Monday, March 23, 2020

வண்ணப் பாடல்...!!!


தனதன தானன தனதன தனதன
தனதன தானன தனதன தனதன
தனதன தானன தனதன தனதன தனதானா
அலைவிளை யாடிடு மழகிய கடலினில்
விரிகதிர் மேலெழ விருளது வழிவிட
அருணனின் பார்வையி லகிலமு மொளிபெறு மதிகாலை !
அருள்நிறை யாலய மணியத னொலியது
செவிகளி லேவிழ விதயமு பனியென
அமைதியி லேவுறை வதுமிறை செயலென வறியாயோ?
மலையினை மூடிய முகிலினம் பரிதியின்
வருகையி லேயதி விரைவினில் விலகிடும்
மரகத மாயிலை களினசை வினிலிசை விளையாதோ ?
வளியொடு சாரலும் பொழில்களி லுலவிட
மலர்மணம் நாசியை மகிழ்வொடு தழுவிட
மனமதி காலையி லுருகிடு நிலையதை உணராயோ ?
வலையினி லேயிரு கயல்களும் நழுவிட
நதியலை யோவவை களைவெகு தொலைவிட
மதகினி லாடிடு மிணைகளி னெழிலினை மொழிவேனே!
மழைவிழு வேளையில் நனைவது மொருசுகம்
பரவச மாகிடு முளமதி லெழுநகை
வளமுற வேசெயு மினியன பெருகிடும் புலர்காலை
இலையினி மேலொரு கவலையு மெனும்படி
விடியலி லேமனம் நிறைவுடன் நெகிழ்வுற
இசையுட னேபல கவிதைக ளெழுதிட நினைவேனே
எழுகதி ரோனது பணிதனை நினைவுகொள்
உயர்வடை வாயென உரிமையில் முறையிட
இசைவுட னேயெனை அணைபவ னுனையுளம் மறவாதே !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment