Monday, October 8, 2018

மங்கல மடந்தை மாதவி ....!!


சிலையென எழிலாள் சிலப்பதி காரம்
***செதுக்கிய மாதவி என்பாள்!
அலைதவழ் நகராம் பூம்புகார் தன்னில் 
***அருங்கலை நாட்டியம் கற்றாள் !
பொலிவுடன் அமைந்த அரங்கினி லேறி
***பொன்னியல் பூங்கொடி தோன்றி
விலைமதிப் பில்லா வித்தையைக் காண்போர்
***விழிகளுக் களித்தனள் விருந்தாய் !
பரிசொடு பட்டம் பெற்றவ ளிவளின்
***பார்வையில் கோவலன் பட்டான் !
புரிந்திட வியலா உணர்வுக ளாலே
***புதுசுகம் கூடிடக் கண்டாள் !
உரியவ ளாக்க மாலையை வாங்கி
***உரிமையாய்க் கோவலன் இணைந்தான் !
வரித்தனன் அவளை பத்தினி யாக்கி
***மங்கல மடந்தை என்றே !
கூடலில் மகிழ்ந்து இல்லற வாழ்வில்
***குழவியும் பெற்றனள் எழிலாய் !
ஆடலில் வல்லாள் இந்திர விழாவில்
***ஆடினள் கோவலன் இசைக்க !
ஊடலில் மாயப் பொய்பல பாட
***ஊழ்வினை காரணந் தானோ ?
வாடவிட் டவளை மன்னனும் நீங்க
***மாதவி துடித்தனள் தனியே !
மணியணி துறந்து துறவறம் பூண்டாள்
***மன்னவன் மாண்டது கேட்டு !
குணவதி யான மகளையும் துறவில்
***குழல்களைந் தேபுகுத் திட்டாள் !
வணங்கிடத் தக்க பத்தினி யிவளின்
***மாண்பினை வையகம் பேசும் !
கணிகையர் குலத்தில் பிறந்திருந் தாலும்
***கற்பினிற் சிறந்தவள் இவளே !
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment