Monday, October 8, 2018

சில ஈற்றடிகளுக்கு வெண்பா ...!!!

சில ஈற்றடிகளுக்கு வெண்பாக்கள்...!!!!
உள்ளத்தி லன்பிருந்தும் ஊமையாய் நாட்கடத்தித்
தள்ளியிருந் தோம்யாம் தனிமையில் - மெள்ளப்
புரிந்துணர்ந்த பின்னே புயலடித்த வாழ்வில்
விரிசலுக்குத் தந்தோம் விடை.
பிஞ்சென்றும் பாராமல் பித்தம் தலைக்கேற
அஞ்சாமல் கொல்லும் அரக்கமனம் - நெஞ்சமே
வஞ்சகத்தை வேரோடு மாய்க்கவல்ல அன்பென்ற
செஞ்சொல்லுக் கீடுண்டோ செப்பு.
தஞ்சமென வந்தோரைத் தாய்போல் பரிவுடன்
அஞ்சலென அன்பாய் அரவணைக்கும் - நெஞ்சினனை
வஞ்சமின்றி வாயார வாழ்த்திடவே வாழ்கவென்ற
செஞ்சொல்லுக் கீடொன்று தேடு.
வண்ண நிலவை வளைந்திருக்கும் வானவில்லை
மண்ணில் பொழிந்திடும் மாமழையை - விண்ணில்
கொடியாய் மலர்ந்தொளிரும் கோலமின்னல் கீற்றை
வடிவாய்க் கவிசெய்வோம் வா.
ஏழைக் குடிசையில் ஈசான மூலையில்
வாழைக் குலைதள்ளி வாழ்த்திட - தாழைமணம்
வீடெங்கும் உன்னதமாய் வீச அவன்மனக்
காடெல்லாம் பூத்த கனா.
ஆடென்றால் ஆடி அழகுக் அழகூட்டும்
பாடென்றால் பாடும் பரவசமாய் - வீடெங்கும்
ஓடும் மழலைக்காய் ஓரிரவில் என்னகக்
காடெங்கும் பூத்த கனா.
குற்றங் களையாமல் கொட்டினாய் வார்த்தைகளைச்
சுற்றமும் கூடியுனைத் தூற்றிட - நற்றோழி!
வேதனை யோடு வெடித்தழுது விம்மினாய்
பேதமைப் பட்டுணர்ந்த பின்.
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment