்றிட வாழி !
இறுக்கிடும் நோயும் இனியுனைக் கண்டால் 
     இடறியே ஓடிட வேண்டும் !
நறுமணப் பூவின் தூய்மையைப் போலே 
      நலமுடன் நண்பனே வாழி !

சிறுமைகள் கண்டால் பொங்கியே எழுந்து 
     திருத்திடப் பாச்சரம் தொடுப்பாய் !
பொறுப்புடன் எழுத்தால் கொடுமைகள் தீர 
     புரிந்திட வைக்கவே முயல்வாய் !
பெறுமதி யோடே அறிவுரை சொல்லி 
    பெருமைகள் சேர்த்திட நினைப்பாய் !
நொறுங்கிடா வண்ணம் உள்ளமும் பூக்க 
     நூறினைத் தாண்டியும் வாழி !

அறவழி நின்று பண்புடன் வாழும் 
     அருந்தமிழ்ச் சோதரன் நீயே !
உறவுகள் மதிக்க மனிதமும் பேணும் 
     உயர்குணம் கொண்டவன் நீயே !
விறலுனைத் தொடர சாதனை புரிய 
     விருப்பொடு கவிவடிப் பாயே !
சிறப்புடன் வாழ உளநிறை வோடு 
     சியாமளா வாழ்த்திடு வேனே !!!

Tuesday, October 10, 2017

பொன். பசுபதி ஐயா அவர்களுக்கு முத்துவிழா வாழ்த்து ...!!!



புதுவையிற் பூத்த பொன்பசு பதியார் 
      புகழ்மணம் வீசிடக் கண்டேன் !
மதுரமாய் மரபில் கவிதைக ளியற்றி
      மாட்சிமை பெற்றிடக் கண்டேன் !
முதுமையை வரமாய் ஏற்றிருப் போரின் 
       முகத்தினில் கனிவினைக் கண்டேன் !
விதுலனாய்ப் புவியில் விளங்கிடு மவர்தம் 
      வெற்றியின் மகத்துவம் கண்டேன் !

சுந்தரத் தம்மை துணையுடன் நாளும் 
        சுகமுடன் பணிகளை முடித்துக்
கந்தனி னருளும் கைவரப் பெற்றுக்
      காசினி வியந்திட வாழி ! 
அந்தமிழ்ப் பேணும் சோலையில் மூத்த 
      ஐயநின் ஆசிகள் வேண்டி 
வந்தனை செய்தேன் அன்புட னேற்று
       மகிழ்வுடன் வாழ்த்திடு வீரே !

எண்பதை எட்டும் நாளினி லும்மை 
      எண்டிசை வாழ்த்திட முந்தும் !
பண்பினிற் சிறந்த பாவல ரெனவே 
     பைந்தமிழ் தேன்மழை சிந்தும் !
கண்ணிய மான காவல ராகக் 
       கவியுமைப் பெற்றதெம் பேறு !
வண்டமி ழாலே வையகம் போற்ற 
     வாழிய ஆண்டுகள் நூறு !

சியாமளா ராஜசேகர் 


பிறந்தநாள் வாழ்த்து !


அன்பு செல்லமே கட்டித் தங்கமே
அச்சு வெல்லமே வாழி!
கன்னல் பேச்சிலே உள்ளம் அள்ளினாய்

கன்னித் தமிழென வாழி!
இன்பம் பொங்கிடும் பூத்த நாளினில்
என்றும் வாழ்த்துவேன் பாடி!
தென்றல் காற்றெனத் தேடி உன்வசம்
செல்வம் சேரட்டும் கோடி!