Tuesday, February 24, 2015

என்னவளே உனக்காக .....!!




நீலவானைக் கொசுவம் வைத்து 
சேலையாய் உடுத்த வைப்பேன் ... !! 
பால்நிலவை நெற்றிதன்னில் 
திலகமாய் வைத்திடுவேன் .... !! 

நட்சத்திர சரம் தொடுத்து 
கூந்தலுக்கு சூட்டிடுவேன் ..! 
நடைபயிலும் முகில்பிடித்து 
விளையாடக் கொடுத்திடுவேன் ....!! 

மின்னல்கீற்றை ஒடித்து வளைத்து 
நகையாக்கி அணிவிப்பேன் ..! 
கார்மேகம் தொட்டு உந்தன் 
பட்டுக்கன்னம் பொட்டிடுவேன்....!! 

வானவில்லில் ஊஞ்சல் கட்டி 
அமரவைத்து ஆட்டிடுவேன் ...! 
மத்தளமாய் இடிமுழங்க 
மங்கலநாண் பூட்டிடுவேன்... !!

செண்டாடலாம் வா !




பாதையிட்டார் நீநடக்க பௌர்ணமியே கீழிறங்கு  
பேதைநான் பித்தானேன் பேரொளியே - போதையூட்டும் 
வெண்ணிலவே வாராய் விரைந்தோடி வீதியிலே 
செண்டாட லாம்சேர்ந்தே நாம் 

தென்னை மரமே ...!!!






ஓங்கிய தென்னைகள் ஓடைக்குக் காவலோ
தேங்காத தண்ணீரும் தெள்ளமுதோ -வாங்கவென
கெஞ்சி யழைத்திடும் கொஞ்சு மழகிது 
நெஞ்சிலூஞ்ச லாடும் வனப்பு .

தவழ்தென்றல் தென்னையைத் தாலாட்டக் காண்பீர்
சுவர்க்கமெனத் தோன்றிடுஞ் சூழல் உவப்பே
குலைதொங்குந் தென்னை குளிக்கும் நதியில்
கலையெழில் கொஞ்சிடக் காண் !

Wednesday, February 18, 2015

செவ்வாய்க் கனிரசமே




செவ்வாய்க் கனிரசமே ! 
செண்பக மலர்மணமே ! 
செதுக்கிய சிலையெழிலே ! 
செம்பொன் மேனியளே ! 
செங்கரும்பின் இன்சுவையே ! 
செங்கமலப் புன்சிரிப்பே ! 
செஞ்சாந்துப் பொட்டழகே ! 
செந்தூரத் தேனிதழே ! 
செஞ்சுருட்டிப் பாவினமே ! 
செண்டாடும் ஓவியமே ! 
செருக்கில்லா காவியமே ! 
செம்மொழிக் கவிதையிலே 
செயப்படு பொருளானாய் ! 
செயலற்று நின்றுவிட்டேன் 
செயமாய் நீவந்திடுவாய் 
சென்மம் ஈடேற்றிடுவாய் !!

பாலகனே உயர்வாயடா




ஆறிரண்டு மாதங்களில் 
அழகாக வளர்ந்திட்டாய் 
அன்னைமுகம் கண்டதுமே 
அன்பாய்நீ புன்னகைப்பாய் ,,,,!! 

தாமரைத்தண்டு காலெடுத்து 
தத்தித்தத்தி நடைபயில்வாய் 
தடுமாறி விழும்போது 
தாய்பிடிக்கச் சிரித்திடுவாய் ....!! 

ஆராரோ நான்பாட 
அதைக்கேட்டு ரசித்திருப்பாய் 
அன்னைமடி சொர்க்கமென 
அமைதியாய்க் கண்துயில்வாய் ....!! 

விழிகளிலே பட்டதெல்லாம் 
விரல்சுட்டிக் கேட்டிடுவாய் 
வாங்கியுனக்குத் தந்தவுடன் 
வேண்டாமென மறுத்திடுவாய் ....!! 

கையில்கிடைத்த பொருளெல்லாம் 
வீசிவெளியே எறிந்திடுவாய் 
வேகமாகப் பிடிக்கவந்தால் 
விழுந்தடித்து ஓடிடுவாய் ....!! 

அச்சுவெல்லக் கட்டிபோல் 
அம்மாவென அழைக்கையிலே 
அண்டமே சுற்றுதடா 
அன்னையுள்ளம் சிலிர்க்குதடா ...!! 

எச்சில்முத்தம் நீதரவே 
என்மனமும் இனிக்குதடா 
எட்டிநெஞ்சில் உதைத்தாலும் 
எனக்கதுவும் இன்பமடா ....!! 

முத்துப்பல் எட்டிப்பார்த்து 
முல்லைப்பூவாய் சிரிக்குதடா 
முலைகடிக்க வலித்தாலும் 
முழுமனதாய் பொறுத்தேனடா ....!! 

பாலைபோல் வறண்டநெஞ்சில் 
பாலூறி வழியுதடா 
பிள்ளையுந்தன் வரவாலே 
பிறவிப்பயன் பெற்றேனடா ....!! 

கன்னக்குழி நகையழகில் 
கரைந்தமனம் தொலைந்ததடா 
கனவில்நீ இதழ்விரிக்க 
கமலமுகம் மலர்ந்ததடா .....!! 

பாதம்பட்ட இடமெல்லாம் 
பாரிசாதம் பூத்ததடா 
பாலகனேநற் பேறுபெற்று 
பாரினில்நீ உயர்வாயடா ....!!

பாரதியே...!!!




வானுமண்ணு முள்ளவரை வாழ்வாய்நீ வையகத்தில் 
மானுடம் பாடவந்த மாகவியே !- யானுனை 
வாழ்த்தி வணங்கிட வார்த்தை வராமலென் 
பாழ்மனந்த விப்பதைப்  பார் ! 

மெல்லத் தமிழினி மாயுமென்ற வேளையில் 
சொல்லி யுணர்த்திவளஞ் சேர்த்திட்டாய் - வெல்லக் 
கவிதைகளால் செந்தமிழ்க் காத்தாய், நிலைக்கும் 
புவியிலென் றும்நின் புகழ். 

ஈரமில்லா நெஞ்சில் இறைவனி ரானென்ற 
தாரக மந்திரம் தந்தவனே ! - பாரதியே 
பாட்டுக்கோர் பாவலனே பைந்தமிழால் போற்றிடுவேன் 
நாட்டிலுயர் நற்கவி நீ.

தாவணிக் குறும்பு



முறுக்குமீச வச்சமச்சான் 
முன்னால்நடந்து போகயிலே 
மஞ்சத்தண்ணி மேலூத்தி 
முத்துப்போல சிரிக்கவேணும் ! 

கம்மாக் கரையோரம் 
கட்டழகன் குளிக்கயிலே 
கல்லெறிந்து விட்டோடி 
கல்தூண்பின் ஒளியவேணும் ! 

களச்சியவன் தூங்கயிலே 
கைத்துண்டு முனைத்திருகி 
காதுக்குள்ளே விட்டுவிட்டு 
கடுப்பேத்திப் பாக்கவேணும் ! 

சகாவோடு இருக்கயிலே 
செல்லப்பேரக் கூப்பிட்டு 
சங்கடத்தால் நெளியக்கண்டு 
சந்தோசத்தில் குதிக்கவேணும் ! 

சாளரத்தின் கதவுதிறந்து 
சாடையாலே முத்தமிட்டு 
முறைத்துஅவன் முணுமுணுக்க 
முந்தானையால்முகம் மறைக்கவேணும் ! 

பாராமுகமாய்ப் போனாலும் 
பக்கம்போய் சீண்டிவிட்டு 
பொய்க்கோபம் அவனுள்கண்டு 
பயந்தாற்போல் ஓடவேணும் ! 

பரிசம்போட வரும்போது 
பாயசத்தில் உப்புசேர்த்து 
பவ்யமாய்ப் பரிமாறி -அவன் 
பருகுமழகை ரசிக்கவேணும் ....!!!

நவவெண்பா - மலர்கள்

கதிரவனின் சூடால் கருத்தாயோ நீயும் 
புதிதாய் விரிந்திட்டப் பூவே ! - அதிசயமுன் 
வண்ணம், கவலையேன் ? வாடாமல் புன்னகைத்துப் 
பெண்கள் மனதிலிடங் கேள் ! 

சிந்திய வெண்பனியால் செக்கச் சிவந்தவளே 
சுந்தரனும் உன்னழகில் சொக்கிடுவான் ! - சொந்தமெனக் 
கொண்டிடவே ஆணும் கொடுத்திடுவா னுன்னையே 
பெண்ணுக்குக் காதல் பரிசு . 

மஞ்சள் மலர்களும் மையலில் வீழ்ந்ததோ 
கொஞ்சி இரண்டுங் குலவுதோ - நெஞ்சினில் 
பொங்கிடுங் காதலுடன் பூக்களும் புன்னகைக்க 
தங்கிடு மின்பம் மணந்து . 

முத்தங்கள் தந்தாரோ மோகத்தால் பூவுனக்கு 
சித்திரங்கள் தீட்டியதார் செவ்விதழால் ? - நித்தமுமே 
பூத்திடுவாய் வெண்பூவே போற்றிடுவேன் வெண்பாவால் 
காத்திருப்பேன் நீமலர்வா யென்று ! 

உண்மையில் பேரெழிலி ஊதா நிறத்தழகி 
கண்மணியெ னுள்ளங் கவர்ந்தாயே !- வண்ணமேவுன் 
பட்டிதழில் கற்கள் பதித்தது யாரம்மா 
பட்டென சொல்லி விடு 

அதிகாலை நேரம் மலர்ந்திடும் மொட்டும் 
மதிமயங்கச் செய்யும் மணத்தால் - அதிரூப 
கன்னியர் கொண்டையில் கச்சிதமாய்ச் சூடிட 
புன்னைகைசிந் தும்மல்லிப் பூ . 

வானவில் பூவாகி வையகம் வந்ததோ 
தேனமுது வண்டீர்க்குந் தீஞ்சுவையோ ? - மேனகையும் 
பூவினைச் சூடிட பூலோகம் வந்திடுவாள் 
தாவிக் குதித்து மகிழ்ந்து . 

வியர்த்து வழிந்தாய் விரிகையில் மொட்டே 
பயமோ வலியோ பகர்வாய் ! - மயங்கி 
ரசித்தேன் மலர்களின் ராணியே ! என்னை 
வசியப் படுத்தினாய் நீ . 

விழிகள் விரிய வியந்தே ரசித்தேன் 
வழியெங்கும் செம்பூவின் வண்ணம் - செழித்து 
சிறந்தாய் கவின்மிகு செங்கொன்றைப் பூவே 
பிறந்ததுற் சாக மெனக்கு .



Tuesday, February 17, 2015

காதலில் விழுந்தாள் .....!!!



தன்னைத் தானே ரசிக்கின்றாள் 
தனக்குள் தானே சிரிக்கின்றாள் 
காரணம் என்ன புரியாயோ 
காதலில் விழுந்தாள் அறியாயோ ...? 

கன்னம் சிவக்க நிற்கின்றாள் 
கண்கள் துடிக்கப் பார்க்கின்றாள் 
பூக்கள் பார்த்துப் பேசுகின்றாள் 
பூத்திட மனமும் சிலிர்க்கின்றாள் ...!! 

தனிமைக் கனவில் ஏங்குகின்றாள் 
தலைவன் கண்டு மயங்குகின்றாள் 
கற்பனை வானில் மிதக்கின்றாள் 
கல்யாணக் கோலம் காண்கின்றாள் ....!! 

கடிதம் எழுதிக் கிழிக்கின்றாள் 
கவிதை பலவும் படைக்கின்றாள் 
காலால் கோலம் போடுகின்றாள் 
காமனை வெல்லத் தவிக்கின்றாள் ...!! 

தென்றல் தீண்டலில் திளைக்கின்றாள் 
தெம்மாங்கு பாடலும் கேட்கின்றாள் 
மேகத்தை தூது விடுகின்றாள் 
மேனியும் வாட துவளுகின்றாள் ....!! 

நளினம் நடையில் கூட்டுகின்றாள் 
நகமும் அடிக்கடி கடிக்கின்றாள் 
நாணல் போலே வளைகின்றாள் 
நாணத்தால் முகம் சிவக்கின்றாள் ...!! 

பனியிலும் வியர்த்திடத் துடிக்கின்றாள் 
பகலிலும் குளிர்ந்திட நடுங்குகின்றாள் 
சாமத்தில் விழித்து யோசிக்கின்றாள் 
சாமியிடம் வரம் யாசிக்கின்றாள் ....!! 

இதயத்தில் ஊஞ்சல் ஆடுகின்றாள் 
இளமை சுகத்தை தேடுகின்றாள் 
மழலை கொஞ்சி மகிழ்கின்றாள் 
மன்னவன் கெஞ்சிட நடிக்கின்றாள் ....!!!

சிவ சிவ சிவனே ...!!!





பிறை சூடிய பித்தனே 
அர வணிந்த அத்தனே 
கயிலை வாழ் சித்தனே 
சுடலை நீறணி சுத்தனே ...!! 

நெற்றியில் கண் கொண்டோனே 
கங்கை சடையில் வைத்தோனே 
புலித் தோலை அணிந்தோனே 
திரி சூலம் ஏந்தியோனே ....!! 

தில்லை வாழ் கூத்தனே 
லிங்கத் திரு மேனியனே 
சடா முடி தரித்தோனே 
தன்னில் சக்தி இணைத்தோனே....!! 

தாண்டவ மாடும் சபேசனே 
திரிபுர மெரித்த ஈசனே 
பண் ணிசைக்க மகிழ்வோனே 
பஞ்ச பூதமாய் நிறைந்தோனே ....!! 

ஆல கால முண்டோனே 
நீல கண்ட நாயகனே 
மண் பிட்டுக்கு சுமந்தோனே 
நரியைப் பரி ஆக்கியோனே ...!! 

காமனைக் கண்ணால் எரித்தோனே 
காலனைக் காலால் உதைத்தோனே 
ஜோதிர் லிங்கமாய் இருப்போனே 
ஜோதியாய் காட்சி தந்தோனே ...!! 

சிவாய நமவெனச் சொன்னால் 
அபாய மிலையென வருவாய் 
உபாய மிதுவென உணர்த்தி 
அபய மளிப்பாய் சிவனே ....!!!


வடுகப்பட்டி வைரமே ....!!!



சலசலத்து ஓடும்நதியும் 
துள்ளிவிழும் தேனருவியும் 
நனைய ஏங்கும் உன்எழுத்தில் ! 

பனிசூழ்ந்த மலைமுகடும் 
பச்சைப்பசேர் புல்வெளியும் உன் 
பார்வைபட தவிக்கும் ! 

விண்ணிலவும் வெண்மேகமும் 
வரிகளின் வருகைக்கு 
வழிமேல் விழிவைக்கும் ! 

வயல்களும் வனங்களும் 
வளைந்தோடும் சிற்றோடைகளும் -தம்மை 
வர்ணிக்க வரம் கேட்கும் ! 

அலைகடலும் மலைமடுவும் 
சிலையழகும் கலையெழிலும்-உன் பாவில் 
அபிநயிக்கத் துடிக்கும் ! 

கொழுந்து விடும் அக்கினியும் 
கொந்தளிக்கும் எரிமலையும் 
அணைக்க வேண்டும் உன் தயவை ! 

மலர்களெல்லாம் 
மயங்கிச் சிரிக்கும் 
மன்னனுன் எழுத்துள் மலர ! 

கடைக்கண் நோக்குக்காக 
ஒற்றைக்கால் தவமிருக்கும் 
கொக்குடன் மற்றவையும் ! 

சரசர சாரப்பாம்பும் 
சாமத்துக் கனவில்வந்து 
சாமரம் வீசி நிற்கும் ! 

காதலுக்கே காதல்வந்து 
கவியில் கலவி களிக்க 
கெஞ்சி கொஞ்சும் ! 

இயற்கையே 
உன்விரல் இடுக்கில் 
உலவுகையில் உவகை கொள்ளும் ! 

எழுத்துகளும் உன் எழுத்தில் 
எழுச்சி பெற்று 
எம்பி குதிக்கும் ! 

மரப்பாச்சியும் 
உயிர் பெறும் -உன் 
கவிதைத் தீண்டலில்...! 

கவிப்பேரரசே உம் எழுத்து 
கேட்பதைக் கொடுக்கும் 
கற்பகத் தருவோ ? 
எடுக்க ஊறும் அமுதசுரபியோ ? 

வைரமுத்தே ! 
உனைச் சேர்வதில் 
விருதுகளுக்கே விருந்து ! 

முதல் விருது பொன்மணியே ! 
இருபுறம் பத்மங்கள் அலங்கரிக்க 
ரத்னா உனை அடைய 
நாள்பார்த்து காத்திருக்கிறாள் !!

சம்மதிப்பாயா அம்மா ....???





மனதிற்குப் பிடித்தவரை 
மணாளனாய் வரிந்திட்டேன் 
மனதார சம்மதித்து 
மகளென்னை வாழ்த்திடுவாய் ! 

இருமனமும் கலந்தபின்னே 
இணைத்துவைத்தல் முறைதானே ! 
இடையூறாய் நீயிருந்தால் 
இதயம்நூறாய் வெடித்திடுமே ! 

தாயேயுன் சம்மதத்தை 
தயவுடனே வேண்டுகின்றேன் 
தயங்குவதேன் கலங்குவதேன் 
தடுப்பதெது சொல்லம்மா ! 

களங்கமில்லா காதல்தான் 
கட்டுப்பாடு மீறலையே 
கடலளவு கண்ணீர்விட்டும் 
கல்மனமும் கரையலையே ! 

சாதிவெறி கொண்டவுள்ளம் 
சம்மதிக்க மறுக்கிறதோ ? 
சாகும்வரை போராடுவேன் - நீ 
சரிசொல்லாமல் மணமுடியேன் ! 

சாதிக்குள்ளே மணம்செய்தால் 
சாகாவரம் கிடைத்திடுமோ ? 
சந்தோசம் நிலைத்திடுமோ ? 
சால்பெனக்குத் தந்திடுமோ ? 

தரையிலிட்ட மீன்போலே 
தவிக்கின்றேன் துடிக்கின்றேன் 
தாலிஎந்தன் கழுத்திலேற 
தாயேநீ அருள்புரிவாய் ! 

என்காதல் ஏற்றுக்கொள்ள 
எள்ளளவும் மனமிலையோ ? 
கன்னியாய் நாள்கழிப்பேன் 
கள்ளத்தனம் நான்செய்யேன் ! 

கடவுளெனக்கு நீயம்மா 
காதலுனக்குப் பிறகம்மா 
கனியுமென்ற நம்பிக்கையில் 
காத்திருப்பேன் என்அம்மா ....!!!

காளையின் காதல்




ஊதா வண்ண குறிஞ்சி மலரே 
ஊதற் காற்றின் மென் சிலிர்ப்பே 
ஊட்டி மலையின் கோல எழிலே 
ஊஞ்சலாடுவோம் வா வா வா ! 

கரு நீல வசிகர விழியழகே 
கன்னம் குழி விழும் முகத்தழகே 
கடற்கரை மணலில் நில வொளியில் 
கவிதை புனைவோம் வா வா வா ! 

நீல வான வீதியின் பாதையிலே 
நீந்தி செல்லும் தாரகை நீயே 
நீயில்லா மனதில் ஒளி யேது 
நீட்பு போக்கவே வா வா வா ! 

பச்சைப் பட்டு நீ உடுக்கையிலே 
பளிங்கு மேனியும் பளிச்சிடுதே 
பவளம் போலும் இதழ் சிரிப்பே 
பழகிக் களிப்போம் வா வா வா ! 

மஞ்சள் மின்னும் வதனத்திலே 
மலர்கள் மணக்கும் கூந்தலிலே 
மனம் வருடும் தென்றல் காற்றினிலே 
மயங்கிக் கிடப்போம் வா வா வா ! 

காவி இழைத்த கோலத்திலே 
காரிகை கைவண்ணம் மிளிர்கிறதே 
காந்தமாய் இதயம் கவர்பவளே 
காதலில் திளைப்போம் வா வா வா ! 

சிவந்த மாதுளை ரத்தினமே 
சிரிப்பில் முல்லை தோற்றிடுமே 
சித்திரம் போன்ற எழிலணங்கே 
சிணுங்கி பேசுவோம் வா வா வா !! 

வான வில்லின் வர்ண ஜாலமே 
வாடா மலரின் சுக வாசமே 
வாசிக்க தித்திக்கும் கவிமழையே 
வாட்டம் போக்கவே வா வா வா !!

ஏக்கம்



மூன்றுமுடிச்சு கழுத்தில்போட்டு 
மூவைந்து வருடமாச்சு 
முத்தென்னுள் முகிழ்க்கவில்லை 
மூடர்வார்த்தை தைத்திடுதே ! 

மூடுபனி என்வாழ்வை 
மூடிவைத்த மாயமென்ன 
மூப்புவந்து சேருமுன்னே 
மூரலென்னுள் மலராதோ ? 

வளைஅடுக்க வழியில்லை 
வளைகாப்பு நடக்கவில்லை 
பூச்சூடிப் பார்க்கவில்லை 
பூயென்னுள் பூக்கவில்லை ! 

பனிக்குடம் உடைந்ததில்லை 
பால்வடிந்து மணந்ததில்லை 
பழிசுமந்து கிடந்திடவே 
பாவமென்ன செய்தேனோ ? 

சொத்துசுகம் இருந்தென்ன 
சொர்க்கமே பிள்ளையன்றோ 
தாய்மைவரம் வேண்டுகின்றேன் 
தாயாகத் தவிக்கின்றேன் ! 

மார்பணைத்துப் பால்புகட்ட 
மங்கைமனம் துடிக்கிறதே 
மறலிவந்து கூப்பிடுமுன் 
மழலைமடி நிரப்பாதோ ? 

மலடியென்ற பட்டத்துடன் 
மயானம்போக மனமில்லை 
மாதம்பத்து நான்சுமக்க 
மடிப்பிச்சை கேட்கின்றேன் !!

என்னுயிர் சேடி கேளொரு சேதி ....!!!



நாள் தள்ளிப் போனதடி 
நாணம் என்னைத் தின்றதடி 
நானும் சேய்க்குத் தாயாக 
நாளும் கூடி வந்ததடி .....!! 

அங்க மெங்கும் சிலிர்த்ததடி 
அழகு மேனி கருத்ததடி 
அடி வயிறு அரித்ததடி 
அசை வெனக்குத் தெரிந்ததடி ....!! 

கிறக்கம் என்னை வதைத்ததடி 
குமட்டிக் கொண்டு வந்ததடி 
மாங்காய் கடிக்க இனித்ததடி 
சாம்பல் தின்ன பிடித்ததடி ......!! 

மயக்கம் நித்தம் வந்ததடி 
மசக்கை என்னை வறுத்ததடி 
வடித்த சோறு வெறுத்ததடி 
இருந்தாலும் மனம் துள்ளுதடி ....!! 

உலக உருண்டை போலுமென் 
உடலில் வயிறு பெருத்ததடி 
உருண்டு உள்ளே உதைத்ததடி 
உதையை உளமும் ரசித்ததடி ....!! 

நடையும் எனக்குத் தளர்ந்ததடி 
நடுக்கம் என்னுள் எழுந்ததடி 
ஆனாலும் என் மனமோ 
ஆனந்த யாழ் மீட்டுதடி ....!! 

பத்து மாத சுமையடி 
சுமை இதுவும் சுகமடி 
பூமலரும் நாள் காண 
பூவை மனம் ஏங்குதடி ....!! 

நலங்கில் மகிழ்ச்சி விளைந்ததடி 
வளை யோசை வசந்தமடி 
நலமுடன் பிள்ளை பெற்றெடுத்து 
நல்ல சேதி சொல்வேனடி ....!!!

ஓடி வா முருகா ....!!!




தோடிராகம் பாடியழைத்தேன் 
ஓடோடி வாமுருகா ...!! 
தோகைமயில் மீதிலேறி 
பறந்தோடி வாமுருகா ...!!! 

வெற்றிவேல் கையிலேந்தி 
விரைந்தோடி வாமுருகா ...!! 
சேவற்கொடி அசைந்தாட 
சிரித்தோடி வாமுருகா ....!!! 

தெய்வானை வள்ளியுடனே 
இணைந்தோடி வாமுருகா ....!! 
தந்தைதாய் தமையனுடனே 
சேர்ந்தோடி வாமுருகா .....!! 

முகமாறும் மலர்ந்திடவே 
மகிழ்ந்தோடி வாமுருகா ...!! 
பன்னிருகை அருள்வழங்க 
களித்தோடி வாமுருகா ....!!! 

தமிழாலுனைத் துதித்திடவே 
மலர்ந்தோடி வாமுருகா ...!! 
திருப்புகழைப் பாடுகின்றேன் 
கேட்டோடி வாமுருகா ......!!! 

திருவடியைத் தொழுதுநின்றேன் 
தவழ்ந்தோடி வாமுருகா ....!! 
சிலம்பொலியும் சிணுங்கிடவே 
சிலிர்த்தோடி வாமுருகா .....!!! 

வினையெல்லாம் தீர்த்திடவே 
எழுந்தோடி வாமுருகா ...!! 
குறைதீர்க்க குன்றிலிருந்து 
குதித்தோடி வாமுருகா ....!!! 

தஞ்சமென உனையடைந்தேன் 
கனிந்தோடி வாமுருகா ...!! 
பாவங்களைப் போக்கிடவே 
பாய்ந்தோடி வாமுருகா .....!!!