Tuesday, October 2, 2018

நாராயணனே ....!!!

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி யாளாண்டாள் 
பாடிப் பரவசப் பட்ட திருப்பாவை 
நாடி நிதம்படித்தால் நாரா யணன்நமைத் 
தேடி யணைத்தே திருவருள் தந்திடுவான் ! 
கூடி அனைவரும் கோவிந்தன் நாமத்தை 
ஆடிமுன் நின்றே அழகுபார்த்த கோதையாய் 
ஈடில்லா அன்புடன் இன்குரலில் பாடிட 
ஓடிவந் தாட்கொள்வான் ஓர்நொடியில் மாலவனே !! 

கண்ணின் மணியைக் கருநீல வண்ணனைக் 
கண்ணனை முப்போதும் காதலால் உள்ளத்தே 
எண்ணிப் பசிமறந்(து) ஏங்கித் தவிப்பினும் 
தண்ணிலவாய்த் தான்குளிர்ந்து தண்டமிழ்ப் பாக்களால் 
தெண்டனிட்டு வாழ்த்தித் தெவிட்டாப்பா மாலையொடு 
கொண்டையிற்தான் பூச்சூடிக் கோபால னுக்களித்த 
பெண்ணவளின் ஒப்பிலாப் பேரன்பு நீங்காமல் 
வண்ணமுடன் என்றென்றும் வாழுமிவ் வையகத்தே !! 

பக்தியால் மெய்சிலிர்க்கப் பாற்கடல் வாசனைத் 
திக்கெட்டும் போற்றும் திருவரங்க நாதனைச் 
சிக்கெனப் பற்றித் திருத்தாள் வணங்கிடச் 
சொக்கிடும் நல்லழகு சுந்தரன் நெஞ்சிளகித் 
தக்கத் தருணத்தில் தாயினும்சா லப்பரிந்து 
நெக்குருகி வேண்டி நினைப்போர்தம் வாழ்விலே 
மிக்குயர்ந்த ஞானமும் வீடுபே றும்கொடுக்க 
அக்கணமே ஓடிவந்(து) ஆட்கொள்வான் நாரணனே !! 

(இயல்தரவிணைக் கொச்சகக் கலிப்பா ) 

No comments:

Post a Comment