Monday, October 8, 2018

இலக்கியங்களில் இளங்கோவின் கருப்பொருள்கள் ...!!

ஆழ்கடல் முத்தாய் நீதிகள் மூன்றை
***அடக்கிய திலக்கியச் சிலம்பு !
ஊழ்வினை உருத்து வந்தூட்டு மென்ற
***உண்மையை யுணர்த்திடும் குறிப்பாய் !
ஊழ்வினை யாலே மாதவி பாட்டில்
***ஊடிய கோவலன் பிரிந்தான் !
வீழ்ந்தனன் ஊழால் பழிதனைச் சுமந்து
***விடுத்தனன் இன்னுயிர் வீணே !!
உரியவள் வந்து தவற்றினைச் சுட்ட
***உயிரினைப் பாண்டியன் விடுத்தான் !
அரைசியல் பிழைத்தோர்க் கறம்கூற்றா மென்ற
***அரசியல் மாண்பைமெய்ப் பித்தான் !!
புரிந்ததும் பசுவின் துயரினைத் துடைக்கப்
***புதல்வனைத் தேர்க்காலி லிட்டு
மரித்திடச் செய்து மனுநீதிச் சோழன் 

***வழங்கினன் பசுவுக்கும் நீதி !
கற்பினில் சிறந்து விளங்கிடும் பெண்ணை
***கடவுளாய்ப் போற்றுதல் மரபே !
பொற்றொடி நங்கை கண்ணகி யாளை
***பொற்புடைத் தெய்வமாய்க் கருதி
சிற்பநூல் வல்லார் துணையுடன் எழிலாய்ச்
***சிலைவடித் தேவழி பட்டார் !
எற்றைக்கும் உரைசால் பத்தினி தம்மை
***ஏத்துவர் உயர்ந்தவ ரன்றோ ??
திருக்குறள் காட்டும் அறநெறி பலவும்
***சிலம்பிலும் இருந்திடக் கண்டோம் !
அருந்தமிழ்ப் பாக்கள் அணிசெயும் வண்ணம்
***அழகுடன் மிளிர்ந்திடக் கண்டோம் !
கருப்பொருள் ஒன்றாய்க் கதையுடன் இணைந்து
***காப்பியம் பேசிடக் கண்டோம் !
விருப்புடன் படிப்போர் உளம்நிறை வோடு
***மேன்மையாய்ச் சிறப்புறு வாரே !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment