Monday, October 8, 2018

முருகன் தோடகம் ...!!


அடியார் மனமே கதியா யுறையும்
அழகா! அலைவாய்க் கரையின் அரசே !
முடியா முதலா மரனின் மகனே!
முருகா குமரா சரணம் சரணம் !! ..1.
உமையாள் தனயா! உயிரே ! உறவே!
உளறி யழுதேன்! உருகித் தொழுதேன்!
தமிழா மமுதைத் தயவா யருளே
தணிகா சலனே சரணம்! சரணம் !! 2.
தொடரும் வினையால் துவளும் பொழுதில்
துணையா யுனையே உளமும் கருதும்
இடமும் வலமும் எளியே னருகில்
எழுவாய் முருகா சரணம்! சரணம் !! 3.
திருமால் மருகா! திருவே! சுடரே!
தெளிவை யருளத் தருண மிதுவே !
குருகுக் கொடியோய்! குறைகள் களையக்
குருவாய் வருவாய் சரணம் சரணம் !! 4.
பிறவிப் பிணிதீர்த் திடவே மயிலில்
பிரிய முடனே இனிதே வருவாய் !
மறவே னுனைநான் வடிவே லவனே
வயலூர் முருகா சரணம் சரணம் !! 5.
துணைவி யருடன் குலவி எழிலாய்
சுகம தருள இனிதே வருவாய் !
பணியு மடியார் பரிவில் மகிழும்
பழனி முருகா சரணம் சரணம் !! 6.
பகலு மிரவும் நொடியும் மறவா
படரும் நினைவைத் தருவாய் பரிசாய்
முகமா றுடையோய்! இளமை யுடையோய் !
முருகா! இறைவா ! சரணம் சரணம் !! 7.
மலருள் மணமாய்க் கனியுட் சுவையாய்
வளியாய் வெளியாய்ப் புனலா யனலாய்
நிலமாய் மலையாய் முகிலுள் துளியாய்
நிறையும் முருகா சரணம் சரணம் !! 8.
சியாமளா ராஜசேகர்
( கவிவேழம் இலந்தை இராமசாமி ஐயா அவர்களின் வழிகாட்டலில் எழுதியது )

No comments:

Post a Comment