Sunday, March 29, 2020

பெண்ணே நீ பேசு ...!!!

Image may contain: 3 people, people on stage and people standing


பெண்ணே நீ பேசு
*************************
இன்னுமேன் தயக்கம் பெண்ணே
இன்முகங் காட்டு கண்ணே !
அன்பிலே கரைந்து விட்டாய்
அடுத்தவர் நலம் விழைந்தாய் !
நன்னெறி காத்து வாழ்வில்
நலங்களும் பெருகச் செய்தாய் !
புன்னகை மாறி டாமல்
பொறுமையால் துன்பம் வென்றாய் !!
வன்முறை எதிர்கொண் டாலும்
மௌனமாய்த் தாங்கிக் கொண்டாய் !
சென்றதை நினைத்து நொந்து
சிந்தையும் கலங்கு கின்றாய் !
குன்றென நிமிர்ந்து நிற்பாய்
கொள்கையை உரத்துச் சொல்வாய் !!
தன்னல மின்றி நீயே
தரணியில் வாழு கின்றாய் !!
ஆயினும் கிடைத்த தென்ன
ஆலயம் கட்டி னாரோ ?
தாயென இருகை தூக்கித்
தலைக்குமேல் கும்பிட் டாரோ ?
நேயமாய் அருகி ருந்து
நிம்மதி தந்தா ரோசொல் !
வாயிருந் தென்ன பெண்ணே
மௌனத்தை யுடைப்பாய் முன்னே !!
கடமையைச் செய்த பின்னும்
கண்களில் நீரெதற்கு ?
முடங்கிய தெல்லாம் போதும்
முயற்சியில் பின்வாங் காதே !
தடைகளை உடைத்தெ றிந்து
சாதனை படைக்க வாராய் !
விடியலும் தொலைவி லில்லை
வெற்றிக்கு வானே எல்லை !!
கன்னலாய் இனிக்கப் பேசிக்
காரியம் முடித்துக் கொள்(ல்)வார்!
தென்றலாய் வருட வேண்டா
தீயெனச் சுட்டெரிப்பார் !
அன்னமே மானே என்றே
அடைமழை யாகப் பெய்வார் !
பொன்மயி லேயென் றாலும்
புகழ்மயக் கங்கொள் ளாதே !!
மொட்டையும் விடுவ தில்லை
முகர்ந்திட அலையும் கூட்டம்
பட்டுடல் தொட்டுத் தீண்டப்
பார்த்திடும் கால நேரம் !
கட்டுடல் கன்னி கண்டால்
காதலில் தள்ளி வீழ்த்தும் !
கொட்டத்தை அடக்க நீயும்
கோலினை எடுப்பாய் பெண்ணே !!
மாதராய்ப் பிறந்த தைநாம்
வரமெனத் தான்நினைத்தோம் !
சோதனை வந்த போதும்
சொல்லற அமைதி காத்தோம் !
பாதகம் செய்வோர் கண்டால்
பதறியே உளந்துடித்தோம் !
வேதனை இனியெ தற்கு
வேங்கையாய்ச் சீறிப் பாய்வோம் !!
துணிவினைத் துணையாய்க் கொண்டு
சோர்வினை ஒதுக்கி விட்டு
பணிவினை நெஞ்சுள் வைத்துப்
பாரதி கண்ட பெண்ணாய்
இனிவரும் நாட்க ளெல்லாம்
இரும்பென உறுதி யோடு
நனிசிறப் பாக நாளும்
நானிலம் போற்ற வாழ்வோம் !!
ஆற்றலில் வல்ல வள்நீ
அன்பினிற் சிறந்த வள்நீ !
காற்றையும் கைப்பி டித்துக்
காதலாய்ப் பேசும் கள்நீ !
ஊற்றெனப் பெருகும் நீராய்
உள்ளூரச் சுரக்கும் தேன்நீ!
சீற்றமாய்ப் பொங்கும் போது
சிந்தையில் தைக்கும் முள்நீ !!
சாதனை படைப்ப தற்குத்
தமிழுனக் குதவி செய்யும் !
ஆதலால் அச்ச மின்றி
அதிசயம் நிகழ்த்திக் காட்டப்
பாதைகள் வகுத்துச் செல்வாய்
பகுத்தறி வோடு வெல்வாய் !
பேதைநீ யல்ல இன்னும்
பேசுபெண் ணேநீ பேசு !!
( முனைவர் கிருஷ்ண திலகா தலைமையில் பண்ணைத் தமிழ்ச் சங்கத்தில் வாசித்த கவிதை)
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment